PDA

View Full Version : அழகிய தீ...!-சிறுகதை



அமரன்
17-09-2007, 02:02 PM
காலையும் மதியமும் அற்ற மத்திம வேளை. அரை வெள்ளுடை களைந்து முழு வண்ண ஆடையுள் நுழைந்தேன். கையெழுத்திட்டதும் திறந்த கதவின் வெளியே வெறிச்சென்று இருந்தது வெளி. ஒரு காக்கை குருவி கூட என்னை வரவேற்க வரவில்லை. வழி அனுப்பும்போது மட்டும் தெரிந்ததும் தெரியாததுமாக எத்தனை முகங்கள். பெட்டிக்கடை ஒன்று கண்ணில் தட்டுப்பட முதன்முதலாக எனது சம்பாத்தியத்தில் சிகரெட் வாங்கினேன். புகைப்பது தப்பு வாத்தியார் அப்பா சொன்னது காதில் ஒலித்தது. அப்படியானால் தப்பு செய்துவிட்டாய் என அழைத்து அடைத்து வைத்த இடத்தில் மட்டும் எப்படி இதை அனுமதித்தார்கள்? சிந்தனைவேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்தேன்.

நாளின் பெரும்பகலை காலதேவன் தின்னும் வரை என் கால்கள் யார் யாரையோ தேடி எங்கெங்கோ திரிந்தன. பழக்கப்பட்ட இடங்களில் வழக்கத்துக்கு மாறாக பழக்கமில்லாத பதில்களும் பழக்கமில்லா இடங்களில் நெகிழ்த்தும் பதில்களும் பரிசாகக் கிடைத்தன. ஈற்றில் சாலை ஓரத்தில் குட்டை சுவரின் அடைக்கலம் புகுந்தேன். கை மணிக்கூடு 17:01 எனக்காட்ட காலத்தை எண்ணும் அதன் எண்களின் அசைவில் காலத்தை கடத்தினேன். ஒன்று அறுபதாகி அறுபது ஒன்றாக அடித்த பீப் பீப் 32 வயதில் யாரும் இங்கே அரட்டை அடிக்க மாட்டார்கள் என்று இடித்துரைத்தது. கால்களுக்கு விசை கொடுத்தது.

தரை வாழிகளின் எல்லை வானம் வரையாம். எனக்கு அது கடல் வரையென வரையறுக்கபட்டது. மணலில் கால் புதைய புதைய எடுத்து மீண்டும் வைத்து எடுத்து மீண்டும் வைத்து தொடர்ந்தேன். இந்த மண்ணுக்கு மனிதன் மீது எத்துணை ஆசை பாருங்கள்? பற்றினால் விடுவதில்லை;பற்றை விட விடுவதுமில்லை. கடலின் நீளம் அளக்க விழைந்தேன்.

புன்னைவனக் கருக்குயில்களின் குரல் உருக்கி பெண்களைப் படைத்தானோ பிரம்மன். அங்கமெங்கும் தட்டினாலும் வீணை மீட்டுமிசை மாறும் வீச்சத்துடன் காற்றில் கலக்கிறதே..அட்டை கிராஃப் ஒன்றுக்கு ஆட்டோகிராஃப் நியாபகம் வந்து புன்னைகை தந்தது. அப்பால் நகர்ந்தேன்.

பாவாடையை தூக்கியபடி துள்ளிக்குதிக்கும் தேவதைகளின் குழந்தைகளின் கொலுசுச் சத்தத்தில் அலை ஆடுகிறதா? அலையின் ஓசைக்கு இசைந்தாடும் பிஞ்சுப்பாதங்களுக்கு தாளம் தட்டுகிறதா கொலுசு? இதை சாமி தந்த எந்நிலையிலும் கற்பனைக் காற்றில் பறக்கும் வரமென்பதா? நக்கீரர்களை தேட வைக்கும் சாபம் என்பதா? புரியாத புதிருடன் பலருக்குப் புதிராக நடக்கிறேனா? எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற மாயை. கரையில் இருந்த கம்பத்தை முள்ளந்தண்டாக்கினேன்.

அடிவானத்தில் தெரிந்த செறிந்த கனகாம்பர மலர்க்கொத்துகள் கேள்விகளை எழுப்பின? பூமியை ஈர்த்து தன்னை சுற்ற வைக்கின்றான் சூரியன். நிலவோ பூமியால் கவரப்பட்டு அதனை வலம் வருகிறது. ஒரு நேரத்தில் கடலில் தெரியும் தன் விம்பம் பார்த்து இன்னொருவன் போட்டிக்கு வந்ததாக நினைத்து கடலில் சுழி ஓடுகிறதோ சூரியன்? அல்லது தன்னவளைச் சுற்றும் வெள்ளி நிலவை சுட்டெரிக்க விரும்பி நாளின் பாதிப்பொழுதில் தேடி அலைகிறதோ? ஆதவா மறைந்தது.என்னுள் கேள்வி பிறந்தது. நான் ஆதவனா?நிலவா?பூமியா? கடலைக் கேட்டேன். கதையைச் சொல்லு பதில் சொல்கின்றேன் என்றது.

