PDA

View Full Version : இறுதிகட்டம்!



sadagopan
05-09-2007, 01:43 PM
நண்பர்களே நீண்ட நாளாக ஒரு நகைசுவை கதை எழுத ஆசை:
சிரிப்பு வரவழைத்தால் சந்தோசம்



இன்னிக்கி எப்படியும் கதை எழுதிறணும்னு சனிக்கிழமை காலையிலே எழுந்தவுடனேயே முடிவு செஞ்சுட்டேன்.
எத செஞ்சாலும் வீட்டில் எல்லாருக்கும் அறிவிப்பு செய்யறதுதான் வழக்கம். அதன்படி, அறிவிப்பு செய்தாகிவிட்டது.

'ஆரம்பிச்சுட்டாண்டா; நீ எழுதறதயெல்லாம் படிக்கிற மாதிரி ஆகிப்போச்சே காலம்' - அம்மா.

'ஏங்க, வீட்லதான இருக்கீங்க, ஏதானும் சின்ன வேலைன்னா செஞ்சு குடுத்துட்டு, நீங்க பாட்டுக்க எழுதுங்க!' - மனைவி

'அட, வேலையத்த வேலை. பிள்ளைங்கள கூட்டிகிட்டு எங்காச்சும் போடா; அம்மா, அண்ணி, பொண்டாட்டிக்கு ஒரு நாளாச்சும் ரெஸ்ட் கிடைக்கும்ல?' - அண்ணன்.

'மச்சினரே, எழுதுறது சரி, பரிசேதாச்சும் கொடுப்பாங்களா?' - அண்ணி.

'எழுதறதுக்கெல்லாம் கொடுக்கமாட்டாங்க, எல்லாத்துலயும் நல்லாயிருந்தாதான் தருவாங்க,' - நான்.

'இதப்பார்றா, நக்கல; அப்ப நீயேண்டா எழுதி டயத்த வேஸ்ட் பண்ற' - ன்னு கேட்டான் அண்ணன்!!

முடிவு எடுத்தது எடுத்ததுதான்; கருமமே கண்ணாயினார்! மெல்லப் போய் மடிக் கணினியை எடுத்து ப்ளக்கை செருகப்போனேன்.(லேப் டாப் தாங்க, தமிழ்ல, மடிக்கணினி-ஹி,ஹி)

'ஏங்க, பார்த்து பிள்ளைங்கல்லாம் எழுந்திருக்கிற நேரம்; வயர் கியர் தடுக்கி விழுந்துச்சு, நான் பொல்லாதவளாயிருவேன்'- பத்தினியின் எச்சரிக்கை!

'பாட்டரில ஒரு மணி நேரமாவது வேல பார்க்கும்; அதுக்குள்ள முடிச்சுடுவேன்'-நான்.

'ஏண்டா, மோட்டுவளையப் பார்த்துப் பார்த்து யோசிச்சுகிட்டே கடப்ப, நீ எங்கடா சீக்கிரம் எழுதப் போற' - மீண்டும் அண்ணன்.

`விடுறா, எதோ அவன் கைல வேற திறமைல்லாம் வெச்சுருக்கான், அத பாராட்டாம, சும்மா லொள்ளை சொல்றீங்களே' ன்னு அம்மா அதிசயமா வக்காலத்துக்கு வந்தாங்க!

சரி, எழுத ஆரம்பிச்சாச்சு!

"... மாலை நேரம், மெதுவாக இருட்டிக்கொண்டு வந்தது. மழையும், விடாது ஊசிபோல் பெய்து கொண்டிருந்தது. எப்படியும் இரவோடிரவாக..'

வீல்!- சத்தம்!

