PDA

View Full Version : பூவிலும் பாலுண்டு ( அ.மை. - 26)



இளசு
21-08-2007, 09:25 PM
பூவிலும் பாலுண்டு

அறிவியல் மைல்கற்கள் - 26
அ.மை: 25 - அறிவியல் இமயம் நியூட்டன் இங்கே -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8294


ரூடால்ஃப் ஜேக்கப் கேமராரியஸ் ( 1665 - 1721)


மூன்றாம் நூற்றாண்டிலேயே தாவரங்களில் ஆண்பால் - பெண்பால் என
இரு வகைகள் இருப்பதை மனிதன் கொஞ்சம் அறிந்துவத்திருக்கிறான் என
ஆதராங்கள் இருந்தாலும்,

ஜெர்மனியைச் சேர்ந்த கேமராரியஸ்தான் இதைச் சோதனைகள் மூலம்
உலகுக்கு அழுத்தமாக நிரூபித்தவர்.

அந்த சாதனைக்காக அவருக்கு இந்த 26-ம் மைல்கல் அர்ப்பணம்.

நம் நாட்டிலும் நம் மூதாதையர்கள் இயற்கையைக் கவனித்து
இத்தாவர பாலின விதியை என்றோ நிச்சயமாய் அறிந்திருப்பார்கள்.
கார்த்திகை தீபம் அன்று, கவண் நடுவே துணியில் வைத்து
பூப்பூவாய் பொறி பறக்க எரிக்கும் கரி தருவது - பனைமரத்தின் ஆண் பூ என
சொல்லக் கேட்டிருக்கிறேன்.

செடிகள் - மலர்களில் ஆண் -பெண் பால் பேதம் பற்றி
விவரமானக் குறிப்பு பண்டைய இலக்கியங்கள், ஏடுகளில் இருந்தால்
அறிந்தவர்கள் கூறுங்கள். அறியக் காத்திருக்கிறேன்.

ஒரு மரம் அல்லது செடி காய்க்க அதன் மலரில் ''போலன்'' எனப்படும் மகரந்தம்
சேரவேண்டும் என சோதனைகள் மூலம் நிறுவியவர் கேமராரியஸ்.

ஆமணக்குப் பூவின் ''ஸ்டேமனையும்'', சோளப்பூவின் ''ஸ்டிக்மா''வையும்
நீக்கிய அவர், அவை ''விதை'' உருவாகமல் மலடாயிருப்பதை நிரூபித்தார்.

http://www.urbanext.uiuc.edu/gpe/case4/c4facts1a.html

ஸ்பினாச், பாலக் என அழைக்கப்படும் கீரைச்செடிகள் ஆண், பெண் என
இரு வகையில் இருப்பதையும், அவற்றைப் பிரித்து தூரத்தில் வளர்த்தால்
இதே போல் வாரிசு இல்லாமல் அழிவதையும் செய்துகாட்டினார்.

மிருகங்கள் போலவே , தாவரங்களும் ''பாலினச் சேர்க்கை''யாலேயே பல்கிப் பெருகுகின்றன
என தம் முடிவை ஆணித்தரமாக 1694 -ல் வெளியிட்டார்.

அறிவியல் உலகில் அடிக்கடி நடக்கும் விசேஷம் ஒன்றுண்டு. எங்கோ ஒருவர் தனியாய் பாடுபட்டு
ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துவார். ஏறக்குறைய அதே காலகட்டத்தில் கொஞ்சம் பிந்தி
இன்னொருவர் உலகின் இன்னொரு மூலையில் அதே முடிவை எட்டுவார்.

இங்கும் பூக்களின் பால் இனம் பற்றி 1696-ல் இலண்டனில் நெஹமய்யா க்ரூ என்பவரும்
ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை அதே முடிவுகளுடன் சமர்ப்பித்தார்.

கேமராரியஸ் கண்டுபிடிப்பின் பலன்கள் விரைவில் தெரிய ஆரம்பித்தன.
ஒரே ஸ்பீஷிஸ் (இனம்) பூக்களின் ஆண் -பெண் சேர்க்கை இயற்கை!
மனிதன் செயற்கையாய் வேறு வேறு இனப் பூக்களின் ஆண் -பெண்ணைச் சேர்த்தான்.
விநோத, வேடிக்கை வண்ணங்களில் புதிய பூக்கள் தோன்றின.
அதே போல் அபூர்வ இனப் பூக்களை விரும்பும் அளவுக்கு சேர்த்து பெருக்க வைத்தான்.
முன்னர் அத்திப்பூ என்பன அதன்பின் சந்தைப்பூ ஆயின!

பின்னர் நுண்ணோக்கியால், ஆண் மகரந்தம் எப்படி ஒரு குழாய் முளைத்து (போலன் டியூப்)
பெண் மகர்ந்த ''முட்டை''யை சிறு துவாரம் போட்டு துளைத்து கருவாய் உருவாகிறது
என்ற தேவ ரகசியமும் அறிந்தான்..

உச்சமாய் கிரகர் மெண்டல் என்ற துறவி.. அறிவியல் துறக்காத துறவி...
அவரைப்பூக்களின் மகரந்தச் சேர்க்கையை அளவானக் கட்டுப்பாட்டில் நிகழ்த்தி
மரபின் விதிகளையே இம்மாநிலம் அறியத் தந்தான்!


