PDA

View Full Version : இன்னுமோர் வெள்ளிக் கிழமை விடியல்.......



ஓவியன்
31-08-2007, 10:53 AM
அன்பான மன்ற உறவுகளே, இந்த பதிவு இந்த மன்றத் தாயின் மடியில் எனது ஏழாவது ஆயிரத்தைத் தொடும் பதிவு, இந்த பதிவும் எனது ஆறாயிரமாவது பதிவைப் போலவே உணர்ச்சி மயமானது. உண்மையாகக் கூறின் அதனை விட கடுமையான துன்பியல் சம்பவத்தைத் தாங்கியது. அதனாலேயே இதனைப் பண்பட்டவர் பகுதியில் பதிக்கின்றேன். வழமை போல என்னிடமிருந்து ஜாலியான ஒரு பதிவை எதிர்பார்ப்பவர்கள் தயவு செய்து இந்த பதிவினைத் தொடர்ந்து வாசிக்க வேண்டாம்.

இந்த பதிப்பினை வாசிக்க விரும்புவோர் இதுவரை எனது 6000 வது பதிப்பான ஒரு வெள்ளிக் கிழமை விடியலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11491) படிக்கவில்லையெனின் அதனை ஒரு முறை படித்து விட்டு இதனைத் தொடர்ந்தால் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.

________________________________________________________________________________________________________________________


அதே காலப் பகுதி, நான் தொடர்ந்து அதே பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். முன்பு நிகழ்ந்த அந்த மோசமான வெள்ளிக் கிழமை விடியலில் தழும்புகள கிட்டத்தட்ட மறைந்து கொண்டிருந்தன என்றே கூறலாம். ஆனால் அதே காலப் பகுதியில் ஆனையிறவு இராணுவத் தளம் மீதான போராளிகளின் வலிந்த தாக்குதல் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. போர் அரங்கிற்கும் அப்போது நாம் இருந்த ஜெயந்தி நகர் (இந்த ஜெயந்தி நகரிலேயே நான் குறிப்பிட்ட அந்த கிளிநொச்சி இந்து மகாவித்தியாலயம் என்ற பாடசாலை அமைந்திருந்தது) பகுதிக்கும் கணிசமான தூரம் இருந்தமையால் ஓரளவு போர் அச்சம் இன்றியே நாம் இருந்தோம்.

ஆனாலும் அவ்வப்போது போர் முனை இழப்புக்களால் மக்கள் குடியிருப்புக்கள் மீதான எறிகணை (Artillery attacks) மற்றும் விமானக் குண்டு வீச்சுக்களை மிலேச்சத்தனமாக அரச படைகள் நடாத்துவதுண்டு. ஆனால் எறிகணைத் தாக்குதல் எங்களுக்கு ஓரளவு பழகி விட்டிருந்தமையால் அதனை இலகுவாக பாதுகாப்பாக எதிர் கொள்ளும் வழி அறிந்திருந்தோம். எறிகணை தாக்குதல் எங்கள் பகுதிக்கு மீது நடாத்தப் படுவதென்றால் ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்து நடாத்தப் பட வேண்டும். ஒரு எறிகணை இராணுவ முகாமில் இருந்து புறப்பட்டால் அது புறப்படும் வெடி ஓசை முதலிலே கேட்கும் பின்னர் அந்த எறிகணை எங்கள் பகுதியை நோக்கி வந்தால் அது வரும் இரைச்சல் ஓசை கேட்கும் (இதனை ஷெல் கூவுது என்று நாம் சொல்லுவோம்) பின்னர் அது விழுந்து வெடிக்கும் ஓசை கேட்கும். இந்த இரைச்சல் ஓசையை வைத்து அந்த எறிகணை எந்த திசையை நோக்கி நடாத்தப் படுகிறதென்று கூறக் கூடிய வல்லமை எங்களுக்கு காலத்தின் கட்டாயத்தால் தானே கூடி வந்திருந்தது. அதனால் இராணுவத் தளத்தில் இருந்து வந்த எறிகணை எங்கள் பகுதியைத் தாக்க முன்னர் எங்களால் பதுங்கு குழிக்குள் ஓடிச் சென்று பாதுகாப்பாக நிலையெடுக்க கூடியதாக இருந்தது. ஆனால் விமானத் தாக்குதல் கொஞ்சம் பிரச்சினையாக இருந்ததுண்டு, அதாவது நாம் பொது இடங்கள், வீதிகள் போன்ற இடங்களில் நிற்கும் போது இந்த விமானங்கள் வந்து மாட்டிக் கொண்டால் கொஞ்சம் பிரச்சினை தான். போர் விமானங்கள் குண்டு வீச்சுடன் நிறுத்தாமல் மக்களைத் துரத்தித் துரத்தி துப்பாக்கிச் சூடுகளை நடாத்திய சம்பவங்களும் ஏராளம் உண்டு.