நான் எழுத ஆரம்பிச்ச த்ரில்லர்ல இல்லீங்க, சத்தம் பக்கத்துல இருந்து வந்துச்சு! மூணு வயசு-அண்ணன் பைய, அவன் தங்கச்சி முதுகுல ஒண்ணு போட்டுட்டான்! அதான் அழுகை!
'பக்கத்துலதான இருந்தீங்க, அவளை அடிக்காம நீங்க பார்த்துக்கக் கூடாதா?'- அண்ணி

'இவனுங்க எப்ப வந்தாங்கன்னு எனக்கு தெரியலையே அண்ணி?! நான் பாட்டுக்க எழுதிகிட்டிருந்தேனா, கவனிக்கல!'

அண்ணி பக்கத்துல வந்து, 'வெடுக்'குனு பொண்ண தூக்கிகிட்டு, பையன் கைய பிடிச்சு 'தர, தர'ன்னு இழுத்துகிட்டு போனாங்க!

'பைய, பைய' ன்னேன் நான். வேகமா இழுத்துகிட்டு போறாங்களேன்னு!
அவங்களோ, 'அதான் பையனையும் கூட்டிகிட்டு வேற ரூமுக்கு போறேனே, அவன் உங்கள தொந்தரவு செய்யமாட்டான்' ன்னு சொல்லிகிட்டே போறாங்க. பயலோ 'அய்யோ, அம்மா'ன்னு அலறிகிட்டே போறான் - எங்க சாத்துப்படி நடக்குமோன்னு பயந்துகிட்டே!

மனைவி பக்கத்தில் வந்தாள். நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க; நீங்க பயலுக்கு கம்ப்யூட்டர்ல, கதை, கேம்சுன்னு காமிச்சு கெடுத்து

வெச்சுருக்கீங்க; அதான் காட்டுவீங்களோன்னு பையன் பக்கத்துல வந்தான்; பாவம், அண்ணி பின்னி எடுக்கப் போறாங்க, போங்க, போய் முதல்ல அவங்கள சமாதானப் படுத்தி, பயல கூப்பிட்டுப் பக்கத்துல வெச்சுக்கங்க, பாவம், சித்தப்பா, சித்தப்பா-ன்னு அவந்தான் உங்க கிட்ட ஆசையா வருவான்; அவனுக்கு அடி வாங்கி கொடுக்காதீங்க!' என்றாள்!

ஆமாமாம், நான் 'கதை'க்குறதுக்கெல்லாம், பொறுமையா பக்கத்துல உட்கார்ந்துகிட்டு கேக்கறவன் அவன்தான். ஒரே ரசிகன்; அவன் ஆதரவையும் நான் இழந்துவிட்டால்?

ஓடினேன், ஓடினேன், வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினேன்..ஸாரி..அண்ணன் அறையைப் பார்த்து, மீண்டும் ஸாரி...அரையைக் கேட்டு(?) ரூமுக்குள் ஓடினேன். ஆமாம் அண்ணன், பயலுக்கு சரியான அரை விட்டிருந்தான்!!

ஓடிப்போய் பயலை அணைத்துக்கொண்டேன். சமாதானப் படுத்த முயற்சித்தேன்.

"வாடா, எழுத்தாளா. நீ எதோ எழுதிக்கிட்டிருந்தியே, எங்க வந்தே, போ, போயி வேலையப் பாருடா. அவன இப்படி கொஞ்சி, கொஞ்சியே கெடுத்து வெச்சுருக்க. அதான் எவனுக்கும் பயப்பட மாட்டேங்கறான். தங்கச்சிய அடிச்சான்ல, அதான் அடி எப்படி இருக்கும்னு, அவனுக்கும் அடிச்சு காம்ச்சேன்," ன்னான் அண்ணன்.

நான் பயலைப் பார்த்து, "ஏண்டா செல்லம் தங்கச்சிய அடிச்ச, பாவம்டா அவ," என்றேன்.
பதிலுக்கு அவன், "நீ எழுதிகிட்டிருந்தயா, அவ உன் கிட்ட வந்தா; அண்ணன் சொல்றேன், சித்தப்பாவ டிஸ்டர்ப் பண்ணாதே, பக்கத்துல போகாதேன்னு சொன்னா கேக்கல, அதான் ஒண்ணு வெச்சேன்; நான் செஞ்சது சரிதானே?" ங்கிறான்!

