PDA

View Full Version : விடியலில் வரும் அஸ்தமனம்!.ஓவியன்
30-08-2007, 11:40 AM
புதைத்தாலும் மேனோக்கி
வளருமாம் விதைகள்!
சுட்டாலும் பொசுக்கினாலும்
வெண்மை தருமாம் சங்கு!

உவமைகளை நம்பி
உழைத்த நாட்களுண்டு..
பதுமைகளை விரும்பி
பாழாக்கிய நாட்களுமுண்டு..

கவிதை ஆக ஆசைப்பட்டேன்
விதை ஆக ஆசைப்பட்டேன்
இரண்டுமே முடியவில்லை
ஒரு நீதிக் கதையானேன்
ஆசையே படாமல் இன்று....

உவமைக்கும் பதுமைக்கும்
ஓடாகத் தேய்ந்த போது
கைகூடவில்லை இரண்டும்
கைக்கூடியதோ கூடா நட்பு!

கனவிலே கிடைத்தவை
நனவிலே கிடைக்க, கிடைக்க
தவறின்றி தவறு செய்து
தவறுதலாக மாட்டி விட்டேன்!.

முடிவாக உவமைகள் உயிர்
கொடுக்கவில்லை ஒரு
பேனாவின் சாவோடு உயிர்
பறிக்க நாள் குறித்தன......!

நான் அழப் போவதில்லை
நான் விதைத்ததை,
நான் தானே அறுவடை
செய்தாக வேண்டும்.......!

விடியலுக்காகக் காத்திருக்கிறேன்
ஒரு கயிற்றிலே வந்து முடியும்
அஸ்தமனத்துக்காக............!

பூமகள்
30-08-2007, 11:49 AM
கவிதை ஆக ஆசைப்பட்டேன்
விதை ஆக ஆசைப்பட்டேன்
இரண்டுமே முடியவில்லை
ஒரு நீதிக் கதையானேன்
ஆசையே படாமல் இன்று....

உவமைக்கும் பதுமைக்கும்
ஓடாகத் தேய்ந்த போது
கைகூடவில்லை இரண்டும்
கைக்கூடியதோ கூடா நட்பு!

கனவிலே கிடைத்தவை
நனவிலே கிடைக்க, கிடைக்க
தவறின்றி தவறு செய்து
தவறுதலாக மாட்டி விட்டேன்!.

நான் அழப் போவதில்லை
நான் விதைத்ததை
நானே அறுவடை செய்ய
வேண்டுமென்பதால்.......!

விடியலுக்காகக் காத்திருக்கிறேன்
ஒரு கயிற்றிலே வந்து முடியும்
அஸ்தமனத்துக்காக............!

அருமையான கவி... அமர்களம் படைத்துவிட்டீர்..ஓவியரே...!!:icon_dance:
என்னே வரிகள் அண்ணா...!!!

நான் அழப் போவதில்லை
நான் விதைத்ததை
நானே அறுவடை செய்ய
வேண்டுமென்பதால்.......!

சரியாகச் சொன்னீர்..
ஆனால் அஸ்தமனம் நோக்கி உங்கள் விடியல் போவதில் எமக்கு உடன்பாடில்லை.. மன்னியுங்கள்..!

பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..!!:062802photo_prv:

சிவா.ஜி
30-08-2007, 12:28 PM
ஒரு விதை ஊன்றப்பட்டால் அது வளரும் என்பது இயற்கை நியதி...ஆனால் எப்படி வளர்கிறது என்பதற்கு பல காரணிகள் உண்டு.
இந்த கவிதையின் நாயகனும் அப்படி எக்குத்தப்பாய் வளர்ந்ததால்தான் இன்று கிளை பரப்பமுடியாமல் வேர்கருகி வீழ்கிறான்.
நல்லதை ஆசைப்பட்டபோது அவைக் காணல் நீராகிவிட்டன....அதேசமயம் மனம் வெறுத்த நிலையில் தீயவை ஊற்றாய் ஒட்டிக்கொண்டு முடிவில் அவனையே அதில் மூழ்கடித்துவிட்டது.
கனவிலே கிடைத்தவை
நனவிலே கிடைக்க, கிடைக்க
தவறின்றி தவறு செய்து
தவறுதலாக மாட்டி விட்டேன்!.

