PDA

View Full Version : அம்மா.......சிறுகதைநிலா
06-06-2003, 11:36 PM
ஜன்னல் வழியே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன்.குருவி ஒன்று தன் குஞ்சுகளுக்கு உணவூட்டிக்கொண்டிருந்தது.கண்டிப்பாய் அது அம்மாக்குருவியாகத்தான் இருக்க வேண்டும் என் மனது சொல்லியது.
"அம்மா" இந்த வார்த்தை சொல்லும்போதே என் நெஞ்சில் ஒரு உற்சாகம் பொங்கி அப்படியே அடங்கியும் விட்டது.

அம்மா உன்னைப் பார்த்து எத்தனை மாதங்களாகிறது? எப்படியிருக்கிறாய்?
உன்னிடம் சொல்வதற்கென்றே நிறைய கதைகள்.மறக்காமல்,மாற்றாமல் சொல்லவேண்டி அத்தனையையும் எழுதிவைத்திருக்கிறேன்.
உன்னைபார்க்கையில் அதைக்கொடுப்பேன். கனத்த கைகள் என் மீது விழ
அம்மாவுடனான என் பேச்சு முடிவுக்கு வந்தது.

அவசரமாய் எழுந்தேன்.உடைகளை சரிசெய்து கொண்டு ,ஆழ்த உறக்கத்திலிருக்கும் கணவனை ஒரு நொடி பார்த்தேன். இங்கு எனக்கிருக்கும் ஒரே ஆதரவு!

அறையை விட்டு வெளியே வந்தேன்.மாமியார் எழுந்திருந்தார்.அவர் பார்வையில்
ஓர் ஏளனம்.என் மகனை கைக்குள் போட்டுகொண்டவள் என்கிற வெறுப்பு.
என்று ஒழியும் இந்த சச்சரவுகள்? மனதுக்குள் எண்ணியபடி அன்றைய வேலைகளைக்கவனிக்கப்போனேன்.

நித்யா இன்னைக்கு வனஜாவ பொண்ணுபார்க்க வராங்க! வடை,கேசரி,இட்லி,சட்னி,சாம்பார் எல்லாம் பண்ணிடு.மூச்சுவிடாமல் கத்தினார் மாமியார்.சரி மாமி. எனக்கூறியபடி மடமடவென பாத்திரங்களை சுத்தம் செய்தேன். மூன்றாம் மனுஷியிடம் சொல்வதுபோல சொல்லுகிறாறே!
இது புதிதல்ல.கணேஷ் முன்பே கூறிவிட்டபடியால் எனக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை. மீண்டும் அம்மா கண்முன் வந்தாள். அம்மா உன் பெண்ணைப்பார்த்தாயா? இன்றையபொழுதில் உன் பெண்ணிற்கு அணைத்துவேலைகளும் அத்துபடி.50 பேருக்குக்கூட சமைப்பாள் உன் கண்மணி. உன்னோடு இருக்கையில் சிறு துரும்பைக்கூட நான் எடுத்துப்போட்டதில்லை.நீ எதிர்பார்த்ததுமில்லை.இனி நான் அப்படியிருக்க முடியாது.மருமகள் அந்தஸ்து கொடுத்து அடிமையாக்கிவிட்டார் இந்த வீட்டம்மா!

அந்தம்மா என்ன பேசினாலும் எனக்கு அவரைத்தப்பாய்த்திட்டத்த்
தெரியவில்லை. காரணம் நீ! உன் வளர்ப்பு!நன்றி தாயே!
இந்த குணம்தான் கணேஷ¤க்கும்,எனக்குமான உறவை வலுப்படுத்துவது! அவருக்குத்தெரியும் தன்தாயைப்பற்றி!

வலுக்கட்டாயமாய் என் அம்மாவைப்பற்றிய நினைவுகளை தள்ளிவைத்துவிட்டு
என் வேலைகளில் மூழ்கிப்போனேன்!

