PDA

View Full Version : காணாமல் போன பக்கங்கள்-புதிய தொடர்கதை



leomohan
14-08-2007, 02:06 PM
1


என் பெயர் மணி. விழுப்புரம் சொந்த ஊர் என்பதால் விழிமா மணி. அதையே சுருக்கி வி. மணி என்று அழைப்பவர்களும் உள்ளார்கள். தொழில் Ц எழுத்தாளன். கடந்து பத்து வருடங்களாக கதை எழுதி தான் பிழைப்பு நடத்துகிறேன். திருமணம் Ц ஆகிவிட்டது. மனைவி Ц இல்லை. என்னடா விவகாரம் என்று கேட்டால், மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்துவிட்டாள். ஒண்டிக் கட்டை. இரண்டாம் கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை. வசிப்பது Ц உலகத்தில் அதிகமான ஜன சந்தடி இருக்கும் இடங்களில் ஒன்றான டி. நகர்.

நான் பூங்காவில் உட்கார்ந்து தான் கதை எழுதுவேன், ஓட்டலில் ரூம் போட்டுத்தான் கதை எழுதுவேன், அமைதியான சூழல் வேண்டும், மூட் வரவேண்டும், ஊட்டிக்கு போவேன் என்றெல்லாம் சொல்லாத எழுத்தாளன் நான். எப்போது வேண்டுமானாலும் எழுதுவேன்.

எங்கும் நடந்தோ அல்லது பேருந்திலோ போவதால் மக்கள் மத்தியில் எப்போதும் இருப்பேன். அவர்கள் தான் அமுதசுரபி போல எனக்கு கதைக்கான கருக்களை அள்ளி வீசிக் கொண்டிருப்பார்கள். நான் 24 மணி நேர எழுத்தாளன்.

சில சிறப்பு குணங்கள் என்னிடம் உண்டு. எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுவேன். இலக்கண பிழை இல்லாமல் எழுதுவேன். ஒரு முறை எழுதியதை அடித்து எழுத மாட்டேன். சினிமாவில் பார்ப்பது போல சரியான வரிகள் கிடைக்கும் வரை எழுதி எழுதி காகிதங்களை குப்பையில் போட மாட்டேன். அது மட்டுமல்ல நான் எழுதியதை நான் படிக்க மாட்டேன் Ц அதாவது புத்தகம் வெளிவந்து முதல் வாசகருடைய கடிதம் வரும்வரை. அது வந்த பிறகே நான் என் நாவலை படிப்பேன்.

இப்போது நான் வெங்கடநாராயணா தெருவில் இருக்கும் பல்சுவை பதிப்பகத்தின் அலுவலகத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறேன். என்னுடைய புத்தகங்களை அதன் நிறுவனர் ராஜன் தான் 10 வருடங்களா பதித்துக் கொண்டிருக்கிறார்.

நான் எழுதிய நீரும் நெருப்பும் புதினத்தை தருவதற்கும், வாசகர் கடிதங்களை பெற்று வருவதற்கும் தான் இந்த நடை பயணம்.

அன்று எனக்கு எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது. என் மனைவிக்கு அடிப்பட்ட அதே ரோடில். வசந்த பவன் ஓட்டலுக்கு முன்.

தொடரும்...

роЕроХрпНройро┐
14-08-2007, 02:11 PM
ஆகாகா...
மீண்டும் சுடச்சுட ஒரு விருந்து...
பரிமாறுங்கள் மோகன்... முடியும்வரை, சுவைக்க காத்திருக்கின்றேன்...

роЪро┐ро╡ро╛.роЬро┐
14-08-2007, 02:13 PM
அட்டகாசமான ஆரம்பம். சரியான இடத்தில் தொடரும் போடும் நீங்களும் சரியான எழுத்தாளர்தான்....ஆவல் அதிகரிக்கிறது..தொடருங்கள் மோகன்.

роЕрооро░ройрпН
14-08-2007, 02:18 PM
மோகனின் பல கதைகள் படித்து பாதியில் நிற்க இன்னொரு கதையா.! முடியட்டும் படிப்போம் என காத்திருந்தே படிக்க முடியாமல் போன கதைகள் பல. மோகன் சில சிக்கல்களில் நான் . விரைவில் எல்லாவற்றையும் படித்து தட்டியும் சுட்டியும் என்பங்கை செலுத்துகின்றேன். அதுவரை மன்னிக்கவும்.

leomohan
14-08-2007, 02:19 PM
2

வேகமாக ஒரு டாட்டா சுமோ என்னை மோதுவது போல் வர, நான் பதறி வலது பக்கம் ஒதுங்க, நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டரின் மேல் விழுந்து அது என் மேல் விழுந்து உடலில் காயங்கள். அங்கிருந்தவர்கள் ஓடி வர, சிலர் என்னை அடையாளம் கண்டுக் கொண்டு, என்னை அமர வைத்து சோடா வாங்கி கொடுத்து, என் ஜோல்னா பைகளில் இருந்து விழுந்து சிதறிய என்னுடைய நாவலின் பக்கங்களை சேர்த்து எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்கள்.

அனைவருக்கும் நன்றி சொல்லி பதிப்பகத்தை சென்றடைந்தேன்.

வாங்க மணி. என்ன இந்த வாட்டி நாவல் கொடுக்கறதுல்ல தாமதம் பண்ணிட்டீங்க. நாளை மறு நாள் வெளியீடு. இல்லேன்னா உங்க வாசகர்கள் போன் போட்டு தொந்தரவு பண்ணிடுவாங்களே என்று சொல்லி சிரித்தார்.

பிறகு நான் அடிப்பட்டிருந்ததை பார்த்து என்னாச்சு மணி என்றார் பரிவுடன்.

ஒன்னுமில்லை சார். கீழே விழந்துட்டேன். சின்ன காயம் தான். இந்தாங்க இந்த மாசத்து நாவல் என்று என் பையிலிருந்த காகிதங்களை கொடுத்தேன்.

