PDA

View Full Version : இன்னும் இருக்கு வாழ்க்கைசிவா.ஜி
17-08-2007, 08:24 AM
மூன்று பேர்தான் வந்திருந்தார்கள்.மாப்பிள்ளையும் அவருடைய சித்தப்பா,சித்தி மட்டுமே கலந்துகொண்ட பெண்பார்க்கும் படலம்.காஃபி,சிற்றுண்டி எல்லாம் முடிந்ததும்,கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் அலசப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தது. பையன் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு நாக்பூரில் ஒரு பண்ணாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருப்பதால்...ரொக்கமும்,தங்கமும் தாரளமாகவே தருவதாய் வித்யாவின் தந்தை ஒத்துக்கொண்டார்.

மாப்பிள்ளை பையனுக்கு பெற்றோர் இல்லாததால் சித்தப்பாவும் சித்தியும்தான் முன்னின்று திருமணத்தை நடத்தப்போவதாகசொன்னார்கள்.புகுந்த வீட்டில் பிக்கல் பிடுங்கல் இருக்காது,மகள் நிம்மதியான திருமண வாழ்க்கையை நடத்த முடியுமென்று சந்தோஷப்பட்டுக்கொண்டார்கள் வித்யாவின் பெற்றோர்.பத்திரிக்கை அடிக்கப்பட்டுவிட்டது.திருமணவிழா மும்பையிலேயே நடத்தப்படுமென்று முடிவு செய்யப்பட்டது.

தன் பங்குக்கு சில பத்திரிக்கைகளை எடுத்துக்கொண்டு அன்று அலுவலகம் வந்தாள் வித்யா.முதல் பத்திரிக்கையை தன் மேலதிகாரிக்கு கொடுத்துவிட்டு பின் தன் சக ஊழியர்களுக்கும் கொடுத்து வரவேற்றாள்.சதீஷிடம் கொடுக்கும்போது மட்டும் லேசான நடுக்கத்தை உணர்ந்தாள்.ஏற்கனவே அவன் வித்யாவை காதலிப்பதாகச் சொல்லி இவள் சம்மதம் கேட்ட போது..தான் தன்னுடைய பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்ள போவதாக சொல்லி அவனுடைய காதலையும் அவனையும் நிராகரித்துவிட்டாள். அதனால் தன் கல்யாண பத்திரிக்கையை அவனிடம் தருவதற்கு தயங்கினாள்.உள்ளுக்குள் லேசான உறுத்தல்.சதீஷ் நல்லவன்.அமைதியான குனம்.எந்த கெட்டபழக்கமும் இல்லாதவன்.அவனை நிராகரிக்க எந்த காரணங்களும் இல்லையென்றாலும்,தன் கொள்கைக்காக அவள் அப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது.சதீஷும் அவளின் பெற்றோர்களை சந்தித்து சம்மதம் கேட்டதற்கு சாதி, அந்தஸ்து, எனக் காரணங்கள் காட்டி வித்யாவின் தந்தை அவனுக்கு வாசல் காட்டிவிட்டார்.

கிடைத்த பத்திரிக்கையை வாங்கிக்கொண்ட சதீஷ் ஒரு அடிபட்ட பார்வையை வித்யாவை நோக்கி செலுத்தினான்.அதை அவசரமாகத் தவிர்த்து,உடனே நகர்ந்தாள்.

திருமணம் மிக விமரிசையாக நடந்தது.மாப்பிள்ளை பக்கத்தில் சொற்ப உறவினர்களும் நன்பர்களும் மாத்திரமே இருந்தார்கள்.கொண்டாட்டங்களெல்லாம் முடிந்து தம்பதிகள் நாக்பூர் சென்று விட்டனர். ஒருவாரம் கழித்து வித்யாவின் பெற்றோர் நாக்பூர் சென்று இரண்டு நாள் மகளுடன் தங்கி ஒரு இல்லத்தரசியாக வாழத்தொடங்கி விட்ட மகளை பூரிப்புடன் பார்த்து சந்தோஷமாக வீடு திரும்பினர்.

