PDA

View Full Version : முற்றுபெறாத முயற்சிகள்



சிவா.ஜி
07-09-2007, 08:01 AM
"என்னென்னவோ ஆசைகள்
எண்ணத்திலே ஓசைகள்"
என்பதைப்போல எத்தனையோ ஆசைகள் என் மனதில் இருந்த காலம் என் இளமைக்காலம்.கலை என்பது என் மனதில் மட்டுமல்ல உடலின் ஒவ்வொரு செல்லிலும் உயிர்கொண்டிருக்கிறது இப்போதும்.ஆனால்...எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் சிறிதளவாவது நிறைவேறியது நான் சொந்தமாய் சம்பாதிக்கத் தொடங்கியதும்தான்.

பள்ளிப்பருவத்தில் படிப்பை முடிக்கவே உன்பாடு என்பாடு என்று ஆகிவிட்டது.நல்ல ஒரு வேலை கிடைத்து நான் மும்பைக்கு வந்த பிறகு என் முன்னால் ஒரு பரந்து விரிந்த ஒரு உலகம் தெரிந்தது.எனக்குத்தேவைப்பட்ட எல்லாமும் ஒரே கூரைக்குள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.நான் வசித்த அணுசக்திநகர் என்ற அந்த குடியிருப்பு பிரதேசம் அத்தனை கலைகளையும் கற்றுத்தருகிறேன் வா என்று என்னை இருகரம் நீட்டி அழைத்தது.

அங்கிருந்த எங்கள் தமிழ் கலைமன்றமெனும் அமைப்பு இயல்,இசை,நாடகம் என்ற முத்தமிழையும் கற்றுத்தர எல்லா உதவிகளையும் செய்து வந்தது.முதலாவதாக எனக்கு மிக விருப்பமான நடனம் கற்றுக்கொள்ள ஆர்வமாயிருந்தேன்.அந்த மன்றத்தின் சார்பாக நடத்தப்பட்ட நாட்டிய வகுப்பின் நடன ஆசிரியராய் இருந்தது வேறு யாருமல்ல...நடிகர் கமலஹாசனின் மூத்த சகோதரி திருமதி.நளினிரகுதான். அவரிடம் சேர்ந்து 6 மாதங்கள் பரத நாட்டியம் பயின்றேன்.இதனிடையில் கராத்தே வகுப்பும் என்னைக் கவர...அதிலும் சேர்ந்தேன். பரத நாட்டியத்தின் அடவுகளும்,முத்திரைகளும் வேறு ரூபமாக எனக்கு கராத்தேயில் தெரிந்தது.அதனால் என்னால் மிகச்சுலபமாக அதில் திறமையை வளர்த்துக்கொள்ள முடிந்தது.அதனால் எனக்குக் கிடைத்த சிறப்புப் பாராட்டு..அதில் முழுமையாக ஈடுபடவைத்ததால்,பரத நாட்டிய வகுப்புக்குச் செல்வதை நிறுத்தி விட்டேன்.

படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக..வெள்ளை,மஞ்சள்.நீலம்,கருஞ்சிவப்பு என்று பட்டைகள் வாங்கி மூன்றரை வருட உழைப்பில் சீனியர் ப்ரவுன் என்ற தகுதியை அடைந்து,அடுத்த முக்கிய கட்டமான கறுப்புப் பட்டைக்கு தயார் செய்து கொண்டிருந்த போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது.நானும் என் நன்பனும் பயணித்துக் கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம்,ஒரு சரக்குந்தால் மோதப்பட்டு என் முழங்கால் சேதமடைந்தது.இன்னும் ஒரு மாதத்தில் அந்த தேர்வுக்காக சென்னை செல்ல எல்லா ஏற்பாடும் நடந்துகொண்டிருந்த சமயத்தில் இந்த விபத்து அனைத்தையும் அடைத்துவிட்டது.சென்னையிலிருந்த எங்களின் சீப் சென்ஸாய் திரு.மோஸஸ் திலக் அவர்களும் எனக்குத் தைரியம் கொடுத்தார்.கவலைவேண்டாம் இன்னும் கொஞ்ச நாள் கழித்து நன்றாகத் தேறியதும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று சொன்னாலும் அது முடியாமல் போயிற்று.இன்றளவும் எனக்குள் மிகுந்த வலியுணர்த்தும் இயலாமை இது.

