PDA

View Full Version : சிலை வடிக்கும் உளிகள்..!இதயம்
22-09-2007, 06:21 AM
சிலை வடிக்கும் உளிகள்..!

எனக்கு ஏற்படும் சந்தோஷமான, துக்கமான விஷயங்களை என் மேல் அன்பும், அக்கறையும் கொண்டவர்களிடத்தில் அப்படியே பகிர்ந்து கொள்வது என் வழக்கம். அந்த வகையில் இவை இரண்டையும் என் மீது அளவில்லாத அன்பை பொழியும் என் தாய், மனைவி இருவரிடம் பகிர்ந்து கொள்வேன். இதன் மூலம் என் மனதுக்கு ஆத்ம திருப்தியும், நிம்மதியும் கிடைப்பதாக உணர்கிறேன். அப்படி அவர்களிடம் சொல்லும் போது நடந்தவற்றில் கூட்டி குறைத்து சொல்வது கிடையாது. காரணம், அவர்களை என் இன்னொரு இதயமாக தான் பார்ப்பதால் என்னை நானே ஏமாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. அதே போல் மனதை மிகவும் குதூகலப்படுத்திய சந்தோஷம் அல்லது குத்திக்கிழித்த வேதனை ஆகியவற்றை தந்த சம்பவங்களை சந்திக்கும் போது அவற்றை பகிர்ந்து கொள்ள நல்ல நண்பர்களை தேடுவதுண்டு. அந்த வகையில் எனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களில் ஒன்றை நல்ல நண்பர்கள் நிறைந்திருக்கும் தமிழ் மன்றத்தில் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் அடைகிறேன்.

சவுதி அரேபியாவில் உள்ள யான்பு என்பது அமைதியான, அழகான நகரம். அது சிறிய நகரம் தான் என்றாலும் அங்கு ஏற்படுத்தப்பட்ட பெரும் பெட்ரோலிய எரிபொருள், இரசாயன தொழிற்சாலைகளும், துறைமுகமும் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற சவுதி நகரங்களைப்போல் அல்லாமல் யான்பு நகருக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது என்ன தெரியுமா.? கடும் வெயில் அல்லது கடும் குளிரை கொண்டிருக்கும் சவுதியின் தட்பவெப்ப சூழ்நிலையில் கோடையானாலும் சரி.. குளிர் காலமானாலும் சரி.. அதன் அதிக தாக்கத்தை வெளிப்படுத்தாத ஒரு தட்பவெப்ப சூழ்நிலையை கொண்ட நகரம் தான் யான்பு..!

சவுதியில் உள்ள ஜுபைல் மற்றும் யான்பு என்ற இரு Royal Commission நகரங்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சார வசதி செய்து கொடுக்கும், அரச குடும்பத்தினர் பங்குதாரர்களாய் இருந்து நடத்தப்பட்டு வரும் பெரிய நிறுவனம் தான் MARAFIQ (Power & Water Utilitiy Company for Jubail & Yanbu) என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தில் Customer Service Department-ல் Billing section பிரிவில் Data Analyst-ஆக நான் பணியில் சேர்ந்த நேரம் அது. SAP Program கொண்டு அந்த நிறுவனத்தின் மொத்த பணிகளும் செய்யப்படுவதால் என் திறமையை வளர்த்துக்கொள்ள அந்த வேலை நல்ல தளம் அமைத்து கொடுத்தது. கொடுத்த பணியை மற்றவர்களை விட சிறப்பாகவும், விரைவாகவும் செய்து கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டிருந்தேன். எங்கள் பில்லிங் பிரிவில் 4 இந்தியர்கள், 2 ஃபிலிப்பினோக்கள், 5 சவுதி நாட்டவர்கள் வேலை பார்த்தார்கள். என்னுடைய உழைப்பும், உண்மையும் வெகு விரைவில் 12 பேர் வேலை பார்த்த Billing section-ல் என்னை Section Team leader ஆக்கியது. திறமைக்கும், உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைத்துக்கொண்டிருந்ததால் என் வேலையை இன்னும் சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்ற உத்வேகம் மேலும் எனக்கு கிடைத்தது. வேலையின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் குடும்பத்தை பிரிந்திருக்கும் கஷ்டம் கூட குறைந்தது போல் உணர்வு எனக்கு.

