PDA

View Full Version : கண்காட்சி (சிறுகதை)மயூ
26-09-2007, 03:31 AM
எங்கோ ஒரு தூரத்து கூரையில் இருந்து சேவல் ஒன்று தன் முன்னங்காலில் எம்பி மிகுந்த பிராயத்தனத்துடன் ஒரு தடவை கூவியது. சூரியனின் கதிர் பட்டு அந்தச் சேவலின் சிறகுகள் பளபளத்தன. அங்கங்கே பறவைகள் தம்பாட்டுக்கு தாங்களும் கீச்.. கீச்... என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டிருந்தன. சூரியன் மேற்கில் அலுப்பு முறிக்கத் தொடங்கிவிட்டான்.

இத்தனையும் நிதானமாக நடக்க சுகுமார் மட்டும் பதறித் துடித்து நேரத்தைப் பார்த்தான். காலை நான்கு மணி இருக்கும், சுகுமார் எழுந்துவிட்டான். அருகிலே தூங்கிக்கொண்டு இருந்த தன் தந்தையாரையும் தாயாரையும் பார்த்தான், பின்னர் ஒரு தயக்கத்துடன் தந்தையாரை நெருங்கி.

அப்பா.. அப்பா...

என்னடா தம்பி?? அரைத் தூக்கக் கலக்கத்தில் கேள்வி கேட்டார் சுந்தரேசன்.

இண்டைக்கு நாங்கள் செய்த அந்த பொம்மை வீட்டை ஸ்கூலுக்குக் கொண்டு போகவேணும். இண்டைக்கு கொண்டு போகாட்டால் என்ட அந்த வீட்டை கண்காட்சியில வைக்கேலாது எண்டு ரீச்சர் சொன்னவர் ஒருவிதப் பதட்டத்துடன் கூறினான் சுகுமார்.

சரியடா.. இப்ப படடா! காலம்பிற பஸ் ஸ்டாண்டில கொண்டு வந்து எல்லாச் சாமானையும் தாறன் புன்னகையுடன் கூறினார் சுந்தரேசன்.

அரைமனதுடன் மீள கண்களை மூடினான் சுகுமார். அவனால் தூங்க முடியவேயில்லை. கனவில் தான் பாடசாலைக்குக் கொண்டு சென்ற பொம்மை வீடு மழை நீர் பட்டு பழுதுபட்டுவிடுவது போன்ற நிகழ்வுகள் திரும்பத் திரும்ப வந்துகொண்டு இருந்தது.

கடைசியாக ஆறு மணியளவில் சுகுமார் தாயாரின் குரல் கேட்டு துகில் நீத்தான்.

சுகுமார் ஏழு வயதுப் பாலகன். இவன் கல்விகற்கும் பாடசாலை இவன் வீட்டில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. இவன் கிராமத்தில் இருந்து பாடசாலைக்குச் செல்வதென்றால் காலையில் ஏழு மணிக்கு வரும் அரச பேரூந்தில் செல்ல வேண்டும். தனியார் பேரூந்தில் செல்வதென்றால் பணம் அதிகம் செலவாகும், அதனால் இந்த ஏழைகளுக்கு அந்த அரச பேரூந்தே தஞ்சம்.

சில நாட்களுக்கு முன்னர் சுகுமாரின் வகுப்பாசிரியர் தனது மாணாக்கருடன் பேசத் தொடங்கினார்.

பிள்ளைகளே!!! எங்கட பாடசாலையில ஒரு கண்காட்சி நடக்கப்போகுது.. அதுக்கு நீங்கள் உங்களுக்கு விருப்பமான கைவினைப் பொருட்களைக் கொண்டு வரலாம்

அன்று முதல் சுகுமார் கனவெல்லாம் தானும் அந்தக் கண்காட்சியில் ஒரு கைவினைப் பொருளை வைக்கவேண்டும் என்பதே. வீடு திரும்பியதும் தன் தந்தையாரை நச்சரித்து ஒரு சிறிய பொம்மை வீடு செய்துகொண்டான்.

அழகான சிவப்பு நிறக் கூரை, பளீர் என்ற வெள்ளை நிறத்தில் சுவர்கள். வீட்டினுள்ளே பொம்மை மனிதர்கள், தளபாடங்கள், தொலைக்காட்சி, வீட்டின் வெளியே சின்னப் பூந்தோட்டம், கிணறு என்று அவன் வீடு கலாதியாக இருந்தது.

