PDA

View Full Version : புதுக்குடிleomohan
21-09-2007, 10:39 AM
1980களில் ஆண்டு விடுமுறை என்றால் தாத்தா வீட்டிற்கு தான். மன்னார்குடியிலிருந்து திருமக்கோட்டை வரை உள்ளூர் பேருந்தில் சென்று பிறகு மூன்று கிலோமீட்டர் நடந்து சென்றால் புதுக்குடியை அடையலாம். இப்போது பஸ் வந்துவிட்டதாக கேள்வி.

ஒவ்வொருவரும் பம்பாய், தில்லி, அசாம், மற்றும் பல மாநிலங்களிலிருந்து எங்கள் உறவுகள் அனைவரும் வந்து சேர ஒரு பெரிய கூட்டமே சேர்ந்துவிடும்.

நான்கு வீடுகள் சேர்ந்த ஒரு தெரு. நான்கும் பெரிய வீடுகள். ஓட்டு வீடுகள். எதிரே வலப்புறம் சிறிய குளம். அதில் தான் பாத்திரம் கழுவுது மற்றம் வீட்டு வேலைக்கான நீர். இடது புறம் பெரிய தென்னந்தோப்பு. சில மாமரங்களும் கொய்யா மரங்களும்.

தெருவின் வலது கோடிக்கு சென்றால் ஒரு சிறிய பிள்ளையார் கோவில், இன்னொரு தென்னந்தோப்பு. ஒரு பெரிய குளம். அதில் தான் ஊர் மக்கள் குளிப்பது.

இப்படியாக பசுமையான ஊர். அருகில் வயல் வெளிகள்.

சில நேரம் பஸ் இரவில் திருமக்கோட்டை வந்து சேர்ந்தால் அவ்வளவுதான். ஏன்டாப்பா விடுமுறைக்கு வந்தோம் என்று ஆகிவிடும். காரணம் இரண்டு புறமும் வயல்வெளிகள். கும்மிருட்டு. மெல்லிய நிலவொளி. நான் சகோதர சகோதரிகள் மாமா வழிநடத்துதலில் ஒற்றையடியில் இரண்டு வயல்களுக்கு நடுவில் இருக்கும் வரப்பில் நடந்து செல்லவேண்டும். வழிதெரியாமல் தடுமாறி கால் வளுக்கு வயலில் கால் வைத்தால் மாமா மொடேர் என்று ஒரு அடி கொடுப்பார். ஆனால் அந்த கஷ்டம் எல்லாம் போய் சேரும் வரைக்கும் தான். அப்புறம் விடுமுறையில் புதுக்குடியில் கும்மாளமே கும்மாளம் தான்.

நான்கு வீடுகளில் கடைசி வீடு ஓட்டை வீடு. பலகாலம் பயன்படுத்தாமல் விட்டுபோனது. அதில் ஒரு பழைய மில்லுவண்டி இருக்கும். நாங்கள் விளையாடுவதற்காகவே விட்டுப்போனது போல. அதற்கு வலதுபக்கம் இருக்கும் வீடு அமைச்சார் வீடு என்பார்கள். இந்த வீட்டில் தான் தாத்தாவை ஊர் மக்கள் பார்க்க வந்தாலோ அல்லது பெரிய மனிதர்கள் வந்தாலோ சந்திப்புகள் நடக்கும். அதுமட்டும் அல்ல, எங்கள் தாத்தா வீட்டு அனைத்து விசேஷங்களும் கனஜோராக நடக்கும். வெளியே பெரிய பெரிய திண்ணைகள். அதில் தான் மேளக்கச்சேரியே நடக்கும்.

அதற்கு வலதுபுறத்தில் இருக்கும் வீட்டில் தான் தாத்தா, பாட்டி, சித்தி, மாமாக்கள் வசித்தனர். எங்கள் பெரிய பாட்டியும் இருந்தார். அப்போதே அவருக்கு வயது 95 தாண்டி இருக்கும்.

அதற்கு வலதுபுறத்தில் இருக்கும் வீட்டில் தான் தங்கையன் குடும்பத்தினர். எங்கள் தாத்தாவின் பணியாள், மற்றும் எல்லாமே என்று சொல்லலாம்.

