PDA

View Full Version : குளிர்நாட்டுக் காதல்?(சிறுகதை)



சிவா.ஜி
16-08-2007, 12:13 PM
புதுடெல்லியில் விமானம் ஏறும் போது இப்படி பேய்குளிர் இருக்குமென்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.கஜகஸ்தானின் முக்கிய நகரமான அல்மாட்டியில் விமானம் தரையிறங்கியதும்..விமானத்திலிருந்து அனைவரும் இறங்கி வெளியே வந்தோம்.கடுமையான குளிர் முகத்திலைறந்தது.ஓட்டமாக ஓடி வந்து கட்டிடத்துக்குள் நுழைந்ததும்தான் கை கால்கள் ஆடாமல் அமைதியானது.
பின்னர் எனக்கு வேலை கொடுத்த நிறுவனத்தின் ஊழியர்கள் வந்தது,அங்கிருந்து மேலும் மூன்றரை மணி நேர பயணத்தில் உரால்ஸ்க் என்ற இடத்திற்கு வந்து..இருப்பிடம் சேர்ந்தது எல்லாம் இந்த கதைக்கு முக்கியமில்லை.

முன்னாள் சோவியத் யூணியனிலிருந்து பிரிந்த இந்த நாடு இப்போது பொருளாதாரத்தில் நொண்டியடித்துக்கொண்டிருக்கிறது. இருந்தும்..நீண்ட காலத்துக்குப் பிறகு கிடைத்த சுதந்திரத்தை இந்த நாட்டு மக்கள் ஆசை தீர அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.லட்டு லட்டாய் பெண்கள்.ஆட்டோகிராப் படத்தில் சொல்லப்பட்ட ஒரு வசனத்தைப் போல "ச்செவச்செவன்னு திரியறாங்களே..இவிங்கள பெத்தாங்களா செஞ்சாங்களா" என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.நடனத்திலும் விருந்து கேளிக்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட எனக்கு அவர்களின் கலாச்சாரம் மிகவும் பிடித்துப்போனதில் எந்த ஆச்சரியமுமில்லை.அங்கிருந்த ஒரு இரவு விடுதிக்கு எல்லா சனிக்கிழமைகளிலும் நன்பர்களோடு போவது வழக்கமாகி விட்டது. இயல்பாகவே நன்றாக நடனமாடத் தெரிந்த என்னை..நடனத்தை மிகவும் விரும்பும் அந்த செவத்த குட்டிகளுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. அதில் எப்போதும் என்னுடன் நடனமாடும் அலியா எனக்கு நல்ல இணையாகிவிட்டாள். முதல் மூன்று மாதங்கள் வெறும் ஆட்டம் கொண்டாட்டமென்றே போய்விட்டது.

ஒருநாள் அலியா என்னிடம் "கண்ணன் நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோமா' என்று கேட்டதும் எனக்கு பகீரென்றது. அவர்களுக்கு இந்த ஒப்பந்த வாழ்க்கைமுறை சகஜமென்றாலும் ஒரு குடும்ப வாழ்க்கையில் பழக்கப்பட்ட எனக்கு இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னைப் பற்றி விளக்கிச் சொன்னேன்."அலியா நீ நினைப்பதைப்போல அல்ல..எங்கள் வாழ்க்கை முறை...எனக்கு ஒரு அழகான மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள்..அவர்களின் சந்தோஷமான எதிர்காலத்துக்காகத்தான் நாங்கள் இப்படி நாடு விட்டு வந்து பணம் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறோம். நீ சொன்னதை என்னால் நினைத்துக் கூட பார்கக முடியவில்லை மன்னித்துக்கொள்" என்றதும் அவள் முகம் வாடிவிட்டது.ஒண்றும் சொல்லாமல் எழுந்து போய்விட்டாள்.

மார்ச் 8.....என் வாழ்க்கையை மாற்றி அமைத்த நாள். சர்வதேச மகளிர் தினமான அன்று அங்குள்ள பெண்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.அன்று வழக்கம்போல் இரவு விடுதியில் அவளை சந்தித்த போது எதுவுமே நடக்காத மாதிரி இயல்பாய் என்னுடன் சேர்ந்து நடனமாடினாள். நள்ளிரவு 12 ஆவதற்கு 15 நிமிடத்துக்கு முன்னால்..மெள்ள என் காதருகே கிசுகிசுத்தாள்"கண்ணன் கொஞ்சம் வெளியே போய்விட்டு வரலாமா.." ஆட்டத்திற்கு நடுவே இளைப்பாறிக்கொள்ள அப்படி வெளியே போவது வழக்கமென்பதால் நானும் அவளுடன் போனேன்.வெளியே வந்ததும்"கண்ணன் இப்போது நீங்கள் என்னுடன் என் வீட்டுக்கு வருகிறீர்கள்...மகளிர் தினத்தை வரவேற்கும் வகையில் என்னுடைய பெற்றோரும் சகோதரியும் நள்ளிரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.உங்களை கட்டாயம் அழைத்து வருவதாக சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்..புறப்படுங்கள்" என்று என் சம்மதத்தையோ,மறுப்பையோ எதிர்பார்க்காதவளாய்'டாக்சி" என்று அலறி அழைத்து என்னையும் அதனுள்ளே தள்ளி தானும் ஏறிக்கொண்டாள்.

