PDA

View Full Version : மழை தேடும் நதி...!அமரன்
25-08-2007, 03:44 PM
கலங்கரை விளக்குகள்
மின்னொளி பாய்ச்சிட
சங்கு நாதங்கள்
ஜீவன்களை மாய்த்தன..!

என்பு மச்சையில் குத்திய
ஊசிக்காற்று வாசல் பெருக்க
பூ வாளியால் நீர்தெளித்து
புள்ளிகள் வைத்தாள் தேவதை...!

தெளித்த தண்ணீர்
பிஞ்சுவிரல் ஓவியமாக
நாசியைத் துளைத்தது
கோலப்பொடி மணம்..!

நங்கூரமிட்ட துமிகளில்
தூரல்கள் தட்டமைக்க
அங்கே குடியேறின
மோதும் சங்கீதங்கள்...!

மழையில் மையலிலார்
யாருளர் வையகத்தில்..?
பன்னீரில் நீராடும்
ரோஜாக் கூட்டமானேன்..!

சீக்கான பட்டணத்தின்
சிங்காரப் பூங்காக்களில்
மறைந்திருந்து ரசித்தது
மோகத்துடன் தடவியது
அங்கமெல்லாம்.....!

அசையும் சொகுசு வீட்டின்
சன்னல்களில் கன்னம்வைத்து
ருசித்த சிலீர் உணர்வுகள்
வேகமாய் சரசம் புரிந்தன
நரம்புகளுடன் ..!

அரச மரங்களில்
ஈரஞ்சொட்டும் இலைகளின்
உரசல்களில் உருகுகையில்
குறுக்கிடும் அம்மா
இப்போதும் கறுப்புக் குடையுடன்...!

கள்வெறியில் வந்ததுளிகள்
மோதித் தமை அழிக்க
கம்பிகளில் சொட்டியது
செம்மை சிதைந்த குருதி..!

அன்பு விலங்குடன்
விட்டுப் பிரிகையில்
கலங்குவது புரிந்தது
வெள்ளத்து நிழல்...!

சிறைப்பிடித்த பெருமிதத்தில்
சரஞ்சரமாய் சிந்தியது கூரை..!
சிறைப்பட்ட எனை நினைத்து
அழுதது சுருங்கிய குடை...!

தலைதுவட்டும் அன்னையின்
சிலுப்பலில் சிதறியது
அடித்தோய்ந்த மழையின்
எஞ்சியிருந்த எச்சங்கள்..!

வெறுமையால் நிறைந்தாலும்
ஓடிய சுவடு மறையவில்லை.
மீண்டும் வரும் மழைக்காக
அண்ணாந்து பார்த்திருகிறது நதி...!

-அமரன்

Narathar
25-08-2007, 03:47 PM
வெறுமையால் நிறைந்தாலும்
ஓடிய சுவடு மறையவில்லை.
மீண்டும் வரும் மழைக்காக
அண்ணாத்து பாத்திருகிறது நதி...!

-அமரன்


ந*ச்!!!!!

இலக்கியன்
25-08-2007, 03:53 PM
அழகான சொல் நயம் கொண்டவரிகள் பாரட்டுக்கள்

அமரன்
25-08-2007, 07:21 PM
நாரதரே...
மழையில் நனைந்தால் ஹச்
கவியில் நனைந்தால் நச்சா...
நன்றி.

இலக்கியன்..
சொல்நயம் மட்டும்தான் இருக்குன்னு ஜாடை மாடையாக சொல்றீங்களோ..நன்றி

மனோஜ்
25-08-2007, 08:04 PM
சிறப்பான கவிதை நன்பரே மழையை ஏங்கி நிற்கும் நதியாய்
உம் கவிதையை தாங்கிநிற்கிறது மனம்

அமரன்
26-08-2007, 09:05 AM
நன்றி மனோஜ்..அழகான பின்னூட்டம்

சுகந்தப்ரீதன்
26-08-2007, 09:20 AM
வாராத தண்ணீருக்காக*
கோபத்தில் கொதிக்கிறது
நதியின் மணல்.....
எப்போது தீரும் கோபத்தின் தணல்?

