PDA

View Full Version : ஐந்திணைகள்



jpl
13-09-2007, 03:56 PM
பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்தே ஐந்திணைகளைப் பற்றி படித்து அறிந்திருப்போம்.
மீண்டும் நினவுக்கு...
வாழ்வியலை இரண்டாகப் பிரித்து அதிலும் வரையறையை ஏற்படுத்தி
தமிழுக்கு அணி செய்து மகிழ்ந்திருக்கின்றனர் பழந்தமிழர் பண்டை நாளில்.
அகம்,புறம் என அனைவரும் அறிந்திரூக்கின்றோம்.
அதன் இலக்கண வரையறையை இங்கு காண்போம்...
பண்டைய தமிழர்கள் தங்கள் வாழ்வியலை சிறு கதை போல் சம்பவங்களை சிறு பாடலாக இயற்றினர்.
அதற்காக வரைமுறை;

ஒத்த தலைவனும் தலைவியும் தம்முள் துய்த்து,தாமே உணரத்தக்காக பிறருக்கு கூற இயலாததே அகத்திணை.

வீரம், கொடை,கல்வி,கீர்த்தி போன்றவை புறத்திணை.

திணை நிலம்,ஒழுக்கம் எனப் பொருள்படும்.

அகம் பற்றி முதலில் பார்போம்.
அகத்திணை 7 வகைகளாம்.
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
கைக்கிளை-ஒரு தலைக் காதல்
பெருங்கிளை-பொருந்தா காமம்

முதல் ஐந்திணைக்கும் முதற் பொருள்,கருப்பொருள்,உரிப்பொருள் உண்டு.இவையே ஓரு பாடலை வகைப்படுத்துகிறது.

இப்பொழுது குறிஞ்சி திணையை சற்று விரிவாக கண்போம்.
முதற் பொருள்-நிலமும்,பொழுதும்
நிலம்-மலையும் மலை சார்ந்த இடம்

சிறு பொழுது-யாமம் (இரவு10 மணியிலிருந்து 2 மணி வரை)
பெரும் பொழுது-குளிர் காலம்(ஐப்பசி,கார்த்திகை)முன் பனிக் காலம்
(ஆவணி,புரட்டாசி)

கருப் பொருள்-ஒவ்வொரு நிலத்திலும் பொழுதிலும் தோன்றும் பொருள்கள் கருப் பொருள்கள் எனப்படும்.
தெய்வம் வாழும் மக்கள்,உணவு,ஊர் போன்ற 14 கருப்பொருளாம்.
தெய்வம்-முருகன்
உயர்ந்தோர்-பொருப்பன்,வெற்பன்,சிலம்பன்,கொடிச்சி
தாழ்ந்தோர்-குறவர்,குறத்தியர்,கானவர்
பறவை-மயில்,கிளி
விலங்கு-யானை,புலி,சிங்கம்,கரடி,பன்றி
ஊர்-சிறுகுடி
நீர்-அருவி,சுனை
பூ-குறிஞ்சி,காந்தள்,வேங்கை
உணவு-தினை,ஐவனநெல்,மூங்கிலரிசி
பறை-தொண்டகப்பறை,வெறியாட்டுப்பறை,
யாழ்-குறிஞ்சி யாழ்
பண்-குறிஞ்சிப்பண்
தொழில்-வெறியாடுதல்,ஐவனநெல்,திணை விதைத்தல்,திணை காத்தல்,தேன் எடுத்தல்,கிழங்கு அகழ்தல்

உரிப்பொருள்-பாடுதற்குரிய பொருளாகிய(theme)காதல் வாழ்வில் தலைவன் தலைவியிடையே காணப்படும் உணர்ச்சிகளை ஐந்தாகப் பிரித்தனர்.
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் இத்திணையின் உரிப்பொருள்.

கலியில்,கபிலரின் குறிஞ்சிப் பாடல்;
இரவில் தலைவன் வருவது இன்பம் என்றபோதும்,வழியின் கொடுமையால் இனி இரவில் வரல் வேண்டா மலைசாரலில் பகலில் வருக என்கிறாள் தோழி.

கொடுவரி தாக்கி வேன்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கில் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்த்து மனத்து ஆகலின்,
கனவிற் கண்டு கதும்என வெரீஇப்
புதுவதாக மலர்ந்த வேங்கையை
அது என உணர்ந்து,அதன் அணிநலம் முருக்கிப்
பேணா முன்பின் தன்சினம் தணிந்து,அம்மரம்
காணும் பொழுதில் நோக்கம் செல்லாது
நாணி இறைஞ்சும் நன்மலை நன்னாட!
.......... ...... ........... ......... ......
.............. ................ .................
அதனால்
இரவில் வாரல்;ஐய;விரவுவீ
அகல் அறை வரிக்கும் சாரல்,
பெலும் பெறுவை இவள் த்தடமென் தோளே.

மிக வருத்தத்துடன் தாக்கிய வேங்கைபுலியை வென்றது ஓரு யானை.
களைப்பினால் அம்மலை சாரலில் ஓரு புறம் படுத்து உறங்கியது.நனவில் வந்த வேங்கையே கனவில் வந்தத்து.வரக் கண்டதும் சினங்கொண்டு,அருகில் புது மலர்கள் நிறைந்த வேங்கை மரத்தை புலி என்றெண்ணி சாய்த்து அழித்தது.அது மரம் எனக் காணும் பொழுது அதை பார்க்கவும் நாணங்கொண்டு தலை கவிழ்ந்து சென்றது.அந்நல்ல மலை நாட்டிற்கு உரியவனே.

இவ்வாறு படித்து இன்புறதக்கது சிறிதே பயிற்சிக் கொண்டால்.

இளசு
13-09-2007, 08:22 PM
மெல்ல மெல்ல படிப்பவரை ஈர்த்து
படிப்படியாய் தகவல்கள் கோர்த்து
சுவையான அகப்பாடல் தந்து
கைதேர்ந்த ஆசான் எனக் காட்டிவிட்டீர்கள் லதா..

அடுக்குமல்லி போல் திணை, அகப்/புறம்
கருப்பொருள், உரிப்பொருள் என ஒவ்வொன்றாய்ச் சொல்லிவந்ததில்
படிக்கும் ஆழம் மெல்ல அதிகரிக்கிறது..

