PDA

View Full Version : கடைசிக் கடிதம்



sadagopan
28-08-2007, 08:57 AM
காதல் தடுக்கி
உன்னில் விழுந்தவள்
எழுந்தபிறகு எழுதுவது.

சுகம் சொல்லியோ,
நலம் நாடியோ
இல்லை இக்கடிதம்
ஏனெனில்
இறுதிக்கடிதத்தில்
எதிர்பார்ப்பு பொய்த்தனம்

என் வாழ்வில்
எள்ளவும் துக்கமில்லை
நந்தவனத்தில்
பயணம் செய்யும் தென்றலாய்
நளினமாய்ச் செல்கிறது இல்லறம்.

யதார்த்தத்திற்கு
சாயம் பூசும்
போலிநிலை
பிடிக்கவில்லை எனக்கு...

காதல்மணம் முடித்த
எத்தனை காதலர்கள்
கணவன் மனைவியான-பின்பும்
காதலிக்கிறார்கள்
தாலியேறியவுடன்
காதலை
கழற்றிவைத்துவிட்டு
விடுதலையோ
விவாகரத்தோ-வேண்டி
நீதிமன்றவாசலில்
கூடும் கூட்டம்
கூடிக்கொண்டேதானிருக்கிறது.

எதை நேசமென்று கொள்ள?
உரிமையான பின்னும்
அருமை குறையாமல்
நடத்துவதையா,
அவசரம் தீர்ந்ததும்
அரிதாரம் மாற்றும்
நாடகத்தையா?

பக்கத்துவீட்டு
பானு சொன்னாள்
உன் மனைவியோடு-நீ
ஒத்துப்போவதேயில்லையாம்
உள்மனதில்
உன் மீது கொஞ்சம்
வெறுப்பே வந்தது.

காதலில்கூட நீ
சரியாய் கடமையாற்றாததால்தானே
நாம் கைமாறிப்போனோம்
இப்போதும்
அதே தவறை
ஏன் இழைக்கிறாய்?

சிறுகச் சிறுக
சேர்த்துக்கொண்டால்
விஷம்கூட
உணவாகிவிடுகிறது
உன் மனமென்ன
விஷத்தைவிடகொடியதா?

என்னை நினைத்தபடி
உன்னை நீ
மறந்துபோவதாய்
கேள்வியுற்றேன்

மனைவியை
நேசிக்கத் தெரியாத நீ
மற்றவன்
மனைவியையா நேசிக்கிறாய்?

மனம் சொல்கிறது
உன்னை
மறந்ததே சரியென்று.

காலாவதியான காதலனே!
இலக்கியமும்
சினிமாவும்
காதலை
சுயநலமாகவே
சொல்லிக் கொடுத்திருக்கிறது

ஹார்மோசோம்களின்
கட்டளைக்கிணங்கித்தான்
காதலித்தோமோ
என்கிற சந்தேகம்
இப்போதெல்லாம் எனக்கு
வருவதுண்டு.

தெரிகிறது-என்னைத்
திட்டத் தொடங்கிவிட்டாய்
சந்தோஷம்-
உன் மனைவியை
நேசிக்கத் தொடங்கியதில்...

இப்படிக்கு
என்றுமே உன்னை
நினைக்க விரும்பாதவள்

(பொய்கூட
சந்தோஷமாகத்தான்
இருக்கிறது
காதலுக்காக
சொல்லப்படும்போது.)

நட்புடன்

சடகோபன்

அக்னி
28-08-2007, 11:09 AM
காதல் மாற்றமில்லாதது,
சோடிகள் மாறும்வரை...
மாற்றவேண்டியது,
சோடிகள் மாறிவிட்டால்...

காதலித்தவர்,
மனவறையில் நிறைந்திருக்கலாம்..,
ஒருவரேனும்,
மணவறை காணாதவரை...

தவிர்க்க முடியாமல்,
தடம் மாறிய காதலை,
மறக்காவிடின்,
மணவறை, பிணவறையின்
வாசலாகிவிடும்...
உனக்கும், உன் கரம்பற்றும் துணைக்கும்...

பாராட்டுக்கள் சடகோபன்... வித்தியாசமான பார்வை... உணரவேண்டிய கவிதை....