வாழ்த்துக்கள் நண்பரே....!

சிவா.ஜி
26-08-2007, 10:49 AM
மழையில் மையலிலார்
யாருளர் வையகத்தில்..?
பன்னீரில் நீராடும்
ரொஜாக் கூட்டமானேன்..!

தமிழ் விளையாடுகிறது...

அசையும் சொகுசு வீட்டின்
சன்னல்களில் கன்னம்வைத்து
ருசித்த சிலீர் உணர்வுகள்
வேகமாய் சரசம் புரிந்தன
நரம்புகளுடன் ..!

வாகனத்தில் ஜன்னலோரப்பயணத்தை சொல்லியிருக்கும் அழகு....

அரச மரங்களில்
ஈரச்சொட்டும் இலைகளின்
உரசல்களில் உருகையில்
குறுக்கிடும் அம்மா
இப்போதும் கறுப்புக் குடையுடன்...!

மழை நனைவை மனம் நிறைந்து அனுபவித்து...எங்களையும் அனுபவிக்க வைத்து...

சிறைப்பிடித்த பெருமிதத்தில்
சரஞ்சரமாய் சிந்தியது கூரை..!
சிறைப்பட்ட எனை நினைத்து
அழுதது சுருங்கிய குடை...!

ஒழுகும் கூரையும் இந்த கவியின் கைகளில் கவிதை பாடுகிறது

தலைதுவட்டும் அன்னையின்
சிலுப்பலில் சிதறியது
அடித்தோய்ந்த மழையின்
எஞ்சியிருந்த எச்சங்கள்..!

வெறுமையால் நிறைந்தாலும்
ஓடிய சுவடு மறையவில்லை.
மீண்டும் வரும் மழைக்காக
அண்ணாத்து பாத்திருகிறது நதி...!

-அமரன்

அனுபவித்து ரசிக்க வைக்கும் கவிதை.மழையில் நனைவதும்..அம்மாவின் அக்கறையும்....வற்றிய ஆற்றினை வரப்போகும் வெள்ளத்தில் கற்பனையில் பார்க்கும் கவிப்பார்வையும் அருமை அமரன்.

ரோஜாக்கூட்டம்−ரொஜாக்கூட்டமானதும்,ஈரம் சொட்டும்−ஈரச் சொட்டுமானதும்,உருகுகையில்−உருகையில் ஆனதும்,அண்ணாந்து−அண்ணாத்து ஆனதும் விடுத்து அத்தனையும் அழகு.வாழ்த்துக்கள் அமரன்.

தளபதி
26-08-2007, 11:05 AM
சிலிர்க்கவைக்கும் மழை கவிதை.
அண்ணாந்து பார்ப்பது நதிமட்டுமல்ல − நாங்களும் தான்.

அமரன்
26-08-2007, 12:41 PM
ரோஜாக்கூட்டம்−ரொஜாக்கூட்டமானதும்,ஈரம் சொட்டும்−ஈரச் சொட்டுமானதும்,உருகுகையில்−உருகையில் ஆனதும்,அண்ணாந்து−அண்ணாத்து ஆனதும் விடுத்து அத்தனையும் அழகு.வாழ்த்துக்கள் அமரன்.

முதலில் மனமார்ந்த நன்றி சிவா..எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டியமைக்காக...இனிவரும் காலங்களில் குறைக்க முயற்சிக்கின்றேன்.அனுபவித்து ரசிக்க வைக்கும் கவிதை.மழையில் நனைவதும்..அம்மாவின் அக்கறையும்....வற்றிய ஆற்றினை வரப்போகும் வெள்ளத்தில் கற்பனையில் பார்க்கும் கவிப்பார்வையும் அருமை அமரன்.