வீட்டில் விசேஷம் என்றால் தெரு முழுவதும் கீற்றுப்பந்தல் இடவேண்டும் என்று உத்தரவிடுவார் தாத்தா. உடனே தங்கையன் உள்ளூர் இரண்டு மூன்று ஆட்களை ஏற்பாடு செய்வார். பல வேலைகளை தனியாகவே அவர் செய்வார். ஆறடிக்கு மேல் உயரம். ஆஜானபாகுவான உடல். கடுமையான உழைப்பாளி. அவருக்கு இரண்டு பிள்ளைகள். இப்போது இருவருமே சிங்கப்பூரில் இருப்பதாக கேள்வி.

முதலி் ஏதிரே இருக்கும் தோப்பில் இருக்கும் தென்னை மரங்களில் ஏறி பச்சை கீற்றுகளை வெட்டி சாய்பபார். பிறகு அதனை ஏதிரே இருந்த குளத்தில் சில நாட்கள் ஊற வைப்பார். அவை பழுத்த நிறம் ஆகும் வரையில். பிறகு பாளைகளை வெட்டி அதனை தண்ணியில் ஊற வைப்பார். அது சிறிது நாட்களில் காப்பி கலரில் ஆகும். அதனை எடுத்து நீள நீளமாக வெட்டுவார். அவை கயிறு போல தயாராகிவிடும்.

சில நாட்களில் மூங்கில் கழிகளும் வர சுமார் 2-3 பேர் சேர்ந்தே தெரு முழுவதும் பந்தலிடும் காட்சி பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். கடப்பாறை கொண்டு குழிகள் தோண்டி, கழிகளை நட்டு பிறகு பாளை கயிறுகளால் கீற்றுகளை முடித்து, சாதாரண கயிறுகளால் மூங்கிலுடம் கட்டி, மின்சாரம் மிகவும் குறைவாக அந்த கிராமமும் ஒரு ஏஸி திருமண ஹால் போல ஆக்கிவிடுவார்கள்.

தொடரும்..

leomohan
21-09-2007, 10:40 AM
தங்கையா பிள்ளைங்கெல்லாம் வடநாட்டுலேர்ந்து வந்திருக்காங்க நல்லா கவனிச்சிக்கோ என்பார். அப்புறம் என்ன இளநீர் மழையாக கொட்டும். என் அம்மாவும் பெரிய மாமாவும் சிறிய வயதில் யார் எத்தனை வேகமாக தேங்காய் உரிக்கிறார்கள் என்று போட்டியே நடக்குமாம். ஒரு கடப்பாறையை செங்குத்தாக நட்ட வைத்து, முனையை நன்றாக கூறாக்கி மடமடவென்று உரித்து தள்ளுவார்கள்.

பிறகு கையில் இளநீரை எடுத்து நன்றாக பந்தை போல உருட்டி அரிவாளால் சடாரென்று வெட்டி சட்டென்று ஒரு ஓட்டை போட்டு கொடுப்பார். இளநீர் பீச்சியடிக்கும். பிறகு தென்னைகீற்றிலிருந்து ஒரு இலையை எடுத்து அதன் மீது நீளமாக வைத்து அதை கவிழ்த்து குடிப்போம்.

நாங்கள் சிறுவர்கள் சட்டை மீது போட்டுக் கொண்டால் மாமா செய்முறை விளக்கம் வேறு செய்து காட்டுவார். ஒரே குதுகுலம் தான்.

தேங்காய எண்ணெய் எடுப்பதற்காக வீட்டின் முற்றத்தில் வெட்டிய கொப்பறைகளை காயவைப்பார்கள். நாங்கள் அதை எடுத்துவிடாமல் இருக்க சிலர் காவல் வேறு. அதையும் தாண்டி உள்ளே நுழைந்து லவுட்டிக் கொண்டு சென்றுவிடுவோம். பிறகு திண்ணைக்கு கீழ் உட்கார்ந்து அங்கேயே தேங்காய் கொப்பறை டிஃப்ன் வேறு.

அதுமட்டுமா செய்யாத கூத்தே இல்லை. பம்பாயிலிருந்து வந்த என் மாமா பையன் மிகவும் சுட்டி. ஒரு நாள் நாங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு ஆட்டை பிடித்து பால் கறக்கலாம் என்று திட்டமிட்டோம். யோசனை சுட்டி பையன் ஆனந்த் தான். அதுபோலவே எதிரே இருந்த தோப்பில் நுழைந்து ஒரு ஆட்டை பிடித்து வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த டம்ப்ளரை மடுவில் கீழே நாங்கள் பிடித்துக் கொள்ள ஆனந்த் மடியை பிடித்து பால் கறக்க முயல மிரண்டு போன அந்த ஆடு ஓங்கி ஒரு உதை கொடுக்க அவன் தலையில் நல்ல அடி, நாங்கள் எல்லாம் அடிச்சோம் பிடிச்சோம் என்று நாலு புறமும் ஓடினாம். வீட்டில் சித்தி, அத்தை மாமா அனைவரும் என்ன ரத்தம் தலையில் என்று அவனை கேட்க திருட்டு முழி முழிப்போம்.