மிக அழகாக இவன் தவறை எப்படி தவறாது செய்தானென்று வரிகளாக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் கிடைக்கும்போது...நல்லது கெட்டது எதுவென்று யோசிக்க மூளை முனைவதில்லை.....
பட்டபிறகு நீதிக்கதையாவதில் என்ன பயன்....மீதிவாழ நீதி விடவில்லையே...
சூரியன் வர்முன் சுடுகாடு போக,சுருக்குக்கயிறை எதிர்நோக்கியிருக்கும் இந்த நாயகன் ஒரு பாடமாகத்தான் தெரிகிறான்.
நல்ல கட்டமைபுடன் கவிதை வரிகளில் கலக்கியிருக்கீறீர்கள் ஓவியன்.வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்.

ஓவியன்
30-08-2007, 01:01 PM
சரியாகச் சொன்னீர்..
ஆனால் அஸ்தமனம் நோக்கி உங்கள் விடியல் போவதில் எமக்கு உடன்பாடில்லை.. மன்னியுங்கள்..!
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..!!:062802photo_prv:

உண்மை தான் பூமகள் நானும் உங்கள் கட்சியே, ஆனால் நாம் நிதர்சனங்களை ஏற்றுக் கொண்டு தானேயாக வேண்டும்.........

இவ்வாறான வாழ்வியல் யதார்த்தங்களை விரும்பியோ விரும்பாமலோ நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டுமென்பதால் இந்தக் கருவைக் கையாண்டேன்..........

உங்கள் விமர்சனப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் பூமகள்!.

இணைய நண்பன்
30-08-2007, 01:01 PM
நன்றாக இருக்கிறது.உங்கள் சேவை தொடரட்டும்.

ஓவியன்
30-08-2007, 01:04 PM
மிக அழகாக இவன் தவறை எப்படி தவறாது செய்தானென்று வரிகளாக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் கிடைக்கும்போது...நல்லது கெட்டது எதுவென்று யோசிக்க மூளை முனைவதில்லை.....
பட்டபிறகு நீதிக்கதையாவதில் என்ன பயன்....மீதிவாழ நீதி விடவில்லையே...
சூரியன் வர்முன் சுடுகாடு போக,சுருக்குக்கயிறை எதிர்நோக்கியிருக்கும் இந்த நாயகன் ஒரு பாடமாகத்தான் தெரிகிறான்.

ஆகா சிவா!
நான் என்ன நினைத்து இந்தக் கருவைக் கையாண்டேனோ அது, அப்படியே அழகாக உங்கள் பின்னூட்ட விமர்சனத்தில்.......

கொஞ்சம் வேகமாகப் படைத்த கவி, வார்த்தைகள் பொருந்தவில்லையோ என்று நினைத்தேன், ஆனால் உங்கள் பின்னூட்டம் உற்சாகமளிக்கின்றது மிக்க நன்றிகள் சிவா.ஜி!.

ஓவியன்
30-08-2007, 01:06 PM
நன்றாக இருக்கிறது.உங்கள் சேவை தொடரட்டும்.
மிக்க நன்றி இக்ராம்!.

சாராகுமார்
30-08-2007, 01:14 PM
அருமையான கரு.அருமையான கவி.ஒருவனுக்கு தகாத நட்பு ஏற்பட்டால் ஏற்படும் அழிவு,அதனால் சுருக்கயிறை எதிர்நோக்கும் அவலம் அனைவருக்கும் நல்ல பாடம்.

இலக்கியன்
30-08-2007, 01:21 PM
விடியலுக்காகக் காத்திருக்கிறேன்
[B]ஒரு கயிற்றிலே வந்து முடியும்
அஸ்தமனத்துக்காக............!

கவிதையின் கரு மிகவும் நன்று வாழ்த்துக்கள்
தோல்வியின் முடிவு மரணம் இல்லை வாழ்க்கை வாழ்வதற்கே

ஓவியன்
30-08-2007, 01:54 PM
அருமையான கரு.அருமையான கவி.


கவிதையின் கரு மிகவும் நன்று வாழ்த்துக்கள்
தோல்வியின் முடிவு மரணம் இல்லை வாழ்க்கை வாழ்வதற்கே

மிக்க நன்றி நண்பர்களே!.

மனோஜ்
30-08-2007, 02:04 PM
கனப்போழுது மறந்துவிடு
புதிய வழிஉருவாகும்
காதல் என்னும் மதுவினிலே
மரணங்கள் வழியல்ல
மாற்றங்களே வழி
முடிவு விபரீதம் கவிதை அருமை

ஓவியன்
30-08-2007, 03:33 PM
மரணங்கள் வழியில்லைதான் மனோஜ்!
ஆனால் இங்கே இந்தக் கவிதையின் நாயகனுக்கு மரணம் வருவது விதியாகவே........

