PDA

View Full Version : நீயின்றி..!



சிவா.ஜி
02-10-2007, 05:15 AM
இருக்கும் நிலையிலிருந்து
இன்னும் உயர....
தனக்கு கிட்டாதது
தன் பிள்ளைக்குக் கிட்ட
நீ உழைக்கச் சென்றாய் எட்ட..!

பாசமாய் நீயனுப்பிய
பகட்டுச் சேலையுடித்தினால்
சகட்டுமேனிக்கு சுற்றம்
சாடை பேசுகிறது,
பார்ப்பதெல்லாம் தானமாகக் கேட்டு
கேட்டது தராவிடில்
ஈனமாக ஏசுகிறது..!

வேலையாய் வெளிவாசல் போனால்
வேசிப்பட்டம் சூட்டும்
வேண்டியதைக் கொடுத்துவிட்டால்
வெட்கமின்றி வாலையாட்டும்!

ருசியுணர்ந்தவள்
பசியோடிருப்பாளென
கேவலப்பிறவிகள்
விரசப் பார்வையோடு
உரசிப் பார்க்கின்றன..!

வில்லம்புகள் ஆயிரம் துளைத்தும்
விடாமல் உயிர்பிடித்த
வீரன் பீஷ்மனைப்போல்
சொல்லம்புகள் அனைத்தும்
உள்ளத்தில் தாங்கி
உயிர்வாழ்வதே..
உன் மீள்வருகைக்குத்தான்!

ஜெயாஸ்தா
02-10-2007, 05:39 AM
பல முறை எழுதப்பட்ட கருவென்றாலும் தங்களின் எழுத்தின் மூலம் புதிய பரிணாத்தை காட்டுகிறீர்கள்.


வில்லம்புகள் ஆயிரம் துளைத்தும்
விடாமல் உயிர்பிடித்த
வீரன் பீஷ்மனைப்போல்
சொல்லம்புகள் அனைத்தும்
உள்ளத்தில் தாங்கி
உயிர்வாழ்வதே..
உன் மீள்வருகைக்குத்தான்!
அருமையான வரிகள். வில்லம்புகள் துளைத்த வேதனையை விட சொல்லம்பு வேதனைகள் அதிகம்தான்.

பூமகள்
02-10-2007, 06:32 AM
தலைவனின் வருகைக்காய் தலைவி காத்திருக்கும் நிகழ்கால நிகழ்வை அசத்தலான வரிகளில் வலியுணர்த்தியிருந்தீர்கள் சிவா அண்ணா.
மனைவி படும் துயரை ஆணாக இருந்தும் அழகாக அவர் மனத்தினை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்..!!
பாராட்டுக்கள் அண்ணா.

இளசு
02-10-2007, 06:46 AM
புலம்பெயர் நவீன வாழ்க்கையில்
தலைவனுக்காய் காற்றுத்தூது கவிதை அன்று
தலைவிக்காய் காத்தல் தவக் கவிதை இன்று.

ஆழமான உணர்வுகளை அழகான படைப்புகளாக்கும்
அன்பு சிவாஜிக்கு பாராட்டுகள்!

சிவா.ஜி
02-10-2007, 06:49 AM
பாராட்டுக்கு மிக்க நன்றி ஜே.எம்.ஆம் பலமுறை சொல்லப்பட்டதுதான்...காதலைப்போல,தாய்மையைப்போல,...இந்த தவிப்பும் வேதனைதான்.கூட அம்மா,அப்பா மற்றும் பலர் இருக்கும் குடும்பத்தலைவிகளுக்காவது பரவாயில்லை...தனியாய் தன் குழந்தைகளுடன்,கணவன் அருகில் இல்லாது வாழ்க்கை நடத்தும் மனைவிகள் நேரிடும் இன்னல்கள் ஏராளம்.எங்களைப் போன்றோர் இதனை நிறையவே அனுபவிக்கிறோம்.நீங்கள் சொன்னதுபோல சொல்லம்புகள் தரும் வேதனை சொல்ல இயலாதது.நன்றி ஜே.எம்.

சிவா.ஜி
02-10-2007, 06:53 AM
நன்றி பூமகள்.நான் ஆண் என்பதைவிட முதலில் அன்பான கணவன் என்பதாலும்,எனக்காகவும்,தன் பிள்ளைகளுக்காகவும் அத்தனை வேதனைகளையும் தாங்கி வாழும் அந்த உயர்ந்த உறவின் உள்ளம் அறிந்தவனென்பதாலும் இதை எழுத முடிகிறது.இந்த சமூகத்தின் சொல்வீச்சிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவே என் மனைவி புதிய சேலைகளைக்கூட நான் அருகில் இருக்கும்போதுதான் கட்டிக்கொள்கிறார்.என்ன செய்வது தங்கையே..பெண்களுக்கு எல்லா விதத்திலும் வேதனையே.

