PDA

View Full Version : எட்டுத் தொகைjpl
22-09-2007, 12:26 AM
சங்க இலக்கியப் பாடல்களை எட்டுத் தொகை,பத்துப் பாட்டு என்று இரு வகைப்
படுத்துவர்.

பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்க்களில் எழுதப்பட்டது ஆகும்.

நற்றிணை நல்ல குறுநதொகை ஐந்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.

என்று எட்டுப்பாட்டினை எளிதாக அறிந்து கொள்ள உதவும் பாடலிது.

இதனை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.

1)அகப்பொருள் பற்றிய நூல்கள்:

1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.கலித்தொகை
5.அகநானூறு
ஆகிய ஐந்தும் நூல்கள்.

2)புறப் பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,

1.பதிற்றுப்பத்து
2.புறநானூறு

ஆகிய இரண்டு நூல்கள்.

3)3.அகப்பொருள், புறப்பொருள் பற்றிய நூல்கள்:

1.பரிபாடல்.

ஆகிய ஒன்றும் அடங்கும்.

உதாரணத்துடன் காண்போம்...

அமரன்
22-09-2007, 06:21 AM
அடடா...ரொம்ப நன்றி..இன்னும் பலவற்றை புதிதாக கற்க அரிய சந்தர்ப்பம். தொடருங்கள்..

சிவா.ஜி
22-09-2007, 06:35 AM
மிக உயரிய இலக்கியசேவை செய்யும் jpl அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.சுவைக்க,சுவைக்கத் திகட்டாத இலக்கிய விருந்துடன் வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன் வரவேற்புகள்.

அறிஞர்
22-09-2007, 04:38 PM
தமிழ் நூல்களை பற்றி அறிய மற்றொரு வாய்ப்பு..

நன்றி சகோதரியே...

jpl
23-09-2007, 06:04 AM
நற்றினை மொத்தம் நானூறு பாடல்களை ஐந்திணைகளாலும்
இயற்றப் பெற்றது.
பாடல்கள் ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை அமைந்தன.

நற்றினையைத் தொகுப்பித்தவர் மன்னன் :பன்னாடு தந்த பாண்டியன் மாறன்
வழுதி.
பாடிய புலவர்கள் நூற்றி எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட புலவர்கள் ஆவார்கள்.

முதலில் குறிஞ்சிப் பாடலொன்று காண்போம்.

குறிஞ்சித்திணை என கண்டறிய உதவும் முதற் பொருள்,கருப் பொருள்,
உரிப் பொருள் ஆகியவற்றை இங்கு காண்போம்.

முதற் பொருள்-நிலமும்,பொழுதும்
நிலம்-மலையும் மலை சார்ந்த இடம்
சிறு பொழுது-யாமம் (இரவு10 மணியிலிருந்து 2 மணி வரை)
பெரும் பொழுது-குளிர் காலம்(ஐப்பசி,கார்த்திகை)முன் பனிக் காலம்
(ஆவணி,புரட்டாசி)

கருப் பொருள்-ஒவ்வொரு நிலத்திலும் பொழுதிலும் தோன்றும் பொருள்கள் கருப் பொருள்கள் எனப்படும்.
தெய்வம் வாழும் மக்கள்,உணவு,ஊர் போன்ற 14 கருப்பொருளாம்.
தெய்வம்-முருகன்
உயர்ந்தோர்-பொருப்பன்,வெற்பன்,சிலம்பன்,கொடிச்சி
தாழ்ந்தோர்-குறவர்,குறத்தியர்,கானவர்
பறவை-மயில்,கிளி
விலங்கு-யானை,புலி,சிங்கம்,கரடி,பன்றி
ஊர்-சிறுகுடி
நீர்-அருவி,சுனை
பூ-குறிஞ்சி,காந்தள்,வேங்கை
உணவு-தினை,ஐவனநெல்,மூங்கிலரிசி
பறை-தொண்டகப்பறை,வெறியாட்டுப்பறை,
யாழ்-குறிஞ்சி யாழ்
பண்-குறிஞ்சிப்பண்
தொழில்-வெறியாடுதல்,ஐவனநெல்,திணை விதைத்தல்,திணை காத்தல்,தேன் எடுத்தல்,கிழங்கு அகழ்தல்

உரிப்பொருள்-பாடுதற்குரிய பொருளாகிய(theme)காதல் வாழ்வில் தலைவன் தலைவியிடையே காணப்படும் உணர்ச்சிகளை ஐந்தாகப் பிரித்தனர்.
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் இத்திணையின் உரிப்பொருள்.

