PDA

View Full Version : தவிப்புகள்



kampan
15-09-2007, 11:59 AM
சொந்த மண் துரத்தியடித்து
கண்கள் கரைகடந்து
பெண்கள் கற்பிழந்து
தொல்லைகளே எம்
தொடக்கமும் முடிவுமாய்
தொலைத்துவிட்ட எம்
உறவுகளை
மனங்களிலிருந்து தொலைக்கமுடியாமல்
துவளுகிறோம்

அக்னி
15-09-2007, 12:22 PM
விழிப்பார்வையில் மறைந்த சொந்தங்கள்,
மனவீதியில் தினமும் உலாப்போகின்றன...
ஓ..!
கண்கள் செய்த கைது,
உறவுகளை மனச்சிறையில்
ஆயுட்தண்டனை தந்து
அடைத்துவிட்டாலும்,
அழுதழுது வலிக்கின்றது...

பாராட்டுக்கள் கம்பன்...

அமரன்
15-09-2007, 05:12 PM
துவள இல்லை நாம்
துள்ளி எழுந்தோம்..

மங்கை அணி
வேங்கை அணியாகி
அள்ளிமுடித்த கூந்தலுடன்
கவளம் கவளமாக
கிள்ளிய தோட்டாக்களில்
எம்பெயரும் உள்ளதன்றோ...!
வங்கிக்கூற்று சொல்லுதல்லோ..!

ஓவியன்
15-09-2007, 06:14 PM
உறவுகளைத் தொலைத்துவிட்டு
உணர்வுகளைத் தொலைக்காமல்
தவிப்புக்களுடன் தவிப்பது,
தொடர்கதையல்ல....
கதை முடித்து வைக்கவென
திரள்கிறது சேனை..
நம் தவிப்புக்கள்
நம்மோடு தொலைந்து
நம் சந்ததிகள் பூபாளம் பாடும்
காலமது கனிகிறது கம்பா.....!!!

பாராட்டுக்கள் கம்பரே - தொடர்ந்து உங்கள் கவிப்பயணம் இந்த மன்றிலே தொடரட்டும்....

kampan
16-09-2007, 07:38 AM
நன்றி பொறுபாளர்களே உங்கள் பின்னூட்டல்களுக்கும் பாராட்டுகளுக்கும்

சிவா.ஜி
16-09-2007, 07:55 AM
பட்ட துன்பமெல்லாம் போதுமென காலமே கட்டளையிடக் காத்திருக்கிறது.எண்ணற்ற மடியல்கள் விளைவிக்கப்போகும் அந்த விடியல்கள் பிரகாசமாக இருக்கும்.தவிப்பெதற்கு...? களிப்பைக் காணும் நாள் பக்கத்தில்.வாழ்த்துக்கள் கம்பன்.

காவியா
16-09-2007, 09:07 AM
பூ பறிக்க வருபவனை கண்டால் பூவின் தவிப்பு
வேடனை கண்டால் மானின் தவிப்பு
காதலனை காணாமல் காதலியின் தவிப்பு
நிலாவை தேடும் இரவின் தவிப்பு..
மழைக்காய் ஏங்கும் பூமியின் தவிப்பு...
இயற்கையில் நிகழும் தவிப்புகள் ஆயிரம் ஆயிரம்..
ஆனாலும்...
கல்விக்காய் சென்றவன் வீட்டுக்கு வருவனா- எல்லையில்
காவலுக்காய் நின்றவன் மீண்டும் வருவானா
பள்ளிக்கூடம் மேல் குண்டு விழுந்திடுமா
அள்ளிச்சென்றிட ஆழிப்பேரலை வந்திடுமா....
இத்தனை விதமான தவிப்பும்
ஒரு விடியலின் வரவுகாய்
ஒரு தேசத்தில்................

சுகந்தப்ரீதன்
16-09-2007, 09:24 AM
துவளாதே தோழனே!
சோதனைகள் சுழன்றடிக்க
வேதனைகள் விழிநனைக்க
விடியல்வரும் எனயிருக்க
வந்ததடா வானில் வால்கொண்ட
நட்சத்திரம்− அதுகொண்டு போனதடா
என்மழலைகளின் சித்திரம்!
இந்தநிலை இனிதொடர்ந்தால்
நாளை என்மண்ணிலும்
நடக்கும் ஒரு விசித்திரம்!
அதில் நிலைத்து நிற்கும்
சாகாத என்தமிழின் சரித்திரம்!

