PDA

View Full Version : யதார்த்தம்sadagopan
16-08-2007, 07:16 AM
பாலுவுக்கு ரொம்ப நாட்களாக பேங்கில் கணக்குத் துவங்க வேண்டும் என்று ஆசை, அதிலும் ஸ்டேட் பேங்கில் துவங்க வேண்டும் என்பதில் ரொம்பவும் ஆர்வமாக இருந்தான். பாலு படித்ததெல்லாம் எட்டாவது வரைதான். வேலை பார்ப்பது ஒரு தனியார் கம்பெனியில், அதுவும் நிரந்தரமாக இல்லை. லீவ் போஸ்டில் ஆள் இல்லாத போது வேலை செய்வான். அப்படி இப்படி என்று கையில் ஆயிரம் ரூபாய் சேர்ந்தவுடன் வங்கிக்குச் செல்ல முடிவெடுத்தான்.

முடிவெடுத்தவுடன் அவன் செல்ல விரும்பிய பேங்க் அவன் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இருந்த பேங்க்தான். முதன் முதலாக பேங்கிற்கு செல்வதால் சலவை செய்த பேண்ட் சர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டான். கண்ணாடியைப் பார்த்து ஒரு முறை தலையை வாரிக் கொண்டான். பின் பவுடர் பூசிக்கொண்டான். கொஞ்சம் பந்தாவாக இருக்கட்டுமே என்று தன் தங்கை குழந்தையின் விளையாட்டுப் பொருளான பொம்மை செல் போனை மறக்காமல் சட்டைப் பையில் வெளியே தெரியுமாறு வைத்துக் கொண்டான்.

பேங்கில் நுழைவாயிலில் துப்பாக்கியுடன் நின்றிருந்த காவலரைப் பார்த்தவுடன் தன் பணம் நிச்சயமாக இந்த பேங்கில் பத்திரமாக இருக்கும் என பாலுவுக்கு நம்பிக்கை வந்தது. உள்ளே நுழைந்தவுடன் தஸ் புஸ் என்று இங்கிலீஸ் பேசிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தவுடன் எட்டாவது படிக்கும் போது பாடம் நடத்திய இங்கிலீஷ் டீச்சர் பாரதி நினைப்பு வந்தது.

இவனைப் பார்த்தவுடன் "மே ஐ ஹெல்ப் யூ" என்றாள். உடனே பாலு "அக்கெளன்ட் ஓப்பன்" என்று ஆரம்பிக்க, அவள் "ப்ளீஸ் கோ அண்ட மீட் அவர் அக்கெளண்டென்ட் வித் ஐடின்டி புரூப்" எனக் கூற, அப்படியே வெளியே வந்துவிட்டான்.

நடந்ததை தன் நண்பனிடம் கூற, அவன் மருநாள் பாலுவுடன் வங்கிக்குச் சென்றான். நேற்றுப் பார்த்த அந்தப் பெண்ணைக் கண்டு பாலு ஒதுங்க முற்பட, நண்பன் அவளிடம், "மேடம் புதுசா கணக்கு துவங்கணும்" என்றான்.

"புதுக் கணக்கா, அதோ அங்கே அக்கௌண்டன்ட் இருக்காங்க பாருங்க. அவங்ககிட்ட உங்களோட விபரங்களையும் வாக்காளர் அடையாள அட்டையையும் காண்பித்து கணக்கு ஆரம்பிக்கலாம்" எனக் கூறினாள்

அரை மணியில் கணக்குப் புத்தகம் கையில் வந்துவிட்டது.

