PDA

View Full Version : வளர்த்த கடா..!



அமரன்
12-09-2007, 12:05 PM
காயப்போட்ட வடகமும் உடுப்பும் எடுத்து யாரும் ஓடவில்லை. பேணிகள் தலை நிமிர்த்தவில்லை; கோணிகள் தலைகளில் கவிழ்க்கப்படவில்லை. கொல்லைப்புற விறகுகட்டு அடுக்களைக்கு இடம்பெயரவில்லை. வீட்டுச்சுவரில் ஈரஓவியங்கள் வரையப்படவில்லை. ஆனாலும் ஜேர்மன் தேசத்துடோர்முன்ட் நகர வானுயர்ந்த கட்டடத்தின் பதினெட்டாவது மாடியில் அவன் ஊரின் மண் கமகமகத்தது. அவன் தர்மேந்திரா. சுருக்கமாக தனு. சுவிஸ் பிரஜா உரிமை பெற்ற தமிழன். தற்போது ஜெர்மனில் சித்தி வீட்டில்சொந்த வேலையாக..

"சொந்தவீட்டின் தரை ஈரம் உணர முடியாதவாறு சாக்குகளும், அரிப்பெடுத்தகாலின் சரியான இடத்தில் சொறிய முடியாதவாறு சாக்ஸுகளுமாக என்ன வாழ்க்கை இது? ஆமா..இவ்வளவு உயரத்தில் இருக்கிறீங்களே...!. கரண்டு இல்லை என்றால் எப்படி தெருவுக்குப் போவீர்கள்? எப்படி வீட்டுக்குள் நுழைவீர்கள்? கால் வலித்து வருத்தம் வராதா? எப்போது இப்படிக் குளிருமா?" அடுக்கு மாடிவீடு பற்றி அடுக்கடுக்கான கேள்விகள் பெரியவரிடமிருந்து வந்தவண்ணம் இருந்தன. பெரியவர் தனுவின் வருங்கால மாமனார். ஐந்து பிள்ளைகளின் தந்தை.

பொதுவாக கிராமத்து மனிதர்களின் எவர்கிறீன் ஹீரோ புரட்சித்தலைவராகத்தன் இருக்கும். அதிலும் தனுவின் ஊர்க்காரங்க தலைவரின் வெறியர்கள். ஆயிரத்தில் ஒருவன் உட்பட்ட பல திரைச்சித்திரங்களிலும் நிஜத்திலும் அவர்கள் ஆதர்சநாயகனின் வழிபற்றி கேள்விகள் கேட்பதில் சளைக்காதவர்கள். இவங்களுடன் யாரும் பேசிட்டிருந்தால் நடிகர்களுக்கு கொடுக்கும் டாக்டர்பட்டத்தை இவர்களுக்கு கொடுக்கலாம் என கண்டிப்பாக நினைப்பார்கள். . "இங்கே கரன்ட் கட்டாவதில்லை" முன்னெச்சரிக்கையுடன் பதிலளித்துவிட்டு அடுத்தகணைக்காகக் காத்திருந்தான்.

சித்தியால் அணைத்து வைக்கப்பட்ட நகரத்து புகைக்கூண்டு தனுவுக்கு உதவ முன்வந்தது. "உங்க தாத்தா வளர்த்த ஆட்டு இறைச்சி குழம்பில் கொதிக்கும் போது வத்தலாக்கிய உங்க பாட்டியின் கைப்பக்குவம் நச்சென்று நாசியில் அடிக்குது" சப்புக்கொட்டிய பெரிசின் அடுத்த பேச்சுக்கள் என்சிந்தனைச் சிறகுகளால் மறைக்கப்ப்ட்டது.