தொடரும்....

ஜெயாஸ்தா
21-09-2007, 10:44 AM
'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...' தொடருங்கள் லியோ உங்கள் ரசனையான பழைய நினைவுகளை...!

ஓவியன்
21-09-2007, 11:04 AM
மோகன் விடுமுறையில் வேரினைத் தேடிப் போன உங்கள் ஞாபகங்களை எங்களோடு பகிர்ந்து கொள்வது மிகிழ்ச்சி...
படிக்க படிக்க என்னையும் புதுக்குடிக்கு கொண்டு செல்கின்றது உங்கள் எழுத்துப் பிரவாகம் - பாராட்டுக்கள்!.

leomohan
21-09-2007, 12:51 PM
சினிமா பார்க்க வேண்டும் என்றால் கூட்டத்தோடு மாட்டு வண்டியில் கிளம்புவோம். திருமக்கோட்டையில் அப்போது ஒரு திறந்த வெளி தியேட்டர் இருந்தது. மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டுமே.

முதலில் தரை டிக்கெட், பிறகு பெஞ்ச், பிறகு நாற்காலி.

பெரியவர்கள் மட்டும் நாற்காலி டிக்கெட் வாங்கி அமர சிறுவர் பட்டாளம் தரை டிக்கெட்டுதான். மணலி்ல் கோவில் கட்டி விளையாடும் அளவிற்கு நேரம் கிடைக்கும்.

ஒரு முறை நாங்கள் படம் பார்த்துவிட்டு திரும்பி வரும்போது வண்டி குடை சாய எல்லோரும் வயல்வெளிகளில் விழ ஒரே களேபரம் தான். பிறகென்ன நடைபயணம் தான். மெல்லிய நிலவொளியில் நடைபயணம் அருமையாக இருக்கும், அதுவும் அரட்டை கச்சேரியுடன்.

மாடுகளை விரைவாக ஓட்ட தங்கையனிடம் ஒரு கம்பின் அடிபுறத்தில் திருப்பி சொருகப்பட்ட ஆணி இருக்கும். அதால் மாட்டின் வயிற்று பின்பகுதியில் குத்துவார். ரத்தம் வழியும். எங்களுக்கு பார்க்க பாவமாக இருக்கும். அங்கிள் வேண்டாம் அங்கிள் மெதுவா போனால் பரவாயில்லை நீங்க மாட்டை அடிக்க வேண்டாம் என்போம். அவர் அதையெல்லாம் சட்டை செய்ய மாட்டார்.

குளத்தில் குளிக்க எப்போதுமே சிறுவர்களுக்கு தடை. தனியாக போனால் உதை தான். அதனால் மாமாக்காள் சித்தப்பாக்கள் யாராவது கூட வந்தால் தான் குளக்குளியல். கனஜோராக இருக்கும்.
பெரியவர்கள் குளத்தின் நடுவரையில் சென்று சாகசம் காட்ட, அருகில் இருக்கும் சிமென்ட் கைப்பிடி சுவரிலிருந்து டைவ் அடிப்பார்கள். சிலர் தலைகீழாக மிதந்து ரகளை செய்வார்கள். தங்கையன் அவர்களின் இரு பிள்ளைகள் தான் எங்களுக்கு உள்ளூர் கைடு.

குளத்தின் ஓரத்தில் இருக்கும் களிமண்ணை எடுத்து தாத்தாவிடம் இருக்கும் ரேடியோ, டேபிள் பேஃன் முதலானவற்றை செய்து காட்டுவான். நாங்கள் ஆர்வமாக மலைப்புடன் அவனை பார்ப்போம்.

தென்னை குரும்பைகளை தேர்ந்தெடுத்து, அதன் ஓரத்தில் ஈர்குச்சியை சொருகி வேகமாக சுற்றி தூக்கி எறிந்து விளையாடுவோம். எங்களால் முடிந்த மிசைல்.

