PDA

View Full Version : காய்க்காத மரமொன்று



சிவா.ஜி
22-08-2007, 05:14 AM
காந்தாரியின்
கருவில்லா வயிற்றின்
கந்தகத் தவிப்பை
என்னுள்ளும் உணர்கிறேன்...
அவள் பெற்ற வரம் நான் பெற
அவள் வாழ்ந்த
யுகமல்லவே இது!

பிஞ்சுக்கால்களின்
கொஞ்சல் உதைகளை
கதைகளில் மட்டுமே கேட்டு
கண்களோடு என்
கருவறையும் கலங்குகிறது!

வற்றிய வயிற்றின் மீது
தலையணை வைத்து
தாயாகிப்பார்க்கிறேன்..!

என் வீட்டிலும் மாங்கன்று...
புளிப்பாய் மாம்பிஞ்சு...
உமிழ்நீர் சுரக்கவில்லையே....!

காய்க்கின்ற மரம்தான்
கல்லடிபடும்...
காய்க்கா மரமெனக்கு
ஏனித்தனை சொல்லடிகள்...?

இரணமான மனதை
உணவாக்கிக் கொள்வதே
குஞ்சீன்ற வல்லூறுகள்தானே..!

கருப்பை மறந்தது
தன் பொறுப்பை
கடவுளும் கேட்கவில்லை
என் விருப்பை....!

கறுப்போ..சிவப்போ
அழகோ...அவலட்சனமோ,
ஆணோ..பெண்ணோ
அடிவயிறு வளர
ஆண்டவன் அருள வேண்டும்
அம்மா என்றென்னை
அழைக்க வேண்டும்...!

இளசு
22-08-2007, 06:18 AM
காய்க்கின்ற மரம்தான்
கல்லடிபடும்...
காய்க்கா மரமெனக்கு
ஏனித்தனை சொல்லடிகள்...?




பாராட்டுகள் சிவா!

சொந்த வேதனை − கூடுதலாய் சமூக உலைவாய்
சுமத்தும் வேதனை..

பாதிக்கு உரியவன் ஆண் என்றாலும்
வேதனை முழுமையும் விடிவது பெண் தலையில்..

மருத்துவக்காரணங்கள்.. நிவாரணங்களை மீறி
நித்தம் நித்தம் நம் பெண்களின் மன ரணங்கள்..


இல்லை எனும்போது வரும் வேதனைகளில்
இவ்வேதனை எத்தனை கொடுமையானது!

வடித்த விதம் அருமை சிவா.. மீண்டும் பாராட்டுகள்!

மீனாகுமாரின் அனுபவக்குறளில் மக்கட்பேறு பற்றிய பகுதியில்
அவர் அழகாய் இதன் மறுபக்கம் எழுதியிருப்பதைப் படியுங்கள்..

சிவா.ஜி
22-08-2007, 06:41 AM
நன்றி இளசு.செய்யாத தவறுக்காக குற்றம் சொல்லப்படும்போது ஏற்படும் வேதனை,வலி...தாங்க முடியாதைவை.கையில்லா,காலில்லா...ஏன் இதயமே இல்லாதவர்கள் கூட புகழப்படும்போது..பிள்ளையில்லா பெண் மட்டும் ஏன் குதறப்படுகிறாள்..அர்த்தமற்ற சமூக செயல்பாடுகளில் இதுவும் ஒன்று.

அமரன்
22-08-2007, 07:23 AM
ஆண்,பெண் இருவருக்கும் சமபங்கு இருந்தாலே இல்லறம் சிறக்கும் என்று சொல்பவர்கள் மழலை தொடர்பான விடயத்தில் பெண்ணை நோக்கியே சுட்டு விரலை நீட்டுவது வழக்கமாகிப் போய் விட்டது. சுட்டு விரல் ஆட்காட்டியின் காட்டிக்கொடுப்பின் வழிபற்றி பாயும் கணைகளின் உக்கிரங்கள்...அப்பப்பா சொல்லி மாளாது. அர்ஜுனனே தோற்று விடுவான். சுற்றம் மட்டும்மா அப்படி? கண்டவர்கள் எல்லாம் சுட தட்டிக்கேட்கவேண்டிய கொண்டவன் தினமும் கொல்வான். ஏன் இப்படி? யாரும் யோசிப்பதில்லை.
ஆணோ பெண்ணோ யாருக்கும் உலகை அறிமுகப்படுத்துவோர் பெற்றோர். வளர்த்து கணவன்,மனைவி என்ற பட்டம் சூட்டுவோரும் அவர்களும் நண்பர்களும் (பொதுவாக). ஆனால் அவளுக்கு அம்மா பட்டம் கொடுக்கவேண்டியது அவன். அவனுக்கு அப்பா அந்தஸ்து கொடுக்கவேண்டியவள் அவள். அது நடக்காத போது இருவருக்குமே கோபம் வரவேண்டும். அப்படியா நடக்கிறது. ஒட்டுமொத்த கோபத்தையும் ஆண்வர்க்கம் குத்தகைக்கு எடுத்துவிடுகின்றது. எவ்வகையான நியாயம் இது? இது மாறவேண்டும்/மாற்றப்படவேண்டும்.