அவன் ஊரில் ஆடு வளர்க்கும் விதம் அலாதியானது. ஆழக்குழி அமைத்து மிதமான உயரத்தில் குழியின் குறுக்காக தடிஊன்றி இலைதழைகள் தொங்கவிட்டு குழிக்குள் ஆட்டை இறக்குவார்கள். நாளாக நாளாக அதிகரிக்கும் குழியின் ஆழத்துக்கு கட்டுப்பட்டு கடா காளை ஆக காட்சி தரும். இன்னும் சில நாட்களில் ஊரின் பல வீட்டு குழம்பில் ஆடு பாகமாக கொதிக்கும். ஆட்டின் உரிமைக்குடும்பமோ அதன்சுவை அறியாது. நாம வளர்த்தகடாவை நாமே தின்னக்கூடாது என்பது அங்கே எழுதப்படாத வேதம். இப்போது வேதம் மீறப்படுகின்றதே?

"சங்கீர்த்தனாவும் நல்லாகச் சமைப்பாள்".சிந்தையின் தியானம் கலைந்தது.
சங்கீர்த்தனா மூத்த பெண். தனுவுக்கு நிச்சயிக்கப்பட்டு மூன்றுமாத விருந்தினர் அனுமதியுடன் தந்தை துணையுடன் ஜெர்மன் வந்தவள். சட்டம் ஒத்துழைத்தால் உடனடிப் பதிவுத்திருமணம். இல்லையேல் தாமதமதமான திருமணம். இவளுக்கு மூத்தவன் கீதன் ஜேர்மனில் நண்பர்களுடன் தங்கி இருப்பதால் தனுவின் சித்திவீட்டில் உள்ளாள்.சற்று முன்அலறிய கம்பியில்லா தொலைபேசியுடன் அறைக்குள் புகுந்தவள் வெளியே வந்தாள்.

"அண்ணா உங்களிடம் பேசவேண்டுமாம்"

சம்பிராதாயப் பேச்சுகள் முடிந்ததும் தனுவுடன் தனிமையில் பேச நினைத்தான்அவள் அண்ணன் கீதன். தனி அறை நாடினான்.

"தனு வந்து.... வந்து....எனக்கு வரவேண்டிய பணம் தாமதமாகும்போல இருக்கு. அதனால்...."

தனுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்காக இதை தன்னிடம் சொல்கின்றான்.

" உங்களுக்கு தரவேண்டிய சீதனம் கொஞ்சம் தாமதமாகும்".

தனு அதிர்ந்தான். சமுதாயத்தைப் பிடித்த சீதனச்சீக்கை அழிக்க நினைப்பவன் அவன்.

"சீதனமா!!? என்ன சொல்றீங்க கீதன். நாங்க யாரும் கேட்கவில்லையே"

பண வரவுத்தாமதமும் இதர சில சம்பவங்களும் கீதனை நிதானம் இழக்க வைத்தன போலும்.

"என்ன விளையாடுறீங்களா? உங்கள் வீட்டுக்காரர்களை விட்டுக் கேட்டுவிட்டு இப்போது இப்படி சொல்றீங்க. நல்லவனாக நடிக்ககூடாது சார். நல்லவனாக இருக்க வேண்டும்."

அவன் ஆற்றாமை கலந்த கோபம் தெரிந்தது.கீதன் கோபம் தனுவின் தன்மானத்தை உரசியது. பணப்புரட்டலுக்காக கீதன் படும்பாடு நினைவில் உதித்து அதனை மறைத்தது.மென்மையாக சொன்னான். உறுதி குழைத்துக் கொடுத்தான்.

"கீதன் தவறான கோபம் தரும் விளைவுகள் எப்போதும் பயங்கரமானது. நிதானமாக பேசுங்கள்"

தனுவின் அமைதியான குரலால் சாந்தமாகும் நிலையில் கீதன் இல்லை. அவனது கோபவீச்சு கனல்கள் அதிகமாகின.