இத்தனை வேலையும் முடிய நாட்கள் நன்கு சென்றுவிட்டன. பொறுமை இழந்த ஆசிரியர் நாளை உன் கைவினைப் பொருளைக் கொண்டு வராவிட்டால் அதைக் கண்காட்சிக்குச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று வகுப்பில் சத்தமிட்டுவிட்டார். சுகுமாருக்கு அதைச் சகிக்கவேயில்லை. இவ்வளவு அழகான வீட்டை எப்படி கண்காட்சியில் வைக்காமல் விடுவது??? இன்று அவனுக்குக் கொடுக்கப்பட்ட தவணையின் கடைசிநாள்.

அதனால்தான் இவ்வளவு பதட்டத்துடன் காணப்படுகின்றான் சுகுமார்.

ஆறு முப்பதுக்கே சாப்பாடு முடித்து பாடசாலை செல்லத் தயாராகிவிட்டான். தந்தையார் சுந்தரேசனும் பொம்மை வீட்டை தன் கைகளில் ஏந்தியவாறு தன் புத்திரனுடன் பஸ் தரிப்பிடத்திற்குச் சென்றனர்.

6.45 க்கு வரவேண்டிய தனியார் பேரூந்து இவர்களைக் கடந்து சென்றது. பேரூந்து கடந்து செல்லும் போது சுகுமாரின் கண்கள் சிறிய ஏக்கத்துடன் தந்தையாரைப் பார்த்தது. அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் புரியாதது போல தந்தையார் அமைதியாக இருந்துவிட்டார்.

சுகுமாரைப் பொறுத்தவரை நேரம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தது. அந்தப் பொம்மை வீட்டை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் வரை அவனுக்கு நிம்மதி இல்லை.

கடைசியாக இப்போது ஏழு மணியாகிவிட்டது. இன்னமும் பேரூந்து வரவில்லை. சுகுமார் கலக்கம் அடையத் தொடங்கினான். தந்தையின் கையில் இருந்த மணிக்கூட்டை அடிக்கடி பார்த்துக்கொண்டான்.

அப்பா..! ஏன் இன்னும் பஸ் வரேல?

அடேய்..!! அரசாங்க பஸ்சுகள் எண்டைக்கடா நேரத்துக்கு வந்திருக்குது? மகனைத் தேற்றினார் தந்தையார். என்றாலும் அவர் மனதின் அடியிலும் இப்போது சந்தேகம் துளிரிவிடத் தொடங்கியிருந்தது.

நேரம் மெல்ல மெல்ல ஓடத் தொடங்கியிருந்தது. ஏழு மணி மெல்ல மெல்ல நகர்ந்து ஏழு முப்பது ஆகிவிட்டது. சுகுமார் கண்களில் இப்போது கண்ணீர்த் துளிகள்.

மற்றய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

சுந்தரேசன்... கார்த்திக் சொன்னவன், சீ.டி.பி பஸ் இண்டைக்கு பிரேக் டவுனாம். வராதாம், பொடியைக் கூட்டிக்கொண்டு வீட்ட போங்கோ சொல்லிக்கொண்டே நகர்ந்தார் சுந்தரேசனின் அயல் வீட்டுக்காரன் கதிரேசன்.

தம்பி நீ நாளைக்கு இத பள்ளிக்கூ...... சொல்லிக் கொண்டே சுந்தரேசன் திரும்பிப் பார்த்தார், அவர் மகன் பேரூந்து செல்ல வேண்டிய திசையில் நடந்துகொண்டு இருந்தான். அவனுக்குத் தெரியும அடுத்துவரும் தனியார் பஸ்சில் தன்னை அனுப்பத் தன் தந்தையிடம் பணம் இல்லை என்பது.

கண்ணில் ஒரு துளி கண்ணீர் ததும்ப, அதை தன் பின்னங்கையால் துடைத்துவிட்டுக்கொண்டே கதிரேசன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். கதிரேசனிடம் ஒரு பழைய சைக்கிள் உள்ளது சுந்தரேசனுக்குத் தெரியும்.

ஓவியன்
26-09-2007, 03:51 AM
மயூ நீண்ட இடைவேளையின் பின்னர் உங்கள் சிறுகதை ஒன்று......

மூச்சு விடாமற் படித்தேன், அப்படியே என்னை ஈழத்து நினைவுகளுக்கு இழுத்துச் சென்றன உங்கள் கதையின் வார்தையாடல்கள்...
அன்றாடம் நடைபெறும் சிறு விடயங்களை எப்படி மயூ உங்களால் இவ்வளவு ஆழமாக ஆராய முடிகிறது....
அது தான் உங்கள் வெற்றியும் கூட.....