பதில கேட்டு அண்ணி, 'ஹக்கும்' னு கன்னத்தை தோளுல இடிச்சு காமிச்சுட்டு, என்ன பார்த்து ஒரு கோப 'லுக்' விட்டுட்டு, ரூமை விட்டு வெளிய போய்ட்டாங்க.

அண்ணன், பயலப் பார்த்து 'எங்கடா இந்த அடிக்கிற பழக்கத்த கத்துகிட்ட?' ன்னு கேட்டாரு.

'நம்மகிட்டதான்; ஆ, ஊன்னா கைய நீட்டிர்றோமே?' ன்னேன்!
அண்ணன் அப்படியே, ஒரு 'லுக்' விட்டுட்டு வெளியேறினாரு. இந்த 'லுக்' வேற டைப்! போக்கத்த பயலேன்னு!

பயல வெளிய கூட்டிவந்து கணினி முன்ன உட்கார வெச்சேன். அவன் அதிசயமாக, "வேண்டாம் சித்தப்பா, கார்டூன்லாம் பார்க்கவேணாம்; நீங்க பாட்டுக்க எழுதுங்கன்னான்!

'செல்லம்டா', ன்னு அவன் கண்ணத்துல ஒரு 'பச்சக்' வெச்சுட்டு அடுத்து எழுத ஆரம்பிச்சேன்..

மனைவி பக்கத்துல வந்தா. பயலுக்கு ஹார்லிக்ஸம், எனக்கு காபியும் எடுத்துகிட்டு!

'எதோ எழுதறீங்களே, எங்க கதைய சொல்லுங்க பார்ப்போம்?'

அடடா, அதிசயமான அதிசயம்! என் பொண்டாட்டிக்கும் இலக்கிய ரசனை வந்திருச்சுன்னு சந்தோஷமா, 'அதுவா, க்ரைம் த்ரில்லர் எழுதறேன். நல்ல மழை. ரோட்டுல தனியா போற கார்..' கண்ண மூடிகிட்டு கதையில லயிச்சுட்டேன்..

அப்ப 'சார், சார்' னு சத்தம் கேட்டது!

என்னடாயிது பொண்டாட்டி தொண்ட ஆம்பளக் குரலா போயிருச்சுன்னு பயந்து கண்ண திறக்கிறேன்.

எங்க பில்டிங் வாட்ச்மேன். 'சார், என்னன்னமோ எழுதறீங்களே, எனக்கொரு பெட்டிஷன் எழுதி தரக்கூடாதா?'

'உனக்கென்னய்யா ப்ரச்னை?'

'செக்யூரிட்டி கம்பெனில வேலக்கி சேர்ந்து சம்பளமே சரியா தரதில்லைங்க; எத்தனையோ தடவ சொல்லிப் பார்த்துட்டேன். அதான், எழுத்துல தரலாமேன்னு,'..

'நீயே எழுதலாமே, உனக்குத் தமிழ் வராதா என்ன?'

'வரும் சார், ஆனா இன்னும் ல,ழ,ள ல குளப்பம்!" அப்படீன்னான்.

பேசுறதே சரியில்லையே, 'குளப்பம்' இல்லைய்யா, அது 'குழப்பம்'.

'எதோ ஒண்ணு. அதான் உங்க கிட்ட குடுத்துட்டேனே, நீங்களே எழுதுங்க. சரி நான் சொல்றத கேட்டு, எப்படி மாத்தி எழுதணுமோ அப்படி எழுதுங்க! நான் ரெடி, நீங்க ரெடியா? 'ன்னான்!

சொல்லு.

கணினியை மூடி வெச்சுட்டு பேப்பரை எடுத்தேன். கையால எழுதி எத்தனையோ வருஷமாச்சு! அதனால பார்த்து நிதானமா, எழுத ஆரம்பிச்சேன்.