உங்கள் பணிக்கு என் பாராட்டுகள்.. செவ்வனே தொடருங்கள்!

jpl
14-09-2007, 01:54 AM
நன்றி இளசு.சங்கப் பாடலின் சுவைஞர்கள் அருகி வருகின்றார்கள்.
பணத்திற்கு பின் ஓடும் இந்நாளில் மெல்ல மெல்ல பழம் இலக்கியச் சுவையை இழக்கின்றோம்.
அனைவரின் கூற்று புரியவில்லை என்பது தான்.
20 வருடங்களுக்கு முன் கணினி என்பதே இல்லை.
இப்பொழுது முயன்று கற்று தெளிந்து வல்லவராகி விட்டோம்.
இதில் வருமானம் வருகின்றது.இலக்கியம் கற்றால்?
புரிந்து கொள்ள முயற்சிக்க ஆர்வம் இல்லை என்பதே நான் கண்ட உண்மை.

jpl
14-09-2007, 01:57 AM
மருதத் திணை

மருத திணை-வயலும் வயலும் சார்ந்த இடம்

பெரும்பொழுது-ஆறு பெரும் பொழுதும்
சிறுபொழுது-வைகறை(இரவு2யிலிருந்து6வரை)காலை(6யிலிருந்து10வரை)

கருப்பொருள்;
தெய்வம்-இந்திரன்
உயர்ந்தோர்- ஊரன்,மகிழ்நன்,கிழத்தி
தாழ்ந்தோர்-உழவர்,உழத்தியர்,கடையர்,கடைச்சியர்
பறவை-நாரை,அன்னம்,குருகு,தாரா
விலங்கு-எருமை,நீர் நாய்
ஊர்-பேரூர்,மூதூர்
நீர்-ஆறு,மனைக்கிணறு,பொய்கை
பூ-தாமரை,செங்கழுநீர்,குவளை
மரம்-காஞ்சி,வஞ்சி,மருதம்
உணவு-செந்நெல்,வெண்ணெல்
பறை-நெல்லரி பறை,மணமுழவு
யாழ்-மருத யாழ்
பண்-மருதப்பண்
தொழில்-செந்நெல்,வெண்ணெல் விளைத்தல்,திருவிழா அயர்தல்.

உரிப்பொருள்;ஊடலும் ஊடல் நிமித்தமும்.

நற்றிணையில் ஓரம்போகியார் உரிப்பொருளின் மீது மருத பாடலை எழுதியிருக்கிறார்.

முழவுமுகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவொழி களத்த பாவை போல
நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வௌவி
இன்றுதரு மகளிர் மென்தோள் பெறீஇயர்
சென்றீ-பெரும சிறக்கதின் பரத்தை!
பல்லோர் பழித்தல் நாணி,வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்பக்
கையிடை வைத்து மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் போல நனிபெரிது
உற்றநின் விழுமம் உவப்பென்
மற்றங் கூடும் மனைமடி துயிலே.


யானைக்கன்று கவளம் உண்ண வேண்டி,பாகன் குத்துக் கோலால்
குத்த,குத்துண்ட கன்று வெகுண்டு கவளத்தை தன்மீதே இறைத்துக் கொள்ளும்.அது போல ஊர்அலர்(பழிச்சொல்,தூற்றல்)தன் மீது விழுந்ததனால்,மார்ச்சனை முழவில் காய்ந்து போகும் வரை ஆடி பாவையாய் பாணனால் கொணரப்பட்ட பரத்தையை விட்டு இங்கு வந்தனையோ.நின் துயிலானது இன்னொரு நாளில் இங்கு நடக்கும்.விரைந்து செல்வாயாக,நின்னோடு நின் பரத்தையின் மென்தோளினைப் பற்றி சிறப்புறுவதாக.

இளசு
14-09-2007, 09:34 PM
இப்பொழுது முயன்று கற்று தெளிந்து வல்லவராகி விட்டோம்.
இதில் வருமானம் வருகின்றது.இலக்கியம் கற்றால்?
புரிந்து கொள்ள முயற்சிக்க ஆர்வம் இல்லை என்பதே நான் கண்ட உண்மை.

ஒத்துக்கொள்கிறேன் லதா..

நுகர்வோர் கலாச்சாரத்தின் ஒரே ஊடுபொருள் - பணம்!


ஆம்பல், மௌவல் என எழுதினால் புதிய வீச்சு என
அதிகப்பணம் கொடுப்பார்களானால், அதற்காக இத்தலைமுறை
மீண்டும் சங்க இலக்கியம் கற்கலாம்..அதுவன்றி வேறு ஊக்கம்
தென்படவில்லை..


நான் -

காடு தேடி ஈச்சம்பழம் பறிப்பதைவிட
கடையேறி பாலித்தீன் பைகளில் வாங்கும் வர்க்கம்!

காதுக்குள் வரும் பண்பலை வரிகளே
நான் நோகாமல் நோன்பிருக்கும் இலக்கிய ரசனை..

கடையோர மசால்வடைகளையே ருசியாக்கி பழகிவிட்டது..
உங்களைப்போல் யாரோ தினைமாவு தேனில் பிசைந்து ஊட்டவந்தாலும்
அதை ருசி, நன்மை என உணர மர(று)த்துவிட்ட ரசனை (ஏ)மாற்றக்காலம்..


மெல்லமெல்ல நல்ல மாற்றங்கள் வரவேண்டும்..

உங்கள் பதிவுகள் அந்த நல்ல பணியில்..

தொடருங்கள் லதா... நன்றி!

இளசு
14-09-2007, 09:42 PM
முழவுமுகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவொழி களத்த பாவை போல
நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வௌவி
இன்றுதரு மகளிர் மென்தோள் பெறீஇயர்
சென்றீ-பெரும சிறக்கதின் பரத்தை!
பல்லோர் பழித்தல் நாணி,வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்பக்
கையிடை வைத்து மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் போல நனிபெரிது
உற்றநின் விழுமம் உவப்பென்
மற்றங் கூடும் மனைமடி துயிலே.


கண்டிப்பின் நோக்கம் வேறு..
களிறுக்கன்று செய்தது வேறு..

தூற்றலின் தாக்கம் ஒன்று..
துணைவியின் பிணக்கு மற்றொன்று..