இப்படியே காலங்கள் கரைந்து கொண்டிருந்தன முதல் நான் விபரித்த வெள்ளிக் கிழமை விடியல் நடந்து ஒரு நான்கு மாதம் இருக்கும் இன்னும் ஒரு வெள்ளிக் கிழமை அன்று நடக்க இருக்கும் கோரத் தாண்டவம் தெரியாமல் விடிந்து தொலைத்தது. வழமை போல பாடசாலைக்குப் புறப்பட்டுப் போனேன், அன்று வெள்ளிக் கிழமை என்பதால் மனதில் ஏராளம் ஏராளமான சந்தோச அலைகள். ஏனென்றால் வெள்ளியை அடுத்துத் தானே வார விடுமுறை நாட்களான சனி கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் வருமே, அதனால் சிறியவனாக இருந்த என் மனதினுள்ளும் அந்த வார விடுமுறை பற்றி ஏராளம் கனவுகள் சிறகடிக்க நானும் ஒரு சிறு பறவையாகவே சிறகடித்துப் பாடசாலைக்கு போனேன்.

அன்று எங்கள் பாடசாலையில் ஒரு சிரமதான நாள், அதானால் அன்று பல குழுக்கள் குழுக்களாகப் பிரிந்து பாடசாலை வளாகத்தைத் தூய்மைப் படுத்தும் வேலையில் ஈடு பட்டுக் கொண்டிருந்தோம். சிறியவர்களான எங்களை பெரிய மாணவர்களும் மாணவர் தலைவர்களும் (Prefects) வழி நடாத்திக் கொண்டிருந்தனர். அப்போது நான் எங்கள் பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையிலுள்ள பகுதியைத் துப்புரவு செய்யும் வேலையில் இருந்தேன். எங்களை சில மாணவர்த் தலைவர்கள் நெறிப் படுத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது நேரம் காலை 9.30 இருக்கும் திடீரென வானிலே ஒரே இரைச்சல், பயத்துடன் நிமிர்ந்து பார்த்தால் இரு சியாமசெட்டி ரக தாக்குதல் விமானங்கள் எங்கள் பாடசாலை இருந்த பகுதியை நோக்கி வட்டமிடத் தொடங்கின. நாம் பாடசாலை வளாகம் எங்கும் சிதறி ஓடினோம், அப்போது நான் எடுத்த ஒரு முடிவு பாடசாலை மைதானப் பக்கமாக ஓடுவதென்று, ஏனென்றால் பாடசாலையில் மைதான வெளியிலே கட்டடங்கள் இல்லாமையால் குண்டு வீச்சினால் கட்டடங்களுள் மாட்டிக் கொள்ளும் அவலம் இருக்காது. அதானல் அது பாதுகாப்பு என்று நினைத்தேன். உடனே அதைச் செயற்படுத்த முனைந்து மைதானத்தை நோக்கி ஓடினேன்....

நான் மைதானத்தினுள் பிரவேசிக்க முற்பட்ட போது ஒரு மாணவத் தலைவர் என்னை மைதானப் பகுதிக்குப் போக விடாமல் தடுத்து என்னை எதிர்த் திசை நோக்கி ஓடுமாறு செய்தார். அவர் என்னை மறித்தது ஒரு வேப்ப மரத்தடியில் வைத்து, அப்போது விமானங்களில் ஒன்று குண்டை வீசுவதற்காக வேகமாக தரையை நோக்கிப் பேய் இரைச்சலோடு வர நான் என்ன செய்வதென்று அறியாமல் விழிக்க என்னை அந்த வேப்ப மரத்துக்கு அருகே இருந்த வேலியைக் கடந்து பாடசாலை வளாகத்தை விட்டு விரைவாக ஓடுமாறு கத்தினார் அந்த அண்ணா. நானும் வேலி தாண்டி ஓடினேன், ஓடினேன் ஓடிய வேகத்தில் கால் இடறி ஒரு பள்ளத்தில் விழுந்தேன். எழுந்து பார்த்தால் அந்த பள்ளம் ஒரு பாது காப்புக்காக வெட்டப்பட்ட ஒரு திறந்த வகைப் பதுங்கு குழி. அங்கே ஏற்கனவே இன்னும் சிலர், அதில் ஒரு ஆசிரியரும் இருந்தால் என் கையைப் பிடித்த அவர் பயப் படவேண்டாம் என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினார். அப்போது முதலாவது குண்டு வெடித்துச் சிதறும் ஓசை கேட்டது, தொடர்ந்து இன்னமும் மூன்று குண்டுகள் எல்லாமே எங்கள் பாடசாலைகளைச் சூழவே வீழ்ந்து வெடித்தன.