தலைவர்,
குங்பூ செக்யூரிட்டி சர்வீஸ்,
420, தலைதெரிச்சான் ரோடு,
நடுங்காட்டுக்குப்பம்
சென்னை

ஐயா,

நான் ரொம்ப கஸ்ட படறேன். எனக்கு சம்பலம் சர்யாத் தரலீங்கோ! பட்டுவாடா பண்றதுக்கு ஒவ்வொரு பில்டிங்கா வர்ற மாரி, (குறைந்த சப்தத்தில், அவன் கேப்மார், சோமாரி சார் என்றான் வாட்ச்மேன்) மாறி, மாறி கையெழுத்த மட்டும் வாங்கிகிணு, அப்படியே ஜூட் விடுர்றான். சரியா தரச்சொல்லி கேட்டா, மவனே கீசிடுவேன்னு சொல்லி மெரட்டறான். நம்ம கட்சி தலைவர் மேலெ இருக்குற அன்பின் காரணமா, நானும் தெரியாத் தனமா, ரெண்டு பொண்டாட்டிய அந்த காலத்துல கட்டிகிணு, ரெண்டுதல எறும்பாட்டம் லோல்படறேன், கஸ்டப்பட்றேன். நீங்க தான் பெர்ய மனசு பண்ணி, பணம் சரியா பட்டுவாடா ஆவறமாதிரி ஆள் போடணும்; இல்லன்னா என்பாடு பேஜாராயுடும். ப்ரச்னைய சரி பண்ணும் வரை உங்களையே மலை மாதிரி நம்புற உண்மை தொலிலாளி,

கிஸ்டன்.

மேற்படி 'சுந்தரத் தமிழில்', முன்மொழிந்ததை நான் கஷ்டப்பட்டு, கொஞ்சம் நயமாக மாற்றி, 'நல்ல' படியாக எழுதி கொடுத்தேன்.

ஏம்பா, உன் பெயரையே உனக்கு சரியா சொல்ல வரலையே? எங்க? கிருஷ்ணன் சொல்லு பார்க்கலாம்!

'கிஸ்டன்'. என்றான். மீண்டும் வற்புறுத்தவே, முகத்தை சீரியஸாக வச்சுகிட்டு, திரும்ப, 'கிஸ்டன்' ன்னான்!

'சரிப்பா, போய்ட்டு வா, கிஸ்டா, சீ, ஸாரி, கிருஷ்ணா,' என்றேன்.

'சார் ஒண்ணேயண்ணு சொல்லிட்டு போயிர்றேன்!

என்ன?

சார், உன் கையெழுத்து சூப்பரா கீது சார்! இன்னும் எவனுக்காச்சும் ஏதும் எழுதணும்னா, உன்னாண்ட இட்டாறேன் சார்; படிக்கிறவனுக்கு நல்ல க்ளியரா இருக்கும்' ன்னு வயத்துல அமிலத்த ஊத்துனான்!

இவன் தினம் இப்படி நாலு பேர கூட்டிகிட்டு வந்தா என் தமிழ் கட்டாயம் பேஜாராயிடும்; சீ, என்னடாயிது ஒரு கடிதம் எழுதினதுக்கே, இப்படி தமிழ் பேசுறேன்? நான் கட்டாயம் தமிழை மறந்திடுவேன்!

போய்ட்டான். பெண்டாட்டி, பார்த்தீங்களா, உங்க கையெழுத்து நல்லாயிருக்குன்னு சொல்லிட்டுப் போறான். நீங்க பேசாம, போட்டிக்கு கைப்பட எழுதிப் போட்டா என்ன? போட்டில அது வித்தியாசமா இருக்குமே? இருங்க வர்றேன்,' னு உள்ள போய், ஒரு பெரிய பலகை, பேப்பர், மைக் கூடு, மைப் பேனான்னு கொண்டு வந்தா!!