நான் கிறிஸ்துவ பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால் சிறிய சிகப்பு பைபிள் புத்தகம் எப்போதும் என்னிடம் இருக்கும். கிராமத்தில் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் பைபிளின் வசனங்களை படித்து காட்டுவேன். அவர்களுக்கு ஒன்றும் புரியாது. எனக்கு ஒன்றும் புரியாது. ஆனால் உடம்பு சரியாகிவிடும் என்று சொல்லி வருவேன். அவர்களும் பெரிய வீட்டு புள்ளைகள் கெட்டிக்கார பிள்ளைகள் தான் இங்கிலீஷ் எல்லாம் பேசுது என்று புகழ்வார்கள்.

திருட்டுத்தனமாக கள்ளு குடித்த கதையும் சொல்கிறேன்.

தொடரும்.....

தங்கவேல்
22-09-2007, 01:41 AM
நானும் தஞ்சாவூர் காரன் மோகன். உங்களது பதிவு, எனது இளமைக்காலங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது. எழுதுங்கள்..

ஜெயாஸ்தா
22-09-2007, 03:15 AM
மோகன் சொல்வது அவரது கதை மட்டுமல்ல. நம் வாழ்க்கை கதையும்கூட....! தண்டவாளத்தில் இரும்பை போட்டால் காந்தமாக மாறிவிடும் கதை, பனங்காயில் மாட்டுவண்டி செய்த கதை, பனைஓலையில் காற்றாடி செய்த கதை, நோட்டுப்புத்தகத்தில் பட்டம் செய்து பறக்கவிட்ட கதை, வாத்தியாரின் இருக்கையில் முள் வைத்த கதை எல்லாம் இனிமேல் வருமென்று நினைக்கிறேன்.

lolluvathiyar
22-09-2007, 06:27 AM
அருமையா ஆரம்பம் மோகன். கிராமத்து விசிட் அனுபவங்களை எழுதுவதே ஒரு தனி குசிதான். கிராமத்தில் வளர்ந்து பழக்கபட்ட எனக்கு உங்கள் பதிவை படிக்க ஆனந்தமாய் இருகிறது. என் பிள்ளைகளை கூட்டி சொல்லும்போது அவர்கள் மிகவும் சந்தோசபடுகிறார்கள். ஒரே கவலை எங்கள் ஊர் குலத்தில் தன்னீர் இல்லை.


மாடுகளை விரைவாக ஓட்ட தங்கையனிடம் ஒரு கம்பின் அடிபுறத்தில் திருப்பி சொருகப்பட்ட ஆணி இருக்கும். அதால் மாட்டின் வயிற்று பின்பகுதியில் குத்துவார். ரத்தம் வழியும்.

இது தவறான பழக்கம். இப்படி செய்ய தேவையில்லை. எனக்கு மாட்டு வண்டி நன்றாக ஓட்ட தெரியும். அப்படி எல்லாம் குத்த வேண்டியதில்லை. ஆனால் வேகமாக ஓட்டுவேன்.

சிவா.ஜி
22-09-2007, 06:36 AM
மலரும் நினைவுகள் என்பதே...நம் இன்றைய குழப்பமான மனதை ஓவராலிங் செய்வதுபோலத்தான். இந்த பதிவைப் படித்ததும் அந்த வினாடியிலேயே நானும் என் பழைய காலங்களுக்கு பயணப்படுவதை நிறுத்த முடியவில்லை.நானும் தஞ்சையை சேர்ந்தவன் என்பதால் அந்த கிராமங்களின் காட்சிகளை மனதால் உணர முடிகிறது.தொடருங்கள் மோகன்.வாழ்த்துக்கள்.

leomohan
22-09-2007, 08:39 AM
தங்கையன் வீட்டில் ஒரு நாள் புதிதாக இறக்கப்பட்ட கள் கொண்டு வந்து வைத்திருக்க அவருடைய மகனும் நாங்கள் வீட்டிற்குள் நுழைந்தோம். அவருடைய மகன் பெயர் சுரேஷ் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில் இல்லை. அவன் எங்களை பார்த்து கள் குடிச்சிருக்கியா என்று கேட்க, அது என்னது என்று அப்பாவியாக நாங்கள் கேட்க, அது மோர் மாதிரி இருக்கும் என்று எடுத்து எங்கள் வாயில் ஊற்ற சற்று நேரத்திற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. வீட்டு பக்கும் போகாமல் சிறிது நேரம் சுற்றிக் கொண்டிருந்தோம்.

அந்த நான்கு வீடுகளின் தென்கோடியில் நான்கு சிமெண்ட் தொட்டிகள் இருக்கும். அவற்றில் மாடுகளுக்கு தீவனம் போட்டு வைப்பார்கள். வீட்டின் பின்புறம் தான் மாட்டுத் தொழுவம்.