"அலியா... எனக்கு இப்படிப்பட்ட விருந்துகளில் விருப்பமில்லை ஏன் என்னைக் கட்டாயப்படுத்துகிறாய்"என்றதற்கு "கண்ணன் நீங்கள் நினைப்பதுபோல எந்த தவறும் இதில் இல்லை.என் பெற்றோர்கள் உங்களை சந்திக்க வேண்டுமென்று சொன்னார்கள் அதனால்தான் உங்களை அழைத்துப்போகிறேன் மறுக்காதீர்கள். அதுவுமில்லாமல் அவர்கள் இதுவரை எந்த இந்தியரையும் அருகிலிருந்து பார்த்ததில்லை...உங்களுக்கே தெரியும்தானே நாங்கள் இந்தியர் மேல் எத்தனை மரியாதை வைத்திருக்கிறோமென்று" என்று சொன்னதும் வேறு எதுவும் பேசத்தோன்றாமல் அமர்ந்துவிட்டேன்.இந்த இடத்தில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். சோவியத் யூனியனாக இருந்த போதிலிருந்து இந்த மக்களுக்கு இந்தியாவோடு மிக நல்ல அபிப்ராயமும் ஒரு பாசமும் இருக்கிறது.இப்போதும் ராஜ்கபூரின் படத்தை சிலாகித்து பேசுபவர்கள் நிறைய உண்டு.அதுவுமல்லாமல் அவர்களின் நாட்டு தொலைக்காட்சியில் வாரமிருமுறை இந்தி படங்கள் கசாக் மொழியில் சப்-டைட்டில் கொடுத்து ஒளிபரப்பப்படுகிறது.அதனாலேயே அங்கிருக்கும் பெண்களுக்கு இந்தியரென்றால் மிகவும் பிரியம்.

விருந்து தடபுடலாக இல்லாமல், அவர்களின் குடும்ப உறுப்பினராக அலியாவின் அப்பா,அம்மா,மற்றும் அவள் தங்கை மட்டுமே இருந்தார்கள்.மிக நன்றாக உபசரித்தார்கள். எல்லா உணவு வகைகளையும் கரண்டியால் மட்டுமே சாப்பிடும் அவர்கள் விருந்தாளிகளுக்காக தயாரிக்கப்படும் பிரத்தியேகமான உணவான"பிஸ்பர்மாக்" என்ற உணவை மட்டும் கைகளால் உண்பார்கள்.அந்த சொல்லின் அர்த்தமே "கைகளால் உண்பது'...என்பதாகும்.உருளைக் கிழங்கும் குதிரை மாமிசமும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு உணவுவகை.அதை சாப்பிட்ட பிறகுதான் அது குதிரை மாமிசமென்று சொன்னார்கள் பாவிகள்.பரவாயில்லை சம்பிரதாயத்துக்காக குடித்த "வோட்கா"அந்த ருசியையெல்லாம் உணரவிடவில்லை.ஆனால் கொடுமை என்னவென்றால் அவர்கள் சம்பிரதாயமே ஒவ்வொரு கை உணவு உண்பதற்கு முன்னும் ஒரு சிறிய கோப்பை வோட்காவை அருந்த வேண்டுமென்பதுதான்.சாப்பிட்டு முடிப்பதற்குள்...எனக்கு தட்டாமாலை சுற்ற ஆரம்பித்துவிட்டது.நான் திரும்ப என் இருப்பிடத்துக்கு போக வேண்டுமென்று சொல்லவந்ததைக் கூட சொல்லத் திராணியில்லாமல் படுத்துவிட்டேன்.

எப்போது தெளிந்தேன் என்ற நினைவில்லாமல் இரண்டு மூன்றுமுறை தூக்கத்திலிருந்து எழுந்து பின் மீண்டும் உறங்கியிருக்கிறேன். சரியாக தெளிந்தபின் பார்த்தால்..மின்னல் தாக்கியதைப்போல அதிர்ச்சி. என்னருகே அலியா.......தலைபாரம் தாங்க முடியாமல் இரண்டு கைகளாலும் நெற்றியை அழுத்தி பிடித்துக்கொண்டு கண்ணை மூடினால்...காற்றில் கோட்டுச்சித்திரங்களாய் என்னெனவோ வந்து போனது.அவசரமாய் எழுந்து என் இருப்பிடம் வந்து சேர்ந்தேன். மிகச் சுத்தமான அதிர்ச்சியிலிருந்தேன்.யோசிக்கத் திராணியில்லாமல் சட்டையை மாட்டிக்கொண்டு..கடைக்குப் போய் ஒரு வோட்கா பாட்டிலை வாங்கிவந்து..கடகடவென பாதி பாட்டிலை வாயில் கவிழ்த்துக்கொண்டதும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் மறந்து உறங்கிவிட்டேன். இருட்டியபிறகுதான் கண்விழித்தேன். பசிப்பது போல ஒரு உணர்வு இருந்தாலும் சாப்பிட பிடிக்காமல்...என் நிலையை யோசிக்கத்தொடங்கினேன். என் மீது எனக்கே வெறுப்பாகிவிட்டது.ஏன்...ஏன் என்று என்னையே கேட்டுக்கொண்டதில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.மீதமிருந்த வோட்காவை குடித்துவிட்டு உறங்கிவிட்டேன்.