மிக்க நன்றி மனோஜ் உங்கள் பின்னூட்டக் கவிதைக்கு......!

பென்ஸ்
05-09-2007, 04:58 AM
இலையுதிரும் மரங்கள் துளிரும் நம்பிக்கையில்லாமல் போனால்...!!!!
உதிரும் இலைகலையே தனக்கு உரமாக்கி, மீண்டும் துளிராய், பூவாய் வருகிறதே...

மரங்களே நம்பிக்கையோடு..
மானிடா நீ மட்டும் ஏன்...????

காகினிடிவ் பிஹேவியர் (Cognitive behaviour) என்று சொல்லுவார்கள்... அது நீ எதை, எவ்வாறு யோசிக்கிறாயோ, அதற்கேற்றார் போல் நடந்து கொள்வாய்.... பாசிடிவான சிந்தனைகள் எப்போதும் வேண்டும். நாம் தோற்றுவிட்டதாக நினைக்கும் போதே பாதி தோற்றுவிடுகிறோம்.

ஷீ-நிசி
05-09-2007, 05:31 AM
உவமை, பதுமை... அழகு...

கூடா நட்பு... கனவெல்லாம் நனவானது..

அன்று விதைத்தது, இன்று குற்றவாளி கூண்டில் வளர்ந்து நிற்கிறது...

முடிவாக உவமைகள் உயிர்
கொடுக்கவில்லை ஒரு
பேனாவின் சாவோடு உயிர்
பறிக்க நாள் குறித்தன......!

தீர்ப்பெழுதிய பின் நீதிபதி அந்த பேனாவின் முனையை உடைப்பதை அதின் சாவென்று குறிப்பிட்டிருப்பது ரசிக்க வைக்கிறது..

காலம்கடந்தபின் பிறக்கும் ஞானோதயம்.. இந்த*
விடியலில் வரும் அஸ்தமனம்...

வாழ்த்துக்கள் ஓவியன்!

இளசு
05-09-2007, 05:58 AM
விடியல் பொழுதுகளே எப்போதும் தூக்குத்தண்டனைக்கான பொழுதுகள்!

கழுத்தை முறிக்க தீர்ப்பெழுதிய பேனா முனை முறிந்து மடிவது முன்னோட்டம்!
அந்த கடைசி இரவில் கவிதையாய் நாயகனின் நினைவுப் பின்னோட்டம்!

திருந்தலாம்.. ஆனால் உலகில் தொடர்ந்து இருக்க முடியாது!
இது மரண தண்டனைகளின் குறை!

மரணதண்டனைகளே இருக்கக்கூடாது என என சில மனித உரிமையாளர்களின் குரல்!

ஓவியனின் கவிதையில் பல பட்டைகள் ஜொலிக்கின்றன..

ரசித்தேன்.. வாழ்த்துகிறேன்!

lolluvathiyar
05-09-2007, 08:28 AM
அட இன்று தொடர்ந்து படித்த இரண்டு கவிதைகளுமே நெகட்டிவ் சிந்தனையை நோக்கி இருகிறதே.
ஓவியரே உனர்ச்சிகளை வரிகளாக்கி விட்டீர்கள்.
ஆனால் அஸ்தமனத்திலா முடிக்க வேண்டும்.
நீங்கள் கவிதையில் கூட அஸ்தமனம் ஆக கூடாது

அக்னி
06-09-2007, 08:44 AM
உலகம்,
பரந்திருக்கும் போது,
தவறுகள் சிறுத்திருந்தன...
தவறுகள்,
அடைத்துவிட்ட போது,
உலகம் சிறுத்துவிட்டது...
இறுதிநாள் தெரிந்தபோது,
வாழ்க்கை புரிந்தது...

மனிதனாய் பிறந்து, மனிதம் நிறைந்து வாழ்ந்து மடிந்தால்... பெருமை...
மனிதனாய் பிறந்து மனிதம் மறந்து வாழ்வை முடித்தால்... அது இழிமை...

பாராட்டுக்கள் ஓவியன்...

ஓவியன்
07-09-2007, 09:25 PM
காகினிடிவ் பிஹேவியர் (Cognitive behaviour) என்று சொல்லுவார்கள்... அது நீ எதை, எவ்வாறு யோசிக்கிறாயோ, அதற்கேற்றார் போல் நடந்து கொள்வாய்.... பாசிடிவான சிந்தனைகள் எப்போதும் வேண்டும். நாம் தோற்றுவிட்டதாக நினைக்கும் போதே பாதி தோற்றுவிடுகிறோம்.

