PDA

View Full Version : குற்றவாளியா(ஆ)க.......!



ஓவியன்
07-09-2007, 07:31 PM
குற்றவாளியா(ஆ)க.......!

சுற்றிலும் பார்கின்றேன்
சித்திர வதைகளிலும் புதுமைகள்
ஆடைகள் பார்த்து
மாதங்கள் பற் பல......!

உடலில் கம்பிகள் தடிகள்
தகர்க்காத இடமில்லை,
தலை கீழாக தொங்கி
தாகமின்றித் தவிப்பதே
ஆனது வாடிக்கை,
அது
சிலருக்கு வேடிக்கை....!

அவ்வப் போது குருதி
காச்சவென மின்சாரம்
பாயும் நாடி, நரம்புகள்...

நரகம் என்று படித்ததுண்டு
நம்பியதில்லை, ஆனால்
நம்ப வைக்கின்றது
என் உடலில் இரட்டித்த
என்புகளின் எண்ணிக்கை..!

செய்யாத குற்றத்தைச்
செய்ததாக சொன்னால்
செய்யும் வலிகளிலிருந்து
தப்பிக்கலாமாம்....

நேற்று
நையப் புடைத்தவன்
காதிலே சொன்னான்....

அப்போது தானறிந்தேன்
அட இப்படியும் ஒரு வழி
உள்ளதா குற்றவாளி ஆகவென...!

அக்னி
07-09-2007, 07:49 PM
மனிதம் என்ற மாண்பை,
உயிரோடு புதைத்துவிட்டு,
உயிரோடு வைத்து
தோலுரித்துப் பார்க்கும்,
நடமாடும் மனிதப் பிசாசுகள்...

நகக் கண்ணின் வேரைக்
கண்டறிய ஆராய்ச்சி செய்யும்,
வதையாளர்கள்...

மல வாசலை,
உட்செலுத்தியாக்கி...
சல வாசலை,
இறுகக்கட்டி,
புதுமை படைக்கும்
கொடுமையாளர்கள்...

முடிகளினை
ஒவ்வொன்றாய்ப் பிடுங்கி,
எண்ணிப்பார்க்கும்,
கையாளர்கள்...

வெற்றுமேனி முழுதும்,
மிதித்து விளையாடும்,
வினையாளர்கள்...

செய்பவனும்... தாங்குபவனும்...
வானினின்றும் குதித்தவர்களா?
இவர்களும் மனிதர்கள்தானே...

உசுப்பிவிட்டீர்கள் ஓவியன்... நெஞ்சம் கனக்கிறது...

ஓவியன்
07-09-2007, 07:59 PM
கவிக்கருவை உரித்து வைத்து அழகாக வந்த பின்னூட்டக் கவிதை........
பாராட்டுக்கள் அக்னி!!.

என்ன செய்வது அக்னி, தாயகத்தில் நம்மவர் படும் அவலங்களினால் இன்று திடீரென உதித்தது இந்தக் கவிதை.......

இளசு
07-09-2007, 08:02 PM
தேர்ட் டிகிரி டார்ச்சர் என அழைக்கப்படும் மூன்றாம் நிலை வன்கொடுமை..

பல மருத்துவ ஏடுகள் இப்படிப்பட்ட கொடுமைக்கு ஆளானவர்களுக்காக
தொடர்ந்து எதிர்ப்புக்குரல் காட்டினாலும்..

பல நாடுகளிலும் தொடர்ந்து....இப்படி!

வெளியுலகுகுக்கு −சில தெரிந்து.. பல தெரியாமல்

எலும்புகளின் எண்ணிக்கை இருமடங்கானதன் வலியை
இக்கவிதை படிப்பவர்க்கு அளிக்கிறது..


பாராட்டுகள் ஓவியன்..

அக்னியின் பின்னூட்டமும் அனல் வீச்சாய்...

ஓவியன்
07-09-2007, 08:09 PM
உண்மைதான் அண்ணா!

சட்டங்களின் படி இது தவறென்றாலும் சட்டத்தைக் காக்க வேண்டிய காவலர்களே இவற்றை செய்வதுதான் கொடுமையிலும் கொடுமை.........

மிக்க நன்றி உங்கள் அர்த்தபுஷ்டியான பின்னூட்டத்திற்கு....

