PDA

View Full Version : கார்டு, கார்டு கிரெடிட் கார்டேய் !



தங்கவேல்
25-08-2007, 04:57 AM
இந்த கட்டுரையினை படித்த பிறகு நகைக்காமல் இருக்க முடியவில்லை. கிரடிட் கார்டின் அநியாய கொள்ளையில் சமீபத்தில் என்னிடமிருந்து ரூபாய் 1900 கொள்ளை அடிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குள் சுக்கு நூறாக உடைத்து, அக்கவுண்ட் குளோஸ் செய்து விட்டேன். என் வேதனையை பகிர்ந்து கொண்டதைபோல இந்த கட்டுரை இருந்ததால் இந்த கட் காப்பி வேலையினை செய்ய நேர்ந்துவிட்டது.


நன்றி - ஜே.எஸ். ராகவன்

பாசமிகு பேங்க் நிர்வாகிகளுக்கு!
என் மேல்தான் உங்களுக்கு எவ்வளவு ஆசை! உங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்கள் வேளை தவறாமல் (1) நான் ஷவரின் கீழ் நிற்கும்போதும் (2) பூஜை அறையில் தியானத்தில் இருக்கும்போதும் (3) மணக்கும் முருங்கைக்காய் சாம்பார் சாதத்தை உருளைக் கிழங்கு சிப்ஸடன் ரசித்து சாப்பிடும்போதும்(4) திரும்பிப் போட்டுக் கொண்ட கை வைத்த பணியனை எரிச்சலோடு கழட்டும் போதும் (5) கால் மேலேஉராசின ஆட்டோவோடு சண்டை போடும் போதும் (6) ஞாயிறு மதியம் அந்த வார அரியர்ஸை ஆனந்தமாக துங்கிக் கழிக்கும் போதும் போனில் தவறாமல் என்னைக் கூப்பிட்டு அன்புத் தொல்லை தந்துடறாங்க.

அப்படிக் கூப்பிடுகிற பெண்கள் உங்கள் கிரெடிட் கார்டின் புகழை சுறுக்கமாக ஒரு ஜிங்கிளாகவோ,
குறளாகவோ, வெண்பாவாகவோ அல்லாமல் மகாபாரதம், ராமாயணம், இலியட், ஒடிஸிலெவலுக்குச் காவியமாகப் பாடி, உங்கள் வங்கியின் இலக்குகளைப் பொறுத்து வருடாந்திரக் கட்டணம் (1) சாகும் வரையிலோ (2) ஏழு தலை முறைக்கோ அல்லது (3) ஈரேழு ஜென்மத்துக்கோ கிடையாது என்று கொழுத்த புழுவுடன் தூண்டில்
போட்டுவிட்டு, நான் மாத்திரம் 'ம்' என்று சொன்னால் எண்ணி அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துக்குள் என் (1) வீடு அல்லது (2) அலுவலகம் தேடிக் கூரியரில் அனுப்பி விடுவதாக அருளி என்னைத் திக்குமுக்காட வைக்கிறார்கள்.

நானும் (1) வில்லை விட்டுவிட்டு அம்பை நோவானேன் என்பதாலும் (2) பொதுவாக இளம்பெண்களை
எக்காலத்திலும் எந்த நேரத்திலும் கடிந்து பேசுவதில்லை என்கிற நற்குணத்தாலும் (3) என்னிடம் பிளாஸ்டிக் மணி என்று போற்றப்படும் கிரெடிட் கார்டுகள். (அ) பெட்ரோல் பங்க் (ஆ) விமான சர்வீஸ் (இ) புகைவண்டி (ஈ) புத்தகக் கடை போன்ற நிறுவனங்களுடன் கோ-பிரதர் போல கோ-பிராண்டாக இணைந்து வழங்கப்பட்டவைகளோடு சேர்த்து (அ) சிறுவர் (ஆ) கோல்டு (இ) பிளாட்டினம் என்று இனம் பிரிக்கப்பட்ட வகையில் சீட்டுக் கட்டுகளில் உள்ள 52 கார்டுகளின் எண்ணிக்கைக்கு மேல் (1) விசா (2) மாஸ்டர் (3) டைனர்ஸ் என என்னுடைய
போல்டர்களில் (1) பூண்டி நீர்த்தேக்கம் போல நிரம்பித் தளும்பிக்கொண்டும் (2) சதுப்பு நில அட்டைகளாக ஒட்டிக் கொண்டும் இருக்கின்றன என்பதாலும், நான் அந்தப் பூவையர்களிடம் நியாயமாகக் காட்ட வேண்டிய எரிச்சலை மறைத்து (1) பொறுமையாக பதில் சொல்லியோ (2) லைன் சரியாக இல்லை என்று டபாய்த்தோ
(3) மீட்டிங்கில் இருக்கிறேன் என்று கதைத்தோ (4) செல்லை பொசுக்கென்று ஆப் செய்தோ நிலைமையை சமாளித்து வருகிறேன்.