கோகிலங்களின் சரணாலயம்; கோபியரின் கோகுலம் என எப்படி வேண்டுமானலும் சொல்லுல் அளவுக்கு இசையாலானது நந்தவனம் போன்ற எனது கல்லூரி. மூன்று ஆண்டுகள் கள்ளுண்டு ரீங்காரமிட்ட போதையில் தடுக்கி விழாது வீரனாய் வலம் வந்தேன். வருடந்தோரும் வரும் சங்கீத சங்கமம் அவ்வருடமும் வந்தது. மேற்கத்தைய ஆர்மோனியத்தில் பல்ரக இசைப் பிடித்து இளந்தென்றலில் தவழ்ந்துவரும் தெம்மாங்கில் மெட்டெடுத்து சந்தங்கள் துணயுடன் மாலை ஆக்கினேன். சந்தங்களின் சாயலில் சொல் முத்துக்களை தீட்டினேன். பதிக்கமுன் என்னைப் பற்றிக்கொண்டது இனம்புரியாத இனத்தைச் சேர்ந்த ஜுரம்.

மருத்துவமனையில் தூக்கம் இன்றி தவித்த என்னைத் தாலாட்டவந்தது என் பாட்டும் பாட்டுத்தந்த வெற்றியும்..நாற்பது நாள் வனவாசம் முடித்து நந்தவனத்துக்குள் புகுந்தேன். என்னைத் தாலாட்டியது என்னிசையா,எந்தமிழா என்னிசையின் ஏழு சுரத்தை விஞ்சிய எட்டாவது சுரமான அந்தக் குரலா? என்ற வினாவை சுமந்தபடி குரலின் சொந்தக்காரியை தேடினேன். தந்தது தரிசனம்..புதிதாக வந்தவள் புதிதாகவே தெரிந்தாள். என்னுள் மையம் கொண்ட புயல் அவள் மேல் மையல் கொள்ள வைத்தது... அகமும் புறமும் ஒன்றிணைந்த காதல் லாலா பாட வைத்தது..கண்ணசைவும் காலடியோசையும் வர்ணனை விஞ்சிய காதலை வளர்ர்த்தது..

வளரும் காலத்தில் ஒரு நாள். மீள இணைந்த பால்ய சினேகிதனுடன் எம் மீள் இணைவுக்கு மேகம் வாழ்த்துப்பூக்களை அனுப்பிக்கொண்டிருக்கும் மாலை வேளையின் ரம்மியம் கலந்து காபி பருகியபடி பாரில் இருந்தேன். காபிகாலியானதும் வெளியேவந்த எனக்கு ஆனந்த அதிர்ச்சி. கருங்கூந்தல் விரித்த தோகை மயில் போல எம்மை நாடி வந்தாள் என் சங்கீதா. ஆடும் மயிலின் கண்களில் தெரியுமே மிரட்சியும் இல்லாமல் எச்சரிக்கையும் இல்லாத இடைப்பட்ட ஒரு உணர்ச்சி..அதே உணர்ச்சி அவள் கண்களிலும் தெரிந்தது..மயிலின் கழுத்தில் எண்ணமுடியா வண்ணங்கள் இருக்குமாமே..குடைக்குள் வரலாமா கேட்போமா என நினைத்துக்கொண்டு தேடினேன்..கொண்டைச் சேவலின் தொண்டைபோல் நாட்டியம் தெரிந்தது. "குடையைக் கொண்டு போங்கள்". அவள்தான் சொன்னாள். "நீ எப்படிப் போவாய்" நண்பன் கேட்டான். ஆண்களை விட பெண்களுக்கு சுதாரிப்பு அதிகம்தான்...

"கிட்டத்தில்தானே வீடு..ஓடிப்போய் விடுவேன்"சிங்காரமாக சொன்னாள். குடையை வாங்குவதற்கு நீண்ட நண்பன் கைகளை தடுத்து "ரோஜா மொட்டவிழ்த்தாலே வண்டுகள் வட்டமிடும். வெள்ளை ரோஜா மழையில் நனைந்து காந்தாமாய் அழைத்தால் விளைவு என்னவாகும்" பொருள்படச் சொன்னேன். ஏற்றுக்கொண்டான்...திரும்பி நடந்தாள். அன்னப்பறவையை நியாகப்படுத்தினாள்...ரோஜா போனது முள்ளை என்னுள் தந்துவிட்டது...அவர்கள் தொடர்பு அறியத்துடித்தேன்...அவனே சொன்னான் எனது வருங்காலம் இவள்.....அவனை விட்டுப் பிரிந்தேன்..அவளைப் பிரிய நினைத்தேன்...