பிரமித்துப்போன பாலுவிடம் "ஏண்டா உனக்கு இங்கிலீசு நாக்குல பிளேடு போட்டு மூவ் பண்ணினாலும் வராது. அப்புறம் ஏன் வீண் பந்தா, அதான் சாதாரணமாக வரச்சொன்னேன், இப்பப் பார் வேலை முடிந்து விட்டது" எனக்கூற, யதார்த்த நிலை உணர்ந்தான் பாலு

****

நட்புடன்

சடகோபன்

சிவா.ஜி
16-08-2007, 08:00 AM
யதார்த்தம் உணர்த்திய குறுங்கதை.வெட்டி பந்தா தேவையில்லாதது என்று நெத்தியடியாக சொன்னதற்கு பாராட்டுக்கள் சடகோபன்.

gayathri.jagannathan
16-08-2007, 10:40 AM
தமிழ்நாட்டுக்குள்ளேயே சக தமிழரிடம் தமிழில் பேசாத மக்களுக்கு சவுக்கடி கொடுத்ததற்குப் பாராட்டுகள்...

SathishVijayaraghavan
16-08-2007, 10:56 AM
நல்ல செய்தியுடன் கூடிய கதை...

இதயம்
16-08-2007, 11:03 AM
தமிழில் பேசுவதை கேவலமாக நினைப்பவர்களுக்கு சவுக்கடி சிறுகதை..! பாராட்டுக்கள்..!!

leomohan
16-08-2007, 11:08 AM
பிரமித்துப்போன பாலுவிடம் "ஏண்டா உனக்கு இங்கிலீசு நாக்குல பிளேடு போட்டு மூவ் பண்ணினாலும் வராது. அப்புறம் ஏன் வீண் பந்தா, அதான் சாதாரணமாக வரச்சொன்னேன், இப்பப் பார் வேலை முடிந்து விட்டது" எனக்கூற, யதார்த்த நிலை உணர்ந்தான் பாலு


அழுத்தமான செய்தி சடகோபன். தமிழில் பேசினால் தமிழில் பதில் அளிக்க வேண்டும். சில வார்த்தைகள் பிரயோகிப்பதால் நமக்கு ஆங்கிலம் நன்றாக தெரிகிறது என்று சிலர் ஆங்கிலத்தில் பேசத்துவங்கினால் ஒரே குழப்பம் தான்.

நான் ஒரு முறை ஈரானில் ஒரு லெக்சர் தரச் சென்றேன். அங்கிருந்த ஈரானிய நண்பர்களிடம் முதல் இரண்டு அறிமுக வரிகளை கற்றுக் கொண்டேன். பேச்சு துவங்கியதும் நான் பாரசீக மொழியில் அந்த இரண்டு வரிகளை உச்சரிப்பு தவறாமல் சொல்லிவிட்டு பிறகு ஆங்கிலத்தில் தொடர, அங்கிருந்தவர், ஏன் நீங்கள் பாரசீக மொழியில் தொடரக் கூடாது என்று கேட்க, எனக்கு தெரிந்த பாரசீகமே அவ்வளவுதான் என்று சொல்லி நெளிய வேண்டியதாயிற்று.

தொடருங்கள் தங்கள் சிறுகதை பயணத்தை நண்பரே.

விகடன்
16-08-2007, 11:09 AM
ஆங்கிலம் அறவே தெரியாமலோ அதில் கதைக்காமலோ இருத்தல் கூடாது. அறிந்துவைத்திருக்கவேண்டும். தமிழ் கைகொடுக்காது என்கின்றபோதினில் ஆங்கிலத்தை பாவித்தல் வேண்டும்.

தமிழில் கதைப்பது அவமரியாதையாக கௌரவ குறைவாக கருதும் மாக்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பாராட்டுக்களுடன் அருமையான கதை பதிந்தமைக்கு நன்றியும் கூட சடகோபன்.

அமரன்
16-08-2007, 11:24 AM
வெட்டிபந்தாவுக்கு சாட்டை அடிகொடுத்து யதார்த்ததை புரியவைத்த கதை. பாராட்டுக்கள் சடகோபன்.

MURALINITHISH
18-09-2008, 10:08 AM
இப்படிதானுங்க நிறைய பேர் பந்தா காட்டுகிறேன் என்று பயந்து போய் விடுகிறார்கள் நல்ல கதை எதையும் நமக்கு தெரிந்த முறையில் நடப்பதே நல்லது தெரியாதை தெரிந்த மாதிரி காட்டினால் நமக்குதான் கடினம்