முதல் குண்டு எங்கள் பாடசாலை மைதானத்திம் மத்தியில் விழுந்துள்ளது உணரப் பட என் இதயம் பதை பதைத்தது. அந்த அண்ணா மட்டும் என்னை மறிக்காது விட்டிருந்தால் இன்னேரம் என்னிலை.......?, என்ற கேள்வி மனதில் எழ முதுகுத் தண்டு சில்லிட்டது. ஒரு வாறாக பதுங்கு குழியை விட்டு வெளியேற வெளியே ஒரே புகையும் கந்தக வாசமும் வரவேற்றது. எங்கும் ஒரே ஓலங்கள், இந்த முறை எங்கள் பாடசாலையில் பலர் காயமுற்றிருந்தனர். முதலாவது குண்டு வீச்சு பாடசாலையைச் சுற்றியே நடந்திருக்க இந்த தடவை பாடசாலை வளாகத்தினுள்ளேயே குண்டுகள் வீழ்ந்து வெடித்திருந்தன.

அப்போது யாரோ சொன்னார்கள் என்னை மைதானத்துள் போக விடாமல் தடுத்த அந்த அண்ணா (அவரது பெயர் சத்தியமூர்த்தி) முதலாவது குண்டு வீச்சிலே படுகாயமடைந்து விட்டாரென, தலையிலே மோசமாகக் குண்டடிபட்ட சத்தியமூர்த்தி அண்ணாவை அவர் என்னை வைத்து மறித்து திசை மாற்றி அனுப்பிய அதே வெப்பமரத்தடியில் இருந்து கண்டெடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அறிந்தேன். என்னுயிரைக் காப்பாற்றிய அந்த தெய்வத்தின் உயிரைக் காப்பாற்று கடவுளே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

ஆனால், ஆனால் கொஞ்ச நேரத்திலே ஒரு செய்தி எங்களை இன்னும் ஒரு குண்டுவீச்சாக வீடு வந்து தாக்கியது, தெய்வங்களும் என்னைக் காப்பாற்றிய தெய்வத்தைக் கைவிட்டு விட்டனவென்று.......

நெஞ்சம் கனக்க, கண்கள் பனிக்க என்னால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை.....
ஏன், ஏன் இப்படி?
என்ன செய்தார் அந்த அண்ணா?
காலையில் புறப்பட்டு பாடசாலை வந்தது தான் அவர் தப்பா?
இல்லை படித்து முன்னேறி நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று நினைத்தது தான் அவர் தப்பா......?

என்று ஆயிரம் ஆயிரம் விடை கிட்டா கேள்விகளுடன் நான் வாழ்க்கையைத் தொடர்ந்தேன்.....

காலங்கள் உருண்டன அந்த அண்ணனுக்கு கூட பிறந்த இரு தம்பிகள் இருவரும் கல்வி கேள்விகளில் சிறந்த இரட்டைப் பிறவிகள், ஒரு நாள் ஒன்றாகவே சேர்ந்து இருவரும் தங்களை தாங்களாகவே விடுதலைப் போராளிகளுடன் இணைத்துக் கொண்டனர்.......

இந்த இரண்டாவது வெள்ளிக் கிழமை விடியலும் மீள முதலாவது வெள்ளிக் கிழமை விடியலில் நான் எடுத்த முடிவை மேலும் வலுவாக்கின........

போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....!

Narathar
31-08-2007, 11:08 AM
போராளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகின்றார்கள் என்பதை உரக்கச்சொல்லியிருக்கின்றீர்கள்.