அக்னி
07-09-2007, 08:26 PM
என்னைப் பொறுத்தவரையில்
நரமாமிசம் உண்பவர்கள் மேலானவர்கள்...
ஆனால்,
இந்தக் கொடுமையாளர்களோ...
இழிநிலை அரக்கர்கள்...

மகாகவியின் வரிகளிலிருந்து....

வெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று...
சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச்
சொல்லுவேன்; குத்திக் கொல்லுவேன்;
தட்டிப் பேசுவோருண்டோ? சிறைக்குள்ளே
தள்ளுவேன்; பழி கொள்ளுவேன்.

தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி...
சதையைத் துண்டு துண்டாக்கினும் உன்னெண்ணம்
சாயுமோ? ஜீவன் ஓயுமோ?
இதையதுள்ளே இலங்கு மஹாபக்தி
ஏகுமோ? நெஞ்சம் வேகுமோ?

ஓவியன்
07-09-2007, 08:37 PM
உண்மைதான் அக்னி, வலியைக் காட்டி பயமுறுத்தி பொய்யை மெய்யாக்கும் இவ்வாறான செயற்பாடுகளினால் உண்மையான இலட்சிய நோக்குகள் மேன் மேலும் உறிதியடையுமென்பதே உண்மை..........

ஆனால், இதிலே மாட்டித் தவிக்கும் அப்பாவிகள் பாடு தான் மிகப் பரிதாபம்.......

இளசு
07-09-2007, 08:41 PM
இந்த வாரம் வ.உ.சி அவர்களின் பிறந்தநாள்!!

நன்றி அக்னி..

பசிக்காக இன்னொரு உயிரைக் கொன்று புசிப்பதை இயற்கை எனலாம்..
மனக் குரூரத்தால் வதைக்கும் மிருகச்செயலை என்னென்பது?
இயற்கைப் பிறழ்வுப் பிறவிகள்..
அகற்றப்படவேண்டிய அமூக அழுக்குகள்..

jpl
08-09-2007, 01:44 AM
அவலச் சுவையில் சமூக நோக்கு உட்செலுத்தப்பட்டதில் மனம் கனக்கச் செய்யும் கவிதை ஓவியன்...

சிவா.ஜி
08-09-2007, 04:27 AM
ஒருவன் மனதாலும் உடலாலும் காயப்படுத்தப்படும்போது..அதுவும் செய்யாத ஒரு தவறுக்காக மிருகத்தினும் கீழான மனிதத் தோல் போர்த்திய அரக்கர்களால் வதைக்கப்படும்போது...குற்றவாளியாகிறான்...ஆக்கப்படுகிறான்.காவலர்கள் என்று தங்களை பொய்யாய் கூறிக்கொள்ளும் இந்த கிராதகர்கள் இப்படி எத்தனை குற்றவாளிகளை உருவாக்குகிறார்கள்.உங்கள் கவிதை படிக்கும்போதே அதன் வலி உணர முடிகிறது.பிள்ளைப்பூச்சிகள் கடும் விஷப்பாம்புகளாய் உருமாற்றப்படுவது இந்த சமூகத்துக்கு எத்தனை தீங்காகிவிடுகிறது.யார் இதை உணர்வார்கள்.நெஞ்சைத் தொடும் கவிதை.வாழ்த்துக்கள் ஓவியன்.

ஓவியன்
08-09-2007, 06:09 AM
அவலச் சுவையில் சமூக நோக்கு உட்செலுத்தப்பட்டதில் மனம் கனக்கச் செய்யும் கவிதை ஓவியன்...
மிக்க நன்றி ச்கோதரியே.........!

உங்கள் கவிதை படிக்கும்போதே அதன் வலி உணர முடிகிறது.பிள்ளைப்பூச்சிகள் கடும் விஷப்பாம்புகளாய் உருமாற்றப்படுவது இந்த சமூகத்துக்கு எத்தனை தீங்காகிவிடுகிறது.யார் இதை உணர்வார்கள்.நெஞ்சைத் தொடும் கவிதை.வாழ்த்துக்கள் ஓவியன்.
உண்மைதான் சிவா, எத்தனை குற்றவாளிகளும் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாதென்பது எனது கருத்து........
அதுவே இந்தக் கவிதைக் கருவும் கூட...........

மிக்க நன்றிகள் சிவா உங்கள் பின்னூட்டத்திற்கு.........!