காலை விடிந்ததும் கொஞ்சம் தெளிவு கிடைத்த மாதிரி இருந்தது.ஆனது ஆகிவிட்டது. இதில் என் தவறை விட, எனக்குள்ளே போன வோட்காவின் தவறுதான் அதிகம் என்று ஒரு சப்பைக்கட்டு சமாதானம் சொல்லிக்கொண்டு..வேலையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.
அந்த வாரம் முழுவதும் அலியாவை நான் பார்க்கவே இல்லை. வழக்கமாய் சனி இரவுகளில்தான் பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த சனியன்று போகப்போவதில்லையென்று முடிவுடன் அறையிலேயே இருந்தேன். என்னுடன் பணிபுரியும் நன்பர்கள், வழக்கத்தைப் போலவே இன்றும் என்னை அழைத்துச்செல்ல வந்துவிட்டார்கள். நான் வருவதாயில்லை என்று எத்தனையோ சொல்லியும் ரொம்பவும் கட்டாயப்படுத்தி கூட்டிப்போய்விட்டார்கள்.

அன்றுநிகழ்ந்த அந்த அலியாவுடனான சந்திப்புத்தான் எங்கள் இருவரையும் இணந்து வாழ கட்டாயப்படுத்திவிட்டது.மனைவி,குழந்தை என்று எல்லாம் சொல்லியும் அவள் கேட்பதாயில்லை.கடைசியில் "உனக்கு இருபது எனக்கு நாப்பது எப்படி சரியாகுமென்று" அந்த அஸ்திரத்தையும் தொடுத்துப்பார்த்துவிட்டேன்.நான் விரும்புவது உங்கள் இதயத்தைத்தான் உங்கள் வயதையல்ல என்று செண்டிமென்டாக பேசி என்னை பலவீனப்படுத்திவிட்டாள்.அதற்குபிறகு இருவரும் வசிக்க தனியாக வீடு பார்த்து,அலுவலகம் முடிந்து நேராக வீடு வந்து..என்று வாழ ஆரம்பித்து விட்டோம். கொஞ்ச நாள் பழகினால் வீட்டில் வளரும் நாய்,பூனையிடத்திலேயே ஒரு பிணைப்பு வரும்போது..ஒரு பெண் மீதா வராது...வந்துவிட்டது.வீட்டுக்கு தொலைபேசுவது குறைந்துவிட்டது.இங்கு செய்யும் செலவை சரிகட்ட மனைவியிடம் பொய் என்று என் பாதை மிகத்தவறான திசையில் போவதை உணராமல்...மந்திரத்துக்கு கட்டுப்பட்டவனைப்போல் என் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன்.இருவருக்குள்ளும் ஈடுபாடு அதிகமாகிவிட்டிருந்தது.

இந்த சமயத்தில் ஒருநாள் ஒரு உணவு விடுதியில் உணவருந்திக்கொண்டிருந்த போது,வேறு ஏதோ நிறுவனத்துக்கு வேலைக்கு வந்திருந்த யாரோ இரண்டு தமிழர்கள் எங்கள் மேசைக்கு அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது. அதில் ஒருவன் என் நிலையில் இருக்கிறானென்பதும், அவனுக்கு அப்படி செய்வது சரியல்ல என்று இன்னொருவன் சொல்லிக்கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.அந்த இன்னொருவன் பேசியது என்னை சவுக்கால் அடிப்பதைப் போல் இருந்தது
"ராஜேஷ் உனக்கு பிடித்த மாதிரி இவள் இருக்கிறாள்,உன் தேவையையெல்லாம் சரியாக உணர்ந்து செய்கிறாள்,அதனால் இவளை நீ மிகவும் விரும்புவதாகச் சொல்கிறாயே...உன் மனைவியை நினைத்துப்பார். கடல் கடந்து போயிருக்கிற கணவன் கை நிறைய பொருளோடு வருவானென்றா அவள் காத்திருக்கிறாள்.உன்னை மட்டுமே எதிர்பார்த்து உனக்காக காத்திருக்கும் அவளுக்கும்,அவளை விரும்புவதாய் சொல்லும் யாரோ ஒருவன் கிடைத்து,அவளும் அதில் மயங்கி,நீ இங்கு செய்வதை அவளும் அங்கு செய்தால் உன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா...?"முகத்தில் அறைந்ததைப்போல இருந்தது அவன் கேட்டது.என்னால் அலியாவிடம் முன்பைப்போல இருக்க முடியாமல்,விட்டு விலகவும் முடியாமல் ஒரு அவஸ்தையில் இருந்த போதுதான்..ஒருநாள் அலியா சொன்னாள்.