இதே காலக்கட்டத்தில் இசையார்வமும் வந்து கிதார் வகுப்பில் சேர்ந்தேன்.ஒருமாதமாக கைவிரல்களில் ரத்தம் வர கம்பிகளை அழுத்தி முடிந்த அளவு கற்றுக்கொளள முயன்றேன்...ஆனால் வகுப்பைத் தொடர முடியாமல் வேறு சில வேலைகளில் பளு அதிகமாகி விட்டது.தமிழ்கலை மன்றத்தின் நாடக குழுவில் என்ன இணைத்துக்கொண்டு நிறைய நாடகங்கள் அரங்கேற்ற இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் தமிழ்மன்றங்களின் அழைப்பின் பேரில் போய் வந்து கொண்டிருந்ததாலும்,இளைஞர்களாக சேர்ந்து அணுயுவா என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் சேரிப் பகுதி மக்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்ததாலும், தொடர்ந்து வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை.அதனால் கிதார் கற்றுக்கொள்ளும் முயற்சியும் முற்றுபெறவில்லை.

எங்கள் நாடகத்தின் இயக்குநர் திரு.வெங்கட் அவர்களின் எதிர்பாராத மரணத்தால் நாடக்ககுழுவும் கலைந்துவிட்டது.அதன் பிறகு திருமணம் ஆனது,பொருளாதாரப் பிரச்சனைகள் கூடியது..அதற்கான பொருள்தேடலில் என்னுடைய கலைத்தேடல் கலைந்துபோனது.

பூபாளம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்து மிக வெற்றிகரமாக பத்திரிக்கையை வெளியிட்டுக்கொண்டிருந்தேன்.அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த என் நன்பன் பாலாஜி,மற்றும் நாராயனன் இருவரும் வேறு நல்ல வேலை கிடத்து போய்விட்டதால்..அதையும் தொடரமுடியாமல் நின்று விட்டது.

பொருளாதாரத் தேவைகளுக்காக அந்த நாட்களின் சின்னத்திரையில் பல வேலைகளை செய்து வந்தேன். இந்தியில் எடுக்கப்படும் விளம்பரப்படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்தபோது,சில பாத்திரங்களுக்கு பின்னனி குரல் கொடுத்து வந்தேன்.மற்றும் சில மேடையலங்கார வேலைகளிலும் ஈடுபட்டிருந்தேன்.அந்த துறையில் மெள்ள வளர்ந்து கொண்டிருந்தபோது ஒரு வாய்ப்பு வளைகுடா நாடு செல்லக் கிடைத்தது.அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதுதால் இந்த துறையிலும் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு என்னால் பங்காற்ற முடியவில்லை. அதன் பிறகு வெறும் பணம் தேடும் இயந்திரமாகிவிட்டேன்.

இப்படி என்னுடைய எல்லா முயற்சிகளும் முற்றுபெறாமல் பாதியிலேயே பழுதடைந்து நின்றுவிட்டது.எனவே இப்போதும் என் பிள்ளைகளிடம் நான் சொல்வதெல்லாம்...எதைக் கற்றுக்கொள்ள முயன்றாலும் அதை முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள்.எனக்கு இது தெரியும் என்று சொல்லும்போது அதில் சிறப்பானவராக இருத்தல் மிக அவசியம் என்பதைத்தான்.