இது கதையல்ல நிஜம்!!!!!

இப்படியான ஓராயிரம் ரணமான கதைகள் நம் நெஞ்சங்களில் ஏராளம்....................

நான் யாழில் பிறந்தவன் அல்ல என்றாலும் யாழ்தந்த மைந்தர்களின் நல் நண்பன் நான்!!.... என்ற வகையில் என் நெஞ்சை பிளிந்தெடுத்தது உங்களது இந்த இரண்டாவது வெள்ளிக்கிழமை விடியல்

( உங்கள் 7000 ஆம் பதிப்புக்கு எனது வாழ்த்துக்கள் )

பூமகள்
31-08-2007, 11:24 AM
மீண்டும் மீளமுடியா துயர் கொள்ளவைத்து விட்டீர் ஓவியரே..
எங்கள் கண்கள் பனிக்கிறது. உங்களை காப்பாற்றிய அந்த அண்ணாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....!
சரியாகச் சொன்னீர் அண்ணா. உண்மை.
உங்களின் 7000 வது பதிப்பு என்றும் எங்கள் நெஞ்சில் நீங்கா துயராய் இருக்கும் 6000 வது பதிப்பைப் போலவே..

உங்களுக்கு முதலில் பின்னூட்டம் இட எண்ணினேன்.. நாரதர் முந்திக்கொண்டார்..................:medium-smiley-100:
நன்றிகள் ஓவியன் அண்ணா.

Narathar
31-08-2007, 12:34 PM
உங்களுக்கு முதலில் பின்னூட்டம் இட எண்ணினேன்.. நாரதர் முந்திக்கொண்டார்..................:medium-smiley-100:
.[/COLOR][/FONT]



நான் வாசிக்காமலே பின்னூட்டம் கொடுத்தேன்
நீங்கள் வாசித்திவிட்டு பின்னூட்டம் கொடுத்துள்ளீர்க*ள்
அந்தவகையில் நீங்கள் தான் முதலிடம்......

அழவேண்டாம் அன்புத்தங்கையே :medium-smiley-045:

பூமகள்
31-08-2007, 12:41 PM
தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி நாரதர் அண்ணா....!!:nature-smiley-008: :sport-smiley-018:

மலர்
31-08-2007, 01:04 PM
நெஞ்சம் கனக்க, கண்கள் பனிக்க என்னால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை.....
ஏன், ஏன் இப்படி?
என்ன செய்தார் அந்த அண்ணா?
காலையில் புறப்பட்டு பாடசாலை வந்தது தான் அவர் தப்பா?
இல்லை படித்து முன்னேறி நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று நினைத்தது தான் அவர் தப்பா......?

என்று ஆயிரம் ஆயிரம் விடை கிட்டா கேள்விகளுடன் நான் வாழ்க்கையைத் தொடர்ந்தேன்.....

காலங்கள் உருண்டன அந்த அண்ணனுக்கு கூட பிறந்த இரு தம்பிகள் இருவரும் கல்வி கேள்விகளில் சிறந்த இரட்டைப் பிறவிகள், ஒரு நாள் ஒன்றாகவே சேர்ந்து இருவரும் தங்களை தாங்களாகவே விடுதலைப் போராளிகளுடன் இணைத்துக் கொண்டனர்.......

இந்த இரண்டாவது வெள்ளிக் கிழமை விடியலும் மீள முதலாவது வெள்ளிக் கிழமை விடியலில் நான் எடுத்த முடிவை மேலும் வலுவாக்கின........

போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....!


இதற்கு காலம் நிச்சயம் தன் பதிலை சொல்லும்......
கடவுள் கருணையானவர்..... நிச்சயம் நியாயம் தீர்ப்பார்.....

சாராகுமார்
31-08-2007, 01:36 PM
அன்பு ஓவியன் அவர்களுக்கு,உங்கள் உண்மை சம்பவம் படிக்கும் போது என் இதயம் கனத்து விடுகிறது.

பிச்சி
31-08-2007, 01:58 PM
ஏழாயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

ஓவியன்
31-08-2007, 03:22 PM
போராளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகின்றார்கள் என்பதை உரக்கச்சொல்லியிருக்கின்றீர்கள்.

இது கதையல்ல நிஜம்!!!!!

இப்படியான ஓராயிரம் ரணமான கதைகள் நம் நெஞ்சங்களில் ஏராளம்....................