நீரும் நெருப்பும் Ц தலைப்பு நல்லா இருக்கே என்று பக்கங்களை புரட்டியவர் என்ன சார், சுமார் 30 பக்கங்கள் காணோமே. 160லிருந்து 190வரை. நம்பர் தப்பா எழுதிட்டீங்களா இல்லை பக்கங்களை வீட்டில விட்டுட்டீங்களா.

அச்சோ என்ன சொல்றீங்க. வீட்லேர்ந்து வரம் போது சரியா பாத்து தானே எடுத்துட்டு வந்தேன். ஒருவேளை அடிபட்ட இடத்துல விழந்திருக்குமோ என்று சொல்லிவிட்டு விரைவாக வசந்த பவனை நோக்கி ஓடினேன்.

அங்குமிங்கும் தேடிவிட்ட, எனுக்கு உதவி செய்தவர்கள் மீண்டும் வர, என்ன சார் ஏதாவது பையிலேர்ந்து கீழே விழுந்துட்டுதா என்று கேட்க, ஆமாம் சார், இந்த மாசத்து நாவல் எழுதியிருந்தேன். அதில சில பக்கங்கள் நான் கீழே விழுந்தபோது தொலைஞ்சி போச்சு என்றேன்.

அவர்களும் எனக்கு உதவியாக பல நிமிடங்கள் தேடியும் கிடைக்காமல் நான் சோர்ந்து போய் திரும்ப வந்தேன்.

மணி சார், பேசாம புதுசா 30 பக்கம் எழுதிடுங்க என்றார் ராஜன்.

இல்லை சார். நான் ஒருதடவை எழுதினது எழுதினது தான். திருப்பி எழுதினா கதைக்கு பொருந்தாது. நான் வேணா வேற நாவல் எழுதி தரேன் என்றார்.

என்ன் சார் நாளான்னிக்கு வெளியீடு. அதுக்குள்ள முடியுமா.

தெரியலை சார். முயற்சி பண்றேன். ஆனா இதை மட்டும் வெளியிட்டுடாதீங்க. என் பேரே கெட்டுப்போயிடும் என்றேன்.

சார் நீங்க அவசரம் புரியாம பேசறீங்க என்றார் அவர் பதட்டத்துடன்.

கவலை படாதீங்க சார். எப்படியாவது நான் புது நாவலை கொடுத்திடறேன் என்று சொல்லி விடை பெற்றேனே ஓழிய என்னிடம் ஒரு கதையும் இல்லை. ஒரு நாவல் எழுத சுமார் மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வேண்டும். ஒரு நாளில் சாத்தியம் இல்லை. அப்படி எழுதினால் என் பெயரும் கெட்டப்போய்விடும் என்பதும் உண்மை.

யோசித்தவாறே திரும்பி நடந்தேன்.

роЕроХрпНройро┐
14-08-2007, 02:23 PM
மோகன்...
எல்லாம் சரி... ஆனால், தொலைந்த பக்கங்களை எழுதிக்கோன்னு, எங்களை கலக்கிப் போடாதையுங்கோ...
கோடி புண்ணியமாப் போகும்...

роЪро┐ро╡ро╛.роЬро┐
14-08-2007, 02:24 PM
எதிர்பாராத சூழல்...என்ன செய்யப்போகிறார் மணி....ஆவல் அதிகரிக்கிறது.

leomohan
14-08-2007, 02:31 PM
3

மறுநாள் மாலை ராஜனுக்கு போன் போட்டு மன்னிச்சுடுங்க சார். முடியலை என்னால். கதையும் ஓவியமும் உள்ளே இருந்து வந்தா தான் உண்டு. சட்டுன்னு செய்ய மாகி நூடல்ஸ் இல்லையே இது என்றேன் வருதத்துடன்.

பரவாயில்லை மணி. நீங்க ரெஸ்ட் எடுங்க என்று சொல்லி வைத்தார்.

எனக்கு வியப்பாக இருந்தது. எப்படி இவ்வளவு சகஜமாக எடுத்துக் கொண்டார். பயங்கர டென்ஷன் பார்டியாச்சே. ஒருவேளை வேறு கதை கிடைச்சிருக்குமோ. ஒருவேளை இந்த மாசம் நாவலே வராதோ. ஒருவேளை அப்படி வேறு ஒரு எழுத்தாளர் எழுதி மக்கள் வரவேற்பு கிடைச்சா எனக்கு ரெகுலரா கிடைக்காம போயிடுமோ என்றெல்லாம் யோசித்தேன். பத்து வருடங்களாக வாசகர்களின் மனதில் நிற்பதே கடினமான காரியம். அதே புதுமை, உழைப்பு, இனிமை, வேகம் எல்லாம் தர முடியும் என்பது கடினம். அதுமட்டுமில்லாமல் மற்ற எழுத்தாளர்களை போல பல பதிப்பகங்களை கையில் வைத்திருக்க வில்லை. என்னுடைய சிறுகதை, நாவல் எல்லாமே வெளியிடுவது பல்சுவை பதிப்பகம் மட்டும்தான்.

யோசனையுடன் உறங்கச் சென்றேன்.

ஒருவாரம் ஓடியிருக்கும். ராஜனின் உதவியாளர் ரங்கன் வந்தார். சார், வணக்கம், இந்தாங்க உங்க நாவல். உங்களுக்கு இந்த நாவலோட பேமென்ட்.

என்ன இந்த மாச நாவலா. அது தான் பிரச்சனையாயிடுத்தே

இல்லை சார் இதோ பாருங்க என்றார்

தலைப்பு Ц காணாமல் போன பக்கங்கள்

இது நான் எழுதினது இல்லையே என்றேன்.

நீங்க எழுதின நீரும் நெருப்பும் தான் சார். தலைப்பை மாத்தி வெளியிட்டிருக்கோம். அதுல கடைசி பக்கம் பாருங்க என்றார்.

