PDA

View Full Version : ஆறாவது சீட்டு



sadagopan
18-08-2007, 05:51 AM
கருமேகத்தை விலக்கி சூரியன் எழ முயற்சி செய்து கொண்டு இருந்தான். அவன் மீண்டும் தோல்வி அடைந்தான். தன் தோல்வியை ஒப்புக் கொண்டு, கருமேகத்திற்குப் பின்பு மறைந்து கொண்டான். மறையும் முன்பு ஒரு பிம்பத்தை என் முகத்தில் பாய்ச்சினான் - நான் விழித்துக் கொண்டு இருக்கிறேனென்று எப்படித் தெரியும் அவனுக்கு? இருந்தாலும், பலன் பார்க்காமல் தன் கடமையைச் செய்யும் அவனுக்கு, ஒரு வாரமாகத் தூங்காத கண்களுடன் மங்கிய பார்வையுடன் நன்றியைச் சொன்னேன். கடந்த ஒரு வாரம், மரண அவஸ்த்தை. என் மூளைக்குள் பூமியை சுமப்பதைப் போல ஒரு உணர்வு. இளையராஜாவின் இசை பிடிக்கவில்லை. பூக்களின் வாசனை மறந்து போனது. தென்றல் சூறாவளியாக இருந்தது. அம்மா ஆசையாக செய்த உருளைக் கிழங்கு ரோஸ்ட் ருசிக்கவில்லை. சோக கீதங்கள் என் தேசிய கீதமாக மாறின. நான் படித்த கல்லூரியின் லைப்ரரியின் படிக்கட்டிலும், கடற்கரை மணலிலும் என் இரவுகள் சென்றன. இதற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப் போகிறேன்.
என் பெற்றோர்களின் அறைக்குச் சென்றேன். நடக்கப் போவது தெரியாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தனர். ஓசை இல்லாமல் விக்கி விக்கி அழுதேன். பூஜை அறைக்குச் சென்றேன். சிவபெருமான் பார்வதியுடன், ராமர் சீதையுடன், கிருஷ்ணர் ராதையுடன், முருகன் வள்ளி தெய்வானையுடன் ஆனந்தமாக அமர்ந்து இருந்தனர். என் வாழ்க்கையில் இதற்கு முன்பு இப்படி பிரார்த்தனை செய்தது இல்லை. செய்யப் போவதும் இல்லை. ஐந்து சீட்டுக்களை குலுக்கிப் போட்டேன். கண் மூடி மறுபடியும் பிரார்த்தனை செய்து விட்டு ஒரு சீட்டை எடுத்தேன்.

தலையில் திருநீறுடன், வெள்ளைச் சட்டை, கறுப்பு பான்ட் அணிந்து கொண்டு, வெளியே ஒரு புதிய உலகை சந்திக்கத் தயாரானேன். வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது பூனை மூன்று முறை குறுக்கே போனது - சகுனம் சரியாக இருந்தது. என் கால்கள் சிமென்ட், கல், மணல், தார் ரோடுகளைக் கடந்து கடற்கரை மணலைத் தொட்டது. கடலின் மணலில் என் கால் பட்டவுடன் ஏனோ என் கால்கள் வலுவிழந்தன. மூளையின் வலது பகுதி இதயம் போல துடித்தது. கன்னங்களிலிருந்து கண்களுக்கு மின்சாரம் பாய்வது போல ஒரு பிரமை. உலகத்தில் ஆண்டவனைத் தவிர வேறு யாராலும் படிக்கப்படாத சீட்டு என் சட்டைப் பாக்கெட்டில் இருந்தது. அந்த சீட்டைப் பிரித்துப் பார்த்தேன்.

கயிறு, கடல், மாத்திரை, தோட்டா - இவையால் எனக்கு மரணம் இல்லை. அந்த சீட்டில் "மாடி இருந்தது. சீதாவிற்கு என் மனப்பூர்வமான வெறுப்புகளை காற்றில் கொட்டினேன். அது அவளைச் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உண்மையான காதலனின் எண்ணம் பொய்யாகாது. இரண்டு மணி நேர அழுகை, வெறுப்பு, கோபம், தியானம், பிரார்த்தனை முடிந்தவுடன், நகரத்தின் உயரமான கட்டிடமான 'பி.எல் டவர்ஸ்'க்கு சென்றேன்.

