PDA

View Full Version : தாயின் கனவு!!!aren
18-09-2007, 03:47 PM
பட்டம் வாங்கிவிடு
எப்படியாவது பட்டம் வாங்கிவிடு
வாழ்க்கையில் முன்னேறலாம்!!!

என் தாயின் மூச்சு
நான் வாங்கப்போகும் பட்டத்தில்!!!

நானும் நன்றாக படித்தேன்
பரிட்சை நன்றாக எழுதினேன்
தேர்விலும் நன்றாகவே தேர்ச்சிபெற்று
பட்டமும் வாங்கினேன்!!!

பட்டம் வாங்கிவிட்டால்
வேலை கிடைக்கும்
என்று நினைத்த எனக்கும்
என் தாய்க்கும்
ஏமாற்றமே!!!

உள்ளூர் அதிகாரிகள் முதல்
வெளியூர் மந்திரிகள் வரை
கவனிக்கவேண்டும்
என்று முதலில் தெரியாது!!!

தெரிந்திருந்தால்
ஒரு ஏக்கர் சொந்தபூமி
கைவிட்டு போயிருக்காது!!!

படித்தும்
பட்டதாரியாகியும்
கையில் கலப்பையுடன்
என் தந்தையின் வழியில் நான்!!!

படிக்காத தந்தை
தன் நிலத்தில் உழுதார்!!!

பட்டதாரியான நான்
வேறொருவர் நிலத்தில்!!!

படித்ததன் பலன்
முதலாளி போய்
தொழிலாளியானேன்!!!

என் தாயின் கனவு
நிறைவேறியும்
தாய் இன்றும்
ஓட்டைக் குடிசையில்
மாற்றுப்புடவையின்றி
ஒரு வேளை கஞ்சியுடன்
காலம் தள்ளும் நிலை!!!

அனைவரும் படித்து முன்னேருங்கள்
எதிர்காலம் உங்கள் கையில்
அப்துல்கலாமின் வார்த்தைகள்
மனதின் ஓரத்தில் கேட்கிறது!!!

நான் ஏர்க்கலப்பையை
எடுத்து
உழத்தொடங்கினேன்!!!

அக்னி
20-09-2007, 03:13 PM
எதிர்பார்ப்புக்கள் பூரணமாகியும்,
தொடரும் எதிர்நீச்சல்கள்...
களைக்கவில்லை..,
இளைத்துப்போனோம்...
இல்லையென்றானோம்...

பட்டம் என்றதே,
பறந்துவிடும் என்றுணர்த்தவோ..?
உயர்வென்றல்லவா எண்ணினோம்...

பாராட்டுக்கள் ஆரென் அவர்களே...
சமுதாய நோக்குகள் தொடரட்டும்...

சாராகுமார்
20-09-2007, 03:20 PM
பட்டங்கள் பறக்கட்டும்..
உழைப்பு கைக்கொடுக்கும்..
நிலம் சொந்தமாகட்டும்..
தாயின் கனவு நிறைவேறட்டும்.

வாழ்த்துகள் ஆரென்.

ஜெயாஸ்தா
20-09-2007, 03:25 PM
எளிய நடையில் அருமையான கவிதை ஆரென்.


படிக்காத தந்தை
தன் நிலத்தில் உழுதார்!!!

பட்டதாரியான நான்
வேறொருவர் நிலத்தில்!!!


---கவிதையின் உயிர்ப்பு வரிகள். என்னை கவர்ந்த வரிகளும் இதுவே.

என்னவன் விஜய்
20-09-2007, 03:45 PM
பட்டம் என்பது
பறக்கவே அன்றி
பசிதீர்க்க அல்ல

கவிதை பிரமாதம்

முயற்சிகள் தொடரட்டும்

நன்றி

சூரியன்
20-09-2007, 04:01 PM
கவிதை அருமை அண்ணா,,

மீனாகுமார்
20-09-2007, 04:16 PM
ஒரு உண்மையான மனநிலையை அப்படியே படம் பிடித்து செதுக்கியிருக்கின்றீர்கள்.. அருமையான கவிதை...

கல்வி என்பது கண் போன்றது. உழுவது என்பது ஒரு மிகச் சிறப்பான தொழில். நீங்கள் ஆங்கிலத்தில் மின்னணுவியல் கற்றிருந்தாலும் அந்த கல்வி கண் தரும் பொதுப் பாட்த்தை அஸ்திவாரமாக கொண்டு நீங்கள் உங்கள் உழைப்பிலும் உழும் தொழிலிலும் எப்படி முன்னேறுவது என்பதை அறிந்து அதை செயலாக்கி உங்கள் தந்தை வைத்திருந்தது போல நூறுமடங்கு சம்பாதிப்பதே உங்கள் திறமை. உங்கள் கடமையை செய்துவிட்டு உங்கள் அன்னையிடம் சென்று உங்கள் வெற்றியைக்கூறுங்கள்.. அதுதான் கல்விதரும் வெற்றி...

நான் இதை இந்த கவிதையில் வரும் கதாபாத்திரத்திற்குதான் கூறுகிறேன்... சரிதானே...

இலக்கியன்
20-09-2007, 04:22 PM
எதிர்பார்ப்புக்கள் நிறைவேறத வலிகளுடன் வந்த கவிதை அருமை

பூமகள்
20-09-2007, 04:41 PM
அம்மாவின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆனாலும் வாழ்க்கையின் எதிர்பார்ப்பில் ஏமாற்றம் வந்தது வருத்தமே..!!
ஏமாற்றங்களை ஏறும் படிகளாக மாற்றினால் வெற்றி நிச்சயம்.