இரண்டு வாரங்கள் கழிந்திருக்கும்...அன்று பின்னிரவில் வித்யா தனியாக வீட்டுக்கு வந்தாள்.அவள் கோலத்தை பார்த்து இருவரும் அதிர்ந்து விட்டார்கள்.கையில் காதில்,கழுத்தில் இவர்கள் பூட்டி அனுப்பிய ஆபரணங்கள் எதுவுமில்லாமல்,கன்னிப்போன கன்னங்களுடன்,வாராத தலையும்,கலங்கிய கண்களுமாய் வந்திருந்த வித்யாவைப் பார்த்து பதறிப்போய்"என்னம்மா வித்யா என்ன நடந்தது...ஏன் இப்படி இந்த கோலத்தோட எந்த தகவலுமில்லாம இந்த நேரத்துல வந்திருக்கியே...."வரிசையாக கேள்விகள் கேட்டுக்கொண்டே கதவைத்திறந்து விட்டார். எந்த பதிலும் சொல்லாமல் உள்ளே வந்து அமர்ந்து தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு..வித்யா பேச ஆரம்பித்தாள்.
"எல்லாமே தப்புப்பா....ஆசையாசையா ஒரே பொண்ணுன்னு என்னை வளர்த்து இப்படி ஒரு நரகத்துல தள்ளிட்டீங்களே..."சொல்லச்சொல்லவே துக்கம் தாளாமல் விசும்பி அழத்தொடங்கிவிட்டாள்.

"அய்யய்யோ என்னம்மா என்னென்னவோ சொல்றியே..என்னதாம்மா நடந்தது"கேட்டவரை பார்த்துக்கொண்டே.."நடக்கக்கூடாததெல்லாம் நடந்துடிச்சிப்பா...உங்க மாப்பிள்ளை...த்தூ...அவனெல்லாம் மனுஷனே இல்ல..அவனோட வேலை பொய்,படிப்பு பொய்,சித்தப்பா சித்தி எல்லாருமே பொய்ப்பா.அவன் ஒரு பிம்ப்...இது அவனுக்கு நாலாவது கல்யாணம்..ஏற்கனவே மூணு பொண்ணுங்கள சீரழிச்சிருக்கான்...வேற வேற இடங்கள்ல..நாம அவனோட வலையில விழுந்துட்டோம்.பணத்துக்காக எத வேணுன்னாலும் செய்யறவன்.நீங்க போட்ட எல்லா நகைங்களையும் என்கிட்டருந்து பறிச்சிக்கிட்டான்.போய்த்தொலையுதுன்னு பாத்தா...ரெண்டு நாளைக்கு முன்னால வீட்டுக்கு ரெண்டு பேரக்கூட்டிகிட்டு வந்து என்னை கூட்டிக்குடுக்கறதுக்கு முயற்சி பன்னாம்ப்பா அந்த கேடுகெட்டவன்.ரொம்ப போராட வேண்டியிருந்ததுப்பா அந்த மிருகத்துக்கிட்டருந்து தப்பிக்கறதுக்கு..."தாளமாட்டாமல் அவள் அழுத அந்த அழுகையிலேயே தெரிந்தது எவ்வளவு வேதனையை அவள் அந்த நேரத்தில் அனுபவித்திருப்பாளென்று..தன்னையறியாமலேயே வழிந்த கண்ணீரை துடைக்கக் கூட தோணாமல்,தன் செல்ல மகளின் கைகளை ஆதரவுடன் பற்றிக்கொண்டார்.

விசும்பல்களுக்கிடையே தொடர்ந்தாள்..."என்னோட மூர்க்கமான எதிர்ப்பை பாத்துட்டு..உன்னை நாளைக்குப் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு கதவை வெளிப்புறமா பூட்டிட்டு போயிட்டான். நான் எப்படியோ அந்த பில்டிங் வாட்ச்மேனைக் கூப்பிட்டு சொசைடி ஆபீஸ்லருந்து சாவிய வாங்கிட்டு வரச்சொல்லி, அந்த நல்ல மனுஷனோட உதவியால இங்க வந்து சேர்ந்தம்ப்பா.." எல்லாவற்றையும் கொட்டிவிட்டு கதறினாள்.
என்ன சொல்வது,என்ன செய்வது என்று எதுவுமே தோன்றாமல் இருவரும் மகளின் அழுகையோடு தாங்களும் சேர்ந்துகொள்ளத்தான் முடிந்தது.