பிறப்பின் மரபுச் சிக்கல் அறிந்து சொன்னவர் - ஒரு துறவி!
அறிவியலில் எனக்கு மிகவும் பிடித்த முரண் இது!!

இன்றைய மரபு மாற்ற உணவுத்தாவரங்கள் வரை வியாபித்து நீடிக்கும்
அறிவியல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய கேமரேரியஸ் அவர்களுக்கு
நம் அறிவியல் மைல்கல் 26-ஐ அர்ப்பணித்தது தகும்.. இல்லையா நண்பர்களே?

பாரதி
22-08-2007, 01:39 AM
தாவரங்கள் என்ற சொல்லுக்கு பதிலாக பூவுக்கும் பாலுண்டு என்ற தலைப்பே என்னைக்கவர்ந்தது அண்ணா...!

வழக்கமாய் அனைவருக்கும் யோசிக்கும் பூவும் வண்டும், பூவும் வண்ணத்துப்பூச்சியும் அல்லது தும்பியும் என்று பார்ப்பவர்களில் இருந்து வித்தியாசமாய் சிந்தித்து, ஆராய்ந்து, முடிவு கண்டது உண்மையிலேயே மைல்கல்தான்.

வழக்கம் போல மூலகாரணகர்த்தாக்களாக இருப்பவர்களின் பெயரையும் செயலையும் அறிந்து கொள்ள பெரிதும் துணைபுரியும் உங்களுக்கும், இந்தத்தொடருக்கும் நன்றிகள் பல. தொடருங்கள் அண்ணா.

aren
22-08-2007, 01:48 AM
பல மிகப்பெரிய விஷயங்களை மனிதன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே அதுவும் ஒரு அளவுகோலும் இல்லாமல் எப்படித்தான் முடிந்திருக்கிறதோ, நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது. இப்பொழுது இவ்வளவு விஷயங்கள் நமக்குத் தெரிந்தும் ஒன்றும் கண்டுபிடிக்கமுடியாமல் நாம் இருக்கிறோம். இது ஒரு விந்தைதான்.

நிச்சயம் இது மைல்கல்லில் சேர்க்கப்படவேண்டிய விஷயம்தான்.

நன்றிகள் இளசு அவர்களே. தொடருங்கள். உங்கள் மூலம் பல விஷயங்களை நாங்கள் தெரிந்துகொள்கிறோம்.

நன்றி வணக்கம்
ஆரென்

மலர்
22-08-2007, 03:52 AM
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..ரோஜா போன்ற விதை இல்லாத செடிகளில் இது எப்படி நடைபெறும்..

சிவா.ஜி
22-08-2007, 04:22 AM
காலை மன்றம் திறந்ததும் கண்ணில்பட்ட முத்து.பூவுக்கும் பாலுண்டு என்பதை கண்டுணர்ந்து சொன்னவருக்கான இந்த சமர்ப்பணம் மிகவும் அருமை. நீங்கள் சொல்வதைப்போல நம் முன்னோர்களும் இதை கண்டிருப்பார்கள்,ஆனால் அதை வழக்கம்போல் ஆவணமாக்காமல் விட்டிருப்பார்கள்.இப்போதும் நம் நாட்டில் காய்க்காத முருங்கையை ஆண்மரமென்று சொல்வார்கள்.அறிவியல் ரீதியாக அதற்கும் ஒரு விளக்கமிருக்கும்.சுவையான்,அதேசமயம் பயனுள்ள பதிவு.நன்றி இளசு.

இளசு
22-08-2007, 03:40 PM
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..ரோஜா போன்ற விதை இல்லாத செடிகளில் இது எப்படி நடைபெறும்..


நன்றி பாரதி, அன்பின் ஆரென், சிவா..


மலர் அவர்களே..

பதியனில் பெரும்பாலும் ரோஜா வளர்க்கப்பட்டாலும்
ரோஜாவிலும் விதை வரும்.
www.raingardens.com/seedpage/roses.htm
www.scvrs.homestead.com/HybridizeKB1.htm



ஆண் ரோஜா, பெண் ரோஜா என ஸ்டேமன், ஓவரி இருப்பதை வைத்து
இனம் உண்டு.. அது விஞ்ஞானம்..

எல்லா ரோஜாக்களும் குழந்தையை நினைவூட்டுவது ... (அல்லது பெண்களை) − கவியுள்ளம்!

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

முகிலன் வந்தால் நான் இங்கே பயன்படுத்திய ஆங்கிலச் சொற்களுக்கு
நல்ல தமிழ் ஈடுகள் கிட்டலாம்.. விடுப்பு முடிஞ்சாச்சா இல்லையா முகில்?

மனோஜ்
22-08-2007, 04:09 PM
அண்ணாவின் அறிவியல் கட்டுரை கணகிடைத்ததில் அலாதிமகிழ்ச்சி மனிதன் வாழ்வது மட்டும இருபால் அல்ல எல்லவற்றிலும் பால் என்பதை அழுகாய் கண்டுபிடித்ததை காவியமாக்கி வரும் அண்ணாவிற்கு என் வாழ்த்துக்கள் நன்றிகள்

இளசு
22-08-2007, 09:38 PM
நன்றி மனோஜ்..
அறிவியல் கடலில் நனையத் துணிந்த ஆர்வ அணில் நான்..