"கண்ணன் சில நாட்களாக நானும் கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்.அடிக்கடி உங்கள் மனைவியின் புகைப்படத்தையும்,பிள்ளைகளின் புகைப்படங்களையும் பார்த்து கண்ணீர் விடுகிறீர்கள்.என்னால் உங்களை புரிந்து கொள்ள முடிகிறது.உங்கள் பணி முடிய இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதுவரை நாம் சேர்ந்திருந்தால் இன்னும் நம் அந்நியோண்யம் அதிகமாகிவிடும்.பிறகு நீங்கள் ஊர் திரும்பிப் போனாலும் முன்பைப்போல உங்கள் மனைவியிடம் அதே அளவு நேசத்துடன் இருக்க முடியாது. அந்த நிலை உங்களுக்கு வரவேண்டாம்.நாம் பிரிந்துவிடுவோம்.முடிந்தால் இந்த வேலையை விட்டுவிட்டு திரும்பப் போய்விடுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லது"என்று சொல்லிவிட்டு ஏற்கனவே முடிவு செய்திருந்தவள் போல அவளுடைய எல்லா உடைமைகளையும் எடுத்துவைத்திருந்தவள்,அனைத்தையும் எடுத்துக்கொண்டு என் முகத்தைக்கூட திரும்பிப்பார்க்காமல் போய்விட்டாள். அவள் சொன்னதிலிருந்த உண்மை சுட்டது. அடுத்தநாளே ராஜினாமா எழுதிக்கொடுத்துவிட்டேன்.

திரும்பவும் "உரால்ஸ்க்" விமான நிலயத்தில் நடுக்கத்தோடு விமானத்துக்காக காத்திருந்தேன். ஆனால் இந்த முறை நடுக்கம் குளிரால் அல்ல......

இணைய நண்பன்
16-08-2007, 12:30 PM
நல்ல சிறுகதை.நிஜமான நிகழ்வுகளை அழகான கற்பனையில் வடித்திருக்கிறீர்கள்.

சிவா.ஜி
16-08-2007, 12:38 PM
கருத்துக்கு நன்றி இக்ராம்

வெண்தாமரை
16-08-2007, 01:02 PM
கதை நன்றாக இருந்தது..

உண்மையை உறைத்தது..

சிவா.ஜி
16-08-2007, 01:04 PM
உரைத்த உண்மை உறைத்தால் சில தவறிழைத்த உள்ளங்கள் திருந்தும்.நன்றி வெண்தாமரை.

அன்புரசிகன்
16-08-2007, 04:07 PM
அழகாக கதையை கொண்டு சென்று உண்மையையும் அப்படியே உரைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்....

எம்மை மட்டும் யோசிக்கும் நாம் ஒரு கணம் உற்றவளுக்காகவும் நினைத்தால் தெளிந்துவிடுவோம்....

சிவா.ஜி
17-08-2007, 04:23 AM
நன்றி அன்புரசிகன்.இந்த கதையில் நான் சொல்லவந்ததே இந்த கருத்துதான்.தவறை செய்துவிட்டு அதற்கு ஆயிரம் சப்பைக்கட்டுகள் கட்டினாலும்...அது தவறுதான்.ஆனால் திருந்தவேண்டும் அதுதான் தேவை.

இளசு
18-08-2007, 09:52 PM
பாராட்டுகள் சிவா..

உன்னை மற்றவர் எப்படி நடத்தவேண்டும் என விரும்புகிறாயோ
அப்படியே நீ மற்றவர்களை நடத்தவேண்டும்..

இந்த சகமனித மரியாதை நடத்தைக்குப் பிறகுதான்எல்லாமே − அன்பு, பாசம், நட்பு, உறவு எல்லாமே!


உன் வாழ்க்கைத்துணை எப்படி இருக்கவேண்டும் என நினைக்கிறாயோ
அப்படி நீ நிச்சயம் இருக்கவேண்டும்..
இந்த அடிப்படை மரியாதையற்ற எந்த உறவும்
அஸ்திவாரம் இல்லாத கட்டடமே!


பல காரணங்களுக்காக பிரிந்து வாழு(டு)ம் தம்பதியருக்கான
காலத்துக்கேற்ற நல்ல கதை...

மீண்டும் பாராட்டுகள்..


(முதல் இரு பத்திகளில் சுஜாதா நடை அளவுக்கு ஒரு ஒயில்..
அடுத்தடுத்து வோட்கா அடித்ததுபோல் அந்த நடை ம(ய)ங்கி விட்டதே..)

சிவா.ஜி
19-08-2007, 04:34 AM
உண்மைதான் இளசு...தன்னைப்போலவே தன் இணையையும் மதித்து,உணர்வுகளை உணர்ந்து வாழும் மனிதரின் வாழ்க்கை மரியாதைக்குட்பட்டது.
நீங்கள் சொன்ன் பிறகுதான் மீண்டும் படித்துப்பார்த்தேன்....சரிதான்...நடையில் ஒரு தொய்வு வந்து விட்டது.மிகவும் நீட்டாமல்,சொல்லவந்ததை சுருங்கச்சொல்ல வேண்டுமென்பதாலேயே அதிகமாக நடையில் கவனம் செலுத்தவில்லை.போகப்போக சுருங்கச் சொல்லவும்,அதை சுவாரசியமாகச் சொல்லவும் பழகிவிடுமென்ற நம்பிக்கை இருக்கிறது.அருமையான பின்னூட்டம் ஒரு 10 கோப்பை பூஸ்ட்(வோட்கா அல்ல) சாப்பிட்டது போல உள்ளது.மனம் நிறைந்த நன்றி இளசு.