எனக்கு மேற்பார்வையாளராக இருந்தவர் சவுதியைச்சேர்ந்தவர் என்பதால் வேலை விஷயத்தில் அவரிடம் நான் கற்றுக்கொள்வதை விட, அவருக்கு நான் வேலை குறித்து கற்றுக்கொடுக்கும் நிலையே இருந்தது. ஆனால், ஒவ்வொரு நாளும் வேலையில் ஏற்பட்ட சவால்களும், சிக்கலான சூழ்நிலைகளும் எனக்கு பல நல்ல அனுபவங்களை கொடுத்து என் திறமையை வளர்க்க வழி செய்ததால் முழு மன விருப்பத்துடன் என் வேலையை செவ்வனே செய்து வந்தேன். இது மேலாளருக்கு என் மீது மிகவும் மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தியது. இதனால் வேலையில் ஏற்படும் சிக்கல்களை எப்போதும் என்னிடம் கொடுத்து செய்யச்சொல்வார். நானும் செய்து கொடுப்பேன். இப்படி அடிக்கடி செய்ய வேண்டி வந்ததால் அந்த வேலைகளை செய்ய அமைதியான சூழ்நிலை எனக்கு தேவைப்பட்டது. எனவே அவற்றை என் வீட்டில் வைத்து செய்ய அனுமதி கேட்டவுடன் மறுக்காமல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்த வேலைகளை செய்ய ஆகும் நேரத்தை ஓவர்டைமாக எழுதிக்கொடுக்கவும் சொல்வார். இதன் மூலம் பொருளாதார ரீதியாகவும் எனக்கு பயன் ஏற்பட்டது. இது போன்ற வேலைகளை செய்ய என்றே ஒரு மடிக்கணினி வாங்கியிருந்ததால் அவர் கொடுத்த வேலைகளை செய்து முடிப்பதில் கஷ்டம் எதுவும் இருக்கவில்லை.

என்னுடைய இந்த வளர்ச்சி என் கூட வேலை பார்த்த இந்தியர்களில் இருவருக்கும், ஃபிலிப்பினோக்களுக்கும் பொறாமை தீயை வளர்த்தது. கூட வேலை பார்த்த சவுதிக்காரர்கள் யாரும் இதை மோசமான அல்லது பிடிக்காத விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், என் உழைப்பிற்கும், திறமைக்கும் கிடைக்கும் பரிசாகவே அதை எண்ணி அடிக்கடி என்னை பாராட்டுவார்கள். ஆனால், மற்றவர்களோ என் வளர்ச்சியை பிடிக்காமல் தவறாக பேச ஆரம்பித்தார்கள். காக்கா பிடிக்கிறான், ஜால்ரா அடிக்கிறான், சோப் போடுறான் என்றார்கள். அதனால் தான் இந்த வளர்ச்சி, சலுகைகள் என்று புறம்பேசினார்கள். அவர்களின் நோக்கம் அறிந்து நான் அவர்களிடமிருந்து விலகி அமைதியாக என் வேலையை செய்து வந்தேன். ஆனால், அவர்களோ என்னை கவிழ்க்கும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்..!!

(உளிச்சத்தம் இன்னும் கேட்கும்)

பூமகள்
22-09-2007, 06:37 AM
அன்பு இதயம் அண்ணா,
உங்களின் இதயத்தைத் திறந்து தங்களைச் செதுக்கிய விடயங்களை, தங்களின் வாழ்க்கைப் பாதையில் தாங்களுக்கு ஏற்பட்ட நெருடல்கள், தடங்கல்கள், சோதனைகள் ஆகிவற்றை அழகாக எடுத்தியம்பியதற்கு என் முதற்கண் நன்றி கலந்த வணக்கங்கள் அண்ணா.

உங்களோடு நாங்களும் பயணிப்பது போன்று அமைந்திருந்தது உங்களின் எழுத்துக்களின் வடிவம்.

தொடர்ந்து சிலையைச் செதுக்குங்கள் அண்ணா. உளிச்சத்தம் எங்களுக்கு எப்போதும் கேட்கவேண்டும்.

வாழ்த்துக்கள் தொடருங்கள்..!!

ஷீ-நிசி
22-09-2007, 06:56 AM
என்னுடைய இந்த வளர்ச்சி என் கூட வேலை பார்த்த இந்தியர்களில் இருவருக்கும், ஃபிலிப்பினோக்களுக்கும் பொறாமை தீயை வளர்த்தது. கூட வேலை பார்த்த சவுதிக்காரர்கள் யாரும் இதை மோசமான அல்லது பிடிக்காத விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், என் உழைப்பிற்கும், திறமைக்கும் கிடைக்கும் பரிசாகவே அதை எண்ணி அடிக்கடி என்னை பாராட்டுவார்கள். ஆனால், மற்றவர்களோ என் வளர்ச்சியை பிடிக்காமல் தவறாக பேச ஆரம்பித்தார்கள். காக்கா பிடிக்கிறான், ஜால்ரா அடிக்கிறான், சோப் போடுறான் என்றார்கள். அதனால் தான் இந்த வளர்ச்சி, சலுகைகள் என்று புறம்பேசினார்கள். அவர்களின் நோக்கம் அறிந்து நான் அவர்களிடமிருந்து விலகி அமைதியாக என் வேலையை செய்து வந்தேன். ஆனால், அவர்களோ என்னை கவிழ்க்கும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்..!!

வில்லில் பூட்டின அம்புக்கும்,
இவர்கள்
சொல்லில் மாட்டின வார்த்தைகளுக்கும்,
அதிக வித்தியாசமில்லை....

இரண்டுமே
காயப்படுத்திவிட தயாராய்...

நன்றி கெட்ட மனிதனின் நாக்கு
அப்படி இப்படி
புரளத்தான் செய்யும்...
அவனுக்கும் ஒரு கூட்டம்
எப்படி எப்படியோ
திரளத்தான் செய்யும்...


தொடருங்கள் இதயம்...