ஏற்றுக் கொள்கிறேன் அண்ணலே......!
மனம் போல் வாழ்க்கை என்பதும் அதனைத் தானே........!

ஆனால் இந்த கவிதையை நெகடிவ் விளைவுகளின் விபரீதத்தை உணர்த்தவே நெகடிவான நிலையில் இருந்து உருவகித்தேன் அண்ணா!..

மிக்க நன்றிகள் உங்கள் பின்னூட்டத்திற்கு.........

ஓவியன்
07-09-2007, 09:28 PM
காலம்கடந்தபின் பிறக்கும் ஞானோதயம்.. இந்த*
விடியலில் வரும் அஸ்தமனம்...

வாழ்த்துக்கள் ஓவியன்!

ஆமாம் ஷீ!
காலம் கடந்த ஞானோதயம், ஆனால் காலம் அவனை வாழ விடவில்லை ஞானோதயத்தின் படி.........

காலம் கடந்தவர்களின் ஞானோதயங்கள், காலத்தை வெல்ல புறப்படுவோருக்கு ஒரு படிப்பினையாகட்டும்.............

ஓவியன்
07-09-2007, 09:33 PM
விடியல் பொழுதுகளே எப்போதும் தூக்குத்தண்டனைக்கான பொழுதுகள்!
கழுத்தை முறிக்க தீர்ப்பெழுதிய பேனா முனை முறிந்து மடிவது முன்னோட்டம்!
அந்த கடைசி இரவில் கவிதையாய் நாயகனின் நினைவுப் பின்னோட்டம்!
திருந்தலாம்.. ஆனால் உலகில் தொடர்ந்து இருக்க முடியாது!
இது மரண தண்டனைகளின் குறை!
மரணதண்டனைகளே இருக்கக்கூடாது என என சில மனித உரிமையாளர்களின் குரல்!

ஓவியனின் கவிதையில் பல பட்டைகள் ஜொலிக்கின்றன..

ரசித்தேன்.. வாழ்த்துகிறேன்!

உண்மைதான் அண்ணா, மரணதண்டனைகள் திருந்த ஒரு சந்தர்பம் கொடுக்கத் தவறுகின்றன என்பது உண்மையே.....

ஆனால் இனித் அத்தகைய தவறை இழைக்க முனைவோரைத் தடுக்கிறது எங்கிறது ஒரு சாராரின் வாதம்..........

அது எப்படியோ, மரணதண்டனைகளில் எனக்கும் உடன்பாடில்லை.....
அந்த நிலையில் ஒருவன் இருக்கையில் அனவனது சிந்தனை எப்படி இருக்கும் என்று உருவகித்ததன் பலனே இந்தக் கவிதை அவ்வளவே.........

உங்கள் அழகான பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல.....!

ஓவியன்
07-09-2007, 09:35 PM
.ஓவியரே உனர்ச்சிகளை வரிகளாக்கி விட்டீர்கள்.
ஆனால் அஸ்தமனத்திலா முடிக்க வேண்டும்.
நீங்கள் கவிதையில் கூட அஸ்தமனம் ஆக கூடாது

மிக்க நன்றிகள் நண்பரே உங்கள் அன்புக்கு.......! :icon_give_rose:

ஓவியன்
07-09-2007, 09:38 PM
மனிதனாய் பிறந்து, மனிதம் நிறைந்து வாழ்ந்து மடிந்தால்... பெருமை...
மனிதனாய் பிறந்து மனிதம் மறந்து வாழ்வை முடித்தால்... அது இழிமை...

பாராட்டுக்கள் ஓவியன்...

சத்தியமான வார்த்தைகள் நன்றிகள் கோடி அன்பின் அக்னி!. :icon_give_rose:

jpl
08-09-2007, 01:50 AM
விடியலுக்காகக் காத்திருக்கிறேன்
ஒரு கயிற்றிலே வந்து முடியும்
அஸ்தமனத்துக்காக............!
எளிமையான வார்த்தைப் பிரயோகங்களால் வாழ்வியலின் முரண் இயல்பாக,நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது...ஓவியன்...

ஓவியன்
08-09-2007, 05:32 AM
எளிமையான வார்த்தைப் பிரயோகங்களால் வாழ்வியலின் முரண் இயல்பாக,நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது...ஓவியன்...