அமரன்
19-08-2007, 06:23 PM
சிவா உங்கள் கதைகளில் கனமும் தரமும் விலைவாசிபோல ஏறிகொண்டே போகிறது. நிஜத்தில் சில கண்ணன்களையும் ராஜேஷ்களையும் பார்த்திருகிறேன். என்ன காரணம் சொன்னாலும் ஏற்கமுடியாத தவறு. கற்பு என்பது நெறி பிறழாது இருப்பது. இதில் ஆண் பெண் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. கண்ணனை விட அலியா கற்பில் உயர்ந்துள்ளாள். தவறு செய்யத்தூண்டினாலும் தடம்மாறிய ரயிலை தடம்புரளாது செய்த அவள்மூலம் பெண்மைக்கே உரிய கூர்மையான பார்வையும் தூர நோக்குப் பார்வையும் கூறி பெண்மைய பெருமைப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள். இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது. சந்தர்ப்பம் கிடைத்தும் கோடுதாண்டாது இருப்பவன்/ள் கற்புடையவன்/ள்.

இளசு
19-08-2007, 08:46 PM
. சந்தர்ப்பம் கிடைத்தும் கோடுதாண்டாது இருப்பவன்/ள் கற்புடையவன்/ள்.



உண்மைதான் அமரா..
இல்லாதபோது உண்ணாதிருப்பது பட்டினி..
கிடைத்தும் தவிர்ப்பதே விரதம்..

சிவா.ஜி
20-08-2007, 04:42 AM
இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது. சந்தர்ப்பம் கிடைத்தும் கோடுதாண்டாது இருப்பவன்/ள் கற்புடையவன்/ள்.

அமரன் அற்புதம்...மிகப்பெரிய சத்தியம் இது. மனதுக்குள் வக்கிரங்களை வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்காததால் நல்லவர்களாய் உலவும் எத்தனையோ அழுக்கு உள்ளம் கொண்டோர் இங்கு உண்டு.நீங்கள் சொல்வதுபோல் சந்தர்ப்பம் கிடைத்தும் அதை சாதகமாக்கி கொள்ளாதவர் மிகச்சிறந்தவர். மிக்க நன்றி அமரன்.

ஓவியா
02-09-2007, 12:52 AM
உண்மையை அப்படியே கதையில் எழுதியுள்ளீர்கள், இது அங்கு மட்டுமல்ல, எல்லா நாட்டிலும் குவிந்திருக்கின்றன. பாராட்டுக்கள்.


இந்தியாவிலிருந்து மலேசியாவிற்க்கு வரும் (சில) நம்ப மக்களும் இதே லிஸ்டில்தான் இருக்கின்றனர், பொதுவாகவே மலேசியா பணிப்பெண்கள் கொஞ்சம் ஸ்டைலா, மார்டனா, அழகாக, இங்கிலிபீசில் பணத்துடன் இருப்பார்கள், நம்ப பசங்க பணாத்தையெல்லாம் அம்மினிகளுக்கு தர்மம் பன்னுவதிலே செலவழிப்பார்கள். காரணம் மலேசியா பெண்களை கட்டினால் பாஸ்போர் கிடைக்கும் என்று!!!! இந்த பெண்களோ லோகல் காய்ஸதா கட்டிக்குவாங்க, ஆனால் இதுபோல் பசங்ககூட ஜாலியா சுத்துவாங்க. நம்ப பசங்களை பாக்கவே பரிதாபமாக இருக்கும். கோவில்களில் அவர்க்ளை கண்டாலே எனக்கு ஒரே ஆத்திரம்தான் வரும். அசடுகள் என்று சிரித்து சென்றுவிடுவேன். :lachen001::lachen001:

சிவா.ஜி
02-09-2007, 04:16 AM
என்ன செய்வது ஓவியா இவர்களுக்கு வெகுதூரத்தில் இருக்கிறோம்,யாரும் நம்மை கவனிக்கவில்லை என்ற தைரியத்தில் இப்படி தவறுகள் செய்கிறார்கள்.மனசாட்சி என்ற ஒரு காவலதிகாரி இவர்களைக் கண்கானித்துக்கொண்டிருப்பது புரியாமலேயே.அவர்களாகவே சுய கட்டுப்பாடு கொண்டாலொழிய வேறு மார்க்கமில்லை.நன்றி சகோதரி.