உங்கள் உளிச்சத்தம் எங்களையும் செதுக்கட்டும்..

ஆதவா
22-09-2007, 07:26 AM
வளர்ச்சிகண்டு பொறாமை இல்லாத மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள்???? உங்களின் வளர்ச்சிப் பாதை நாளை எனக்கும் உபயோகப்படும்.....

தொடருங்கள் இதயம்....

அமரன்
22-09-2007, 07:53 AM
இதயம் பேசட்டும்..
.உளிச்சத்தம் பலமாக் கேட்கட்டும்.
ஈற்றில் அழகிய சிலை பிறக்கும்
என்னும் எதிர்பார்ப்பில்

lolluvathiyar
23-09-2007, 06:54 AM
பொறாமை என்ற தீய குணங்கள் மனிதனிடம் குடிபுகுந்தால் அது தேவைஇல்லாத சினத்தை வளர்க்கும், சிண*ம் த*ன்னைதான் முத*லில் அழிக்கும் ஆற்ற*ல் கொண்ட*து. உங்க*ள் மீது பொறாமை கொண்ட*வ*ர்க*ள் உன்மையில் அவ*ர்க*ளை தான் அழித்து கொண்டிருகிறார்க*ள்

இதயம்
27-09-2007, 10:26 AM
என் பதிவு குறித்து கருத்து அளித்த நண்பர்களுக்கு என் நன்றிகள்..! வெறும் என் அனுபவத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளாமல் என் மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் களமாகவும் நான் மன்றத்தை பயன்படுத்த விரும்புகிறேன். "ரோமா புரியில் ரோமனாக இரு..!" என்று ஒரு அற்புத பழமொழி உண்டு. அதாவது எந்த தேசம், இனம், மொழி சம்பந்தப்பட்ட சூழ்நிலையில் வாழ்கிறோமோ அதற்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொண்டு, ஈடுபாட்டுடன் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் வாழ பழகிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நம் சகிப்புத்தன்மை, அனுபவ முதிர்ச்சி பெருகும் என்பதுடன் இந்த உயர்ந்த குணங்கள் அந்த நாட்டவரிடம் பெரும் மதிப்பை, மரியாதையை ஏற்படுத்தி நம்மை கௌரவிக்கும். இந்த பழமொழிக்கு முற்றிலும் நான் உடன்பட்டவன். நம் தேசத்தின் வேலைவாய்ப்பின்மை, அவற்றில் உள்ள போட்டிகள், தகுந்த கல்வியறிவு, அனுபவ அறிவின்மை ஆகியவை நம்மவர்களை ஒதுக்கித்தள்ளும் போது கால ஓட்டத்தில் பொருளாதார பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு அவர்கள் ஒதுங்குவது அயல்நாடுகள் தான். குறிப்பாக வளைகுடா நாடுகளை குறிப்பிடலாம்.

செல்வத்தில் உயர்ந்து நிற்கும் அவர்கள், அந்த செல்வம் கொடுத்த நிறைவினால் கல்வியிலும், தகுதியிலும், அனுபவத்திலும் நிறைவு பெறாததால் அவர்கள் செல்வத்தைக்கொண்டு நம்மை கவர்கிறார்கள். மற்ற எல்லாம் இருந்தும் செல்வத்தில் ஏழையாக இருக்கும் நாம், அவர்களை நாடி போய் அவர்களையும் வளமாக்கி, நம்மையும் வளப்படுத்திக்கொள்கிறோம். இது தான் நடக்கும் எதார்த்த நிகழ்வு. ஆரம்பத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கும் நாம், அங்கு வேலை வாய்ப்பு கிடைத்த பிறகு அங்கு கிடைத்த பொருள், அனுபவம் ஆகியவற்றை சம்பாதித்து விட்டு கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் பேச தொடங்கிவிடுகிறோம். அதற்கு அந்த மனிதர்கள் கொடுக்கும் விளக்கம் என்ன தெரியுமா...? அவர்கள் திறமையை கொண்டு தான் வெளிநாடு போகிறார்களாம்.! நல்ல நகைச்சுவை தான்..! காரணம், அவர்கள் சொல்லும் திறமை நம் தேசத்தில் அங்கிருக்கும் கடும் போட்டிகளில் விலை போகாமல் தான் அந்நிய தேசம் செல்கிறார்கள்.

அப்படி குறைகளோடு வருபவர்களை திறமைக்கேற்ற, படிப்பிற்கேற்ற, உழைப்பிற்கேற்ற ஏன் அதை விட கூடுதலாக ஊதியத்தையும் கொடுத்து வாழ்வில் விளக்கேற்றி வைப்பவர்களை கொஞ்சம் கூட நன்றியில்லாமல் பேசும் போது அவர்கள் மீது கடும் கோபம் வருகிறது. இவர்களிடமிருந்து பெற்றோர், மனைவி, சமூகம், தேசம் எந்த நன்றிக்கடனையும் எதிர்ப்பார்க்க முடியாது. காரணம், அவர்கள் நன்றி கெட்டவர்கள்..! ஒரு மனிதனை விலங்கிடமிருந்து பிரித்து காட்டுவது நன்றி என்று கூட சொல்ல முடியாது. காரணம் நன்றிக்கு உதாரணமாக சொல்லப்படும் விலங்கு நாய்..! எந்த தேசம், மொழி, இனம் தொடர்புடைய யாராக அல்லது எதுவாக இருந்தாலும் சரி.. நமக்கு அவர்களால் அல்லது அவற்றால் நன்மை ஏற்பட்டால் நாம் நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். மாட்டேன் என்று சொல்பவர்களை பற்றி நான் இங்கே பேச விரும்பவில்லை. காரணம், அவர்களை நான் மனித இனத்தில் சேர்ப்பதில்லை..!! உண்மையை சொன்னதற்கு மன்னிக்க..!!