இவையே ஒரு பாடலை வகைப்படுத்துகிறது.

திணை:குறிஞ்சி
பெருவழுதியால் இயற்றபட்டது.
துறை:வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழி தலைவனுக்கு
கூறியது.
துறை விளக்கம்:வரைவு காலத்தை (திருமணம் புரியும் காலம்)நீடித்துக் கொண்டே
போகக் களவுறவை விரும்பி வந்து,குறியிடத்தே தலைவிக்காக காத்து நிற்பானை
கண்ட தோழி தான் ஆற்றிவித்திருந்த முறையை தலைவனுகு விளக்கிக் கூறுகிறாள்.

ஓங்கு மலை நாட ஒழிகநின் வாய்மை
காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி
உறுபகை பேணாது இரவின் வந்திவன்
பொறிகிளர் ஆகம்புல்லத் தோள்சேர்பு
அறுகாற் பறவை அளவில் மொயதலிற்
கண்கோள் ஆக நோக்கிப் பண்டும்
இனையையோ வென வினவினள் யாயே
அதனெதிர் சொல்லா ளாகி அல்லாந்து
என்முக நோக்கி யோளே அன்னாய்
யாங்கு உணர்ந்து உய்குவள் கொல்லென மடுத்த
சாந்தம் ஞெகிழி காட்டி
ஈங்கா யினவால் என்றிசின் யானே.


ஓங்கிய மலை நாடனே!நீ கூறும் வாய்மை எல்லாம் இப்படியே
பொய்த்தொழிவனவாக.
மூங்கில்கள் கற்பாறைகள் நெருங்கிய மலையின் சிறியவழியில்
இரைக்காக உழல்கின்ற வேங்கை முதலாய பகையைப் பொருட்படுத்தாது
இரவிடை வந்து இவளது திருவிளங்கிய மார்பை முயங்கி மகிழ்ந்தாய்.
அதானால் உண்டான புது மணததைக் கருதி இவளுடைய தோளைச் சேர்ந்து வண்டுகள் அளவில்லாது மொய்த்தன.

இதனைக் கணட இவள் தாய் மிகுந்த கோபத்தோடு இத முன்னம் இவ்வாறான வண்டுகளால் மொய்க்கப் பெற்ற தோளினை உடையையோ?என வினவினள்.தலைவி அவர்க்கு விடை சொல்ல இயலாதவளாய் வருத்தமுற்று என் முகத்தை நோக்கி நின்றாள்.
அதனை அறிந்த யாம் "இவள் எப்படி ஆராய்ந்து மறைத்துக் கூறி உய்குவள்,என்றெண்ணி அன்னையை நோக்கி அடுப்பிலிட்ட சந்தன விறகின் கொள்ளியை எடுத்துக் காட்டிக் கூறினேன்."அன்னாய் இச்சந்தன
விறகினை அடுப்பிலிட்டதால் இதிலுள்ள சுரும்புகள்(வண்டுகள்)இவளுடைய தோளில் மொய்கிறது காண் என மறைத்துக் கூறினேன்.இங்ஙனம் எத்தனை நாள் நீ வரைந்து கொள்ளாதால் இவ்வாறு பொய் கூறி உய்விப்பது எனத் தோழி தலைவனை நோக்கிக் கூறினாள். (திருமணம் செய்யத் தூண்டுவது)

தோழியின் சொல் வன்மையை புலவர் அற்புதமாக கையாண்டிருக்கின்றார்...

பாடலின் திணையை வகைப்படுத்துவது முதற்பொருள்,கருப்பொருள்,உரிப்பொருள் ஆகும்.
குறிஞ்சித் தினைக்குரிய முதற்பொழுதாகிய மலையினையும் இரவினை குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
கருப்பொருளாக வேங்கை போன்ற வன் மிருங்கள் காட்டப்பட்டு இருக்கின்றது.
உரிப்பொருள் குறிஞ்சித்திணையின் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆகும்.
துறை என்பது ஆற்றின் இரு கரை போல் பாடலின் கருவை நெறிபடுத்தும்.
இது அந்நிலத்தின் வாழ்வியல் நெறியை காட்சியாக இலக்கியமாக
காட்டப்படுகின்றது.