இதுபோன்ற ஊக்கமொழிகள் என் அசட்டுத் தைரியத்தை அதிகரிக்கின்றன..

நன்றி!

மலர்
23-08-2007, 04:27 AM
நன்றி இளசு அண்ணா,இந்த சிறியவளின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு..
பதியனில் வரும் செடிகளுக்கு ஆண்,பெண் பாகுபாடு கிடையாது என்று தவறாக நினைத்திருந்தேன்..

lolluvathiyar
23-08-2007, 05:43 AM
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்..ரோஜா போன்ற விதை இல்லாத செடிகளில் இது எப்படி நடைபெறும்..

அதிலும் விதை இருந்தது. ஆனால் பூவை மனிதன் பறித்து விடுவதால் இனபெருக்கத்துக்கு அது வேறு வகையை காலபோக்கில் தேடி கொண்டது.

தாவரங்களில் பால் இருக்கும் சில வகைகள் பரிமான வளர்ச்சியின் காரனமாக சூல் நிலை காரனமாக ஒரே பால் வகைக்கு தள்ளபட்டு விடுகின்றன.

இது விலங்குகளிலும் உன்டு. சில மீன்கள் இனங்கள் பெண்ணோ அல்லது ஆணோ அதன் உற்பத்திக்கு பற்றாவிட்டால், உடனே ஆண் பென்னாகவோ அல்லது பெண் ஆனாகவோ மாறி பேலன்ஸ் செய்து விடும். தவளை யிலும் இப்படி ஒரு வகை உண்டு

ஓவியா
02-09-2007, 09:16 PM
அறிவியல் மேதைகளை அறிமுகப்டுத்தி வழங்கும் உங்களின் திரிகள் அனைத்தும் மிகவும் அருமையான பதிவுகள். இதுவும் அறிவியல் பகுதியில் கோர்த்து வைக்க வேண்டிய முத்துதான்

ஆண்பால், பெண்பால், மரபு சிக்கல் என* அனைத்தும் எனக்கு விசித்திரமாகவே தோண்றுகின்றது. பூவிலும் இத்தனை பெரிய மர்மமுண்டா!! கடவுளின் படைப்பு விந்தையே!!

நன்றி இளசு சார்.

இளசு
09-09-2007, 10:48 AM
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

முகிலன் வந்தால் நான் இங்கே பயன்படுத்திய ஆங்கிலச் சொற்களுக்கு
நல்ல தமிழ் ஈடுகள் கிட்டலாம்.. விடுப்பு முடிஞ்சாச்சா இல்லையா முகில்?

முகில்ஸ் வந்தாச்சு... நலமா முகிலன்?

aren
09-09-2007, 10:51 AM
நானும் பார்த்தேன், வந்திருக்கிறார். கூடியவிரைவில் இங்கே வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

இளசு
09-09-2007, 10:00 PM
வாத்தியார், ஓவியா பின்னூட்டங்களுக்கு நன்றி...

ஆமாம் ஆரென், முகிலனின் கவனம் இங்கே ஈர்க்கப்படவேண்டும்..

mukilan
11-09-2007, 11:27 PM
அன்புள்ள அண்ணா,

உங்களின் அன்பால் மன்ம் நெகிழ்ந்தது. பூவிலும் பாலுண்டு! தலைப்பிடுவதில், தனித்தமிழில் எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான் அண்ணா. வழக்கம் போல் உங்கள் முத்தான பதிப்பு. இந்தியப் பயணம் முடிந்து இரண்டு நாட்களுக்கு முன் தான் வந்து சேர்ந்தேன். வேறு ஊர் மாற்றலகி உள்ள படியால் இன்னமும் இணைய இணைப்பு கொடுக்கவில்லை. கொடுத்ததும் முன்பு போல மன்றத்துச் சொந்தங்களுடன் அளவளாவ முடியுமென நினைக்கின்றேன்.
சூலகம்,- Ovary (சூல்- கர்ப்பம் என்ற பொருளும் உண்டு)
சூல் முடி, மகரந்தக் கேசரம்- Stamens

அறிஞர்
12-09-2007, 01:32 PM
தாவரங்கள் பற்றி புதிய தகவல்.. நன்றி இளசு.
-------
முகிலனை இங்கு காண்பதில் மகிழ்ச்சி.... விரைவில் எங்களுடன் இணைந்து கலக்க வாழ்த்துக்கள்.... தனி மடலில் புதிய போன் நம்பர் தாருங்கள்.. .

இளசு
13-09-2007, 05:10 AM
நன்றி முகிலன்..

விரைவில் புதிய இணைப்புகள் அமைந்து, முழுமையாய் மன்றத்துடன் இணைய வாழ்த்துகள்.. அதுவரை கட்டுண்டோம்..பொறுத்திருப்போம்!


நன்றி அறிஞர்..

ஆதவா
06-02-2008, 01:40 AM
பலே பலே! பாடத்தில் படித்தவைகள்.... அப்படியே தெளிவாக நீங்கள் சொல்கிறீர்கள்... பேசாமல் அறிவியல் பாடங்களுக்கு உங்களை ஆசிரியராகப் போட்டிருக்கலாம்... நல்ல தகவல்...