அந்த தொட்டிகளுக்கு எதிரில் ஒரு குட்டிச் சுவர். பூச்சு முழுவதும் போய், செங்கற்கள் இளித்துக் கொண்டிருக்கும்.

நாங்கள் ஊர் பிள்ளைகளுடன் இரண்டு கோஷ்டியாக பிரிந்து 5 புளியங்கொட்டைகள் எடுத்துக் கொண்டு விளையாடுவோம். அதாவது ஒரு கோஷ்டி அந்த சுவற்றில் 5 கொட்டைகளை ஒளித்து வைக்க வேண்டும். இன்னொரு கோஷ்டி கண்டு பிடிக்க வேண்டும். பல மணி நேரம் விளையாடிக் கொண்டிருப்போம். வீட்டில் இருந்து சாப்பாட்டிற்கு அழைப்பு வரும் வரை.

வீட்டில் பெரிய கூட்டம் என்றால் பாட்டிக்கும் சித்திகளுக்கும் வேலை செய்து மாளாது. பத்து பாத்திரம் சுத்தம் செய்யும் வேலையை குறைக்க தாமரை இலையில் தான் சாப்பாடு. எங்கள் கூட்டத்தில் பெரியவனாக இருக்கும் யாராவது பொறுப்பேற்ற குளிக்கும் குளத்திற்கு சென்று தாமரை இலைகளை பறித்து வர வேண்டும். அந்த குளத்தை நாங்கள் தாமரை குளம் என்று சொல்வோம்.

இலைகளை தண்ணீர் போட்டு சுத்தம் செய்து ஆர்வமாக உட்காருவோம். காரணம் - சுட சுட எண்ணெய் ஊற்றும் போது அந்த தாமரை இலையின் நடுவில் கொப்பளிக்கும். அதை பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

சாப்பாடு முடித்துவிட்டு ஹாக்கி மைதானம் போல இருக்கும் திண்ணையில் படுத்து உறங்குவோம். பாய், தலைகாணி இருக்கிறதோ இல்லையோ வெறும் இயற்கை காற்றை மட்டும் ஆதாரமாக கொண்டு தூங்குவோம்.

தொடரும்...

ஓவியன்
22-09-2007, 03:22 PM
கிராமத்து சூழலிலே தான்
எத்துனை ரம்மியம்...
எத்துனை ஆனந்தம்...
அசராமல் அனுபவித்துள்ளேன்...
மீள இப்போது
உங்கள் கட்டுரையிலும்...

தொடருங்கள் மோகன், தொடர்ந்து அனுபவிக்க வேண்டும் நாம்......

பாரதி
22-09-2007, 06:55 PM
அன்பு மோகன்,

இத்திரியில் உள்ளவற்றை மிகவும் இரசித்து படித்து வருகிறேன். நினைவு கூறல்களை வாசிப்பது என்றாலே அலாதி இன்பம்தான். கடந்த காலம் கற்பனையில் வாழ்ந்த சொர்க்கலோகம் போலத்தான் பெரும்பாலோனோரின் வாழ்க்கையில் இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.


தங்கையன் வீட்டில் ஒரு நாள் புதிதாக இறக்கப்பட்ட கள் கொண்டு வந்து வைத்திருக்க அவருடைய மகனும் நாங்கள் வீட்டிற்குள் நுழைந்தோம். அவருடைய மகன் பெயர் சுரேஷ் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில் இல்லை. அவன் எங்களை பார்த்து கள் குடிச்சிருக்கியா என்று கேட்க, அது என்னது என்று அப்பாவியாக நாங்கள் கேட்க, அது மோர் மாதிரி இருக்கும் என்று எடுத்து எங்கள் வாயில் ஊற்ற சற்று நேரத்திற்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

இதைப்படித்த பின்னர் தலைப்பிற்கும் இதற்கும் உள்ள தொடர்புபுரிந்தது...!

என்னவன் விஜய்
22-09-2007, 09:02 PM
நான் கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்காதவன். இதனை படிக்கும் போது கிராமத்தில் பிறந்திருக்கலாமோ என ஆசைப்பட வைக்கின்றீர்கள் திரு லியோமோகன். தொடருங்கள்
நன்றி

leomohan
22-09-2007, 09:11 PM
'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...' தொடருங்கள் லியோ உங்கள் ரசனையான பழைய நினைவுகளை...!