நல்லவேளையாக வித்யாவின் அலுவலக மேலாளர் அவள் நிலையறிந்து மீண்டும் அதே வேலையை அவளுக்குத் தந்தார். நேர்ந்த துன்பங்களிலிருந்து வெளிவர இந்த வேலை மிகவும் உதவியாக இருந்தது.வித்யாவின் நிலையை அறிந்ததும் சதீஷ் துடித்துப்போய்விட்டான்.அவளுக்கு ஆறுதலாக எல்லோருமிருப்பதாக சொல்லி அவளைத் தேற்றினான்.முதல் முறையாக வித்யா சதீஷை வேறு கோணத்தில் பார்த்தாள்.இவனுக்கும் அந்த மிருகத்துக்கும் எத்தனை வித்தியாசம்...நான் இவனை நிராகரித்தது தவறோ என நினைக்கத்தொடங்கினாள். சிறிது நாட்க்களிலேயே எல்லா அதிர்ச்சிகளும் விலகி தெளிவானாள்.

அன்று அலுவலகம் வந்ததும் அவள் பார்வை சதீஷின் மேசைபாக்கம் பாய்ந்தது.உடனே ஒரு தெளிவான முடிவோடு அவனை நோக்கி நடந்தாள்.
"சதீஷ் உங்க கூட கொஞ்சம் பேசனும்'
"என்ன வித்யா.."
இங்க இல்ல டீ ரூமுக்கு போகலாம் வாங்க.."

குழப்பமான உணர்ச்சிகளோடு சதீஷும் அவளை பின் தொடர்ந்தான்.

" சதீஷ் நான் நேரடியாவே கேட்டுடறேன்....உங்களுக்கு இன்னமும் என் மேல அதே காதல் இருக்கா..?"

சட்டென்று கேட்டதும் உடனே பதில் சொல்ல கொஞ்சம் திணறிவிட்டு சொன்னான்..
"அப்கோர்ஸ் வித்யா...சாகுற வரைக்கும் அது இருக்கும்.நீதான் என்னை காதலிக்கலயே தவிர நான் உன்னை காதலிச்சது சத்தியம். ஏன் இப்ப இந்த கேள்வி?"

"ரொம்ப சந்தோஷம் சதீஷ். என்னை கல்யாணம் செஞ்சுக்க உங்களுக்கு விருப்பமான்னு நான் கேக்கப்போறதில்ல..ஏன்னா அது நீங்க என் மேல வெச்சிருக்கிற காதலை அவமானப்படுத்துறமாதிரி ஆகிடும்.அதனால நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்"

சதீஷ் சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் மெல்ல அவள் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக்கொண்டான்.குறிப்பு: என் தோழி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம் இது. இதை நான் ஏன் உண்மைச்சம்பவம் பகுதியில் இடவில்லையென்றால்...இந்த கதையின் நாயகியைப்போல என் தோழி தைரியமாக முடிவெடுக்க துணிவில்லாமல் இன்னமும் தனி மரமாகத்தான் வாழ்கிறாள்.எனக்கு அதில் உடன்பாடு இல்லாததால் அவளை காதலித்த என் நன்பனோடு என் கற்பனையில் அவளைச் சேர்த்துவைத்தேன். கற்பனை கலந்துவிட்டதால் இது கதையாகிவிட்டது.ஆனால் இது உண்மையாக வேண்டுமென்பதே என் விருப்பம்.

வெண்தாமரை
17-08-2007, 08:30 AM
உண்மையானால் சந்தோசம்தான்.. எத்தனைபேர் வாழ்க்கையில் முடிவெடுக்க தெரியாத கோழைகளாக இருக்கிறார்கள்.. உண்மை சுட்டது..

சிவா.ஜி
17-08-2007, 08:34 AM
மிக்க நன்றி வெண்தாமரை.என்னுடைய எதிர்பார்ப்பும் அதுதான்.