பூவிலும் பாலுண்டு... அட என்ன அருமையான தலைப்பு.... கலக்கறீங்க அண்ணா.

இந்த ஆராய்ச்சிகளின் விளைவு நாளை என்னாகும்?

பூமகள்
08-02-2008, 06:54 AM
அற்புத பதிவு பெரியண்ணா. :)

பூக்களின் பாலின வேற்றுமை பற்றி பனிரெண்டாம் வகுப்பில் தாவரவியலில் படித்த நினைவு அப்படியே தட்டி எழுப்புகிறது.

மெண்டலின் அவரை விதை ஆராய்ச்சியை நானும் படித்து பரிச்சையும் எழுதியிருக்கிறேன்.

பூக்களின் இனம் மகரந்த சேர்க்கையால் பல்வேறு வித்தியாசமான மரபு கட்டமைப்புடன் விதை உருவாகி, முற்றிலும் புது விதமான பூக்கள் வண்ணமயமாக விளைவது விந்தையிலும் விந்தை தான்.

இங்கே படித்துக் கொண்டிருக்கையில் எனக்கு ஒரு சந்தேகம்.

சின்ன வயதில் எங்கள் வீட்டில் "அந்திமந்தாரை" என்று அழைக்கப்படும் மாலையின் மட்டுமே மலரும் பூக்கள் கொண்ட செடியை வீட்டில் அழகுக்காக வளர்த்தோம்.

வெள்ளை மற்றும் வாடா மல்லிக் கலர்(Dark Pink) பூக்கள் கொண்ட இரு செடிகள் அருகருகே வளர்ந்து பூத்தன.

சில நாட்கள் கழித்து பார்த்தால், வெள்ளை நிற பூக்களில் ஒரு விந்தையான மாற்றத்தைக் கண்டேன். அவைகளில் வாடா மல்லிக் கலரில் புள்ளிகள் இருந்தன.

வித்தியாசமான இந்த மாற்றத்துக்கு என்ன காரணமென்று பல காலம் யோசித்து சோர்ந்துவிட்டேன்.

மகரந்த சேர்க்கையால் விளைந்த மாற்றமா? இல்லை.. வேறு ஏதேனும் தாவரவியல் பரிமாற்றமா?? :icon_ush::icon_ush:

விளக்கமளிக்க இயலுமா இளசு அண்ணா?? :confused:

சாலைஜெயராமன்
08-02-2008, 07:21 PM
தமிழில் அறிவியல் கற்பிக்கப் படவேண்டும் என்று நான் கொண்டுள்ள கருத்துக்கு நல்ல பலமூட்டுவதாக அமைந்த திரி. அறிவியல் ரீதியாக தரப்பட்ட தகவல்கள் அனைத்தும் அருமை திரு இளசு.

விஞ்ஞானத்தின் அனைத்துக் கருத்துக்களை மறுப்பது மெய்ஞானமாகும். அந்த வகையில் ஆண் பெண் என்ற பாலினமே ஒரு தவறான கருத்து என்ற வாதத்தை இங்கு வைக்கிறேன்.

ஒரு செய்தி. உயிரினங்களில் பாலின வேறுபாடான ஆண் பெண் என்ற பகுப்பே ஒரு மாயைதான். இனப் பெருக்க சித்தாந்தத்தால்தான் ஆண் பெண் பேதமே உருவானது. உண்மையில் உயிரினங்கள் அனைத்துமே பெண்பால்தான். ஆண் என்னும் புருஷத்தத்துவம் கடைசியில் உயிரினங்களில் உயர்ந்ததான மனு என்ற உயிரினத்தால் மட்டும் அடையக்கூடிய பக்குவநிலை. இதைத்தான் பரமம் புருஷார்த்தம் என்று வேதாந்தங்கள் சார்ந்த மெய்ஞானம் போதிக்கிறது.

இதை ஆழமாகப் பார்ப்போம்

பிறப்பின் தத்துவம்

நால்வகை யோனி, எழுவகைத் தோற்றம் என்பது உயிரினங்களின் ஜனன மரண சித்தாந்தத்த காரணி. உயிரினங்களின் தோற்றம் புழுக்கம், அண்டம், சினை, வித்து என்ற நான்கு வகை யோனிகள் மூலம் பூமியில் உருவாகிறது. பஞ்சபூதங்களான மண், காற்று,அக்கினி, வாயு, நீர் போன்ற உபகாரணிகள் உயிரினங்களை காக்கும் தொழிலைச் செய்கிறது. இந்த அமைப்பு பூமியில்மட்டும்தான் உள்ளது.

அண்டம் எனப்பட்ட முட்டை என்ற காரணியால் வந்த உயிரினங்கள் பறப்பன என்னும் வகையிலும், வித்து மூலமாக வருவது எழுவான், படுவான் என்று சொல்லப்பட்ட தாவர வகையிலும், சினை என்னும் கருவுற்று உருவாகும் உயிரினங்கள் நான்கு கால் ஐயறிவு மிருகங்கள், மற்றும் ஆறறிவு மனிதர்கள் என்ற இனத்தில் உண்டாகிறது.