'பி.எல் டவர்ஸ்' - இதைப் பார்த்தவுடன், என் மனம் படபடத்தது. கடிகாரத்தில் எட்டு மணி காட்டிக் கொண்டு இருந்தது - தேதி சில மாதங்கள் பின்னோக்கிச் சென்றது. அந்தக் காலத்தில், இது நான் கட்டாத தாஜ்மஹால். சீதா - அவளின் குணத்திற்கேற்ப அவள் தலையில் பாம்பு வடிவத்தில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு, வளையல் அணியாத கைகள், ஆடவனின் நாடியை ஆளும் கண்கள்,- இவள் தான் சீதா.

ஐம்பது மாடி லிப்டில் இரவு பத்து மணிக்கு நானும் சீதாவும் நடத்திய காதல் விளையாட்டுக்கள் பல. என்னுடய காதலை அவள் ஒப்புக் கொண்டது மாதிரி நடித்ததும் இதே லிப்டில் தான். வயிற்று வலி, ஜுரம், வாந்தி, அப்பா, அம்மா ஆப்பரேஷன், தாத்தா, பாட்டி சாவு - இப்படி பல பொய்கள் சொல்லி அவளை சந்தித்து இருக்கிறேன். நகரத்தில் நாங்கள் சுற்றாத இடங்கள் பூமிக்கு மேல் இல்லை. என் செல்போன் கம்பெனிக்காரர்கள் நன்றி சொன்னார்கள், இருபதினாயிரம் பில் கட்டியதற்கு. அம்மாவின் கண் ஆப்பரேஷனை மறந்தேன். என்னையும் மறந்தேன். காதலின் சூறாவளியில் சிக்கிக் கொண்டேன். நடுச் சாமத்தில், ஒற்றைக் கட்டிலில் அவளைப் பற்றிய கற்பனைகள் உண்மையை விட இனிப்பாக, சுகமாக இருந்தது. அவள் என் காதலை ஒப்புக் கொண்ட ஒரு மாதம் கழித்து, சீதாவை முதல் முதலாகப் பார்த்தேன் - இன்னொரு ஆடவனுடன். அன்று அவள் தோள்கள் மேல் நான் அல்லாமல், இன்னொரு ஆடவனின் கைகள் இருந்தன. என்னை விட இருபதினாயிரம் அதிகமாக வாங்கும் கைகள்.

மணி 8:15, ஒன்பது - பத்து எம கண்டம் - அதற்கு முன்பு இறந்தால் எமனுக்கு வசதியாக இருக்கும். 'நைட்- ஷிப்ட்' முடிந்து பலர் உற்சாகமாக வந்தனர். சிலர் கை சேர்த்துக் கொண்டு, மங்கிய காமப் பார்வையுடன் வெளியே வந்தனர். எனக்கு அழுகையாக வந்தது. நான் மட்டும் இப்படி ஏமாற்றப்பட்டேனே! வேறு யாருக்கும் இப்படி நடக்கவில்லையா? இன்று சீதா தென்பட்டால், அங்கே கத்தியால் குத்தி விட்டு, மாடியில் இருந்து குதித்து விடுவேன். பார்க்காவிடில், முடிந்தவரை சபித்து விட்டு தற்கொலை பண்ணிக் கொள்வேன்.

நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். ஒரு புறம் நான் காதலில் நிராகரிக்கப்பட்டதால்; மறுபுறம் என்னுடய உணர்ச்சிகளை யாரிடமும் கொட்ட முடியவில்லையென்பதால்.

'நான் இருக்கேன் மா.. நீ கவலப்படாத.. இப்ப நான் இந்தக் கம்பெனி மானேஜரை பார்க்கப் போறேன். அவர் என்னோட 'ஐடியா' வை 'அக்ஸப்ட்' பண்ணிட்டார்னா' நம்ம காட்டுல மழை தான். அப்புறம் நீ என்னைப் பார்க்கணும்னா கூட கடவுள் கிட்ட பர்மிஷன் கேட்டு விட்டு தான் வர வேணும். சரி மா.. நீ உடம்பப் பார்த்துக்கோ.. அப்புறம்.. "

"சார்.. உங்க எழவ வேற எங்காவது வெச்சுக்கோங்க.. கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க.. இன்னும் கொஞ்ச நேரம் தான்.. அப்புறம் உங்க எழவ கேட்க நான் இருக்க மாட்டேன்" - இதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் சொல்லி விட்டேன். யாரோ தன் அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தால் எனக்கென்ன? தெரியவில்லை.