அவசரமாக கடைசி பக்கம் பார்த்ததும் புன்னகைத்தேன். ராஜன் நல்ல மனிதர் மட்டுமல்ல, நல்ல வியாபாரியும் கூட என்று நினைத்துக் கொண்டேன்.

வாசகர்களுக்கு ஒரு புதிய போட்டி

விழிமா மணியின் வாசகர்களே, நீங்கள் மணியுடன் ஒரு நாள் முழுக்க பேசி மகிழ்ந்து 5 நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிட வேண்டுமா? இந்த நாவலில் 160லிருந்து 190வரை உள்ள பக்கங்கள் வெளியிடப்படவில்லை. நீங்கள் எழுதி அனுப்புங்கள். கதையோடு ஒன்று சேர்ந்து மணி அவர்கள் எழுதியதற்கு ஈடாக இருந்தால் சிறந்த கதை பகுதி வெளியிடப்படும். அதுமட்டுமல்ல ஒரு நாள் முழுவதும் உங்கள் விருப்பமான எழுத்தாளர் மணியுடன் பேசி மகிழலாம். என்ன பார்க்கிறீர்கள். உடனே காகிதங்களை எடுங்கள், பேனாவை எடுங்கள் இந்த கதைக்கு ஈடாக ஒரு கதை பகுதியை எழுதி அனுப்புங்கள்

ஹா ஹா. ராஜன் ரொம்ப கெட்டிக்காரர் தான். தப்பை மறைக்க இப்படி ஒரு ஸ்டெண்டா பலே என்றேன்.

காசோலையை வாங்கிக் கொண்டு கையெழுத்திட்டு ரங்கனை வழியனுப்பினேன். பிறகு ராஜனுக்கு போன் போட்டு பல ராஜன் நல்ல வணிக யுத்தி என்று பாராட்டி வைத்தேன்.

leomohan
14-08-2007, 02:32 PM
நன்றி சிவா, அக்னி, அமரன் அவர்களே.

leomohan
14-08-2007, 02:33 PM
மோகன்...
எல்லாம் சரி... ஆனால், தொலைந்த பக்கங்களை எழுதிக்கோன்னு, எங்களை கலக்கிப் போடாதையுங்கோ...
கோடி புண்ணியமாப் போகும்...

ஹா ஹா ஹா

роЪро┐ро╡ро╛.роЬро┐
14-08-2007, 02:43 PM
முதல் அத்தியாயத்தை அபாரமாக முடித்திருக்கிறீர்கள் மோகன்.இன்றைய சூழ்நிலையில் நிறைய வாரப்பத்திரிக்கைகள் கையாளும் வியாபாரத்தந்திரத்தை வெகு அழகாக கதையில் கொண்டுவந்துள்ளது பாராட்டப்படவேண்டியது.பாராட்டுக்கள்.

leomohan
14-08-2007, 02:45 PM
4
சில வாரங்கள் ஓடியது. அடுத்த மாத நாவலை கொடுக்கச் சென்ற போது ராஜன் விளக்கினார்.

மணி, இந்த போட்டி பலத்த வரவேற்பை பெற்றிருக்கு. 200 பேர் கதை பகுதி எழுதி அனுப்பியிருந்தாங்க. நான், ரங்கன், எடிட்டோரியல் டீம்ல இருக்கற எல்லாரும் சேர்ந்து அதுல பில்டர் பண்ணி இந்த 21 பகுதிகளை தேர்ந்தெடுத்திருக்கோம். இதுல ஒன்னை தேர்ந்தெடுத்து கொடுத்தீங்கன்னா அடுத்த மாசம் நாவலோட சேர்ந்து பிரசுரம் செய்திடலாம் என்றார்.

ஹா ஹா. நல்ல தமாஷூ சார். சரி எனக்கு மூணு நாளு கொடுங்க. படிச்சிட்டு சொல்றேன் என்று கூறி நன்றி பெற்றி விலகினேன்.

ரங்கநாதன் தெரு சரவண பவனில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு சென்றேன். ஒவ்வொன்றாக எழுதி படிக்க துவங்கிய எனக்கு மிகவும் சலிப்பு தட்டியது. எழுத்தாளர்களுக்கு ஏன் மற்றவர்கள் எழுதியது படிக்க பொறுமை இல்லை என்று நொந்துக் கொண்டேன்.

இரண்டு, மூன்று என்று படித்து முடித்துவிட்டு நான்காவதை எடுத்தேன். சட்டென்று எழுந்து உட்கார வைத்தது. அழகான பெண்ணின் கையெழுத்து. என்னுடைய நடை, என்னுடைய பாணி, என்னுடைய வார்த்தைகளை கையாளும் விதம். முதுகில் சுரீரென்றது.

இது நான் எழுதியது தான். அதே தான். இது யார் கையிற்கோ போயிருக்க வேண்டும். அவர்கள் பிரதி எடுத்து அனுப்பியிருக்க வேண்டும். யாராக இருக்கும். அன்று கூட்டத்தில் வந்தவர்களை நினைவு செய்ய முயன்றேன். முடியவில்லை.

இது நான் எழுதியது தான் சந்தேகமே இல்லை. இந்த பகுதியின் மர்மம் நான் நீண்ட நாட்களாக யோசித்து வைத்திருந்து யுக்தி.

யாராக இருக்கும் என்ற யோசனையுடன் உறங்கச் சென்றேன். மறுநாள் காலையில் அந்த நான்காவது பகுதிக்கு வெற்றி பரிச அறிவிச்சுடுங்க. வர வெள்ளிக் கிழமை அவங்களோட நான் ஒரு நாள் நேரம் செலவழிக்கிறேன். எல்லா பங்கெடுத்தவங்களுக்கும் என் கையெழுத்து போட்ட இந்த மாச நாவலை பரிசா கொடுத்திடுங்க.

