PDA

View Full Version : அலைய வைக்கும் அரசு இயந்திரம்



சிவா.ஜி
12-09-2007, 05:28 AM
அரசாங்க அலுவல்கள்அனுபவம்-1

தரணி போற்றும் தமிழ்நாட்டில் லஞ்சப் பரணிபாடும் அரசு அலுவலகங்கள் சிலவற்றில் எனக்கேற்பட்ட அனுபவங்கள்.

மும்பை வாசத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்த பிறகு..குடும்பத்துக்கு ஒரு அட்டை வேண்டுமென்பதால்,ஏற்கனவே மும்பையில் உபயோகித்த குடும்ப அட்டையை திரும்பக் கொடுத்துவிட்டு,அதற்கான சான்றிதழோடு..புதிய அட்டைக்கான விண்ணப்பத்தையும் கையில் எடுத்துக்கொண்டு எங்கள் வட்டாச்சியர் அலுவலகம் போனேன். முதன் முறையாய் தமிழ்நாட்டின் ஒரு அரசு அலுவலகம் போனதால் எவை எவை எங்கிருக்கும் என்று தெரியாமல் என் முழியை முழித்தேன்.(என்னுடையதும் ஏறக்குறைய பாண்டியராஜன் முழி போலத்தான் இருக்கும்)கையில் சில கோப்புகளோடு (இன்னமும் அந்த காலிகோ துணி அட்டையை கயிறால் கட்டித்தான் கோப்புகளைக் கையாளுகிறார்கள்)ஒருவர் என்னைக் கடந்தார்.குப்பென்று அவர் மீது அடித்த பண வாசத்தை வைத்து அவர்தான் இந்த அலுவலகத்தின் ப்யூன் என்பதை தெரிந்துகொண்டேன்.குடும்ப அட்டை வழங்கும் பகுதி எங்கே என்று அவரிடம் கேட்டதற்கு பதில் சொல்லாமல் போகிறபோக்கில் மௌண்ட் ரோடு அண்ணா சிலை மாதிரி ஒரு விரலை நீட்டி குத்து மதிப்பாக அவர் காண்பித்த திசையில் போனதும்..நீண்ட ஒரு வராண்டாவில் நான்கைந்து டல்ஹௌசிபிரபு காலத்து மேசைகள் இடப்பட்டு அதில் மூன்று இருக்கைகளில் மட்டும் கடமைத் தவறா "கர்ம" வீரர்கள் போல இரண்டு ஆண்களும் ஒரு பெண்மனியும் இருந்தார்கள்.முதலில் அமர்ந்திருந்தவரிடம் ரேஷன் கார்டு....என்று சொல்லி முடிப்பதற்குள்...பலகாரத்தின் மீது மொய்க்கும் ஈயை விரட்டுபவர் போல அடுத்த மேசையைக்காண்பித்தார்.அவர் காண்பித்தது அந்த பெண்மனியை.அவரிடம் சென்று "மேடம்..."என்று தொடங்கி நான் வந்த விஷயத்தை சொன்னேன்.

விண்ணப்பத்தை வாங்கிப்பார்த்த அவர்,"விண்ணப்பத்துல ஸ்டாம்பு யாரு ஒட்டுவாங்க...அதுக்கு தனியா ஒரு ஆளை இங்கேருந்து நான் அனுப்பனுமா?போய் ஸ்டாம்ப் ஒட்டி எடுத்துட்டு வாங்க"என்று அத்தனை தாள்களையும் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.நான் அஞ்சலில் ஒன்றும் அனுப்பவில்லையே எதற்கு ஸ்டாம்ப் ஒட்ட வேண்டுமென்று விளங்காமல் முழிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு சக குடிமகன்.."சார் வெளியில ஃபாரம் விக்கிறவங்க கிட்ட போய் ரேஷன் கார்டுக்குன்னு கேட்டீங்கனா தருவாங்க" என்றதும் நன்றி சொல்லிவிட்டு..வெளியே போய் ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி(இரண்டு ரூபாய் மதிப்புள்ள அந்த ஸ்டாம்ப் அங்கே மூன்று ரூபாய்),திரும்ப அவரிடம் கொண்டு வந்தேன்.