செயல்படுத்தினேன்...நெருங்கினாள் விலகினேன்..நெருக்கினாள்....நட்பை நெருங்கினேன்..தட்டுத் தடுமாறி போட்டு உடைத்தேன். கழுத்தை திருகுவான் என எதிர்பார்க்க தோளில் கைபோட்டான். நட்புவென்றதா? காதல் வென்றதா? இரண்டும் சேர்ந்து என்னை வெற்றியாளனாக்கியது என்பதுதான் நிஜம்....நகரும் மணிமுட்களில் நாட்கள் ஓட கட்டறுத்த காட்டாற்று வெள்ளமானது நமது காதல்...அப்போதுதான் எனக்குத் தெரியாமல் ஒரு நீலாம்பரி ஒருதலையால் உருவானது தெரிய வந்தது...வீட்டில் கிடைத்த அதிக சுதந்திரமும் கள்ளம் கபடமில்லா அன்பும் அளவுகடந்த பணமும் எனது சங்கோசமின்றி பழகும் பழக்கத்துக்கு காரணமானது. அதுவே எனக்கு சங்கடத்தை உண்டுபண்ணியது. அகங்காரமா,பிடிவாதமா, தீவிரபிணைப்பா ஏதோ ஒன்று நீலாம்பரியை கோழை ஆக்கியது....என் நடப்புகள் சாட்சிசொல்ல சட்டமும் பெண்ணுக்காக இரங்கியது. ஏழு ஆண்டுகள் உள்ளே தள்ளியது...

கண்களைத் திறந்தேன்...கம்பத்தில் தலை சாய்த்திருந்த என் கண்களில் கம்பத்தில் தலையில் இருந்த விளக்கு ஒளிக்கற்றை வீசியது. விலக்கிய பார்வையில் சில வினாடிகள் எதுவுமே தெரியவில்லை. அதிகம் என்றாலே குருடு அங்கே குடிவந்து விடுகின்றது..கடலைக் கேட்டேன் இப்போது சொல்...நான் சூரியனா? நிலவா? பூமியா? நிலவாக நீ இருந்தால் மீள வருகையில் களித்திருப்பர்...சூரியனாக நீ இருந்தால் மீள வருகையில் விழித்திருப்பர்...எனவே நீ பூமியடா...! மறையும் மாயம் செய்வதில்லை..மறைந்த காயம் யாரும் உணர்ந்ததில்லை....!சொன்ன கடல் மௌனிக்க புதிதாகப் பயணத்தை தொடங்கினேன்....யாருமில்லாத கடல்வெளியில் யாருக்காகவோ வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருந்தது கம்ப விளக்கு.

பூமகள்
17-09-2007, 02:35 PM
அற்புதமான சொல்லாற்றல் தமிழ் புலமை.
வர்ணிப்புக்களில் முனைவர் பட்டமே அமர் அண்ணாவிற்கு தரலாம்.
கடல், பூமி, நிலா, சூரியன் எத்தனை வித்தியாசமான வர்ணிப்புக்கள். ஆழமாக உணர்ந்து படிக்க வேண்டிய அழகிய தீ..!!

அழகிய தீ சுட்டதும் எங்களையும் செல்லமாய்...!!

ஆனால்.. ஒரு வருத்தம் உங்களின் பதிவுகள் என் தமிழ் புலமைக்கு பெருத்த சவாலாகவே இருக்கின்றன.:frown: உங்களின் பேனாவின் மேல் எனக்கு ஒரே கோவம் அமர் அண்ணா... விளங்கிக் கொள்ள படாத பாடு படவேண்டியுள்ளது.:icon_b:

அழகு கதை..பாராட்டுக்கள்... அமர் அண்ணா.:icon_rollout:

ஜெயாஸ்தா
17-09-2007, 02:48 PM
அப்போதுதான் எனக்குத் தெரியாமல் ஒரு நீலாம்பரி ஒருதலையால் உருவானது தெரிய வந்தது...வீட்டில் கிடைத்த அதிக சுதந்திரமும் கள்ளம் கபடமில்லா அன்பும் அளவுகடந்த பணமும் எனது சொங்கோசமின்றி பழகும் பழக்கத்துக்கு காரணமானது. அதுவே எனத்து சங்கடத்தை உண்டுபண்ணியது. அகங்காரமா,பிடிவாதமா, தீவிரபிணைப்பா ஏதோ ஒன்று நீலாம்பரியை கோழை ஆக்கியது....என் நடப்புகள் சாட்சிசொல்ல சட்டமும் பெண்ணுக்காக இரங்கியது. ஏழு ஆண்டுகள் உள்ளே தள்ளியது...