பூமகள்
08-09-2007, 06:20 AM
அற்புதமான கவிக் கரு.. காவல் நிலையங்களில் நடக்கும் கொடுமைகளை அப்படியே கொண்டு வந்து காட்டியது உங்களின் கவி.
மனம் வலிக்கிறது நேரில் கொடுமைகள் பார்த்த பிரமை உங்களின் கவி படிக்கையில். அக்னியாரின் கவி அதை கலர் படம் போல் காட்டி விட்டது அப்பட்டமாய்...!

இப்படி துன்புற்று இறந்து போகும் அப்பாவிக் கைதிகள் ஏராளம். சட்டத்திற்கு தெரியாமல் மறைக்கப் படுவதும் ஏராளம்.

அவற்றை தோலுரித்துக் காட்டியது நன்கு ஓவியரின் வரிகள். கொடுமைகள் செய்பவர் மனித இனம் என்று சொல்லிக் கொள்ள வெட்கப் பட வேண்டி உள்ளது.:huh:

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்..!!" என்று ஓருயிர் செடிகளுக்கு கூட மனிதம் பார்த்த வள்ளலார் பிறந்த இந்த மனித இனத்தில் இப்படியான கொடுயவர்களும் இருப்பது மிக்க வேதனை அளிக்கிறது.:ohmy:
நெஞ்சம் கனக்க வைக்கிறது ஓவியன் அண்ணா மற்றும் அக்னியாரின் கவிதைகள்.

வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..!!:aktion033:

சுகந்தப்ரீதன்
08-09-2007, 07:28 AM
ஓவிய அண்ணா...என்னயிது....இத்தனை வலிகளோடு வரைந்திருக்கிறீர்கள்.... சிந்துகிறது செந்நீர் கண்களினுடே கண்ணீராய்....
இது அனுபவமா...?இல்லை ஆதங்கமா...? எதுவானாலும் வலிக்கிறது....
மாறினால் மனம் மாறாவிட்டால் சினம்.... அக்னியாரின் அக்னி வரிகள்...
வாழ்த்துக்கள் இருவ*ருக்கும்...!

அக்னி
08-09-2007, 12:20 PM
இந்த வாரம் வ.உ.சி அவர்களின் பிறந்தநாள்!!

நன்றி அக்னி..

பசிக்காக இன்னொரு உயிரைக் கொன்று புசிப்பதை இயற்கை எனலாம்..
மனக் குரூரத்தால் வதைக்கும் மிருகச்செயலை என்னென்பது?
இயற்கைப் பிறழ்வுப் பிறவிகள்..
அகற்றப்படவேண்டிய அமூக அழுக்குகள்..

ஆமாம் அண்ணா...
5 செப்டம்பர் 1872 − 18 நொவெம்பர் 1936
காலப் பகுதியில் வாழ்ந்த பெருமைக்குரிய கப்பலோட்டிய தமிழர்...

வ.உ.சி. அவர்களின்,
மேலதிக விபரங்களுக்கு... (http://www.tamilnation.org/hundredtamils/voc.htm)

அனைவருக்கும் நன்றி...

மனோஜ்
11-09-2007, 02:09 PM
மனிதன் மனிதனை புரிந்தாலும்
சட்டம் சூடுபோடும் இருப்பினும்
கவிதையில் அவை மனம்சுடுகிறது
நன்றி ஓவியன்

aren
12-09-2007, 11:07 AM
ஓவியரே, நாட்டில் நடக்கும் உண்மைகளை அப்படியே வெளியே கொட்டியிருக்கிறீர்கள். பல சமயங்களில் குற்றவாளிகளை இப்படித்தான் தேர்வுசெய்கிறார்கள் அவர்கள் பிரமோஷன் வாங்குவதற்காக. மகா பொதுஜனங்களும் வேறு வழியில்லாமல் இதற்கு ஒத்துழைக்கவேண்டியிருக்கிறது.

அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

ஓவியன்
13-09-2007, 08:53 AM
ஓவிய அண்ணா...என்னயிது....இத்தனை வலிகளோடு வரைந்திருக்கிறீர்கள்.... சிந்துகிறது செந்நீர் கண்களினுடே கண்ணீராய்....
இது அனுபவமா...?இல்லை ஆதங்கமா...? எதுவானாலும் வலிக்கிறது....
மாறினால் மனம் மாறாவிட்டால் சினம்.... அக்னியாரின் அக்னி வரிகள்...
வாழ்த்துக்கள் இருவ*ருக்கும்...!