இன்னொருநாள் இங்கு துயிலலாமாம்!
இன்று இவன் எங்கு உறங்குவதாம்?

இரண்டுக்கும் இடையில்
ஒன்றுமில்லாமல் இன்றிவன்..!

ஊடல் நாடகத்தின் உச்சக்கட்டச் சுவை!

பரிமாறலுக்கு நன்றி லதா..

jpl
15-09-2007, 01:21 AM
நன்றி இளசு.
விமர்ச்சனமும் நல்ல இலக்கியத் தரத்தில்..
மனம் களிப் பேருவகை அடைகின்றது.

jpl
15-09-2007, 01:34 AM
முல்லைத் திணை

முல்லை-காடும் காடு சார்ந்த இடமும்.

பெரும் பொழுது-கார் காலம்(ஆவணி, புரட்டாசி)

சிறு பொழுது-மாலை(6 மணியிருந்து10 வரை)

கருப்பொருள்;
தெய்வம்-முருகன்
உயர்ந்தோர்-குறுபொறை நாடன்,தோன்றல்,மனைவி
தாழ்ந்தோர்-இடையர்,இடைச்சியர்,ஆயர்,ஆய்ச்சியர்
பறவை-காட்டுக் கோழி
விலங்கு-மான், முயல்
ஊர்-பாடி
நீர்-சுனை
பூ-முல்லை,தோன்றி,பிடவம்,கொன்றை
மரம்-கொன்றை,காயா,குருந்தம்
உணவு-வரகு,சாமை,முதிரை
பறை-ஏறுகோட்பறை
யாழ்-முல்லை யாழ்
பண்-சாதாரிப்பண்
தொழில்-வரகு,சாமை விளைத்தல்,களை கட்டல்,ஆநிரை மேய்தல்,ஏறு தழுவுதல்.

உரிப்பொருள்-இருத்தலும்,இருத்தல் நிமித்தமும்.

இதோ கலியில் நல்லாந்துவனாரின் முல்லைப் பாடல்;
பெற்றோர் அறியாமல் கூடி மகிழ்ந்த ஒருத்தி எதிர்பாராமல் அகப்பட்டுக் கொள்கிறாள்.யாரும் எதுவும் பேசவில்லை என்றாலும் நாணம் மீதூர காட்டில் சென்று ஒளிந்தாள்.திருமணம் உறுதியாற்று என்று தோழி கூறி அழைத்து வருகிறாள்.

தோழி!நாம் காணாமை உண்ட கடுங்கள்ளை,மெய்கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக்,
கரந்ததூஉம் கையொ கோட்பட்டாம் -நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தோர்
முல்லை ஒரு கண்ணியும்,மெல்லுயால்!
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன;தோழி
................ ...............
..........................
........ .............. .........என்
சாந்துளர் கூழை நிலம் தாழ்ந்த
பூங்கரை நீலம் தழீஇத் தளர்பு ஒல்கிப்,
பாங்கரும் கானத்து ஒளித்தேன்...
. ......... ................. .....
.......... ................
அவன் கண் அடைசூழ்ந்தார் நின்னை;அகன்கண்
வரைப்பில் மணல்தாழப பெய்து,திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப;

அவன் தொடுத்து தந்த முல்லைமலரினை ஆவலுடன் தலையில் வைத்துக் கொண்டாள்.செவிலித்தாய் தலை வார பிரித்த பொழுது அப்பூ விழுந்து காட்டிக் கொடுத்தத்து .நீல வண்ண ஆடை தளர்ந்து விழ நாணத்தால் காட்டில் ஒளிந்துக் கொண்டாள்.
தோழி அவளிடம் சென்று அவனுக்கே உன்னை திருமணம் செய்ய முற்ற்த்தில் மணல் பரப்பி அணி செய்கின்றனர் வா என்று அழைத்துச் செல்கிறாள்.

முல்லைத் திணைக்குரிய கருப்பொருளை உணர்ந்து படித்தால் இனிய சுவை விளங்கும்.

ஓவியன்
15-09-2007, 06:21 AM
பாடசாலை பாட விதானங்களில் இந்த விடயங்கள் வந்த போது ஊன்றிக் கவனிக்கவில்லை, ஆனால் இன்று, இப்போது கவிதைகள் மேல் ஆர்வம் வந்த பின் இவ்வாறான விடயங்களை ஓடித் தேடச் சொல்கிறது மனசு.........

சொல்லித் தர சிறந்த ஆசான்களிருக்கையில், கற்றுக்கொள்ள கசக்குமா என்ன.....???

மிக்க நன்றிகள் சகோதரி! - தொடரட்டும் உங்கள் பணி.

அமரன்
15-09-2007, 10:10 AM
நன்றி இளசு.சங்கப் பாடலின் சுவைஞர்கள் அருகி வருகின்றார்கள்.
பணத்திற்கு பின் ஓடும் இந்நாளில் மெல்ல மெல்ல பழம் இலக்கியச் சுவையை இழக்கின்றோம்.
அனைவரின் கூற்று புரியவில்லை என்பது தான்.
20 வருடங்களுக்கு முன் கணினி என்பதே இல்லை.
இப்பொழுது முயன்று கற்று தெளிந்து வல்லவராகி விட்டோம்.
இதில் வருமானம் வருகின்றது.இலக்கியம் கற்றால்?
புரிந்து கொள்ள முயற்சிக்க ஆர்வம் இல்லை என்பதே நான் கண்ட உண்மை.

லதா அக்கா (இவ்வாறு அழைக்கலாம் அல்லவா?). நீங்கள் சொல்லும் இந்த விடயம் கசப்பான உண்மை. எனக்கு தமிழில் ஈர்ப்பு ஏற்பட்ட காலத்தில் இருந்து (குறுகிய காலம்தான்) சங்க இலக்கியச்சுவை உணர நினைத்தேன். வாழும் தேசத்தில் அதற்கான வாய்ப்பின் நிகழ்தகவு எனக்கு எதிராகவே உள்ளது. அப்படியான வரட்சிக்காலத்தில் சுனையாக உங்கள் இந்தத்தொடர். இதுபற்றி பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு இலக்கிய அறிவு இல்லை. ஆனால் சந்தேக வினாக்களை எழுப்பும் அளவுக்கு ஆர்வம் இருக்கிறது...எனது சந்தேகங்கள் இலக்கியத்தின் ஆரம்பப்படிக்கட்டிலிருந்தே தொடங்கும்..அவற்றை தீர்ர்க உங்கள், சக இலக்கிய அறிவுநிறை உறவுகள் உதவியை நாடுகின்றேன்.

