PDA

View Full Version : எம்மதமும் சம்மதம்sadagopan
31-08-2007, 01:56 PM
அன்று ஆடிக்கிருத்திகை தினம். காலை மணி ஆறு. திருச்சி அண்ணா சிலை அருகே ஒரு சிறிய கூட்டம். நடுரோட்டில் சிவப்பழமாக சாமிநாத ஐயர் மல்லாந்து விழுந்து கிடக்கிறார். அழகிய வெள்ளிக் கம்பிகள் போன்ற நரைத்த குடுமி. பறங்கிப்பழம் போன்ற சிவந்த குண்டான உடல்வாகு. நெற்றி, மார்பு, வயிறு, கைகளின் மேல்ப்பகுதி, நடுப்பகுதி, கீழ்ப்பகுதி, உச்சந்தலை, பின் கழுத்து எனப் பட்டை பட்டையாக குழைத்துப் பூசிய கமகமக்கும் திருநீறு வாசனை. மார்பின் குறுக்கே வெள்ளை வெளேரெனப் பூணூல். கழுத்தில் ஆங்காங்கே விட்டு விட்டு தங்கத்தால் கட்டப்பட்ட ருத்ராட்சமும் ஸ்படிகமும் கலந்த மாலை, முழங்காலுக்கு மேல் கச்சமாக இழுத்துக் கட்டிய ஈர வேஷ்டி. அதன்மேல் இடுப்பில் கட்டிய பெல்ட் போல ஒரு சிவப்பு நிற காசித்துண்டு. இடுப்பில் மடிப்பாக ஒரு விபூதி சம்புடம். அதற்குள் ஒரு மிகச்சிறிய வெள்ளிவேல். கட்டைவிரல்ப் பகுதி அறுந்த நிலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு ஜோடி செருப்புகள். அவர் அருகே பாதி நீர் கொட்டியபடி உருண்டு கிடக்கும் ஒரு தீர்த்தக்குடம். வயது சுமார் 75க்கு மேல் 80 கூட இருக்கலாம். மிகவும் ஆச்சாரமானவர். முருக பக்தர். கிருத்திகை தோறும் வயலூர் சென்று முருகனை வழிபட்டபின்னே உணவருந்துவார்.

அது மட்டுமல்ல திருச்சி மலைக்கோட்டையைச் சுற்றி அமைந்துள்ள ஒரு தெருவில் ஏதோ ஒரு சந்துக்குள் தான் அவர் வீடு. ஐயரைத் தெரியாதவர்களே அந்தப் பகுதியில் கிடையாது என்னும் அளவுக்குப் பிரபலமானவர். மயில் தோகையால் மந்திரிப்பவர். பயத்தில் விடாது அழும் குழந்தைகள், உணவு ஏற்காத மழலைகள், காத்துக் கருப்பு பட்டு காய்ச்சலால் உளருபவர்கள், கை கால் வலி, கண் திருஷ்டி, எனப் பல்வேறு உடல் மற்றும் உள்ளம் சம்பந்தமான பிரச்சனைகளால் அவதியுறும் பாமர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை தினமும் மாலை அஸ்தமிக்கும் வேளையில் ஜாதி, மத, இன, மொழி பேதம் இன்றி அவர் வீட்டு வாசலில் கூடி விடுவார்கள். ஐயர் கையால் மந்திரித்து திருநீறு வாங்கிப்பூசினால் எல்லாக் கஷ்டங்களும் விலகும் என்ற ஒரு நம்பிக்கை.

வழக்கம் போல் அதிகாலைப் பொழுதில் காவிரி நதியில் நீராடிவிட்டு நடந்து வந்து கொண்டிருந்த ஐயர் எவ்வாறு எதனால் நடுரோட்டில் விழுந்தார் என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. கல் ஒன்று தடுக்கியோ, கால் பாதம் மகுடியோ, செருப்பு அறுந்தோ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யூகம் செய்துகொள்ளுமாறு விட்டிருந்தார் ஐயர்.

