PDA

View Full Version : மனிதன் வந்தான் -



மீனாகுமார்
24-08-2007, 02:57 PM
அமைதியாய் செழித்து இன்பமுற் றிருந்த
இவ்வுலகில் ஓர்நாள்...

மனிதன் வந்தான்...

சுதந்திரமாய் வளையநெளிய ஓடிய ஆற்றினை
சுவர்களை எழுப்பி தடுத்து நிறுத்தினான்.
சாக்கடையை ஆற்றிலும் கடலிலும் கலந்தான்.
தூய காற்றிலே நச்சுப்புகையை ஊடுறுவினான்.

மரங்களை வெட்டிச் சாய்த்தான் கொடூரமாக.
காடுகளை அழித்து வீடுகளைக் கட்டினான்.
சுதந்திரமாய் இன்பமாய் வாழ்ந்த எல்லா
விலங்குகளையும் சிறையில் இட்டு மகிழ்ந்தான்.

தப்பிக்க முயன்ற விலங்குகள் மரணவோலமிட்டன.
அவையெலாம் காதுகளுக்குள் இன்பத்தேனாய் பாய்ந்தன.
தத்தம் விருப்பங்களை எவரிடம் கூறும் இவ்விலங்குகள்.
இவையும் படைத்தானே கருணையற்ற இறைவன்.

பறவைகளின் இனிய கூட்டைக் கலைத்தான்.
வானத்தில் சுற்றித்திரிந்த பறவைகளைச் சுட்டான்.
அவைகளின் இருப்பிடங்களில் புகுந்து சூறையாடினான்.
முட்டைகளை சுட்டுத் தின்று மகிழ்ந்தான்.

கடலுக்கடியில் ஊர்ந்த உயிரையாயினும் நிம்மதியாய்
சுதந்திரமாய் அலைய விட்டானோ.. மனிதன்
அங்கும் சென்று அவைகளை துரத்தி
பிடித்து இழுத்து வந்து மகிந்தான்.

கூர்மையான ஊசிகளை மீன்களின் மென்மையான
நாக்கினில் அகோரமாக குத்தி இழுத்தான்.
நாய்களை ஏவிவிட்டு வேட்டையும் ஆடினான்.
இவையெலாம் இவனுக்கு மகிழ்வுறும் பொழுதுபோக்காம்.

பனிக்கட்டி படிந்திருந்த பூமியெல்லாம் புகுந்து
வீடுகளைக் கட்டி சூடேற்றிகளைச் சுழலவிட்டான்.
அறிவியல் எனும்பெயரில் குரங்குகளையும் எலிகளையும்
மருந்து கொடுத்து சித்ரவதை செய்தான்.

தன்னுடல் பெருக்க பல்வேறு விலங்குகளை
பண்ணை பண்ணையாய் காவலிட்டு வளர்த்தான்.
விண்வெளி அமைதியாய் இருப்பது பிடிக்குமா.
அங்கும் கிளம்பிவிட்டான் அதனைக் கெடுக்க.

மனிதனே.. நீ பொருட்களை வைத்து உலகை
ஆள்வதைக் கற்றுக் கொண்ட மாத்திரமே
நாங்கள் எல்லாம் உன் சிறையினுள்ளே..
உன் பார்வைக்கு மட்டும் மிருகக்காட்சிசாலைக்குள்ளே..

எங்களுக்கும் இதயத்தை கொடுத்தானே இறைவன்
அதே இதயத்தை உங்களுக்கும் கொடுத்தானோ
ஏனோ எங்களுணர்வுகள் உங்களுக்குப் புரிவதில்லை.
புரிந்தவரும் இதுவரை ஏதும் செய்ததில்லை.

நல்லவேளை.. நிலவிலும் வேற்று கிரகங்களிலும்
எங்களினம் உன்கண்ணில் இன்னும் படவில்லை.
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதனென்றார்.
எங்களுலகில் ஆறறிவு பெற்றவனே கீழ்த்தரமானவன்.

வேறு மனிதன் துணையில்லாததனால் சில
நாய்களுக்கு மட்டும் நல்வாழ்வு தந்தாய்
மனிதன் கால்பட்டஇடம் சிறுபுல் முளைக்காதென்பர்.
எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை - என்பது குறள்

lolluvathiyar
24-08-2007, 03:13 PM
அற்புதமான கவிதை மீனாகுமார்.
ஒவ்வொரு வரிகளும் ரத்தம் வர வைக்கும்

ஆனால் சாப்பிடுவதற்க்காக விலங்குகளை கொல்வது என்பது படைப்பின் இலக்கனம். அதில் தவறு இல்லை அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை.
பகுத்தறிவு ஒன்றை வகுத்து
மனிதனையே வேட்டையாடி மகிழ்கிறான். தினிகிறான் கொள்கைகளை.

paarthiban
24-08-2007, 03:57 PM
நல்ல சூடு. நல்ல மனுசனுக்கு உரைக்கும். நன்றி மீனாக்குமார் அவர்களே

மனோஜ்
24-08-2007, 04:05 PM
இதில் சிலவற்றை மனிதன் செய்து ஆகவேண்டிய கட்டாயம்
அதற்கு மிஞ்சியும் செய்யும் செயல்கள் வதைகள் என்பதை அருமையாக கவிதையாக்கியமைக்கு என் நன்றிகள் வாழ்த்துக்கள்

அமரன்
24-08-2007, 04:51 PM
மனிதனின் மறுபக்கம் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பலமான சிந்தனைக்கு அத்திவாரமிட்டுள்ளது.
எல்லா உயிரிகளும் வாழ்வதற்காகத்தானே தோன்றுகின்றன. அப்புறம் ஏன் அவற்றை அழிக்கின்றான் மனிதன் . பதில் உணவுச்சங்கிலி தொடர்ந்து சமநிலை பேணுவதற்காம். பிறப்பு இறப்பு இரண்டும் இயற்கையாக இருக்கையில் உயிர்ச்சமனிலை பேணபடும்தானே. ஏன் உணவுச் சங்கிலி..?