நித்தி.....என் கணவனின் அழைப்புவர காபியுடன் போனேன்!
கண்ணம்மா என்னடாயிது இப்படி வேர்த்துயிருக்க .அன்பாய்
துடைத்துவிட்டார். அவர் செய்யும் இந்த சேவைக்காக எத்தனை வேலையானாலும் செய்யத்தயார் மனதுக்குள் கூறிக்கொண்டேன்.
மாமியார்பற்றி எந்தக்குறையையும் நான் சொல்வதில்லை.இதுவும் என் அன்னையின் அறிவுரைதான்.'கண்ணம்மா புருஷனிடம் பேசும்போதும் வரையறை தெரிந்து பேசு. பெற்றதாய் எவ்வளவு கெட்டவளாயிருப்பினும் எந்தமகனுக்கும் தன் தாயை குறை சொல்வது பிடிக்காது" அன்று சொன்னது இன்று வரைக்கடைபிடிக்கிறேன்.

அம்மாவ நினைச்சியா? என் கண்களின் கண்ணீர் வழிவதைக்கண்ட கணேஷ் ஆதரவாய் என் தோள் பற்றினார்.அம்மாவைப்பார்க்கனும் கணேஷ்! இது நான்.
போலாம் எப்பவும் போல அவர்.

சாயங்காலம் பெண்பார்க்கும் படலம் முடிந்தது.பெண்ணைப்பிடித்திருப்பதாக அவர்கள் சொல்லிவிட என் மாமியாரின் கால்கள் தரையிலில்லை.
மெதுவாய் நான் பேசினேன்.நான் ஒரு 2நாள் ஊருக்கு போயிட்டுவரட்டுமா?
பத்தாவது முறையாக விண்ணப்பம் செய்கிறேன்.கணேஷ¤ம் ஆமாம்ம அவள் போகட்டும்,அப்புறம் கல்யாண வேலை வந்திடும் எனக்கூற அவர் தலை
சம்மதம்மாய் அசைந்தது.


சந்தோஷத்தின் விளிம்பில் நான்.இரவு முழுவதும்
உறக்கமேயில்லை.அம்மாவுக்கு நான் எழுதிய அத்துணைக்கடிதங்களையும் மறக்காமல் எடுத்துவைத்தேன்.ஒவ்வொரு நிகழ்சியையும் அவளிடம் கூறவேண்டும்.பத்துமாதக்கதையை 2நாளில் சொல்லவேண்டும்.
அடுத்த நாள் அனைவரிடமும் விடைபெற்றுக்கிளம்பினேன்.

இதோ எனது ஊர். மண்ணில் கால் வைத்ததுமே உடலில் ஓர் இனம் புரியா சந்தோஷம்.வாசலில் அப்பா அமர்ந்திருந்தார்.என்னைப்பார்த்ததும் ஆனந்த்க்கண்ணீ£ர்! பையை வைத்து விட்டு கடிதங்களை எடுத்துக்கொண்டு
அப்பா ,அம்மாவைப்பார்த்துட்டு வரேன்.ஓட்டமாய் ஓடினேன்.அவர் பதிலுக்கும் காத்திராமல்.

அங்கு அம்மா அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தாள்.அவளைச்சுற்றி நான் நட்ட ரோஜா செடிகள்.பூத்துக்குலுங்கின.அம்மா சந்தோஷமாயிருப்பதாய் எண்ணிக்கொண்டேன்,. என் உடல் நடுங்கியது.கையிலிருந்த கடிதங்களை அவளிடம் சமர்பித்தேன்.அப்படியே அவள்மேல் தலைசாய்த்தேன்.
காற்றின் தழுவலில் என் அம்மாவின் வாசனை கலந்திருந்தது.
நித்தி நான் எப்பவும் உன் கூடத்தானிருக்கேனென காதுக்குள் ஒரு சத்தம்.
திடுக்கிட்டு விழித்தேன்.பொழுதாகியிருந்தது.

தூரத்தில் அப்பா வந்துகொண்டிருந்தார் அம்மாவின் கல்லறை நோக்கி................

இளைஞன்
07-06-2003, 12:54 AM
மருமகள் அந்தஸ்து கொடுத்து அடிமையாக்கிவிட்டார் இந்த வீட்டம்மா!
இந்த வரி கொஞ்சம் இடிக்குது!


தூரத்தில் அப்பா வந்துகொண்டிருந்தார் அம்மாவின் கல்லறை நோக்கி................
இந்த வரி மனதைத் துளைக்குது!

அருமை.
இன்னமும் எழுதுக...

rambal
07-06-2003, 05:06 AM
மாமியார் மருமகள் பிரச்சினையை எடுத்துக் கொண்டு
பெண்ணீயக் கதை..