ஆனால் புழுக்கத்தால் பிறக்கும் ஒரு உயிரினம் இருக்கிறது. அதற்கு ஆணினச் சேர்க்கை தேவை இல்லை. வெப்பத்தாலும், அதீத புழுக்கத்தாலும் உண்டாகும் உயிரனங்கள் ஒரு ஆச்சிரியமான பிறப்பு. பொடுகு, பேன், அரிசியில் உண்டாகும் வண்டு போன்ற உயிரினங்கள் இந்த வகையைச் சாரும். இந்த உயிரினத்தில் ஆண்பாலே கிடையாது. ஆண்பாலே இல்லாமல் உருவாகும் சாத்தியக் கூறுகள் இருப்பதால், ஜீவ அணுக்கள் கொண்ட அனைத்தும் ஆண் இனம் என்று நாமாகவே சிருஷ்டித்துக் கொண்டோம். பாலினம் என்பது ஒரு மாயையே.

நான்கு வகை யோனி மூலமாக அவதரித்த உயிர் வகைகள் அனைத்தும் தருக்கினம் எனப்பட்ட தாவரவகைகள், ஊர்வன, பறப்பன, ஜலவாழ் ஜந்து, நரன், மனு, அமரன் என்ற எழுவகைத் தோற்றத்துள் அடங்கும். சினை என்ற யோனிக் காரணியில் பன்றி, காண்டாமிருகம் முதல் மனிதப்பிறப்பு வரை அடக்கம் குணத்தால் நரன் என்ற தோற்றத்தில் உள்ளது. இதில் தாவர, ஊர்வன, பறப்பன, ஜலவாழ் ஜந்து போன்று தோற்றத்தில் உள்ளவற்றை மட்டும் நாம் அறிவோம்.

இதில் மனு மற்றும் அமரன் என்ற இரு தோற்றம் மட்டும் நம்மில் எங்கு உள்ளது அது யார் என்று மெய்யறிந்த ஞானிகளைத் தவிர யாரும் அறியார். நரப்பிறப்பிலிருந்து மனு வாக ஆவதும், மனுவிலிருந்து அமரனாகி புருடத்துவம் என்னும் ஆண்பாலை அடைவதும் தான் மனிதனுக்கு விதிக்கப்பட்ட விதி. இவை எதுவும் நரன் என்ற நிலையில் உள்ள உயிரனிங்களுக்கு தெரியவே வராது.

மறுபிறப்பு என்னும் மனுவாக இந்த நரத் தோற்றத்திலிருந்து ஒரு பிறப்பை ஒரு புருஷனின் புணர்ச்சியால் அடைந்தவன்தான் தானும் ஆண்பால் ஆகிறான். மற்றபடி உயிரனங்கள் அனைத்துமே பெண்பால்தான்.

இந்த ஜனனம் ஆவிடை யோனி என்னும் ஒரு தேவ யோனி்யில் பிறப்பது. அப்படிப் பிறக்கும் உயிரினங்கள் தோற்றம் நீங்கிய ஒரு தேவன் என்ற உயர்நிலையாகிய ஆண் இனத்தை அடையும். ஆவிடையோனியில் போகிக்கும் போது அனைத்து உயிரும் பெண்பாலாகவும், போகிப்பவர் ஆண்பாலாகவும் உள்ளார். அவரே புருஷோத்தமர் என்பது.

இநத் நிலையை கிருஷ்ண பரமாத்மா புருடத்துவத்தை அடைந்தவராக, ஒரு பிரம்ம ஞானியாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணன் இறைநிலை அடைந்த புருஷர். பெண்பாலர்களாகச் சித்தரிக்கப்பட்ட கோபியர்கள் என்பது அவர்மீது பக்தி கொண்ட அனைத்து கோகுலத்தைச் சார்ந்த மனிதர்கள்தான்.

குழவி, குழந்தை, குதலை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை என்ற பரிணாம நிலைகள் மனித இயக்கத்தில் அறிவின் வேறுபாட்டால் வரும் மாறுபட்ட நிலைகள். இது ஆண் பெண் என்ற இருபாலருக்கும் பொது. இவை அனைத்தும் பெண்பாலை விளிப்பதுபோல்தான் உள்ளது.

எனவே உயிரினங்களில் பாலின பேதம் என்ற ஒன்று கிடையாது. ஜனன உறுப்புகளால் உண்டான பேதம் ஆண் பெண் என்ற நிலைக்குப் பொருந்தாது.

இது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கும். இதில் பல ஆச்சிரியகரமான விஷயங்கள் நமது வேதங்களில் பொதிந்து இருக்கிறது என்பது சத்தியம்.

கருத்துச் சிதைவு ஏதும் கண்ணில் பட்டால் நினைவூட்டவும்.

mukilan
13-02-2008, 01:02 AM
அந்திமந்தாரை- எத்துணை அழகான காரணப் பெயர்! அந்தியில் மலரும் தாரை (அந்தி மலர்ந்தாரை) ஆங்கிலத்தில் Four'o' Clock Plant என்றழைக்கப்படுகிறது. ஈழத்தில் நாலுமணிப் பூ என்றே அழைக்கிறார்கள். தென்னமெரிக்காவின் பெரு நாட்டினை பூர்வீமாகக் கொண்ட இந்தச் செடியின் தாவரவியல் பெயர் Mirablis jalaba. ஐரோப்பிய வணிகர்களால் அனைத்து நாடுகட்கும் எடுத்துச் செல்லப்பட்டது.