ஆனால், நான் அப்படியல்ல. எல்லாவகையிலும் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்த விரும்புவன். அதை செய்வதில் மிகவும் சந்தோஷப்படுபவன். அப்படி என்னை வளப்படுத்திய, என் வாழ்க்கையில் என் திறமைகளை புடம் போட்ட தேசம் நான் இருக்கும் சவுதி. இந்நாட்டவர்கள் என் மேல் காட்டிய அன்பு என்னை அவர்களை மேலும் விரும்ப வைத்தது. அறியாத சிலர் சவுதிகள் காட்டுமிராண்டிகள் என்று சொன்னதை கேட்டு எனக்கு வருத்தமில்லை. காரணம், அவர்களின் அரைகுறை அறிவுக்கு எட்டியது அவ்வளவு தான். யாரிடம் குறை இல்லை, குற்றம் செய்யவில்லை? அந்த வகையில் சவுதிகளிடமும் குறைகளும் உண்டு தான். ஆனால், உண்மையில், ஒழுக்கத்தில், இறை பக்தியில், நேர்மையில் நம்மை விட ஒன்றும் தாழ்ந்தவர்கள் அல்லர். அவர்களிடம் நிறைகள் தான் கூடுதல்.!

இஸ்லாமிய கொள்கைகளின் கடும் சட்டங்கள் மற்றும் நம் ஜனநாயக சிந்தனைக்கு பொருந்தாத அரசின் சட்டங்கள் அந்த நாடு மற்றும் நாட்டவரை கொடுமைக்காரர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை. இங்கு மக்களுக்கு, பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு வேறு எங்கும் கிடையாது. நான் இருக்கும் இடத்தில் இருந்து மக்காஹ், ஜித்தா போய் நடு இரவில் ஜித்தா, மக்கா என்று வந்த வழியே 310 கி.மீ தூரத்தை எந்த ஒரு அச்சமும் இல்லாமல் கடந்து தன்னந்தனியாக காரில் வருவேன். இந்த பாதுகாப்புணர்வு எங்கும் கிடைக்கும் என்று தோன்றவில்லை. உயர்ந்தவனுக்கு ஒழுக்கம் தானாக வரும். அது இல்லாதவனை கட்டுப்படுத்த தான் கடுமையான சட்டம் தேவைப்படுகிறது. அது தான் நிறைய பேரை சவுதியை கொடுமை தேசம் என்று சொல்ல வைக்கிறது.

சரி.. அதை விடுங்கள். நான் சொல்ல வந்தவற்றை சொல்கிறேன். அவர்கள் காட்டிய அன்பால் கவரப்பட்ட நான், அதை திருப்பி கொடுக்க எனக்கும், அவர்களுக்கும் ஆழ்ந்த நட்பு ஏற்பட்டது. அவர்களை கவர முதன்முயற்சியாக அரபி மொழியை கற்க ஆரம்பித்தேன். அடித்துப்பிடித்து அவர்களுடன் அரபியிலேயே பேசியதால் எனக்கு சுலபமாக கற்கமுடிந்தது. அவர்களின் உபசரிப்பு முறையை கற்று, அது போலவே நானும் செய்ததில் அதுவும் ரொம்ப பிடித்து போனது. இப்படி என் அன்பு ஆயுதங்களை கொண்டு அவர்களின் இதயங்களை பிடித்துக்கொண்டிருந்தேன். முடிவில் அவர்களின் நட்பு தேசத்தில் நான் அசைக்க முடியா சக்கரவர்த்தியாக ஆகிப்போனேன்..!

அக்னி
27-09-2007, 10:34 AM
இன்றுதான் உளிச்சத்தம் எனக்குக் கேட்டது...
மன்னிக்க...
சிறந்த அனுபவப் பகிர்வாக அமைய வாழ்த்துகின்றேன்...
முதற் பதிவின் தொடர்ச்சியாக மற்றப் பதிவு அமையவில்லையே...
உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களையும், அதனை சமாளித்த வழிகளையும் அறிய ஆவலாய் உள்ளேன்...

lolluvathiyar
27-09-2007, 10:34 AM
இதயம் உங்கள் உனர்ச்சிகளை அழகாக எழுதி இருகிறீர்கள். குறிப்பாக நன்றி மறக்க கூடாது. அதே சமயம் சவுதியை தூக்கி வைத்து பேசி இருகிறீர்கள். சவுதியை தவறாக பேசியவர்களை திட்டினீர்கள். அது உங்கள் உனர்ச்சி.
என்னை பொருத்தவரை காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற சித்தாந்தத்தில் வாழ்கிறவன்.
தொடர்ந்து உங்கள் வாழ்கை வரலாற்றை கூறி வாருங்கள்