கவிதைகுறைவில்லா நிறைமாதக் கர்ப்பினி போல பொலிவுடன் உள்ளது. பல இடங்களில் வலிபார்த்து வலிக்கிறது. சில இடங்களில் சுருக்கி வலிக்கிறது.

இரணமான மனதை
உணவாக்கிக் கொள்வதே
குஞ்சீன்ற வல்லூறுகள்தானே..!

இனத்தை இனம் அடித்துச் கொல்வது மனித இனம் எனச் சொல்லப்படுவோரிடம்தான் உள்ளது சிவா. பாராட்டுக்கள். தொடருங்கள். இப்படி ஒரு கவிதை இனி வராதிருக்க முயற்சிப்போம்.

சிவா.ஜி
22-08-2007, 07:35 AM
மிகச்சரியான கருத்துக்கள் அமரன்.ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவிலே வைத்த ஒரு நியதியை...பெண்ணுக்கெதிரே பயண்படுத்தும் ஈரமற்றோரில் பல பெண்களே இருப்பதுதான் கொடுமையான விடயம்.விஞ்ஞானம் எத்தனைதான் வளர்ந்தாலும்,அறிவியல் உண்மைகள் எத்தனைதான் உரைத்தாலும்...உரைக்காது இந்த ஜென்மங்களுக்கு.
நன்றி அமரன்.

Narathar
22-08-2007, 07:45 AM
காந்தாரியின்
கருவில்லா வயிற்றின்
கந்தகத் தவிப்பை
என்னுள்ளும் உணர்கிறேன்...
அவள் பெற்ற வரம் நான் பெற
அவள் வாழ்ந்த
யுகமல்லவே இது

கந்தகத்தவிப்பை இந்தியர்களாகிய நீங்கள் உணர்ந்திருப்பீர்களோ
இல்லையோ இலங்கையர்களாகிய எங்களுக்குத்தெரியும் அதன் கொடுமையை அருமையான வார்த்தை பிரயோகம்




பிஞ்சுக்கால்களின்
கொஞ்சல் உதைகளை
கதைகளில் மட்டுமே கேட்டு
கண்களோடு என்
கருவறையும் கலங்குகிறது!

வற்றிய வயிற்றின் மீது
தலையணை வைத்து
தாயாகிப்பார்க்கிறேன்..!

என் வீட்டிலும் மாங்கன்று...
புளிப்பாய் மாம்பிஞ்சு...
உமிழ்நீர் சுரக்கவில்லையே....!

காய்க்கின்ற மரம்தான்
கல்லடிபடும்...
காய்க்கா மரமெனக்கு
ஏனித்தனை சொல்லடிகள்...?

இரணமான மனதை
உணவாக்கிக் கொள்வதே
குஞ்சீன்ற வல்லூறுகள்தானே..!

கருப்பை மறந்தது
தன் பொறுப்பை
கடவுளும் கேட்க்கவில்லை
என் விருப்பை

மனத்திரையில் காட்சியை உருவாக்கி அவள் சோகத்தை உணர்த்துகிறது உங்கள் வரிகள்



கறுப்போ..சிவப்போ
ஆழகோ...அவலட்சனமோ,
ஆணோ..பெண்ணோ
அடிவயிறு வளர
ஆண்டவன் அருள வேண்டும்
அம்மா என்றென்னை
அழைக்க வேண்டும்



தாய்மை எனும் உன்னத பதவியை அடைய அவள் படும் துரை கண் முன் கொண்டூவந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்

ஆதவா
22-08-2007, 07:45 AM
காந்தாரியின்
கருவில்லா வயிற்றின்
கந்தகத் தவிப்பு..