இறுதிவரியில் கொடுத்த பஞ்ச் நச்..
கொஞ்சம் எதிர்பார்த்ததுதான்..

இருந்தாலும் சொன்னவிதம் அருமை...
தங்களின் இந்த முத்தான முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்..

இளசு
07-06-2003, 09:26 AM
நெகிழ வைத்த கதை....
நம்பிக்கைகள் எத்துணை வலிமையான ஆதாரங்கள்....
ஸ்தூலமாய் இல்லாமலே
அவை கைப்பிடியாய், சாயும் மடியாய், தலையணையாய்....

ஏகாந்தச் சிறையும் பறித்துக்கொள்ள முடியா Luxury Item நம்பிக்கை.


அந்த மகளின் நம்பிக்கை மனமிளக வைக்கிறது.

கெட்ட "தாய் " இல்லவே இல்லை என்ற கோணத்தில் கணேஷின் தாய்
அணுகப்பட்டிருப்பது இக்கதையின் இன்னொரு முக்கிய சிறப்பம்சம்...

நித்திக்கு அவள் அம்மா...போல்....
வனஜாவுக்கு அவள் அம்மா.....

இந்த புரிதல் இருந்தாலே பிரச்னைகள் குறைந்துவிடும்....
கணேஷ்கள் தப்பிக்கலாம்.... மத்தள நிலையில் இருந்து.

சிறிய கதை..
சிறப்பான கதை...

என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்...

இன்னும் படையுங்கள்.

சகுனி
07-06-2003, 10:39 AM
ஐந்துநிமிட கதையானாலும் அழுகைவர வைக்கக்கூடிய அருமையான படைப்பு! தொடரட்டும் உங்கள் பணி!

aren
07-06-2003, 11:42 AM
ஒரு சிறிய கதையில் புகுந்தவீட்டில் எப்படி ஒரு பெண் நடந்து கொள்ளவேண்டும் என்பதை நித்யா மூலம் அருமையாக வெளிக்காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். யாருக்கும் தன் அம்மா உசத்திதான். நிச்சயம் கனேஷ் நிலையில் யார் இருந்தாலும் அப்படித்தான் நினைப்பார்கள்.

ஒரு பெண்ணின் மனநிலையை ஒரு பெண்தான் உணர முடியும். அழகாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே என் விருப்பம். மறுபடியும் பாராட்டுக்கள்.

karikaalan
07-06-2003, 12:02 PM
நிலாஜி!

அருமையான படைப்பு. வாழ்த்துக்கள். கண்கள் பனிக்க வைத்த கதை.

===கரிகாலன்

puthusu
07-06-2003, 08:04 PM
மிக அருமை உங்கள் சிறுகதை

நிலா
12-06-2003, 12:44 AM
பாராட்டிய உள்ளங்களூக்கு என் நன்றிகள்!

poo
12-06-2003, 04:14 PM
மன்னிக்கவும் நிலா... பதித்த அன்றே பார்த்தேன்... சற்றே நிம்மதியான மனநிலையில் படிக்க வேண்டியதென ஒதுக்கினேன்.. ஒதுங்கியேவிட்டது நினைவுகளில் இருந்து...

மீண்டுவந்த உங்கள் வீணையொலியை இன்று படித்தேன்... ரீங்காரமிடும் சங்கீதம் அம்மா...

பாராட்டுக்கள்.... தொடருங்கள் அடிக்கடி இப்படி அருமையான படைப்புகளை...

நிலா
13-06-2003, 05:35 PM
நன்றி நண்பர் பூவிற்கு!

thiyagu
26-06-2003, 06:23 PM
நிலா, வரட்டும் உலா உங்கள் படைப்பு

முத்து
26-06-2003, 08:43 PM
நிலா... நெகிழ வைத்த கதை... தொடருங்கள் தங்கள் முத்திரைப் பதிப்புகளை...

அறிஞர்
29-06-2004, 07:03 AM
உணர்வுபூர்வமான கதைகள்...... அருமை நிலா..... வாழ்த்துக்கள்

kavitha
29-06-2004, 07:20 AM
இதோ எனது ஊர். மண்ணில் கால் வைத்ததுமே உடலில் ஓர் இனம் புரியா சந்தோஷம்.
உண்மைதான்..