தமிழ் அகராதியில் இல்லாத வார்த்தைகள் வரும், என் சட்டை கசங்கும், அவன் கண்ணாடி உடையும், சீதாவின் மேல் உள்ள கோபம் அவனை அடித்துத் துவைத்ததில் வெளியே வந்து இருக்கலாம் - ஆனால் இது எதுவும் நடக்கவில்லை. ஒரு வேளை நடந்து இருந்தால்?

'என்ன சார்.. உங்களுக்கு நான் ஏதாவது உதவி பண்ண முடியுமா?'

இரண்டு வாரத்தில் என்னிடம் யாருமே கேட்காத கேள்வி. என் வாழ்க்கையை முழுவதும் சொல்லி அழ வேண்டும் போல இருந்தது.

"என்ன பண்ணப் போறீங்க? சும்மா அரை மணி நேரம் என்கிட்ட பேசிட்டு என்னை வெச்சு கதை எழுதி பணம் பார்ப்பீங்க! இல்லாட்டி என் கதையை உங்க பெண்டாட்டிகிட்ட படுக்கை அறையில பேசி நல்ல பேர் வாங்குவீங்க!"- ஏன் இப்படிச் சொன்னேன்? தெரியவில்லை.

"சார். எனக்கு இது வரைக்கும் கல்யாணம் ஆகல.. வாரத்தில் மூணு மணி நேரம் தான் வீட்டுல இருப்பேன். என்னைக் காதலிச்ச ப்ரியா என்னைக் கை விட்டுட்டு போய்ட்டப்புறம் வேலை, வேலை தான் - ஏதாவது சாதிக்கணும்னு... "

ஆஹா.. நம்ம ஜாதிக்காரன் போலவென்று நினைத்தேன். சட்டென்று அவன் மீது பரிதாபம், அந்த பரிதாபத்தினால் நம்பிக்கை பிறந்தது. அவன் என்ன வேலை செய்கிறான் என்று கேட்கவில்லை. என்னுடைய வாழ்க்கையைச் சொன்னேன். நான் காதலித்ததை, ஏமாற்றப்பட்டதை, சீட்டுக் குலுக்கிப் போட்டதை - எல்லாம் சொன்னேன். அவன் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான். நடுவில் ஒரு அசைவோ, சொல்லோ அவன் உதட்டிலிருந்து வரவில்லை.

அவன் பதற்றம் அடையவில்லை. கண்களை மூடி ஒரு நிமிடம் யோசித்தான். கான்டீனிலிருந்து ஒரு கோலாவும் வாங்கி வந்தான். ஒரு கிளாஸில் ஊற்றி என்னிடம் கொடுத்தான்.

'இங்க பாருங்க சார்.. நீங்க யாருன்னு தெரியல.. என்னை உங்க நண்பன்னு நினைச்சுக்கோங்க.. நீங்க தற்கொலை பண்ணிக்கப் போவதால் சீதா உங்களயே நினைச்சிட்டு சும்மா இருக்கப் போவதில்ல.. அவ யார் கூடயோ ஊர் சுத்துவாள், நீங்க என்ன பண்ண முடியும் அதற்கு? உங்க விதி எதுவோ அப்படித் தான் நடக்கும்.'

பல ஆறுதல் வார்த்தைகள் கூறினான். ரொம்ப நாளாக அவனுடன் பழக்கம் இருப்பது போல இருந்தது - அவன் எடுத்துக் கொண்ட உரிமையில். என்னுடைய மன நிலையைத் துல்லியமாக கணித்திருந்தான். நான் இன்னும் முகம் மாறாமல் அப்படியே இருந்தேன்.

கான்டீனிலிருந்து எனக்குப் பிடித்த மசால் தோசையை வாங்கி வந்தான். அவன் கொண்டு வந்த லாப்-டாப்ஐ ஐந்து நிமிடம் பார்த்தான். ஒரு பெருமூச்சு விட்டான். வானத்தைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தான். நான் தானே தற்கொலை பண்ணிக்கப் போறேன்! இவன் ஏன் இப்படி பதட்டப்படறான்? அருகில் வந்து உட்கார்ந்தான்.