கிரெடிட் கார்டுகளின் கதை இப்படியாக இருக்கையில் உங்கள் வங்கிகள் எனக்கு வழங்கத் துடிக்கும் பெர்சனல் லோன் சமாசாரத்தைப் பாருங்கள்.


அந்தக் காலத்தில் (1) வள்ளல்களும் (2) ஜமீன்தார்களும் புரவலர்களின் வறுமையை மோப்பம் பிடித்து அவர்களை (1) நேரிசை வெண்பாவிலோ (2) கட்டளைக் கலித்துறையிலோ (3) கொச்சக் கலிப்பாவிலேயோ பாடப் பணித்துப் பரிசு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் உங்களுடைய கொடியின் கீழ்ப் பணிபுரியும்
கோலமயில்கள் என்னுடைய (1) நலிந்த பேங்க் பாலன்ஸை வெற்றிலையில் மை போட்டுப் பார்த்தது போல
(2) கேஷ் ப்ளோவை ஆராய்ந்தது போல (3) உள்துறை செயலாளரான என் மனைவியைக் கலந்து ஆலாசித்தது போல, என் நிதிப் பற்றாக்குறையைக் கற்பனை செய்து கொண்டு. எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில் கடன் தரத்துடிப்பதாக உற்சாகத்துடன் கட்டியம் கூறி விட்டு. நான் போனிலேயே வெறுமனே தலையை ஆட்டினால் போதும், நாற்பத்து எட்டு மணி நேரத்துக்குள் லட்சத்தைப் பணவிடையாக அனுப்பிவிடுவதாகவும், ஆனால் மேற்படி பொற்கிழயை நான் வள்ளலிடமிருந்து பெற்ற பரிசாக (1) விளையாட்டாக (2) ஒரு வருடத்திலோ (3) இரண்டு வருடத்திலோ வட்டியுடன் திரும்பிக் கட்ட வேண்டிய சின்னஞ் --- செளகர்யத்தை மெல்லிய குரலில்
கோடிகாட்டிவிட்டு, (1)இம்மைக்கும் 2) மறுமைக்கும் அஞ்சாத என்னை (3) ஈ.எம்.ஐக்கு பயப்பட வைத்துவிடுகிறார்கள்.


அன்புடையீர்! தங்குதடையின்றி தாங்கள் வழங்கிய கிரெடிட் கார்டுகளைக் கண்களை மூடி உபபோகித்து (1) தேவைப்பட்ட (2) தேவைப்படாத (3) உபயோகப்படும் (4) உபயோகப்படாத (1) துணிமணிகள்
(2) எலக்ட்ரானிக் உபகரணங்கள் (3) தங்க நகைகள் (4) மற்றும் அடாசு ஐட்டங்களை வாங்கியதால், குறுநாவல் கையெழுத்துப் பிரதிபோல உப்பலாக 'சொத்' என்று வந்து விழும் மாதாந்திர கிரெடிட் கார்டு பில்களைக் கட்டி உங்கள் கடனைத் தீர்க்க வழி தெரியாமல் விழி பிதுங்கி இருக்கும் வேளையிலே (1) கோடையிலே பெய்த குளிர் மழை போல (2) தேர்தல் முன்னே கிடைத்த திடீர் கூட்டணி போல (3) கடும் பசியின்போது கிடைத்த கடலை உருண்டை போல, தங்களுக்கு மற்ற பிரிவிலிருந்து வரும் பெர்சனல் லோன் ஆபர்களை (1) பிள்ளையைக்
கிள்ளி விட்டுத் தொட்டிலை ஆட்டிவிடும் அல்லது (2) தீயைக் கிளப்பிவிட்டு பயர் எஞ்சினுக்கு போன் செய்யும் கபட நாடகமாக நான் கருதுகிறேன்.