நிமிர்ந்து என்னைப் பார்த்தாலும் நான் என்னவோ Hollow Man-போல அவர் கண்களுக்கு புலப்படவில்லை என்பதைப்போல எந்த ரியாக்ஷனும் இல்லாமல் திரும்ப அவருடைய வேலையை தொடர்ந்தார்.நானும் எழுதி முடிக்கட்டுமென்று காத்திருந்தேன்.எழுதி முடித்துவிட்டு பக்கத்து மேசை வீரரிடம் மதிய சாப்பாட்டைப் பற்றி பேச ஆரம்பித்ததும்,நான் மெதுவாக "மேடம்..." என்று இழுக்க...சட்டென்று கோபமாகி..படக்கென்று என் கையிலிருந்த விண்ணப்பத்தை வாங்கி அதே கோபத்தை maintain செய்து கொண்டே....பழைய குடும்ப அட்டையை திருப்பிக் கொடுத்ததற்கான சான்றிதழைப்பார்த்துவிட்டு "என்னா இது..." என்று மிக மரியாதையாகக் கேட்டதும்.நானும் பவ்யமாக "சர்டிஃபிகேட் மேடம்" என்று சொன்னேன். எரித்துவிடுவதைப் போலப் பார்த்த அவர்..."என்னா பாஷையில இருக்கு இது" என்றார்.அப்போதுதான் எனக்கும் உரைத்தது...அந்த சான்றிதழ் மராட்டிய மொழியில் இருந்தது என்பது."ஹி..ஹி..பாம்பேயில குடுத்தது மேடம் அதான்...."என்று இழுக்கவும்.அவர் "போய் ட்ரான்ஷலேஷன் பண்ணி எடுத்துட்டு வாங்க"என்றார் எங்கே, என்ன என்று கேட்பதற்குள் வேறொருவர் என் பின்னால் வந்து நிற்க,உடனே முகமெல்லாம் மலர்ந்து " வாங்க சார்,உக்காருங்க" என்று மேசையின் அந்தப் பக்கத்திலிருந்தே முக்கால்வாசி படுத்த வாக்கில் எனக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியை வந்தவரின் பக்கமாக நகர்த்தினார்.அந்த நாற்காலி நகர்த்தலோட க்றீச் சத்தம் நீ போகலாம் என்று எனக்கு சொன்னதால்..வேறு வழியில்லாமல் திரும்பி வந்து..மொழிமாற்றம் செய்ய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எங்கே இருக்கிறது என்று தேடிப்பிடித்து...அதையும் செய்து கொண்டு மீண்டும் அதே அம்மையாரிடம் போனேன்.

கொடுத்த ஆவனங்களை சரி பார்த்து விட்டு...அவர் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே...ஆஹா...அதை வைத்தே ஆயிரம் கவிதை எழுதலாம்.ஆனால் அப்போதைக்கு பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு வெறும் பார்வைதான் பார்க்க முடிந்தது. இருந்தும் அவரிடம் எந்த பச்சாதாபமும் தோன்றவில்லை.இவனிடம் ஆடினாலும்,பாடினாலும் எதையும் கறக்க முடியாது என்று மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்ட அந்த கடமை வீராங்கனை.." குடுத்தாச்சில்ல...கார்டு வரும்போது தகவல் வரும் அப்ப வந்து வாங்கிக்கலாம்" என்று சொல்லிவிட்டு இப்ப போகலாம் என்று வாசலைக் காண்பித்தார்.

