PDA

View Full Version : இரண்டாம் தாய்



சிவா.ஜி
23-09-2007, 06:05 AM
என் சிறுவயதில் அதாவது நான் 5ஆம் வகுப்பு படிக்கும் வரை நான் இரு தாய்களிடம் வளர்ந்தவன்.ஒரு தாயை அம்மா என்றும்,இன்னொரு தாயை அக்கா என்றும் அழைத்தேன்.அந்த அக்கா பெயர் இன்றுவரை தெரியாது.அக்காவின் கணவர் பெயர் அப்துல் மஜீத்.என்னுடைய அப்பாவின் மிக நெருங்கிய நன்பர்.எங்கோ சிறு கிராமத்தில் சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தவரை,கட்டாயப்படுத்தி நகரத்துக்கு வரவைத்தார் அப்பா.கையிலிருந்த பணத்தையெல்லாம் போட்டு நகரத்தின் மையப்பகுதியில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து கொஞ்சம் பெரிய அளவில் மளிகைக் கடை வைத்தார்கள்.கடும் உழைப்பு,மற்றும் வாடிக்கையாளர்களிடம் நல்லுறவு அந்த கடைக்கு அபரிதமான வளர்ச்சியைக் கொடுத்தது.வாடகைக் கடை சொந்தமானது.அந்த நாட்களிலேயே ஒன்றரை லட்சம் ரூபாயில் மிகப் பெரிய வீடு கட்டினார்கள்.நாங்கள் அப்போதும் வாடகை வீட்டில்தான்.

மஜீத்பாய் லேட்டாகத்தான் திருமணம் செய்து கொண்டார்.அதுதான் அக்கா. ஏழு குழந்தைகள் பெற்றும்,தாய்மையின் தவிப்பு தீராமல் என்னையும் தன் மகனாக பாசத்தில் நனைய வைத்தார்.மூத்தவன் சனாவுல்லா அதிகமாக யாருடனும் பழக மாட்டான்.அடுத்தது நாஸின்.என் சம வயது.என்னுடடைய வகுப்புத் தோழியும் கூட.அடுத்தவன் ரிஸ்வான்,என்னைவிட ஒரு வயது சிறியவன்,ஆனால் என்னுடைய மிக நெருக்கமான நன்பன்.நான்காம் வகுப்பு படிக்கும்போதே வீட்டுக்குத் தெரியாமல்,குப்பைத்தொட்டிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பீடி பிடித்தோம்.அதிகாலையில் எழுந்து கடைகள் திறக்குமுன் அவற்றின் முன்னால் வீசப்பட்டிருக்கும் காலியான தீப்பெட்டிகளையும்,சிகெரெட் அட்டைகளையும் சேகரிப்போம்.பாஷன்ஷோவும்,சார்மினாரும் சொத்துக்களாக எங்கள் ரகசிய பெட்டிகளில் பணக்கட்டுகளாய் ஆக்ரமித்து இருக்கும்.

அதிகமான பணம் மூத்தவனை கெடுத்துவிட்டது.சேர்வார் சரியில்லாமல் பணத்தைக் கண்டபடி செலவு செய்தான்.வரவு அதிகமாக இருந்ததால்,செலவு கணக்கில் கொள்ளப்படவில்லை.அக்காவுக்கு என் மேல் இருந்த பிரியத்தால் நான் குழந்தையாய் இருக்கும்போதிலிருந்தே என்னை என் வீட்டிலிருந்து தூக்கிக் கொண்டு வந்து விடுவார்.அவர்களோடு ஒருவனாய் நானும் வளர்ந்தேன்.அவர்கள் உருது பேசும் முஸ்லீம்கள்.அதனால் கொஞ்சம் உருதும் கற்றுக்கொண்டேன்.

