PDA

View Full Version : போதைகள்



அமரன்
29-09-2007, 07:57 AM
நினைவு கற்றைகளை
நீறாக்க நினைத்து-போதை
தேடும் பாதைகளில்
தடுக்கி விழுகின்றான்.

ஏதோ போதையில்
ஏதேதோ போதைகளை
நாடியவனை தள்ளாட்டும்
போதைதான் எதுவோ?

இதய சுரங்கத்தில் நுழைந்து
இனிய சுரங்களை இழைத்து
ஆரோகணம் கோர்த்த
அன்னை கொடுத்த போதையா?

ரோசாசெடி வேலியமைத்து
கட்டுப்பட்டு கட்டறுக்கும் வித்தை
கற்பித்து ஆளாக்கிய
தந்தை கொடுத்த போதையா?

மூளை மடிப்புகளை இளக்கி
இலகுவாக விளக்கி துலக்கி
பிரகாசிக்க வைத்த
ஆசான் கொடுத்த போதையா?

துவளும் தருணங்களில்
சத்து மருந்துகள் புகுத்தி
தூக்கி நிறுத்திய
தோள் கொடுத்த போதையா?

ஓரவிழி கீற்றால் ஊடுறுவி
அடுக்குகளை சலவைசெய்து
பளிச்சிடும் வித்தகம் செய்த
காதல் கொடுத்த போதையா?

சிவா.ஜி
29-09-2007, 08:06 AM
போதையில் வீழ்ந்து பாதை மாறியவனின் ஆதியை அறிய எழுதிய அர்த்தமுள்ள வரிகள்.
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்....நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை போதைகளும் நல்ல போதைகள்தானே? அவை எப்படி பொல்லா போதைக்கு வழி காட்டியிருக்கும்?

ஜெயாஸ்தா
29-09-2007, 08:13 AM
போதையில் வீழ்ந்து பாதை மாறியவனின் ஆதியை அறிய எழுதிய அர்த்தமுள்ள வரிகள்.
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்....நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை போதைகளும் நல்ல போதைகள்தானே? அவை எப்படி பொல்லா போதைக்கு வழி காட்டியிருக்கும்?

அந்தப் போதைகளை இழக்கும் போது அவன் வழிதவற வாய்ப்பிருக்கிறது. மனித வாழ்கையே ஒரு வித போதையில்தான் இருக்கிறது. ஆத்திகவாதிகளுக்கு ஆன்மீகப் போதை... நாத்திவாதிகளுக்கு பகுத்தறிவு போதை... (அப்போ... மற்றவர்களுக்கெல்லாம் பகுத்தறியும் திறன் இல்லையா என்ன?) பெற்றோரிடமிருந்து அன்பு போதை.... பணியின் மூலம் செல்வ போதை.... இப்படி எத்தனை எத்தனையோ போதைகள். ஒன்றை இழக்க நேர்ந்தால்...... அவன் பாதை பெரும்பாலும் மாறத்தானே செய்யும்...!

நன்றி அமரன் உங்கள் கவிதைகளை ஒவ்வொரு முறை படிக்கும் போது ஒவ்வொரு விதமான பொருளை எனக்கு உணர்த்துகிறது. இன்னும் உங்கள் கவிதையைப் படித்தவுடன் புரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு பக்குவம் வரவில்லை என்றே நினைக்கிறேன்.

சிவா.ஜி
29-09-2007, 08:17 AM
மிக்க நன்றி ஜே.எம்.கவிதையின் கோணத்தை உணர்த்தியதற்கு.நீங்கள் சொல்வது மிகச்சரி..அந்த நல்ல போதைகளில் எதையாவது இழக்கும்போதுதான் பலர் கெட்ட போதையில் தடுமாறி விழுகிறார்கள்.
உங்களைப்போலத்தான் நானும் அமரனின் கவிதையை முழுவதுமாகப் புரிந்து கொள்வதில் மிகவும் சிரமப்படுகிறேன்.
வாழ்த்துக்கள் அமரன்.

பூமகள்
29-09-2007, 09:48 AM
அழகான போதையில் ஆழ்த்தியது அமரரின் போதைக் கவி.
உண்மை தான் சகோதரர் ஜெ.எம். ஒவ்வொரு முறைப் படிக்கும் போதும் வித்தியாசமான அர்த்தங்களைக் கற்பிக்கிறது அமர் அண்ணாவின் கவிதைகள்.
படித்துப் புரிய பக்குவத்தை நான் இன்னமும் வளர்த்தனும். அதற்காகவேனும் அமர் அண்ணா தொடர்ந்து கவிதைகளை இங்கு படைக்கனும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நல்ல போதைகள் என்றும் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் அமர் அண்ணா.;)
அழகான தேர்ந்த சொல்லாடல். அருமை. :icon_b: நிறைய கற்கிறோம். :icon_rollout:இன்னும் கொடுங்கள் அமர் அண்ணா.:D

அமரன்
29-09-2007, 05:50 PM
ஊட்டத்தால் நிறைத்த உறவுகளுக்கு நன்றி.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு போதை எம்மை இயக்குகிறது. ஏதோ ஒரு காரணியால் போதை தடுப்பு நிகழும்போது மது, மாதுசாரப் போதைகளை நாடுகின்றோம். அப்போதும்கூட போதை தந்த போதைகளின் நினைவுகள் போதை தந்து நல்வழிப்படுத்தலாம்... அதை சொல்ல விழைந்தேன்..சரியாகச் சொல்லாது தவறிழைத்து விட்டேன் என நினைக்கின்றேன்.