என்னை சங்கடத்திலேர்ந்து காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி என்றேன் ராஜனிடம்.

அட நான் தான் சார் உங்களுக்கு நன்றி சொல்லனும். மௌலானா ஆசாதோட 30 பக்கங்கள் மாதிரி நீங்களும் பிரபல மாயிட்டீங்க. ஊரெல்லாம் இதே பேச்சு. என்ன எழுதியிருப்பீங்க அந்த 30 பக்கத்துல அப்படின்னு. டிவி ரேடியான்னு எல்லாரும் கெஸ் பண்ணிகிட்டு இருக்காங்க. இந்த மாசம் சேல்ஸ் டபுள். அதுமட்டுமல்ல அடுத்த மாசமும் நல்லா விற்பனை இருக்கும்னு நினைக்கிறேன்.

ரொம்ப சந்தோஷம். நானும் என் கதைக்கு 30 பக்கங்கள் எழுதியவரை பார்க்கனும்னு ரொம்ப ஆவலா இருக்கேன்.

leomohan
14-08-2007, 02:45 PM
அபாரமாக முடித்திருக்கிறீர்கள் மோகன்.இன்றைய சூழ்நிலையில் நிறைய வாரப்பத்திரிக்கைகள் கையாளும் வியாபாரத்தந்திரத்தை வெகு அழகாக கதையின் நிறைவாக்கியுள்ளது பாராட்டப்படவேண்டியது.பாராட்டுக்கள்.

சிவா சார், இப்பத்தான் கதையே ஆரம்பிச்சிருக்கு. இன்னும் சங்கதியெல்லாம் இருக்கு.

роЪро┐ро╡ро╛.роЬро┐
14-08-2007, 02:49 PM
தவறி எழுதிவிட்டேன்...அதனால் உடனே திருத்திவிட்டேன்.மன்னிக்கவும்.

leomohan
14-08-2007, 06:30 PM
தவறி எழுதிவிட்டேன்...அதனால் உடனே திருத்திவிட்டேன்.மன்னிக்கவும்.

அடே என்ன சார் பெரிய வார்த்தையா. பரவாயில்லை.

leomohan
14-08-2007, 06:57 PM
5

வாசுகி எனது வாசகி. வயது 30 இருக்கும். இன்னும் திருமணம் ஆகவில்லை போலும். மாநிறத்தில் இருந்தாள். களையாக இருந்தால். ஆனால் கண்களின் கீழே கருவளையங்கள். கல்யாண கவலையாக இருக்கும். அல்லது காதல் தோல்வியாக இருக்கும்.

அறிமுகப்படுத்தப்பட்ட கையோடு மீடியாக்காரர்கள் ஆக்ரமித்துக் கொண்டார்கள்.
வணக்கம் சார், இந்த மாதிரி ஒரு போட்டி வைக்கனும்னு உங்களுக்கு எப்படி யோசனை தோணிச்சு.
யோசனையெல்லாம் இல்லம்மா. ஒரு சின்ன விபத்துல என்னோட பக்கங்கள் எல்லாம் சிதறி போச்சு. கிடைக்காததால இப்படி ஒரு போட்டி நடத்தினோம்.

சார், சும்மா விளையாடாதீங்க சார். நிஜத்தை சொல்லுங்க.

சரிதான் இந்த மீடியாக்காரர்களுக்கு உண்மையை சொன்னால் பிடிக்காது போலும். நல்ல மசாலா தடவியை பொய்களை தான் இவர்கள் விரும்புகிறார்கள்.

ஹா ஹா. சரி உண்மையை சொல்றேன். ஒவ்வொரு வாசகனும் ஒரு எழுத்தாளன் தான். சிலருக்கு எழுதி பழக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எழுத ஆரம்பிச்சிட்டாங்க அவங்க எந்த ஒரு சிறந்த எழுத்தாளனையும் மிஞ்சும் திறம் படைத்தவர்கள். நானே எழுதிகிட்டு இருந்தா நால்லா இருக்குமா. அதனால என் வாசகர்களோட சேர்ந்து பயணம் செய்யனும்னு எடுத்த முடிவு தான் இது. இதுக்கு மக்களோட வரவேற்பு உற்சாகத்தை தருது. இது போல இன்னும் சில போட்டிகள் நடத்த யோசிச்சு வைச்சிருக்கோம் என்று அளந்துவிட்டேன்.

ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள்.

சரி, செல்வி வாசகி எழுதியதை ஏன் தேர்ந்தெடுத்தீங்க.

என்னுடைய எழுத்து நடையும் பாணியும் அணுகுமுறையும் அப்படியே ஒத்துப்போனதால அவங்களோட கதை பகுதியை தேர்ந்தேடுத்தோம். ஹா என்னுடைய பக்கங்கள் தான் அது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

பிறகு வாசுகியை நோக்கி, நீங்க சொல்லுங்க என்றனர்.

நான் மணி அவர்களோட 10 வருட ரசிகை. காலேஜ் காலேத்திலேர்ந்து அவருடைய எழுத்துக்கள்னா எனக்கு உயிர். அதனால தானோ என்னவோ அவரோட நடையை என்னால் இமிடேட் பண்ண முடிஞ்சுது. ஒரு நாள் அவருடைய புத்தகம் வெளி வர லேட்டானாலும் உடனே போன் செஞ்சி பல்சுவை கம்பெனியை தொந்தரவு செய்ய ஆரம்பிச்சுடுவேன். எனக்கு கிடைச்ச பாக்கெட் மணிலே என்னுடைய தோழிகளுக்கும் இவரோட புத்தகத்தை வாங்கி கொடுப்பேன். இன்னிக்கு அவரால தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பக்கத்துல நிக்கறது பெரிய பாக்யமா நினைக்கிறேன் என்றாள்.

மேலும் சில கேள்விகள், பாராட்டுக்கள், இடையில் பல விளம்பர இடைவெளிகள் என்று எங்களை வைத்துக் கொண்டு மீடியா கூத்தடித்துக் கொண்டிருந்தது.