அமரன்
15-09-2007, 10:28 AM
அகத்திணை,புறத்திணை என இரு திணைகள் புரிந்தது. அதில் ஒரு சிறுசந்தேகம்..
அகத்திணையை நீங்கள் வரிசைப்படுத்திய அடுக்கொழுங்கிலா எமது இலக்கிய பாதை உள்ளது.?

குறிஞ்சித்திணையில் குறிப்பிடப்படும் யாழ் என்பது ஒரு இசைக்கருவி என்றே விளங்கிக்கொண்டேன். அதைத்தொடரும் பண்ணில்லும் ஒரு சிறு சந்தேகம்.
இசையை திறம், பண் என இரு வகையாகப் பிரிக்கலாம். ஏழுநரம்புகளின் மீட்டலில் உருவாவது பண் என்றும் அதற்குக் குறைவான நரம்பு மீட்டலில் பிறப்பது திறம் எனவும் சொல்கின்றோம். ஒளியில் ஏழு நிறங்கள் போல் ஒலியின் ஏழு வகைகளையே ஏழு நரம்புகள் என்கின்றோம். தமிழர் இசையில் ஆதிகாலத்தில் பண் எனும்போது அந்த ஏழு நரம்புகளுக்கும் குரல், துத்தம், கைக்கைளை, உழை, இளி, விளரி, தாரம் என பயன்படுத்த ஒலிக்குறிப்புகளே கர்னாடக இசைப்பிரியர்களால் முறையே ஸ ரி க ம ப த நி என கிரமப்படுத்தப்பட்டன என்று படித்திருகின்றேன்..இது உண்மையா...? (ஆபத்து திரியில் உங்கள் பதில்கண்டேன்)

jpl
15-09-2007, 01:58 PM
அகத்திணையை நீங்கள் வரிசைப்படுத்திய அடுக்கொழுங்கிலா எமது இலக்கிய பாதை உள்ளது.?
அகம் பற்றி முதலில் பார்போம்.
அகத்திணை 7 வகைகளாம்.
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
கைக்கிளை-ஒரு தலைக் காதல்
பெருங்கிளை-பொருந்தா காமம்

இவை தானே சந்தேகம் அமரன்?
இது இலக்கியப் பாதை என்பதை விட சங்க காலத்தில் வாழ்வியல் நெறியாக இருந்திருக்கின்றது.
மண்வாகைப் பொறுத்தே மனிதர்களின் வாழ்க்கை முறை அமைந்திருக்கின்றது.
தமிழ் பரப்பு ஐவகை நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு,அதன் வாழ்க்கை முறையே இலக்கியமாக்கப்பட்டிருக்கின்றது.
உதாரணத்திற்கு நெடுநெல்வாடையில் மதுரையின் ஒரு நாள் நிகழ்வு அற்புதமாக படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றது.
முல்லைப்பாட்டில் தலைவனைப் பிரிந்த தலைவியின் துன்பம் தீர்ப்பதற்காக
விரிச்சிக் கேட்கச் சென்ற முதுபெண்டிரின் செயல்(கோவிலுக்குச் சென்று நற்சொல் கேட்டல்).
என் தந்தையாரின் பணி நிமித்தம் பல ஊர்களில் வசிக்கும் வாய்ப்பு கிட்டியது.அவ்வகையில் நானறிந்தது இப்பொழுதும் கூட அந்தந்த நிலப்பகுதியில் வாழும் தற்காலத்திய மாந்தர்கள் இவ்வைந்திணை அடிப்படை கோட்பாட்டிலியே வாழ்க்கையை நெறிபடுத்துக்கின்றனர்.
சங்க கால ஊர்ப் பெயரினை நாம் இன்றும் கூட பயன்படுத்துகின்றோம்.
நெடு நல் வாடையையும்,முல்லைப் பாட்டினையும் விளக்க உரையுடன் பின்னர் பார்ப்போம்.

jpl
15-09-2007, 02:13 PM
ஸ ரி க ம ப த நி என கிரமப்படுத்தப்பட்டன.இது உண்மை. சில ராகங்களை புரிந்து கொள்வேன்.இசை ஞானம் குறைவே எனக்கு அமரன். எனவே இசை வல்லுனர்கள் பதிலளிக்க வேண்டுகின்றேன்.இசையுடன் இயந்த வாழ்வை வாழ்ந்திருக்கின்றனர் பழம் தமிழர்.இதற்கு சங்க நூல்களில் உதாரணம் நிரம்ப காணக் கிடைக்கின்றது.இது ஒரு தனி தலைப்பிட்டு நனி களிகூரலாம்.(ஆபத்து திரியில் உங்கள் பதில்கண்டேன்.கண்டதின் பலன் அமரன்?)

இளசு
15-09-2007, 09:10 PM
அமரனின் ஆர்வமான கேள்விகள் -
ஆசான்களுக்கு விலைமதிப்பில்லா பரிசுகள்..
இந்த அமரன் -லதா அளவலாவலால் நானும் பயன்பெறுகிறேன்..

நன்றிகள் - இருவருக்கும்!


[COLOR="Red"][B]மண்வாகைப் பொறுத்தே மனிதர்களின் வாழ்க்கை முறை அமைந்திருக்கின்றது.
தமிழ் பரப்பு ஐவகை நிலப்பரப்பாகப் பிரிக்கப்பட்டு,அதன் வாழ்க்கை முறையே இலக்கியமாக்கப்பட்டிருக்கின்றது.
.......இப்பொழுதும் கூட அந்தந்த நிலப்பகுதியில் வாழும் தற்காலத்திய மாந்தர்கள் இவ்வைந்திணை அடிப்படை கோட்பாட்டிலியே வாழ்க்கையை நெறிபடுத்துக்கின்றனர்.
.