இதயம்
27-09-2007, 11:04 AM
இதயம் உங்கள் உனர்ச்சிகளை அழகாக எழுதி இருகிறீர்கள். குறிப்பாக நன்றி மறக்க கூடாது. அதே சமயம் சவுதியை தூக்கி வைத்து பேசி இருகிறீர்கள். சவுதியை தவறாக பேசியவர்களை திட்டினீர்கள். அது உங்கள் உனர்ச்சி.
என்னை பொருத்தவரை காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற சித்தாந்தத்தில் வாழ்கிறவன்.
தொடர்ந்து உங்கள் வாழ்கை வரலாற்றை கூறி வாருங்கள்

கருத்துக்களுக்கு நன்றி வாத்தியார். பொதுவாகவே சவுதி தேசம் உயர்த்திப்பேசப்படும் போது முதலில் பார்க்கப்படும் விஷயம், கருத்தைச் சொல்பவன் எந்த மதத்தவன்.! காரணம், அதைச்சொல்பவன் ஒரு இஸ்லாமியனாக இருக்கும்பட்சத்தில் அவன் கருத்துக்களின் நம்பகத்தன்மை குறைவாகவே கருதப்படுகிறது. இது நடுநிலைக்கருத்துக்களை வெளிப்படுத்தும் எந்த ஒரு முஸ்லீமுக்கும் நடக்கும் விஷயம். ஆனால், உண்மை என்னவென்றால் ஒரு உண்மையான இஸ்லாமியனுக்கு சவுதியை ரொம்ப பிடிக்கும் என்பது உண்மை தான். காரணம், அந்த முஸ்லீம் இஸ்லாமிய கொள்கைகளின் மீது உண்மையிலேயே ஈடுபாட்டுடன் இருந்து, அவற்றை பின்பற்றி ஒழுக்க நெறி பேணி வந்தால் அதை பின்பற்றும் சவுதிகளையும் பிடிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்.?

ஆனால், வாத்தியார் சொன்ன "கா.த.பொ.கு" பழமொழிக்கு காரணம் என்னவென்று சொல்லவில்லை. அது நான் ஒரு முஸ்லீம் என்பதாலா, என்னை வாழ வைக்கும் தேசம் என்பதாலா தெரியவில்லை. ஆனால், உங்களுடைய இரண்டாவது கருத்தில் மட்டும் நான் உடன்படுவேன். காரணம், நான் ஒரு முஸ்லீம் என்பதற்காக சவுதிகள் செய்யும் அறிவுக்கு பொருந்தாத விஷயங்களை நான் ஏற்காமல் எதிர்த்ததும் உண்டு. ஒரு சிலரால் செய்யப்படும் அநீதிகளை கண்டு வெகுண்டு வார்த்தைகளை அக்னிகணைகளாக வீசியதும் உண்டு. அதில் நான் பாதிக்கப்பட்டும் இருக்கிறேன். ஒரு முறை நான் என் விதியை நினைத்துக்கொண்டு வீதியில் காரில் போய்க்கொண்டிருக்கும் போது, நான் சிவப்பு விளக்கை கடந்ததாக சொல்லி பிடித்து "உள்ளே" 24 மணி நேரம் வைத்துவிட்டார்கள். என்னை பிடித்ததற்கு காரணம் கேட்ட போது சொன்ன பதில் "நான் கடந்ததை பார்க்கவில்லை, சிவப்பு விளக்கை கடந்ததாக தகவல் எனக்கு வந்தது" என்று. அன்று நான் அநியாயமாக தான் தண்டிக்கப்பட்டேன். அதற்காக நான் "சவுதி தேசம் கொடுமையானது, சவுதிகள் காட்டுமிராண்டிகள், நீதி இல்லை, நேர்மை இல்லை" என்று கூக்குரல் இடவில்லை. காரணம், எனக்கு தெரியும், தேசம் என்று ஒன்று இருந்தால் அந்த தேச சட்டங்களை கடைபிடிக்காத ஊழியர்களும், அதிகாரிகளும் இருப்பார்கள் தான். அவர்கள் தன் சுய வெறுப்பு, விருப்புக்காக தவறான சில செயல்களை செய்யும் போது ஒட்டுமொத்த சமுதாயத்தையோ, அல்லது தேசத்தையோ குறை சொல்வது முட்டாள் தானம். அன்று என்னை அதிகாரி பிடிக்க பலகாரணங்கள் இருக்கலாம். அன்றைக்கு மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு கடமைக்கு வந்திருக்கலாம். அதைப்பற்றி கவலைப்படாமல் காரில் ஜோராக போகிறானே என்ற கடுப்பில் கூட பிடித்திருக்கலாமே...!!!!!!!!