வயது முதிர்ந்த காலத்தில் மலர்ந்த காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தனது திரைப்படத்திற்கு பாரதிராஜா அந்திமந்தாரை எனப் பொருத்தமாக பெயர்வைத்திருப்பார் (தாஜ்மகால்னு ஏன் பேரு வெச்சாருன்ணு என்னையைக் கேள்வி கேட்கக் கெளம்பிடாதீங்க!!!:lachen001:)
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/07c8bcd5.jpg

மேலே உள்ள படத்தில் நீங்கள் காண்பதுதான் அந்தி மந்தாரை. இந்த நிறத்தில்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாத அளவில் உங்கள் தோட்டமெங்கும் வண்ணக் கோலங்கள் படைப்பது உங்கள் அந்திமந்தாரை தான்.

மரபியலின் தந்தை மெண்டல் வகுத்த மரபியல் விதிகளைப் பின்பற்றி வகுத்த மரபியல் விதிகளில் முக்கியமான விதி Law of Dominance (வல்லான் வகுத்ததே வாய்க்கால்). அதாவது நம் உடலில் ஒவ்வொரு பண்பிற்கும் (traits or characteristics) இரு ஒன்றோடொன்று மாறுபட்ட மரபணுக்கள் இருக்கும் (Differnt alleles of a gene). எ.கா முடியின் நிறம் கருப்பு அல்லது வெண்பழுப்பு (Blond :D). மெண்டல் ஆய்வு செய்த பட்டாணியில் பச்சைப்பட்டாணி அல்லது மஞ்சள் பட்டாணி. இவற்றில் எது வலிமை மிகுந்ததோ அதுவே புறத்தோற்றத்தைத் தீர்மானிக்கும். வலிமை குறைந்த மரபணு என்ணிக்கையில் கூடிவிட்டால் வலிமை கூடி விடும் அல்லவா? அந்த்ச் சமயங்களில் வலிமை குறைந்த மரபணு புறத்தோற்றத்தை தீர்மானிக்கும். இடைப்பட்ட நிலையில் இருக்க சாத்தியமே இல்லை என்பது மெண்டலின் கூற்று.

ஆனால் பின்னாளில் வந்த ஆய்வாளார்கள் அது தவறு என நிரூபணம் செய்வதில் நமது அந்திமந்தாரையார்தான் உதவினார். அந்தி மந்தாரையில் சிவப்பு, வெள்ளை என இரு வேறுபட்ட மரபணு ஜோடிகள் உள்ளன. இவற்றில் எப்பொழுதுமே சிவப்பு ஓங்கி இருக்கும் எனவே சிவப்பு நிறம்தான் புறத்தோற்றத்தில் இருக்க வேண்டும் அல்லது வெள்ளை மரபணுக்கள் சிவப்பை விட எண்ணிக்கையில் கூடிவிட்டால் வெள்ளைத் தோற்றம் தரவேண்டும். எப்படி இந்த இடைப்பட்ட அல்லது வேறுபட்ட (variegated) நிறப்பண்பு வந்தது என்பதை விளக்க இந்த்ச செடியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதுவே பின்னாளில் மெண்டலின் dominance law க்கு மாற்றாக incomplete dominance (ஜெயலலிதா சொல்வது போல மைனாரிட்டி !!!! அரசு போலன்னு வெச்சிக்கோங்களேன்:D) வகுக்கப்பட்டது. அதன்படி வலிமை மிகுந்த மரபணு என்பது எப்பொழுதும் வலிமை மிகுந்தே இருப்பதில்லை அவ்வப்பொழுது கூட்டணியும் வைத்துக் கொள்ளும் என்று அறியப்பட்டது. சரிபாதியாக பங்கு தந்தால், இடைப்பட்ட நிறங்களும், வெளியில் இருந்து ஆதரவு தந்தால் வாரியத்தலைவர் பதவி போல ஆங்காங்கே சில சமரசங்கள் செய்து கொள்வதும் உண்டு (:rolleyes:சற்றே எளிய விளக்கமாக இருக்கட்டும் என்றுதான் அரசியலை உதாரணம் காட்டினேன். யாரேனும் மனம் புண்படும்படியாக நினைத்தால் இங்கே தெரிவிக்கவும். மன்ற நிர்வாகிகளும், ஆட்சேபகரமாக இருந்தால் சம்பந்தப்பட்ட வரிகளை நீக்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்:icon_b:)