வெண்தாமரை
17-08-2007, 10:20 AM
ஏதோ வேகமாக எழுதி விட்டேன். வாழ்க்கையில் நிறைய பேருக்கு முடிவு எடுக்க தெரியாத கோழைகள் ன்னு.. அப்புறம் தான் தெரிந்ததது அதை சொல்லும் தகுதி எனக்கு இல்லை. உங்கள் தோழி நன்றாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

அன்புரசிகன்
17-08-2007, 12:59 PM
தாய் தந்தையரைக்கூறி வாழ்க்கை பாழடிக்கும் பலர் நாம் கண்கூடு பார்க்கிறோம்... தம் சுயகெளரவத்திற்காக தம்பிள்ளைகளைப்பலிக்கடாவாக்கும் போது பிள்ளைகள் ஏன்தான் ஒத்துக்கொண்டு தம் வாழ்க்கையை சீரழிக்கிறார்களோ தெரியாது. வாழ்க்கை சீரழிந்தபின் பிரச்சனை பிள்ளைக்கு மட்டுமல்ல... பெற்றோருக்கும் தான் என்பதை ஏன் அறிகிறார்கள் இல்லை.........

கதைக்குப்பாராட்டுக்கள்.

சிவா.ஜி
18-08-2007, 04:49 AM
நன்றி அன்பு. திருமணம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு.நிறைய பேர் ஏன் அதை தைரியமாக எதிர் கொள்ள மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.தன் விருப்பத்தை சொல்ல,ஆணோ,பெண்ணோ இருவருக்கும் உரிமை இருக்கிறது.அதை வெளிப்படுத்த தவறும்போதுதான் இப்படி அனர்த்தங்கள் நிகழ்ந்துவிடுகின்றன.

aren
18-08-2007, 05:22 AM
உண்மையாகும் சிவா. நிச்சயம் நீங்கள் நினைப்பதுபோல நடக்கும்.

சிவா.ஜி
18-08-2007, 05:36 AM
நன்றி ஆரென்.நல்லதையே நினைப்போம்...நம்புவோம்.

இளசு
18-08-2007, 06:33 AM
அன்பு சிவா,

அந்தஸ்து.இத்யாதி பார்ப்பதில் தவறில்லை..
மனவிருப்பும், நேர்மை போன்ற இன்றியமையாதவையும் இருக்கும்போது..
அந்தஸ்து, சாதி மட்டுமே பார்ப்பது − இப்படி முடியலாம்..

காதல், பெரியோர் நிச்சயத்தவை −
இருவகைத் திருமணங்களிலுமே
இவ்வகை ஆபத்துகள், விபத்துகள் நேரலாம்..

(ஆசை படத்தில்.. ஒரு ஆளின் முகத்தைப்பார்த்தாலே சொல்லிடுவேன்
அவன் எப்படின்னு என சொல்லும் பூர்ணம் விசுவநாதன் நினைவு வருகிறது... வித்யாவின் அப்பாவை ''பார்க்கும்போது'')

முடிந்தவரை தவிர்க்கவேண்டும்.. உள்ளுணர்வால். விசாரிப்புகளால்..
முடியாதபோது நிவர்த்திக்கவேண்டும்..

உங்கள் கற்பனைப் பின்சேர்ப்பு போல..


பாராட்டுகள் சிவா..


(வெண்தாமரையின் இரண்டாவது பின்னூட்டம் எனது வாக்குமூலமும் கூட)

சிவா.ஜி
18-08-2007, 08:07 AM
ஆச்சர்யமாக இருக்கிறது....மிகச் சரி இளசு..வித்யாவின் அப்பா பார்ப்பதற்கும் பூர்ணம் விஸ்வநாதனைப்போலத்தான் இருப்பார் மற்றும் சில குணங்களும் அப்படித்தான்.
அந்த மட்டுமேசொல்லிவிட்டது சரியான அர்த்தத்தை.இதை எல்லோரும் புரிந்து கொண்டாலே போதும் ஏமாற்றங்களும்,ஏமாற்றப்படுதலும் தவிர்க்கப்படும். நன்றி இளசு.

அமரன்
18-08-2007, 09:45 AM
இளசு அண்ணாவின் விமர்சனத்தை மீறி சொல்வதற்கு ஏதும் என்னிடம் இல்லை. நிச்சயிக்கபட்ட திருமணமா காதல் திருமணமா என்னும் விவாதத்துக்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை. இரண்டிலுமே முட்கள் உள்ளது என்பதை மட்டும் உணர முடிகிறது சிவா. நீங்க கைதேர்ந்த எழுத்தாளன் என்பதை நிரூபித்து வருகிறீர்கள். தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருங்கள்.