என் நன்றியுணர்ச்சி என்பது எல்லையற்றது. அதற்கு ஜாதி, மதம், மொழி, இனம், தேசம் கிடையாது. நான் எந்த தேசத்தால், தேசத்தவரால் பயன்பெற்றிருந்தாலும், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று அறிந்திருந்தாலும் அவர்களுக்காக நான் நன்றியுணர்ச்சியுடன் குரல்கொடுப்பேன். அதற்கு உலகத்தாரால் தீவிரவாத தேசம் என்று சொல்லப்படும் அமெரிக்கா கூட விதிவிலக்கில்லை. அமெரிக்காவில் ஒரு மனிதனாவது நல்லவனாக இருக்கும் வரை அந்த நாட்டவரை பழிக்க நமக்கு உரிமை இல்லை. இது தான் என் நிலைப்பாடு. மற்றபடி நான் என் தேசத்தின் மீது காட்டும் கோபம் என் உறவின், குடும்பத்தின் மீது காட்டும் கோபம். அக்கறையினால் ஏற்படும் கோபம். அதை விடுத்து வேறு நாட்டவனிடம் என் தேசம் பற்றி குறை சொல்லி பேசினால் என்னை விட மோசமானவன் யாரும் கிடையாது என்றாகிவிடும்.!

lolluvathiyar
27-09-2007, 11:24 AM
உண்மை என்னவென்றால் ஒரு உண்மையான இஸ்லாமியனுக்கு சவுதியை ரொம்ப பிடிக்கும் என்பது உண்மை தான்.

ஆம் இதயம் அது தான் உன்மை, அந்த உனர்ச்சியில் நீங்கள் சவுதியை விரும்புவது தவறில்லை. அதை நான் குரைகூறவில்லை.
அவ்வளவு ஏன் என் ஹிந்து நன்பர்கள் கூட அங்கு வேலை செய்து திரும்பியவர்கள் இருகிறார்கள். அவர்களும் அந்த நாட்டை பற்றி பெருமையாக தான் சொல்லுவார்கள்.
நான் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொன்னது நிச்சயம் மதத்தின் கன்னோட்டத்தில் அல்ல. என்ன குரை இருந்தாலும் ஒருவனுக்கு தன் நாட்டின் மீது தான் பற்றுதல் இருக்கும் என்று சொன்னேன். நான் பதிக்கும் போது மதம் என்ற நினைப்பு இல்லாமல் தான் பதித்தேன்

இதயம்
27-09-2007, 11:30 AM
இன்றுதான் உளிச்சத்தம் எனக்குக் கேட்டது...
மன்னிக்க...
சிறந்த அனுபவப் பகிர்வாக அமைய வாழ்த்துகின்றேன்...
முதற் பதிவின் தொடர்ச்சியாக மற்றப் பதிவு அமையவில்லையே...
உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொண்ட சவால்களையும், அதனை சமாளித்த வழிகளையும் அறிய ஆவலாய் உள்ளேன்...

உண்மை தான்.. இந்த பதிவில் அனுபவப்பகிர்வை விட உணர்வுப்பகிர்வு தான் கூடுதல். அதை நான் என் பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் உணர்வுகளும், அனுபவங்களும் சமபங்கு வகிக்கின்றன. நம்மில் பலருக்கு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தைரியம் இருக்குமளவுக்கு உணர்வுகளை பகிர்ந்து கொள்ள இருப்பதில்லை. காரணம், அவர்களின் மன உணர்வுகள் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு தகுதியுடையது அல்ல என்று நினைத்திருக்கலாம். நான் மனப்பகிர்தலை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன். நான் அறிந்து, அறியாமல் சூழ்நிலையின் தூண்டுதலால் செய்யும் பல விஷயங்களை இன்னொருவரிடம் பகிரும் போது செய்த குற்றத்திற்கு பரிகாரமாக மன அமைதி கிடைக்கவும், இனி அந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்ற விழிப்புணர்ச்சியும் ஏற்படும். எல்லா உணர்வுகளையும் எல்லோரிடமும் சொல்ல முடியாது என்றாலும் குறைந்தது தாய், மனைவி என்ற நெருக்கமான உறவுகளிடமாவது நம் உணர்வுகளை பகிருதல் நலம். இது நம்மை தூய்மையாக வைத்திருக்க உதவும். காரணம், சந்திக்கும் அனுபவங்கள் தான் நமக்குள் மன அழுத்தத்தை ஏற்படுத்தி குற்றம் செய்ய தூண்டுகின்றன. இந்த பகிர்தலை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்க இருந்த தண்டனைகளில் இருந்து விடை பெறலாம்.

நீங்கள் விரும்பும் பட்சத்தில் இனி வரும் பதிவுகளில் அனுபவம், மன உணர்வு இரண்டும் கலந்து வரும். நன்றி அக்னி..!

அக்னி
27-09-2007, 11:38 AM
நீங்கள் விரும்பும் பட்சத்தில் இனி வரும் பதிவுகளில் அனுபவம், மன உணர்வு இரண்டும் கலந்து வரும். நன்றி அக்னி..!
எனது விருப்பம் என்று சொல்லவில்லை... அந்த தொடர்ச்சியான நிகழ்வின் எதிர்பார்ப்பே எனது பதிவில் பிரதிபலித்தது...
பகிர்வுகளைப் பகிருங்கள்...
நுகர காத்திருக்கின்றேன்...