தொடரட்டும் கம்பரே..உங்களின் கவிதைவரிகள்..வாழ்த்துக்கள்!

இலக்கியன்
16-09-2007, 02:40 PM
தவிப்புக்கள் கண்டு நான் தவித்தேன் வாழ்த்துக்கள் கம்பனே

சூரியன்
16-09-2007, 02:45 PM
அற்புதமான கவிதை

ஓவியன்
16-09-2007, 07:29 PM
துவளாதே தோழனே!
சோதனைகள் சுழன்றடிக்க
வேதனைகள் விழிநனைக்க
விடியல்வரும் எனயிருக்க
வந்ததடா வானில் வால்கொண்ட
நட்சத்திரம்− அதுகொண்டு போனதடா
என்மழலைகளின் சித்திரம்!
இந்தநிலை இனிதொடர்ந்தால்
நாளை என்மண்ணிலும்
நடக்கும் ஒரு விசித்திரம்!
அதில் நிலைத்து நிற்கும்
சாகாத என்தமிழின் சரித்திரம்!!

ஆகா சுகந்த ப்ரீதா,

அழகான அருமையான ஒரு பின்னூட்டம் தொடருங்கள் சுகந்தா..........!

kampan
23-09-2007, 01:07 PM
சித்தங்கள் தெளிந்தெழுந்தோம்
தெருத்தெருவாய் பிணம் சுமந்தோம்
புத்தகக் தூக்கும் பருவத்திலே
புலம்பெயர்ந்து புண்பட்டோம்.
அன்னை தந்தை கட்டிய வீட்டில் நாம்
அறிந்து வாழ்ந்தததில்லை.

aren
23-09-2007, 01:34 PM
அழவைக்கும் கவிதை வரிகள் கம்பன். இதற்கு வந்த பின்னூட்டங்கள் இன்னும் அழவைக்கின்றன. இந்த பிரச்சனை என்று தீருமோ, உங்கள் கனவுகள் என்று நினைவாகுமோ.

மனதில் கவலையுடன்
ஆரென்

kampan
11-10-2007, 11:37 AM
விடியலும் எமை பார்த்து விரக்தி கொண்டது
உலகமே எமை உற்றுப்பார்க்க உருமறைப்புக்கள் நடந்தன
தெருவிளக்கை ஏற்றி எம் உயிர் விளக்கை அணைத்தனர்
உறவுகளை பிசாசுகள் என்றனர்
எம் வீடுகளையே எமக்கு சிறைக்கூடம் ஆக்கினர்

தீபன்
20-08-2008, 01:57 AM
அனுபவிக்கும் அவலங்கள் பல...
ஆறுதல் சொல்லவும் பலர்....
சரித்திரம் காட்டி நம்பிக்கையூட்டும் சிலர்...-எம்
தரித்திரம் நீங்குமென ஆரூடம் கூறும் இன்னும் சிலர்...
ஆனாலும்,
உயிப்பலிகள் மட்டும்தான் இவற்றுக்குகூட தேவை
மனப்பலிகளுக்கில்லை மதிப்பு...!

உங்கள் உணர்வுகளை தொடருங்கள் கம்பன்...!

poornima
20-08-2008, 08:36 AM
எல்லா எழுத்துகளுக்குப் பின்னாலும் தெரிகிறது
சில இரத்தம் வடியும் ஞாபகங்கள்..
கவிதைக்காக சிலாகிப்பதா
வரிகளின் வலிக்காக வருந்துவதா
ஒன்றும் தோன்றவில்லை..

இங்கு பகிர்வதன் மூலம் சற்றே மனப்பாரம்
குறையும் எனில் -
மன்றத்தின் இறக்கி வையுங்கள்
சுமைகளை - கவிதைகளாய்

தீபா
20-08-2008, 08:51 AM
நுனிப்பார்வை ஒளிச்சிதறலில் கரும்பொன் கரைவதென்றாலும் கடுங்காமம் தழுவப்பெற்று தபசியும் குலைந்து நில்லாவிடினும் அறைந்து போன கீறல்களின் தீரம் போவதில்லை, துளீ ஈரமும் காய்வதில்லை.