அன்பு லதா

ராம்பாலின் இப்பதிவைப் படியுங்கள்..
உங்கள் கருத்தை வழிமொழியும் பதிவு அது!
நன்றி
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=252701#post252701

அமரன்
15-09-2007, 10:45 PM
.(ஆபத்து திரியில் உங்கள் பதில்கண்டேன்.கண்டதின் பலன் அமரன்?)
என் வரையில் மன்றத்தில் ஒரு சிலர் பதிவுகள் படித்ததும் பிடித்துவிடும். உடனடி நட்பும் கிடைத்து விடும். நிகழ்கால நடப்புகள் பல அறியக்கிடைக்கும்.

பலர் பதிவுகளில் நடப்புக்காலம் தாண்டி கடந்தகாலங்களையும் நாம் கடக்கபோகின்ற காலங்களையும் அறிந்துகொள்ளலாம் என்று மனம் உய்த்தறியும். ஆனால் அவர்களை நெருங்கி அவர்கள் அறிவொளியை நாம் பெறுவது என்பது கடினமானது. நீங்கள் இரண்டாவது ரகமாக எனக்குத்தெரிந்தீர்கள்.

உங்களால் ஏற்றப்பட்ட இலக்கணமா இலக்கியமா திரியை படித்ததோடு சரி. சந்தேகம் எதையும் கேட்கவில்லை.அதன் காரணம் இதுதான்.

ஆபத்து திரியில் உங்கள் பதில் படித்ததும் இதயசுத்தியுடன் நாடினால் அறிவொளியை உங்களிடம் இருந்து இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம் என உணர்ந்தேன். அதன்பின்னரே இங்கே சந்தேகங்களை கேட்கத்தொடங்கினேன். தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி அக்கா.

jpl
16-09-2007, 12:38 AM
பலர் பதிவுகளில் நடப்புக்காலம் தாண்டி கடந்தகாலங்களையும் நாம் கடக்கபோகின்ற காலங்களையும் அறிந்துகொள்ளலாம் என்று மனம் உய்த்தறியும். ஆனால் அவர்களை நெருங்கி அவர்கள் அறிவொளியை நாம் பெறுவது என்பது கடினமானது. நீங்கள் இரண்டாவது ரகமாக எனக்குத்தெரிந்தீர்கள்
அமரன் நான் சாதாரணமாவள் தான்.எளிதில் அனைவருடன் பழகும் இயல்பினள்.
நான் அறிந்து தானிருக்கின்றேன்.இக்காலச் சூழலில் இம்மாதிரியான விஷயங்கள் கொஞ்சம்(அல்ல நிறையவே)கடினமான பொருள்(சப்ஜெக்ட்)
என்று.அதனால் தான் ராஜாவின் ரவுசு பக்கத்தில் பின்னூட்டம் இடுகின்றேன்.மற்றவற்றை படித்து பின்னூட்டமிட இயலா வண்ணம் பணிச்சுமை.
நான் கற்றதை,பெற்றதை பகிர்ந்து கொள்வதில் எவ்வித தயக்கமும் கொள்வதில்லை.சந்தேகம் கேட்க கேட்க கேட்டவர்கள் பயன் பெறுகின்றார்களோ என்னவோ,பதிலளிப்பவர்களின் அறிவு தீட்டப்படுகின்றது.
கேளுங்கள் அமரன் என் சிற்றவிற்கு தெரிந்ததை எட்டியதை இயம்புகிறேன்.

jpl
16-09-2007, 12:50 AM
நெய்தற்திணை

நெய்தல்-கடலும் கடல் சார்ந்த இடமும்.

பெரும் பொழுது-ஆறு பெரும் பொழுதும்
சிறு பொழுது-எற்பாடு(மதியம் 2மணியிலிருந்து6மணி வரை)
எல்+பாடு எல்-கதிரவன் பாடு-சாயும் நேரம்.(மறையும் நேரம்)

கருப்பொருள்;
தெய்வம்-வருணன்
உயர்ந்தோர்-சேர்ப்பன்,பலப்பன்,பரப்பன்,துறைவன்,பரத்தி,நுளைச்சி
தாழ்ந்தோர்-நுளையர்,நுழைச்சியர்,பரதவர்,அளவர்,அளத்தியர்
பறவை-கடற்காக்கை,அன்றில்
விலங்கு-சுறா,முதலை
ஊர்-பாக்கம்,பட்டினம்
நீர்-மணற்கேணி,உவர்கழி
பூ-நெய்தல்,தாழை,புன்னை,அடம்பு
மரம்-சுண்டல்,புன்னை,ஞாழல்
உணவு-மீன்,மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருள்கள்
பறை-மீன் கோட்பறை,நாவாய்ப்பறை
யாழ்-விளரியாழ்
பண்-செவ்வழிப்பண்
தொழில்-மீன் பிடித்தல்,மீன் விற்றல்,உப்பு விளைத்து விற்றல்,மீன் உலர்த்தல்,அதனை உண்ண வரும் பறவைகளை விரட்டல்.

உரிபொருள்-இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

ஞாயிறுஞான்று கதிர்மழுங் கின்றே
எல்லியும்,பூவீகொடியிற் புலம்படைந்தன்றே
வாவலும் வயின்தொறும் பறக்குஞ்சேவலும்
நகைவாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்
ஆயாக் காதலோடு அதர்ப்படத் தெளித்தோர்
கூறிய பருவங் கழிந்தன்று பாரிய
பராரை வேம்பின் படுசினை யிருந்த
குராஇல் கூகையும் இராஅ இசக்கும்
ஆனா நோயடவருந்தி யின்னுந்
தமியேன் கேட்குவென் கொல்லோ
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே.

என்கிறார் கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார் நற்றிணையில்.
கிடங்கில்- தற்போதைய திண்டிவனம்

தலைவி தோழியை நோக்கி,தோழீ சூரியனும் சாய்ந்து கதிர்கள் மழுங்கின.இதனால் பூவுர்த்த கொடியினைப்போல் இரவு பொழுது தனித்து வருத்தமுற்றது.வௌவால் எங்கும் பறந்து கொண்டிருக்கின்றன.நகைக்குந்தோறும் ஆந்தைச் சேவல் தன் பெட்டையை அழைக்கிறது.
காதலர் வருவதாக கூறிய பருவமும் கழிந்து கொண்டே உள்ளது.பட்டு போன வேம்பின் மீது குராஅல்(கபில நிறம்)கூகை இரவெல்லாம் குழறிக்கொண்டே உள்ளது.பருத்த அடியினையுடைய பணையின் மடலிலிருந்து துணை விளித்துக் கூவும் அன்றிற் பறவையின் குரலை எங்ஙணம் தனிமையளாக கேட்டிருப்பேன் என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள்.