தன் கசாப்புக் கடையைத் திறக்கவிருந்த அப்துல்லா, காலாற நடந்து சர்ச்சுக்குச் செல்லவிருந்த ஜோஸப், பால் வியாபாரம் செய்யும் கந்தசாமிக் கோனார், தெருவைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளி வள்ளி, ஆட்டோக்காரர் ஆறுமுகம், தெருவோரம் செருப்புத் தைக்கும் சங்கிலியாண்டி என ஒரு சிறு கூட்டம் கூடி ஐயரை இப்படியும் அப்படியும் சற்று அசைத்துப் பார்த்தது. ஐயருக்கு பின்புற தலையில் நல்ல அடி. ரத்தம் கசிகிறது. தன் புடவைத்தலைப்பில் ஒரு பகுதியை டர்ரென்று கிழித்த வள்ளி ஐயரின் தீர்த்தப் பாத்திரத்தில் அதை நனைத்து இருக்கமாக அவர் தலையில் கட்டு ஒன்று போட்டு விட்டாள்.

ஐயருக்குப் பேச்சு இல்லை, ஆனால் மூச்சு உள்ளது என்பதை உறுதி செய்துகொண்ட அப்துல்லாவும் ஜோஸப்பும் அலாக்காக அவரைத் தூக்கி ஆறுமுகத்தின் ஆட்டோவில் ஏற்ற மற்றவர்களும் உதவி செய்தனர். அப்துல்லாவின் மடியில் ஐயரின் தலை, ஜோஸப்பின் மடியில் ஐயரின் மடிக்கப்பட்ட கால்கள். பின்னால் வந்த மற்றொரு ஆட்டோவில் ஐயரின் நசுங்கிய தீர்த்தப் பாத்திரத்துடன் கந்தசாமிக் கோனாரும், வார் அறுந்த செருப்புக்களை அள்ளிக்கொண்டு தன் கோணிப்பையில் போட்டுக்கொண்ட சங்கிலியாண்டியும், ரோடு பெருக்கும் துடைப்பத்தை ஒரு கடை வாசலில் ஓரமாக கடாசிவிட்டு அவசர அவசரமாக வள்ளியும் ஏறிக்கொண்டு முன்னால் சென்ற ஆட்டோவைத் தொடர்ந்து சென்றனர்.

ஆட்டோக்கள் தென்னூர் புதுப்பாலத்தைத் தாண்டி புத்தூர் நாலுரோடு சந்திக்கும் இடத்திற்கு சற்று முன்பாக அமைந்துள்ள அந்த மூன்றெழுத்து மருத்துவமனையின் வாசலில் குலுங்கியபடி நின்றன. அவசரப் பிரிவிலிருந்து இழுத்து வரப்பட்ட ஸ்ட்ரெச்சரில் ஐயரைப் படுக்க வைத்து ஆப்பரேஷன் தியேட்டரின் உள்ளே மெதுவாகத் தள்ளிச் சென்றனர்.

அதற்குள் ஐயரின் வீட்டுக்குத் தகவல்போய் அலறி அடித்தபடி ஐயரின் சம்சாரமும் வந்து விட்டார்கள். டாக்டர் ஒருவர் அனைவரையும் அமைதியாக அமரும் படி கூறிவிட்டு தியேட்டருக்குள் சென்றார். "காவேரி ஸ்நானம் செய்துவிட்டு, ஆத்துக்கு வந்து ஒரு வாய் காஃபி சாப்பிட்டுவிட்டு, மடி வஸ்திரம் கட்டிக்கொண்டு வயலூருக்குப் போவேளே! இன்னிக்கு ஆடிக் கிருத்திகையாச்சே! இதுபோல கீழே விழுந்து மண்டையை உடைச்சுண்டுட்டேளே! சதாபிஷேகத்துக்கு இன்னும் ஒரு மாதம் தானே இருக்கு! அதற்குள் இப்படியொரு கண்டமா! எனக்கு ரொம்பவும் பயமாயிருக்கே - முருகா" என மாமி அழத்தொடங்கி விட்டார்கள்.