பூமகள்
02-09-2007, 05:33 AM
முக்கியமான கற்பு பற்றிய கருத்தைக் கொண்டு வழங்கிய உங்கள் சிறு கதை அருமை சிவா அண்ணா...!!
தூர தேசத்தில் தொடும் தூரத்தில் தேவதை வந்து நின்றாலும் தர்மபத்தினி நினைவு ஒரு தரம் வந்தால் வேறு பெண் இடம் மனமும் நாடாது.. தவறும் நேராது.
ஆண்களின் ஆசையை தவறாக பயன்படுத்தும் அது போன்ற பெண்கள் ஏராளம் அங்கே. தவறு செய்பவர் எங்கிருந்தாலும் செய்வார். மனசாட்சிக்கு கட்டுப்படுபவன் எங்கிருந்தாலும் சரியாய் நடப்பார்.
அதுவும் வெளி நாட்டு வாழ் தமிழர்கள் இன்னும் நம் கலாச்சாரத்தை அவர்களுக்கு பறைசாற்றும் வகையில் வாழ வேண்டும். தேசத்தின் மானம் அவர்கள் கையில் தான் உள்ளது.
அந்நிய மக்கள் இவர்கள் மூலமே நம் நாட்டினை மதிப்பிடுவர்.
அலியாவிடமும் தவறிருக்கிறது. மணமான ஒருவரை நினைப்பது எவ்வளவு குற்றமான செயல். "மாற்றான் மனைவியை நினைப்பது பாவம்!" என்ற பலமொழி கூட உள்ளதே.
தடம் புரள்வது தவறில்லை. அதிலிருந்து திருந்தி விட்டு மீண்டும் தடம் புரளாமல் இருப்பதே அனைத்திலும் சிறந்தது.
அழகான சிறுகதை. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.:icon_rollout:

சிவா.ஜி
02-09-2007, 07:24 AM
முதலில் பாராட்டுக்கள் பூமகள்...நான் அத்தனை வரிகளில் சொன்ன கதையை..நீங்கள் சில வரிகளில் அடக்கி அருமையான அர்த்தம் உணர்த்திவிட்டீர்கள்.பண்பாடு, கலாச்சாரம்,ஒழுக்கம் என்ற இவையெல்லாம் தேவைப்பட்டபோது எடுத்து அணிந்து கொள்ளும் ஆடையல்ல...அது ஒருவரோடு உடனிருக்க வேண்டும்.மிக அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பூமகள்.

lolluvathiyar
02-09-2007, 09:24 AM
கற்பனை கதைதானே சிவா ஜி, அவ்வாறே இருக்க வேண்டுகிறேன்.

சொந்த ஊரிலேயே தடம் மாறும் அளவுக்கு வாய்புகள் இருக்கும் போது வெளியூரில் மனைவியை பிரிந்தவர்கள் வாய்புகள் தேடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
கதை நன்றாக இருகிறது. முழுக்க நனைந்த பின் முக்காடுக்கு ஏங்குவது தான் விசித்திரமாக இருகிறது


கொஞ்ச நாள் பழகினால் வீட்டில் வளரும் நாய்,பூனையிடத்திலேயே ஒரு பிணைப்பு வரும்போது..ஒரு பெண் மீதா வராது...வந்துவிட்டது.

அழகான உன்மை வரிகள். இதை நொண்டி சாக்கு என்று கொச்சை படுத்தி விடுவோம்

சிவா.ஜி
02-09-2007, 10:04 AM
கொஞ்சம் உண்மையில் கொஞ்சம் கற்பனை கலந்துள்ளது வாத்தியாரே.நான் அந்த நாட்டில் பணி புரிந்த போது உடன் பணிபுரிந்தவர்களை கவனித்ததில்..பாதிப் பேருக்குமேல் இப்படித்தான் இருந்தார்கள்.நானும் இரவு விடுதிகளுக்குப் போவது வழக்கம். அங்கு கண்டவற்றையும்,நான் அறிந்துகொண்ட சிலவற்றையும் சேர்த்தே இதை எழுதினேன்.
முழுதும் நனைந்த பிறகு என்பதில் எனக்கு ஒரு மாற்றுக்கருத்து இருக்கிறது.காரணம் அப்படி முழுதும் நனைந்து அந்த பெண்களையே திருமணம் செய்துகொண்டு அங்கேயே இருந்து விட்டவர்களும் உண்டு.தன் குடும்பம் மறந்து,நாடு மறந்து,வீடு மறந்து முழுதும் நனைந்து தன்னை மூழ்கடித்துக்கொண்டவர்கள் அவர்கள். அதிலிருந்து அவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கும் ஒரு உறவு உண்டு,குடும்பம் உண்டு என்று நினைவுபடுத்தி,அதிலிருந்து மீட்டது என் கற்பனை.எனவே இந்த கதையின் நாயகனைப் பொறுத்தவரை முழுதும் நனையவில்லை.இது என்னுடைய கருத்து மட்டுமே.
சிந்திக்க வைக்கும் உங்கள் பின்னூட்டம் வெகு அருமை.நன்றிகள் வாத்தியார்

தளபதி
02-09-2007, 10:29 AM
குளிர், சனிக்கிழமைகளில் ஆட்டம்பாட்டம், வோட்கா அப்புறம் அலியா. ஹூஹூஹூம்ம்ம்!!!!!!என்ன வாழ்க்கை.??

அலியா பாக்கியமெல்லாம் வேண்டாம், குறைந்த பட்சம் வேட்காவாவது..??!!!

ஆ!ஆ!ஆங்!! என் அம்மணி என் பின்னால் நிற்பது தெரியாமல் எழுதிவிட்டேன். குட்டு ஒன்று விழுந்துவிட்டது.