இந்த வரிகளின் பொருள் எனக்கு சரியாக புரியவில்லைஅமரன்? எதற்காக ஏழு ஆண்டு உள்ளே போக நேர்ந்தது? நீலம்பரியானாள் என்பதன் பொருள் என்ன?

சிவா.ஜி
17-09-2007, 02:49 PM
கவிஞர் எழுதும் கதையும் கவி வாசத்துடன்.சிறைப்பறவையின் கூண்டு திறப்புக்குப் பின்னரான சம்பவங்கள் வெகு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.ஒதுங்கியபோது காதல் வந்தது....ஒருதலையாய் காதலித்தவளால் வாழ்க்கை வெந்தது.
குற்றம் செய்யாமலேயே தண்டனையடைவது எத்தனை கொடுமை?வளரும் ஒரு இசைக்கலைஞன்,வளர்ந்துவிட்ட காதலின் பரிசாக மனதுக்குப்பிடித்த காதலி எல்லாமே கைவிட்டுப் போனாலும்...மீண்டும் ஒரு பயணத்தை துவங்கியிருக்கும் நாயகன் நம்பிக்கையை விதைக்கிறான்.

ஒரே ஒரு சங்கடம்....எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. புரியாமல் எதையாவது பின்னூட்டமிட்டு தவறாகிவிடுமோ என்ற அச்சம்.
வாழ்த்துக்கள் அமரன். தரம் உயர்ந்து பயணப்படுகிறீர்கள்....இன்னும் அசத்துங்கள்.

இளசு
17-09-2007, 08:12 PM
அன்பு அமரன்

ல.ச.ரா கதைகள் வாசிக்கும்ப்போது என் நெற்றி சுருங்கும்..
இன்னும் கவனம் குவித்து கருத்தை உள்வாங்க..

அதே நிலை -அழகிய தீ வாசித்தபோதும்!

கடல்..கடற்புர பின்புலம்

லதாவின் ஐந்திணைகளில் பிரிவு, ஆற்றாமையைச் சொல்ல
கடல் எத்தனை வலிமையான பின்புலம் என சொல்லியிருப்பார்கள்..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12267

அதன் முழு வலிவும் இக்கதையில்..

உரிபொருளாம் புன்னையையும் பயன்படுத்திய நேர்த்திக்கு சிறப்பு வாழ்த்துகள்..

இசையைக் கெடுத்தது - நீலாம்பரி!!!!!
ஏழு ஆண்டுகள் - முகாரி!

மீண்டும் சக்கரவாகமாய் எழும்ப நினைக்கும் நாயகன்..


எர்த்தி பெர்சன் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் சொற்றொடர்
எனக்குப் பிடிக்கும்.. ( என்னை அப்படி மற்றவர் உணர ஆசை எனக்குள்)

அப்படி எண்ணி மீள நடக்கும் அவனுக்காக
வாழ்த்தி என் கரகோஷம்..

பாராட்டுகள் அமரன்..

அன்புரசிகன்
17-09-2007, 08:35 PM
அழகிய தீ... அழகு...

மதி
18-09-2007, 03:21 AM
அமரன்...
சற்று நிதானித்தே படித்தேன்..
இளசு அவர்களின் பின்னூட்டம் உண்மை. தங்களின் சொற்றாடல் கூர்ந்து நோக்க சொல்கிறது. சம்பவங்கள் பற்றி விரிவான வர்ணனை இல்லாத போதும்.. மனத்தின் எண்ணங்களாய் பல வர்ணனைகள்..விவரிப்புகள்...
எண்ண ஓட்டங்களை அப்படியே பதிவு செய்வது சிரமமான செயல்..தாங்கள் அதனை முயற்சித்துள்ளீர்.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

அமரன்
18-09-2007, 05:10 PM
நன்றி பூமகள்...
மழலைகள் கிறுக்குவது அழகாக இருக்கும் ஆனால் புரியாது...அதற்காக கோபம் கொள்கின்றோமா? இல்லையே மகிழ்வுறுகின்றொம் அல்லவா? தமிழில் நானும் மழலையே.

நன்றி ஜே எம்..
உங்கள் ஐயம் தொடர்ந்த பதிவுகளாம் திரிபுற்றிருக்கும் என நினைக்கின்றேன்..

நன்றி சிவா.
நான் நீட்டி முழக்கியதை திருக்குறள் போல சுவையாக சொல்லி விட்டீர்கள்..

நன்றி அண்ணா.
உங்கள் பின்னூட்டம் உயரப் பறக்க உத்வேகம் தருகிறது. உங்கள் இலக்கிய ரசனை பிரம்மிப்பைத் தருகின்றது...மிக்க நன்றி அண்ணா....(லதா அக்காவின் ஐந்திணை படித்துக்கொண்டிருக்கின்றேன்.)