அது நோன்பு சமயம்.பள்ளி விடுமுறை.நான் நான்காம் வகுப்பில் இருந்தேன்.அவர்கள் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தேன்.அக்கா அழைத்தார்.வீட்டில் என்னை மணி என்றுதான் அழைப்பார்கள்."மணி இங்கே வா" சமயலறையிலிருந்து அக்காவின் குரல்.நோன்பு மாதத்தில் அவர்கள் பகலில் சாப்பிட மாட்டார்கள் என்று தெரியும்.இப்போது எதற்கு சமையலறையிலிருக்கிறார்...யோசனையோடு சென்றேன்."இதுல உப்பு சரியா இருக்கா பார்"சின்ன கரண்டியில் குழம்பை எடுத்து என் உள்ளங்கையில் ஊற்றினார்.நக்கிப்பார்த்துவிட்டு"சரியா இருக்குக்கா"என்றேன்."நான் சாப்பிடக்கூடாதில்லையா அதான் டேஸ்ட் பாக்க உன்னைக் கூப்பிட்டேன்."என்றவரிடம்.."நீங்க சாயந்திரம்தானே சமைப்பீர்கள் இப்போது எதற்கு" என்று அந்த மதியவேளை உணவு தயாரிப்பின் காரணம் கேட்டேன்."உனக்குத்தாண்டா...விளையாடி களைச்சுப்போயிருப்ப கொஞ்சம் இரு இப்ப ரெடியாயிடும்"என்றார்."அக்கா நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கறேன் நீங்க ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே"என்றதும்"பெரிய மனுஷன் பேச்செல்லாம் பேசாத..பேசாம வந்து சாப்பிடு..போ போய் கை கழுவிட்டு வா...கையெல்லாம் பாரு...பாதாம் மரத்துல ஏறீனீங்களா" என்றதும் "ஆமாக்கா"என்று சொல்லிவிட்டு ஓடிப்போய் கை கழுவிக்கொண்டு வந்தமர்ந்தேன்.சுடச்சுட சாதமும்,குழம்பும் பரிமாறிவிட்டு பக்கத்திலிருந்து நான் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தார்."அக்கா நீங்க யாருமே சாப்பிடாம நான் மட்டும் சாப்டறது என்னமோ போல இருக்குக்கா" என்றதற்கு"பேசாம சாப்பிடுடா..மனசார நோன்பு இருக்கறவங்களுக்கு யாரு சாப்பிடறதைப் பாத்தும் ஆசை வரக்கூடாது.அதுவுமில்லாம,இந்த நோன்பு இருக்கறதே அடுத்தவங்க பசி என்னன்னு தெரிஞ்சிக்கறதுக்குத்தான்.பசியோட இருக்கறவங்களுக்கு சாப்பாடுபோட்டு அவங்க வயிறு நிறைய சாப்பிடறதப் பாக்கறதே ஒரு பெரிய புண்ணியண்டா..உனக்கெல்லாம் இது புரியாது."எனக்கு அந்த வயதில் அவ்வளவாக அவர் சொன்னது புரியவில்லைதான்,ஆனால் புரிந்ததெல்லாம் அந்த பாசம்தான்.