அப்பாடா எப்படியும் அட்டை கிடைத்துவிடுமென்று சந்தோஷமாக வீட்டுக்கு வந்துவிட்டேன். அட்டையும் வந்தது ஆனால் இரண்டு வருடம் கழித்து. அதுவும் எனக்கு எந்த பயன்பாட்டுக்காக தேவைப்பட்டதோ அதற்கு பயனில்லாமல் பிழையோடு வந்தது. அந்த கதையை என் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

lolluvathiyar
12-09-2007, 06:50 AM
நல்ல ஆரம்பம் சிவாஜி இந்தியாவில் அரசு அதிகாரிகள் என்றாலே ஒரே விளக்கம் தான் கொள்ளைகாரன்.
நான் வேலை செய்யும் நிறுவனத்தின் அரசாங்க ஆபீஸ் வேலைகளை எல்லாம் கவனிக்க என்னை தான் அனுப்புவார்கள். ஆகையால் எனக்கு உங்கள் அனுப்வம் இல்லை. காரனம் பழகி விட்டது, எங்கு போனாலும் அரசாங்க அதிகாரிகளை பிச்சைகாரர்களாக தான் மதிப்பேன். இதற்கென்று அனைத்து ஆபீஸ்களில் வெளியில் புரோக்கர்கள் இருப்பார்கள் அவர்களிடம் சர்வீஸ் சார்ஜ் தந்து விட்டால் உடனடியாக நடக்கும், நேர்மையாக போக வேண்டும் என்றால் பல* நாள் அழைய வேண்டும்.

சிவா.ஜி
12-09-2007, 07:35 AM
ஆமாம் வாத்தியார்..பண எலும்பை வீசிவிட்டால் கவ்விக்கொண்டு வாலாட்டும் ஜென்மங்கள்தான் இந்த அரசு அதிகாரிகள்.அதை வீசாத போது இப்படித்தான் அலைக்கழித்து வெறுப்பேற்றுகிறார்கள்.பின்னூட்டத்திற்கு நன்றி தலைவரே.

அன்புரசிகன்
12-09-2007, 11:09 AM
விடுங்கள் சிவா... முற்பகல் செய்ததுதான் பிற்பகல் விளையும்... விதைத்ததை தான் அறுவடை செய்யமுடியும்............

இதுபோல பலவற்றை பார்த்து பழகிவிட்டது... திருத்துவது கடினம்...

சிவா.ஜி
12-09-2007, 11:12 AM
உண்மைதான் அன்பு.நான் வருத்தப்பட்டு இதை எழுதவில்லை(தேவையில்லாமல் எதற்கு வருத்தப்படவேண்டும்..?) அந்த கோமாளிகளின் செயல்களை சிரிப்பாய் சிரிக்க வைக்கத்தான் எழுதுகிறேன்.

அமரன்
13-09-2007, 12:33 PM
இவ்வகை சம்பவங்களை நான் அதிகமாக அனுபவித்ததுண்டு தாயகத்தில்
அங்கிருந்து புலம்பெயர்ந்தபின்னர் அனுபவகுறைவு கண்டு மனம் மகிழ்ந்ததுண்டு..ஈழ நிலை நினைந்து வெகுண்டதுண்டு.

கோவை ப்ரதர்ஸ் திரைப்பட காட்சியைநினைவூட்டிய பதிவு.
காட்சியாகவே காலம் கடந்து விடுமோ என்ற கவலை என்னுள்.
தொடருங்கள் பதிவை....என்று வாழ்த்துவதா
தொடராதிருக்கட்டும் என்று சபிப்பதா...

தடுமாற்றத்துடன்
அமரன்

இளசு
13-09-2007, 08:45 PM
என் நண்பன் சொல்வான்:

ஏன் கோபம்... வருத்தம்?

வாலாட்ட வைக்கப் போகிறேன்
பை நிறைய பிஸ்கட்டுகள்..

இது அவன் சொன்னது - சொல்வது!

என் வேண்டுதல் -
அடிக்கடி அரசு அலுவலகம் போகாத நல்ல வரத்தை!