மிக்க நன்றி சுகந்தா........

சொந்த அனுபவமில்லை, சொந்தங்களின் அனுபவம்...

ஓவியன்
13-09-2007, 08:55 AM
மனிதன் மனிதனை புரிந்தாலும்
சட்டம் சூடுபோடும் இருப்பினும்
கவிதையில் அவை மனம்சுடுகிறது
நன்றி ஓவியன்

குற்றவாளிகளை மட்டும் சட்டம் சூடு போடட்டுமே.......
நிரபராதிகளை கோடு போட்டால், சட்டதையே சூடு போடுவோம்...

மிக்க நன்றி நண்பா!.

ஓவியன்
13-09-2007, 08:57 AM
ஓவியரே, நாட்டில் நடக்கும் உண்மைகளை அப்படியே வெளியே கொட்டியிருக்கிறீர்கள். பல சமயங்களில் குற்றவாளிகளை இப்படித்தான் தேர்வுசெய்கிறார்கள் அவர்கள் பிரமோஷன் வாங்குவதற்காக. மகா பொதுஜனங்களும் வேறு வழியில்லாமல் இதற்கு ஒத்துழைக்கவேண்டியிருக்கிறது.

உண்மை தான் அண்ணா!

தங்களது வக்கிரங்களை வடிகாலாக்க குற்றவாளிகளைப் பாவிக்கின்றார்கள் என்பதை மறுக்க இயலாது......

நன்றிகள் பல பொன்னான உங்கள் பின்னூட்டத்திற்கு....

ஷீ-நிசி
13-09-2007, 08:57 AM
கடைசி 3 வரிகள், கவிதையை தூக்கி நிறுத்துகின்றன...

செய்யாத குற்றத்தை ஒத்துக்கொண்டால், வலிகள் குறைவு...ஆனால் தண்டனை நிச்சயம்.. வலியைப் போக்க வேறு வழி??....

வாழ்த்துக்கள்!

ஓவியன்
13-09-2007, 09:00 AM
உண்மைதான் ஷீ!

அந்த மூன்று வரிகளிலேயே இந்த கவிதையின் கருவை அடக்கி இருந்தேன்.

அமரன்
13-09-2007, 09:41 AM
உலகின் பாகங்களில்பலதில் நிகழும் துயரம்.
ஈழத்தில் அதன் செறிவு ரொம்பவே உயரம்.

உயரப் பிரதேச மக்களும் உள்ளடக்கபடுவது
அயராது சமாதானத்துக்காக உழைப்போம் என்பவர்க்கு உறைப்பதில்லை...
எங்கோ வலி எடுக்க எங்கோ நெறி கட்டும் கதை தாயகத்தில்...

ஓவியனின் உணர்வுகள் எரிமலைக் குழம்பாக
நின்ற வெள்ளத்தை வந்த தள்ளிச்சென்றதுபோல்
அக்னிக்குழம்புத் தேக்கம் கட்டுடைக்க
உணர்ச்சிப்பெருக்கில் வார்த்தைகளைத் தொலைத்துவிட்டு
கைகள் கட்டுண்ட நிலையில் நான்...
பாராட்டுக்கள் நண்பர்களே...!

அக்னி
13-09-2007, 09:50 AM
வார்த்தைகளை மறக்கடித்து,
மௌனியாக்கி,
தலையை மட்டும் ஆட்டவைத்து,
வாழ்வை முடிக்கும்
தொடராட்டம்...
என்று முடியுமோ..?

அமரன்
13-09-2007, 09:55 AM
மறக்கடித்த வார்த்தைகளை
அலாரமடித்து எழுப்பவல்ல
நீதி மணிகளே
மறுத்துவிட்ட நிலமை
இன்னும் தொடருதே....!

மணிகள் மௌனியாகையில்
வலி குறைத்து வலிமை கூட்ட
தலையாட்டுவதே சிறப்பன்றோ...!

ஓவியன்
29-09-2007, 12:10 PM
அன்பு அமருக்கும் அக்னிக்கும்...

உங்கள் பின்னூட்டங்களின் செழுமைகளில் எவ்வளவோ விடயங்களை அறியக் கூடியதாக உள்ளது மிக்க நன்றிகள் நண்பர்களே!.

kavinila
20-11-2007, 11:39 AM
அருமையான கவிதை...அப்படியே உனர்வுகளை உருக்குகின்றது

ஓவியன்
23-11-2007, 06:17 AM
மிக்க நன்றி கவினிலா..!!