சிவா.ஜி
18-08-2007, 09:49 AM
நன்றி அமரன்.மன்றப் பெருந்தகையோரின் பெருந்தன்மையால்தான் என் எழுத்தாளனென்ற வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது..இல்லையென்றால் எப்போதோ அச்சானி கழண்டு குப்புறக் கவிழ்ந்திருக்கும்.நிஜமாகவே நீங்கள் சொன்ன நிலையை அடைய முயற்சிப்பேன்.

gayathri.jagannathan
21-08-2007, 04:19 AM
எத்தனை சோதனைகள் வந்தாலும் துணிந்து நின்று, அச்சோதனைகளைத் தாங்கி... நம்பிக்கையுடன் வெல்லும் மனிதர்கள் நம்மில் எத்தனை பேர் உண்டு?

கஷ்டங்கள் வந்தால் சோர்ந்து போகும் மனிதர்களுக்கு இக்கதை ஒரு பாடம்... நன்றி சிவா.. வாழ்த்துக்கள்...

சிவா.ஜி
21-08-2007, 04:22 AM
நன்றி காயத்ரி.சோதனைகள் எதிர்கொள்ளும்போதுதான் மனதை மேலும் உறுதியாக்கிக்கொள்ளவேண்டும்.அந்த உறுதி இருக்கும்வரை வாழ்க்கை நம் கையில்.

SathishVijayaraghavan
22-08-2007, 11:30 AM
நன்று சிவா... நல்லதையே நினைப்போம்... நல்லதே நடக்கட்டும்...

சிவா.ஜி
23-08-2007, 04:22 AM
நல்லதை நாடும் உள்ளங்கள் இருக்கும்வரை,நல்லவைகள் நடக்ககூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் சதீஷ். மிக்க நன்றி.

தளபதி
23-08-2007, 06:47 AM
பெண்கள் மிகவும் மென்மையானவர்கள், அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் அதிகமாக தங்களை வருத்திக்கொள்வார்கள். இந்த கதா நாயகியை மிகவும் துணிச்சலான பெண்ணாகப் படைத்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.!!

எனவெ, தாய் தந்தையரை நம்பிய வேறு எந்த குற்றமும் செய்யாமல் தவிக்கும் நம் சினெகிதி வெளிவருவதை விட, (நிஜத்தில்) அந்த சதீஷ் தானாக வெளிவந்து "திருமணம்" என்ற நல்ல செய்தியை அவள் தாய் தந்தையரிடம் பேசிவிட்டு நம் சினெகிதியிடமும் பேசினால் நல்ல முடிவு ஏற்படும் என்று படுகிறது.

இப்போது நம் நண்பர் சதீஷின் நிலை என்ன?!!!

சிவா.ஜி
23-08-2007, 07:03 AM
முதல் காதலை மறக்க முடியாமல் இன்னமும் மௌனியாகத்தானிருக்கிறார்.நீங்கள் சொல்வதைப்போல அவருக்கு தைரியம் வரவேண்டும்.கருத்துக்கு மிக்க நன்றி தளபதி.

ஓவியா
01-09-2007, 01:40 AM
முதலில் உங்கள் நண்பர்கள் இனிதே திருமணம் முடிந்து வாழ் எனது பிராத்தனைகள்.

கதை அற்ப்புதம், இப்படிதான் தெரிந்தே அல்லது தெரியாமலோ குழியில் விழும் பெண்களும் ஆண்களும் நிரைய, ஆனால் ஏமாற்றம் பெண்களுக்கு மட்டும்தான், காரணம் கற்பு என்ற ஒரு சொல்.

அருமையான எழுத்துத்திர*ண் குவிந்து கிடக்கும் உங்களை பாராட்ட நான் சின்னவள். இருப்பினும் ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறேன்.