அவளுக்கு உடைந்துபோக பிண்டமிருந்திருக்கும். உலகோரை அழிக்க துண்டம் விழுந்திருக்கும். புளி கரைத்த (கந்தக) வயிற்றுக்குள் புழுவுண்டாவது அனைவரும் சொல்லும் விஷயம். பிள்ளையுண்டாவது விரும்பும் விஷயம்.

பிண்டமொன்று உருளக் கண்டால் கரும்பாகும் கைகள். தொட்டுத் தடவி நெஞ்சில் விதைக்கும் கற்பனைப் பயிற்கள். எதுவுமின்றி வற்றியதாய் நிலவக்கண்டால்??

சேயாவது பிறப்பின் உரிமை
தாயாவது பெண்மையின் முழுமை,

இரண்டும் தருவது பெண்களின் கடமை. இல்லாதிருப்பது பிரச்சனைகளின் செழுமை. தினம் தினம் புழுங்குவதும் அந்த புழுங்கள் பற்றாதென்று புழுவை தீயிலெரிப்பது போல வார்த்தைகளும் (சொல்லடிகள்...) நினைக்கவொண்ணா துன்பங்கள்.. ஆனாலும்... இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் பெரும்பாலும் கருவுண்டாவது செய்யப்படுகிறது. அல்லது விருப்பமிருந்தால் செயற்கை கருவுண்டாதலும் உண்டு...

இயற்கை என்றாவது தோற்கும்போது செயற்கை தலைதூக்கும். பிள்ளைப் பேறு அல்லாதவர்களுக்கு எவரோ ஒருவர் பிள்ளை இருக்கக்கூடும்.. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

வாழ்த்துக்கள்.

ஆதவா
22-08-2007, 07:48 AM
அமரரே! கலக்குறீர் விமர்சனத்தில்.. வாழ்த்துக்கள்.

இணைய நண்பன்
22-08-2007, 11:02 AM
நல்ல கவிதை.பாராட்டுக்கள் சிவா.ஜி..
"காய்க்கின்ற மரம்தான்
கல்லடிபடும்...
காய்க்கா மரமெனக்கு
ஏனித்தனை சொல்லடிகள்...?"


சிந்திக்கவைக்கும் வரிகள்.தொடரட்டும் உங்கள் சேவை

இலக்கியன்
22-08-2007, 05:36 PM
தாய்மை என்பது எவ்வளவு சுமைகளின் பின் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம் என்பதை வரிகளில் கொண்டு வந்தீர்கள் வாழ்த்துக்கள் சிவா

ஷீ-நிசி
22-08-2007, 06:14 PM
பிள்ளையில்லா கொடுமை... அது
எல்லையில்லா கொடுமைதான் ...

கரு உருவாகாததை நினைத்து
உருவான கரு...

இந்தக் கவிதை.. தொடருங்கள் சிவா

அக்னி
22-08-2007, 10:03 PM
பத்துமாத சுமை தாங்க,
ஏங்கும் மனதிற்கு..,
நித்தமும் சுமை ஏற்றும்,
சொல்லின் கனதிகள்...

உயிர் தங்காத கருவறை...
வசை தாங்காத இதயவறை...
கழுவேற்றப்படுகின்றது..,
தாய்மை..!

அபாரம்... சிவா.ஜி...
ஒரு பூக்காத செடியின் சலனங்கள்,
வேதனையின் நடுக்கங்களே...
துள்ளலாட்டங்கள் அல்ல...
என்று உணர்த்தும் கவிதை...

சிவா.ஜி
23-08-2007, 04:49 AM
கந்தகத்தவிப்பை இந்தியர்களாகிய நீங்கள் உணர்ந்திருப்பீர்களோ
இல்லையோ இலங்கையர்களாகிய எங்களுக்குத்தெரியும் அதன் கொடுமையை அருமையான வார்த்தை பிரயோகம்

மனத்திரையில் காட்சியை உருவாக்கி அவள் சோகத்தை உணர்த்துகிறது உங்கள் வரிகள்
தாய்மை எனும் உன்னத பதவியை அடைய அவள் படும் துரை கண் முன் கொண்டூவந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்
மனம் நிறந்த நன்றி நாரதர்.உங்கள் மண்ணின் கந்தக தவிப்பை நேரடியாய் உணரவில்லையெனினும்..மனதால் உணர்ந்தவன்.அவை மாறும் நாளுக்காக உங்களோடு நானும் காத்திருக்கிறேன்.