ரசிகரே...இது நல்லா இல்ல...
சும்மா கிறுக்கிக்கொண்டும் பின்னூட்டங்களை விசிறிக்கொண்டும் இருந்த என்னை கதை எழுதுங்க என்று கொம்பு சீவி விட்டு விட்டு ஒத்த வரியில் கருத்துக் கூறுவது சரியில்லை...

நன்றி மதி.
குறிஞ்சிப்பூ பின்னூட்டம். மகிழ்ச்சிப்பெருக்கில் திளைக்கின்றேன்.

பூமகள்
18-09-2007, 05:19 PM
நன்றி பூமகள்...
மழலைகள் கிறுக்குவது அழகாக இருக்கும் ஆனால் புரியாது...அதற்காக கோபம் கொள்கின்றோமா? இல்லையே மகிழ்வுறுகின்றொம் அல்லவா? தமிழில் நானும் மழலையே.

உண்மையில் தங்களின் தமிழாற்றில் நீந்த புலமையின்றி தத்தளிக்கும் மழலை :icon_rollout: இந்த பூமகள் தான் அமர் அண்ணா.
உங்கள் படைப்பு உங்களை தமிழின் மழலையாக அல்ல தமிழின் வேந்தராகக் காட்டுகிறது.
உங்களிடம் தன்னடக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது அண்ணா.

ஜெயாஸ்தா
18-09-2007, 06:17 PM
தொடர்ந்த பதிவுகளை படித்த பொழுது ஐயம் தீர்ந்துவிட்டது அமரன். என்ன இருந்தாலும் நான் மன்றத்திற்கு கற்றுக்குட்டிதானே... தவறாக நினைக்கவில்லையே...!

அமரன்
18-09-2007, 06:43 PM
தொடர்ந்த பதிவுகளை படித்த பொழுது ஐயம் தீர்ந்துவிட்டது அமரன். என்ன இருந்தாலும் நான் மன்றத்திற்கு கற்றுக்குட்டிதானே... தவறாக நினைக்கவில்லையே...!
கற்றுக்குட்டிக்கு கற்றுத்தந்த கேள்வியை தப்பாக நினைபேனா...ஜே.எம்.

பென்ஸ்
20-09-2007, 06:48 AM
அமர்...
எனக்கு நீன்ட பதிவுகளை படிக்கும் அளவுக்கு பொறுமை இருக்காது. அதனாலோ என்னவோ நான் அதிகமாக சிறு கதைகள் , தொடர் கதைகள் பக்கம் வருவதில்லை. உங்கள் கையேழுத்தில் இருந்த சுட்டியை பின்பற்றி இங்கு வந்த எனக்கு முதல் வரிகளை வாசித்துவிட்டு மட்டும் செல்லவிடாமல் கட்டி வைத்தது ஒரு உணர்வு...
எழுதிய விதமா...
உபயோகித்த வார்த்தைகள...
கொடுத்த உவமைகளா....

எல்லாம் கலந்து ஒரு இனிய படைப்பு இது...

இளசுவின் பின்னூடம் இங்கும் பொறாமைபட செய்கிறது....

அன்புரசிகன்
20-09-2007, 10:33 AM
ரசிகரே...இது நல்லா இல்ல...
சும்மா கிறுக்கிக்கொண்டும் பின்னூட்டங்களை விசிறிக்கொண்டும் இருந்த என்னை கதை எழுதுங்க என்று கொம்பு சீவி விட்டு விட்டு ஒத்த வரியில் கருத்துக் கூறுவது சரியில்லை...


அமரா.. நானும் தான் நினைக்கிறேன்....
பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.... தெரியாதா.... இதெல்லாம் ரெக்னிக்கல் டிபெக்ட் :D :D :D... நான் என்னசெய்யமுடியும்... வாசிக்கத்தான் முடியும்.... சன் தொலைக்காட்ச்சியில் TOP 10 இல் இறுதியாக சொல்வது போல் சொன்னேன். :D

சாராகுமார்
21-09-2007, 07:18 AM
அழகிய..தீ. அருமையான கவிதை கலந்த சிறு கதை.அமரன் அவர்களுக்கு என் சிறு பரிசு 200இபணம்.வாழ்த்துக்கள்.

lolluvathiyar
21-09-2007, 07:59 AM
வார்த்தைகள வர்னனைகள் நடை அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது. ஏதோ ஒரு சங்கடத்தை சொல்ல வருவது புரிந்தது.
1 முரை படித்தேன்
2 ஆம் முரை படித்தேன்
பின்னூட்டங்களை படித்தேன். ஆனால் எனக்கு நீங்க என்ன சொல்ல வர்ரீங்கனு சுத்தமா புரியலியே.