தலைவி,தலைவனோடு கூடியிருந்த காலத்து மாலையும்,இரவும் இனிதாயிருந்தைப்போன்று இப்பொழுது இல்லை என்பதை குறிப்பால் உணர்த்துகிறாள்.
ஆந்தை தன் துணை விரும்பிக் கூப்பிடுதலைப் போல தலைவன் அனபாய் இல்லை என்று வருந்துகிறாள்.

இளசு
16-09-2007, 09:18 AM
கடல்..கடற்புரம்!

உவர்ப்பும் குளிரும் அள்ளிவீசும் காற்று முகத்தில் அறைகிறது..

எந்த மனநிலையில் கடற்கரைக்குப் போனாலும்
அந்த மனநிலையைப் பன்மடங்காக்கும் கடல்!

ஆனாலும் பிரிவை, சோகத்தை, ஆற்றாமையை மிக மிக ஆழமாக்க
உதவுவது கடற்புர பின்புலம்..!

கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்... (அல்லது)
காலமெல்லாம் வாரீரோ

என நாயகன் பாட கடற்கரைக்குப் போவதன் சூட்சுமம் புரிகிறது..

புன்னை வனத்தினில் உன்னை முகம்தொட்டு
-என மாமல்லபுரத்தில் நரசிம்மன் சிவகாமியிடம் சொல்லும்போதே

அன்றிலாய் இன்னோர் இரவில்
என்னை மறந்ததேன் என அவள் பாடப்போவது புரிகிறது!

பல நுண்ணிய உணர்வுகளை எழுப்பிய நெய்தல் விவரிப்புக்கு
நன்றி லதா..

பொழுது - கொடி..
சூரியன் - மலர்..
இரவு = மலர் உதிர்ந்த கொடி!

என்ன கற்பனை... எத்தனை காட்சிச்சுவை!

செம்மீன் நாவலின் கருத்தம்மா சோகம்
படிப்பவர் மனதில் இந்த அளவுக்குத் தைக்கவும்
கடற்கரை பின்புலம்தான் காரணமோ?

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8703

jpl
16-09-2007, 02:16 PM
மிக நன்றே இளசு உந்தன் இலக்கியப்பார்வை...
மென்மேலும் எழுத தூண்டுகின்றது...

jpl
17-09-2007, 12:17 AM
பாலைத் திணை

பாலை என்பது வேனிற் காலத்தில் குறிஞ்சி,முல்லை வறண்ட திரிபே பாலை எனப்படும்.(உடன்குடி அருகில் 12 மைல் சுற்றளவிற்கு உள்ள தேரிகாடு என்னும் மணற்பாங்கான பகுதி தமிழகத்திலுள்ள பாலைவனம் எனலாம்.அப்பாலைவனச் சோலைகளில் அய்யனார் கோவில்கள் உள்ளது.)

பெரும்பொழுது-இளவேனிற்காலம்(சித்திரை,வைகாசி)
முதுவேனிற்காலம்(ஆனி,ஆடி)
பின்பனிக் காலம்(மாசி,பங்குனி)
சிறுபொழுது-நண்பகல்(பகல்10மணியிலிருந்து 2 மணிவரை)

கருப்பொருள்கள்;
தெய்வம்-கொற்றவை
உயர்ந்தோர்-விடலை,காளை,மீளி,கன்னி,எயிற்றி
தாழ்ந்தோர்-எயினர்,எயிற்றியர்,மறவர்,மறத்தியர்
பறவை-புறா,பருந்து,கழுகு,எருமை
விலங்கு-செந்நாய்,
ஊர்-குறும்பு
நீர்-வற்றின சுனை,வற்றின கிணறு
பூ-குரா மலர்,மரா மலர்,பாதிரி மலர்
மரம்-உழிசை,பாலை,ஓமை,இருப்பை
உணவு-வழிப்பறி செய்தனவும்,ஊர் புகுந்து கவர்ந்தனவும்
பறை-பூசல் பறை,ஊரெறி பறை,நிறை கோட்பறை
யாழ்-பாலை யாழ்
பண்-பஞ்சுரம்
தொழில்-நிரைகவர்தல்,வழிப்பறி செய்தல்,ஊர் புகுந்து சூறையாடுதல்.

உரிப்பொருள்;பிரிதலும்,பிரிதல் நிமித்தமும.

பொருள் வினைவயின் தலைவியைப் பிரிந்த தலைவனின் நிலையை தேய்புரிப் பழங்கயிற்றினார் நற்றிணையில் பாவால் படம் பிடிக்கிறார்.

புறம் தாழ்வு இருண்ட கூந்தல் போதின்
நிறம்பெறும் ஈர்இதழ்ப் பொழிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண் டோன்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்க்கஞ் செல்வாம் என்னுஞ்
செய்வினை முடியாது எவ்வஞ் செய்தல்
எய்யா மையோடு இளிவுதலைத் தருமென
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏத்து மருப்பின் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கோல்என் வருந்திய உடம்பே.

தலைவியின் நினைப்பால் துயருற்று தலைவனின் நெஞ்சம் தவிக்கிறது.அதே நேரத்தில் பொருள் தேட வந்த வினை முடியாமல் திரும்ப கடமை உணர்வு தடுக்கிறது.காதல் நெஞ்சத்தையும் கடமை நெஞ்சத்தையும் இரு வலிய யானைக்கு ஒப்பீடுகிறார் புலவர்.இரு யானையும் பற்றி இழுக்கும் தேய்ந்த பழங்கயிறு போல என் உடல் வருந்துகிறது என்று காதலா கடமையா என்று அருமையான உவமையோடு உரைக்கிறார்.

இளசு
17-09-2007, 07:02 PM
பாலை...!

இன்று பாலையோ, பனிமலையோ
இனிய மனைவியைப் பொருள்தேடும் பொருட்டுப் பிரிந்து
ஈட்டவேண்டிய பொருளின் எல்லைக்கோடு

குதிரை முன் வாய்க்கெட்டா தூரத்தில் கட்டி
தொங்கவிடப்பட்ட காரட் துண்டு போல்
எப்போதும் கண்ணெதிரே ஆனால் எட்டாத் தூரத்திலே...