நான் இதை இங்கே சொல்லவந்ததன் சாராம்சம்.....அரைகிணறு தாண்டுவது எப்போதுமே சரியல்ல...எந்தத் துறையாக இருந்தாலும்..அதன் முழு பரிமாணத்தையும் அறிந்துகொள்ள வேண்டும்.குப்பை அள்ளுவதாக இருந்தாலும்,இவரைப்போல இவ்வளவு சுத்தமாக யாராலும் குப்பை அள்ள முடியாது என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும்.இது என் அனுபவத்தில் நான் அறிந்துகொண்டதால் இதை மன்ற உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

alaguraj
07-09-2007, 09:57 AM
நடனம், கராத்தே, இசை, நாடகம், பத்திரிக்கை ஆசிரியர், சின்னத்திரை, டப்பிங், இன்டீரியர் என பல்துறை அனுபவங்கள், இருந்தாலும் எந்த துறையிலும் பரிணமிக்கவில்லை என்ற உங்கள் ஆதங்கம் அறிவுரை எல்லோரும் கடைபிடிக்கவேண்டியவை நல்ல கருத்துக்கள்... மற்ற நண்பர்களுக்கும் இது போல பல அனுபவங்கள் இருக்கும். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணா.

ஓவியன்
07-09-2007, 11:18 AM
நான் இதை இங்கே சொல்லவந்ததன் சாராம்சம்.....அரைகிணறு தாண்டுவது எப்போதுமே சரியல்ல...எந்தத் துறையாக இருந்தாலும்..அதன் முழு பரிமாணத்தையும் அறிந்துகொள்ள வேண்டும்.குப்பை அள்ளுவதாக இருந்தாலும்,இவரைப்போல இவ்வளவு சுத்தமாக யாராலும் குப்பை அள்ள முடியாது என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும்.இது என் அனுபவத்தில் நான் அறிந்துகொண்டதால் இதை மன்ற உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

அன்பான சிவா!

உங்களது இந்தப் பதிவு சொல்லி நிற்கும் கருத்தினை என்னால் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளவே இயலாது, ஏனென்றால் இந்த பரந்து பட்ட உலகத்திலே எந்த ஒரு கலையையும் நாம் முற்று முழுதாக கற்க இயலாது சிவா........
கலைகளினது எல்லைகள் அப்படிப் பட்டவை, எதாவது ஒரு கலையை முற்று முழுதாக அறிய வேண்டுமெனின் நமக்கு ஒரு ஆயுள் போதாது என்பதே உண்மை. வாழ்க்கை என்பது ஒரு ஆறு போன்றது சில இடங்களிலே அந்த ஆற்றினை எதிர்த்து எதிர் நீச்சல் போட்டே ஆகவேண்டும், இன்னும் சில இடங்களில் ஆற்றின் போக்கிலேயே நம்மை அனுமதிக்க வேண்டும், அது தான் புத்திசாலித்தனம் கூட.........
இப்படி வாழ்க்கை ஆற்றின் போக்கிலே நம்மை அனுமதிக்கையில் நாம் விரும்பிய இடத்திலே கரையேற முடியாது, நாம் அந்த குறிப்பிட்ட இடத்திலே கரையேற வேண்டுமென கண்ட கனவு ஆற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட்டு விடும். ஆனால் நாம் கரையை அடைந்த பின்னர் கரையிலே நடந்து மீள அடையவேண்டி நாம் கனவு கண்ட இடத்திற்கு வரலாம். இங்கே கலைகளும் அப்படித்தான், விட்டவற்றை இன்று கற்க தடைகள் ஒன்றுமில்லையே..........

இப்போது உங்களையே எடுத்துப் பார்ப்போம், கறுப்பு பட்டை பெறாவிட்டாலும் உங்களுக்கு கராத்தே தெரியும் அது உங்களுக்கு எத்தனை வகைகளில் உதவக் கூடியது.....
இதிலே துளியேனும் தெரியாமல் இருப்பதை விட இந்தளவு தெரிந்திருப்பது எவ்வளவு மேலானது.........
இசை, ஓவியம், நாடகம், கவிதை, கட்டுரை என்று நீங்கள் அறிந்த எல்லாக் கலைகளும் இத்தகையனவே..........

ஆகவே இத்தனை கலைகளை அறிந்த எங்கள் கலக்கல் நாயகன் சிவாக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..............!

சிவா.ஜி
08-09-2007, 04:18 AM
அன்பான சிவா!