அப்புறம் சிவா!! இது வெறும் கற்பனை தானே????? நிஜமாலிக்கு இல்லையே!!??

"சும்மா இருக்கட்டுமே!!" என்று ஒரு பிரதி எடுத்து வைத்திருக்கிறேன்.

சிவா.ஜி
02-09-2007, 12:01 PM
சம்பவத்தில் 70 சதவீதம் நிஜம்,நிகழ்வுகள் 100 சதவீதம் நிஜம்....கதாநாயகன் மட்டும் நானில்லை.(உண்மையாவேப்பா...)

ஓவியா
02-09-2007, 12:03 PM
அட அந்த நிஜசந்தான் எங்களுக்கு தெரியுமே!!

இப்ப கதாநாயகன் நீங்களா இல்லையா என்ற குழப்பம் ஆரம்பமாகிவிட்டது!!

இதயம்
02-09-2007, 12:04 PM
சம்பவத்தில் 70 சதவீதம் நிஜம்,நிகழ்வுகள் 100 சதவீதம் நிஜம்....கதாநாயகன் மட்டும் நானில்லை.(உண்மையாவேப்பா...)

எல்லோரும் மறந்திடாம நம்பிடுங்க..! நானும் நம்பிட்டேன்ப்பா..!!:lachen001::lachen001:

இதயம்
02-09-2007, 12:05 PM
குதிரைக்கறியெல்லாம் சாப்பிட்டிருக்கீங்க...! இப்படி நன்றி இல்லாம பேசலாமா..?:music-smiley-008:

சிவா.ஜி
02-09-2007, 12:05 PM
வந்துட்டருய்யா நாரதருக்கு பக்கத்து வீட்டுக்காரரு.....இனிமே நம்ம பாடு அவ்ளோதான்.....கோவிந்தா கோவிந்தா..

இதயம்
02-09-2007, 12:15 PM
வர, வர நம்ம மன்றம் பாவம் பண்ணிட்டு வர்றவங்களுக்கு அந்த பாவத்துக்கு பிராயசித்தம் தேடுற இடமா மாறிக்கிட்டு வருது. மன்னிப்பு கேட்க மன்றத்தில் தனிப்பகுதி தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!

பாவ பகுதி
1. புதிய பாவிகள்
2. பாவிகள் அறிமுகம்
3. சிறு பாவம்.
4. பெரும் பாவம்.
5 மன்னிப்பு கேட்க

இப்படி....

நாராயண..நாராயண...

ஓவியா
02-09-2007, 01:11 PM
வர, வர நம்ம மன்றம் பாவம் பண்ணிட்டு வர்றவங்களுக்கு அந்த பாவத்துக்கு பிராயசித்தம் தேடுற இடமா மாறிக்கிட்டு வருது. மன்னிப்பு கேட்க மன்றத்தில் தனிப்பகுதி தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!

பாவ பகுதி
1. புதிய பாவிகள்
2. பாவிகள் அறிமுகம்
3. சிறு பாவம்.
4. பெரும் பாவம்.
5 மன்னிப்பு கேட்க

இப்படி....

நாராயண..நாராயண...

அஹஹஹ் அஹஹஹ் அஹஹஹ்,

சரி இந்த செக்ஷன் தலைவர் பதவி யாருக்கு கொடுக்கலாம்?? ஒரு ஓட்டேடுப்பு வைங்க*ப்பா!!

சிவா.ஜி
02-09-2007, 01:49 PM
அஹஹஹ் அஹஹஹ் அஹஹஹ்,

சரி இந்த செக்ஷன் தலைவர் பதவி யாருக்கு கொடுக்கலாம்?? ஒரு ஓட்டேடுப்பு வைங்க*ப்பா!!

ஒரு பாதிரியார்தான் இதுக்குப் பொருத்தமானவர்...அப்ப இந்த பதவியை நம்ம மனோஜ்−க்கு கொடுத்துடலாமா

ஓவியா
02-09-2007, 01:56 PM
ஒரு பாதிரியார்தான் இதுக்குப் பொருத்தமானவர்...அப்ப இந்த பதவியை நம்ம மனோஜ்−க்கு கொடுத்துடலாமா

ஆஹா, சாபாபதே என்னாமா யோசிகிறீக. பலே :lachen001:

பாவ மன்னிப்பு சீட்டில் துண்டு போட்டு இடம்பிடித்த
− ஓவியா

தளபதி
02-09-2007, 02:28 PM
குதிரைக்கறியெல்லாம் சாப்பிட்டிருக்கீங்க...! இப்படி நன்றி இல்லாம பேசலாமா..?:music-smiley-008:

அவர் நன்றியைத்தான் அவதாரில் காண்பிக்கிறாரே??அதனாலதான் அவதார்ல கூட குதிரையில போகிறமாதிரி போட்டுயிருக்காரோ??? மெல்ல மெல்ல புரியுது!!