இரு வலுவான யானைகள் இருபக்கம் இழுக்க
இடையில் நொறுபடும் இற்றக் கயிறாய்...
எண்ணற்ற நம் மக்கள் படும் வேதனை!
என்றோ சொன்னதோ நற்றிணை!!

நவீனம்..பின்நவீனம் எல்லாமும்
பழசில் புதைந்திருக்கக்கூடும்..என
எண்ணவைக்கும் நல்ல தொடர்..

நன்றி லதா...

jpl
18-09-2007, 03:35 AM
வாழ்வியலும் திணையும்-சென்னை

ஐவகை திணையின் நிலத்தினைப் பற்றி அறிந்தோம்.
ஐந்திணையும் ஒருங்கே அமைந்தது நம் சிங்கார(?)சென்னை.

குறிஞ்சி திணை-பரங்கி மலை என்றழக்கப்படும் மவுண்ட் செயின்ட் தாமஸ் கிண்டியின் அருகில் சிறு சிறு குன்றுகள் உள்ளது. இங்குள்ள கிறித்துவ தேவாலயம் புகழ் பெற்றது.ஆனால் குறிஞ்சி திணைவாசிகளெல்லாம் இங்கில்லை.

முல்லை திணை-தெற்காசியாவிலேயே பெரியதான,இயற்கையாகவே அமைந்த வண்டலூர் தேசிய விலங்கியல் பூங்கா சற்று மலைபாங்கானதும்,அடர்ந்த வனமாகும். இப்பொழுது பறவைகள் சரணாலயமும் உருவாகியிருக்கிறது.இத்திணை மக்களின் தொழிலை இப்பகுதி மக்கள் செய்து வருகிறார்கள்.அண்ணா பல்கலை கழகம்,ராஜ் பவன்,சிறுவர் பூங்கா போன்ற பகுதிகள் மரங்களடர்ந்தாகும்.

மருத திணை-சென்னை நகரினை ஆறுகளும்,ஏரிகளும்,கால்வாயும்,
ஒரு காலத்தில் வளப்படுத்தின.ஆதாரம் போயஸ் கார்டன்,கற்பகம் தோட்டம்,பார்டர் தோட்டம்,அம்மணி அம்மன் தோட்டம் என்று தோட்டமும் தோப்புகளும் ஏராளம்.இப்பொழுது சென்னையைச் சார்ந்த சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் தொழிலும்,பண்ணைகளும்
உண்டு.காய்கறியும்,கீரையும் முக்கிய பயிர் வகைகள்.முந்திரி மற்றும் பழங்கள் சாகுபடியும் உண்டு.

நெய்தல் திணை-இதை பற்றி அதிகம் கூற வேண்டாம்.உலகிலேயே 2வது பெரிய அழகிய மெரினா என்னும் கடற்கரையை தன்னகத்தேக் கொண்டது.மீன் பிடித் தொழில் சிறந்து விளங்குகிறது இங்கு.எண்ணூர்,இராயபுரம்,காசிமேடு,இராமாபுரம் போன்ற மீன் பிடி தலங்களும், பெரிய துறைமுகமும் உள்ளது.

பாலைத் திணை-புழுதிமண் பறக்க,வறண்ட பகுதிகள் சென்னையைச் சுற்றியுள்ளது.கோடைகாலத்தில் அனைத்து பகுதியும் பாலைதான்.இத்திணையின் தொழிலும்(வழிப்பறிக்கொள்ளை,ஊர் புகுந்து சூறையாடல்)இங்கு அமோகம் தான்.

இளசு
18-09-2007, 03:36 AM
அலைபாயும் கடற்புர பின்புலத்தில்
அரை ஆயுள் சிறைவாசம் முடிந்து மீண்டவனின்
ஆற்றாமை சுயதரிசனம்
அமரனின் கைவண்ணத்தில் காண

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12325

jpl
18-09-2007, 03:44 AM
நவீனம்..பின்நவீனம் எல்லாமும்
பழசில் புதைந்திருக்கக்கூடும்..என
எண்ணவைக்கும் நல்ல தொடர்..
உண்மையில் சங்கத்தை மீறிய கற்பனை உண்டா என்பதில்
எனக்கு ஐயமே இளசு.
மிக்க நன்றி இளசு.நல்ல சுவைஞர் இருந்தால் மிக்க ஆவலுடன்
எழுத தோன்றுகிறது.

இளசு
18-09-2007, 04:02 AM
உண்மையில் சங்கத்தை மீறிய கற்பனை உண்டா என்பதில்
எனக்கு ஐயமே இளசு.
மிக்க நன்றி இளசு.நல்ல சுவைஞர் இருந்தால் மிக்க ஆவலுடன்
எழுத தோன்றுகிறது.

அன்பு லதா..

சுவைத்த நாங்களல்லவா உங்களுக்கு
என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்!

உங்கள் பெயரிலேயே வெற்றி, மலர், கொடி உள்ளதே!

சங்கமலர்களை திணைத்திரி எனும் கொடியில் பூக்கவைத்து
மன்றத்தில் வெற்றி மணம் வீச வைத்த உங்களுக்கு
நன்றி - வெற்றிமலர்க்கொடி அவர்களே!

ஆதவா
18-09-2007, 05:49 AM
சிறிது காலம் கொடுங்கள். படித்துவிடுகிறேன்,...

இங்கே வந்தவர்களும் பதிந்தவர்களும் குறைவாக இருக்கிறார்களே!! மக்களே!! வாருங்கள்...

இளசு
19-09-2007, 06:51 AM
ஐந்திணைகளை சென்னைக்குப் பொருத்திப்பார்த்தது அருமை லதா..

(ஆல்தோட்டம், அமரன் தோட்டமும் இதில் சேர்க்கலாம்தானே..?)

இப்படிக் கலவையான திணைகள் கொண்ட சென்னைக்கு
நவீன இலக்கியமாய் - கானாப் பாடல்கள் என எடுத்துக்கொள்ளலாமா?

சென்னை மாநகரம் - அது
சிறப்பான நகரம்!

jpl
19-09-2007, 07:13 AM
ஐந்திணைகளை சென்னைக்குப் பொருத்திப்பார்த்தது அருமை லதா..