ஆட்டைக் கொல்வான். உணவுக்கென நியாயம் சொல்வான். புலியை வேட்டை ஆடுவான். பாதுகாப்பு/பொழுது போக்கு என்பான். ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லி தப்பித்து விடுவான். ஏற்றுகொள்ளத்தக்க வகையில் சாக்குப் போக்கு சொல்பவன் மரத்தை ஏன் வெட்டுகிறாய் என்றால் இருக்க இடம் இல்லை என்பான். அப்போ அடுக்கு மாடிகளை கட்டுவது யாராம்?
கொடுத்த அறிவை நன்றாக பயன்படுத்துகிறான் மனிதன். நியாயம் அழிவதில்லையே...இயற்கை தண்டனை கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறது. அப்படி இருந்தும் திருந்துவானா மனிதன்.
கருத்து ஆலங்கட்டிமழைக் கவிதை. பாராட்டுக்கள் மீனாகுமார்.

அக்னி
24-08-2007, 07:29 PM
சிந்தனையில் ஊசியால் துளைக்கும் வரிகள்...
இம்சிப்பாய் இருக்கும் ஏற்க மறுப்பவருக்கு...
அக்குபங்சராய் இருக்கும் ஏற்று வருந்துவோருக்கு...

ஆனால், உலகின் வட்டச் சமனிலையில், பல விடயங்களைத் தவிர்க்க முடியாதே...
தவிர்த்தால், உலகம் நிரம்பி வழியும்...
ஆனால், வீண் செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளுதல், நன்றே...
ஆனாலும், இன்று எம்மோடு சேர்ந்து வாழ்பவர் மீதே, எமக்கு அக்கறையில்லை.
நாளைய சந்ததியையா நாம் நினைத்துவிடப் போகின்றோம்..?

நாம் உணர்த்தாவிட்டாலும் உணர முயற்சியாவது செய்வோம்...

பாராட்டுக்கள் மீனாகுமார்...

சிவா.ஜி
25-08-2007, 04:40 AM
வெளிப்படும் ஆழமான கருத்துக்களால் கணமான வரிகள்.உண்மையுரைக்கின்றன...மனிதனின் வண்மையையுமுரைக்கின்றன.அதில் சில அவசியம்...பல அக்கிரமம்.உணருவானா மனிதன்...?இயற்கையை பேணாமல் இஷ்டப்படி ஆடும் மனிதன் நாளை அதே இயற்கையால் தண்டிக்கப்படுவான்...அதற்குள் விழித்துக்கொண்டால் பிழைத்துக்கொள்வான்...ஏனென்றால் இயற்கை அளவில்லாத கருணையுள்ளது.
மிகச்சிறந்த சமுதாயப்பார்வையில் எழுதப்பட்ட வரிகள்.வாழ்த்துக்கள் மீனாகுமார்.

இலக்கியன்
25-08-2007, 08:04 AM
நல்ல சிந்தனையோட்டமான கவிதை
வாழ்த்துக்கள்

மீனாகுமார்
27-08-2007, 06:05 PM
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி அறிஞர்களே...

ஆம். சில 'வதை'களைத் தடுக்க முடியாது தான். ஆனாலும் அவ் விலங்குகளின் பார்வையில் அவை வலிமிக்கதாகத்தான் இருக்கும் என்பதற்கே இந்த கவிதை.. அந்த விலங்குகளின் உணர்வுகளுக்கு சமர்ப்பணம்.

இணைய நண்பன்
27-08-2007, 06:15 PM
சிந்தனைக்கு விருது படைக்கும் கவிதை. நன்றி.

இளசு
28-08-2007, 09:27 PM
மனிதனும் இயற்கையின் படைப்பே..
மனிதனும் ஒரு விலங்கினமே..

இயற்கை சில விலங்குகளை தாவரம் உண்ணவைத்தது..
சில தாவரங்களையும் பூச்சி, புழு தின்ன வைத்தது..

இயற்கைதான் மனிதனுக்கு விரல் தந்து...
ஆயுதம் செய்ய அறிவும் இரும்பும் தந்து..
கூடுதல் வீரிய தேடல் + வக்கிர சிந்தனை கலந்து தந்தது..


தேவையான வன்முறைக்கும், தேவையற்ற வீண் வதைக்கும்
இடையில் உள்ள கோட்டை மனிதன் அழித்ததால் வந்த கவிதை இது..

பசிக்கு எலி சுட்டு சாப்பிடும் வறட்சிநில விவசாயிக்கன்று..
தோழிமான்களை அசரவைக்க அபூர்வ மான்களைக் கொன்றவர் போன்றவர்களுக்கு இக்கவிதை!

தேவையின்றி இயற்கையின் எந்த அங்கத்தையும் ஊனப்படுத்தத் துனியும்
ஈனப்பிறவிகளுக்கு இக்கவிதை!

பாராட்டுகள் மீனாகுமார்!