இந்த வஸ்துவெல்லாம் உன்கிட்ட இன்னுமா இருக்கு? உலகமே மறந்த அயிட்டங்கள எந்த மியூசியத்துல இருந்து அகழ்வாராய்ச்சி பண்ணி எடுத்துகிட்டு வர?

ஏன் எங்க தாத்தா, எங்க அப்பாக்கு கொடுத்தது; அவர் என் கையெழுத்துதான் எல்லாரையும் விட நல்லா இருக்கும்னு பரிசா எனக்கு கொடுத்தது! இத வெச்சு எத்தென பேருக்கு அவங்க ரெண்டு பேரும் எழுதி குவிச்சுருக்காங்க தெரியுமா?'
அப்படி என்ன வேல பார்த்தாங்க? உன் குடும்பத்துக்கே, இலக்கியம்னா ஆகாதே?
அட, தாத்தா கோர்ட் ரைட்டர், அப்பா, ஸ்டாம்ப் வெண்டர்; அந்த காலத்துலல்லாம் கம்ப்யூட்டர் ப்ரிண்டிங் ஏது? எல்லாம் கையால தான் எழுதணும். அதான், ' அப்படீன்னு சொல்லி என் பக்கத்துல அந்த வஸ்துக்களையெல்லாம் பரப்பி வெச்சுட்டு ...

'என்னங்க நம்ம பொண்ணு எழுந்திரிச்சிட்டா போல, நான் போய் குழந்தைய தூக்கிகிட்டு வர்றேன்' ன்னு போயிட்டா.

பார்த்தேன், பேனாவின் விட்டம், சத்தியமா, ஒரு சுமோ வீரன் கைக்குச் செஞ்ச மாதிரி இருந்துச்சு! அத்தன பெரிசு!

மைக்கூடைப் பார்த்தா, திரவ நிலைலேர்ந்து தவ நிலைக்குப் போன மாதிரி இருந்தது! எடுத்து கொஞ்சம் உதறிப் பார்த்தேன். ஊஹம் உள்ள ஒண்ணும் அசைஞ்ச மாதிரி இல்லை! விஷயத்தை க்ரகிச்சுகிட்டு மனைவி ஒரு துணியோட வந்தா. 'உபயோகிச்சு ரொம்ப நாளாச்சா, கொஞ்சம் உறைஞ்சு போயிருக்கும். நல்லா துடைச்சு ஒரு உதறு உதறுனேங்கன்னா, நல்லா எழுதிடும்,'.

துடைச்சு உதறினேன். ஒண்ணும் மாறுன மாதிரித் தெரியல! திரும்பத் திரும்ப உதறுனதுல திடீர்னு பீச்சியடிச்சுகிட்டு, இன்க் சர்வலோக வ்யாபியா ரூம்ல நாலா பக்கமும் சிதறுச்சு! என் வேட்டி, பொண்டாட்டி மூஞ்சி, பக்கத்துல அப்பதான் திடீர்னு வந்து நின்ன மூணு குழந்தைங்க, இப்படி எல்லார் மேலயும்! பசங்க ஏதோ விளையாட்டுன்னோ, ஹோலின்னோ நினைச்சுகிட்டு, 'ஹே, ஹே'ன்னு கூச்சலிட ஆரம்பிச்சாங்க!

என் அருமை பத்து மாசமேயான பொண்ணு, அண்ணன் பசங்க போட்ட சத்தம், எதோ விளையாட்டுன்னு நினைச்சு, அவளும் சேர்ந்துகிட்டு, 'கே, ஆ, ஊ' ன்னு மழலைல டார்ஜான் ரேஞ்சுக்கு சவுண்டக் கொடுத்துகிட்டு, பசங்க பின்னாலயே, போனா. நேரா, பாத்ரூம்ல போயி, ஆளுக்கு ஒரு மக் தண்ணி எடுத்து, அடுத்தவர் மேல் அடிக்க, அண்ணி, அம்மா, பொண்டாட்டி இப்படி எல்லாருமா, பசங்க பின்னாடியே ஓடினாங்க, நெருப்பப் பார்த்த பயர் இஞ்சின்காரன் மாதிரி!