நன்றி ஜேஎம் அவர்களே.

leomohan
22-09-2007, 09:12 PM
மோகன் விடுமுறையில் வேரினைத் தேடிப் போன உங்கள் ஞாபகங்களை எங்களோடு பகிர்ந்து கொள்வது மிகிழ்ச்சி...
படிக்க படிக்க என்னையும் புதுக்குடிக்கு கொண்டு செல்கின்றது உங்கள் எழுத்துப் பிரவாகம் - பாராட்டுக்கள்!.

நன்றி ஓவியன். இன்னும் ரசித்து எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். நீளம் அதிகமானால் மன்னிக்கவும்.

leomohan
22-09-2007, 09:13 PM
நானும் தஞ்சாவூர் காரன் மோகன். உங்களது பதிவு, எனது இளமைக்காலங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது. எழுதுங்கள்..

நன்றி தங்கவேல். அட நீங்கள் தஞ்சாவூர் காரரா. பலே. நான் தஞ்சாவூரில் இரண்டு ஆண்டுகள் படித்தேன். மங்களாபுரம் காலனியில் இருந்தோம். எல் ஐ சி காலனிக்கு அடித்த பேருந்து நிறுத்தம். சோழா திரையரங்கில் படம் பார்ப்போம். அது இன்னும் இருக்கிறதா?

leomohan
22-09-2007, 09:14 PM
அருமையா ஆரம்பம் மோகன். கிராமத்து விசிட் அனுபவங்களை எழுதுவதே ஒரு தனி குசிதான். கிராமத்தில் வளர்ந்து பழக்கபட்ட எனக்கு உங்கள் பதிவை படிக்க ஆனந்தமாய் இருகிறது. என் பிள்ளைகளை கூட்டி சொல்லும்போது அவர்கள் மிகவும் சந்தோசபடுகிறார்கள். ஒரே கவலை எங்கள் ஊர் குலத்தில் தன்னீர் இல்லை.இது தவறான பழக்கம். இப்படி செய்ய தேவையில்லை. எனக்கு மாட்டு வண்டி நன்றாக ஓட்ட தெரியும். அப்படி எல்லாம் குத்த வேண்டியதில்லை. ஆனால் வேகமாக ஓட்டுவேன்.

வாத்தியாரே உங்களுக்கு அனைத்து துறைகளில் தேர்ச்சி உள்ளதே. நீங்கள் சகலகலாவல்லவர். முன்பே தெரிந்திருந்தால் தங்கையனிடம் சொல்லியிரு்ப்பேன்.

leomohan
22-09-2007, 09:14 PM
மலரும் நினைவுகள் என்பதே...நம் இன்றைய குழப்பமான மனதை ஓவராலிங் செய்வதுபோலத்தான். இந்த பதிவைப் படித்ததும் அந்த வினாடியிலேயே நானும் என் பழைய காலங்களுக்கு பயணப்படுவதை நிறுத்த முடியவில்லை.நானும் தஞ்சையை சேர்ந்தவன் என்பதால் அந்த கிராமங்களின் காட்சிகளை மனதால் உணர முடிகிறது.தொடருங்கள் மோகன்.வாழ்த்துக்கள்.

ஆம் சிவாஜி. பணத்தை தேடி விரைந்து செல்லும் வாழ்கையில் இடைவெளி தருவது போல் ஒரு மலரும் நினைவுகள்.

leomohan
22-09-2007, 09:15 PM
அன்பு மோகன்,

இத்திரியில் உள்ளவற்றை மிகவும் இரசித்து படித்து வருகிறேன். நினைவு கூறல்களை வாசிப்பது என்றாலே அலாதி இன்பம்தான். கடந்த காலம் கற்பனையில் வாழ்ந்த சொர்க்கலோகம் போலத்தான் பெரும்பாலோனோரின் வாழ்க்கையில் இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.இதைப்படித்த பின்னர் தலைப்பிற்கும் இதற்கும் உள்ள தொடர்புபுரிந்தது...!

ஹா ஹா. நகைச்சுவையை ரசித்தேன். ஆனால் அப்போது கள்ளை ரசிக்கவில்லை. பயத்தில் பீதி அடைந்தது தான் மிச்சம்.

leomohan
22-09-2007, 09:17 PM
நான் கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்காதவன். இதனை படிக்கும் போது கிராமத்தில் பிறந்திருக்கலாமோ என ஆசைப்பட வைக்கின்றீர்கள் திரு லியோமோகன். தொடருங்கள்
நன்றி

நன்றி விஜய். நானும் கிராமத்து வாழ்கையை அவ்வளவாக அனுபவித்தது இல்லை. ஆனால் சிறிய நகரம் (விழுப்புரம்) வாழ்கையை வெகு நாள் அனுபவத்திருக்கிறேன். அதை பற்றியும் விரைவில் எழுதுகிறேன்.

