PDA

View Full Version : பிரியமான பெற்றோரே....



sadagopan
16-08-2007, 10:16 AM
நான்
எத்தனை மணிக்கு
எழுந்திருக்க வேண்டும்
கடிகாரம்
தீர்மானிக்கிறது!

நான்
எதைச் சாப்பிடவேண்டும்
அம்மா
தீர்மானிக்கிறார்!

நான்
எதைப் படிக்கவேண்டும்
அப்பா
தீர்மானிக்கிறார்!

நான்
எதை உடுத்த வேண்டும்
பள்ளி தீர்மானிக்கிறது!

நான்
எத்தனை மணிக்குப்
படுக்க வேண்டும்
வீட்டுப்பாடம்
தீர்மானிக்கிறது!

நான்
எப்போது
உறங்க வேண்டும்
பசுமையில்லாத நினைவுகளும்,
ஈரமான எதிர்பார்ப்புகளும்
தீர்மானிக்கின்றன!

நான்
எவ்வாறு
உட்காரவேண்டும்
எப்படி
நடக்கவேண்டும்
கலாசாரம்
தீர்மானிக்கிறது!

நான்
ஓவியராக
விரும்புகிறேன்.

அப்பா
கையில் ஊசியைக்
கொடுக்கிறார்!

அம்மா
கையில் அளவுநாடா
கொடுக்கிறார்!

அண்ணன்
கையில் கந்தகத்தைக்
கொடுக்கிறார்!

எவருமே
என் கையில்
கொடுக்கவில்லை
தூரிகையை!

இருந்தும் நான்
ஓவியராக விரும்புகிறேன்.

அவரவர்
ஆசையை என்மீது
அடுக்கி வைக்கின்றனர்.
சுமை
பொறுக்காமல்
என் ஓவியக்கனவுகள்
கண் பிதுங்குகின்றன!

எனக்கு
விளங்கவேயில்லை
இவர்கள்
என்மீது பொழிவது
பாசமா,
பாரமா?

மனதிற்குள்
இவ்வாறு
கேள்வி வரும்
பெற்ற கடன் வசூலிக்க
மற்ற கடனை
சுமத்துகிறார்களோ?

உணர்ந்துகொள்ளுங்கள்
பெற்றோர்களே!

பாசத்தின் அர்த்தம்
உரிமை மீறலில்லை!
உறுதுணையாதல்.

சிறகுகளை
சிநேகிப்பவரை
நீர்க்குமிழிக்குள்
பயணம் செய்யச்சொல்லி
நிர்பந்திக்காதீர்கள்!

சிற்றெறும்பு கூட
தன் பாதையைத்
தானே தீர்மானிக்கிறது.
நீங்கள் ஏன்
என்
நந்தவனப் பாதையைப்
புறக்கணித்து
நகர சாலையைக்
கொடுக்கிறீர்கள்?

சாதனை என்பது
துறையால்
நிர்ணயிக்கப்படுவதில்லை,
நிறையால்
நிர்ணயிக்கப்படுகிறது!

என் வானத்தை
நானே
ஏற்படுத்திக்கொள்கிறேன்.
எதிர்வீட்டுக்காரனின்
எட்டாவது மாடியை
என் வானமென்று
ஏற்கச்சொல்லாதீர்கள்!

*******
நட்புடன்

சடகோபன்

விகடன்
16-08-2007, 10:25 AM
சாதனை என்பது
துறையால்
நிர்ணயிக்கப்படுவதில்லை,
நிறையால்
நிர்ணயிக்கப்படுகிறது!


எதிர்வீட்டுக்காரனின்
எட்டாவது மாடியை
என் வானமென்று
ஏற்கச்சொல்லாதீர்கள்!

மிகவும் பிடித்த வரிகள்.
அழகான கவி ஓட்டம்

படிப்படியாக சொல்லிய முறை மெய்சிலிர்க்க வைக்கிறது. பெற்றார்கல் தாம் கண்டு கனவாகியே போன கனவுகளை பிள்ளைகள் மூலம் சாதித்திடப் பார்ப்பதன் விளைவுதான் இந்தத்திணிப்பு. சிலர் வாழ்க்கை ஒளிர்மயமாகிவிடுகிறது. சிலரினதோ தொலைந்துவிடுகிறது.

பாராட்டுக்கள் சடகோபன்

இதயம்
16-08-2007, 10:28 AM
ஒரு மனிதனின் சுய விருப்பங்கள் பல்வேறு காரணங்களால் நசுக்கப்பட்டு, அவன் தான் செல்லும் திசை தெரியாமல், நிறைவில்லாமல் பயணிக்கும் தற்கால எதார்த்தத்தை எடுத்துரைக்கிறது இந்த கவிதை. மனிதர்களுக்குள் எத்தனை, எத்தனையோ தனித்தன்மையான திறமைகள். அவர்களின் திறமை அறிந்து, ஊக்குவித்து உலக சாதனை படைக்க வைக்காமல், ஒரு வட்டமிட்டு அந்த கோட்டுக்குள் அவனுடைய வாழ்க்கையை சுருக்குவது எவ்வளவு பெரிய அறிவீனம்.?! இதைத்தான் பெரும்பாலான இன்றைய இளைஞர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் வேறுபட்ட பல காரணங்களால்..! அவர்களின் மனக்குமுறலின் வெளிப்பாடாக இந்த கவிதையை எடுத்துக்கொள்ளலாம்.

அற்புத கருத்துக்களை உள்ளடக்கிய இந்த கவிதை படைத்த சடகோபனுக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்..!

இணைய நண்பன்
16-08-2007, 10:42 AM
பிள்ளையை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் கடமை.அதே நேரம் பிள்ளையின் திறமைக்கு உறுதுனையாவதும் அவர்களது கடமைதான்.நண்பரே உங்கள் கவிவரிகள் அருமை.பாரட்டுக்கள்