அமரன்
21-09-2007, 08:18 AM
நன்றி பென்ஸண்ணா...உங்கள் பார்வை பட்டது மகிழ்ச்சி தருகின்றது.
ஊட்டமும் ஊக்கமும் கொடுத்தமைக்கு நன்றி சாரா..
வாத்தியாரே..மிக்க நன்றி..பெரிசாக ஒன்றுமில்லை..சின்னதாக ஒன்று. இளசு அண்ணன் சொன்னதுதான்..



எர்த்தி பெர்சன் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் சொற்றொடர்
எனக்குப் பிடிக்கும்..
அப்படி எண்ணி மீள நடக்கும் அவனுக்காக
வாழ்த்தி என் கரகோஷம்

மனோஜ்
22-09-2007, 09:28 PM
அமரன் தங்களின் தமிழ் புலமைகண்டு மனம் மகிழ்கிறோன்
உண்மையில் தமிழ் இலக்கியம் படித்த சுவை எனக்கு
நன்றி

என்னவன் விஜய்
22-09-2007, 10:16 PM
நண்பர் அமரன்

முதல் முறை படித்தேன் புரியவில்லை
மறுபடி படித்தேன் புரிவதுக்கு
இப்போது படிக்கிறேன் புரிந்ததால்
அபாரம்...............
நன்றி

அறிஞர்
23-09-2007, 02:51 AM
அருமை அமரா.....

கொஞ்சம் நிறுத்தி நிதானமாக படிக்கும்பொழுது மாத்திரமே.. கதை சாதரணவர்களுக்கு புரிகிறது....

இது போன்று கதை எழுதுங்கள்...
கொஞ்சம் எளிமையான நடையிலும் எழுத முயலுங்கள்.. வெற்றி பெறுவீர்கள்...


நட்புவென்றதா? காதல் வென்றதா? இரண்டும் சேர்ந்து என்னை வெற்றியாளனாக்கியது என்பதுதான் நிஜம். எனக்கு பிடித்த வரிகளில் இது ஒன்று...

அமரன்
23-09-2007, 08:09 AM
ஆழப்படித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.. மனோஜ்...என்னவன்

அமரன்
23-09-2007, 08:25 AM
அருமை அமரா.....
கொஞ்சம் நிறுத்தி நிதானமாக படிக்கும்பொழுது மாத்திரமே.. கதை சாதரணவர்களுக்கு புரிகிறது....
இது போன்று கதை எழுதுங்கள்...
கொஞ்சம் எளிமையான நடையிலும் எழுத முயலுங்கள்.. வெற்றி பெறுவீர்கள்...

நன்றி அறிஞரே! இரண்டுவிதமாகவும் எழுத முயல்கின்றேன்...எழுத எழுத எல்லாம் சாத்தியமாகும் என்பதில் அதீத நம்பிக்கை உள்ளது. உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு...கதையைப் புரிவதில் சின்ன கடினத்தன்மை இருக்கு..இதுபோன்ற சந்தர்ப்பங்கள் சுயதேர்வு காலங்கள்.. என் நிலை அறிந்து தாகத்தை அதிகரித்து மேம்பட அப்பபோ இப்படி ஏதாவது செய்யவேண்டி இருக்கு..

இந்தக்கதை இலக்கிய தரத்தில் இல்லை என்பது எனது பணிவான கருத்து . அப்படி எழுத விழையும் ஒரு முயற்சி எனலாம். லதா அக்காவின் இலக்கியம் சார்ந்த பதிவுகளைப் படித்து ஏற்பட்ட உந்தலில் எழுதியது... பிரிவைச் சொல்ல சிறந்த பின்புலம் நெய்தல் என இளசுஅண்ணா சொல்லிஇருந்தார். அதன் பின்னர் பல திரைப்பாடல்கள் நினைவுக்கு கொண்டுவந்தேன்.. பல பிரிவுத்துயர்ப்பாடல்கள் வலிமையாக கடலின் பிண்ணனியில் சொல்லப்பட்டுள்ளது.. .நானும் முயற்சித்தேன்.. இசையை சேர்த்ததுக்கு காரணம் அதில் எனது ஈடுபாடு... பொதுவாக கவிதையாக இருக்கு, சங்கீதம் போல் இருக்கு என்று சொல்வார்கள். இரண்டையும் குழைத்து கொடுக்க நினைத்தேன். எழுதினேன். செம்மைப்படுத்தினேன்.. .அவ்வளவுதான்..