பாராட்டுகள். தொடருங்கள் உங்கள் அடுத்த கதைகளை.

arun
01-09-2007, 02:25 AM
உண்மை நிலையை அழகாக கோர்த்து கொடுத்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

சிவா.ஜி
01-09-2007, 04:31 AM
மிக உண்மையான பிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் இருக்கும் ஓவியா...முகம் தெரியா அந்த நன்பர்களுக்கான உங்கள் பிரார்த்தனை நிச்சயம் பலன் தருமென்று மனதார நம்புகிறேன்.பாராட்டுக்களுக்கு நன்றி.

சிவா.ஜி
01-09-2007, 04:32 AM
உண்மை நிலையை அழகாக கோர்த்து கொடுத்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

உண்மைகள் பல சமயம் கற்பனையை விஞ்சி விடும் அருண்.பாராட்டுக்கு நன்றிகள்.

lolluvathiyar
01-09-2007, 06:28 AM
கதை அருமை சிவா ஜி
என்ன செய்வது ஆசை, நம்பி மோசம் போக வைகிறது.
உள்ளூரில் ஓரளவுக்கு சம்பாரிக்கரவனை கட்டாமல் வெளியூரில் கை நிரைய சம்பாரிக்கரவனை நம்பி விசாரிக்காமல் கட்டி அவஸ்தை நிரைய பேர் அடைகிறார்கள்

சிவா.ஜி
01-09-2007, 07:14 AM
நன்றி வாத்தியாரே..நீங்க சொல்றது ரொம்பச்சரி. வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தில் நிறைய பேர் ஏமாந்து தங்கள் மகள்களைக் கட்டிக்கொடுத்து விட்டு,பின் அவர்கள் ஒரு வேலைக்காரியாய் நடத்தப்படும் கொடுமைகளும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.என்ன செய்வது...உள்ளூர் சரக்குக்கு விலையில்லையே...?

ஓவியா
01-09-2007, 10:28 AM
மிக உண்மையான பிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் இருக்கும் ஓவியா...முகம் தெரியா அந்த நன்பர்களுக்கான உங்கள் பிரார்த்தனை நிச்சயம் பலன் தருமென்று மனதார நம்புகிறேன்.பாராட்டுக்களுக்கு நன்றி.

ஓவியா: அப்படியா!! :icon_dance::icon_dance:

பென்சு, ஆதவா, பிரதீப்: :violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::D:D:D:D

MURALINITHISH
22-09-2008, 09:47 AM
இப்படிதான் நாட்டில் நல்லவனுக்கு கிடைக்கும் மரியாதையை விட கெட்டவர்களுக்கு கிடைப்பது அதிகம் ஏன் பெண்ணே இன்னுமா உன் மனது நல்லவனை ஏற்க மறுக்கிறது இந்த நல்ல நண்பனின் மனதிற்க்காவது நீ புது வாழ்க்கை தொடருவாயா

தொடரவேண்டும் என்றா அன்பு கட்டளையுடன் உன் நண்பர்கள்

சிவா.ஜி
22-09-2008, 10:39 AM
இந்தக்கதையை மேலெழுப்பிய முரளிக்கு மிக்க நன்றி. நன்பர்கள் அனைவரின் விருப்பப்படி இப்போது என் தோழி என் நன்பனை ஏற்றுக்கொண்டு நலமாக வாழ்கிறாள். காலம்தாழ்த்திய முடிவுதானென்றாலும், இப்போதாவது இந்த நல்லமுடிவை எடுத்தாளே என்று மகிழ்கிறேன். அவளுடைய தந்தை இறந்துவிட்டார். தாயும், இப்போது அவர்களுடன்தான் இருக்கிறார். ஒரு குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார்கள். அதுவும் அழகாக வளர்கிறதாம். இந்தமுறை மும்பை போகாததால் அவர்களை சந்திக்கமுடியவில்லை. நன்பன் மூலம் அறிந்துகொண்டேன். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை நம் உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றி முரளி.

அக்னி
22-09-2008, 11:36 AM
நண்பர்களது பிரார்த்தனை பலித்துவிட்டது.

ஆமா...

ஓவியா: அப்படியா!! :icon_dance::icon_dance:

பென்சு, ஆதவா, பிரதீப்: :violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::D:D:D:D
ஏன் இந்தப் பதிவு என்று புரியல்லீங்க...

*****

நல்லதொரு சமூகநிகழ்வுக் கதையை, மீள எழுப்பிய முரளி அவர்களுக்கு நன்றி.