ஆகையினால், இக்கடிதம் கண்ட இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் என்னுடைய செல் எண்ணை தங்கள் அலுவலக 'ஏமாளிகள் மாஸ்டர் லிஸ்ட்'டிலிருந்து (1) அடிக்காமல் (2) அழிக்காமல் (3) நீக்காமல் (4) விலக்காமல் வாளாவிருந்தால் என்னுடைய செல்லை (1) பேட்டரியுடன் (2) சார்ஜருடன் (3) சிம் கார்டுடன் (4) மேனுவலுடன் (1) கூவத்திலோ (2) பக்கிங்ஹாம் கால்வாயிலோ (3) அடையாற்றிலோ அல்லது (4) வங்காள விரிகுடாவிலே தூக்கி எறிந்தபின்னர் (1) விநாயகர் (2) விக்னேஸ்வர் (3) லம்போதரர் என்கிற நம்ம பிள்ளையாருக்கு ஒரு தேங்காயை உடைத்துவிட்டு (1) சிவா (2) ராமா (3) கிருஷ்ணா என்று நிம்மதியாக இருப்பேன் என்பதை இதனால் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நன்றி

மதி
25-08-2007, 05:49 AM
ரொம்பவும் நொந்து போயிருக்கிறார் போல..
பட்டண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்..என்ன நிறைய பொய் சொல்ல வேண்டியிருக்கிறது.. ஹ்ம்ம்.

அமரன்
25-08-2007, 08:13 AM
கடனட்டைகளை சந்தைப்படுத்த அட்டைகளாக உருமாறும் அலுவலக ஊழியர்கள் அட்டையை எடுத்துவிட்டால் கொடாகண்டனாகிவிடுகிறார்கள்....

lolluvathiyar
25-08-2007, 08:24 AM
காப்பி பேஸ்ட் பன்னி போட்டாலும் மிகவும் ரசிக்கும் படி இருந்தது
ஒரு நாளைக்கு ஒரு போனாவது வரும் எனக்கு.
ஒரே வார்த்தை "நாட் இன்டரஸ்டட்" என்று முடித்து விடுவேன்.

இது மட்டுமா ரிங் டோன் டைல் டோன் வசதிகள் குறிப்பிட்டும் இந்த என்னுக்கு டயல் செய்தால் பென்ஸ் கார் பரிசு என்று கலர்கலராக பில்லுடன் விளம்பர அட்டைகள் வரும். படிக்காமலே குப்பையில் வீசுவேன்.

சிவா.ஜி
25-08-2007, 08:24 AM
அட்டகாசம் தங்கவேல்.இவர்கள் நச்சரிப்பு தாங்க முடியாமல் இப்போதெல்லாம் பட்டனத்திலிருந்து பலபேர் கிராமத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.நல்லவேளை நான் இதுவரை எந்த அட்டை(நன்றி அமரன்)யிடமும் மாட்டி அட்டைகள் வாங்காமலிருக்கிறேன்.

இதயம்
25-08-2007, 08:27 AM
அட்டகாசம் தங்கவேல்.இவர்கள் நச்சரிப்பு தாங்க முடியாமல் இப்போதெல்லாம் பட்டனத்திலிருந்து பலபேர் கிராமத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விடுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.நல்லவேளை நான் இதுவரை எந்த அட்டை(நன்றி அமரன்)யிடமும் மாட்டி அட்டைகள் வாங்காமலிருக்கிறேன்.

ஒட்டிக்கொண்டு நம் சக்தியை உறிஞ்சி எடுத்துவிடுவார்கள் என்பதால் தானோ இவைகளுக்கு அட்டைகள் பெயர் வைத்தார்கள்..??!:sport-smiley-019:

மதி
25-08-2007, 08:45 AM
ஒட்டிக்கொண்டு நம் சக்தியை உறிஞ்சி எடுத்துவிடுவார்கள் என்பதால் தானோ இவைகளுக்கு அட்டைகள் பெயர் வைத்தார்கள்..??!:sport-smiley-019:
அப்படியும் இருக்குமோ..? :icon_hmm::icon_hmm:

தங்கவேல்
27-08-2007, 06:29 AM
அப்படித்தான் அய்யா ...

ஜெயாஸ்தா
15-09-2007, 07:27 AM
"கடன் அட்டை வாங்கினோன் நெஞ்சம் போல் கலங்கினான்" -இனிமேல் இப்படி சொல்ல வேண்டியதுதான்.