அங்கு கூடியிருந்த அனைவருக்கும் மாமியை அழுத கோலத்தில் பார்க்க மிகவும் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. "முருகன் கட்டாயம் காப்பாற்றுவார்" என ஆறுதல் கூறினார்கள்.

உயிர்க்கொலை செய்து பிழைத்துவரும் அப்துல்லா ஐயருக்காக அல்லாவை வேண்டி நின்றார். கர்த்தர் என்றும் கைவிடமாட்டார் எனப் பிரார்த்தனை செய்தார் ஜோஸப்.

"சாமியை எப்படியாவது பிழைக்க வை முருகா! ஐயர் மூலமே உனக்கு பாலாபிஷேகம் என் செலவில் செய்ய ஏற்பாடு செய்கிறேன்" என்று வேண்டினார் பால் வியாபாரி கந்தசாமிக் கோனார்.

ஆட்டோக்காரர் ஆறுமுகமும், துப்புரவுத் தொழிலாளி வள்ளியும் மாமிக்கு அருகே சென்று ஆறுதல் சொல்லிக் கொண்டு டாக்டர் வந்து என்ன செய்தி சொல்லப் போகிறாரோ என்ற படபடப்புடன், இங்கும் அங்கும் பறந்து செல்லும் வெள்ளைப் புறாக்கள் போன்ற நர்ஸ்களை நோட்டமிட்ட வண்ணம் இருந்தனர். சங்கிலியாண்டி மட்டும் தன் கோணிப்பையைத் திறந்து அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து, ஐயரின் அறுந்த செருப்புக்களை, தன் 'மொபைல்' உபகரணங்களின் உதவியுடன் கச்சிதமாக தைத்துக் கொண்டிருந்தான்.

மடிசார் புடவைத் தலைப்பில் ஐயாயிரம் ரூபாய்ப் பணத்தை அவசரமாக முடிந்து கொண்டு, மனதில் பலவித விசாரங்களைத் தேக்கிய வண்ணம், கண்ணீரும் கம்பலையுமாக இருந்த மாமியின் முகம், சிவந்து சற்று வீங்கியது போல மாறி விட்டிருந்தது. அங்கு மாட்டியிருந்த பெரியதொரு சுவர்க் கடிகாரத்தின் மணித்துளிகள் நகராமல் இருப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது. கடிகாரம் ஒரு வேளை நின்று போய் விட்டதோ - அவர் உயிரும் அதுபோல ஊசலாடுகிறதோ? தாலிச் சரட்டை வெளியே எடுத்து திருமாங்கல்யத்தை கண்களில் ஒற்றிக்கொண்டாள் அந்தப் பழுத்த சுமங்கலி. அவள் வாய் மட்டும் கந்தர்சஷ்டி கவசத்தை மெதுவாக முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

சரியாக மணி ஒன்பது முறை ஒலித்தது. ஐயரை உள்ளே போய்ப் பார்க்கலாம் என அனைவருக்கும் அழைப்பும் வந்தது. அனைவரும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழைந்தனர். தலையில் மிகப்பெரிய ஒரு கட்டுடன், கோடு போட்ட வெளிர் பச்சை நிற பைஜாமாவும், சட்டையும் அணிவித்து ஐயரை ஒரு கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். தலைகீழாகத் தவமிருக்கும் கொக்குபோல ஒரு பாட்டில் தொங்கவிடப்பட்டு, சொட்டு நீர்ப் பாசனம் போல மிகச்சிறிய கண்ணாடி நூல் போன்ற குழாய் ஒன்று ஐயரின் கையில் இணைக்கப்பட்டிருந்தது. அவர் உடுத்தியிருந்த ஈர வஸ்திரங்கள் ஆங்காங்கே ரத்தக்கரையுடனும், ரோட்டு மண்ணுடனும் அரைகுறையாகக் காய்ந்த நிலையில் ஒரு புறம் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.