ஆதவா
23-11-2007, 07:20 AM
அபாரம் ஓவியன். நெஞ்சில் காட்சிகளைச் சுமந்து தருகிறது கவிதை.

நிர்வாணத்தை அழகாக அடக்கி எழுதியமை கவனிக்க வைக்கிறது. சித்ரவதையில் பல புதுப்புது வகைகள் கண்டுபிடிக்கிறார்கள். (Saw படங்களைப் பார்க்கவும்) சோதிக்க மனிதன் தேவைப்படுகிறது.
மேனியெங்கும் தழும்பாக காயங்கள். நெருக்கமாக அமர்ந்துகொண்டு, தலைகீழாய் தொங்கவிட்டு, உடனே கொன்றாலாவது தெரியாமல் போகும், வதைத்து அடிபணிவது கொல்வதிலும் பாவம்.

நான் கேள்விப்பட்டேன். சில விசயங்களை அது எவ்வளவுதூரம் உண்மை என்பது தெரியாது, ஒரு நாட்டின் தலைவர், தன் அண்டை நாட்டின் இனப்பிரச்சனைக்கு உதவுவதாக படை அனுப்பி, அங்கே போரிடவேண்டிய இடத்தில் போரிடாமல் தன் இனத்தவரையே பலவகைகளில் கொடுமைப் படுத்தினார்களாம், பெற்றோர் முன்னே கற்பழித்தலும், பிள்ளைகளைக் கொண்டே பெற்றோர்களைக் கொள்வதும், பெண்களை அசிங்கப்படுத்தி சூரையாடியதும், தட்டிக் கேட்ட ஆண்களுக்கு காய்ச்சிய இரும்பூசிகளால் குத்துவதும்,,, அப்பப்பா,,, இங்கே சொல்லமுடியாதவைகள் நிறைய அரங்கேறியிருக்கின்றன..

நரகம் என்பது கற்பனையல்ல, நம்மை எதிர்ப்பவர்கள், நாம் யாரென்றே தெரியாமல் நம்மை எதிர்ப்பவர்கள் கையில் சிக்கும் போது நரக வாயிலை அடைந்துவிடுகிறோம். தெரிந்தோ தெரியாமலோ நரகங்களை அல்லது நரகங்களுக்கு அருகே அனுபவிக்கிறார்கள் எனது சகோதர நாடுகள். ஆனால் அதற்கு குற்றத்தை ஒத்துக் கொள்வதுதான் நரகமீட்பு எனில் அதைவிட நரகம் வேறேது? இங்கே உடற்காயங்களை மறைத்து மனக்காயத்திற்கு விந்திடுகிறோம்.

அதிலும் குறிப்பாக, இந்த ஜெயிலர்கள் தப்பிக்க, அல்லது சிலரைத் தப்பிக்க வைக்க இம்மாதிரி சொல்வதுண்டு. குற்றம் செய்யாவிடினும் குற்றவாளி ஆக, ஒப்புக்கொள்ளுதல் என்ற வழியும் இருக்கிறது. மேற்ச்சொன்ன மனக் காயத்திற்கு வித்து.


கவிதை சொல்லவந்தது கவிஞரின் தாயகப் பிரச்சனை, ஆனால் எல்லா இடங்களில் நடக்கும் இது பொதுப்பிரச்சனை வகையையே சார்ந்த்தாக அமைகிறது. வார்த்தைகள் நறுக்கி, முறுக்கி, தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது. வீண் வார்த்தைகளை ஒட்டி கவிதை வரவில்லை என்பது இதன் முதல் வெற்றிப் புள்ளி.

நீண்ட நாட்கள் என்றாலும், இன்றே எனக்கு படிக்க வாய்ப்பு கிட்டியது. தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

வாழ்த்துகள் ஓவியன்.