அப்படி பாசம் கொட்டி வளர்த்த அந்த அக்கா பின்னாளில் நாங்கள் கும்பகோணத்துக்கு குடிபெயர்ந்த பிறகு அந்த அக்காவின் சொந்த அண்ணனாலேயே வஞ்சிக்கப்பட்டு எல்லா சொத்து சுகங்களையும் இழந்து திருப்பத்தூரில் ஒரு சிறிய வாடகை வீட்டில் ஒருவேளை உணவுக்காக பீடி சுற்றி சம்பாதிக்கும் கொடுமையும் நிகழ்ந்தது.ஒரு ராஜகுமாரி போலிருந்த நாஸின் தொடர்ந்து படிக்க முடியாமல் ஏதோ ஒரு கறிக்கடைகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு இன்று கஷ்ட ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறாள்.எத்தனையோமுறை அவர்களையெல்லாம் பார்க்கவேண்டுமென்று தோன்றினாலும்,அவர்களை இந்த நிலைமையில் பார்க்க என் மனது ஒத்துக்கொள்ளவில்லை.என்னுடைய அண்ணன் ஒருமுறை அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வந்து மஜீத்பாய் இறந்துவிட்டதாகவும்,சனாவுல்லா கடைசிவரை திருந்தாமல் கெட்ட சகவாசத்தால் ஏதோதோ வியாதி வந்து சின்ன வயதிலேயே இறந்துவிட்டதாகவும்,ரிஸ்வான் கூலிவேலைக்காக பெங்களூரில் இருப்பதாகவும் சொன்னார்.நாஸினைப்பற்றிக் கேட்டபோது"உன்னை ரொம்ப விசாரிச்சா ஆனா நீ வந்து அவளை பாக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாடா...உன்னைப்பத்தி பேசும்போதே அழறா..இருந்தாலும் ஒருவாட்டி நீ போய் அவளைப் பார்த்துவிட்டு வா" என்றார்.10 வயதில் நான் பழகிய அந்த இளவரசியை இந்த சூழ்நிலையில் எப்படி என்னால் பார்க்கமுடியும்.என் மனைவிகூட சொல்கிறார் "போய் பாத்துட்டு ஏதாவது உதவி தேவைன்னா செஞ்சிட்டு வாங்க" என்று.என்ன உதவி செய்ய முடியும்?பணம் கொடுக்கலாம்,ஆறுதலாய் சில வார்த்தைகள் சொல்லலாம்...ஆனால் அந்த இழந்த வசந்தத்தை எப்படி மீட்டுக்கொடுக்க முடியும்.மனது முழுவதும் பாரத்துடன் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறேன்.

பூமகள்
23-09-2007, 06:20 AM
உண்மையில் இந்த சம்பவத்தைப் படித்தவுடன் என் மனம் கணத்ததை உங்கள் இடத்தில் இருந்து என்னால் உணர முடிந்தது.
நீங்கள் சென்று பார்க்க கஸ்டப்பட்டாலும், அவர்கள் துன்பத்தில் இருக்கும் போது அவர்களைச் சென்று பார்த்து பேசுவதே அவர்களுக்கு மிகுந்த ஆறுதல் தரும் சிவா அண்ணா. வாய்ப்பு வந்தால் நிச்சயம் போய் பார்த்து பேசுங்கள் அவர்களுடன்.
சொந்தங்களின் பாசம் துன்பத்தில் கூட இருப்பதில் தான் இருக்கிறது அண்ணா. விரைவில் அவர்களிடம் இருந்து நல்ல செய்தி சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

சிவா.ஜி
23-09-2007, 06:28 AM
ஆமாம் சகோதரி.எப்படியும் சென்று பார்த்துவிட்டு வரவேண்டும்.ஆனால் அந்த நிமிடங்களை எப்படி எதிர் கொள்ளப்போகிறேனென்றுதான் கலக்கமாக இருக்கிறது.ஏனென்றால் நான் அவர்களோடு இருந்தபோது அவர்கள் நிலை உயர்ந்திருந்தது.இப்போது நாஸின் என்னைப் பார்ப்பதில் அவளுக்கு எவ்வளவு சங்கடமாக இருக்குமென்று நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

அமரன்
23-09-2007, 11:43 AM
பெண்கள் அனைவருமே தாய்மை குடியிருக்கும் கோவில்களே. அம்மா,சகோதரி, சிநேகிதி, மனைவி,ஏன் மகள் கூட தாய்மையுடன் செயல்படுவாள். இன்னொரு விதமாக சொன்னால் பசித்தவனுக்கு சோறுபோடும் எல்லாமே தாய்மைதான் . தாய்மைக்கு பாலின வேறுபாடோ தினை வேறுபாடோ இல்லை. தாய்மை சொன்ன அனுபவப் பகிர்வு அமிர்தம். சிவா...பொறாமையுடன் பகிர்வுக்கு நன்றி.