"தம்பிக்கு பொறுப்புகள் குறைவு. ஆனாலும் அவனுக்கு கடன்கள் அதிகம். அதனால் சீதனமாக இவ்வளவு கேட்கின்றான் என்று உங்க வீட்டு பெரியவங்க சொன்னாங்க. சொல்லாமல் அவங்க கேட்பாங்களா அது மட்டுமா சீதனம் முழுவதுமாக வராது விட்டால் எல்லாவற்றையும் நிறுத்துங்கள் என்று நீங்கள்தானே அவர்களிடம் சொல்லியுள்ளீர்கள்.. நீங்க . நான் என்ன தர மாட்டேன்னா சொல்றேன். லேட்டாக தர்ரேன்னுதானே சொல்றேன்."

தனுவுக்கு இப்போது கொஞ்சம் புரிந்தது. குடும்பம் மேல் கோபம் பிறந்து மறைந்து மனதில் பின் பிறந்த கனிவு தொடர்ந்த கீதனின் வேல்களால் தொலைந்தது.

"தவறான கோபம், விளைவுகள் அது இதுன்னு பயமுறுத்துகின்றீர்களா."

எனத்தொடங்கி சென்ஸார் வார்த்தைகளை வில்லையால் குவித்தான். அதன் சூடு தாங்காது தனுவின் தன்மானம் தூக்கம் துயில் எழும்பியது.

"கீதன் அதிகம் பேசி விட்டீர்கள். கண்கள் வித்து ஓவியம் வாங்கவோ அடையளம் தொலைத்து காவியம் பாடவோ நான் விரும்பவில்லை. இத்துடன் எல்லாவற்றையும் முடித்துக்கொள்வோம்"

தாழ்ந்த குரலில் உறுதி நிரப்பினான் தனு. எல்லாவற்றையும் என்னும் பதம் கீதனை மீண்டும் மனிதனாக்கியது..தன் கோபத் தீ விளைவை கீதன் உணர்ந்தபோது தனு தொலைபேசியில்காணாமல் போயிருந்தான்.


சங்கீர்த்தனாவின் தற்காலிக அறைக்கதவை உறுதியான இறுதியான முடிவு தாங்கிவண்ணம் தட்டி, தாமதித்து உள்ளே நுழைந்தான். கட்டில் படுத்திருந்தவள் சட்டென எழுந்தாள். அவசரமாக முகத்தை துடைத்தாள். கீதன் இவளுடனும் பேசியுள்ளான் என்பதை புரிந்தான் தனு. "சங்கீ.."அவன் அழைப்பில் திரும்பிய முகத்தில் கண்ணீர் பயணித்த கோடுகள். அக்கோடுகளில் அவனுக்குத் தெரிந்தது ஒருமாதம் சத்தம்மூலமும் ஒரு நாள் விழிமூலமும் வளர்ந்த காதல் பயணித்த சுவடுகள். "உனக்கு கணவனாகவும் உன் தங்கைக்கு அண்ணனாகவும் என்றும் இருப்பேன்" தனுதான் பேசினான். இல்லை இல்லை. அவள் கண்ணீரோ அல்லது அவர்கள் காதலோ அவனை அப்படி பேசவைத்தது. மெல்ல அவளைதோளுடன் சேர்த்து தட்டிக்கொடுத்துவிட்டு கூடத்துக்கு வந்தான். மேசையில் பாத்திரத்தில் சிவப்பாக இருந்தது வளர்த்த கடா..!. சுற்றி இருந்தது குடும்பத்தின் ஓரங்கம்....!

சிவா.ஜி
12-09-2007, 12:19 PM
கீதனின் கண நேரக் கோபம் ஒரு நல்ல உறவை இழக்க இருந்தது...ஆனால் மனதில் துளிர்த்துவிட்ட காதலுணர்வு உறவை உறுதியாக்கிவிட்டது.
நல்ல கரு,அதை சொன்ன விதமும் அருமை.இயல்பான காட்சியமைப்பில் ஒரு ஓரங்க நாடகம் பார்த்ததுபோல் இருந்தது. தனு பாத்திரம் அருமை.
கொஞ்சம் பட்டென்று முடிந்துவிட்ட ஒருபக்க கதைபோல ஒரு தோற்றம்.
உரையாடல்களில் இன்னும் கொஞ்சம் அகலம் வேண்டுமென்று தோண்றுகிறது.பாராட்டுக்கள் அமரன்.