'ஆள விட்டாங்கடா'ன்னு நானும், திரும்ப என் ஆயுதத்தை, ச்சே.. என் பேனாவை மீட்டு, பேப்பரில் எழுத ஆரம்பிச்சேன். கார் நின்னு, மழையும் நின்னு, நம்ம கதாநாயகன், தனக்கு துரோகம் செஞ்ச மனைவிய போட்டுத் தள்ள ரெடியாயிட்டான்! எதிர்பாராத திடீர் தாக்குதல்னால, 'வீல்' னு கத்துன...

அட, திரும்பவும் சத்தம் நம்ம வீட்லயிருந்துதான் வருது! என்னடாயிது க்ளைமாக்ஸ் மட்டும் பாக்கி, அதை எழுதறதுக்குள்ள டிஸ்டர்ப் பண்றாங்களே! ஒரு நல்ல எழுத்தாளனுக்கு தனிமை வேணும்பா; இந்த குடும்ப சுழலோ, சூழலோ, ஒத்துவராது! நினைச்சுகிட்டிருக்கையிலேயே, அம்மாவோட சத்தம் என்னை பாத்ரூமை நோக்கி ஓட வெச்சது!

பேனாவைக்கீழே போட்டுட்டு, ஓடினேன். அங்கே, எல்லாரும் தல விரிச்ச கோலத்துல உடம்பெல்லாம் கலர் அடிச்சுகிட்டு நின்னுகிட்டிருந்தாங்க!

''எதோ பிள்ளைங்க ஸைக்காலைஜிப் படி போகணும் அது இதுன்னு நீயும் உன் அண்ணனும் அட்வைஸ் பண்ணுவீங்களே, அதான் நாங்களும் பசங்களோட தண்ணீல கொஞ்சம் கோலமாவுக்கு வாங்கி வெச்ச சாயத்தயெல்லாம் கலந்து ஹோலி விளையாடிகிட்டிருந்தோம்; எல்லாம் நல்லாதான் போச்சு உன் பொண்ணுக்கு நீந்ததான தெரியும், அவ குறுக்க நீந்திப் போறச்ச, ஓடுற பசங்க கால்ல அவ படக்கூடாதுன்னு அவளை எடுத்து ஓரமா போடப் போனேன். அதுக்குள்ள கலரை அடிக்கிறேன்னு பிள்ளாண்டான், தங்கச்சி தலைல கைலயிருந்த தன்ணி 'மக்' கோட அப்படியே அடிச்சுட்டான்! தல புசுபுசுன்னு வீங்கிப் போச்சு! ரத்தம் வருது! போடா, அவங்க அப்பன் வெளிய போயிருக்கான்; அவன் வர்றதுக்குள்ளே அவள போய் டாக்டர்கிட்ட காட்டி மருந்து போட்டு, கூட்டிகிட்டு வா! இல்லைன்னா, பெரியவன் வந்தா வீடு ரெண்டாயிடும்னாங்க அம்மா!

ஆமாமாம், அண்ணன் வந்தார்னா, சவுண்டுதான்! அவசரமா, அண்ணன் பெண்ணை அள்ளிகிட்டு, நானும் மனைவியும் டாக்டர்கிட்ட ஓடினோம். பயலுக்கு அண்ணி சாத்துப்படி பண்றத அம்மா புகுந்து நல்ல வேளையா தடுத்துட்டாங்க!

பெண்ணுக்கு தலைல கட்டு கட்டி, மருந்து குடுத்து தூங்க வெச்சு கூட்டிகிட்டு வரைல தான், ஹால்ல நான் வெச்ச காகிதங்கள்லாம் அப்படியே போட்டிருக்கிறது நினைவுக்கு வந்தது! அவசர, அவசரமா ஓடி போய் பார்த்தா, அங்க வெச்ச இடத்துல பேப்பர்களைக் காணோம்!