தூரத்தில் அப்பா வந்துகொண்டிருந்தார் அம்மாவின் கல்லறை நோக்கி................
இதை எதிர்ப்பார்க்கவில்லை... நல்ல ஒரு திருப்புமுனை...
தொடர்ந்து தாருங்கள்.

தஞ்சை தமிழன்
30-06-2004, 09:26 AM
இத்தனை நாள் இந்த பக்கமெல்லாம் வராமலிருந்தேன்.

இனி அடிக்கடி வரவேண்டும் என எண்ணவைத்த படைப்பு நிலாவுடையது.

ஒரு பெண்ணிற்கு தாயிடம், தாயிடம் மட்டும் கூறவேண்டிய பல உண்டாகும் என்பதை பாசத்துடன் வெளியிட்ட கதை.

manjusundar
18-07-2004, 05:24 AM
புகுந்த வீட்டில் ஒரு பெண் எப்படி அனுசரித்து நடக்கலாம் என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்...பாராட்டுக்கள்..

தோழி,
மஞ்சு.

இளந்தமிழ்ச்செல்வன்
18-07-2004, 08:46 AM
அருமை தோழியே. மிக அழகாய் ஆணின் நிலையையும், பெண்ணின் நிலையையும் எப்படி இருந்தால் இருவரும் இன்பமாய் வாழலாம் என்பதை கூறியுள்ளீர்கள்.

கடைசியில் ஒட்டுமொத்தமாய் கனக்க வைத்துவிட்டீர்கள்.

தொடருங்கள்.

விகடன்
03-05-2008, 01:15 PM
நான் எதிர்பார்த்திருந்த ஒருவகை முடிவுதான். அனுப்பாமல் அடுக்கிவைத்திருந்த கடிதங்கள் என்று வைத்திருக்கையிலேயேஎ எண்ணிக்கொண்டேன்.

அனாலும் மனதை கலங்க வைத்துவிட்டது.
அம்மா என்றால் யார் மனந்தான் இளகாது?

பரட்டுக்கள் நிலா.

மீண்டும் மன்றம் எப்போது வருவீர்கள் நிலா. தொடர்ந்து எப்போதிருந்து உலவப்போகிறீர்கள்...
எதிர்பார்ப்புக்களுடன் மன்றத்தில் ஒருவனாய்
விராடன்

பாரதி
03-05-2008, 03:14 PM
சிறுகதைகளில் பலவிதம் உண்டு. கடைசி வரியில் 'திடுக்' என திருப்பம் ஏற்படுத்துவம் அதில் ஒரு சிறந்த வகையாகும். அம்மாவிடம் இருக்கும் பாசம், கணவர், மாமியாரைப்பற்றிய கண்ணோட்டம் ஓரளவுக்கு நன்றாக வெளிக்காட்டப்பட்டிருக்கிறது. கதையின் முடிவை யூகிக்காத வகையில் எழுதியமைக்கு பாராட்டுக்கள் நிலா.

உங்கள் மீள் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

Keelai Naadaan
03-05-2008, 06:37 PM
கதையின் ஓட்டத்திலேயே ரசித்து படித்தேன். கடைசி பத்தியை படித்து சற்று கலங்கி விட்டேன்.
பாராட்டுகள்.

பூமகள்
04-05-2008, 09:27 AM
நித்யாவில் பெரும்பாலும் பூ இருப்பதை உணர்கிறேன்..!

அம்மாவின் வளர்ப்பு... மாமியாரைப் புரிந்துணரும் குணம்.. கணவரின் அனுசரணை.. புகுந்த வீட்டில் ஒவ்வொருவரின் மனநிலையும் அறிந்து வாழப் பழகிக் கொள்ளச் சொல்லும் நல்ல கதை..!!

கடைசி வரியில்... வேறு ஒன்றை எதிர்நோக்கி இருக்க... 'திடுக்' என்று மனதை ஆட்டுவித்த முடிவு..!!

மனமார்ந்த பாராட்டுகள் சகோதரி நிலா.

MURALINITHISH
31-10-2008, 09:17 AM
ஆயிரம் காலம் ஆனாலும் அம்மா என்ற உறவு மறைந்தே போனாலும் பாசம் மட்டும் மாறாது