இந்த பைத்தியக்காரத்தனம் ஓய்ந்த பிறகு வாசுகியுடன் பெரிய விருந்து ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நாங்கள் வந்து அமர்ந்த பிறகும் சில பத்திரிக்கைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தன. ராஜன் அவர்களை சாப்பிட விடுங்க. அப்புறம் வந்து பேட்டி கொடுப்பார் என்று சொல்லி எங்களை தனிமைபடுத்தினார். சில புத்தக விழாக்கள், சில பத்திரிக்கை பேட்டிகள், சில ரேடியா பேட்டிகள், டிவியில் நான் வந்ததில்லை. நான் அதிகம் விளம்பரங்களை தேடுவதும் இல்லை. எனக்கென்று ஒரு கூட்டம். அதை நம்பி எழுதுகிறேன். குறைந்தது 50 வாசகர்கள் முதல் பத்து நாட்களில் புத்தகத்தை படித்து எழுதிவிடுவார்கள். இதில் ஒருவர் முன்னால் பின்னால் இருந்தாலும் அதே 50 பேர் தான். அதன் பிறகு ஒவ்வொன்றாய் கடிதங்கள் வந்துக் கொண்டிருக்கும். வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஒரு இந்தியர் 7 வருடங்களுக்கு முன் நான் எழுதிய புதினத்தை பாராட்டி ஒரு பொக்கே அனுப்பியிருந்தார். எங்காவது பழைய கடையில் கிடைத்திருக்கும்.

அவ்வாறு வரும் பாராட்டுக் கடிதங்கள் தான் உற்சாகமூட்டுபவை. கிடைக்கும் பணம் தான் சாப்பிட்டு அழித்துவிடுகிறேனே. வைத்திய செலவு என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வியாதிகள் இல்லை. வீட்டு வாடகை பிரச்சனை இல்லை. சொந்த வீடு தான். நான் சம்பாதித்தது இல்லை. அப்பா விட்டுச் சென்றது.

இந்த வாசுகியிடமிருந்து கடிதமோ வாழ்த்து அட்டையோ அல்லது மின்னஞ்சலில் பாராட்டோ எதுவுமே வந்ததில்லை. என் ரசிகை என்று சும்மா கதை விடுகிறாள் என்று நினைத்துக் கொண்டேன்.

தனியாக பேச வாய்ப்பு கிடைத்ததும் நேரடியாக கேட்டேன்.

நீங்க சென்னையில் எங்கே?

சார் நான் சென்னையே இல்லை. புதுக்கோட்டை.

அப்ப போன மாசம் மெட்ராஸ் வந்திருந்தீங்களா?

ஹா. நான் மெட்ராஸ் வந்து 3 வருஷத்துக்கு மேலே இருக்கும் சார்.

பொய் சொல்றீங்க.

என்ன சார் சொல்றீங்க.

ஆமாம். நீங்க போன மாசம் சென்னையில் இருந்திருக்கீங்க. எனக்கு விபத்து நடக்கும்போது என்னுடைய நாவல்லேர்ந்து 30 பக்கங்கள் எடுத்துகிட்டு போனது நீங்க தான்.

என்ன சார். உங்களுக்கு விபத்து ஆச்சா. 30 பக்கம் நான் எடுத்துட்டு போனேனா. நீங்க சொல்றது எதுவுமே கரெக்ட் இல்லே சார். நான் சத்தியமா மெட்ராஸ்ல இல்லே சார்.

இந்த கதை பகுதி நீங்க எழுதனதா?

இல்லை.

அப்படி வாங்க வழிக்கு. இது யார் எழுதினது.

நீங்க எழுதினது.

ஒத்துக்கிட்டீங்களா. நான் எழுதினது உங்க கையில் எப்படி வந்தது. சொல்லுங்க. யாராவது மெட்ராஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்து உங்க கிட்டே கொடுத்தாங்களா.

இல்லை சார். இது நான் எழுதினது.

என்னம்மா என் பொறுமையை சோதிக்கிறீங்க. இது நான் எழுதினது, நீங்க எழுதினது இல்லைன்னு சொன்னீங்க. இப்ப மறுபடியும் நீங்க எழுதினதா சொல்றீங்க.

சார் நான் சொல்றதை முழுசா கேளுங்க என்று சொல்லிவிட்டு தண்ணீர் குடித்தாள். பிறகு பேச ஆரம்பித்தாள்.

எனக்கு அவள் பேச பேச நம்பவும் முடியாமல் நம்பாமலும் இருக்க முடியாமல் இருந்தது. உள்ளூர ஒரு பயம் உருவானது.

leomohan
14-08-2007, 07:58 PM
6

சார், சுமார் 7 வருஷங்களுக்கு முன்னாலேர்ந்து இப்படி நினைக்கிறேன். கல்லூரி நாட்கள்லேர்ந்து உங்களோட தீவிர ரசிகை நான். உங்களோட புத்தகங்கள், உங்களை பத்தி பத்திரிக்கையில் வர நியூஸ் எங்களை பத்தி எதுவந்தாலும் சேகரிச்சு வைச்சிட்டிருப்பேன். இன்னும் செய்யறேன். ஆனா 7 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு திடீர்னு எழுத தோணிச்சு. காகிதங்களை தேடி கை போச்சு. பேனா எடுத்து எழுத ஆரம்பிச்சேன். இதுமாதிரி எழுதும்போது நான் என்ன எழுதறேன்னே எனக்கு தெரியாது. எழுதிகிட்டே இருப்பேன். அப்புறம் நினைவு தெரியும் போது தான் அது ஒரு நாவல் மாதிரி இருக்கும். அதுக்கு அடுத்த மாசமே உங்க பெயர்ல அந்த நாவல் வெளி வரும். பார்த்தா வரிக்கு வரி அது நீங்க எழுதினது. அதிலேர்ந்து காலைல, ராத்திரி இப்படி கண்டே நேரத்துல என் நினைவில் இல்லாம எழுதுவேன். ஸ்கூல்ல நான் நர்சரி டீச்சரா இருக்கேன். திடீர்னு உட்கார்ந்து வகுப்புக்கு நடுவில் கூட எழுத ஆரம்பிச்சிடுவேன்.