*****

இன்றைய நிலையில் உண்மைக் கதையாகிவிட்டது.
இணைந்துகொண்டவர்களுக்கு வாழ்த்துகள்.

*****

ஒரு இனிமையான பாடல் வரிகள் நினைவில்...
“இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று”

பிள்ளைகளின் இல்லற வாழ்வைத் தீர்மானிக்கும் பெற்றோர்,
வரட்டு கௌரவம், அந்தஸ்து, சாதி என்பவற்றை மட்டுமே முன்னிலைப்படுத்துவது,
இவ்வாறான விபரீதங்களையும் பெற்றுத் தரும் என்பதற்கு இந்த(உண்மை)க் கதை ஓர் எடுத்துக்காட்டு.

இது எமது சமுதாயச் சாபம் என்றுகூடச் சொல்லலாம்.

பெற்றோர், தம் பிள்ளைகளுக்கான இணையைப் பற்றி தீர அறிந்து கொள்ள வேண்டும்.
இது பெற்றோரின் தலையாய கடமையும் கூட.

நல்ல வேலையிலுள்ள வசதி படைத்த ஒரு மாப்பிள்ளை, அல்லது அவரது குடும்பம்,
பெண் வீட்டாரிடம் பெரும் சீதனத்தைக் கேட்கையிலேயே,
அங்கு குணத்தை விட பணத்தின் எதிர்பார்ப்பே அதிகமாகவுள்ளது என்பது வெளிப்பாடு.
அப்படியிருக்கையில், அதனை விளங்கிக் கொள்ளும் தன்மை ஏன் நம்மிடையே இல்லாமல் உள்ளது?
இதுவும் நமது சாபமோ?

வாழ்க்கையைக் கேட்பவர்கள், உதாசீனம் செய்யப்படுகின்றார்கள்.
வாழ்க்கைக்காக விலையை நிர்ணயிப்பவர்கள், கொண்டாடப்படுகின்றார்கள்.
களையப்படவேண்டிய மடமை.

சிவா.ஜி அவர்களின் நண்பர்களின் வாழ்க்கை,
இவ்வளவு காலத்திற்கு முடங்கியிருந்ததற்கு என்ன காரணம்?

பெற்றோர் நல்லதை நினைத்துச் செய்தார்கள். தவறாகிவிட்டது.
அப்படியே விட்டுவிடுவதா?

சமுதாயத்தின் தேவையற்ற கட்டுகளுக்குள்,
ஏன் கட்டுப்பட்டு வாழ்க்கையைத் தொலைக்கவேண்டும்?

உடை கிழிந்துவிட்டால் மாற்றிக்கொள்ளும் நாம்,
வாழ்க்கையின் கிழியல்களுக்குத் தையல் கூடப் போட மறுப்பதேன்?

இவர்களின் வாழ்க்கை,
வாழ்க்கையில் முடிவுகளை எடுக்கப் பின்னிற்கும் ஒவ்வொருவருக்கும்,
ஒரு உந்துசக்தியாக அமையட்டும்.

பாராட்டுக்கள் சிவா.ஜி...

ஐரேனிபுரம் பால்ராசய்யா
24-09-2008, 11:20 AM
வித்யா மலர்கள் என்று நினைத்து
முட்களில் நடந்தவள்,
முட்களில் நடந்ததால்
மனம் கிழிந்து போனவள்!
அந்த பேதை பெண்ணை
வாழ வைத்த சதீஷ்சிடம்
நிராகரிப்பின் வலி
பாரமாகி கிடந்தாலும்
காதல்
அப்படியே இருந்தது
பாராட்டுக்குரியது.
வாழ்துக்கள் சிவா.

சிவா.ஜி
25-09-2008, 03:55 AM
அக்னியின் பின்னூட்டம் சொல்லும் கருத்துகள் அனைத்தும் மிக மிக ஆழமாக சிந்திக்க வேண்டியவை. சில பெற்றோர்கள் இப்படித்தான் அந்தஸ்து பார்த்து தன் மகளின், அல்லது மகனின் வாழ்க்கையை குழப்பமாக்கிவிடுகிறார்கள்.