பெரும்பாலும் ஆரம்ப கால இனப் பெருக்கங்களின் போது சிவப்பு நிறமே மேலோங்கியிருக்கும். பின்னரே வெள்ளையும் வெள்ளையோடு கலந்த நிறத்திலும் பூக்கள் பூக்கும். அதனால் தான் இடைப்பட்ட நிறங்களில் மட்டுமல்லாது கூட்டணிக்குத் தகுந்தவாறு எல்லாம் நிறம் மாறிக் காட்சியளிக்கும். அதன்படிதான் பூமகள் பார்த்த பூக்கள் நிறம்மாறிய புள்ளிகளைக் கொண்டுள்ளன:):). குரோட்டன் செடியின் இலைகளில் நிறக்காரணிகளின் மரபணுக்கள் (pigments) பச்சையம்( chlorophylls, ஜாந்தோபில்ஸ் Xanthophylls) இப்படி விளையாடுவதாலெயே இலைகள் அப்படித்தோற்றமளிக்கின்றன. ஆனால் அவ்வாறாக திடீரென வலிமை மிகுந்த பச்சையத்தார் மஞ்சளுடன் கூட்டணிவைக்கக் காரணம் காலத்தின் கோலம்தான். அதை திடீர்மாற்றம் (Mutation) என்பார்கள். அதைப்பற்றி விளக்கமாக இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

தாவரத்தில் மட்டுமல்ல விலங்குகளிலும் (மனிதனையும் சேர்த்துத்தான்) இப்படித்தான். அதனாலேயே ஒரு கறுப்பின ஆண்வெள்ளைப் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் குழந்தைகள் இடைப்பட்ட நிறத்தில் இருப்பது. இயல்பாகவே மனிதனின் நிறம்,முடி, கண் நிறம், தாடை மற்றும் மூக்கு அமைப்பை தீர்மானிக்கும் மரபணுக்களில் எதற்குமே தனி மெஜாரிட்டி இல்லை. கூட்டணிதான் ஆனால் நிறத்தில் எப்பொழுதுமே வெள்ளை (மனிதனில் மட்டுமாவது) கொஞ்சம் வலிமையானதாக இருக்கும். முடிகள் சுருட்டையாக இருப்பதில் இருந்து கருப்பின மக்களின் முடிகளின் மரபணுக்கள் சற்று வலிமை கூடியது என்றும் தோன்றுகிறது அல்லவா? கீழே உள்ள பூனையைப் பாருங்கள். வெள்ளையும் அரக்கு நிறமும் கலந்து இருக்கிறது. இது போல மனிதனிலும் ஆங்காங்கே வெள்ளை நிறமும் கருப்பு நிறமும் கொண்ட குழந்தைகள் ஏன் பிறப்பதில்லை?
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/KittenAgiosGeorgiosCrete.jpg

எனக்கும் மனித மரபியலுக்கும் தொடர்பில்லை. மனிதனால் விளங்கிக் கொள்ள முடியாத அல்லது மனிதனால் கட்டுப் படுத்த முடியாத பல விநோதங்களை உள்ளடக்கி இயற்கை அதை வெல்ல நினைக்கும் யாரையும் அலட்சியப் படுத்திக்கொண்டு அதன் போக்கிலே போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை!

ஓவியா
13-02-2008, 01:57 AM
அடடே நம்ப செஸ்கடோன் ஆபீசர் முகில்ஸ், நல்வரவுகள் சார்.

உங்க பின்னூட்டத்தை பார்த்ததும் எனக்கு ஒரே குஷியாகி விட்டது, அருமையான எழுத்தாளர் நீங்கள். உங்கள் பதிவை கண்டு குதுகலிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவள்.

இந்த பின்னூட்ட பதிவை இன்னும் படிக்கவில்லை படித்து விட்டு கருத்து சொல்கிறேன்.

பூமகள்
13-02-2008, 06:15 AM
மிக அற்புதமான விளக்கம் முகில்ஸ் அண்ணா. :)
எனது தாவரவியல் பாடங்கள் அனைத்தும் நினைவு கூர்ந்த திருப்தி.

தகுந்த ஆய்வாளரை இங்கே பதிலிட அழைத்ததுக்கும், எனது கேள்விக்கு இத்துணை பொறுமையாகவும் அழகாகவும் பதிலிட்டமைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் அன்பின் முகில்ஸ் அண்ணா மற்றும் எனதினிய பெரியண்ணா. :)

இளசு
13-02-2008, 06:33 AM
முகிலனுக்கு அண்ணன் என்பதில் எனக்குப் பெருமை..

இந்த வகை விளக்கம் மதன் , சுஜாதா தரத்துக்கு இருக்கிறது முகில்ஸ்..

மேல் படிப்பில் இருப்பதால் உன்னைச் சும்மா விடுகிறேன்..

இல்லையென்றால் அறிவியல் நூல் தமிழில் எழுத தகுந்த நபர் நீ..

(பின்னாளில் நிச்சயம் நீ மேற்கொள்ளவேண்டிய பணி இது..)

ஓவியா
13-02-2008, 11:40 AM
முகிலனுக்கு அண்ணன் என்பதில் எனக்குப் பெருமை..

இந்த வகை விளக்கம் மதன் , சுஜாதா தரத்துக்கு இருக்கிறது முகில்ஸ்..

மேல் படிப்பில் இருப்பதால் உன்னைச் சும்மா விடுகிறேன்..

இல்லையென்றால் அறிவியல் நூல் தமிழில் எழுத தகுந்த நபர் நீ..

(பின்னாளில் நிச்சயம் நீ மேற்கொள்ளவேண்டிய பணி இது..)


வழிமொழிகிறேன்.