பென்ஸ்
23-11-2007, 07:32 AM
காதலில் இருந்து விடுபட்டு மற்ற தலைப்புகளை எடுத்து எழுத கொஞ்சம் தைரியம் வேண்டும்... அப்படியே எழுதினாலும் அடுத்தவர்களிடம் இருந்து கொட்டு வாங்காத அளவுக்கு எழுத திறமை வேனும்... நல்ல பின்னூட்டம் கிடைக்க எழுத்து வன்மை வேண்டும்...
எல்லாம் கலந்து சுவையாக ....
பாராட்டுகள் ஓவியன்...
சில நாட்க்களுக்கு முன் டிஸ்கவரி சானலில் சித்திரவதை செய்யும் கருவிகள் மற்றும் அதன் வழிமுறைகள் பற்றி காட்டிகொண்டிருந்தார்கள்...
இதை செய்பவர்களில் அதிகமானோர் மனநிலை தடுமாற்றம் உள்ளவர்கள்... சாதாரணமானவர்களால் இதை ரசித்து செய்ய முடியாது.... என்பதை அழகாக சொன்னார்கள்...

பென்ஸ்
23-11-2007, 07:34 AM
சித்ரவதையில் பல புதுப்புது வகைகள் கண்டுபிடிக்கிறார்கள். (Saw படங்களைப் பார்க்கவும்) சோதிக்க மனிதன் தேவைப்படுகிறது.
.
மிக சரி ஆதவா....
ஹாஸ்டல் படங்கள் இதைதான் காட்டுகின்றன....
இதை அனுபவித்து படமாக பார்க்கவும் முடிகிறது, இந்த படங்கள் வசூல் சாதனைகள் செய்கின்றன என்றால் அது வெட்ககேடானது....

ஓவியன்
23-11-2007, 08:05 AM
அபாரம் ஓவியன். நெஞ்சில் காட்சிகளைச் சுமந்து தருகிறது கவிதை.

நீண்ட நாட்கள் என்றாலும், இன்றே எனக்கு படிக்க வாய்ப்பு கிட்டியது. தாமத பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

ஆக்க பூர்வமான பின்னூட்டங்களை பெறுவதற்கு எத்தனை நாள் வேண்டுமானாலும் காத்துக் கிடக்கலாம் ஆதவா...

தாயகத்தில் நிரபராதியை குற்றவாளியாக்கி சிறையில் தள்ளுவதோ அல்லது இடைவழியில் தலை கொய்து வீதியில் வீசுவதோ வெகு சாதாரணம். அந்த வேதனை தான் இந்தக் கவிக்கருவின் மூலமென்றாலும் இந்த கொடுமை உலகெங்கும் ஊறிப் போய்க் கிடக்கிறதென்பது மறுக்க இயலா உண்மை....

உடல் காயத்தையும் மறைத்து விடலாம் ஆனால் நீங்கள் கூறியது போன்று குற்றவாளியாக ஏற்றுக் கொண்டு தண்டனை கழிந்து சமூகத்தில் குற்றவாளி இல்லாமலேயே முன்னாள் குற்றவாளி(!!) என்ற பட்டத்துடன் வாழும் மனக் காயம் இருக்கிறதே அதற்கு இந்த உலகில் மருந்தே கிடையாது.....

மிக தெளிவான, அழுத்தமான ஒரு பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் ஆதவா..!!

ஓவியன்
23-11-2007, 08:12 AM
காதலில் இருந்து விடுபட்டு மற்ற தலைப்புகளை எடுத்து எழுத கொஞ்சம் தைரியம் வேண்டும்... அப்படியே எழுதினாலும் அடுத்தவர்களிடம் இருந்து கொட்டு வாங்காத அளவுக்கு எழுத திறமை வேனும்... நல்ல பின்னூட்டம் கிடைக்க எழுத்து வன்மை வேண்டும்...
எல்லாம் கலந்து சுவையாக ....
பாராட்டுகள் ஓவியன்...
சில நாட்க்களுக்கு முன் டிஸ்கவரி சானலில் சித்திரவதை செய்யும் கருவிகள் மற்றும் அதன் வழிமுறைகள் பற்றி காட்டிகொண்டிருந்தார்கள்...
இதை செய்பவர்களில் அதிகமானோர் மனநிலை தடுமாற்றம் உள்ளவர்கள்... சாதாரணமானவர்களால் இதை ரசித்து செய்ய முடியாது.... என்பதை அழகாக சொன்னார்கள்...


"இன்னும் இன்னும் கவி எழுதும் ஆர்வத்தை உங்கள் பின்னூட்டங்களே தரும் நமக்கு". என்பதற்கு எத்துணை பொருந்தமானது உங்கள் பின்னூட்டம்.