சிவாவின் நையாண்டி கொப்பளிக்கும் நடையால்
எரிச்சலுக்கு இறகால் எண்ணெய் தடவும் சுகம்!

தொடர்ந்து இதமாக்குங்கள் சிவா.. நன்றி!

மனோஜ்
13-09-2007, 09:51 PM
கொடுமை கொடுமைனு கோதயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை திங்கு திங்குனு அடுமா

அந்த கதைதான் இந்தகதையே அருமை சிவா அவர்களே

அறிஞர்
13-09-2007, 10:13 PM
எங்கு சென்றாலும் இந்த நிலைதான்....

பணம் கொடுத்தால் தானாகவே நடக்கும் நிலை.....

நான் சில இடங்களில் அழைந்துள்ளேன்.... பணம் இல்லாவிட்டால் ஒன்று இல்லை என்ற நிலை தான் நம் அரசு இயந்திரம்

ஷீ-நிசி
14-09-2007, 04:40 AM
சிவா..

இவர்கள் யாரையுமே மதிப்பதில்லை.. என்னவோ இவங்க வீட்டுக்கு வந்த வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பது போல்தான் பார்ப்பார்களாம்.. இவர்கள் வாங்குகிற சம்பளம் நம் வரிப்பணம் என்பது என்றைக்குத்தான் உணரப்போகிறார்களோ!


இதையெல்லாம் பேசக்கூட எரிச்சலாகயிருக்கிறது..

ரேஷன் கார்டு வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரின் மனதிலும் ஓராயிரம் இதுபோன்ற கொடுமைகள் வரிசையாக இருக்கும்..

என்ன சொல்வது....

சிவா.ஜி
14-09-2007, 05:33 AM
அரசு அலுவலர்களென்றாலே எல்ல கீழ்திசை நாடுகளிலும் அப்படித்தான்.ஆனால் இது இந்தியாவில் மிக அதிகம் என்பது எனது எண்ணம்.இலங்கையில் நீங்கள் அதிகம் கஷ்டப்படாததற்கு வாழ்த்துக்கள் அமரன்.

ஹா.ஹா..பைநிறைய பிஸ்கெட்டுகள்...வாலாட்டும் வர்க்கங்கள்...அசத்தல் இளசு.போகவே கூடாதென்றாலும் வேறு வழியில்லாமல் போக வேண்டிய கட்டாயம் சில நேரங்களில் உண்டாகிவிடுகிறது இளசு.என்ன செய்வது...பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறித்தானே ஆகவேண்டும்.

அதே அதே மனோஜ். அங்க ஆடுறது கொடுமை மட்டுமல்ல நம்ம உடம்பும்தான்.சிலசமயங்களில் கோபத்தால்,சில சமயங்களில் இயலாமையால்.

காசு பார்க்கவில்லையென்றால் வாயைக்கூட திறக்க மறுக்கிறார்கள் அறிஞர் சார்.இவர்களேல்லாம் பெற்ற தாய்க்கே காசு வாங்கிக்கொண்டுதான் சாப்பாடே போடுவார்கள்.

ஷீ..உங்களுக்கும் இந்த கசப்பான அனுபவம் இருக்கும்.ரேஷன் துறையில் நீங்கள் சொன்னதைப்போல மிக அதிகமாக லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.ஹிந்தியில் சொவார்கள்"பாத்தோன்ஸே பூத் நஹி மானேத்தோ லாத்தோன்ஸே மானேகி" அதாவது பேசிப் புண்ணியமில்லை இந்த பேய்களை அடக்க தடிதான் சரி என்பது. பார்ப்போம் எத்தனைக்காலம் ஆடுகிறார்களென்று.

சாராகுமார்
14-09-2007, 06:21 AM
நம்ம வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் இவர்களுக்கு இவ்வளவு திமிர் இருந்தால் நமக்கு எவ்வளவு இருக்க வேண்டும்.ஆனால் நமக்கு வேலை நடக்க வேண்டும்.அதுதான் நமது பலவீனம்.