அட நான் சும்மாகாச்சுக்கும் பிரதி எடுத்தது பயன்படும் போல???

samuthraselvam
18-04-2009, 06:09 AM
நம் வாழ்க்கையை வளமாக்க வெளி நாட்டுக்குச் சென்று கணவன் கஷ்டப்பட்டு உழைத்து சம்மாதித்துக் கொண்டு வருவார் என்று அவர் வரும் நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் மனைவியை பற்றிய அக்கறை இல்லாமல், "அப்பா எப்பமா வருவாரு?" என்று தினமும் கேட்கும் குழந்தைகளின் ஆவலைப் பற்றிய அக்கறை இல்லாமல், தடம்புரண்டு போகும் ஆட்களுக்கு இந்த கதை நல்ல எடுத்துக்காட்டு அண்ணா....!

"சந்தர்ப்பம் கிடைக்கும் வரை தான் ராமன். கிடைத்தால் நான் கிருஷ்ணன்..." என்ற பழமொழி இது போன்ற ஆட்கள் தான் இருப்பாங்களோ...!

பாராட்டுக்கள் அண்ணா....!!

ஆதவா
25-04-2009, 06:11 PM
எனக்கு வெளிநாட்டு கதைகளின் அதிக பரிச்சயம் நீங்கள் தான். ஒரு ஆவலின் ஊடாக வாசிப்பு குவிந்து ஈர்த்துவிடும். இதைப் போன்ற நிகழ்வை பெங்களூர் டூ ஊட்டியில் நிகழ்வதாக ஒரு கதை படித்திருக்கிறேன். கொஞ்சம் பெரிய கதைதான். சுவாரசியங்கள் அதிகம். மேலும் யதார்த்தமான நடையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதும், (காமம் சார்ந்த) அதிகம்.

ஓவியாக்கா சொன்னது போல (சந்தேகித்தது போல :D) கதாநாயகன் நீங்களாக இருக்கமுடியாது என்பதிலிருந்து (நீங்கள் கஜகஸ்தானில் வேலை பார்த்ததை என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள்) உங்களை அப்பாத்திரத்திலிருந்து விலக்கிவிட்டு படித்தேன்.

மனிதர்கள் தவறு செய்தபிறகு அதிலிருந்து மீளுவதற்கு மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்ளுகிறார்கள். அல்லது அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவேண்டும். குறுகுறுக்கச் செய்யும் அந்த சந்தர்ப்பங்கள்தான் நெடிய தவறுகளின் ஆயுதமாக இருந்துவருகிறது. கதாநாயகனின் மனது நல்லது. அது குறுகுறுத்தலால் குத்தி கொடியவை வெளியேற்றப்படுகிறது.

இக்கதை படித்து முடித்த பிறகு கவிப்பேரரசு வைரமுத்துவின் இந்த வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

சந்தர்ப்பத்தால் வருவது பழக்கம்
சந்தர்ப்பம் தவிர்ப்பது ஒழுக்கம்.

வாழ்த்துக்கள் அண்ணா

சிவா.ஜி
26-04-2009, 09:45 AM
இக்கதை படித்து முடித்த பிறகு கவிப்பேரரசு வைரமுத்துவின் இந்த வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.

சந்தர்ப்பத்தால் வருவது பழக்கம்
சந்தர்ப்பம் தவிர்ப்பது ஒழுக்கம்.


என்னை மிகக் கவர்ந்த வரிகள் ஆதவா. ஒழுக்கம் உடனிருந்தால், சந்தர்பங்கள் தன்னாலேயே தவிர்க்கப்பட்டுவிடும்.

அலைபாயும் மனதுதான் தானாகவே சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொள்கிறது.

சிந்திக்கவைக்கும் கருத்துக்களுடன் உங்கள் பின்னூட்டம் அருமை. நன்றி ஆதவா.

செல்வா
26-04-2009, 11:48 AM
ரொம்ப நாளைக்கு முன்னாலே எழுதப்பட்ட கதையா இருந்தாலும் சொல்றது என்னவோ எப்பவும் நடக்குறதைத்தான்....

ரொம்ப யோசிக்க வைக்கிறீங்க... இங்கே சவுதியிலும் ஆங்காங்கே சந்திக்கும் நமது மண்ணின் மைந்தர்களின் வீரப்பிரதாபங்களைக்(?) கேட்கும் போது என் மனதில் தோன்றும் அதேக் கேள்வி கதையின் நாயகனுக்கும் கேட்பது.... மகிழ்ச்சி...
ஹா...ஹா... வோட்காவும்..... செ(சிவ)ப்புச் சிலைகளும்...
ஐரோப்பிய உலாவ விட்டுட்டு கஜகஸ்தான் போலாமா? அப்படின்னு கேக்க வைக்குது ஹா... என்ன சொல்றீங்க... (அக்னியயும் துணைக்குக் கூப்டுக்கலாம்:))

சிவா.ஜி
26-04-2009, 11:57 AM
அப்ப ஐரோப்பா வேணாமா.....? சரி சரி...எதுக்கும் அக்னியை ஒருவார்த்தைக் கேட்டுட்டு செஞ்சிடுவோம் செல்வா.

செல்வா
26-04-2009, 12:05 PM
அப்ப ஐரோப்பா வேணாமா.....?
அதெல்லாம் சரி கஜகஸ்தான் எந்த கண்டத்தில இருக்குது ஐரோப்பாவா ஆசியாவா?