அன்புரசிகன்
12-09-2007, 01:00 PM
பலருக்கு நிகழ்ந்தது... தர்மேந்திராவுக்கும் நிகழ்ந்துவிட்டது....
கிதனின் கோபத்தில் தவறில்லை. ஆனாலும் தனுவின் நிதானம் பாராட்ட வைக்கிறது....
எப்படியோ சங்கீர்த்தனாவை கரம் பிடித்தாரே அல்லது பிடிக்கப்போகிறாரே... அந்த முடிவுக்காய் உங்களுக்கு 500 இ-பணம்.

அமரன்
12-09-2007, 06:39 PM
கொஞ்சம் பட்டென்று முடிந்துவிட்ட ஒருபக்க கதைபோல ஒரு தோற்றம்.
உரையாடல்களில் இன்னும் கொஞ்சம் அகலம் வேண்டுமென்று தோண்றுகிறது.பாராட்டுக்கள் அமரன்.
ஒருபக்கக்கதைபோல இருப்பதற்குக் காரணம் (சட்டென முடிவதுக்கும்) நேரமின்மை அல்ல. இது கிடைக்கும் நேரங்களில் கொஞ்சம்கொஞ்சமாக எழுதிய கதை. நிஜ வாழ்வில் உரையாடலை நீட்டுவதில் நாட்டமில்லாதவன் நான். அப்படியே பழகிவிட்டதால் உரையாடலை எப்படி அமைப்பது என்று எனக்குத் தெரியவில்லை என்பதே இக்குறைக்குக் காரணம். எனது முந்தைய கதைகளில் அளவலாவல் இல்லாததற்கும் இதுதான் காரணம். கவிதைகள் படித்து கவிபுனையக் கற்றுக்கொண்டதுபோல் கதைபடித்து கதை பிடிக்க வேண்டியதுதான். நன்றி சிவா...

அமரன்
12-09-2007, 06:42 PM
பலருக்கு நிகழ்ந்தது... தர்மேந்திராவுக்கும் நிகழ்ந்துவிட்டது....
கிதனின் கோபத்தில் தவறில்லை. ஆனாலும் தனுவின் நிதானம் பாராட்ட வைக்கிறது....
எப்படியோ சங்கீர்த்தனாவை கரம் பிடித்தாரே அல்லது பிடிக்கப்போகிறாரே... அந்த முடிவுக்காய் உங்களுக்கு 500 இ-பணம்.
இக்கதையை பதித்துவிட்டு மன்றத்தை விட்டு வெளியேறினேன். திரும்ப வரும்போது 7000 வாழ்த்துத்திரியில் கதைகள் தாருங்கள் என்ற உங்கள் பதிவு. எனக்குள் சிரித்தேன். எதிர்ப்பார்த்த படைப்பை கொடுத்த மகிழ்வின் வெளிப்பாடு அது. இங்கே உங்கள் 'பொடி' வைத்த பின்னூட்டம். நன்றி ரசிகா....!

அன்புரசிகன்
12-09-2007, 06:50 PM
உண்மை தான் அமரா... முதலில் நான் இதை காணவில்லை.... பிறகு பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது... நன்றி அமரா....

சிவா.ஜி
13-09-2007, 04:36 AM
உண்மை தான் அமரா... முதலில் நான் இதை காணவில்லை.... பிறகு பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது... நன்றி அமரா....