ஜெயாஸ்தா
28-09-2007, 06:04 AM
உங்கள் அனுபவங்கள் இனிமேல் அரபுநாடுகளுக்கு வேலைதேடிச் செல்வோருக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அப்புறம் அவர்கள் உங்களை எப்படி கவிழ்த்தார்கள்? அதைஎப்படி சமாளித்தீர்கள். சொல்லுங்கள்.

சிவா.ஜி
28-09-2007, 10:37 AM
ஆரம்பத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கும் நாம், அங்கு வேலை வாய்ப்பு கிடைத்த பிறகு அங்கு கிடைத்த பொருள், அனுபவம் ஆகியவற்றை சம்பாதித்து விட்டு கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் பேச தொடங்கிவிடுகிறோம். அதற்கு அந்த மனிதர்கள் கொடுக்கும் விளக்கம் என்ன தெரியுமா...? அவர்கள் திறமையை கொண்டு தான் வெளிநாடு போகிறார்களாம்.! நல்ல நகைச்சுவை தான்..! காரணம், அவர்கள் சொல்லும் திறமை நம் தேசத்தில் அங்கிருக்கும் கடும் போட்டிகளில் விலை போகாமல் தான் அந்நிய தேசம் செல்கிறார்கள்.நன்றியுணர்ச்சி இருப்பவந்தான் மனிதன்.ஆனால் இங்கு நன்றியைக்காட்டவேண்டிய அவசியமில்லை.ஏனென்றால் இது செய்யும் வேலைக்கு கொடுக்கப்படும் கூலி அவ்வளவுதான்.இந்தியர் கஷ்டப்படுகிறார்களென்று இவர்களிடமிருக்கும் செல்வத்தில் ஒரு பகுதியை கொடுத்து உதவினால் நன்றி சொல்லலாம்.52 டிகிரி வெய்யிலில் நாயை விடக்கேவலமாக வேலை வாங்கிக்கொண்டு அதற்கு கூலி கொடுப்பவர்களை அதுவும் வேலைக்குத்தகுந்த கூலியைத் தராமல் துரோகம் செய்கிறவர்களை.நன்றியோடு எப்படி நினைப்பதாம்.
எங்களுக்கு இருக்கும் திறமைக்கு ஏன் உள்நாட்டிலேயே வேலை செய்யவில்லையென்றால்..அதற்கு உதாரணமாக..ஒரு பொருள் அதிகம் இருக்குமிடத்தில் அது விலைபோகாது.தேவை அதிகமாக இருக்குமிடத்தில் அதிக விலை கிடைக்கும்.இந்த நாட்டினரிடம் திறமை இல்லையென்று அவரே சொல்லியிருக்கிறார்.அப்படிப் பார்க்கும்போது அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடம் விற்று வாங்கும் பணத்துக்கு நன்றி சொல்லவேண்டுமா. அப்படியென்றால் ஒவ்வொருமுறையும் ஏதாவது பொருளை கடையில் வாங்கும்போது கடைக்காரர் நம்மிடம் நன்றி சொல்ல வேண்டுமா?
இப்படி சொந்த நாட்டினரையே கேவலமாக பேசிவிட்டு..நான் என் நாட்டினரைப்பற்றிதானே பேசமுடியும் என்று சால்ஜாப்பு சொல்லக்கூடாது.உள்ளூரில் அடித்துக்கொள்ளும் இந்தியர்கள்,வெளிநாட்டில் ஒருவருக்கொருவர் ஆதரவாகத்தான் இருக்க வேண்டுமே தவிர இப்படி தற்காலிகமாக புகலிடம் கொடுத்தவர்களுக்காக தன் சொந்த சகோதாரனையே பழித்துப்பேசக்கூடாது.

பென்ஸ்
28-09-2007, 10:58 AM
இதை எழுதியவருக்கு வேண்டுமானால் தான் ஒரு முஸ்லீம் என்ற ஒரே தகுதியைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் மற்ற அன்னைவரையும் அப்படிச் சொல்வதற்கு இவருக்கு எந்த உரிமையுமில்லை.
ஒரு தேசத் துரோகியின் பேச்சு ஒரு எல்லைவரைதான் சகிக்கப்படும்.மீறினால் நாறிவிடும். இப்படி சொந்த நாட்டினரையே கேவலமாக பேசுபவரின் திரியை இந்த மன்றம் எப்படி அனுமதிக்கிறது?

நான் இந்த திரியை முழுவதுமாக படிக்கவில்லை... ஆனால் இந்த திரியில் நான் குறியிட்டு காட்டி இருப்பது போல் கண்டிக்கதக்க வார்த்தைகள் உபயோகிக்க வேண்டாம்....

இந்த திரி இப்போது பூட்டுகிறென்... இதில் ஒரு சமுகத்தையோ, அல்லது தனிப்பட்ட மனிதரையோ தாக்குவதாக தெரிந்தால், இத்திரி நீக்கபடும், தாக்கியவர்களுக்கு முதலும் கடைசியுமான கடுமையான எச்சரிக்கை கொடுக்கபடும்...

