PDA

View Full Version : அறிவுரை....!



Nanban
11-06-2003, 07:22 PM
அறிவுரை....


என் கனவுகள் வானத்தை விடப் பெரியது -
நட்சத்திரங்கள்
என் வீட்டு விடிவிளக்காய் நிற்க
அனுமதி கோருகின்றன.

தேய்ந்தும், வளர்ந்தும்
களைத்துப் போன நிலா
ஓய்வெடுக்க
என் வீட்டிற்கு வர
அனுமதி கோரி அனுப்பிய விண்ணப்பம்
இன்னும் பிரிக்கப்படாமல் கிடக்கிறது.

சூரியன் இறங்கி வந்து
என்னுடன் கை குலுக்க
விரும்பினாலும்
அவனின் வெப்பம்
கருக்கி விடக்கூடும் என்பதால்
வேண்டாமென்று திருப்பி அனுப்பினேன்.
அக்னிக் குஞ்சுக்கு
என்மீது ஒரு வாஞ்சை -
எப்பொழுதும் ஒரு புன்னகையுடன்
விலகிக் கொள்ளும்.

வாயு பகவானோ
குற்றாலத்தைச் சுமந்து வருவான் -
அடக்கமான பணியாட்கள் போல்.
குளிர் சாரலை
மேகப்பஞ்சு கூரியரில்
என் திசை நோக்கி நகர்த்தி வருவான்.

பசிக்காத ஒரு உலகிற்கு -
வியர்க்காத ஒரு தலத்திற்கு -
இருள் அறியா ஒரு இடத்திற்கு
என்னை அழைத்துச் செல்லும்
சக்தி பெற்ற என் நண்பர்கள்
நகைக்கின்றனர் -
என் காமத்தைக் கண்டு.
பிறப்பெடுத்துப் போ பூவுலகிற்கு
என்று அறிவுரை வேறு கூறுகின்றனர்.........

chezhian
13-06-2003, 01:05 PM
நண்பனின் முத்திரை....
பாராட்டுக்கள் நண்பரே...

karikaalan
13-06-2003, 01:47 PM
கனவுகள் கைகூடும் நாள் தொலைவில் இல்லை நண்பரே! வாழ்த்துக்கள்!

===கரிகாலன்

poo
13-06-2003, 06:37 PM
மீண்டுமோர் சிறப்பு... கவிதைகள் பக்கத்திற்கு பெருமை சேர்க்க வந்த படைப்பாளிக்கு பாராட்டுக்கள்..

தொடருங்கள் நண்பரே!!..

பாரதி
14-06-2003, 09:11 AM
சிறப்பாக உள்ளது நண்பரே... பாராட்டுக்கள்.

rambal
14-06-2003, 05:47 PM
சில்லறைப் பிரசினைகளில் என்னை தவிக்கவிட்டால்
நான் எப்படி கவிதை எழுதுவது என்று பராசக்தியிடம் கேள்வி கேட்டவன் பாரதி..
அதை ஒத்து அந்த அளவிற்கு சரிசமமாய் வேறு மாதிரி வெளிப்படுத்தி இருக்கும் இந்தக் கவிதை
கவிஞனின் மனநிலையை அழகாய் எடுத்துக் காட்டும் கண்ணாடி..
பாராட்டுக்கள் நண்பன் அவர்களே..