திறனாய்வு புலி என்பது மீண்டும் அழுத்தமாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறது இந்த பதிவில். நன்றி அக்னி.

சிவா.ஜி
25-09-2008, 03:56 AM
மிக்க நன்றி பால் ராசய்யா அவர்களே.

MURALINITHISH
26-09-2008, 08:08 AM
காலம்தாழ்த்திய முடிவுதானென்றாலும், இப்போதாவது இந்த நல்லமுடிவை எடுத்தாளே என்று மகிழ்கிறேன். .

காலம் தாழ்த்தினாலும் காதலுக்கு எப்போதும் தாழ்வில்லை அந்த நண்பனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்

shibly591
26-09-2008, 09:39 AM
கண்களில் இருந்து வழியும் கண்ணீரை துடைக்க மனமில்லாமல் அழுதுகொண்டிருக்கிறேன்...சிவா அண்ணா...

உலகம் எத்தனை விநோதமானது....

அவளுக்கான எனது பிரார்த்தனைகள் தொடரும்..

மனசை பாதித்துவிட்ட சம்பவம் இது..இன்னும் நாலு நாளைக்கு எனக்கு தூக்கம் வராது...

சிவா.ஜி
27-09-2008, 05:44 PM
உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி ஷிப்லி. மென்மையான உள்ளம் உங்களுடையது. கவி பிரசவிக்கும் உள்ளமல்லவா....?

Keelai Naadaan
27-09-2008, 07:02 PM
எந்த பெற்றோரும் தன் மகளின் வாழ்வு கெட நினைக்க மாட்டார்கள். சில சமயங்களில் நல்லவர்களூம் தவறான முடிவு எடுப்பது உண்டு.
புத்தியுள்ள மனிதரெல்லாம்.... என்ற கண்ணதாசனின் பாடல் நினைவுக்கு வருகிறது.
தவறுதல் மனித இயல்பே அல்லவா? சரி. தெரியாமல் தவறு நடந்துவிட்டது...!
நல்வாழ்வுக்கு வேறு வழியே இல்லையென்றால் மரபுகளை மீறி மறுமணம் செய்வதில் என்ன தவறு?
மரபுகளும், பழக்க வழக்கங்களும் மனிதர்கள் நல்லபடி வாழவே ஏற்படுத்தப்பட்டன. மனதுக்குள் குமைந்து வருந்துவதற்கல்லவே..?

நல்ல கதைக்கு நன்றிகள் நண்பரே.

சிவா.ஜி
28-09-2008, 03:53 AM
நிச்சயமாக எந்தப் பெற்றோரும் தெரிந்து தவறிழைப்பதில்லை. ஆனால் சில வேண்டாத பிடிவாதத்தாலும், சில அந்தஸ்து, சாதி என்ற பாகுபாட்டினாலும், மகளின்/மகனின் விருப்பம் அறியாது கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். நன்றாக அமைந்தால் நல்லது. அதுவே வித்யாவுக்கு நேர்ந்ததைப்போல ஆகிவிட்டால் அனைவருக்குமே வருத்தம் தானே.

தங்கள் பின்னூட்டக் கருத்துக்கு நன்றி கீழைநாடான்.

சுகந்தப்ரீதன்
28-09-2008, 09:05 AM
எத்தனை எத்தனை வகையான மனிதர்கள்.. இந்த பூமியிலே.. நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..!! மின்னுவதெல்லாம் பொன்னல்ல.. மின்னாதாதெல்லாம் மண்ணுமல்ல.. என்ற கருத்தை வலியுறுத்தும் கதை.. இல்லை இல்லை உண்மை..!!

வாழ்த்துக்கள் சிவா அண்ணா.. எங்களுடன் சம்பவத்தை பகிர்ந்துக்கொண்ட உங்களுக்கும்.. வாழ்வை தங்கள் தோழிக்கு பகிர்ந்தளித்த உங்கள் நண்பருக்கும்..!!

சிவா.ஜி
28-09-2008, 09:20 AM
மிகச் சரியான கருத்து சுபி. எதையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. உங்கள் வாழ்த்துகளுக்கு என்னுடைய சார்பாகவும், என் நன்பனின் சார்பாகவும் மனம் நிறைந்த நன்றிகள்.