தெளிவுக்கு வந்ததும் ஆராய்ச்சி பண்ணி பார்த்தேன். இது மாதிரி நடக்க விஞ்ஞான ரீதியா சாத்தியங்கள் இருக்குன்னு தான் சொல்றாங்க. நாம் ஒருத்தரோட அலைவரிசையில் யோசிக்க ஆரம்பிச்சோம்னா அவங்க செய்யற காரியம் நம்மால செய்ய முடியும்னு. ஆனா சாதாரண மக்களுக்கு Ц நான் பைத்தியம். இல்லாட்டி என் மேல பேய் வந்திருக்கு. இப்படி பல தடவை பெண் பார்க்க வந்த நேரத்திலே கூட நான் திடீர்னு எழுத ஆரம்பிச்சதாலே என்னை பைத்தியம்னு முடிவு கட்டிட்டாங்க. என்னோட வேலையும் போயிடுத்து. எங்க அப்பா அம்மா பாக்காத வைத்தியமே இல்லை. ஆனா இது நிக்கவே இல்லை. நீங்க எந்த நேரத்துல கதை எழுதறீங்களோ அதே நேரத்துல நீங்க எழுதினதை நான் எழுதறேன். மத்த நேரத்துல நான் நார்மலா தான் இருக்கேன். அதை யாரும் உணர மாட்டேங்கறாங்க.

இதை நீங்க நம்ப மாட்டீங்க. நம்பித்தான் ஆகணும்.

ஓ காட். இது எப்படி சாத்தியம். இதை என்னால நம்ப முடியலை. ஆனா நீங்க பொய் சொல்லலைன்னு மட்டும் தோணுது என்றேன்.

சரி நான் சொல்ற மாதிரி செய்யுங்க. ஒரு காகிதம் எடுத்து நீங்க ஏதாவது எழுதுங்க. நானும் அதையே எழுதுவேன். பாக்கறீங்களா.

சரி என்று சொல்லி என் பையில் இருந்து இரண்டு காகிதங்களை எடுத்து ஒன்று அவளிடம் தந்தேன். பிறகு ஒரு பெல்ட் டிப்பிட் பேனாவை அவளிடம் கொடுத்தேன். நான் திரும்பி அமர்ந்தேன்.

ஒன்றும் எழுதாமலேயே வாசுகி, நான் எழுதி முடிச்சிட்டேன். நீங்க எழுதினதை படிங்களேன் என்றேன்.

சார். என்னை சோதிக்கிறீங்கன்னு நினைக்கிறேன். நீங்க இன்னும் ஒன்னும் எழுதலை என்றாள் திண்ணமாக.

சரி சரி. சாரி என்று சொல்லி விட்டு மீண்டும் திரும்பி அமர்ந்து எழுத ஆரம்பித்தேன். எனக்கு அவளுடைய திருமணம் என்னால் தான் நின்றுவிட்டதோ என்று உறுத்தியது.

என் வாசகியின் திருமணம் என்னால் தான் நின்றதோ. மனம் வருந்துகிறேன் என்று எழுதிமுடித்தேன்.

பிறகு அவளை திரும்பி பார்த்தேன். அவள் முன்பு போல் இல்லை. அவளுடைய கை எழுதி முடித்து இன்னும் எழுத காத்திருந்தது. சில நோடிகளில் அவள் சகஜமானாள். அவள் கைகளில் இருந்த காகிதத்தை எடுத்து பார்த்தேன். பகீரென்றது.

வரிக்கு வரிக்கு எழுத்துக்கு எழுத்து நான் எழுதிய அதே இரண்டு வரிகள். தூக்கி வாரி போட்டது. அவள் என் கையில் இருந்த காகிதத்தை எடுத்து அப்போது தான் படித்து பார்த்தாள்.

உங்க மன வருத்தம் தெரிவிச்சிருக்கீங்க ரொம்ப நன்றி சார். இப்ப உண்மையின்னும் புரிஞ்சிகிட்டீங்களா என்று கேட்டாள் வாசுகி.

புரிஞ்சிகிட்டேன். ஆனா என் மூளை இன்னும் ஒத்துக்க மாட்டேங்குது. ஒரே குழப்பமா இருக்கு என்றேன்.

சரி சார். நாளைக்கு நான் புதுகோட்டை போறேன். என்னோட என் வீட்டுக்கு வாங்க. நீங்க எழுதினது எல்லாம் எங்க வீட்ல இருக்கு என்றேன்.

அது எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அவள் அழைப்பை ஏற்றுக் கொண்டேன். வீடு திரும்பினேன். தூங்க முயற்சித்தேன். முடியவில்லை. ஆங்கில மருத்துவம் எனக்கு ஒத்துப்போவது இல்லை. இருந்தாலும் எப்போதாவது கதைகளின் தாக்கம் மேலும் எழுத சொல்ல ஆனால் உடல் ஒத்துழைக்காத போது உடலை ஆஃப் செய்வதற்காகவும் எண்ண ஓட்டங்களிலிருந்து தப்பிக்கவும் தூக்க மாத்திரை சாப்பிடுவேன். இன்று அது தேவைப்பட்டது. ஒன்று இரண்டு அல்ல, பல. தற்காலிகமாக இறந்து போனேன்.

gayathri.jagannathan
16-08-2007, 05:44 AM
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிஞ்சதுன்னு ஒரு பழமொழி வழக்குல இருக்கு.. அதப்போல... சாதாரணக் கதையா இருக்கும்னு நெனச்சு படிக்கப் போயி அது இப்போ ஒரு டைப்பா போய்கிட்டு இருக்கே....