இவ்வாறான ரணங்கள் பல நம் நெஞ்சத்திலே புதைந்து கிடப்பது உண்மையே, அந்த ரணங்களை இங்கே மன்றிலே அன்பு உறவுகளுடன் பகிர்ந்து கொள்கையில் ஒரு வகை மன நிறைவு கிடைக்கிறது என்பதாலேயே இங்கே பதிவாக்கினேன்.

மிக்க நன்றிகள் அண்ணா உங்கள் புரிதலுக்கும் பின்னூட்டத்திற்கும்....

ஓவியன்
31-08-2007, 03:28 PM
உங்களுக்கு முதலில் பின்னூட்டம் இட எண்ணினேன்.. நாரதர் முந்திக்கொண்டார்..................:medium-smiley-100:
நன்றிகள் ஓவியன் அண்ணா.

அன்பான தங்கைக்கு!

உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்......
யார் பின்னூட்டம் முதலில் இட்டாலென்ன எல்லோரும் ஒரே உறவுகள் தானே........
என்ன செய்வது நெஞ்சமெல்லாம் மீள முடியாத துரமிருப்பதால் பதிவுகளும் அப்படியே பிரதிபலிக்கின்றன போல.......

இனிமேல் இவ்வாறான பதிவுகளின் எண்ணிக்கையை கொஞ்சம் குறைக்க நினைத்துள்ளேன் சகோதரி!.

ஓவியன்
31-08-2007, 03:30 PM
இதற்கு காலம் நிச்சயம் தன் பதிலை சொல்லும்......
கடவுள் கருணையானவர்..... நிச்சயம் நியாயம் தீர்ப்பார்.....

உண்மைதான் மலர்!

அந்த நம்பிக்கையே நம்மை இன்னமும் வாழ வைக்கின்றது.......
மிக்க நன்றிகள் உங்கள் பின்னூட்டத்திற்கு........

ஓவியன்
31-08-2007, 03:33 PM
அன்பு ஓவியன் அவர்களுக்கு,உங்கள் உண்மை சம்பவம் படிக்கும் போது என் இதயம் கனத்து விடுகிறது.


ஏழாயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி சாராகுமார் மற்றும் பிச்சி!.

lolluvathiyar
31-08-2007, 03:34 PM
7000 ஆம் பதிவாக மீண்டும் ஒரு நெஞ்சை தொடும் உன்மைகள்.
வலியில் பங்கு கொள்ள முடியவில்லை.
வெறும் அனுதாபத்தை தெரிவிக்க மனமில்லை

விரைவில் சகஜ நிலை திரும்ப வேண்டும் என்று இரைவனை பிரார்த்திகிறேன்

ஓவியன்
31-08-2007, 03:49 PM
விரைவில் சகஜ நிலை திரும்ப வேண்டும் என்று இரைவனை பிரார்த்திகிறேன்

மிக்க நன்றிகள் நண்பரே உங்கள் புரிதலுக்கு........

இதயம்
01-09-2007, 10:03 AM
ஒரு புறம் ஓவியனின் ஏழாயிரத்தை எட்டிய சாதனையின் சந்தோஷம், மறுபுறம் சாதனையை ஒட்டி அவர் அளிக்கும் கண்ணீர்க்கதைகள்.!! சாதனைக்காக பாராட்டுவேனா, அவர் கொடுத்த சம்பவத்திற்காக துக்கப்படுவேனா..? இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் நான்..! என்ன செய்வேன்..?! நான் சந்தித்த பெரும்பாலான இலங்கை தமிழ் சகோதரர்களில் ஒவ்வொருவருக்கு பின்னும் குறைந்தது ஒரு சோக நிகழ்வாவது இருக்கிறது என்பது கசப்பான உண்மை. ஓவியன் எழுதியிருப்பதை படிக்கும் போது மனிதத்தின் மீதான வன்கொடுமைகள் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய சம்பவங்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், வெடிகுண்டு, விமானங்கள், ராக்கெட் போன்ற வார்த்தைகள் அதை நிகழ்கால தொழில்நுட்பத்தை உறுதிப்படுத்தி என் கற்பனையிலிருந்து முரண்பட வைக்கின்றன.