சிவா.ஜி
14-09-2007, 06:25 AM
நம்ம வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் இவர்களுக்கு இவ்வளவு திமிர் இருந்தால் நமக்கு எவ்வளவு இருக்க வேண்டும்.ஆனால் நமக்கு வேலை நடக்க வேண்டும்.அதுதான் நமது பலவீனம்.

அதேதான் சாராகுமார். நம் பலவீனத்தை உண்டாக்குவதும் அவர்களே அதன் பலனை பிடுங்கி அனுபவிப்பதும் அவர்களே....நமக்கும் ஒரு காலம் வரும்.

சிவா.ஜி
14-09-2007, 08:14 AM
அலைச்சல்-2

வின்னப்பத்தில் மிகச் சரியாக,மிகத் தெளிவாக(என்னுடைய கையெழுத்தை தெளிவு என்று சொன்னால் வீட்டம்மா அடிக்கவருவார்கள்...ஆரம்பகாலங்களில் நான் எழுதிய கடிதங்களைப் படிப்பதற்கு அவர்கள் பட்ட பாடு இருக்கிறதே.....)என் மனைவியின் அழகான கையெழுத்தில் எழுதிதான் அலுவலகத்தில் கொடுத்திருந்தேன்.அப்படியும் என் பெயரில் பாதிதான் அச்சாகியிருந்தது.வங்கிக் கணக்கு துவங்கவும்,வாகனக்கடன் வாங்கவும்...இப்படி எந்த வேலைக்கும் இந்த அட்டை உபயோகப்படவில்லை.எனவே பெயரை மாற்றுவதற்காக மீண்டும் ஒருமுறை அதே அலுவலகம்..அதே மேடம்...இந்த முறை புதுப்புடவை கட்டி வந்திருப்பார் போலத் தெரிகிறது... அதனால் ஒரு 15 சதவீதம் தன்மையாக பதில் சொன்னார்.ஆனால் கேட்ட எனக்குத்தான் வாழ்க்கையே வெறுத்துவிட்டது.

"இந்த அட்டையையும்,பெயர்மாற்றுவதற்கான வின்னப்பத்தையும் கொண்டுபோய் உங்களின் கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுங்கள்.அவர் அதை சரி பார்த்துவிட்டு,கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்புவார்.பின் அங்கும் அது சரிபார்க்கப்பட்டு..மீண்டும் இங்கே வரும்.உங்களுக்குத் தகவல் அனுப்புவோம்.அப்போது வந்தால் பெயரைமாற்றிக் கொடுப்போம்" என்று சொன்னதும்...அட தேவுடா என்னமாதிரியான சட்டதிட்டங்கள் இது என்று வெறுத்துவிட்டேன். சாலைக்கு அந்தப் பக்கம் இருக்கும் ஒரு கட்டிடத்திற்குப் போவதற்கு மூணு கிலோமீட்டர் சுத்தி வருவதைப் போல இவர்கள் செய்த தவறுக்கு என்னை ஏன் அலையவைக்கிறார்கள் என்று நினைத்தாலுல் அதை அந்த மேடத்திடம் வெளிப்படையாக சொல்ல முடியாமல்(சொன்னால் என்ன ஆகுமென்று எனக்குத் தெரியாதா)நன்றி சொல்லிவிட்டு வந்தேன்.

வீட்டுக்கு வரும் வழியில் கிராம நிர்வாக அதிகாரியின் வாடகை அலுவலகத்துக்குள் நுழைந்தேன்.மேசைக்கடியில் அந்த அதிகாரியின் கைகள் எண்ணிப்பார்த்துக்கொண்டிருந்த நோட்டுகளின் சரக்..சரக்..ஓசை சற்று திடுக்கிடலுடன் நின்றது.அவசர அவசரமாய் மேசை டிராயரைத் திறந்து கத்தையாக அதனுள் போட்டுவிட்டு லேசான எரிச்சலுடன் "என்ன சார் வேனும்"(இந்த மரியாதைக்கு ஒண்ணும் குறைச்சலில்லை)என்றார்."சார்...ரேஷன் கார்டுல பேர் மாத்தனும்." என்றதும்.பக்கத்திலிருந்த தலையாரியை(அவரின் "எல்லா" வேலைக்கும் எடுபிடி)காண்பித்து "அவர்கிட்ட சொல்லுங்க"என்றார்.