சிவா.ஜி
23-09-2007, 11:50 AM
அமரன் நீங்கள் சொன்னது நூறுசதவீதம் உண்மை.பெண்மையே தாய்மைதான்.அந்த தாய்மைக்கு மதமோ,மொழியோ,இனமோ எதுவுமே தெரியாது.தெரிந்ததெல்லாம் பாசப்பொழிவுதான்.நோன்பு மாதத்தில் அந்த நல்ல தாயை நினைவுகூற விரும்பினேன்.பின்னூட்டத்திற்கு நன்றி அமரன்.

lolluvathiyar
24-09-2007, 06:03 AM
அருமையான அனுபவங்கள் இருக்கிறது உங்களிட்ட சிவாஜி, சின்ன வயதில் அன்பு செய்தவர்களை என்றும் மறக்க முடியாது.
(எனக்கு இது போன்ற உணர்வுபூர்வமான உறவுகளும் நட்புகளும் ஏற்படவில்லை). என் மீது யார் எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தார்கள் என்பதை உணராமலே காலம் கழித்து விட்டேன்.

சிவா.ஜி
24-09-2007, 06:55 AM
வாத்தியார்...அனுபவங்கள் எல்லோரிடத்துமுண்டு.நம்மை அன்பு செய்பவர்கள் நிறையபேர் உண்டு. நீங்கள் சொன்னதைப்போல உங்களால் உணர முடியவில்லை.ஆனால் இப்போதும் ஏதோ ஒரு ஏகாந்த வேளையில் பழைய நினைவுப்பக்கங்களைப் புரட்டிப் பார்த்தீர்களானால்..நீங்களும் அவற்றை மீட்டெடுக்க முடியும்.

ஷீ-நிசி
24-09-2007, 07:09 AM
சிவா.... அவர்களே

மன்ம் கணக்கின்றது.... மனதில் சில வடுக்கள் எப்பொழுதும் இருக்க விதி போடும் சூடுகள்... அந்த நினைவுகளின் வலிகள் எப்படி இருக்கும் என்று நிதானிக்கமுடிகிறது.. நீங்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்று என் மனம் சொல்லுகிறது..

சிவா.ஜி
24-09-2007, 07:16 AM
நிச்சயம் ஷீ-நிசி.கண்டிப்பாகப் பார்ப்பேன்.

மலர்
25-09-2007, 04:01 PM
சிவா அண்ணா..
உண்மையில் இதை படித்ததும் மனம் வேதனைப்படுகிறது...
உங்களுக்கு அவர்களை பார்க்க கஷ்டமாக இருந்தாலும் அவர்களுக்கு அது ஆறுதலாகத்தான் இருக்கும்.....
உண்மையான நண்பனை ஆபத்தில் அறிந்து கொள்ளலாம்...
அது போல தான் எல்லா உறவுகளும்...
அவர்களை நிச்சயம் போய் பார்த்து பேசுங்கள்


என் மனைவிகூட சொல்கிறார் "போய் பாத்துட்டு ஏதாவது உதவி தேவைன்னா செஞ்சிட்டு வாங்க" என்று.

அண்ணியே சொல்லிவிட்டார் அப்புறம் என்ன...?


என்ன உதவி செய்ய முடியும்?பணம் கொடுக்கலாம்,ஆறுதலாய் சில வார்த்தைகள் சொல்லலாம்...ஆனால் அந்த இழந்த வசந்தத்தை எப்படி மீட்டுக்கொடுக்க முடியும்.மனது முழுவதும் பாரத்துடன் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறேன்

அப்படியில்லை அண்ணா... இழந்த வாழ்க்கையை மீட்கும் உரிமை நமக்கு கடவுள் தரலை...
ஆனால் இருக்கும் வாழ்க்கையை நம்மால் மாற்ற முடியும்...