ஒரு சிறுவனின் ஆர்வம் எதிர்பார்ப்பு....
அதனை பூர்த்திசெய்ய விரும்பும் தந்தையின் பாசம்....
அதற்கு முட்டுக்கட்டை போடும் அவர்களது பொருளாதார நிலமையும் நாட்டு நிலமையும்....
மொத்தத்தில் மனதைப் பாரமாக்கியது உங்கள் எழுத்தின் வலிமை......

பாராட்டுக்கள் மயூ!

சுகுமாரைப் போன்றவர்களின் கனவுகள் மெய்ப்படும் நாட்கள் வரப் பிரார்த்திப்போம்....

மயூ
26-09-2007, 03:55 AM
சமூகத்தில் உள்ள யதார்த்தமான ஒரு சின்ன சம்பவத்தை வைத்து கதைகள் எழுத வேண்டும் என்பதே என் ஆர்வம்... அவ்வாறு எழுந்த கதைகளில் ஒன்றுதான் இந்தக் கதை.

உங்கள் அருமையான அன்பான விமர்சனத்திற்கு நன்றி ஓவியன்.

நீண்ட நாட்களிற்குப் பின்னனர் கதை எழுதினேன்.. எங்கே டச் விட்டுப் போயிற்றோ என்று யோசித்துக்கொண்டிருந்தேன்... உங்கள் விமர்சனத்தைப் பார்த்தால் விட்டுப் போகவில்லை என்று தோன்றுகின்றது.
மீண்டும் ஒரு தடவை நன்றி ஓவியன்.

lolluvathiyar
26-09-2007, 11:46 AM
இளம் வயது பிள்ளைகளின் சின்ன சின்ன வியசம் அவர்களுக்கு எவ்வளவு பெரிய விசயம். அதுவும் ஒரு ஏழை குடும்பத்தில் இந்த ஆர்வத்துடன் பிறந்து விட்டால், எத்தனை சிரமபடவேண்டும்
தொடருமா

மலர்
26-09-2007, 12:49 PM
பள்ளிவயதில் எல்லா சிறுவர்களுக்கும் உள்ள அதே எதிர்பார்ப்பு...
பிள்ளையின் ஆசையை பூர்த்தி செய்ய தவிக்கும் தந்தையின் தவிப்பு..
எல்லாவற்றிர்க்கும் முட்டுக்கட்டையாய் குடும்ப நிலை...


கண்ணில் ஒரு துளி கண்ணீர் ததும்ப, அதை தன் பின்னங்கையால் துடைத்துவிட்டுக்கொண்டே கதிரேசன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

மொத்தத்தில் எங்கள் கண்ணிலும் நீரை கொண்டு வந்து விட்டீர்.....
வாழ்த்துக்கள்....இன்னும் நிறைய கதை எழுத...

ஜெயாஸ்தா
26-09-2007, 12:59 PM
சிறுகதையானாலும் நம் மனதினுள் ஒரு முள் தைத்த உணர்வு சுகுமாரனை நினைக்கையில். பலர்பேர் வாழ்க்கையில் இது இன்னும் தொடர்கதையாகத்தான் உள்ளது. மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்தால் இன்னும் பல சுகுமாரன்கள் இது போன்ற ஏமாற்றத்தை சந்திக்காமல் இருப்பார்கள்.

மதி
26-09-2007, 01:02 PM
அன்பு மயூ...
வாழ்வியல் சம்பவத்தை உணர்ச்சிகளுடன் கையாண்ட விதம் அருமை...
நீண்ட நாள் கழித்து உம்மிடம் இருந்து வரும் கதை...

ஓர் உணர்ச்சிக் குவியல்...
பாராட்டுக்கள்

மயூ
26-09-2007, 04:14 PM
இளம் வயது பிள்ளைகளின் சின்ன சின்ன வியசம் அவர்களுக்கு எவ்வளவு பெரிய விசயம். அதுவும் ஒரு ஏழை குடும்பத்தில் இந்த ஆர்வத்துடன் பிறந்து விட்டால், எத்தனை சிரமபடவேண்டும்
தொடருமா
ஆமாமம் வாத்தியார் அவர்களே... பின்னூட்டத்திற்கும் கதையோட்டப் புரிதலுக்கும் நன்றி!!! :)

மயூ
26-09-2007, 04:18 PM
பள்ளிவயதில் எல்லா சிறுவர்களுக்கும் உள்ள அதே எதிர்பார்ப்பு...
பிள்ளையின் ஆசையை பூர்த்தி செய்ய தவிக்கும் தந்தையின் தவிப்பு..
எல்லாவற்றிர்க்கும் முட்டுக்கட்டையாய் குடும்ப நிலை...மொத்தத்தில் எங்கள் கண்ணிலும் நீரை கொண்டு வந்து விட்டீர்.....
வாழ்த்துக்கள்....இன்னும் நிறைய கதை எழுத...
நன்றி மலர்... உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...