சிவா.ஜி
23-08-2007, 04:55 AM
ஆதவா...பிரமாதம்.ஒரு கவிதைக்கான பிணன்னூட்டத்தில்..பல கவிவரிகள்...
ஒவ்வொரு வரியும் ஒரு கவிதை சொல்கின்றன.மிக அருமையான பின்னூட்டம்.விஞ்ஞான வளர்ச்சியில் செயற்கைத் தாய்மை முடியுமென்றாலும்..இன்னமும் பெரும்பாலான மக்கள் விரும்புவது இயற்கையையே.என்ன செய்வது இவையெல்லாம் மாற இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.
மனம் நிறைந்த நன்றி ஆதவா.

சிவா.ஜி
23-08-2007, 04:56 AM
உங்கள் ஊக்கப் பின்னூட்டத்திற்கு மிக மிக நன்றிகள் இக்ராம் மற்றும் இலக்கியன்.

சிவா.ஜி
23-08-2007, 04:58 AM
உயிர் தங்காத கருவறை...
வசை தாங்காத இதயவறை...
கழுவேற்றப்படுகின்றது..,
தாய்மை..!

அசத்திவிட்டீர்கள் அக்னி. எப்போதும்போல் பின்னூட்டக்கவிதையில் முத்திரை பதிக்கிறீர்கள்.இதற்காகவே இன்னும் நிறைய படைக்கலாமென்று தோண்றுகிறது. மனமார்ந்த நன்றிகள் அக்னி.

சிவா.ஜி
23-08-2007, 05:00 AM
பிள்ளையில்லா கொடுமை... அது
எல்லையில்லா கொடுமைதான் ...

கரு உருவாகாததை நினைத்து
உருவான கரு...

இந்தக் கவிதை.. தொடருங்கள் சிவா

ஷீ−நிசியின் வார்த்தை விளையாட்டில் விளைந்த இன்னுமொரு அழகான பின்னூட்டம்..மகிழ்வாக இருக்கிறது.நன்றிகள் பல.

lolluvathiyar
23-08-2007, 12:11 PM
ஒவ்வொரு வருயும் அருமை சிவா ஜி
எதையும் பின்னூட்டம் இட்டு சொல்ல வேண்டியதில்லை மொத்த வரிகளு கலக்கியதால். கலங்க வைத்து விட்டது.

மனித வாழ்கையில் வேடிக்கை என்னவென்றால். குழந்தைக்கு ஏங்குவார்கள், பிறந்து 25 வருடம் ஆனதும் ஏன் பிறந்து தொலைத்தது சனியன் என்றும் ஏசுவார்கள்

சிவா.ஜி
23-08-2007, 12:15 PM
இதுதான் வாத்தியாரென்பது...எதார்த்தத்தை அப்படியே சொல்வது உங்கள் சிறப்பம்சம்.25 வயதிலும் பெற்றோரை அரவனைக்கும் பிள்ளைகளை அப்படி சொல்வதில்லை..ஆனால் பல பிள்ளைகள் அப்படி சொல்லவைத்து விடுகிறார்கள்.
மனம் நிறைந்த நன்றி வாத்தியார்.

ஓவியன்
24-08-2007, 06:07 AM
பெண்களின் பெருமையெல்லாம்
தாய்மையே..................
ஒவ்வொரு பெண்ணும் தானும் ஒரு தாயாக வேண்டும் என்றே ஆவலுடனிருப்பாள், அந்த ஆவல் மறுக்கப் படுகையில், அல்லது மழங்கடிப் படுகையில் பாவம் பேதை அவள் என்னே செய்வாள்..........?

இளசு அண்ணா கூறிய படி பாதிக் காரணம் படிந்து இருப்பது ஆண்களிலேயே என்றாலும் பாவி இவள் தலையை மட்டும் ஏன் உருட்டுகிறது பாழாய்ப் போன எம் சமூகம்.............?
நல்லது கெட்டது நடக்கும் போது அவளை மட்டும் விலத்தி வைத்து அவள் புண்பட்ட நெஞ்சிலே மேலும் தீயள்ளிக் கொட்டுகின்றனரே........?

எனக்குத் தெரிந்து ஒரு ஆண் மகன், விதவையான தன் தாயாரையும் மகவில்லா தன் சகோதரியையும் தன் திருமணத்தில் முன்னே நிறுத்தியமைக்காக அவர் இல்லற வாழ்க்கை இன்றைக்கும் சண்டைகளும் சச்சரவுகளுமாக இருக்கின்றது........!
சில பெண்களினாலேயே பெண்களது உணர்வுகளினை புரிய முடியாமல் இருக்கின்றது என்னும் போது எவ்வளவு வருத்தமாக இருக்கின்றது.....!