ம்ம்ம்.. பார்க்கலாம்.. இன்னும் என்னென்ன வருதுன்னு....

leomohan
16-08-2007, 08:09 AM
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிஞ்சதுன்னு ஒரு பழமொழி வழக்குல இருக்கு.. அதப்போல... சாதாரணக் கதையா இருக்கும்னு நெனச்சு படிக்கப் போயி அது இப்போ ஒரு டைப்பா போய்கிட்டு இருக்கே....

ம்ம்ம்.. பார்க்கலாம்.. இன்னும் என்னென்ன வருதுன்னு....

ஹா ஹா

роЪро┐ро╡ро╛.роЬро┐
16-08-2007, 08:28 AM
சூப்பரான திருப்பம் ....கொஞ்சமல்ல நிறைய வித்தியாசப்படுகிறது கதைக்கரு. எங்கேருந்து சார் பிடிக்கிறீங்க இந்த மாதிரி அட்டகாசமான கருவை. இனி இந்த கதை எப்படி போகுமென்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது.வாழ்த்துக்கள் மோகன்.

leomohan
16-08-2007, 08:36 AM
சூப்பரான திருப்பம் ....கொஞ்சமல்ல நிறைய வித்தியாசப்படுகிறது கதைக்கரு. எங்கேருந்து சார் பிடிக்கிறீங்க இந்த மாதிரி அட்டகாசமான கருவை. இனி இந்த கதை எப்படி போகுமென்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது.வாழ்த்துக்கள் மோகன்.

நன்றி சிவா.

leomohan
16-08-2007, 08:36 AM
7

ரயில் மற்றும் பேருந்து பயணங்களில் களைத்து போயிருந்தேன். அதிகம் பயணம் செய்து பழக்கமில்லாததாலும் வெளியே கிடைக்கும் உணவுகள் உண்ணும் பழக்கம் இல்லாததாலும்.

வழியில் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அவள் பேசிக் கொண்டிருந்தாள். என் எழுத்து அனுபவங்களை பற்றி ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தாள். நான் சிலவற்றிக்கு மட்டும் பதில் அளித்துக் கொண்டிருந்தேன். அவளுடைய இந்த பயங்கர திறமையை பற்றி நான் அதிகம் அலட்டிக் கொண்டதாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் பூகம்பம் உருவாகி கொணடிருந்தது. அதெப்படி நான் எழுதியதை அவள் எழுதுகிறாள். என் புத்தகங்களை பார்த்து அவள் எழுதினாள் என்று வைத்துக்கு கொள்வோம். காணாமல் போன 30 பக்கங்களை அவள் தான் எடுத்தாள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ஓட்டலில் நான் எழுதியதை அவள் அப்படியே எப்படி எழுதினாள். இது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.

பேருந்த நிலையத்துக்கு அருகிலேயே ஒரு விடுதியில் தங்க முடிவு செய்தேன். இரவு ஆகிவிட்டதால் அவள் வீட்டிற்கு செல்வது சரியல்ல. அவள் மறுநாள் காலை சிற்றூண்டிக்கே வீட்டிற்கு வரும்படி அழைத்துவிட்டு கைரிக்ஷாவில் ஏறி வீடு சென்றடைந்தாள்.

தூக்க மருந்து தேவைப்பட்டது. எடுத்த வரவில்லை என்று உண்மை புலப்பட்டது. ஓட்டலில் என் பையை வைத்துவிட்டு, குளித்து முடித்து ஒரு காபி சாப்பிட்டுவிட்ட மருந்துக் கடையை நோக்கி கிளம்பினேன்.

மருந்துக் கடையில் என்னை இனம் கண்டுக் கொண்டார் கடைக்காரர். அடே நீங்களா சார். எப்படி இருக்கீங்க. ஏதாவது புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கீங்களா. உட்காருங்க என்று சொல்லி உபசரித்தார்.
அவர் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அருகில் பேசிக் கொண்டிருந்த சிலருடைய பேச்சு என் கவனத்தை ஈர்த்தது.

அதெப்படி டா உன் பொண்டாட்டி மேல சாமி வந்ததுன்னு சொல்றே. இதெல்லாம் சுத்த பேத்தல்.

டேய் அவ குரலே மாறிப்போச்சுடா. யாரை பத்தியோ என்னென்னமோ சொல்றாடா. சந்திரமுகி பார்த்த மாதிரி இருக்குது என்றார் ஒருவர்.

அவருடைய நண்பர் போல் இருந்து இன்னொருவர், டேய் டாக்டர்கிட்டே அழைச்சிகிட்டு போடா. எல்லாம் சரியாயிடும் என்றார்.

டாக்டர்கிட்டே போனேன்டா. அவரு உடம்பு நல்லாத்தான் இருக்கு மனசு சரியில்லைன்னு சொல்றாரு. சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே காட்ட சொல்றாரு. எங்கம்மாவுக்கு தெரிஞ்சுது என் பொண்டாட்டி பைத்தியம்னு சொல்லி தள்ளி வைக்கச் சொல்லிடுவாங்க. இதுக்கு என்ன வழி.

டேய் எனக்கு தெரிஞ்ச மாந்திரீகம் பண்ற ஒருத்தர் இருக்காரு. அவர்கிட்டே அழைச்சிட்டு போனா எல்லாம் சரியாயிடும். பேய் கீய் புடிச்சிருந்தா விரட்டிவிட்டுவாரு.

பேயா, சுத்த பேத்தல். டேய் நீ உன் பொண்டாட்டிய சைக்கியாட்டிரிஸ்ட் கிட்டே அழைச்சிகிட்டு போடா.

இன்னொரு கதையின் கரு கிடைத்த மாதிரி இருந்தது ஒரு நிமிடம். பிறகு அட இப்போது நடந்துக்கிட்டிருக்கற என் கதையின் கருமாதிரி இருக்கே என்று வியந்தேன்.

