PDA

View Full Version : கனவுsadagopan
17-08-2007, 11:12 AM
அந்த மாடிப் போர்ஷனில் வாடகைக்கு ரூம் எடுத்துத் தங்கியிருந்தான் மன நல மருத்துவ மனையில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ள இளம் டாக்டர் மனோ. உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள்தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. பணத்திற்காகப் பேயாக அலையும் மனிதர்கள், கலப்படம் செய்வோர், சாமி பெயரைச் சொல்லிக் கோவில் பணத்தைக் கொள்ளையடிப்போர், கள்ளச் சாராயம் காய்ச்சி விற்போர், கஞ்சா கடத்துவோர், சதா சர்வ காலமும் போதையில் மிதப்போர், காதல் போதையில் களியாட்டம் போடுவோர் என தினமும் எவ்வளவோ விசித்திர நோயாளிகளைப் பார்த்துப் பழகி விட்ட மனோவுக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள கேஸ்களை விட, அட்மிட் ஆகாமல் வெளியுலகில் சுற்றித் திரியும் கேஸ்களே அதிகம் என்று தோன்றும். கீழ் வீட்டு அனுராதாவும் ஒரு கோலப் பைத்தியம் என்று ஆரம்பத்தில் நினைத்தவன்தான் மனோ.

அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலைப் பெருக்கி சாணத்துடன் கூடிய நீர் தெளித்துக் கோலம் போடக் குனிந்தாள் என்றால், சுமார் ஒரு மணி நேரம் குத்துக் காலிட்டு, இங்கும் அங்கும் தத்தித் தாவி மிகவும் அழகாகக் கோலம் போடுவாள். விடியற் காலம் எழுந்து வாக்கிங் போய் விட்டுத் திரும்பும் மனோவை அந்த அழகிய கோலம் வரவேற்று வியப்படையச் செய்யும். என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னை பிரதக்ஷணமாகச் சுற்றிச் செல் என அனுவே அன்புக் கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.

கோலத்தைச் சற்று நேரம் நின்று ரசித்துப் பார்த்து விட்டு மாடி ஏறிப் போகும் மனோவை, சில நேரங்களில் அனுவும் வீட்டுக்குள்ளிருந்து கதவிடுக்கு வழியாகவோ, ஜன்னல் இடுக்கு வழியாகவோ பார்ப்பதுண்டு. படைப்பாளிக்கு ரசிகனின் பாராட்டு தானே மகிழ்ச்சி!

மார்கழி மாதம் நெருங்கி விட்டது. பனி அதிகமாக கொட்டுகிறது. விடியற் காலம் வாக்கிங் போவதை மனோ நிறுத்தி விட்டான். காரணம் கொட்டும் பனி மட்டுமல்ல, வாசலில் கோலம் போடும் அனுவைத் தன் அருகே அழைத்துப் பார்த்து ரசிக்க, நேற்று அவன் புத்தம் புதியதாக வாங்கி வந்திருக்கும் பவர்புல் பைனாக்குலரும்தான். தினமும் மனோதத்துவ டாக்டரின் மனதிற்கும், கண்களுக்கும் விருந்தளித்தது அந்த பைனாக்குலர். பாவாடை சட்டை தாவணியில், கால்களில் கொஞ்சும் கொலுசுடன், அன்னப் பக்ஷயென அவள் தத்தித் தத்தித் தாவித் தாவி வட்டமிட்டுக் கோலம் வரையும் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமென்று தோன்றியது

இத்தகைய அழகிய இளம் பெண் அனுவுக்கு வாய் பேச முடிவது இல்லையென்றும், காதும் கேட்பதில்லையென்றும், நேற்று தற்செயலாகக் கோவிலில் சந்தித்த அவளின் தாயார் வாயிலாகக் கேள்விப் பட்டதும் மனோவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அழகிய அந்த முழு நிலவுக்குள் ஒரு களங்கமா? மனோவுக்கு மனதை நெருடியது.

இரவு தன் அறையின் வெளியே யாரோ அழைப்பு மணி அடிக்க கதவைத் திறந்தான் மனோ. வீட்டின் சொந்தக்காரரான, கீழ் வீட்டு அனுவின் அம்மா தான் நின்று கொண்டிருந்தார்கள்.