மகவு இல்லாததை இயல்பாக எடுத்து கணவனுக்கு மனைவி குழந்தையாகவும் மனைவிக்கு கணவன் குழந்தையாகவும் தூற்றுவோர் தூற்றட்டும் நமக்கென்ன என்று வாழும் நிலை வர வேண்டும் நம் சமூகங்களில்..................

வருமா சிவா...............?
வராவிட்டால் வரவைக்க வேண்டும் எல்லோரும் ஒன்றாக இணைந்து.....!

சிவா.ஜி
24-08-2007, 06:15 AM
உயரிய சிந்தனை ஓவியன்....எதார்த்த நிலை அச்சமளிக்கிறது.இருப்பினும் ஊர்கூடி தேர் இழுத்தால் நகராமலா,நடக்காமலா போய்விடும்.இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டும்.ஆழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி ஓவியன்.

ஓவியன்
24-08-2007, 06:17 AM
பிள்ளையில்லா கொடுமை... அது
எல்லையில்லா கொடுமைதான் ...

கரு உருவாகாததை நினைத்து
உருவான கரு...

அடடே ஷீ− நிசி!
அழகான சில வரி விமர்சனம்.......

உங்கள் விமர்சனங்கள் ஒற்றை வரிகளில் முடிவதைக் கண்டு ஏங்கும் எனக்கு உங்களது இப்படியான விமர்சனங்கள் தொடராதா என்ற ஏக்கம் இப்போது..........!

தொடரவேண்டும் கவிச்செல்வரே இவ்வாறான உங்கள் பின்னூட்டங்களை!.

பென்ஸ்
04-09-2007, 12:02 PM
நன்று என்று அறிந்தும் சில நேரம் பாராட்ட வருவதில்லை,
இளவு வீட்டில் சிறு குழந்தையில் சிரிப்பை ரசிக்க முடியாமல் போகும் மனது போல் கவிதை வாசித்து கனத்து போன மனதில் அருமையான கவிதையை பாராட்ட எழுத்துகள் இல்லை.

"காந்தாரியின் கருவில்லா வயிறு" என்பது மனதில் நெருடினாலும் பின்னால் ஒரு குழந்தை பேறு இல்லாத பெண்ணாகவே இருந்தௌ அந்த வலிகளை உணர்ந்து எழுதிய ஒரு கவிதை இது.

பிஞ்சு கால்களால் மிதிக்கபடும் ஆசை நிறைவேறாமல் பஞ்சு தலையனை வயிறால் சமாதானபடுத்த முயன்றும், கவலையால் உடல் வேதியலே மாறி போன பின்னரும் ....

பெற்றவளே பேத்தி எங்கே என்று கேட்க்கும் போது, அவள் ஆசையை விட என் மனம் பெரியதாக படாமலா போனது???

கடைசி வரிகளில் பசித்தவன் கோப்பை கூழாவது கிடைக்காதா என்று ஏங்கும் நிலையை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்... பசி தீர்ந்ததும் ருசி நாடுமா இந்த மனமும்... ???

சிவா.ஜி
04-09-2007, 12:12 PM
நன்று என்று அறிந்தும் சில நேரம் பாராட்ட வருவதில்லை,

மிக அழகானதொரு பின்னூட்டம்.வரிகளை வாசித்து ரசிக்காமல்,ரசித்து வாசித்த ரசனை தெரிகிறது.கொடுக்கப்பட்ட உவமைகள் ஒரு சிறந்த விமரிசகரை முன்னிறுத்துகிறது.மனம் நிறைந்த நன்றிகள் பென்ஸ்.

பூமகள்
30-09-2007, 03:15 PM
பிஞ்சுக்கால்களின்
கொஞ்சல் உதைகளை
கதைகளில் மட்டுமே கேட்டு
கண்களோடு என்
கருவறையும் கலங்குகிறது!
இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன்.
மொத்தத்தில் அற்புதமான தேர்ந்த வரிகள் சிவா அண்ணா. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

சிவா.ஜி
01-10-2007, 04:35 AM
நன்றி பூமகள்.உன்னுடைய கவிதையின் தேர்ந்த வார்த்தைகளுக்குமுன் இது ஒன்றுமில்லை.மேலும் மிளிர வாழ்த்துக்கள்.