எனக்கும் அதே அதே....7000 பதிவில் அன்புவின் பதிவைப் பார்த்துவிட்டு இதைப்பார்த்ததும்...அசந்துவிட்டேன்...அடடா எத்தனை அருமையான ஒத்த அலைவரிசை கொண்ட உறவுகள்....

lolluvathiyar
13-09-2007, 05:59 AM
அமரன் அவர்களே உங்கள் கதைகள் அதிகமாக சிந்தனையை தூண்டு கதைகளாக வே எழுதுகிறீர்கள். எழுதும்போது பொருமையாகவே இருப்பீர்கள் போலிருக்கு.

சில நாட்களில் ஊரின் பல வீட்டு குழம்பில் ஆடு பாகமாக கொதிக்கும். ஆட்டின் உரிமைக்குடும்பமோ அதன்சுவை அறியாது. நாம வளர்த்தகடாவை நாமே தின்னக்கூடாது என்பது அங்கே எழுதப்படாத வேதம். இப்போது வேதம் மீறப்படுகின்றதே?


இந்த பழக்கம் இன்றைக்கு கடைபிடிக்க பட்டி இருக்கு. எங்கள் வீட்டில் வளரும் ஆடுகளை நாங்கள் சாப்பிட மாட்டோம். ஆனால் கடைக்கு போய் மட்டன் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் கோழிக்கு விதி விலக்கு.

இளசு
13-09-2007, 07:55 PM
அந்தக்காலக்கிணறுகளில் ஒரு வகை - பெரியதாய்த் தாய்க்கிணறும்..
அதனுள் நடுவில் இன்னும் ஆழமாய் பிள்ளைக்கிணறும் இருக்கும்..

வற்றிய காலங்களில் பிள்ளைக்கிணறில் மற்றும் ஊற்றிருக்கும்..
வளமைக்காலங்களில் எல்லாம் நிரம்பி ஒன்றாய்க் கலந்திருக்கும்..
உள்ளே பிள்ளைக்கிணறு மறைந்திருக்கும்!

சீதனம் வேண்டாம் என்பது, தான் வளர்த்ததைத் தானே உண்ணாதது,
கீதனின் சுடுசொல்லால் தன்மானம் விழித்துத் தடுத்தாள்வது -
இவை பிள்ளைக்கிணறாய்...

தனக்காய்.. சுயயோசனைகள் மேலோங்கி நமக்குச் செதுக்கும் படிமங்கள்..

சீதனம் கேட்ட குடும்பத்தையும் கனிவாய் நேசிக்க..
சுடுசொல் வீசிய கீதனிடம் '' படிந்து போக'
குடும்பத்துடன் வளர்த்த கடா அமர்ந்துண்ண..

இவை உணர்வின் மழைக்காலங்கள்..
உள்ளிருக்கும் சுயமனக்கிணறு அமிழ்ந்து மறைந்த காலங்கள்..

அமரனின் கதையில் அமிழ்ந்து நெகிழ்ந்தேன்..

பாராட்டுகள்!


(பென்ஸூம் வரணும் இங்கே..)

மனோஜ்
13-09-2007, 08:23 PM
சிறப்பான கடா சாப்பாடு மிகவம் சுவையாய் அமரன் நன்றி
கதை பாங்கு அருமை

அமரன்
14-09-2007, 06:44 PM
வாத்தியாரே...இது பயண நேரங்களில் பாகம் பாகமாக எழுதிய கதை. நன்றி.
அண்ணா அசத்தல் பின்னூட்டம்..அதுவே ஆயிரம் கதை சொல்லியாக உள்ளது. நன்றி..
விருந்துண்டமைக்கு நன்றி மனோஜ்

சாம்பவி
04-10-2007, 09:59 PM
தலைப்பு துரோகத்தை பறைச் சாற்ற,
கதையோ...கவிதை சொன்னது...
அதுவும் காதல் கவிதை...

படித்த அந்த 5 நிமிடங்கள் ....
மணி ரத்தினம் படம் பார்ப்பது போல் .....