ரூம்ல போய் பார்த்தா, அம்மா எம்பொண்ணை மாருல போட்டுகிட்டு, அப்படியே தூங்கிப் போயிருந்தாங்க! அவங்கள இப்ப எழுப்பவேணாம்னு முடிவுபண்ணி, நானும் மதியச் சோத்த அள்ளி போட்டுகிட்டு, அப்படியே உறங்கிப்போனேன்! ஒரு பெரிய போர் முடிச்சு வந்த மாதிரி அசந்துட்டேன்!

மாலைல, அம்மாதான், காப்பியோட என்ன எழுப்புனாங்க! 'டேய், என்னடா, விளக்கு வெக்கிற நேரம் வரை தூக்கம்? எழுந்திரிடா'.

நினைவு வந்தவனாக, 'அம்மா, அந்த கதை எழுதிவெச்சேனே, எங்க போச்சு? ஹால்ல இருந்துச்சே!'

'வழக்கம்போல நீ அப்படி இப்படி போட்டு போயிட்டே, பசங்க எடுத்து கிழிச்சுடுவாங்கன்னு நாந்தான் எடுத்து வெச்சேன்,' ன்னு சொல்லி மனச ஆரவெச்சாங்க! (எத்தனை தடவைதான், ''வயத்துல பால வார்த்தாங்கன்னு, எழுதறது? அதான், ஒரு சேஞ்ச்சுக்கு!)

குடுக்கறச்சயே, "ஏண்டா, அப்படி என்னதான் எழுதறன்னு பார்த்தேன்; கொலை, கிலைன்னு என்னடாயிது, குடும்பஸ்தனுக்கு எதுக்குடா இப்படி வக்கிர எண்ணம்?'' அப்படிச் சொன்னவங்க, 'சரி, க்ளைமாக்ஸ் என்னன்னு எழுதலயே? படிச்சுதொலைச்சுட்டேன், முழுசா தெரிஞ்சுக்கலாம்னுதான்!" ன்னு கேட்டாங்க!!

கடைசி நாளுங்கிறது அப்பதான் புத்தில பட்டது. அவசர அவசரமா, பேப்பருங்கள அடுக்கினேன்! பார்த்தா, நிஜமாவே, பேய்த்தலை மாதிரி எல்லாப் பேப்பருக்கு நடுவுலயும், ஒரு 'லோகோ' மாதிரி, மை அச்சு! கடைசி பக்கத்துல ஆன்டி-கிளைமாக்ஸா, முழுசும் இன்க் கொட்டியிருந்துச்சு!!!

பேயடிச்ச மாதிரி அம்மாவைப் பார்த்தேன். அவங்களும், "நீ பெரியவன் பொண்ணை ஆஸ்பத்திரி கூட்டிகிட்டு போயிட்ட, பையனை அவன் அம்மா, சத்தம் போட்டு, சாப்பிட வெச்சு, அரட்டி தூங்கவெச்சுட்டா!

உன் பொண்ணுதான் எதோ ஹால்ல தவழ்ந்துகிட்டிருந்தா. வாயில உன் பொண்டாட்டி குடுத்த பேனா! அவசரமா அதைப் பிடுங்கி, பேப்பருங்கள அடுக்கி வெச்சேன்; படிச்சுக்கூட பார்த்தேனே, அப்ப நல்லாத்தானே இருந்துச்சு?" அப்படின்னாங்க!

திரும்ப ஹாலுக்கு ஓடினேன். மைக்கூடு ஒரு ஓரமா சரிஞ்சு இருந்துச்சு! என் ரூமுக்குப் போனேன்! அங்க, அசந்து தூங்கற என் பொண்ணைப் பார்த்தேன்; அவ குட்டி கைல மை கறை! வாயிலயும்! அப்பனுக்குத் தப்பாம பிறந்த பொண்ணு! அவளும் கதை எழுதறா! க்ளைமாக்ஸ்! எப்படியிருக்கு? நான் எப்ப கதை எழுதி அதை எப்ப முடிச்சு, எப்ப அனுப்ப??? நீங்களே சொல்லுங்க?