உங்களது இந்தப் பதிவு சொல்லி நிற்கும் கருத்தினை என்னால் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளவே இயலாது, ஏனென்றால் இந்த பரந்து பட்ட உலகத்திலே எந்த ஒரு கலையையும் நாம் முற்று முழுதாக கற்க இயலாது சிவா........
கலைகளினது எல்லைகள் அப்படிப் பட்டவை, எதாவது ஒரு கலையை முற்று முழுதாக அறிய வேண்டுமெனின் நமக்கு ஒரு ஆயுள் போதாது என்பதே உண்மை. !
ஓவியன் உங்கள் கருத்து சரியே,இருப்பினும் நான் சொல்ல வந்தது...ஒரு கலையை கற்கும்போது அதனை முழுமையாக...என்றால் அதனைக் கையாளக்கூடிய அளவுக்குக் கற்க வேண்டும் என்பதே.அதாவது உதாரனமாக ஓவியம் கற்றுக்கொண்டால் ஒவ்வொரு ஸ்ட்ரோக்கிலும் தான் ஓவியன் என்பதை அடையாளம் காட்ட வேண்டும்.நீங்கள் சொல்வதைப்போல எந்த கலைக்கும் எல்லையில்லை.இசைஞானியாக உள்ள இளையராஜாவும் இன்றும் கற்று வருகிறாரென்றால் அதன் அடுத்த பரிமானங்களைத் தேடித்தானேயொழிய அடிப்படையை அல்ல.என்னைப்போல ஒருமாதம்,ஆறுமாதம் என்று அரைக்கிணறு தாண்டக்கூடாது என்றுதான் சொல்லவந்தேன்.பலவற்றிலும் கால் பதித்து பாதிவழியில் விடுவதைவிட எதையாவது ஒன்றை தெரிவு செய்து முழுமனதோடு கற்கவேண்டுமென்றே வலியுறுத்துகிறேன்.உங்கள் பின்னூட்டம் வெகு பிரமாதம்.சொல்லவந்ததை மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி ஓவியன்.

lolluvathiyar
08-09-2007, 07:48 AM
உங்கள் அனுபவத்தை நன்றாக தந்திருகிறீர்கள். எத்தனை விசயங்களை கற்று கொள்ள ஆர்வத்துடன் முயற்சி செய்திருகிறீர்கள் கேட்கவே மலைப்பாக இருகிறது. எதுவும் முற்று பெராமால் இருந்தாலும் உங்கள் ஆர்வம் மிக பாராட்ட தக்கது.
நான் நேர்மாரானவனாக இருந்தேன். எங்கப்பா என்னை நிறைய கற்று கொள்ள உற்சாக படுத்தினார். ஹிந்தி, டேன்ஸ் கிளாஸ், சங்கீதம், செஸ் இப்படி நிரைய கற்று கொள்ள வாய்பு எனக்கு வந்தும் ஆர்வமில்லாததால் எதையும் நான் கற்று கொள்ளாமல் விட்டுவிட்டேன். என் இளம் வயதை நான் அ நியாமகா தொலைத்து விட்டேன் என்றே சொல்லலாம்.
என் பள்ளி பருவத்தில் எனக்கு என் அப்பா செஸ் காரம்போர்ட் குயுப் எல்லாம் வாங்கி தந்தார். ஆனால் நானோ கபடி, புள்ளிந்தடி விளையாடியே இவற்றை கற்று கொள்ள வில்லை. கல்லூரி முடிந்த பின்னும் கூட ரம்மியில் தான் பொழுதை களித்தேன். உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன்

சிவா.ஜி
08-09-2007, 07:56 AM
பள்ளிப்பருவத்திலும் இருந்த அந்த ஆர்வம்...முயற்சியாய் மாறமுடியவில்லை.காரணம் பொருளாதார சிக்கல்.ஆனால் அந்த கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டும் இன்னமும் என்னிடமுள்ளது. இப்போது சிறிது மெச்சூரிட்டி வந்துள்ளதால் எதையும் முறையாக கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.ஆனால் உங்கள் எழுத்துக்களிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால்,நீங்கள் கற்றுக்கொள்ளாமல் விட்டதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை...இப்போது நீங்கள் அறிந்திருக்கும் வாழ்க்கைப்பாடம் எல்லாவற்றிலும் மேலானது..அனைவரும் கண்டிப்பாக கற்க வேண்டியது.பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வாத்தியாரே.