மிக்க நன்றி சகோதரியே.........!
உங்கள் பின்னூட்டம் கண்டு மெத்த மகிழ்ச்சி!. :food-smiley-011:

aren
08-09-2007, 05:36 AM
கவிதை வரிகள் பிரமாதம். அழகாக வந்துவிழுந்திருக்கிறது. ஆனால் எதற்கு கயிறுவேண்டும். அதுதான் தீர்வா? இல்லையே.

வாழ்க்கை வாழ்வதற்கே
பிரச்சனைகள் அனைத்தையும்
எதிர்கொண்டு சமாளித்து
வெற்றி பெருபவனே
மனிதன்!!!

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
08-09-2007, 05:54 AM
கவிதை வரிகள் பிரமாதம். அழகாக வந்துவிழுந்திருக்கிறது. ஆனால் எதற்கு கயிறுவேண்டும். அதுதான் தீர்வா? இல்லையே.

உண்மைதான் அண்ணா!

ஆனால் இங்கே அது தீர்வாக வரவில்லை, அவன் செய்த குற்றங்களுக்காகன தீர்ப்பாகவே வந்துள்ளது..........!
விரும்பியோ, விரும்பாமலோ அவன் அந்த தூக்குக் கயிற்றைக் காலையில் சந்தித்தே ஆகவேண்டிய நிலை.........

மிக்க நன்றிகள் அண்ணா உங்கள் பின்னூட்டத்திற்கு......!

அமரன்
13-09-2007, 01:05 PM
மனிதனின் மனம் அழகு
நிறைத்து பிறப்பிக்கப்படுகிறது
வளரும் பருவத்தில் -அதில்
அழுக்குகள பல நிரப்படுகிறது
விரும்பியும் விரும்பாமலும்...

அதில்
கூடா நட்பு கூடுவது
கூடுதல் பங்கெடுக்கிறது.

அழுக்குகள் அகற்றப்படும்போது
அழகானவையால் மனது கவரப்படுகிறது..
கவிதை கலை கைவருகிறது.
அழுக்குகள் கண்டு துயரப்படுகிறது
கவிதைக் கனல் பிறக்கிறது....

கண்மூடும் கணத்துக்காக காத்திருக்கும்போது
இவனால் பிரசன்னமான கவிதை
விதைத்ததும் இறந்த பேனாவுடன் பாதியாகவும்
விதையாகப் போகும் இவனுடன் மீதியாகவும்
நாதியற்று அநாதையாக கருத்து சொரிந்தபடி..உலகில்.
மரணதண்டனை தேவைஎன வாதிப்போர்க்கு துணையாக...

மண்ணுக்குள் இருந்து எடுத்து
பட்டை தீட்டப்படும் வைரம் ஜொலிக்கும்.
மண்ணுக்குள் போகும் மனிதனின்
மனமும் வைரமாக ஜொலிக்கும்...
அதுபற்றிச் சொன்ன
ஓவியனின் கவிதையும் வைரமாக...
நண்பனாகப் பெறும் வரம்பெற்ற
பெருமிதத்துடன்
அமரன்

ஓவியன்
29-09-2007, 12:20 PM
மண்ணுக்குள் இருந்து எடுத்து
பட்டை தீட்டப்படும் வைரம் ஜொலிக்கும்.
மண்ணுக்குள் போகும் மனிதனின்
மனமும் வைரமாக ஜொலிக்கும்...
அதுபற்றிச் சொன்ன
ஓவியனின் கவிதையும் வைரமாக...
நண்பனாகப் பெறும் வரம்பெற்ற
பெருமிதத்துடன்
அமரன்

அன்பு அமரா!!

அழகுப் பின்னூட்டம் அதன் நிறைவு தந்த பெருமிதத்தில் இவன் ஓவியன்...

இனியவள்
29-09-2007, 01:51 PM
ஓரு தூக்குத் தண்டனைக் கைதியின்
எண்ணங்களைச் சொல்வதாய்
தெரிகின்றது இக் கவி ஓவியரே சரியோ :confused:

பேனாவின் முடிவில் முடியப்
போகின்றது என் வாழ்வும்

ஹீம் ரசிக்கக் கூடிய வரிகள் அடங்கிய
அழைகிய கவிதை ஓவியரே வாழ்த்துக்கள்

தவறுகளுக்கு தண்டனை மரண தண்டனை ஆகாது
என்று இந்த சட்டம் மாறும்மோ