கொடூரத்திற்கு மிருகங்களை உதாரணத்திற்கு சொல்வார்கள். ஆனால், மனிதனை விட கொடூரமான விலங்கு உலகத்தில் இருக்கமுடியுமா என்ற ஐயத்துடன், அச்சத்துடன் என் கேள்வி நிற்கிறது.!! விடியல் என்பவை வாழ்வின் சந்தோஷ நிகழ்வுகளுக்கு தொடக்கமாக இருப்பதாகத்தான் நான் அதிகம் படித்திருக்கிறேன். ஆனால், ஓவியனின் "வெள்ளிக்கிழமை விடியல் பதிவுகள்" படித்து விடியலே வேண்டாம் என்று சொல்லத்தோன்றுகிறது. ஓவியனுக்கு வெள்ளிக்கிழமைகள் கருப்பு தினமாகவே இருந்திருக்கிறது என்பது அதிர்ச்சியான உண்மை.

மலை பிளக்கும் வெடிகுண்டுகளின் தாக்குதலுக்கு பிறகு, மயிலிறகு கொண்டு மருந்து போடும் நிம்மதியை ஓவியனுக்கு மன்றத்தினரின் பின்னூட்டம் தரும் என்பது நிச்சயம்.

சிவா.ஜி
01-09-2007, 12:59 PM
இந்தப் பதிவை வாசித்ததும் முதலில் தோண்றியது...இப்படியும் ஒரு அரசாங்கம் இருக்குமா என்ற கோபம்தான். பள்ளிக்கூடத்தின்மேல் குண்டு வீச்சு நடாத்த வேண்டுமென்றால் அவர்கள் எப்படிப்பட்ட கிராதகர்களாக இருப்பார்கள். அந்த பிஞ்சு உள்ளங்கள் எப்படியெல்லாம் சிதறி,பதறி ஓடியிருப்பார்கள்...அப்படி ஓடிய உங்களை அந்த பதட்டமான நேரத்திலும் தடுத்து வேறு வழி காண்பித்து உங்களுக்கு உயிர் கொடுத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட அந்த மாணவன்..ஒரு மா மனிதன்.எத்தனை கொடுமைகள், எத்தனை துயரங்கள்,எத்தனை இழப்புகள்.....நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது...இனியொரு வெள்ளிக்கிழமை விடியல்..இப்படி விடியாமல்..ஓர் உன்னத விடியலாய் இருக்க வேண்டும்....எங்கள் அனைவரின் பிரார்த்தனையும் அதுவே.

ஓவியன்
02-09-2007, 03:03 AM
மலை பிளக்கும் வெடிகுண்டுகளின் தாக்குதலுக்கு பிறகு, மயிலிறகு கொண்டு மருந்து போடும் நிம்மதியை ஓவியனுக்கு மன்றத்தினரின் பின்னூட்டம் தரும் என்பது நிச்சயம்.

உண்மைதான் இதயம்!, அந்த நிம்மதிக்காகவே இந்தப் பதிவுகள்........
உங்களது ஒவ்வொரு பின்னூட்டத்திலும் உணர்கின்றேன் நான் அதனை......
மிக்க நன்றிகள் சகோதரரே...!

ஓவியன்
02-09-2007, 03:06 AM
எத்தனை கொடுமைகள், எத்தனை துயரங்கள்,எத்தனை இழப்புகள்.....நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது...இனியொரு வெள்ளிக்கிழமை விடியல்..இப்படி விடியாமல்..ஓர் உன்னத விடியலாய் இருக்க வேண்டும்....எங்கள் அனைவரின் பிரார்த்தனையும் அதுவே.

தங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றிகள் கோடி சிவா...........
இனிவரௌம் விடியல்கள் உன்னதமாக இருக்கவேண்டும் நமக்கு, இல்லையென்றால் உன்னதமாக்குவோம்........
அதனைத் தான் நம் உறவுகள் இப்போது தாயகத்தில் செய்து கொண்டிருக்கின்றார்கள்........
வெகு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு நிறையவே..............

ஓவியா
02-09-2007, 09:36 PM
அப்பப்பா, என்ன ஒரு வலிமையான எழுத்துக்கள். திகைத்தே போனேன்.

இரண்டு பதிவும் நெஞ்சில் கல்லைத்தான் வைத்தன.

படிக்கும் பொழுதே எனக்கு கண்ணீர் வந்துவிட்டன, உனது மனம் இதை நினைத்து நினைத்து கலங்கியிருக்குமள்ளவா!! ஆருதல் சொல்ல வார்தைகள் இல்லை அதனால் எனது வருத்தங்கள்.

