PDA

View Full Version : அந்த ஒரு சொல்..



rambal
04-06-2003, 05:56 PM
அந்த ஒரு சொல்...


அந்த ஒரு சொல்
அழகாய் இருக்க
அகராதியில்
இருந்த அத்தனை
தேவையற்ற வார்த்தைகளையும்
தேடித்தேடிப் பேச..
ஒரு ஓரத்தில் மழலையாய்
அழுகின்ற அந்த
ஒரு சொல் மட்டும்
உனக்குக் கேட்கவில்லையா?

மெழுகுவர்த்தி
வெளிச்சத்தில்
எவரோ வாசித்த
வீணை சத்தத்தில்
ரசித்து உணவு உண்ட
இரவுப் போதுகளில் கூட..
அந்த சொல்
உன் காதோரம்
ரகசியம் சொல்லி
உத்தரவு கேட்கவில்லையா?

எப்போதாவது கிடைத்த
தனிமையும்
அரிதாய் காணக்கிடைக்கும்
பௌர்ணமியும்
ஒருங்கிணைத்து
கிடைத்த போதுகளில் கூட..
அந்த ஒரு சொல்
முத்துக்களாய்
சிதறி விடவா என்று
உனை மிரட்டவில்லையா?

ஒரு குடை..
அரவணைக்க முயன்று
தோற்று
தோள்வழியே வழிந்த
மழை நீர்..
காலாற நடந்து
என்னென்னவோ பேச..
அந்த ஒரு சொல்
இப்போதாவது இரக்கம்
காட்டு என்று
உன்னிடம் கெஞ்சவில்லையா?

ஒருவழியாய்
நான் திக்கித் திணறி
மூச்சு அடக்கி
முத்தெடுப்பது போல்
சொல்லிவிட்ட
அந்த ஒரு சொல்..

அதன்பின் யுகங்களாய்
என்னை காக்க வைத்து
ஒவ்வொரு யுகத்திலும்
இதே அவஸ்தை அனுபவித்து..
ஆறுமுறை பிறந்து இறந்து
இது ஏழாவது பிறவி..
இன்னும் நீ சொல்லவில்லை
அந்த ஒரு சொல் மட்டும்..

நிலா
04-06-2003, 08:21 PM
காத்திருத்தலின் வலி உங்கள் எழுத்துக்களில்.அருமையான வரிகள்.பாராட்டுக்கள் நண்பரே!

gankrish
05-06-2003, 06:35 AM
அது எந்த சொல் நண்பா.. கவிதை அருமை.

prabha_friend
05-06-2003, 02:54 PM
நண்பரே அருமையான கவிதை . ஒரே ஒரு சொல்லை மட்டும் பின்னனியில் வைத்து எத்தனை உண்மைகளை அழகாக எடுத்துரைத்தீர் . பாராட்டுக்கள் .

சகுனி
07-06-2003, 05:56 AM
கவிதை மனம் உருகவைத்துவிட்டது. ரொம்ப அருமை. அந்த சொல் i love u தானே?

puthusu
07-06-2003, 08:27 PM
நல்ல கவிதை
பாராட்டுக்கள் ராம்பால்....

karikaalan
08-06-2003, 10:05 AM
ராம்பால்ஜி!

பல காதல்கதைகள், கைக்கிளையாகவே முடிந்துவிடுகின்றன. இங்கும் விதி விளையாடுகிறது. மனதைத் தேற்றவும். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

பாரதி
08-06-2003, 01:50 PM
காத்திருந்து, காத்திருந்து, கவிதை மழை பொழியும் ராம்பாலுக்கு வாழ்த்துக்கள்.

நானும் காத்திருப்பேன் உங்கள் கவிதைகளுக்காக.