'சரி எல்லாத்தையும் விடுங்க சார்.. இந்த லாப்-டாப் கம்ப்யூட்டரில் ஒரு 'பிரஸன்டேஷன்' இருக்கு. ஒரு புதிய தொழில்நுட்ப யுக்தி பற்றி. இதை உங்க ஐடியான்னு சொல்லுங்க. இன்னிக்கி 9 :10 க்கு இந்தக் கம்பெனி சேர்மனோட மீட்டிங் இருக்கு. எனக்கு பதில் நீங்க போங்க.. இத நல்லா ப்ரெஸன்ட் பண்ணீங்கன்னா உங்களுக்கு 'தீங்க்-டாங்க்'ல வேலை குடுப்பாங்க. சம்பளம் மாசம் ஐம்பதினாயிரம். இந்த சீதா கிடைக்க மாட்டா, ஆனா வேற யாரவேணா ஒங்க வலைல சிக்க வைக்கலாம். என்ன சொல்றீங்க?'

அவருடய லாப்-டாப் கணினியை வாங்கிக்கொண்டு லிப்டில் ஏறினேன். நான் இருபதாவது மாடி போக வேண்டும். ஐம்பதாவது மாடிக்குப் போக வேண்டியவனை, இருபதாவது மாடிக்குப் போக வைத்த கடவுளுக்கு நன்றி. நான்காவது மாடியில் அதே லிப்டில் சீதா ஏறினாள். லாப்-டாப் என் கையில் பார்த்தவுடன் அவள் புருவங்கள் உயர்ந்தன. என்ன யோசிப்பாள்? இவனை கோட்டை விட்டேனென்றா? அவள் மனது கொஞ்சம் சஞ்சலப்பட்டாலும் எனக்கு மிகப் பெரிய வெற்றி தான். அவளை விட அழகான, எனக்கு அடக்கமான ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு காரில் ஊரை சுற்ற வேண்டும். அந்த சமயத்தில் அவளுடய பாய்-பிரண்ட் இவளை ஏமாற்ற வேண்டும். அதைப் பார்த்து அவள் துடிக்க வேண்டும்.

இருபதாவது மாடி வந்தது. செல்-போன் மணி அடித்தது. அதே நண்பர். அவருக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது போல. அவரிடம் பேசி விட்டு, அம்மாவிடம் போன் போட்டு இன்று மாலை ஐந்து மணிக்கு வந்து விடுவேனென்றும், ஒரு புதிய நண்பருடன் நாம் அனைவரும் தாஜ் போகலாம் என்று சொன்னேன். அம்மா ஆசி வழங்கினார்.

மணி 9:10 - எமனுக்கு டாட்டா சொல்லி விட்டு தன்னம்பிக்கையுடன், வாழ்க்கையில் ஒரு புதிய ஒளியுடன், முக மலர்ச்சியுடன் உள்ளே சென்றேன். வெளியே சூரியன் கருமேகங்களை கிழித்துக் கொண்டு வெளியே வந்தான். என் மீது ஒளி பிம்பங்களை வீசி ஆசி வழங்கினான். சேர்மனைப் பார்க்க வெளியே அமர்ந்து இருந்தேன். தினசரி நாளிதழைப் புரட்டும் போது, என் பேர் நாளைக்கு வந்தால் எப்படி இருக்குமென்று என் மனம் அலைபாய்ந்தது. அதைப் படித்து விட்டு, சீதா என்னைப் பார்க்க வருவாள், அவளை அவமானப்படுத்தி அனுப்புவது போலவும்.... மறுபடியும் அவளை நான் காதலிப்பது போல... சீ.. சீ.. முடியாது...

"மிஸ்டர். ராம், உங்களுக்கு இருபது நிமிஷம் டைம் இருக்கு. நாட் மோர்.."

அந்தச் சேர்மனை பார்க்கும் முன்பு மறுபடியும் அந்த நண்பர் போன் செய்தார். நான் நிச்சயமாக தற்கொலை செய்ய மாட்டேனென்று, என் அம்மா மீது ஆணையாகச் சொன்னேன். என் வீட்டின் முகவரி வாங்கிக் கொண்டார்.

இருபது மாடிக்குக் கீழே யாரோ பேசிக் கொண்டு இருந்தனர். அது எனக்குக் கேட்டு இருக்கக் கூடாதோ?

"... நீ இன்னும் உயிரோடவா இருக்க? நம்ம வேல என்ன ஆச்சு?"

