PDA

View Full Version : பிரியாத வரம் வேண்டும்..! (பாகம்-1 & 2)இதயம்
29-09-2007, 05:24 AM
பிரியாத வரம் வேண்டும்..! (பாகம்-1)

"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேஏஏஏஏஏ........ன்" என்று வாய் வலிக்க கத்தவேண்டும் போல் இருந்தது செல்வத்திற்கு..! செல்வம் தன் நண்பர்கள் ரமேஷ், நவாஸ், கண்ணன் மற்றும் தங்கராஜ் ஆகியோருடன் நின்றிருந்தது சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரின் வெளிநாட்டவர் அதிகம் புழங்கும் பகுதியான "பத்தா" என்னும் இடம். கட்டிடங்களாலும், கடைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடம் அன்று வியாழக்கிழமை வாரக்கடைசி நாள் என்பதால் ஜனநெருக்கடியில் எள் விழுந்தால் எண்ணையாகும் விதத்தில் அமளியில் இருந்தது. இது போதாதென்று சாலையோரக்கடைகளள போட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்த ஆண்கள், பெண்களாலும் அந்த இடம் இன்னும் பரப்பரப்பாக தெரிந்தது. எங்கு நோக்கினாலும் மனித தலைகள் தான் தெரிந்தன. "பத்தா"வின் மையப்பகுதியில் இருந்த அந்த பெரிய பாலத்தின் கீழேயும், அதை ஒட்டிய பகுதிகளிலும் மனிதர்கள் தேசம் வாரியாக, மாநில வாரியாக, மொழிவாரியாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

பலதரப்பட்ட பொருட்கள் விற்கும் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. "லக்கி கஃபே", "தஞ்சை ரெஸ்டாரண்ட்" போன்ற தமிழக உணவுக்கடைகளில் தமிழர்கள் 2 ரியால் கொடுத்து ஒரு செட் தோசையோ, பூரியோ, இட்லியோ வாங்கி, அதை 3 வகை சட்னிகளுடன் வைத்து தின்று விட்டு, அன்றைய வாரத்தின் உழைப்பிற்கான பலனை அடைந்தது போன்ற திருப்தியில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். உடை சமாச்சாரங்கள் விற்கும் முக்கிய பகுதிகளில் அம்பாரமாய் துணிகளை கொட்டி "ஷீல் ஹம்சா ரியால்(எதை எடுத்தாலும் 5 ரியால்)" என்று கூவிக்கொண்டிருந்த சவுதி நாட்டவனின் அறிவிப்பால் கவரப்பட்டு, துணி மலையை சூழ்ந்து நல்லதொரு உடையை எடுத்துவிட பலாப்பழத்தில் ஈக்களைப்போல் மொய்த்தார்கள். ஸ்டூடியோக்களில் இந்தியர்கள் தன் பெற்றோருக்கோ, மனைவிக்கோ அனுப்ப திட்டு திட்டாய் படிந்த முகப்பவுடருடன், ஸ்டூடியோவின் மிகப்பழைய கோட், டை அணிந்து கேமராவின் முன்னால் செயற்கையாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். விலையுயர்ந்த துணிகள், காலணிகள், கைகடிகாரங்கள் உள்ளிட்டவற்றை விற்கும் கடைகளில் இந்தியர்களை விட ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட மற்ற நாட்டவர்களே அதிகம் தெரிந்தார்கள்.

குழுக்களாக மனிதர்கள் நின்று கொண்டிருக்கும் அந்த பகுதியை கடக்கும் போது "மாப்ளே..உன் தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருக்கியாம்ல..?" என்றோ, "ஓ க்யா கமால் கா ஆத்மி ஹே யார்..!' என்றோ, "எனிக்கு ஈ ஜோலி வையா..!" என்றோ கதம்பமாய் அவர்கள் தங்களுக்குள் பேசும் மொழிகள் காதுகளில் விழுவது சகஜம். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை கூப்பிட்டு உபசரிப்பது போல, அந்த இடங்களை கடப்பவர்களை அங்கிருக்கும் கடைக்காரர்கள் அவர்களின் கையைப்பிடித்து இழுக்காத குறையாய் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இத்தனை பரப்பரப்பிற்கிடையிலும் அங்கிருந்த பெரும்பாலான இந்தியர்களின் முகங்களில் ஏதோ ஒரு கடுமையான சோகம் படிந்திருந்தது. அந்த சோகத்திற்கு வேலையின் கடுமை, வீட்டின் கடன், மனைவியின் பிரிவு, சகோதரியின் திருமணம், சகோதரனின் படிப்பு, பெற்றோரின் நோய், எதிர்காலம் குறித்த பயம் என்று ஏதோ ஒன்று தான் காரணமாக இருக்கும். தன்னலம் என்பதை மறந்து தன் குடும்ப நலனுக்காக ஒரு இயந்திரத்தை போல் தன் சுக துக்கம் மறந்து உழைக்கும் அவர்களை காணும் போது எவரும் வேதனைப்படுவார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைகளை உள்ளடக்கிய இடத்தில் தான் நம் கதையின் நாயகன் செல்வம் நின்றிருந்தான். இந்த கதையின் முதல் வரியில் குறிப்பிட்டதைப்போல் அவன் கத்த நினைத்ததற்கு முக்கிய காரணம் இருந்தது. அது....?!!