ஓவியன்
08-09-2007, 09:48 AM
பலவற்றிலும் கால் பதித்து பாதிவழியில் விடுவதைவிட எதையாவது ஒன்றை தெரிவு செய்து முழுமனதோடு கற்கவேண்டுமென்றே வலியுறுத்துகிறேன்.

உண்மைதான் சிவா......!
செய்வனவற்றைத் திருந்தச் செய்வோமே...........!

இளசு
08-09-2007, 01:59 PM
அன்பு சிவா

தீராத தேடல் மன்னர் நீங்கள்.. பெருமையாய் இருக்கிறது..

முழுமை − மனிதனின் முடிவான நோக்கம்.. அதை வலியுறுத்துதல் சரியே..

இளமையில் வாய்ப்பிருக்கும்போது பல கலைகளை ருசிபார்த்து, பிடித்ததை இறுக்கிப்பிடித்து முழுத்தேர்ச்சி அடைவதும் நல்லதே..

தொடராமை, முடிக்காமை − வருத்தமே..! ஆனால்
தொடங்காமை − இழுக்கு!

நல்ல பதிவுக்குப் பாராட்டுகள்!

சிவா.ஜி
08-09-2007, 02:08 PM
உற்சாகம் தரும் வரிகள்.

தொடராமை, முடிக்காமை − வருத்தமே..!

இந்த வருத்தம் எனக்கும் இருப்பதால்...இன்னும் ஒருவருடம் இழுத்துப்பிடித்து இந்த அஞ்சாத வாசத்தை முடித்துவிடுவேன்.பிறகு என் முற்றுபெறாத முயற்சிகளில், என் வயது ஏற்றுக்கொள்ளும் சிலவற்றையாவது முடிக்க நினைத்துள்ளேன்.இந்த உத்வேகம் தந்தது முதலில் ஓவியன்,இப்போது நீங்கள்.மனம் நிறைந்த நன்றிகள் இளசு.

அக்னி
08-09-2007, 02:12 PM
சிவா.ஜி...
உங்கள் முயற்சிகளின் போதான தடங்கல்கள் வீண்விரயங்களால் வந்ததல்ல...
மாறாக, வாழ்வின் தவிர்க்கமுடியாத சூழ்நிலைமாற்றங்களினால் தடைப்பட்டவையே... அந்தவகையில் ஆறுதலே...
நீங்கள் சொன்ன கருத்தை நான் ஏற்கின்றேன். எதைக் கற்பதானாலும் முழுமையாக கற்க, அதாவது, முழுமை நிலையில் உள்ளேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு கற்றுக்கொள்ள திட்டமிடல் வேண்டும். இல்லாவிட்டால், அது எமக்கு மட்டும் பயனைத் தந்தாலும், அதிகாரபூர்வமாக, நாம் அடுத்தவருக்கு, அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியாத சூழ்நிலைக் கைதிகள் போன்றாகிவிடுவோம்.
ஆனால், காலம், சூழல் போன்றவற்றின் ஆளுமையில் நாம் கட்டுப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததே...

சிறந்த பதிவைத் தந்தமைக்கு நன்றி!

அக்னி
08-09-2007, 02:14 PM
என் வயது ஏற்றுக்கொள்ளும் சிலவற்றையாவது முடிக்க நினைத்துள்ளேன்.இந்த உத்வேகம் தந்தது முதலில் ஓவியன்,இப்போது நீங்கள்.மனம் நிறைந்த நன்றிகள் இளசு.

மனதின் இளமை நிலை, வயதில் மாற்றம் தராது...
உங்கள் எதிர்பார்ப்புக்களின் நிறைவான பூர்த்திக்கு வாழ்த்துகின்றேன்...