டாக்டர் மயில்வாகனன் உள்ளே வரவும், ஐயர் கண் விழித்துத் தன்னைச் சுற்றி நிற்கும் அனைவரையும் ஒரு சுற்று பார்க்கவும் சரியாக இருந்தது. "சரியான நேரத்தில் இங்கு கொண்டு வந்து சேர்த்ததால் தலையில் பலத்த அடிபட்ட இவரைப் பிழைக்க வைக்க முடிந்தது. கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும் மூளைக்கு ரத்த ஓட்டம் செல்வதில் தடைபட்டு வேறு மாதிரி ஆகியிருக்கும். இனி பயப்பட ஒன்றும் இல்லை. 'சலைன்' ஒரு பாட்டில் முடிந்ததும் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம். நல்ல ஓய்வு எடுத்தால் இரண்டு மூன்று நாட்களில் பழையபடி சரியாகி விடுவார்" என்றார் டாக்டர்.

அப்துல்லா, ஜோஸப், கந்தசாமி, ஆறுமுகம், வள்ளி, சங்கிலியாண்டி எல்லோரும் ஒரே நேரத்தில் ஐயரை கைகூப்பி மகிழ்ச்சியுடன் வணங்கினர். எல்லோர் சார்பிலும் வள்ளி "சாமீ, எங்களை மன்னிக்கணும். பேச்சு மூச்சில்லாமல் நடு ரோட்டிலே விழுந்து கிடந்தீங்க! ஆபத்துக்குப் பாவமில்லை என்று நாங்க எல்லோரும் தான் உங்களைத் தூக்கி, தலையிலே ஒரு கட்டுப்போட்டு இங்கன கொண்டாந்தோம். டாக்டர் ஐயாவும் உங்களப் பொழைக்க வெச்சுட்டாரு. ரொம்பவும் ஆச்சாரமான உங்களைத் தொட்டுத் தூக்கினது ரொம்பவும் தப்பு தான், சாமீ. எங்களை மன்னிச்சோம்னு ஒரு வார்த்தை சொன்னாத்தான் எங்க மனசுக்கு ஆறுதலாக இருக்கும்" என்றாள்.

டாக்டர் மயில்வாகனனுக்கு இதைக் கேட்டதும் பயங்கர எரிச்சல் ஏற்பட்டாலும், ஐயர் வாயால் என்ன பதில் சொல்கிறார் பார்ப்போம் என்று பொறுமையாக நின்றார்.

ஐயர் ஒரு நிமிடம் கண் மூடித் திறந்தார். அவர் வாயிலிருந்து ஒரு பக்திப்பாடல் வெளிவந்தது:

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசர் உடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே!
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறு படு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!! "

வயலூர் எம்பெருமான் முருகனே உங்கள் ஆறு பேர்கள் ரூபத்தில் ஆறு முகங்களுடன் வந்து என்னை இன்று பிழைக்க வைத்துள்ளான். காலை வேளையில் உங்கள் ஒவ்வொருவரின் பிழைப்பையும், தொழில்களையும் விட்டு விட்டு, எனக்காக என்னுடன் வந்து என்னைக் காப்பாற்றியுள்ளீர்கள். உங்கள் பிழைப்பைக் கெடுத்த என்னைத் தான் நீங்கள் ஒவ்வொருவரும் தயவுசெய்து மன்னித்தருள வேண்டும். இந்தப் பெண் வள்ளி அந்த முருகப் பெருமானின் தேவியாகிய வள்ளி தெய்வயானையாக என் கண்களுக்குப் படுகிறாள்" என்று உருக்கமாகச் சொல்லி நா தழுதழுத்தபடி நன்றியுடன் ஒவ்வொருவரையும் தொட்டு ஆசீர்வதித்தார் ஐயர்.