சிறுகதையானாலும் நம் மனதினுள் ஒரு முள் தைத்த உணர்வு சுகுமாரனை நினைக்கையில். பலர்பேர் வாழ்க்கையில் இது இன்னும் தொடர்கதையாகத்தான் உள்ளது. மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்தால் இன்னும் பல சுகுமாரன்கள் இது போன்ற ஏமாற்றத்தை சந்திக்காமல் இருப்பார்கள்.
நன்றி ஜெ.எம்.. ஆதரவிற்கு நன்றி... எல்லாம் நீங்கள் நினைத்தவாறு நடக்க இறைவனை வேண்டுவோம்.


அன்பு மயூ...
வாழ்வியல் சம்பவத்தை உணர்ச்சிகளுடன் கையாண்ட விதம் அருமை...
நீண்ட நாள் கழித்து உம்மிடம் இருந்து வரும் கதை...

ஓர் உணர்ச்சிக் குவியல்...
பாராட்டுக்கள்
நன்றி மதி அண்ணா... நீண்ட நாட்களின் பின்னர் எழுதிய கதை... சொதப்பலோ என்று நினைத்தேன்.. உங்கள் பின்னூட்டம் பார்க்கையில் தெரிகின்றது.. அவ்வளவு மோசமாக எழுதவில்லை. :icon_b:

aren
26-09-2007, 05:26 PM
அருமையாக வந்திருக்கிறது மயூ. பாராட்டுக்கள். உங்கள் கைகளை கொடுங்கள், கை குலுக்க வேண்டும். நல்ல யதார்த்தமாக எழுதுகிறீர்கள். நீங்கள் நிறைய எழுதவேண்டும். நீங்கள் திறமையான எழுத்தாளராக வர வாய்ப்பிருக்கிறது. அதற்கு முயற்சி செய்யுங்கள். என்னுடைய வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

பாரதி
26-09-2007, 08:35 PM
அன்பு மயூ, சில வேளைகளில் ஓய்வு என்பது மீண்டும் முழு வேகத்துடன் பணியாற்ற எடுத்துக்கொண்ட உற்சாகபானம்தான். கண்ணில் படும் காட்சிகளையும் ஒரு 'கண்காட்சி'யாக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

மயூ
27-09-2007, 03:03 AM
அருமையாக வந்திருக்கிறது மயூ. பாராட்டுக்கள். உங்கள் கைகளை கொடுங்கள், கை குலுக்க வேண்டும். நல்ல யதார்த்தமாக எழுதுகிறீர்கள். நீங்கள் நிறைய எழுதவேண்டும். நீங்கள் திறமையான எழுத்தாளராக வர வாய்ப்பிருக்கிறது. அதற்கு முயற்சி செய்யுங்கள். என்னுடைய வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்
நன்றிஆரென் அண்ணா... உங்களைப் போன்றவர்களின் நல்லாசி கிட்டுமானால் அனைத்தும் சாாத்தியமே..!!!:)


அன்பு மயூ, சில வேளைகளில் ஓய்வு என்பது மீண்டும் முழு வேகத்துடன் பணியாற்ற எடுத்துக்கொண்ட உற்சாகபானம்தான். கண்ணில் படும் காட்சிகளையும் ஒரு 'கண்காட்சி'யாக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி பாரதி அவர்களே... ஆரம்ப காலத்தில் எழுத வேண்டும் என்னும் ஆர்வத்தை தூண்டியேர்களில் நீங்களும் ஒருவர், உங்களின் தேதயில்லாாக் குறிப்புகளை என்றும் மறக்கமாட்டேன்!!!:)