(ஆல்தோட்டம், அமரன் தோட்டமும் இதில் சேர்க்கலாம்தானே..?)

இப்படிக் கலவையான திணைகள் கொண்ட சென்னைக்கு
நவீன இலக்கியமாய் - கானாப் பாடல்கள் என எடுத்துக்கொள்ளலாமா?

சென்னை மாநகரம் - அது
சிறப்பான நகரம்!
அதுவும் சரிதான் இளசு.
சென்னையின் இலக்கியம் கானாப் பாடல்கள் தான்.
அதுவும் கல்லூரி மாணவர்கள் பஸ்ஸில் தாளம் தட்டி பாடுவார்கள்
பாருங்கள்..
கேட்க காது இரண்டு போதாது.
அதையும் என்பாணியில் படைத்திருக்கின்றேன்..

இளசு
21-09-2007, 05:06 AM
.
சென்னையின் இலக்கியம் கானாப் பாடல்கள் தான்.
அதுவும் கல்லூரி மாணவர்கள் பஸ்ஸில் தாளம் தட்டி பாடுவார்கள்
பாருங்கள்..
கேட்க காது இரண்டு போதாது.
அதையும் என்பாணியில் படைத்திருக்கின்றேன்..

லதா..

இங்கே மன்றத்தில் இடுங்கள்..

படிக்க ( பாடிப்பார்க்க) ஆவலுடன்..

-இளசு

ஓவியன்
21-09-2007, 10:16 AM
அதுவும் சரிதான் இளசு.
சென்னையின் இலக்கியம் கானாப் பாடல்கள் தான்.
அதுவும் கல்லூரி மாணவர்கள் பஸ்ஸில் தாளம் தட்டி பாடுவார்கள்
பாருங்கள்..
கேட்க காது இரண்டு போதாது.
அதையும் என்பாணியில் படைத்திருக்கின்றேன்..

ஆகா ஐந்திணைகள் கானாப் பாடல்கள் வரை முன்னேறிவிட்டதா...?
படிக்காது விட்டுப் போன பதிவுகளை இன்று படிக்க முடிந்தது...
அறிந்தேன் பல...
அத்தனையும் தேன்...!

பாராட்டுக்கள் லதா அக்காவுக்கும் இளசு அண்ணாக்கும் அசத்தும் அமரனுக்கும்....

இலக்கியன்
21-09-2007, 10:29 AM
தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் எழுந்த காலம் சங்ககாலம் இந்தக்காலப்பகுதி தமிழர்கள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலம் ஜவகை நிலங்களும் அதன் அமைப்புக்கு ஏற்ப, அதற்கான தெய்வ வழிபாடுகளும் அகம் புறம் என்கின்ற ஒழுக்கங்களும் அந்தக்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் பற்றியும் அழகான பதிவுகள் தொடரட்டும்

jpl
22-09-2007, 12:22 AM
நன்றி இளசு ஓவியன்.
ஐந்தினைகள் பற்றிய இலக்கணம் முடிந்த்தது.
அமரனுக்காக மீண்டுமொரு விளக்கம் எட்டுத்தொகையாக புதுத்திரியில்.

கஜினி
11-10-2007, 12:54 PM
ஐந்திணைகள் பற்றிய அலசல்கள் அனைத்தும் அருமை லதா அவர்களே. தொடர்ந்து படித்து பயன்பெறுகிறேன். நன்றி.

thangasi
07-03-2008, 05:30 PM
நண்பர்களே எமக்கு இத்தளம் புதியது; இதன் நடைமுறை புதியது. இங்கு 'வெற்றிமலர்க்கொடி' லதா அவர்களின் ஐந்திணை விளக்கமும் அதற்கு திரு இளசு அவர்களின் பின்னூட்டங்களும் காணும் போதும் எவ்வளவு விசயங்களை நாம் இழந்துள்ளோம், இழந்துகொண்டுள்ளோம் என்ற நிதர்சனம் முகத்தில் அடிக்கிறது.

இலக்கியம் படித்தால் 'பணம்' கிடைக்காது என்பதற்காக மட்டும் இக்கால தமிழர்கள் அதில் ஆர்வம் இல்லாமல் இருக்கவில்லை. இலக்கியத்தை எடுத்தியம்பவும், பரிமாறிக் கொள்ளவும் ஆள் இங்கு குறைவு என்பதும் உண்மையே.

நல்ல பதிவுகளுக்கு நன்றி லதா, இளசு அவர்களே...

இளசு
17-03-2008, 09:57 PM
தங்கசி..

உங்கள் பாராட்டுக்கு முழு உரிமையாளர் ஜெபிஎல் அவர்கள்தாம்..

அவர் வந்து மீண்டும் மன்றப் பதிவுகளைத் தொடரும் நாளுக்காய்க் காத்திருப்போம்!

jpl
07-05-2013, 02:10 PM
தங்கசி..

உங்கள் பாராட்டுக்கு முழு உரிமையாளர் ஜெபிஎல் அவர்கள்தாம்..

அவர் வந்து மீண்டும் மன்றப் பதிவுகளைத் தொடரும் நாளுக்காய்க் காத்திருப்போம்!

மிக தாமதமாக வந்துவிட்டேன் இளசு


நண்பர்களே எமக்கு இத்தளம் புதியது; இதன் நடைமுறை புதியது. இங்கு 'வெற்றிமலர்க்கொடி' லதா அவர்களின் ஐந்திணை விளக்கமும் அதற்கு திரு இளசு அவர்களின் பின்னூட்டங்களும் காணும் போதும் எவ்வளவு விசயங்களை நாம் இழந்துள்ளோம், இழந்துகொண்டுள்ளோம் என்ற நிதர்சனம் முகத்தில் அடிக்கிறது.

இலக்கியம் படித்தால் 'பணம்' கிடைக்காது என்பதற்காக மட்டும் இக்கால தமிழர்கள் அதில் ஆர்வம் இல்லாமல் இருக்கவில்லை. இலக்கியத்தை எடுத்தியம்பவும், பரிமாறிக் கொள்ளவும் ஆள் இங்கு குறைவு என்பதும் உண்மையே.

நல்ல பதிவுகளுக்கு நன்றி லதா, இளசு அவர்களே...

நன்றி தங்கஸி....