******
நட்புடன்

சடகோபன்

மலர்
05-09-2007, 05:32 PM
வாழ்த்துக்கள் நண்பரே.....
இந்தக்கதையை படிக்கும் போது அப்படியே ஒரு கூட்டு குடும்பத்திற்குள் இருந்தது போல இருந்தது..... இது உண்மைக்கதையா.....

Location: Tirunelveli......... நீங்கள் நெல்லையா..... :spudnikbackflip:

இளசு
05-09-2007, 07:34 PM
உங்கள் வழக்கமான பாணியில் இருந்து விலகினாலும்.. ரசிக்கும்படியாகவே!

கூட்டுக்குடும்ப நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பிய நேர்த்திக்குப் பாராட்டு!

அம்மா போலவே நானும் ''க்ளைமாக்ஸ்'' அறிய ஆவல்!

பாராட்டுகள் சடகோபன்..

பல்வகைச் சிறுகதைகளிலும் பரிமளிக்கிறீர்கள்!

lolluvathiyar
06-09-2007, 06:19 AM
கடைசிவரைக்கும் கதை எழுதி முடிச்சீங்களோ இல்லையோ, குடும்பத்துல சூப்பர் கதை ஓடிட்டு இருந்தது.
ஐயா உங்கள் கதைய போடரதுக்கு பதிலா இந்த கலகலப்பான நிகழ்ச்சிதான் அருமையாக இருந்தது. கதையை மிஞ்சி விட்டது
தொடர்ந்து இதுபோன்று எழுதுங்கள்
வாழ்த்துகள்

அக்னி
06-09-2007, 02:50 PM
ஐயகோ... இது என்ன கொடுமை சடகோபன்..?
அதுசரி... இது கற்பனைக்கதையா..? அனுபவக்கதையா..?

ரசிக்கும்படியாக இருந்தது...
பாராட்டுக்கள் சடகோபன்...

sadagopan
07-09-2007, 08:03 AM
வாழ்த்துக்கள் நண்பரே.....
இந்தக்கதையை படிக்கும் போது அப்படியே ஒரு கூட்டு குடும்பத்திற்குள் இருந்தது போல இருந்தது..... இது உண்மைக்கதையா.....

Location: Tirunelveli......... நீங்கள் நெல்லையா..... :spudnikbackflip:

இது உண்மையான கற்பனை கதை
ஆமாம் மலர் நெல்லைக்கு பக்கத்தில் K.T.C. நகர்

நட்புடன்

சடகோபன்

சிவா.ஜி
07-09-2007, 08:07 AM
உங்களின் முந்தைய கதைகளிலிருந்து பெரிதும் வேறுபட்ட கதை.மிக இயல்பாக இருக்கிறது.விட்டின் ஒவ்வொரு நிகழ்வுகலையும் வெகு அழகாக காட்சிப்படுத்தி எங்களையும் அதைக் காண வைத்துவிட்டீர்கள்.மிக அருமையான கதை.வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் சடகோபன்.

மனோஜ்
30-09-2007, 08:05 PM
வீட்டின் சூழலை அப்படியே கண்முன் கொண்டுவந்தது கதையின் வெற்றி வாழத்துக்கள்

அப்பரம் அந்த கதையின் கிளைமாக்ஸ் எழுதுனிங்களா இல்லையா ?

அமரன்
05-10-2007, 09:31 AM
கதையை தெளைவாக, யதார்த்தமாக நகர்த்தி காட்சிகளை என்முன் விரித்து, அங்கே நானும் நடமாடுவது போல ஒரு பிரம்மையை ஏற்படுத்தியது உச்சக்கட்டம்..பாராட்டுகள் சடகோபன்.