அடுத்தது செல்ல திட்டு...கவிதையை ஓரவிழியால் பார்த்ததற்கு. ஒருவேளை நான் கவிதை பதித்த இடம் தவறோ..மாற்றி விடுகின்றேன்.
=அமரன்

சிவா.ஜி
26-08-2007, 01:10 PM
அமரன் மன்னித்துவிடுங்கள்...இப்போதெல்லாம் உங்கள் கவிதையின் தரம் நான் விளங்கிக்கொள்ள முடியாமல் மேலானதாக இருக்கிறது.மறைந்திருக்கும் பொருள் இந்த சாதாரனக்கண்களுக்கு தெரிவதில்லை.இன்னும் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நானும் கவிதை எழுதுகிறேன் பேர்வழியென்று வந்துவிட்டேன்.மீண்டும் ஒருநாள் நன்கு புரிந்து இதற்கு பின்னூட்டமிடுவேன்.அதுவரையில் என்னை மன்னிக்கவும்.

ஷீ-நிசி
26-08-2007, 01:15 PM
சொற்சுவை மிகுந்த கவிதை வரிகள்... வாழ்த்துக்கள்!

சிவாவின் நிலையில்தான் நானும் :(

அமரன்
26-08-2007, 02:10 PM
நன்றி ஷீ

அடடா...தப்பு என்கவிதையில் போல இருக்கே....மழை=காதல் என்நினைத்தேன். அதைக் கவிதையில் கொண்டுவரத்தவறிவிட்டேன் போலும்.
(ஏங்க சிவா என்னை வைத்து காமடி கீமடி பண்ணலையே)

தளபதியாரே நன்றிங்க. மழையை நினைத்தும் இதை எழுதினேன்.

=அமரன்

பூமகள்
26-08-2007, 02:25 PM
அழகான சொல்லாடல் மற்றும் சிந்தனை அமர் அண்ணா.:thumbsup::icon_08:
ஆனால், முழுதும் விளங்கும் அளவிற்கு நான் வளரவில்லை என்பது உங்கள் மேம்பட்ட படைப்புகளைப் படிக்கையில் புரிந்துகொள்கிறேன்... வெட்கப்படுகிறேன்.:medium-smiley-100:

கோலம் போடும் தேவதையாக தன் காதலி(மழை) பார்த்து ரசிக்கும் வற்றிய நதி(காதலன்). சரியாக அர்த்தம் புரிந்திருக்கிறதா எனக்கென்று சொல்லுங்கள் அமர் அண்ணா....?????:fragend005:

அமரன்
26-08-2007, 06:27 PM
அதே அதே தங்கையே....
கோலம்போடும் மழையாக காதல் தேவதை.
வற்றிய நதியாக காதல்வயப்பட்ட தேவதை
இப்படியும் சொல்லலாம். அப்படியும் கொள்ளலாம்

அன்புடன் அண்ணா.

பூமகள்
27-08-2007, 10:20 AM
அதே அதே தங்கையே....
கோலம்போடும் மழையாக காதல் தேவதை.
வற்றிய நதியாக காதல்வயப்பட்ட தேவதை
இப்படியும் சொல்லலாம். அப்படியும் கொள்ளலாம்

அன்புடன் அண்ணா.
அப்பாடா...:icon_rollout: மிக்க நன்றி அண்ணா தங்களின் விளக்கத்திற்கு... :sport-smiley-018:

அக்னி
27-08-2007, 11:51 AM
மழை பொழிந்ததால்
தோன்றியதோ, நதி..?
வற்றிய காதல்,
தோற்றிய காதல் எங்கே என
ஓடும் நிலை...

நதி நகர்ந்ததால்,
தோன்றியதோ மழை..?
முற்றிய காதல்,
பற்றிய காதல் எங்கே என,
தேடும் நிலை...

பாராட்டுக்கள் அமரன்...
நெடிய கவிதை என்றாலும், வருடும் கவிதை...

தளபதி
27-08-2007, 02:03 PM
உண்மை, பலமுறை படித்து பார்த்தேன். எனக்கு இது கடினமான வரிகளே!! எனக்கு தமிழ் தெரிந்தும் அதை முழுமையாக தெரிந்து கொள்ளாததால் வந்த நிலை இது என்பதை உணருகிறேன். நம்மிடம் இப்படியும் எழுதும் நண்பர்கள் இருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி.