மனோஜ்
08-09-2007, 02:18 PM
சிவா வாழ்க்கை பயணம் அருமையாய் அமைந்தது சிறப்பு எனினும் எவற்றிலும் முற்றுபுள்ளி வைக்க முடியாவிட்டாலும் தொடக்க புள்ளி பெற்றது சிறப்புதான்

சிவா.ஜி
08-09-2007, 02:19 PM
இல்லாவிட்டால், அது எமக்கு மட்டும் பயனைத் தந்தாலும், அதிகாரபூர்வமாக, நாம் அடுத்தவருக்கு, அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியாத சூழ்நிலைக் கைதிகள் போன்றாகிவிடுவோம்.
ஆனால், காலம், சூழல் போன்றவற்றின் ஆளுமையில் நாம் கட்டுப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததே...

வெகு அருமையான கருத்து அக்னி.என் மனதில் இருப்பதை அப்படியே படித்ததுபோல இருந்தது உங்களின் வரிகள்.எனக்குத் தெரிந்ததை என் பிள்ளைகளுக்குக் கூட முறையாக,முழுமையாக சொல்லித்தர முடியவில்லை.அந்த ஆதங்கத்தின் விளைவுதான் இந்த பதிவு.அதை மிகச்சரியாக உணர்ந்து எழுதிய உங்கள் பின்னூட்டம் என்னை நெகிழ வைக்கிறது.மிகச்சிறந்த உறவுகளுடன்தான் நாம் மன்றத்தில் வாழ்கிறோம் என்ற பெருமிதம் உண்டாகிறது.மிக்க நன்றி அக்னி.

சிவா.ஜி
08-09-2007, 02:22 PM
சிவா வாழ்க்கை பயணம் அருமையாய் அமைந்தது சிறப்பு எனினும் எவற்றிலும் முற்றுபுள்ளி வைக்க முடியாவிட்டாலும் தொடக்க புள்ளி பெற்றது சிறப்புதான்

நன்றி மனோஜ்.தொடக்கப்புள்ளிவைத்ததுவரை சரி இன்னும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை.அரைப்புள்ளியில் நிறுத்தியிருப்பதாக நினைத்திருக்கிறேன்.

அக்னி
08-09-2007, 02:26 PM
எனக்குத் தெரிந்ததை என் பிள்ளைகளுக்குக் கூட முறையாக,முழுமையாக சொல்லித்தர முடியவில்லை.

பல ஐரோப்பிய நாடுகளிலும், என்னதான் ஒரு துறையில் திறமைசாலிகளாக இருந்தாலும், அனுபவங்கள் இருந்தாலும், உறுதிப்படுத்தப்பட்ட தகைமை சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள்...
குறையாய் விட்ட ஒரு கலையை, எம் சொந்த முயற்சியால், தனிப்பட்டமுறையில் நிறைவாக்கிக் கொண்டாற்கூட, அதனூடாக, அத்துறைசார்ந்து ஒரு வேலையை பெற்றுக்கொள்வது என்பது, உரிய முறையில் இல்லாதவரையில் சாத்தியமற்றதே...

சிவா.ஜி
08-09-2007, 02:34 PM
ஆமாம் அக்னி...இந்த முறை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இருக்கிறது.ஆனால் இந்தியாவில்..விட்ட குறை தொட்ட குறையாக அந்த பரம்பரை தொழிலை சந்ததியினருக்குச் சொல்லித்தரும் பழக்கம் இன்றும் இருக்கிறது.ஆனால் இப்படிப்பட்ட அதாவது என்னைபோன்றோரால் அவற்றைக் கற்றுத்தர முடியாது. இப்போதில்லையெனினும் கண்டிப்பாக ஏதாவது ஒரு துறையில் திருப்தி தருமளவுக்கு நிபுணத்துவம் பெறுவேன்.

அக்னி
08-09-2007, 02:43 PM
இப்போதில்லையெனினும் கண்டிப்பாக ஏதாவது ஒரு துறையில் திருப்தி தருமளவுக்கு நிபுணத்துவம் பெறுவேன்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்...
நானும் இந்த உறுதிமொழியை, இலட்சியமாகக் கொள்ள வேண்டியவனே...
உங்கள் பதிவு எனக்கும் சிறந்த உந்துதலாக அமைந்தது.
நன்றி...