சிவா.ஜி
27-09-2007, 04:46 AM
நான் முதன்முதலில் படிக்கும் உங்கள் சிறுகதை இது மயூ.
பிரமாதம்.எடுத்துக்கொண்ட கருவுக்கு உரு கொடுப்பதென்பது,அதையும்சரியாகக் கொடுப்பதென்பது எல்லோராலும் முடியாது.இதில் நீங்கள் தேர்ந்தவர் என்பதை பலமுறை ஓவியன் தன் பதிப்புகளில் குறிப்பிடுவார்.அதை இந்தக்கதையிலும் பார்த்து அதிசயித்து நிற்கிறேன்.
ஏழு வயது சிறுவனீன் உள்ளக்கிடக்கையை அவனது கோணத்திலேயே சொன்ன விதம் அருமை.அந்த கடைசிநேர பரபரப்பை உணரமுடிகிறது.ஏழைத்தந்தையின் இயலாமையும்,மகனின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு சைக்கிள் கடன் வாங்கப்போகும் அந்த தந்தை பாசமும் வெகு நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள். ஏழைச்சொல் அம்பலம் ஏறாது என்பார்கள்..அதே போல ஏழையின் ஆசையும் நிறைவேற எத்தனை முட்டுக்கட்டைகள்.நிகழ்வை நிதர்சனமாக கட்டியிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் மயூ.

மயூ
30-09-2007, 02:38 PM
நன்றி சிவாஜி...
உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி....
இன்னமும் எழுத வேண்டும் சிறப்பாக எழுத வேண்டும் என்பதே என் ஆசை!!!

அமரன்
05-10-2007, 08:39 AM
எனது கடந்த காலத்தை அசை போடுகிறேன். கைவினைதிறன், கண்காட்சி என எத்தனை நிகழ்வுகள் வீட்டின் பட படப்பையும் துடிப்பையும் எகிறச்செய்யும். பங்கெடுபோமா என நானும், பங்கெடுக்க வேண்டுமே என குடும்பமும் பரஸ்பரங்களின்றி பரபரப்பாக... அதே நினைவு. அப்போ கிடைத்த அதே நிறைவு. பாரதி அண்ணா சொன்னது போல ஓய்வு என்பது உற்சாக பானம்தான்...

மகனின் எண்ணம் அறிந்து அதனை நிறைவேற்ற தந்தை கொண்ட திண்ணம். தந்தையின் மடியின் கனம் அறிந்து நடக்கும் தனயன்.. இதமான தென்றல் வருடிய உணர்வு...கலகிட்டீங்க மயூ.

பாராட்டுதலுடன்

மனோஜ்
08-10-2007, 10:16 PM
சிறப்பான கதை மயூ சிறுவனின் மனம் கதையால் பிரதிபளிக்கபட்டது:icon_b:

அக்னி
15-10-2007, 09:53 AM
புரியாத வயதிலேயே, வாழ்வுச்சூழலுக்கேற்ப திணிக்கப்படும் புரிதல்கள்...
துளிர்க்க எத்தனிக்கும் தளிர்களுக்கு எத்தனையெத்தனை குறுக்கீடுகள்...

விண்ணை ஆராய பறக்கும் ரொக்கெட்டுகள்...
ஆனால், படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க முடியாத ஏழ்மை இன்னமும் மீதமிருக்கின்றது பூமியில்...

சுகுமாரின் ஆர்வம், அந்த ஆர்வத்தை இயன்றளவு பூர்த்தியாக்க முனையும் பெற்றோர்,
இப்படி நிஜமான வாழ்விலும், ஒளிர முற்படும் வைரங்கள் பட்டை தீட்டாமலே,
அல்லது தீட்டப்பட முடியாமலே மறைந்து கிடக்கின்றன.


கண்ணில் ஒரு துளி கண்ணீர் ததும்ப, அதை தன் பின்னங்கையால் துடைத்துவிட்டுக்கொண்டே கதிரேசன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். கதிரேசனிடம் ஒரு பழைய சைக்கிள் உள்ளது சுந்தரேசனுக்குத் தெரியும்.
இவ்வரிகள் சொல்கின்றன கதையின் தொடர்கதைகளை...

சிறிய பொறியை, மனதில் திரையிட்டு போகின்றது...
பாராட்டுக்கள் மயூ...

யவனிகா
15-10-2007, 10:49 AM
அருமையான கதை. மகனின் மனது நோகக்கூடாது என்பதற்காக பல மைல்கள் சைக்கிள் மிதிக்கப் போகிறார், தந்தை..குடுத்து வைத்த மகன்..பணத்தில் நிரப்ப முடியவில்லையின்றாலும் பாசத்தால் மனதை நிரப்பி விடுகிறார்.எளிமையான நடையில் கதை சொல்லப்பட்ட விதம் நன்று.வாழ்த்துக்களுடன்,
யவனிகா.