தலையாரியிடம் விஷயத்தைச் சொன்னதும்"சார்(முழுவதுமாக தமிழுக்குச் சொந்தமாகிவிட்ட ஆங்கில வார்த்தை)ஒரு விண்ணப்பம் குடுங்க..ரெண்டு ரூபா ஸ்டாம்ப் ஒட்டி.அப்புறம் உங்க பேர் இதுதாங்கறதுக்கு புரூப் குடுங்க,அப்படியே ரேசன் கார்டு செராக்ஸ் காப்பி ரெண்டு சேத்து குடுங்க" என்று நிறைய குடுங்க சொன்னதும்,"பெயர் ஃப்ரூஃப்புக்கு எதை தருவது" என்று கேட்டதும்,"வோட்டர்ஸ் லிஸ்ட்டோட காப்பி குடுங்க சார் போதும்"என்றார்."அதுக்கு நான் எங்கங்க போவேன் உங்ககிட்ட இருக்குமே"என்றதும்,மெதுவாக அவர்களுடைய மெத்தெடுக்கு மாறினார்.
"சார் அதெல்லாம் பெரிய அலைச்சல் சார்.பேசாம 200 ரூபா குடுத்துடுங்க எல்லாம் சரியாயிடும்.இல்லன்னா ஒவ்வொண்ணுத்துக்கும் நீங்கதான் அலையவேண்டியது இருக்கும்.கலெக்டர் ஆபீஸுக்கு போகனும்,எங்ககிட்ட வோட்டர்ஸ் லிஸ்ட் வாங்கறதுக்கு ஒரு விண்ணப்பம் தரனும்,அப்புறம் வட்டார வழங்கல் அதிகாரியப் போய் பாக்கனும்...இதெல்லாம் நீங்களே செஞ்சுக்கறதா இருந்தா செஞ்சுக்குங்க...ஒரு 20 நாள் ஆகும்."என்று சொன்னதும்..ஓங்கி ஒரு அறைவிட வேண்டுமென்ற என் எண்ணத்தை உடனடியாக கைவிட்டு,பவ்யமாக"என்னங்க இது..அவங்க செஞ்ச தப்புக்கு நான் ஏன் இப்படி அலையனும்.அவங்களேதான சரிபண்ணிக் குடுக்கனும்"என்றதும்..ஒரு கேவலமான பார்வையோடு"அப்படியா..சரி இதை அவங்ககிட்டயே போய்ச் சொல்லுங்க...சரி பண்ணிக் குடுத்துடுவாங்க"என்று வெகு நக்கலாகச் சொன்னதும்...ஆஹா...இந்த நியாய தர்மமெல்லாம் இங்கே நடக்காது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.சரி பிறகு வருவதாகச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.பின்னர் ஓட்டுநர் உரிமத்தில் பெயரும்,முகவரியும் ஆண்டவன் புண்ணியத்தில் சரியாக இருந்ததாலும்,அந்த ஆவனமே மற்ற என்னுடைய பணிகளுக்குப் போதுமென்பதாலும்...இன்னமும் நான் பாதிப் பெயரில்தான் குடும்ப அட்டையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

உண்மையிலேயே எனக்கு இந்த கேள்விகள் இன்னும் என் நெஞ்சை உறுத்துகிறது."இது அவர்கள் செய்த பிழைதானே..இதற்கு ஏன் இத்தனை சிக்கலான முறைகள்....இதை சீர்படுத்தவே முடியாதா...?