எனக்குத் தெரிந்த வார்த்தைகளை ஒருங்கிணைத்து தேர்வு செய்து எழுதிவிட்டு படிக்கும் போது உண்மையில் "என்னால் இப்படி எழுத முடியுமா?" என்ற ஆச்சரியம் எனக்கும் உதித்தது. நீலாம்பரி.. படையப்பா படத்தில் ஒரு வில்லத்தனமான பாத்திரப் படைப்பு. ஆனால் நீலாம்பரி என்பது பிடிப்பது கடினம். பிடித்து விட்டால் விடுவது கடினம் என்னும் பண்புடைய இராகம் எனப் படித்தநியாபகம்... . நாம் எடுக்கும் எந்த முடிவும் நேர்மறையாக இருக்க வேண்டும் என்பது எனது ஆணித்தரமான ஆசை. ஒரு சம்பவதை வைத்துதப்பான முடிவு எடுக்காது சாதகமான முடிவு எடுத்து உதராணமாக வாழ வேண்டும் என்பது எனது வாழ்வியல் குறிக்கொள்களில் ஒன்று அதன் வெளிப்பாடே கதையின் கரு...அதைச்சொல்ல காதலை ஊடகமாகப் பயன்படுத்திக்கொண்டேன்..

அனைவரும் பாராட்டும்போது பயம்கலந்த பொறுப்பு கூடுகிறது.. .தமிழை நம்பி பயணத்தை தொடர்கின்றேன்

மயூ
03-10-2007, 06:31 AM
அமரன் அவர்களே....
இதற்கு பின்னூட்டம் எழுதும் அளவிற்கு எனக்குப் புலமை இல்லை நண்பரே!!!
என்ன ஒரு எழுத்தோட்டம்....

வார்த்தைகளை ஒவ்வொன்றாக நிதானித்துப் படித்தேன்.... தமிழின் அழகை அப்படியே அள்ளி வெளியே காட்டிவிட்டீர்கள்!!!!

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

ஓவியன்
03-10-2007, 06:34 AM
அமரன் அவர்களே....
இதற்கு பின்னூட்டம் எழுதும் அளவிற்கு எனக்குப் புலமை இல்லை நண்பரே!!!
என்ன ஒரு எழுத்தோட்டம்....

வார்த்தைகளை ஒவ்வொன்றாக நிதானித்துப் படித்தேன்.... தமிழின் அழகை அப்படியே அள்ளி வெளியே காட்டிவிட்டீர்கள்!!!!

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

என்ன ஒரு அவையடக்கம், என்ன ஒரு அவையடக்கம்...
பாராட்டுக்கள் மயூ....!!! :)

மயூ
03-10-2007, 06:44 AM
என்ன ஒரு அவையடக்கம், என்ன ஒரு அவையடக்கம்...
பாராட்டுக்கள் மயூ....!!! :)

:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

அமரன்
03-10-2007, 07:15 AM
மிக்க நன்றி மயூ. கதை எழுதுவது மன்ற ஜாம்பவான்களில் ஒருவர் நீங்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்புறம் அவர்களை தூக்கி வீசி விட்டு அமரன் மட்டும் போதுமே.

அன்(ம்)புடன்,

யவனிகா
03-10-2007, 01:08 PM
தெள்ளு தமிழில் க(வி) தை நன்றாக வந்துள்ளது.வர்ணனைகள் கதை ஓட்டத்தை தடை செய்தாலும்,வர்ணனைகளைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.பளிச்சென்று தெரியும் நிலவை விட பாதி மேகத்திற்குள் இருக்கும் நிலவு இன்னும் அழகு தான்.மறைபொருட்கள் அதிகம் இருந்தாலும் அவை கதைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
வாழ்த்துக்களுடன் யவனிகா.

அமரன்
03-10-2007, 08:31 PM
நன்றி யவனிகா. வர்ணனைகள் கதையோட்டத்திற்கு ஆங்காங்கே தடையாக இருப்பது உண்மைதான். கதையை விட வர்ணனைகளுக்கு முக்கியம் கொடுத்தேன். ஆனாலும் அந்த வர்ணனைகளுக்குள் மறை பொருளாக ஏதாவது ஒரு விடயத்தை ஊசிமுனையளவாவது புகுத்த முயன்றுள்ளேன். நீங்களவற்றை புரிந்து கொண்டமை மகிழ்வைத் தருகிறது.

மன்மதன்
03-10-2007, 08:46 PM
கதை புரிந்து கொள்ள கடினமானதாக இருந்தாலும் எழுத்தாற்றல் வியக்க வைக்கிறது. இளசு அண்ணாவின் பின்னூட்டதில் புதைந்து கதை மூழ்கி இரண்டாவது தடவை நுழைந்து பார்த்ததில் கவிதையாக ஒரு கதையை புரிந்துகொள்ள முடிந்தது. இது மாதிரி நிறைய நீங்க எழுதவேண்டும் அமரன்..

அமரன்
04-10-2007, 11:13 AM
நன்றி மன்மதண்ணா.. எழுத முயல்கின்றேன்.

அக்னி
15-10-2007, 03:47 PM
அழகிய தீ...
மேற்கோளிட முடியவில்லை... அத்தனை வரிகளும் அழகுத் தமிழ்ச் சுடர்கள்...