"வாங்கம்மா! என்ன இவ்வளவு தூரம் நீங்களே வந்துட்டீங்க! ஒரு குரல் கூப்பிட்டிருந்தா நானே வாடகைப் பணத்துடன் கீழே ஓடி வந்திருப்பேனே!" என்று சொல்லி அங்கிருந்த நாற்காலியை மின் விசிறிக்குக் கீழே போட்டு, அவர்களை அமரச் சொல்லி, மின் விசிறியையும் சுழல விட்டான் மனோ.

"தம்பி, நான் வாடகை வசூல் செய்ய வரவில்லை. அனுவைப் பொண்ணு பார்க்க பட்டணத்திலிருந்து நாளைக்கு வருகிறாங்க. எங்க வீட்டுக்காரர் போய்ச் சேர்ந்ததிலிருந்து ஆம்பளைத் துணை இல்லாத வீடாப் போச்சு. நீங்க கொஞ்சம், அவங்க வந்து போற சமயம் மட்டும்நம்ம வீட்டுக்கு வந்து கூட மாடப் பேச்சுத் துணையா இருந்துட்டுப் போனீங்கன்னா, எங்களுக்குக் கொஞ்சம் தைரியமாக இருக்கும்" என்றாள். இதைக் கேட்ட மனோவுக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும், மறுபக்கம் ஒரு வித அதிர்ச்சியாகவும் இருந்தது.

"மாப்பிள்ளை என்ன செய்கிறார்? நம் அனுவைப் பற்றி எல்லாம் விபரமாகச் சொல்லிட்டீங்களா?" மனோ அக்கரையுடன் வினவினான்.

"சென்னையிலே ஏதோ பிசினஸ் பண்ணுகிறாராம். பணம் காசுக்குப் பஞ்சமில்லையாம். புரோக்கர்தான் சொன்னார். நீங்க தான் நேரில் வரும் போது முழு விபரமும் கேட்டு நல்லது கெட்டது பற்றி விசாரித்துச் சொல்லணும், தம்பி. ஒரே விசாரமாக இருக்கிறது" என்றாள்.

"சரிம்மா, கவலைப் படாமப் போங்க, நான் நாளைக் காலையிலேயே வந்துடறேன்" என்று வழியனுப்பி வைத்தான்.

இரவு தூக்கமே வரவில்லை. நெடு நேரம் புத்தகங்கள் படித்தும் எதுவும் மனதில் பதியவில்லை. பிறகு நள்ளிரவுக்கு மேல் ஒரு வழியாகத் தூங்கிப் போனான். அதிகாலையில் வழக்கம் போல் தன் பைனாக்குலரில் அனுவையும், அவள் போடும் கோலத்தையும் தரிஸிக்க ரெடியாகி விட்டான். இன்று அவனால் எப்போதும் போல இயல்பாக அனுவையும், அவள் போடும் கோலத்தையும் ரசிக்க முடியவில்லை. அனுவைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கோ? விரைவில் கல்யாணம் ஆகிச் சென்று விடப் போகிறவள். மெளன மொழி பேசும் அவளுக்கு, அவள் மனதைப் புரிந்து கொள்ளும் கலகலப்பான கணவன் அமைந்து, அவளையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என மனதிற்குள் பிரார்த்தித்தான்.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் வீட்டின் நேர் எதிர்ப்புறம் உள்ள புதரிலிருந்து ஐந்தடி நீளமுள்ள கரு நாகப் பாம்பு ஒன்று வேகமாக அவளின் முதுகுப் புறம் நோக்கி சரசரவென வந்து கொண்டிருப்பதை மனோ கவனித்துவிட்டான். அவளின் முதுகுப் புறமாகக் கோலத்தைத் தாண்டாமலும் அவளைத் தீண்டாமலும் சத்தியத்திற்குக் கட்டுப் பட்டது போல படம் எடுக்கிறது அந்தப் பாம்பு. மனோ பதட்டத்தோடு பைனாக்குலரை வீசி விட்டு வேகமாகக் கீழே ஓடோடி வருகிறான். அனுவின் பக்கவாட்டில் நெருங்கிய அவன் அவளை அப்படியே அலாக்காகத் தூக்கி அவள் வீட்டு வாசல்படியில் நிறுத்தி பாம்பைப் பார்க்கும்படிக் காட்டுகிறான்.