சிவா.ஜி
07-10-2007, 01:55 PM
மலர் முதலில் மன்னிக்க வேண்டுகிறேன்....நீண்ட நாளாகியும் உன் பின்னூட்டத்தைப் பார்க்காததால். நீ சொல்வதைப்பொல்தான்..வாழ்க்கையின் வசந்தத்தை மீட்டுக்கொடுக்கும் சக்தியை ஆண்டவன் நமக்கு அளிக்க வில்லை.இருந்தாலும்..வலியை மரக்கவைக்கும் நேசத்தை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.சொல்லும் வார்த்தைகளே ஆறுதலாக இருக்கும்பட்சத்தில் அதையும் சொல்லாமல் இருப்பது சரியல்ல.
இந்தமுறை கண்டிப்பாக போய் பார்த்துவருகிறேன்.மிக்க நன்றி தங்கையே.

ஜெயாஸ்தா
07-10-2007, 02:37 PM
என்ன காரணம் என்று சரியாகத்தெரியவில்லை சிவா. இதைப் படித்துமுடிக்கும் போது என் கண்கள்கூட கொஞ்சம் கலங்கிவிட்டது? நல்ல இருந்த குடும்பம் இப்படி ஆனதற்கா? நல்ல குணமிருந்த அந்த அக்கா இப்போது கஷ்டப்படுவதாலா? இல்லை உங்கள் நண்பர் பெங்களுரில் கூலி வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கா? இல்லை அந்தப்பெண் கஷ்டஜீவனம் நடத்துவதாலா? உங்களை கூட பார்க்க வரவேண்டாம் என்னும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாலா? தெரியவில்லை.....!

சிவா.ஜி
07-10-2007, 02:44 PM
நான் அந்த குடும்பத்துடன் வாழ்ந்த அந்த வசந்த காலங்களை நினைக்கும்போது..இப்போதைய அவர்களின் நிலையை நினைத்து மனம் கணத்துப்போகிறது.வாழ்ந்து கெட்டவர்களின் நிலை எவ்வளவு பரிதாபகரமானது...எப்படியும் என் நன்பன் ரிஸ்வானையும்,தோழி நாஸினையும் கண்டிப்பாக பார்த்து என்னால் முடிந்த வரையில் ஆறுதலாக இருப்பேன். மென்மையான உங்கள் மனத்திற்கு என் வந்தனங்கள் ஜே.எம்.

rajaji
07-10-2007, 02:45 PM
படித்து முடிக்கும் போது மனம் பாரமாகிறது.....

இப்படிப்பட்ட நல்லவர்களை இன்னமும் நீங்கள் சென்று பார்க்காமல் இருப்பது நல்லதல்ல.....

உங்கள் தவிப்பையும் என்னால் உணர முடிகிறது..... இருப்பினும் நாமாக பலதையும் கற்பனை செய்து பார்ப்பதிலும் பார்க்க முயற்சி செய்வது சிறப்பானது அல்லவா....

முதலில் சந்திப்பதற்கும் பேசவும் தயக்கமாக இருந்தாலும் சந்தித்த பின்னர் அந்தத் தயக்கம் எல்லாம் பறந்தோடிவிடும்....

இப்போது உங்கள் ஆதரவு அவர்களுக்கு நிச்சயம் புத்துணர்ச்சியையும் தெம்பையும் தரும்.....

எனவே விரைவிலேயே அவர்களைச் சந்தியுங்கள்......
உங்கள் பழைய அந்த் வசந்த காலம் திரும்ப வாழ்த்துக்கள்..

இதை ஒரு நண்பனாகக் கூறுகிறேன்...

சிவா.ஜி
07-10-2007, 02:48 PM
இப்போது உங்கள் ஆதரவு அவர்களுக்கு நிச்சயம் புத்துணர்ச்சியையும் தெம்பையும் தரும்....