பெட்டிக்கடை ஒன்று கண்ணில் தட்டுப்பட முதன்முதலாக எனது சம்பாத்தியத்தில் சிகரெட் வாங்கினேன்.
இளம்பருவத்திலேயே சிறை சென்றுவிட்டதை சொல்லாமல் சொல்லும் வரிகள். சிறையினுள்ளே, சிகரெட்... திருத்த வேண்டிய இடத்தை திருத்த வேண்டிய நிலை..


பாவாடையை தூக்கியபடி துள்ளிக்குதிக்கும் தேவதைகளின் குழந்தைகளின் கொலுசுச் சத்தத்தில் அலை ஆடுகிறதா? அலையின் ஓசைக்கு இசைந்தாடும் பிஞ்சுப்பாதங்களுக்கு தாளம் தட்டுகிறதா கொலுசு?
பாடலுக்கு இசையா... இசைக்குப் பாடலா...
அழகுக் கலவை...

மிகவும் ரசித்தேன் அமரன்... அழகுப் பாரத் தமிழ்...

முதலில் சிறை சென்ற காரணம் புரியவில்லை... ஆனால், பின்னூட்டங்களும் உங்கள் கருத்தும் கேள்விக்குறியுடன் புரிய வைக்கின்றன.
நேரடியாக நீங்களும் இதுவரை சொல்லவில்லை...
நான் விளங்கிக் கொண்டமையை கூறுகின்றேன்...
கதையின் நாயகனின் காதல் சந்தோஷமாக பயணித்த வேளையில்,
நாயகனுடன் பழகிய ஓர் பெண்ணின், ஒரு தலைக்காதலின் பழிவாங்கலால் சிறைக்கு அனுப்பப்படுகின்றான் நாயகன்...
அப்படியா..?


நிலவாக நீ இருந்தால் மீள வருகையில் களித்திருப்பர்...சூரியனாக நீ இருந்தால் மீள வருகையில் விழித்திருப்பர்...எனவே நீ பூமியடா...! மறையும் மாயம் செய்வதில்லை..மறைந்த காயம் யாரும் உணர்ந்ததில்லை....!
நிலா.., சூரியன்... பூமி...
மூன்றும் சந்தித்த கிரகணம் அருமையான தருணம் கதையில்...

பாராட்டுக்கள் அமரன்...


ரோஜா மொட்டவழித்தாலே


அன்னப்பறவையை நியாகப்படுத்தினாள்...

மேலுள்ள இரு மேற்கோள்களிலும் உள்ள வார்த்தைகள் சரியானவையா... அல்லது சரியாக வேண்டுமா...?

அழுத்தமான கதைக்கு அன்புப் பரிசாக 500 iCash.

அமரன்
20-10-2007, 06:28 PM
அக்னி உங்கள் ஊகம் சரியே..அவள் என்னை ஊடகமாகப் பயன்படுத்திப் பழிவாங்கினாள் என்று சொல்லலாம். நானே என் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டேன் என்றும் கூறலாம். மேற்கோளிட்ட இரண்டில் முதலாவது எழுத்துப்பிழை. களைந்துவிட்டேன். நன்றி.

ஆதவா
06-11-2007, 06:10 AM
எளிதில் புரிந்துகொள்ளுதல்..... கதைக்கு மிக அவசியம்.

கதையில் வார்த்தை அடக்கம் தேவையில்லை. நீட்டி விவரித்து எப்படிவேண்டுமானாலும் சுதந்திரமாக எழுதிக் கொள்ளலாம்...

மெல்ல நிறுத்தி நிதானித்து படித்து வந்த போதிலும் சிறு சந்தேகம், ஏன் அவன் ஜெயிலுக்குச் செல்லவேண்டும்? என்ன காரணம்? சரியாக சொல்லப்படவில்லை.

கதையின் பின்புலத்தை விவரித்த அளவுக்கு கதையின் போக்கை விவரிக்காதது குறையே... ஒரு கதைக்கு அவசியமான இடங்கள் அவை என்பது என் கருத்து....

வார்த்தைகள் ஒவ்வொன்றும் கவிதையாக... அடுக்கி வைக்கப்படா கவிதை போல அமைந்திருக்கிறது அழகிய தீ... ஆனால் எனது கருத்து.... அடுத்தடுத்து நீங்கள் எழுதும் கதைக்குள் பின்புல விவரிப்பைக் காட்டிலும் கருத்தில் சிரத்தை எடுக்கவேண்டுமென்பதே...

வர்ணனைகள் அபாரம்.... தொடர்க பல.....

அமரன்
06-11-2007, 06:39 AM
உண்மைதான் ஆதவா..! கதையில் நீட்டிச் சொல்லலாம். அதுதான் நல்லது. அப்படிச்சொல்லாத பட்சத்தில் புரிதல் கடினமாகின்றது. அடுத்த அடுத்த கதைகளில் (எழுதினால்) திருந்த முயல்கின்றேன். மிக்க நன்றி.