"சாமீ, இனிமேல் எங்கும் தாங்கள் நடந்து செல்லக்கூடாது. என்னுடைய ஆட்டோவில் தான் எப்போதும் பயணம் செய்ய வேண்டும்" என அன்பு வேண்டுகோள் விடுத்தான் ஆட்டோக்கார ஆறுமுகம்.

டாக்டர் மயில்வாகனனிடம் நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டு, மருத்துவமனைக்குச் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்திவிட்டு வந்த மாமி, ஆறு நூறு ரூபாய் நோட்டுக்களில் தனித்தனியாக ஐயர் கையால் அவர் சம்புடத்திலிருந்த திருநீறைப் போடச் சொல்லி அப்துல்லா, ஜோஸப், கந்தசாமிக்கோனார், ஆட்டோ ஆறுமுகம், சங்கிலியாண்டி, வள்ளி முதலானவர்களுக்கு ஐயர் கையாலேயே ஆசீர்வதித்துக் கொடுக்கச் சொன்னாள். சற்றே தயங்கிய அவர்களை தன் அன்புக் கட்டளையால் ஐயர் வற்புறுத்த, அவர்களும், மறுபிறவி எடுத்த ஐயரின் ஆசியாக ஏற்று கண்ணில் ஒற்றிக்கொண்டு, திருநீறுடன், பிரியாவிடை பெற்றுக்கொண்டனர்.

ஆறுமுகத்தின் ஆட்டோவில் தன் அன்பு மனைவியுடன் வீடு செல்ல, ஏறி அமர்ந்த ஐயரின் கண்களில் முதலில் பட்டது ஆட்டோவில் எழுதியிருந்த வாசகம்:

"வேலும் மயிலும் துணை - வயலூர் முருகனை நினை"

அன்று முதல் ஆட்டோ ஆறுமுகத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் தன் பயணங்களுக்கு சாரதி ஆக்கிக்கொண்டார் சாமிநாத ஐயர்.

ஒரு வாரம் கழித்து ஆறுமுகத்தின் ஆட்டோவில் ஏறி காவேரி ஸ்நானம் செய்துவிட்டு வரும் வழியில், அதே அண்ணாசிலை அருகே ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, ஆறுமுகக் கடவுளான அப்துல்லா 'க்ரூப்' அனைவருக்கும், தன்னுடைய சதாபிஷேகத்திற்கு அவசியம் வரவேண்டும் எனச் சொல்லி தனித்தனியே அழைப்பிதழ் கொடுத்ததில், அனைவர் நெஞ்சமும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்து, மகிழ்ச்சியில் திளைத்தது.

ஐயர் அவர்கள் ஏறிச் செல்லும் ஆட்டோவையே அனைவரும் பார்த்து நின்றனர். ஐயரின் கட்டளைப்படி புதிதாக எழுதப்பட்டிருந்த "எம்மதமும் சம்மதம்" என்ற அருமையானதொரு வாக்கியத்தை தன் முதுகுப்புறத்தில் காட்டியபடி ஆட்டோ நகரத் தொடங்கியது.

*******

ந*ட்புட*ன்

ச*ட*கோப*ன்
__________________________________________________________________________

Narathar
31-08-2007, 02:12 PM
சடகோபன் அவர்களே உங்கள் கதை மிக்க நன்றாக இருந்தது............
சமத்துவத்தை சொல்லும் உங்கள் கதைக்கு எனது வாழ்த்துக்கள்

MURALINITHISH
18-09-2008, 08:56 AM
வாழ்க்கை எப்போதுமே நாம் நினைப்பது போல் இல்லை ஒடமும் ஒரு நாள் கப்பலில் ஏறும் கப்பலும் ஒரு நாள் ஒடத்தில் ஏறும் அது போல்தான் மனிதனும் சில வேளைகளில் நாம் ஒதுக்கும் நண்பர்களும் உதவி தேவை படும் இதை புரிந்து கொண்டால் நாம் எல்லோருமே மனிதர்கள் இந்த அயரும் ஒரு நல்ல மனிதரே