(தொடரும்..!)

lolluvathiyar
29-09-2007, 07:51 AM
அருமையா வெளி நாட்டு வேலை செய்பவர்களை பற்றிய கதை ஆரம்பித்திருக்கிறீர்கள். இப்பதான் ஆரம்பம் தொடருங்கள்.

இதயம்
29-09-2007, 08:27 AM
பிரியாத வரம் வேண்டும்..! (பாகம்-2)

இந்த கதையின் முதல் வரியில் குறிப்பிட்டதைப்போல் அவன் கத்த நினைத்ததற்கு காரணம், அவன் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறான். அந்த சந்தோஷத்திற்கு காரணம், இத்தனை நாட்களாக தன் கற்பனையிலும், கனவிலும் கண்டு கொண்டிருந்த ஒரு அற்புத திருநாள் நாளை வரப்போகிறது. ஆமாம்.. அவன் நாளை விடுமுறையில் ஊருக்கு போகிறான். தன் குடும்ப சூழ்நிலைக்காக தன் தேசம் விட்டு, ஊர் விட்டு வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் திருநாள் என்பது அவன் ஊர் போகும் நாளாகத்தான் இருக்கும். மேற்கொண்டு சம்பவங்களுக்கு போவதற்கு முன் செல்வத்தை பற்றிய ஒரு ஃப்ளாஷ்பேக்கை இங்கே கொடுத்து விடுவது நல்லது.

செல்வத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசன் புதூர் தான் சொந்த ஊர். ஒரு சொந்த வீட்டை மட்டும் கொண்ட ஏழ்மையான குடும்பம். அப்பா கோவிந்தராசு அந்த ஊர் சந்தையில் கடை போட்டு காய்கறி விற்கும் சிறு வியாபாரி. அம்மா பொன்னுத்தாயோ விவசாய வேலைகள் நடக்கும் காலங்களில் நடவு, களையெடுப்பு போன்ற வேலைகளுக்கு சென்று கிடைத்த வருமானத்தை கொண்டுவருவாள். தங்கைகளில் மூத்தவள் ராணியும், இளையவள் செல்வியும் பக்கத்தூரில் உள்ள பள்ளிக்கு சென்று படித்துக்கொண்டிருந்தார்கள். மிகக்குறைந்த வருமானத்தில் கஷ்ட ஜீவனம் நடத்திக்கொண்டிருந்த அவர்களின் நிலையிலும் தன் மகன் செல்வத்தை மிகவும் கஷ்டப்பட்டு 10-வது வரை படிக்க வைத்திருந்தார்கள். பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்களுடைய வறுமை அவன் படிப்பை தொடர விடாமல் சதி செய்ய, வேறு வழியில்லாமல் தன் காய்கறிக்கடைக்கு ஒத்தாசையாக அவனை கோவிந்தராசு வைத்து தொழிலை நடத்திக்கொண்டிருந்தார். சில வருடங்கள் கடந்தன. இந்த வறுமை நிலைக்கும் இடையில் அவனை சந்தோசப்படுத்திய ஒரே விஷயம் காதல்..! அடுத்த தெருவில் இருக்கும் தன் தந்தையின் உடன்பிறந்த சகோதரியான கமலா அத்தையின் மகள் சாந்தியும் அவனும் உயிருக்குயிராக காதலித்துக்கொண்டிருந்தார்கள். இது இடையில் வந்த காதலல்ல. சிறுவயது முதலே இருவரும் கூடி விளையாடிய பருவம் தொட்டு ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டவர்கள். அந்த அன்புதான் காதலாக கனிந்து கல்யாணத்திற்காக காத்திருந்தது. இங்கே சாந்தியைப்பற்றி குறிப்பிடவேண்டியது மிக அவசியம். கவர்ந்திழுக்கும் அழகையும், தமிழச்சியின் உடன்பிறந்த சொத்தான ஒழுக்கத்தையும் கொண்ட பெண் தான் சாந்தி. ஒரு முறை முன் பின் தெரியாத ஒருவன் பின் தொடர்ந்து சென்று தான் அவளை காதலிப்பதாக சொன்னதற்காக அந்த இடத்திலிருந்து அழுது, அரற்றி ஓடி வந்து, செல்வத்திடம் முறையிட்டு காதல் சொன்னவனை செல்வத்திடம் கண்டபடி அடிவாங்க வைத்தவள்.