சிவா.ஜி
02-10-2007, 06:55 AM
மிக்க நன்றி இளசு.உணர்வுகள் புரிந்துகொள்ளப்பட்டு,ஆதரவாய் வரும் பின்னூட்டங்கள் மனதை நெகிழச் செய்கின்றன.

பூமகள்
02-10-2007, 07:03 AM
இந்த சமூகத்தின் சொல்வீச்சிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவே என் மனைவி புதிய சேலைகளைக்கூட நான் அருகில் இருக்கும்போதுதான் கட்டிக்கொள்கிறார்.என்ன செய்வது தங்கையே..பெண்களுக்கு எல்லா விதத்திலும் வேதனையே.
சமூகப் பார்வை எப்படி இருக்கிறது பாருங்கள் அண்ணா?? கொண்டவர் அருகில் இல்லையெனில் வேதனையே பெண்களுக்கு... அன்பாய் கணவர் கொடுத்த உடையைக் கூட அணியமுடியாத சூழலில் தான் நாம் வாழ்கிறோமா?? சரியான பார்வையை ஏன் மக்கள் தொலைத்துவிட்டனர்?
பொறாமையாலும் வயிற்றெரிச்சலாலும் என்ன வேண்டுமானாலும் பேசும் சமூகத்தைப் பார்த்து நேர்மையாய் இருக்கும் நாம் பயப்படும் அவசியம் இல்லை என்றே நான் கருதுகிறேன் அண்ணா. எல்லோருக்கும் அவர் அவர் வாழும் சுதந்திரம் உண்டு. நேர்வழியில் அடுத்தவருக்குத் தீங்கிழைக்கா வண்ணம் நம் வாழ்வை நாம் வாழ கட்டாயம் உரிமை உண்டு. தாங்கள் சொன்ன நிலை பெண்களுக்கு மாற வேண்டும். விரைவில் மாறும் என்று நம்புவோம்.

அக்னி
02-10-2007, 07:09 AM
கட்டியவன் இல்லையென்றால்,
கட்டில் முதல் தொட்டில் வரை,
கதை தொடுக்கும் சமுகச் சரம்...

பிரிந்தவர்களுக்கு
பிரிந்து வாழும்
சோகம்.., ஆற்றாமையாக...
பார்ப்பவர்களுக்கோ,
பொறாமையாக...

பாராட்டுக்கள் சிவா.ஜி...
குடும்ப நிலைமைகளால், உழைப்புக்காய் பிரிந்த குடும்பங்கள்,
சில சாக்கடை நரகர்களின் விஷம் பரப்புரைகளால்,
நிரந்தரமாகப் பிரிந்ததும் உண்டு.
மனநிலை தளராது இருந்தால், வாழ்நிலை உயரும். அன்றேல், வேரோடு சரியும்...

சிவா.ஜி
02-10-2007, 07:14 AM
குடும்ப நிலைமைகளால், உழைப்புக்காய் பிரிந்த குடும்பங்கள்,
சில சாக்கடை நரகர்களின் விஷம் பரப்புரைகளால்,
நிரந்தரமாகப் பிரிந்ததும் உண்டு.
மனநிலை தளராது இருந்தால், வாழ்நிலை உயரும். அன்றேல், வேரோடு சரியும்...

மிக மிக சரியான கருத்து அக்னி.இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனநிலை தளராது இருப்பது ஒன்றே நல்ல வாழ்க்கையை தக்க வைக்க உதவும்.
தங்கை பூமகள் சொன்னதுபோல நம் வாழ்க்கையை நாம் வாழ யாருக்கும் பயப்படத்தேவையில்லை.ஆனால் சில சமயங்களில் காயத்தின் வலி அதிகமாகும்போது அதனைத் தவிர்த்திட ஆமையாய் ஓட்டுக்குள் பதுங்கவேண்டிய கட்டாயம் பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.
ஆழ்ந்த பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி அக்னி

அமரன்
02-10-2007, 01:09 PM
எத்தனை முறை முழங்கினாலும் உறைப்பதில்லை. செவிடாக இருக்கும் சமூகத்திற்கு "ஸைகை" தான் சாலச் சிறந்தது என்று பாதிக்கப்பட்டவர்கள் வெகுண்டு எழுந்தால் பாதிப்பு யாருக்கு. கரங்கள் பிடுங்கும் களைகளுடன் ஒன்றிரண்டு பயிர்களும் சேர, பூதாகாரமான எதிர்ப்பு கிளம்ப புயலாக களை எடுக்க தொடங்குவார்கள். பயிர்களும் நாசமாகும். எத்தனை தடவை அடிபட்டாலும் திருந்தாத கூட்டம் இன்னும் இருக்கு சிவா. நல்ல சிந்தனைக்கவிக்கு எனது பாராட்டுதல்.