கவிஞர் தனது கற்பனையை சொற்களில் பார்த்து கவனமுடன் செதுக்கியுள்ளார். ஒரு கவிதையைப் படிக்கும்போது, அதை உருவாக்கியவர் எதை உட்கொண்டு அதை எழுதினாரோ, அதை நம்மால் உணரமுடியுமானால், கவிதை வாசித்த வாயில் இனிப்பையும் அனுபவிக்கலாம். கவி எழுத முடியாவிட்டாலும் உரை எழுதும் சந்தோசத்துடன்.

கலங்கரை விளக்குகள்
மின்னொளி பாய்ச்சிட
சங்கு நாதங்கள்
ஜீவன்களை மாய்த்தன..!

கலங்கரை விளக்குகள் பின்னால் வானத்தில் மின்னல் கோடுகள் பரவின. அது விளக்கத்தில் இருந்து விடுபட்டது போலிருந்தது. இடிமுழக்கங்கள் அனைத்து ஜீவன்களையும் மிரளச் செய்தன. ஆம், கடல் ஓரத்தில் நதி கடலிக் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள எங்கள் தெருவில் மழை வரும் அறிகுறிகள். இத்தனையையும் எட்டு எழுத்துக்களில்.

என்பு மச்சையில் குத்திய
ஊசிக்காற்று வாசல் பெருக்க
பூ வாளியால் நீர்தெளித்து
புள்ளிகள் வைத்தாள் தேவதை...!

தெருவில் நின்றுகொண்டு வேடிக்கைப் பார்க்கும் எனது தேகத்தில் குளிர்க்காற்று ஊசிபோல் குத்தியது. இது அந்த மழை மிக அருகாமையில் வரப்போகிறது என்பதை உணரமுடிகிறது. அந்தகாற்றுக்கு வேகமும் அதிகமாதலால் அது எங்கள் தெருவையே கோலம் போடும்முன் கூட்டுவதுபோல் கூட்டிச்சென்றது. அப்போதுதான் அந்த மழை தேவதையைக் கண்டேன். அவள் பெரிய பூவாளி கொண்டு நீர் தெளித்தாள். தெளித்த நீர் பூமியில் புள்ளிகள் வைத்தன. அட!! என் மழை தேவதை வந்துவிட்டாள்.


தெளித்த தண்ணீர்
பிஞ்சுவிரல் ஓவியமாக
நாசியைத் துளைத்தது
கோலப்பொடி மணம்..!

மழை நீர் என்மேலும் பட்டது. கவிஞரே!! இது மிக அழகு!! அந்த தெளித்த நீர் குழந்தையின் பிஞ்சுவிரலால் வரைந்த ஓவியமாக (கோணல் மாணலாக)!! வழிந்தது. மழை நீர் மண்ணுடன் கலந்ததால் அந்த புதுமணம் மூக்கில் ஏறியது.


நங்கூரமிட்ட துமிகளில்
தூரல்கள் தட்டமைக்க
அங்கே குடியேறின
மோதும் சங்கீதங்கள்...!

அங்கங்கே நிறுத்தி வைக்கப்பட்ட சாரங்கள், தடுப்புகள் (சரிதானா கவிஞரே?) மீது மழைத்தூரல்கள் குதித்து கும்மாளமிட அங்கே எழுந்த சங்கீதங்கள்!! நாதங்கள்!! இனிமை.


மழையில் மையலிலார்
யாருளர் வையகத்தில்..?
பன்னீரில் நீராடும்
ரோஜாக் கூட்டமானேன்..!

மழை மீது காதல் இல்லாதவர் யார்தான் உள்ளனர்?? நானும் அப்படியே!! பன்னீரில் நீராடும் ரோஜாக்கூட்டத்தின் சிரிப்புபோல் சந்தோசம் என்னுள்.


சீக்கான பட்டணத்தின்
சிங்காரப் பூங்காக்களில்
மறைந்திருந்து ரசித்தது
மோகத்துடன் தடவியது
அங்கமெல்லாம்.....!

மழையுடன் நான் கொண்ட காதல். ஆகா!! அதனுடன் நான் நடத்திய காதல் களியாட்டங்கள்!! தேகம் மெல்ல சிலிர்க்கிறது.

அசையும் சொகுசு வீட்டின்
சன்னல்களில் கன்னம்வைத்து
ருசித்த சிலீர் உணர்வுகள்
வேகமாய் சரசம் புரிந்தன
நரம்புகளுடன் ..!