இளசு
04-09-2007, 06:08 AM
போர் − அதுவும் அநியாய முறையில் அப்பாவி மக்களைக் கொன்று, காயப்பட்டுத்தும் போர்..

அதன் வடுக்கள் அத்தனை சீக்கிரம் மறைவதில்லை!

காலம் சொல்லும் இப்பாடத்தை வன்முறை வெறியர்கள்
இன்னும் புரிந்தபாடில்லை!

அகாலத்தில் அநியாய மரணம் அடைந்த அந்த அன்புள்ளத்துக்கு
ஓவியனுடன் சேர்ந்து எனது அஞ்சலியும்!

என்று முடியும் என்று ஏங்குகிறேன்!

ஓவியன்
11-09-2007, 03:17 PM
அப்பப்பா, என்ன ஒரு வலிமையான எழுத்துக்கள். திகைத்தே போனேன்.

இரண்டு பதிவும் நெஞ்சில் கல்லைத்தான் வைத்தன.

படிக்கும் பொழுதே எனக்கு கண்ணீர் வந்துவிட்டன, உனது மனம் இதை நினைத்து நினைத்து கலங்கியிருக்குமள்ளவா!! ஆருதல் சொல்ல வார்தைகள் இல்லை அதனால் எனது வருத்தங்கள்.

மிக்க நன்றிகள் அக்கா!

உங்களது இந்த பதிவும் என்னைக் கண்ணீர் வர வைக்கிறதே..........
இனிமேல் இப்படியான உங்கள் பின்னூட்டங்கள் என் பதிவுக்கு கிடைக்காதா என்ற ஏக்கத்தில்...............

ஓவியன்
11-09-2007, 03:19 PM
போர் − அதுவும் அநியாய முறையில் அப்பாவி மக்களைக் கொன்று, காயப்பட்டுத்தும் போர்..

அதன் வடுக்கள் அத்தனை சீக்கிரம் மறைவதில்லை!

காலம் சொல்லும் இப்பாடத்தை வன்முறை வெறியர்கள்
இன்னும் புரிந்தபாடில்லை!!

உண்மைதான் அண்ணா!

தெளிவான புரிதலுடன் கூடிய பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல......

அமரன்
11-09-2007, 05:29 PM
அடிக்க அடிக்க மரத்துபோகுமாம் உடலும் உள்ளமும். ஈழத்தில் இது தலைகீழ்..ஒவ்வொரு அடியிலும் இருதயத்தில் வீரம்,ஈரம் என பல் வகை உணர்ச்சிகள் தோன்றி புதிய சரித்திரம் படைக்க கொள்கை வீரரின் காலடித்தடங்களை ஒற்றி நடக்கும் அதிசய பூமி அது. பாடசாலை நாட்களில் பலருக்கு வரும் வெள்ளிக்கிழமை விடியலை நான் விரும்புவதில்லை. ஆராதனைக்காக கால் கடுக்க நிற்கவைப்பார்கள். அதுபோல் ஓவியர்களிடமிருந்து மனதை கனமாக்கும் இன்னொரு வெள்ளிக்கிழமை விடியல் இனியும் வேண்டாம். நம்பும் சக்தியிடம் வரம் கேட்போம்.

ஓவியன்
12-09-2007, 10:32 PM
வலியின் ஆழத்தை உணர்ந்த உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அமரா!!!

விடியல் விரைவில் கிட்ட சேர்ந்தே பிரார்த்திப்போம்...........

ஷீ-நிசி
13-09-2007, 04:24 AM
அன்பு ஓவியன்....

உம்முடைய இந்த நிகழ்வு மனம் வலிக்கிறது... உங்களை போன்றவர்கள் எத்தனை பேர் இப்படி பாதிக்கபட்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளமுடிகிறது...

முதல் பாகம் படிக்காமல் இருந்தேன். இன்று இரண்டு பாகங்களையும் படித்தேன். விழிகளில் கண்ணீர் முளைக்காமலில்லை..

போர்முனையில் வெடிக்கவேண்டிய குண்டுகள்
ஊர்முனையில் வெடித்தால்

அம்மக்களின் நிலைதான் என்ன?

உங்களின் வெள்ளிக்கிழமை விடியலில் மனதை கணக்கவைக்கிறது..