மிக்க நன்றி பென்ஸ் அண்ணா!
----------------------------------------------------------------------------------------------
உண்மைதான் உள் மன வங்கிரங்களால் பீடீக்கப்பட்ட ஒரு வகை மன நிலை தடுமாற்றமுடையவர்களே இத்தகு செயல்களில் ஈடுபடுகிறார்கள். சிலவேளை தொடர்ந்து இத்தகு செயற்பாடுகளில் ஈடு பட ஈடு பட அவர்கள் மனமும் மரத்து இப்படியாகி விடுகிறதோ...?

ஆதி
24-11-2007, 05:30 AM
குற்றவாளியா(ஆ)க.......!

சுற்றிலும் பார்கின்றேன்
சித்திர வதைகளிலும் புதுமைகள்
ஆடைகள் பார்த்து
மாதங்கள் பற் பல......!

உடலில் கம்பிகள் தடிகள்
தகர்க்காத இடமில்லை,
தலை கீழாக தொங்கி
தாகமின்றித் தவிப்பதே
ஆனது வாடிக்கை,
அது
சிலருக்கு வேடிக்கை....!

அவ்வப் போது குருதி
காச்சவென மின்சாரம்
பாயும் நாடி, நரம்புகள்...

நரகம் என்று படித்ததுண்டு
நம்பியதில்லை, ஆனால்
நம்ப வைக்கின்றது
என் உடலில் இரட்டித்த
என்புகளின் எண்ணிக்கை..!

செய்யாத குற்றத்தைச்
செய்ததாக சொன்னால்
செய்யும் வலிகளிலிருந்து
தப்பிக்கலாமாம்....

நேற்று
நையப் புடைத்தவன்
காதிலே சொன்னான்....

அப்போது தானறிந்தேன்
அட இப்படியும் ஒரு வழி
உள்ளதா குற்றவாளி ஆகவென...!

இவ்வாறு பாதிக்கப் பட்டவர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கதான் செய்கிறார்கள்.. திருக்குறல், புத்தம், ஜெய்னம், கிறிஸ்துவம் போன்ற மதங்கள் பிறத உலகில்தான் இப்படிக் கொடுமை செய்வார்களும் பிறக்கிறார்கள்..

ஓஷோவைப் படித்துவிட்டு யோசித்துப் பார்த்தேன், என்ன சொல்கிறார் என, எனக்கு புரிந்தது இதுதான்..

நீ யார் உன்னை நினைத்திருகிறாயோ அது நீ அல்ல

புத்தனைப்படித்து விட்டு சிந்தித்த பொழுதில், தென்பட்டது இதுதான்

நீ ஒரு புஜ்ஜியம்

மகாவீரனை சுவைத்துவிட்டு அசைப்போட்ட போது தட்டுப்பட்டது இதுதான்

யாதினையும் நிர்வாணமாய்ப் பார்

கிறிஸ்துவைப் பற்றி அலசியபோது அகப்ட்டது இது

பிறரையும் உன்னைப் போல் நேசி

சித்தர்களைப் பருகிவிட்டு தாகம் தணிந்த போது உணர்ந்தது இதுதான்

ஒன்றுமில்லாத உலகில் நீயும் ஒன்றுமில்லாமல் போவாய்

இதை எல்லாம் எண்ணிவிட்டு நம் வாழ்வைப்பற்றி எண்ணிப்பார்த்தேன் எனக்குள் எப்போதும் ஒலிக்கிற குரல் சொன்னது குறைந்தபட்சம் மனிதனாகவாவது வாழ்ந்துவிட்டு மறைந்துபோ..

ஓவியன் மிருகங்களாய் இருந்து மனிதனாய் பரினாமம் கொண்ட உயிர்கள், தன் பழைய பிறவிக்கே திரும்பிக்கொண்டிருக்கின்றன..
விஞ்ஞானம் மனிதனை இறைவனாய் ஆக்குமோ இல்லையோ, மிருகமாய் மாற்றிவிடும் என்பது ஊர்ஜிதமாகிறது..


காலத்திற்கு ஏற்றப்படைப்பு, அழகியலில் ஆழ்ந்து மயங்கிய கவிதைகள் அத்தருணத்திற்கு ஜெய்களாம், காலங்களைக் கடந்து வாழாது..

இந்த கவிதை மனிதனின் மிருகப் பரினாமத்தை அடிக்கோடிட்டு எழுந்தப் படைப்பு இது தற்காலத்தை மட்டுமல்ல எதிர்காலதையும் வென்று வாழும்.

வாழ்த்துக்கள்..

-ஆதி