மழைக்காலங்களில் பேருந்தின் ஜன்னல்களின் கம்பிகள் வெற்றுடம்பில் படும்போது ஏற்படும் "சிலீர்" உணர்வுகள். ஆம், மழையால் மட்டுமே என்னுடன் இத்தனை வேகமாக* சரசம் புரியமுடியும்.


அரச மரங்களில்
ஈரஞ்சொட்டும் இலைகளின்
உரசல்களில் உருகுகையில்
குறுக்கிடும் அம்மா
இப்போதும் கறுப்புக் குடையுடன்...!

நான் எவ்வளவு நேரம் மழையுடன் சரசமாடினேன், மழை அரச*ம*ர*த்தில் பெய்து அதன் இலைகளை நனைத்து மெல்ல உருகி கீழே விழும் நேரத்திற்குள்ளாகவே!! எனது அம்மா!! குடையுடன் வந்து என்னை குடைக்குள் கொண்டுவந்து விட்டாள்!! ஏம்(ம்)மா??!! எனது காதலிக்கு கறுப்புக்கொடி.


கள்வெறியில் வந்ததுளிகள்
மோதித் தமை அழிக்க
கம்பிகளில் சொட்டியது
செம்மை சிதைந்த குருதி..!

கவிஞரே!! இன்னும் குறையவில்லை உங்கள் கவி!! மழை காதல் மிகுதியால் என்னை அதனிடமிருந்து பிரித்துவிட்டார்கள் என்று உணர்ந்து அந்த குடை தடையை உடைத்து எறிய மோதியது. மழை நீர் குடைக்கம்பிகளில் அதன் அழுக்குடன் சேர்ந்து குருதியாய் வழிந்தது குடைக்கம்பி முனைகளில்.


அன்பு விலங்குடன்
விட்டுப் பிரிகையில்
கலங்குவது புரிந்தது
வெள்ளத்து நிழல்...!

அம்மாவின் கைகளினால் போடப்பட்ட அன்பு விலங்குடன் மழையை விட்டுப் பிரிகையில், மண்ணில் ஓடும் மழை நீரில் என் கால் விலகுவதால் வட்டவட்டமாக வெள்ளத்தின் பிரியாவிடை, காதலால் கசிந்து.


சிறைப்பிடித்த பெருமிதத்தில்
சரஞ்சரமாய் சிந்தியது கூரை..!
சிறைப்பட்ட எனை நினைத்து
அழுதது சுருங்கிய குடை...!

எனது வீட்டின் சாரத்திற்குள் கொண்டு வரப்பட்டேன். மீண்டும் மழை மீது காதலால் சாரத்திலிருந்து மழையைப் பார்த்தேன். அந்த சாரத்தில் பட்டு வழிந்த மழை சாரத்தில் பட்டு வழிவது சரம் சரமாய் என் முன்னே!! இது இன்னும் அழகு!! நான் சிறைப்பட்டு விட்டதை நினைத்து மடக்கிவைக்கப்பட்ட குடை அழுதது. ஆம். அந்த கண்ணீர், மடக்கி வைக்கப்பட்ட குடையிலிருந்து வழியும் தண்ணீர்.


தலைதுவட்டும் அன்னையின்
சிலுப்பலில் சிதறியது
அடித்தோய்ந்த மழையின்
எஞ்சியிருந்த எச்சங்கள்..!

இழுத்துப்பிடித்து தலைத்துவட்டும் அம்மாவின் சிலுப்பலில் எனது மயிர்காம்புகள் ரை சென்று உறவாடிய மழைநீர் சிதறியது. என்னிடம் ஒட்டியிருந்த மழையின் காதலும் அங்கும் இங்குமாய் சில துளிகளாய், நனைந்த ஈரமாய். மழை மெல்ல விசும்பலுடன் மறைந்தது. அவள் வந்துவிட்டு சென்ற அடையாளங்கள் எங்கும் இருந்தது.
வெறுமையால் நிறைந்தாலும்
ஓடிய சுவடு மறையவில்லை.
மீண்டும் வரும் மழைக்காக
அண்ணாந்து பார்த்திருகிறது நதி...!