அவளைப்பொருத்தவரை உலகமே செல்வம் தான். அத்தை வீட்டிற்கு செல்வம் ஏதும் வேலையாக போகும் நேரங்களில் அவன் முன்பு பக்கத்துவீட்டுக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு "என் கண்ணே..! என் செல்வமே..!" என்று குழந்தையை கொஞ்சுவது போல் அவனை செல்லமாக சீண்டுவது அவள் வழக்கம்..! காதல் வயப்பட்டவர்களுக்கு எந்த கஷ்டம் தான் தெரிந்தது..? வீட்டின் பொருளாதார சூழ்நிலை தெரியாமல் அவர்கள் காதல் வளர்ந்தது, கூடவே அவர்களின் வறுமையும் தான்.! இந்த நிலையில் சாந்தியின் அப்பா மாரடைப்பில் காலமாக, அந்த குடும்பத்தையும் தாங்கும் பொருட்டு சாந்தியை ஒரு நல்ல நாளில் செல்வம் மணந்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான். வறுமையிலும் இனிமையாக போய்க்கொண்டிருந்த இல்லறத்தில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, செல்வத்தின் வாழ்வில் புயல் வீச தொடங்கியது. குடும்ப பாரத்தில் பெற்றோரையும், மனைவியையும் சுமந்து கொண்டிருந்த நேரத்தில் செல்வத்தின் மூத்த சகோதரி ராணி பருவமடைய அவளுக்கான திருமண கடமைகளை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான். அவள் பருவம் அடைந்த ஒரு வருடத்தில் களத்தூரில் இருந்து சில வரதட்சிணை நிபந்தனைகளோடு நல்ல வரன் ஒன்று வர, ராணிக்கு உடன் திருமணம் செய்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் பொருளாதாரம் செல்வம் குடும்பத்தினரின் குரல்வளையை நெறித்தது. வேறு வழியில்லாமல் தன் குடும்பத்திற்கு சோறு போட்டுக்கொண்டிருந்த சந்தைக்கடையய 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்று நகை, பாத்திரம், பண்டங்கள் கொடுத்து தங்கையின் திருமணத்தை நல்லபடியாக நடத்தினான். இந்த சூழ்நிலையில் ராணி தாய்மை அடைந்த செய்தி அவன் கஷ்டங்களை மறக்கடிக்கும் விதமாக அமைந்தது. தன் காதல் மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு ஒரே ஆறுதலாய் இருந்த கடை போனதில் அவன் குடும்பமே கடும் வறுமையில் விழுந்தது. குடும்பத்தின் வறுமை மற்றும் வருமானமற்ற நிலை அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்த தன் மற்றும் குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய பயம் கலந்த கவலை அவனை கவ்விக்கொண்டது. இந்த நிலையில் தான் வராது வந்த மாமணியாய் வந்த நண்பன் தங்கராஜ் சொன்ன நற்செய்தி அவனுடைய வாழ்க்கையில் ஒளியை ஏற்படுத்தியது. அந்த நற்செய்தி...?!!

(தொடரும்..!)

பிரியாத வரம் வேண்டும்..! (பாகம்-1) (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=278162&postcount=1)

lolluvathiyar
29-09-2007, 01:40 PM
அருமையாக தொடர்கிறது. அதுவும் காதலை பற்றி எழுதி இருந்த சிறு வாக்கியம் மிக அருமை. குறிப்பாக மாமன மகளை காதிப்பது மிகவும் கெட்டியானது. யாராலும் பிரிக்க முடியாதது. சீக்கிர அடுத்த பாகத்தை தொடருங்கள் இதயம்