அழகான கவி. வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா.:icon_b:

அமரன்
20-09-2007, 05:20 PM
ஆழமான கரு..பட்டம் வாங்கியவர்கள் எல்லோருக்கும் வேலை கொடுக்க சரியான திட்டமிடல் இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் படிக்கும் நாம் திட்டமிடலைக் கடைப்பிடிக்கின்றோமா. எத்தனை பொறியியல் கல்லூரிகளின் ஆக்கிரப்பில் நாம் சிக்குகின்றோம். ஒரு காலவேளையில் குறிப்பிட்ட துறைக்கு மதிப்பு இருக்கும். நாம் எல்லோரும் அதே துறையை கற்க ஆரம்பிகின்றோம். படித்து முடித்ததும் வேறு ஒரு துறைக்கு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் வேலைவாய்ப்பு அதிகரிக்க எமது கற்கைநெறி நலிவடைந்த நிலைக்கு தள்ளப்படுகிறது...எல்லோரும் அப்படி இல்லை என்றாலும் பலர் இதே பகுப்பில் வருகின்றார்கள்.திட்டமிடம் இருந்தால் இந்தப்பிரச்சினை தீரும்...அத்துடன் சுயவேலைவாய்ப்பு தரும் கைத்தொழில் நுட்பம் அனைவரும் தெரிந்திருக்கவேண்டியதும் அவசியம்..
கவிதையில் உணர்ச்சிக்குவியல்கள் அதிகம்...பாராட்டுக்கள்...

ஆதவா
22-09-2007, 09:20 AM
படித்த எல்லாருமே தகுந்த வேலைக்குச் செல்ல முடிவதில்லை. எல்லா தாய்களும் கனவு காண்பதில்லை....

கவிதை மிக எளிமை. ரசிப்பவரை ருசிக்கவைக்கிறது. நீளம் அதிகம்.

அமரன்
22-09-2007, 09:21 AM
பட்டம் வாங்கி விடு
சரியாகச் சொன்னார்கள்.

வாங்கிய பட்டம் விட்டு
வழங்கும் தொழில் செய்...!

அறிஞர்
23-09-2007, 03:13 AM
அருமையான வரிகள் ஆரென்.....

படித்தும்.. கடினப்படும்... இளைஞனின் வாழ்க்கை வரிகள்..

வெறும் பட்டம் வாங்கினால் மட்டும் போதாது.... அரசு வேலையை நம்பியில்லாமல்... தனியார் நிறுவனங்களில் தன் திறமையை சரியாக காண்பித்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

ஜெயாஸ்தா
23-09-2007, 03:30 AM
அரசு வேலையை நம்பியில்லாமல்... தனியார் நிறுவனங்களில் தன் திறமையை சரியாக காண்பித்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

உண்மைதான் அறிஞரே... இப்போதுள்ள இளைஞர்கள் அரசுவேலை என்னும் மாயையிலிருந்து வெளிவந்துவிட்டார்கள். அதுவே நம் நாட்டிற்கு ஒரு ஆரோக்கியமான வளர்ச்சிதானே...!

சிவா.ஜி
23-09-2007, 06:24 AM
தாயின் கனவு மகன் பட்டம் வாங்கவேண்டுமென்பது மட்டுமல்ல...வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயரவேண்டுமென்பதும்தான்.
செய்யும் விவசாயத்தொழிலே செய்பவரை உயர்த்தும்.அப்படி உயர்ந்து ஒருநாள் சொந்த நிலத்திலேயே உழுது,தாயை உச்சி குளிரவைத்து...பலனில்லாத அந்த பட்டத்தை வெறும் பட்டமாக்கிப் பறக்க விட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.வெகு அருமையான கரு,அழகான வரிகள்..ஆரென் அசத்திட்டீங்க.வாழ்த்துக்கள்.

lolluvathiyar
23-09-2007, 08:58 AM
படிப்பின் இன்னொரு முகத்தை எடுத்து காட்டி இருகிறீர்கள்

படிப்பு தேவைதான் விசய ஞானம் பெற / டை மாட்டி கூலிவேலைக்கு போக அல்ல*
படிப்பு அவசியம் தான் ஆனால் உழுகின்ற நிலத்தை வித்து படிக்க கூடாது.

ஓவியன்
27-09-2007, 11:54 AM
பட்டம் மட்டுமல்ல வாழ்க்கை...
உலகில் பட்டத்துடன்
பலர் அல்லாட...
பட்டமின்றி பகட்டின்றி
உண்மை உழைப்பினால்
உயர்ந்தவர் பலர்....

படிப்பு இருந்தாலோ
இலாவிட்டாலோ
வாழ்வில் உயரவேண்டின்
தேவை உண்மை
உழைப்பு மாத்திரமே....

இங்கே உங்கள் கவிதை நாயகனும் கடைசியில் ஏரோடு உழைக்க புறப்படுகிறார். சந்தேகமில்லை அவர் வாழ்விலே உயர்ந்து விடுவார்...

kampan
27-09-2007, 12:41 PM
பட்டமென்பது வெறும் பகட்டுக்காக
உழைப்பு இல்லையெனின் பிழைப்புக்கு வழியென்ன?