மிக சத்தியமான வார்த்தைகள் ராஜாஜி.கண்டிப்பாகச் செய்வேன்.மிக்க நன்றி

யவனிகா
07-10-2007, 03:25 PM
நம்மோடு நல்லபடியாக வாழ்ந்து ,காலத்தால் கெட்டவர்களைப் சந்திக்க நேர்ந்தால் மனது வலிப்பது உண்மைதான், ஆனால் காலம் இதோடு தன் கணக்கை முடித்து விடப் போவதில்லை, மீண்டும் அவர்கள் பழைய நிலைக்கே திரும்ப முடியாவிட்டாலும் பாதிக் கிணறாவது தாண்ட நாம் கட்டாயம் உதவ முடியும். ஏனோ திடீரென்று எனக்கு அழகி பட நினைவு வருகிறது. அழகி எனக்குள் ஏற்படுத்திய ரணத்தை நாஸின் மீண்டும் ஒருமுறை புதுப்பித்திருக்கிறாள். நீங்கள் கட்டாயம் நாஸினை சந்திக்கத் தான் வேண்டும்

சிவா.ஜி
08-10-2007, 12:40 PM
மன்றம் வரும் முன்...சில விஷயங்களில்(நாஸினை சந்திப்பதையும் சேர்த்து) தயங்கி நிற்பேன்...இப்போது இத்தனை உறவுகளின் பக்கபலத்தில் மனதுக்குத் தெம்பாக இருக்கிறது.இந்த முறை(கூடிய சீக்கிரம்) கண்டிப்பாக சந்திப்பேன்.மிக்க நன்றி சகோதரி.

அக்னி
16-10-2007, 11:53 PM
சாதாரணமாக, வசதியான வாழ்விலிருந்து, காலத்தின் கோலத்தால், அந்த வாழ்வைத் தொலைத்தவர்கள்..,
தமது வசதியான வாழ்வின் போது சந்தித்தவர்களை உறவாடியவர்களை தவிர்க்க நினைப்பது இயல்பு.
இன்னொரு பக்கத்தில் பார்ப்போமேயானால், தமது ஏழ்மையின் வரவில், பழகியோர் செலவாகிவிட்டார்கள் என்ற எண்ணமும் எழக்கூடும்.
ஆனால், நீங்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது, உங்களைத் தவறாக நினைக்கவில்லை என்பது புலப்படுகின்றது. எனவே, அவர்கள் விலத்திச் சென்றாலும், நீங்கள் தேடிச்செல்லும்போது, அவர்களுக்கு சிறிதேனும் ஆறுதல் கிட்டும் என்பதே என் எண்ணமும்.
அன்று உங்கள் தந்தையால் கொடுக்கப்பட்ட உந்துவிசை, இன்று உங்களிடமிருந்தும் அவர்களுக்குக் கிடைக்கலாமல்லவா..?
மீண்டும் அவர்கள் வாழ்வு வசந்தத்தின் வசமாக இறைவன் துணை செய்யட்டும்...

அறிஞர்
18-10-2007, 10:42 PM
பாசத்தோடு சென்ற கதை கடைசியில் மனதை கன*க்க வைத்துவிட்டது....
வாரிசுகளாவது.. செழிக்கவேண்டும் என்று மனம் பிராதிக்கிறது.

கஜினி
19-10-2007, 06:24 AM
உருக்கமான சம்பவம். மனம் கணக்கிறது சிவா அவர்களே.

சிவா.ஜி
19-10-2007, 06:53 AM
அக்னி நீங்கள் சொல்வது மிகச் சரி.இந்தமுறை சென்று பார்த்து அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன்.மிக்க நன்றி.

மிக்க நன்றி அறிஞர்.அந்த பாசம்தான் என்னை இத்தனை வருடங்கள் ஆகியும் வேதனைப்பட வைக்கிறது.

நன்றி கஜினி.