திடீரென ஒரு வாலிபன் தன்னைக் கட்டிப் பிடித்துத் தூக்கி விட்டதையும், எதிரில் தன்னை ஒரு நாகம் தீண்டவிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்த அனு, வாழ்க்கையில் முதன் முதலாக "அம்மா" என்று வாய் திறந்து அலறினாள். பாம்பும் தன் வேலை முடிந்து விட்டது என்பது போலத் தான் வந்த வழியே புதர்ப் பகுதியில் போய் மறைந்து கொண்டது.

அவள் தன் வாய் திறந்து அலறியதில் அதிர்ச்சியாகி அவனும் "அ..ய்.ய்.ய்.. ய்...யோ" எனக் கத்த காலை வேளையில் இவர்கள் எழுப்பிய சத்தத்தில் ஊரே கூடி நின்று விட்டது. வாய் பேச முடியாத அப்பாவிப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காக பஞ்சாயத்தில் சரியான தண்டனை தரவேண்டும் என ஆளாளுக்குக் குரலெழுப்பிக் கொண்டிருந்த வேளை அலாரம் மண்டையை உடைப்பது போல அடிக்க ஆரம்பித்தது. திடுக்கிட்டு எழுந்தான். அத்தனையும் கனவு என்பதை உணர்ந்தான்.

தனது கனவு அடிக்கடி பலித்திருப்பதை நினைத்துக் கொண்டே ரெடியாகி அனு வீட்டில் ஆஜர் ஆனான். இவன் உள்ளே நுழையவும் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வந்தவர்களை வரவேற்ற மனோவுக்கு ஒரே அதிர்ச்சி. வந்தவன் பெயர் நாகராஜன். சென்னையில் பிரபலமான ரெளடி. ஏற்கனவே மனோவுக்குத் தெரிந்த மட்டும் இரு முறை திருமணம் ஆனவன். சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுப் பல முறை கம்பி எண்ணி வந்தவன். அவனுடன் வந்திருப்பவர்களும் அவனுடைய சொந்தங்கள் போலத் தெரியவில்லை. அனுவின் தாயாரைத் தனியே அழைத்துப் போய் மனோ உண்மையை விளக்கிக் கூறி விட்டான். அனுவின் தாயும் ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி, பெண் கொடுக்க சம்மதம் இல்லை எனக் கூறி, அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டாள்.

தன் கனவில் வந்த நாகப் பாம்பு இந்த நாகராஜனைக் குறிப்பதாக எண்ணினான் மனோ. கனவில் நாகப் பாம்பிடமிருந்து அனுவைக் காப்பற்றியது போல இந்த நாகராஜனிடமிருந்தும் அனுவைக் காப்பாற்றி விட்டோம் என மனதிற்குள் மகிழ்ந்து கொண்டான் மனோ.

கனவில் அனு "அம்மா" என கத்தியதும் அவளை அவன் தூக்கி நிறுத்தியதும் கூட நினைவுக்கு வர மிச்சக் கனவும் ஒரு நாள் பலித்தே தீரும் என்ற நம்பிக்கையோடு சிறிய புன்னகை ஒன்றும் பிறந்தது

*******
நட்புடன்

சடகோபன்

இளசு
17-08-2007, 09:06 PM
வெளியில் உலவும் மனநோயாளிகள்..
நாகப்பாம்பு − நாகராஜன்!

நான் ரசித்த இடங்களில் சில..


வாழ்த்துகள் சடகோபன்..

படிக்கச் சுவையான சிறுகதை!


படைப்பாளியை மகிழவைக்க (இதுவும் உங்கள் கதை வரி..)
இந்த ரசிகனின் பாராட்டுகள்!

dellas
12-01-2011, 02:16 PM
அருமை நண்பரே. மனதில் கொள்ளும் நினைவுகளின் நீட்சி கனவாக வரும் என்பார்கள். விளங்கமுடியா பல சிக்கல்களுக்கு கனவு மூலமாக விடைகண்டவர்களும் உண்டு. உங்கள் கனவு அந்த வகை. உளவியலோடு ஒட்டிய கதை. பாராட்டுக்கள்.

M.Jagadeesan
12-01-2011, 02:34 PM
அருமையான கதை! பாராட்டுக்கள்!

Kalai_21
18-01-2011, 03:09 PM
நல்ல கதை! பாராட்டுக்கள்!