சிவா.ஜி
02-10-2007, 01:12 PM
ஆம் அமரன் பல சமயங்களில் கோபம் வருகிறது...ஏன் இப்படி இருக்கிறார்களென்று...அதே சமயம் இவையாவும் வருங்காலத்தில் மாறும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது அல்லது உதாசீனப்படுத்திவிட்டு நம் வாழ்க்கையை நாம் பார்ப்போம் என்று போய்விடத்தோன்றுகிறது.நன்றி அமரன்.

ஜெயாஸ்தா
02-10-2007, 01:18 PM
.இந்த சமூகத்தின் சொல்வீச்சிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவே என் மனைவி புதிய சேலைகளைக்கூட நான் அருகில் இருக்கும்போதுதான் கட்டிக்கொள்கிறார்..

உங்கள் மனைவி உங்களை கணவனாக அடைய புண்ணிம் செய்திருக்க வேண்டும் சிவாஜி. ஏனென்றால் இந்த விசயத்தில் நீங்கள் தெளிந்தவராக இருக்கிறீர்கள். உங்கள் மனைவியின் வேதனையைப் புரிந்திருக்கிறீர்கள். அப்படியில்லாமல் சொல்வார் பேச்சைக்கேட்டு நிறைய பேர் தங்கள் வாழ்க்கையை தொலைத்திருக்கிறதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். உங்களின் இந்த தெளிவான உள்ளத்திற்கு என் 'சல்யூட்'.

சிவா.ஜி
02-10-2007, 01:24 PM
மிக்க நன்றி ஜே.எம். மிகச் சரியானது உங்கள் கருத்து.வாழ்க்கையைத் தொலைத்த பலரும் ஏதோ ஒரு தூண்டலில்தான் அப்படி தொலைக்க நேர்ந்திருக்கிறது.தெளிவிருந்தால் எதுவும் பாதிக்காது.

ஆதவா
05-10-2007, 03:23 AM
புலம்பெயர்தல் எத்தனைக் கொடுமை என்று என்னால் எண்ணிப் பார்க்கமுடிகிறது. ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகம். ஒரு கலாச்சாரத்திலிருந்து இன்னொரு கலாச்சாரம். நடை உடை பாவனை மொழி என்று அனைத்தும் மாறவேண்டும். எண்ணிப் பார்க்கவே கொடுமைதான். அதைவிட அந்த புலம்பெயர்வோன் வீட்டவர்கள் படும் நிலையும் இக்கவிதை சொன்னதைப் போலத்தான்.

பெரும்பாலும் நாடு கடந்து தொழில் செய்வதால் பணமீட்டல் அதிகரிக்கும் என்பதால் சுற்றக் கண்கள் வீட்டைச் சுற்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதே சுற்றம் அவர்களுக்கு அடிப்படையில் என்ன செய்திருக்கிறது என்பதையும் காணவேண்டுமல்லவா.

ஒரு மனைவி படும் பாடும் இன்னும் அதிகம். அவளால் தன் கணவனோடு இருக்கமுடியாத சூழ்நிலை. பகிர்ந்துகொள்ள துணையின்றி நினைவுக் கிளைகளை முறிக்கும் உணர்வுகள். கசங்கா தலையணையைக் கண்டு கண்ணீர் விடும் விழிகள் என துயரங்கள் பலவுண்டு. எல்லாவற்றையும்விட

வேலையாய் வெளிவாசல் போனால்
வேசிப்பட்டம் சூட்டும்
வேண்டியதைக் கொடுத்துவிட்டால்
வெட்கமின்றி வாலையாட்டும்!

என்ற வரிகளே போதும்..

ருசியுணர்ந்தவள்
பசியோடிருப்பாளென
கேவலப்பிறவிகள்
விரசப் பார்வையோடு
உரசிப் பார்க்கின்றன..!

உண்மை இதுதான். தவறுகளில் பெரும்தவறு துரோகம் இழைப்பது. அதில் பெண்கள் இழைப்பது மிகக் குறைவு. என்றாலும் கேவலப்பிறவிகளின் வவ்வால்கண்கள் பார்ப்பதை தடுப்பது நிச்சயம் சுற்றத்தின் கடமையாக இருக்கவேண்டும்.

சொல்லம்புகள் அனைத்தும்
உள்ளத்தில் தாங்கி
உயிர்வாழ்வதே..
உன் மீள்வருகைக்குத்தான்!

கடைந்தெடுத்த வரிகள் .. ஒரு தவிப்பு. அதை வெளியே கொண்டுவந்தது சிறப்பு. பெரும்பாலும் இம்மாதிரி கருக்கள் பல நிலவியதுண்டு. தாய் ஒன்று; பிரசவம் பல..

வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
05-10-2007, 05:48 AM
அழகான,அருமையான அலசலுடன் ஆதவா முத்திரையில் மலர்ந்த பின்னூட்டம் கண்டு மிகுந்த மகிழ்ச்சி ஆதவா.மனமார்ந்த நன்றிகள்.