சிவா.ஜி
30-09-2007, 04:44 AM
இல்லை அமரன்..தவறு உங்கள் எழுத்திலில்லை எங்கலின் புரிதலில்தான்.ஆழமான கருத்துக்களை சாதாரணமாக புரிந்துகொள்ள முடியாது.அதே சமயம் ஊண்றி கவனித்தல் அவசியம்.அதைச்செய்த ஜே.எம் அவர்களுக்கு சிறப்பாக விளங்கியிருக்கிறது.அதை எங்களுக்கும் விளக்கியதால் கவிதையின் சுவையை நாங்களும் உணர்ந்தோம்.

இளசு
30-09-2007, 08:19 AM
மருத்துவ ரீதியாகவும் அமரனிக் கவிக்கருத்து மிகச்சரி..

உயிர்வேதியலில் எண்டார்பின், என்கெபாலின் என 'மகிழ்ச்சி/ நிறைவு'' தரும் காரணிகள் மூளையில் இருந்தால் போதும்.

அது உண்பதால், உழைப்பால், புகழ்ச்சியால், ஆதுரத்தால்...

''நல்ல இயற்கை போதை'' இல்லாது போனால்
மற்ற செயற்கை போதை இடம்பிடித்துக்கொள்கிறது..

பின் ம(ன)டத்தையே ஆக்கிரமித்துக்கொள்கிறது..

ஃப்ராய்டு இதை உளவியலாகவும் சொல்லியிருக்கிறார்..

எதிர்பாலரை வீழ்த்தல், ''பெரிய ஆளாக'' சமூகத்தில் அறியப்படுதல்-
இந்த இருபோதைகளே வாழ்வின் வழிநடத்திகள் என்று..


அரிய ஆழமான உண்மைக்கருத்து பொதிந்த கவிதை.

பாராட்டுகள் அமரன்!

ஜெயாஸ்தா
30-09-2007, 08:48 AM
எதிர்பாலரை வீழ்த்தல், ''பெரிய ஆளாக'' சமூகத்தில் அறியப்படுதல்-
இந்த இருபோதைகளே வாழ்வின் வழிநடத்திகள் என்று..

உண்மைதான் இளசு... மிகப் பெரிய சமுதாய மாற்றங்களுக்கு இவைதானே காரணமாயிருக்கிறது. இவை இல்லாவிட்டால் சமுதாயத்தின் இயக்கமும் குறைந்துவிடும்.

சூரியன்
30-09-2007, 08:52 AM
அமரனின் போதை கவிதை உண்மையில் பல அர்த்தங்களை உள்ளடக்கியது..
ஒரே கவிதையில் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லிவிட்டீர்.

வாழ்த்துக்கள் அமரன் உங்களுக்கு 100இ−பணம் அன்பளிப்பாக..

க.கமலக்கண்ணன்
30-09-2007, 09:16 AM
மிதக்கிறேன்
மிதக்கிறேன்
என்று சொல்லி
முடிவில் சுடுசாம்லாகி
போனவர்கள்.

அருமையாக கவிதை நண்பா...

அமரன்
01-10-2007, 04:32 PM
பின்னூட்ட ஊட்டமிட்டு உரமிட்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி..


மருத்துவ ரீதியாகவும் அமரனிக் கவிக்கருத்து மிகச்சரி..
ஃப்ராய்டு இதை உளவியலாகவும் சொல்லியிருக்கிறார்..
எதிர்பாலரை வீழ்த்தல், ''பெரிய ஆளாக'' சமூகத்தில் அறியப்படுதல்-
இந்த இருபோதைகளே வாழ்வின் வழிநடத்திகள் என்று..

அண்ணா இக்கவி புனையும்போது மனதில் ஒரு சலனப் போராட்டம். கரு சரியா தவறா என்பதல்ல? மன்ற சொந்தங்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது.. இப்போது தெளிவுடனும் நிறைவுடனும். நன்றி அண்ணா.

இனியவள்
02-10-2007, 04:46 PM
அமர் கூறிய போதைகள்
வாழ்க்கையின் ஏணிப்படிகள்

வாழ்த்துக்கள் அமர் அழகிய கவிக்கு :)

ஷீ-நிசி
03-10-2007, 04:13 AM
ஒவ்வொரு பருவத்திலும் இடர்ப்படும் போதை..

மிக அழகான வார்த்தைகளால் கவிதை மின்னுகிறது அமரன்... வாழ்த்துக்கள்!

அமரன்
03-10-2007, 11:24 AM
நன்றி இனியவன், ஷீ

அன்புடன்,