அளவாக பேசினாலும்
ஆழமாக யோசிக்கும் நாயகன்....
தன்மானம் காத்து,
தன்னை நாடி நின்றவளின்
மனத்தையும் காத்தது,

அதோடு மட்டுமின்றி,
"உனக்கு கணவனாகவும்
தங்கைக்கு அண்ணனாகவும்
என்றும் இருப்பேன்"
முத்தாப்பாய் தனு சொன்னது ...
ஆஹா போட வைத்தது. !

"மச்சினிச்சி வந்த நேரம் மண் மயக்குது...
மனசுக்குள்ள பஞ்ச வர்ண கொடி பறக்குது "
என்று உமிழ்நீர் வடிக்காது,
மைத்துனியையும் தங்கையாய் ஏற்பது ..
"இவன் ஆண் மகன்" என
சபாஷ் போட வைத்தது... !

விருந்தின் ஐதீகம் புரியாது போனாலும்..
விருந்தோம்பல் புரிந்தது. !
நா காத்தலின் அவசியம் புரிந்தது.
காதல்(லி) கண்ணீரின் வீரியம் புரிந்தது... !
கடைசியாய்.. மானுடம் புரிந்தது... !!

அசத்தலான கதை .. :icon_b: தலைப்பு மட்டும் கொஞ்சம் நெருடலாய்... :sprachlos020:

பூமகள்
14-10-2007, 10:35 AM
வித்தியாசமான தலைப்பு அமர் அண்ணா.
இதில் ஒரு காதல் கதையை எதிர்பார்க்கவில்லை.. மாறாக ஒரு அடிதடி அருவா சண்டை கதையைத்தான் எதிர்பார்த்தேன்.
அழகான சூழல் விளக்கத்திற்கு பிறகு, வசனமே இல்லாமல் கண் முன் காட்சிகளை கொண்டு வந்து நிறுத்தி கதாப்பாத்திரங்களின் முக உணர்வுகளை
மனத்தில் படம்பிடிக்க வைப்பது எவ்வளவு கடினமான வேலை.
அசத்தலாக செய்துவிட்டீர்கள்..!!
இடையே கறிசாப்பாட்டையும் நினைவு படுத்தி.. நாக்கில் எச்சில் ஊறச்செய்து விட்டீர்கள்..!!
வாழ்த்துகள் அமர் அண்ணா.

யவனிகா
14-10-2007, 01:25 PM
நல்ல கதை, தாமதமாகத்தான் படிக்க நேர்ந்தது..."சொந்தவீட்டின் தரை ஈரம் உணர முடியாதவாறு சாக்குகளும்" இந்த வரிகள் என் வீட்டை எனக்கு மீண்டும் நினைவு படுத்துவதாக அமைந்தது...வருடம் ஒரு முறை விடுப்பில் ஊர் செல்லும் போது...முதன் முதல் வீட்டில் வைக்கும் முதல் அடியில்...தரையின் குளிர்ச்சி பாதங்களூடாக உடல் எங்கும் வியாபிக்கும்...இது என் வீடு..என் இடம் என்று உடல் சிலிர்க்கும்.இதற்குத் தானே காத்திருந்தாய்..என்று மனம் குதூகலிக்கும்..அழகான கதையின் மூலம் பழைய நினைவுகளை கிளறி விட்டீர்கள்.நன்றி அமரன்.
ய*வ*னிகா.

அக்னி
15-10-2007, 01:13 PM
தாயகத்தின் அடையாளங்களை, ஐரோப்பிய கட்டடங்களுக்கு நகர்த்திய ஆரம்பம் சிறப்பு...

பெரியவரின் மேகம் பார்த்த விழிகளின், நிலம் பார்க்கும் ஆச்சரியம், அந்த ஆச்சரியங்கள் வெளிப்படும் வினாக்கள் மிகவும் யதார்த்தம்...