பென்ஸ்
03-10-2007, 05:15 AM
இந்த திரி மீண்டும் திறக்கபடுகிறது...

இதயம்
03-10-2007, 06:18 AM
நான் இந்த திரியை எழுத காரணம் என்னுடைய சவுதி வாழ்க்கையில் நான் கற்ற பயனுள்ள அனுபவங்கள், கசப்பான உண்மைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே..! இதைப்படிப்பதன் மூலம் எதிர்கால நிகழ்வுகளை சுலபமாக எதிர்கொள்ள மற்ற நண்பர்களுக்கும் வழி கிடைக்கும் என்ற நல்லெண்ணத்தில் எழுத தொடங்கினேன். அதை தவறாக புரிந்து கொண்டு சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது வருந்தத்தக்கது. அந்த விமர்சனங்கள் என்னைப்போன்றோரை பாதிக்கும் வகையில் இருந்ததால் அதை தடுக்கும் முதல் முயற்சியாக இந்த திரி பூட்டப்பட்டது. எல்லை தாண்டா கருத்து சுதந்திரத்தை நம் மன்றத்தில் நிலை நாட்டும் பொருட்டு என் பதிவில் எந்த மோசமான கருத்துக்களோ, கீழ்த்தர தகவல்களோ இல்லை என்பதை நிரூபித்து, திரியை திறக்குமாறு நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

என் வேண்டுகோளை ஏற்று இந்த திரி முழுவதையும் படித்து, நான் சொன்னது சரி தான் என்பதை உணர்ந்து, மீண்டும் திரியை நிர்வாகிகள் திறந்திருக்கிறார்கள். உண்மைக்கு பலம் சேர்க்கும் வகையில் என் நியாயமான கோரிக்கையை ஏற்று செயல்பட்ட மன்ற நிர்வாகிகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். சுகமான பயணத்தில் தடைக்கற்களைப் போல் அனுபவம் பேசும் இந்த திரியில் கீழ்த்தர வசைச்சொற்கள் இருந்து இந்த திரியின் சிறப்பை கெடுக்கின்றன. எனவே, என் அனுபவ பயணத்தை மீண்டும் சுகமுடன் தொடர, அவற்றை இந்த திரியிலிருந்து நீக்கி எனக்கு வசதி செய்து கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மன்றத்தின் விதிமுறை எல்லை தாண்டும் கருத்துக்களை பதிபவர்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கொடுக்கும் முறை நம் மன்றத்தில் இல்லை. காரணம், இந்த மன்ற உறுப்பினர்கள் அன்பானவர்கள், பண்பானவர்கள், நாகரீகமானவர்கள் என்ற நிர்வாகிகளின் நல்லெண்ணமே..! அதை அழிக்கும் நோக்கத்தில் பதிவுகளில் கருத்துக்களை பக்குவம் இல்லாமல் எழுதி மன்றத்தின் மாண்பை பாழ்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என் பதிவுகளில் நிர்வாகிகள் தவறை கண்டுபிடிக்கும் பட்சத்தில் அதை எனக்கு தெரிவித்தால் உடன் நீக்க தயாராக இருக்கிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிர்வாகிகளுக்கு மீண்டும் என் நன்றிகள்..!

ஜெயாஸ்தா
03-10-2007, 09:25 AM
ஓ.கே. இதயம்...! உங்களின் அனுபவங்களை மீண்டும் எங்களுக்காகத் தொடருங்கள். படிக்க காத்திருக்கிறோம்.

பென்ஸ்
03-10-2007, 09:33 AM
மன்றத்தின் விதிமுறை எல்லை தாண்டும் கருத்துக்களை பதிபவர்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கொடுக்கும் முறை நம் மன்றத்தில் இல்லை. .!

மன்றத்தில் எச்சரிக்கை புள்ளி கொடுக்கும் முறை உள்ளது.
அது இன்று வரை நல்ல பதிப்பாளருக்கு கொடுக்கபடவில்லை.
கருத்து வேறுபாடினால் வரும் வித்தியாசங்களுக்கு அதை செய்வதை
விட நிர்வாகம் அவர்களை தனிமடல் மூலம் புரியவைப்பதில் ஆர்வம் காட்டுகிறது....

எச்சரிப்பதை விட புரிய வைத்தல் நலம் என்பதை நிர்வாக முழுமையாக நம்புகிறது...

இந்த வகை எச்சரிக்கை குழப்பவாதிகளுக்கும்,
தகாத வார்த்தை உபயோகிக்கும் புதியவர்களுக்கும் இது வரை கொடுக்கபட்டுள்ளது,
மற்றவர்கள் நிர்வாகத்தின் வேண்டுகோளை புரிந்து கொள்ளுவதால் இது தேவை படவில்லை.

தனிமனித தாக்குதல் மற்றும் மதக்களை தாக்கிய சிலரை தடையும் செய்துள்ளோம்.

மன்றம் ஒரு கோவில்...
இங்கு பாசிட்டிவான நல்ல எண்ணங்கள் மட்டும் போதும்.