மீண்டும் ஓடிவந்து பார்த்தேன். எங்கும் வெறுமை, ஆம், மழை அனைத்தையும் சுத்தப்ப*டுத்தி ஓடிய சுவடுகள் தெரிந்தது. மீண்டும் மழையின் வருகையை எதிர்பார்த்து அண்ணாந்து பார்ப்பது என் வீட்டு அருகில் உள்ள் நதி மட்டுமல்ல. நானும் தான். !!!!

கவிஞரே!! எங்கேனும் பிழையிருந்தாலோ, விலகியிருந்தாலோ பொறுத்து திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

தளபதி
27-08-2007, 02:17 PM
கவிஞரே!! இதைப் போலவே இதனுள் ஒளிந்துள்ள "ஒரு மாலை நேரத்தில் மழைவரும் நேரத்தில் காதலியை பார்க்கும் சம்பவமும் கொடுத்து, அவளுடன் இருந்த நினைவுகளையும் கொடுத்து, பிறகு பிரிவதைக் கூறி மேலும் தேடுவதாகவும் காத்திருப்பதாகவும் முடிந்துள்ள சம்பவம்"..கலக்கிட்டிங்க.

சிவா.ஜி
27-08-2007, 02:29 PM
அற்புதமான பின்னூட்டம் தளபதி. ஒவ்வொரு வரியாக உள்நுழைந்து,அர்த்தங்களை உங்கள் உள் வாங்கி...அதை கவியுணர்வோடு விவரித்த விதம்.......அடடா...அழகு..அழகு....பலாச்சுளையே தேனாய் இனிக்கையில் அதனை தேனிலும் ஊறவைத்துக்கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு இரட்டைச்சுவை...கவிதையும்,உங்கள் பின்னூட்டமும்.வாழ்த்துக்கள்

அமரன்
27-08-2007, 07:34 PM
ஆஹா....என்னே ஒரு அழகான பார்வை.. எதிர்பார்க்கவே இல்லை தளபதி. நான் நினைத்து எழுதிய மழைக்காட்சியை அப்படியே.....ஆனந்த மழையில் நனைகின்றேன். மிக்க நன்றி. உங்களுக்குள் இருக்கும் கவிஞன் இப்பதிவில் கோலோச்சுகின்றான்.

எனக்கு மழை பிடிக்கும். கடல்கரை மழை மிக பிடிக்கும். முகத்திவார மழை மிக மிக பிடிக்கும். அப்பாக்கியம் மிக அண்மையில் கிடைத்தது. அந்தக் காட்சி என்னுள் புகுந்து மனதோடு உறவாடி கருத்தரித்து வளர்ந்து சுயமாக பிரசவமாகியுள்ளது.


கவிஞரே!! இதைப் போலவே இதனுள் ஒளிந்துள்ள "ஒரு மாலை நேரத்தில் மழைவரும் நேரத்தில் காதலியை பார்க்கும் சம்பவமும் கொடுத்து, அவளுடன் இருந்த நினைவுகளையும் கொடுத்து, பிறகு பிரிவதைக் கூறி மேலும் தேடுவதாகவும் காத்திருப்பதாகவும் முடிந்துள்ள சம்பவம்"..கலக்கிட்டிங்க.