மருந்துகளில் உடம்பு வளர்க்கப்பட்டு, குளிர்பதனப்பெட்டிகளில் பராமரிக்கப்படும் இறைச்சிகளுக்குள் சுவை தேடும் நிலத்தில், கிராமத்தின் குழம்பையும் மணக்கச் செய்துள்ளார் கதாசிரியர்...

சிவா.ஜி கூறியது போல், உரையாடலின் அகலக்குறைவோ என்னமோ,
சென்சார் வார்த்தைகள் பாவிக்கப்பட வேண்டிய அளவுக்கு, தர்க்கித்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தர்க்கம் நீண்டிருந்தால், கதை அலட்டப்பட்டிருக்கும் என்பது ஒரு புறமிருக்க, தீவிரமாக முறிவைக்காட்ட சற்றே திணிக்கப்பட்டது போலுள்ளது.

ஆனால், நாயகனின் பொறுமை என்று சொல்வதை விட, அவன் கொண்ட காதலையும், அவன் கொண்ட கொள்கையின் உறுதியையும்
மிகவும் தெளிவாக கதை உணர்த்துகின்றது...



"உனக்கு கணவனாகவும் உன் தங்கைக்கு அண்ணனாகவும் என்றும் இருப்பேன்"

உனது குடும்பப் பொறுப்புக்களில் இனி நானும் பங்கெடுத்துக் கொள்வேன் என்பதை உணர்த்தும் வரிகள்...
பயன்படுத்தப்பட்ட இடம், மனதில் பதிய வைக்கின்றது.

பாராட்டுக்கள் அமரன்...

மன்மதன்
20-11-2007, 05:51 PM
கதையை படித்து முடித்ததும் ஒரு நல்ல திரைப்படம்
பார்த்த மனநிறைவு அடைந்தேன்.

பாராட்டுகள் அமரன்..!

கீதம்
09-04-2011, 03:05 AM
வேறொரு திரியைத் தேடும்போது தற்செயலாய்க் கண்ணில் பட்ட கடா...

போட்டிக்கதைகளை ஒத்த கரு...

வளர்த்த கடா.... அருமையான தலைப்பு. மனதில் வெட்டுப்பட்டாலும் ஒரு மார்க்கம் கண்டறிந்து தப்பித்தது இக்கடா... இனியென்ன அக்கடாதான்.

Nivas.T
10-04-2011, 07:47 AM
அருமையான கதை :)
நல்ல கரு :)
கதை கூறிய விதம் அழகு :)
ஏன் அமரன் இதுபோல் இப்பொழுதெல்லாம் பதிப்பதில்லை? :confused::frown::redface:

dellas
10-04-2011, 11:30 AM
தலைப்பு பொருந்தவில்லை என்றே நான் சொல்வேன். 'வளர்க்கும் கடா' என்றிருக்கலாம். முகம் காணாமல் பேசும் பேச்சுக்கள் பலவும் இப்படியான முறிவுகளை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம்.
மறுமுனையில் பணம்வரத் தாமதமாகும் என்று சொல்வது சரியே. குடும்பத்தார் கேட்ட சீதனத்தை நான் கேட்கவில்லை என்று சொல்லும் தனுவின் பக்கம் சரியா? வாழப் போகும் பெண்ணின் தமையன் என்ற முறையில் அவரின் கோபம் நியாயமே. இன்றைக்கு தனுவுக்கு தெரியாமல் தனுவுக்கே நடந்தது, நாளைக்கு.?
நல்ல கதை.

அமரன்
18-04-2011, 07:16 PM
குழந்தையின் ஓவியத்தை ரசித்த உள்ளங்களுக்கு நன்றி.

நிவாஸ்..

இப்போது வரும் கதைகளையும் கவிதைகளையும் படித்த பிறகு அவைகளுக்கு அருகில் நிற்கக்கூடியளவுக்கேனும் எழுத வேண்டாமோ.

டெல்லாஸ்..

உங்கள் கருத்துகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்.