:eek::eek::eek: முகில்ஸ் படிப்பு முடித்து பட்டம் வாங்கியது மிகவும் பழைய கதை. :D:D:D

தற்ப்பொழுது ரொம்ப ஃபிரிதானாம். நீங்க உத்தரவு போட்டால் உடனே ழுதுவாராம்.

சிவா.ஜி
13-02-2008, 12:53 PM
அடேங்கப்பா....அந்தி மந்தாரையின் அத்தனையையும் அழகான தமிழில் அளித்து முகிலன் அசத்திவிட்டார்.
அழகான விளக்கங்கள்,சுவாரசியமான அரசியல் உதாரணங்கள் என்று அறிவியல் கட்டுரையை ஒரு இலக்கிய கட்டுரையாக்கி விருந்து படைத்து விட்டார்.
அண்ணனுக்கு சற்றும் குறையாத இளவல்....இளசுவின் விரல் நீட்டல்...மிகச் சரியான இடத்தைதான் காட்டியிருக்கிறது.

அற்புதம் வாழ்த்துகள் முகிலன்.

யவனிகா
13-02-2008, 02:24 PM
வாவ்...ரக கட்டுரை...விதையூன்றிய இளசு அண்ணாவுக்கும்...அழகான விடை தந்த முகிலன் அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

mukilan
13-02-2008, 10:54 PM
எல்லாப் புகழும் இளசு அண்ணாவிற்கே! மன்றத்தில் எல்லோரையும் ஊக்கப்படுத்தி எழுத வைப்பதில் இளசு அண்ணாவிற்கு நிகர் அவரேதான். அறிவியல் மைந்தர்கள் திரியில் எனக்கு கொஞ்சம் இடம் கொடுத்த உங்களுக்கு என் நன்றி அண்ணா!

பூக்கள் பற்றிய கேள்வி கேட்ட மன்றத்துப் பாமகளுக்கும் என் நன்றி. கேள்வி கேட்டால்தானே நான் பதில் எழுத முடியும்!!!.

படித்துப் பாராட்டிய சிவா. ஜி, யவனிகா உங்களுக்கும் என் நன்றி! (உங்கள் வாழ்த்துகளிலும் பாராட்டுகளிலும் ஒரு பங்கை நிச்சயம் இளசு அண்ணாவிடம் சேர்த்து விடுவேன்)

மன்றத்து செல்ல மாயாவி உங்களுக்கு நன்றி கூறாமல் இருக்க முடியுமா?? செஸ்கடோன் (Saskatoon-சாஸ்கட்டூன்) ஆபீசர் இல்லீங்க. நான் அந்த ஊரை விட்டு வின்னிபெக் (Winniepeg) வந்து 6 மாதங்களாகப் போகின்றன. இருந்தாலும் நீங்க அந்தப் பேரை விட மாட்டீங்க போல. அப்புறம் ஒரு சுவாரசியமான தகவல். குழந்தைகள் கதாபாத்திரமான வின்னி கரடிக்குட்டி (Winnie the phoo) வின்னிபெக் நகரத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பிறந்த கரடிக்குட்டியை நினைத்து வைத்தது.

ஓவியா
14-02-2008, 10:57 AM
மன்றத்து செல்ல மாயாவி உங்களுக்கு நன்றி கூறாமல் இருக்க முடியுமா?? செஸ்கடோன் (Saskatoon-சாஸ்கட்டூன்) ஆபீசர் இல்லீங்க. நான் அந்த ஊரை விட்டு வின்னிபெக் (Winniepeg) வந்து 6 மாதங்களாகப் போகின்றன. இருந்தாலும் நீங்க அந்தப் பேரை விட மாட்டீங்க போல.

முகி உங்களுக்கு 50 வயசு ஆனாலும், இளசு நீங்க இன்னும் மாஸ்டர் மாணவந்தான், இன்னும் படிகிறீகனு நீனைக்கும் போது :lachen001:

நானும் நீங்க இன்னும் செஸ்கடூனில் தான் வசிக்கிறீங்கனு நினைகருதுலே தப்பே இல்லை. :D:D:D

Narathar
30-09-2008, 07:42 PM
கிரகர் மெண்டல் என்ற துறவி.. அறிவியல் துறக்காத துறவி...அவரைப்பூக்களின் மகரந்தச் சேர்க்கையை அளவானக் கட்டுப்பாட்டில் நிகழ்த்தி
மரபின் விதிகளையே இம்மாநிலம் அறியத் தந்தான்!


பிறப்பின் மரபுச் சிக்கல் அறிந்து சொன்னவர் - ஒரு துறவி!
அறிவியலில் எனக்கு மிகவும் பிடித்த முரண் இது!!

இன்றைய மரபு மாற்ற உணவுத்தாவரங்கள் வரை வியாபித்து நீடிக்கும்
அறிவியல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய கேமரேரியஸ் அவர்களுக்கு
நம் அறிவியல் மைல்கல் 26-ஐ அர்ப்பணித்தது தகும்.. இல்லையா நண்பர்களே?


இந்த அழகிய அறிவியல் பதிவில்
உங்கள் அழகிய தமிழ் உரை நடை என்னை மிகவும் கவர்ந்துள்ளது இளசு அவர்களே...........

அது அறிவியலைக்கூட சுவாரஷ்யமாக்குகிறது எனக்கு

வாழ்த்துக்கள்