மனோஜ்
22-09-2007, 10:30 PM
நான் என் அன்னை வீட்டிற்கும் தந்தை வீட்டிற்கும் சோல்லும் பொழுது ஏற்பட்ட அனைத்தும் என் கண்முன் கொண்டுவந்தது கதை நன்றி மோகன் சார் தொடருங்கள்

ஜெயாஸ்தா
23-09-2007, 03:23 AM
அன்பு மோகன்,
இதைப்படித்த பின்னர் தலைப்பிற்கும் இதற்கும் உள்ள தொடர்புபுரிந்தது...!
டைமிங் கடியால் சிரிப்பை வரவழைத்துவிட்டீர்கள்..!

அறிஞர்
23-09-2007, 04:08 AM
மீண்டும் ஒரு அருமையான படைப்பு மோகன்...

எங்களுடைய சிறுவயது சம்பவங்களையும்... கிராமங்களுக்கு விடுமுறையில் சென்று விளையாடியதையும்.. நினைவு கூறச்செய்தது.....

நன்றி மோகன்...

leomohan
23-09-2007, 12:52 PM
நான் என் அன்னை வீட்டிற்கும் தந்தை வீட்டிற்கும் சோல்லும் பொழுது ஏற்பட்ட அனைத்தும் என் கண்முன் கொண்டுவந்தது கதை நன்றி மோகன் சார் தொடருங்கள்

நன்றி மனோஜ்.

leomohan
23-09-2007, 12:54 PM
மீண்டும் ஒரு அருமையான படைப்பு மோகன்...

எங்களுடைய சிறுவயது சம்பவங்களையும்... கிராமங்களுக்கு விடுமுறையில் சென்று விளையாடியதையும்.. நினைவு கூறச்செய்தது.....

நன்றி மோகன்...

நன்றி அறிஞரே. முப்பது தாண்டிய அனைவரும் புண்ணியம் செய்தவர்கள்.

காரணம் நாம் டிவி இல்லாத காலத்தையும் பார்த்துவிட்டோம், இப்போது விஞ்ஞான வளர்ச்சிகளையும் பார்த்துவிட்டோம். இந்த சந்ததியரை பார்த்தால் சற்று பரிதாபமாகவே இருக்கிறது.

அந்த சுள்ளி போட்ட செப்பு பாய்லரில் சுடு நீர், பாயில் படுத்து விண்ணை பார்த்து அரட்டை அடிப்பது, பானையில் தண்ணீர் குடிப்பது.

ஆனால் இந்த சந்ததியரை நம்மை போல பழையதை எண்ணி ஏங்குவதில்லை. காரணம் அவர்களுக்கு எதுவுமே பழையது இல்லை. எல்லாமே புதியது தான்.

நமக்கு தான் புதியது பழையது என்று இரண்டும் இருக்கிறது.

leomohan
23-09-2007, 12:55 PM
வெயில் படம் தவற விட்டேன். ஆனால் அந்த படத்தில் வரும் பாடல் காட்சிகள் பல பழைய விளையாட்டுகளை நினைவு படுத்தும்.

கொடுக்காபுள்ளி மரத்தில் கல்லால் அடித்து அதை சாப்பிடுவது, பாதம் கொட்டை உடைத்து பாதம் திண்பது, புளியமரத்தில் புளியங்காய் அடித்து புளியை வீட்டில் கொடுத்துவிட்டு அந்த கொட்டைகளை விளையாடுவதற்காக எடுத்து செல்வது.

சூடு காயால் தரையில் தேய்த்து தொடையில் வைத்து இளம் மயிற்காற்களை சுண்டவைப்பது. இன்னொரு சுவாரஸ்யமான விளையாட்டு தென்னங்குச்சிகளை சிறிது சிறிதாய் உடைத்து 10 குச்சிகள் தயார் செய்வோம். பிறகு மட்டை குச்சி (BAT) ஒன்றன் மேல் 5 குச்சிகளும் கீழே 5 குச்சிகளும் வைத்து தரையில் வீசி எறிவோம். அதில் ஏதாவது ஒரு குச்சியின் மேல் ஒரு குச்சி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் விளையாடலாம் இல்லாவிட்டால் ஆட்டம் அடுத்தவர் கைக்கு போய்விடும். பிறகு ஒவ்வொரு குச்சியாக தனித்து எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் போது இன்னொரு குச்சி நகர்நதுவிட்டால் அசங்கிடுச்சி என்று சொல்லி அடுத்தவர் ஆட துவங்குவார். 10 குச்சிகளும் அசங்காமல் எடுத்துவிட்டால் மீண்டும் சுண்டலாம். இப்படி பாயிண்ட் ஏறிக் கொண்டே போகும்.