கண்களில் மின்னல் வெட்ட வார்த்தைகள் ஜீவனிழக்க மௌனம் பிறக்க கூடவே காதல் கருக்கட்டும். ஒரு மெல்லிய சிலீர் உணர்வு நாடி நரம்பெல்லாம் ஊடுறுவும். காதல் துளிகளிதயத்தில் புள்ளிபோட சுகந்தம் பரவத் தொடங்கும். புள்ளிகள் கோணல் கோடுகளாகி காதல் ஓவியம் தீட்டப்படும். வெள்ளமாக காதல் பாயும். பதிலுக்கு இதயம் ஆலங்கட்டிக் காதல் பொழியும். இரண்டும் சேர்ந்து காதல் கீதமிசைக்கும். பார்த்துப் பெருமூச்சு விட்ட காதல் மழையில் நனைய யாருக்குத்தான் பிடிக்காது. அப்போது பார்த்தா பாச தடைகள்போட்டு அன்பு விலங்குகள் மாட்டப்படவேண்டும். அதைப்பார்த்து காதலும் அன்பும் சேர்ந்து கண்னீர் விட நிஜம்பிரிந்து நிழம் அழ அன்புசிறையிலிட்டதை நினைத்து குடும்பம் ஆனந்தத்தில் அழ சுருங்கிய மனசு விம்மி அழ தொடர் தலை வருடலில் மொத்தக் காதலும் போய்விட வற்றிய நதியாக இன்னொரு மழைக்காக நம்பிக்கையுடனும் யதார்த்தம் உணர்ந்து காத்திருக்கின்றான்/ள்....
சரியா தப்பா காதலில் கரைகண்ட நண்பர்களே சொல்லுங்கள்.

நீங்கள் எந்த இடத்திலும் என்னை விட்டு விலகவில்லை என்பதை கவியின் இன்னொரு முகத்தை அறிந்தது காட்டுகின்றது. பாராட்டுக்கள் தோழரே...! மனம் மிகவும் நிறைந்துள்ளது தளபதி. மீண்டும் கோடி நன்றி.
.
~~பிரியமுடன் அமரன்

Narathar
29-08-2007, 09:28 AM
நாரதரே...
மழையில் நனைந்தால் ஹச்
கவியில் நனைந்தால் நச்சா...
நன்றி.
உங்கள் கவிதை என் மனதில் "டச்"

இளசு
29-08-2007, 08:16 PM
தளபதி விளக்கியிராவிட்டால்
தொடக்க கோலக்காட்சியையும் மறந்து
ஒரு மழைரசிகனின் நினைவாடலாகவே எண்ணியிருப்பேன்..

முதலில் நன்றி தளபதிக்கு..

அடுத்து அபரிதமான பாராட்டுகள் அமரனுக்கு!செம்மை சிதைந்த குருதி − கண்ணீரா/ மழைத் தண்ணீரா
கம்பிநீர் ருசி − மழையமுதா../இதழமுதா

இறுதிவரை இருசுவைகள் தந்த அறுசுவைக்கவிதை அமரா..

அசந்து நிற்கிறேன்.. கவிப்புனைவில்
அடுத்த நிலை அடைந்துவிட்டாய் அமரா..

அண்ணனின் மகிழ்ச்சியான வாழ்த்துகள்!

இலக்கியன்
30-08-2007, 09:24 AM
நாரதரே...
மழையில் நனைந்தால் ஹச்
கவியில் நனைந்தால் நச்சா...
நன்றி.

இலக்கியன்..
சொல்நயம் மட்டும்தான் இருக்குன்னு ஜாடை மாடையாக சொல்றீங்களோ..நன்றி

அமரன் அண்ணா உங்கள் சொல்லாட்சி மிகவும் பிடித்து இருந்தது கருத்துக்களுடன்.

அமரன்
11-09-2007, 06:30 PM
அசந்து நிற்கிறேன்.. கவிப்புனைவில்
அடுத்த நிலை அடைந்துவிட்டாய் அமரா..

அண்ணனின் மகிழ்ச்சியான வாழ்த்துகள்!
கவிதை எழுத ஆரம்பித்தவுடன் நீங்கள் சொன்னது
"நிறையப்படி; நிறைய எழுது; எழுதியதை மீள மீளப் படி; நிறைவாக எழுதலாம்".
மூன்றாவதை பல சந்தர்ப்பங்களில் நான் மீறி இருக்கின்றேன். சில கவிகளில் கடைப்பிடித்து இருக்கின்றேன். கடைப்பிடித்த நேரத்து படைப்புகளில் உங்கள் பின்னூட்டமும் நண்பர்கள் பின்னூட்டமும் கண்டு கள் உண்ட வண்டானது என் மனது. இப்போதும் அதே நிலையில் என்னுள் உங்கள் சொற்படி நடக்க வேண்டும் என்பது தீயாகப் பரவுகின்றது. அணையாது வைத்திருக்க முயல்கின்றேன்.