அந்த தேசத்திற்கு சீக்கிரமொரு விடியல் வரவேண்டும்...

ஓவியன்
13-09-2007, 09:27 AM
மிக்க நன்றி ஷீ!

அந்த விடியலுக்காகவே நாங்களும் காத்திருக்கின்றோம்.

அன்புரசிகன்
13-09-2007, 12:56 PM
அரசின் கையாலாகாத தன்மைகளின் வரிசையில் இதுவும் ஒன்று....

இப்போது சியாமா செட்டி தாக்கு விமானத்தில் உடுப்பு தான் காயப்போடமுடியும். ஆப்புவைத்துவிட்டனரே............
புதியவைகளுக்கும் ஆப்பு வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.........

ஓவியரே.... அறிந்திருப்பீர்... ஆனையிறவு முகாம் தாக்கி அழித்தபோது பல அரச படைகள் தாக்குதலால் இல்லாது நீர்த்தாகத்தாலும் இறந்திருக்கின்றனர்... முகாம் பிரிகேடியர் அவ்வாறு தான் இறந்தாரென பின்னர் தகவல்கள் வெளியாகின.... வினை விதைத்ததுகள் அறுத்தார்கள்...........

7000 பதிவுக்கு வாழ்த்துக்கள்.

ஓவியன்
13-09-2007, 09:40 PM
உண்மைதான்!

தாகத்தினால் தவித்து எதிர்த்து சண்டை போடத் திராணியில்லாமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இறந்தவர்களையும், காயமுர்றவர்களையும் விட்டு விட்டு தப்பி ஓடிய கதை அவர்களது...

மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு அன்பு!.

மனோஜ்
13-09-2007, 10:34 PM
கண்களை குளமாக்கி
நெஞ்சை ரனமாக்கிய உங்கள் அனுபவங்கள் மிக வருத்தத்துகுரியது
வோறு வார்தைகள் வரவில்லை நண்பா

ஓவியன்
13-09-2007, 11:03 PM
மிக்க நன்றிகள் மனோஜ்!

உங்கள் அன்பே அந்த ரணங்களுக்கெல்லாம் மருந்து..........

என்னவன் விஜய்
10-10-2007, 04:16 PM
ஆனால் எறிகணைத் தாக்குதல் எங்களுக்கு ஓரளவு பழகி விட்டிருந்தமையால் அதனை இலகுவாக பாதுகாப்பாக எதிர் கொள்ளும் வழி அறிந்திருந்தோம். எறிகணை தாக்குதல் எங்கள் பகுதிக்கு மீது நடாத்தப் படுவதென்றால் ஆனையிறவு இராணுவ முகாமிலிருந்து நடாத்தப் பட வேண்டும். ஒரு எறிகணை இராணுவ முகாமில் இருந்து புறப்பட்டால் அது புறப்படும் வெடி ஓசை முதலிலே கேட்கும் பின்னர் அந்த எறிகணை எங்கள் பகுதியை நோக்கி வந்தால் அது வரும் இரைச்சல் ஓசை கேட்கும் (இதனை ஷெல் கூவுது என்று நாம் சொல்லுவோம்) பின்னர் அது விழுந்து வெடிக்கும் ஓசை கேட்கும். இந்த இரைச்சல் ஓசையை வைத்து அந்த எறிகணை எந்த திசையை நோக்கி நடாத்தப் படுகிறதென்று கூறக் கூடிய வல்லமை எங்களுக்கு காலத்தின் கட்டாயத்தால் தானே கூடி வந்திருந்தது. அதனால் இராணுவத் தளத்தில் இருந்து வந்த எறிகணை எங்கள் பகுதியைத் தாக்க முன்னர் எங்களால் பதுங்கு குழிக்குள் ஓடிச் சென்று பாதுகாப்பாக நிலையெடுக்க கூடியதாக இருந்தது. ....![/B]

ஆம் ஓவியன்,இது இன்று ஈழ மக்களுக்கு மட்டும் தெரிந்த கலை. எங்கிருந்து எறிகனை ஏவப்ப்டுகிறது,எங்கே விழப்போகின்றது, விமானம் குத்துகின்றது,எங்கே குண்டு விழப்போகிறாது........................இப்படி பல கலைகளை காலத்தின் கட்டாயத்தின் பேரில் கற்றுள்ளோம்.
நன்றி ஓவியன்