பரம பதம், தாயக்கட்டை, பல்லாங்குழி என்று பெண்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். நாங்களும் சில நேரத்தில் கை குறைந்தால் சேர்ந்துக் கொள்வோம்.

தாத்தா எப்போதும் ஒரு பெரிய ஈஸி சாரில் உட்கார்ந்திருப்பார். நடு கூடத்தில் ஒரு பெரிய ஊஞ்சல் இருக்கும். நாங்கள் அதில் உட்கார்ந்து ஆடுவோம். சில நேரம் பின்னால் இருப்பவன் மேல் இடிக்க இரண்டு மூன்று நாட்களுக்கு தடை உத்தரவு - யாரும் ஊஞ்சலில் விளையாடக்கூடாது என்று. பிறகு என்ன, நம் நாட்டில் எந்த சட்டம் தான் செல்லும். மீண்டும் விளையாட துவங்கிவிடுவோம்.

குளத்திற்கு அப்பால் தெரியும் தெருவில் இரவு நேரத்தில் கூத்து நடக்கும். எங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. தூரத்திலிருந்து தெரியும் அந்த கூத்தை திண்ணையில் இருந்து பார்த்து ஆதங்கம் அடைவோம். தாத்தா அதுக்கு ஒரு வழி பண்றேன் என்று சொல்லி ஊரில் சிங்கப்பூர் சென்று வந்த ஒரு இளைஞனை கூப்பிடுவார். அவரிடம் ஒரு ப்ரோஜக்டர் இருக்கும். திண்ணைக்கு அருகில் உள்ள சுவரில் வேட்டியை கட்டி எதிரே ப்ரோஜக்டர் வைத்து ஒரு சுருள் பிலிம் போட்டு ஊமை படம் காட்டுவார். பெரிய கூட்டமே கூடிவிடும். எத்தனை நாளுக்கு பிறகு கூப்பிட்டாலும் அந்த ஒரு படம் தான் அவரிடம். வேறு படமே இருக்காது. நாங்கள் அலுத்துப்போனாலும் டிவியே என்னவென்று தெரியாது அந்த காலத்தில் அதுவும் அந்த கிராமத்தில் அதுவே பெரிய பொழுதுபோக்கு. படம் பார்க்க வேண்டும் என்பதை விட கும்பல் சேருவதில் ஒரு அலாதி சந்தோஷம்.

தாத்தாவிடம் பல சுவாரஸ்யமான பழக்கங்கள் உண்டு. அவருக்கு ஊரில் இருந்து மக்கள் வந்துவிட்டால் சீட்டு விளையாட்டுக்கு ஆள் வந்தது போல் ஒரு சந்தோஷம். திண்ணை முழுவதும் பெரியவர்கள் வட்டமிட்டு அமர்ந்திருக்க காபி, பலகாரம், போண்டா பஜ்ஜி என்று வந்துக் கொண்டிருக்க சீட்டு கச்சேரி களை கட்டும்.

காலையில் எழுந்துவிடும் தாத்தா மரக் கன்றுகளுக்கு அருகில் ரேடியோவை வைத்துக் கொண்டு தான் வருபவர்களை சந்தித்து பேசுவார். பாட்டு மூலம் மரம் வேகமாக வளரும் என்பது அவருடைய நம்பிக்கை.

எங்களையும் ஏதாவது கேள்வி கேட்டு அசத்துவார். அவருக்கு நல்ல ஆங்கில ஞானமும் இருந்தது. அவர் கேள்விகளில் இருந்து தப்பிக்க நாங்கள் ஜகா வாங்குவோம்.

தொடரும்.....

lolluvathiyar
24-09-2007, 06:52 AM
மீண்டும் ஆசையை கிளறி கொண்டே போகிறீர்கள்.
பேசாமல் மாசம் ஊருக்கே போயிரலாம்னு ஒரு பீலிங்ஸ் ரொம்ப நாளா எனக்கு இருக்கு.
வாணம் பாத்த பூமியா இருந்தாலும் 10 ஆட்டுகுட்டி மேச்சா கூட இன்னிக்கு மாசம் 5000 பாத்தரலாம்.