"நீ ரீமோட்ட பிரஸ் பண்ணு.. லாப்-டாப் தானா வெடிக்கும். ஒரு லட்சம் கூட அனுப்பு. பாவம் அந்த அம்மா.."

கடவுள் நான் எழுதாத ஆறாவது சீட்டை என் சாவுக்குத் தேர்ந்தெடுத்தான்.

******
நட்புடன்

சடகோபன்

சிவா.ஜி
18-08-2007, 06:11 AM
எதிர்பாராத முடிவு. அசத்திட்டீங்க சடகோபன்.பாவம் மரணத்தை இவன் மறந்தாலும்,மரணம் இவனை மறக்கவில்லை. லாப்டாப்பில் அவன் மரணசாசணம் எழுதியிப்பது புதுமையானது.வாழ்த்துக்கள்.

gayathri.jagannathan
21-08-2007, 04:15 AM
இறைவன்.. அவனுடைய நோக்கத்தை/விருப்பத்தை தனது பாணியில் நிறைவேற்றி வைத்துள்ளார்....

நல்ல கதைப்போக்கு.. அருமை சடகோபன்...வாழ்த்துக்கள்...

இளசு
22-08-2007, 08:29 PM
கடைசி வரியில் கத்தி செருகும் ஓஹென்றி பாணி கதை...

எப்படியும் படிப்பவர்களை அட போட வைக்கும் வெற்றி பாணிக்கதை!

நல்ல வெற்றியை எட்டிய சடகோபனுக்கு வாழ்த்துகள்..


ஆங்கிலத்தில் ஜெஃப்ரி ஆர்ச்சர், தமிழில் சுஜாதா எழுதிய இவ்வகைக் கதைகளின் தீவிர ரசிகன் நான்!

ஓவியா
01-09-2007, 11:20 PM
சும்மா சொல்லகூடாது, கதை மெய்யாலுமே பிரமாதம்.

கதையில் ஒருவித விருவிருப்பு இருந்தது, யாரும் எதிர் பாராத திருப்பம்.

பாராட்டுக்கள்.

மனோஜ்
30-09-2007, 07:41 PM
சிறப்பான கதை நல்ல விருவிருப்பாக இருந்தது நன்றி சடகோபன்

சாம்பவி
30-09-2007, 08:09 PM
முழுதாக ஒரு நிமிடம் பிடித்தது பிரம்மிப்பில் இருந்து மீள.
ஆறாவது சீட்டாய் புது வாழ்க்கை காத்திருக்கும் என நினைத்தேன்..
அன்பே சிவம் படத்தில் மாதவன் சொல்வது போல் என்ன ஸிஸ்டம் இது... ! தோல்வி தந்து , நம்பிக்கை இழக்க வைத்து, வாழ்க்கையின் ஓரம் வரை துரத்தி சென்று, மரணத்தை முத்தமிடப் போனவனுக்கு , துளியாய் ஒரு வெளிச்சம் கட்டி, வானம் அளவுக்கு நம்பிக்கை வளர்த்து அவனே எதிர் பாரத தருணத்தில் இப்படி...:( அட்டகாசமான திருப்பம்..
பாவம் அம்மா...

lolluvathiyar
05-10-2007, 03:19 PM
வித்தியாசமான கதை, ஒருவன் மனதில் எதை நினைகிறானோ இறுதியில் அதுவாகவே மாறி விடுவான் போல இருகிறது.
தற்கொலை நினைக்க கூட கூடாது போல இருக்கு.
பாராட்டுகள்

ஜெயாஸ்தா
06-10-2007, 02:33 AM
அருமை சடகோபன்.... கதையின் முடிவு யூகிக்க முடியாததாய் இருந்தது. வித்தியாசமான ஆறாவது சீட்டு அற்புதமான படைப்பு. இருந்தாலும் தற்கொலை செய்ய போனவனுக்கு, வாழ்வதற்கான நம்பிக்கையை ஊட்டிவிட்டு பின் அவனை மரணிக்க வைத்ததை சீரணிக்கமுடியவில்லை. இதில் வாழ்க்கை தத்துவம் ஒன்று உள்ளது. அன்பாய் பேசுவது போல் நடிப்பவர்கள், மூகமூடி அணிந்தவர்கள் நிறைய பேர்கள் நம்மை சுற்றி உள்ளனர். அவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்கிறீர்கள்.

இணைய நண்பன்
07-10-2007, 08:02 PM
நல்ல கதை.வாழ்த்துக்கள்