கடைக்காரரிடம் அமிர்தாஜன் வாங்கினேன். தூக்க மாத்திரையை தவிர்த்தேன். மறுநாள் ஏதாவது ஒரு பத்திரிக்கையில் தூக்க மாத்திரையில் வாழும் பிரபல இரண்டெழுத்து கதை ஆசிரியர் என்று கிசுகிசு வந்தாலும் வரும்.
கடைக்காரரிடம் நன்றி சொல்லி கிளம்பினேன். 3 மணி இருக்குமா. இருக்கும். உறங்கிப்போனேன்.

leomohan
16-08-2007, 08:46 AM
8

மறுநாள் காலை குளித்து முடித்து வாசுகியின் வீட்டிற்கு சென்றேன். அவர்களுடைய பெற்றோர் நான் யாரென்று தெரிந்ததும் அதிக வரவேற்பு தரவில்லை. வில்லன் நீ என்பது போல் பார்த்தனர். அவளுடைய வாழ்கையை நானே கெடுத்ததுபோல் ஒரு முறைப்பு வேறு. வணக்கம் தெரிவித்து உணவு மேசையில் அமர்ந்தேன்.

நடுத்தர குடும்பத்து வீடு. கிடைத்த சொற்ப பணத்தில் அலங்கரித்திருந்தார்கள். சனல், ப்ளாஸ்டிக், கண்ணாடி போன்ற பொருட்களில் கைவேலைகள் செய்து அழகுபடுத்தியிருந்தார்கள்.

பளிச்சென்ற எவர்சில்வர் தட்டில் சுடச்சுட இட்லிகள் வந்து விழ பசியில் 10-15 உள்ளே தள்ளினேன். பிறகு அவள் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். அழகான சிறிய அறை. நன்றாக சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. கோடியில் ஒரு புத்தக அலமாரி.

இங்கே பாருங்க சார். நீங்கள் எழுதின கதைகள் என்று அலமாரியின் ஒரு பகுதியை காட்டினாள். பிரம்மித்துப்போனேன். பூல்ஸ்கோயர் தாட்களில் கட்டுக் கட்டாக என்னுடைய கதைகள். என்னுடைய 7 வருட படைப்புகள் என்னிடமே இருக்குமா என்ற சந்தேகம். பழைய சர்கார் அலுவலகங்களில் இருப்பது போல் நூல் வைத்த பின்னில் கட்டி வைத்திருந்தாள். இனி ஒரு முறை எனும் நாவலில் துவங்கி, கடைசியாக எழுதிய நீரும் நெருப்பும் வரை அனைத்தும் இருந்தது.

ஆச்சர்யம் அடைந்தேன். பீதி அடைந்தேன். மலைத்தேன்.

அதற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த டையரிகளை பார்த்தேன்.
வாசுகி, நீங்களும் டையரி எழுதற பழக்கம் வச்சிருக்கீங்களா

சார், அது உங்க டையரி என்றாள்.

பகீரென்றது. சுமார் 7 டையரிகள். சட்டென்று 7 வருடத்திற்கு முந்தைய டையரியை எடுத்து அவசரமாக நவம்பர் 18ம் தேதிக்கு போனேன். கழுத்தை நெருக்கும் அருணாகயிறை வெட்டி எறிந்தேன் இன்று என்று நான் எழுதியிருந்தது அப்படியே இருந்தது. கண்கள் சுழன்றது. மயக்கம் வரும்போல் இருந்தது.

சார், உங்க மனைவி பேர் அருணா தானே.

ஆமாம் என்றேன் சற்றே வேர்த்தது. பயந்திருந்தேன் என்று சொல்லலாம்.

அவங்களை ஏன் கொன்னீங்க.

உடல் நடுங்கியது எனக்கு. வரக்கூடாத கேள்வி வந்துவிட்டது.

என்ன, என்ன சொல்றே நீ?

சார், அரணா கயிறை அருணா கயிறுன்னு எழுதியிருக்கீங்க. அரணா கயிறு இடுப்புல கட்டறது. நவம்பர் 18ம் தேதி தான் உங்க மனைவி விபத்துல செத்தாங்க என்றாள்.

நான் செத்துப்போயிருப்பேன் ஒரு நிமிடம்.

என்ன, என்ன சொல்றே நீ. நான், நான் என் பொண்டாட்டியை கொல்லலை என்றேன். அதற்கு பிறகு என்ன சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. உளறிக் கொண்டிருந்தேன்.

leomohan
16-08-2007, 09:27 AM
9
பிறகு அவளிடம் விடைபெற்று அவசரமாக என் விடுதிக்கு திரும்பி படுக்கையில் பொத்தென்று விழுந்தேன். என் உடல் நடுங்கியது. பயத்தில் சூடு அதிகமானது. ஜூரம் வந்திருக்கும் போல. தொலைபேசியில் விடுதியினரை அழைத்து உணவும் மருந்தும் தரச் சொல்லி போர்த்திக் கொண்டு படுத்துவிட்டேன்.
எத்தனை மணி நேரம் என்று தெரியவில்லை. பல மணி நேரம் தூங்கியது போல் இருந்தது. சட்டென்று எழுந்துபோது மாலை 6 மணி இருக்கும். என் எதிரில் வாசுகி அமர்ந்திருந்தாள்.

சார், நீங்க அவசர அவசரமா வந்துட்டீங்க. வந்து பார்த்தா உங்களுக்கு நல்ல ஜூரம். அதனால ஏதாவது உதவி தேவைப்படலாம்னு இங்கேயே உட்கார்ந்திருந்தேன்.

நன்றி என்று சொல்லி சங்கடமாக சிரித்தேன்.

சார். நீங்க உங்க டையரியை என் வீட்டில் பார்த்தும் பயந்து போயிட்டீங்கன்னு நினைக்கிறேன். 7 வருஷமா யார்கிட்டேயும் சொல்லாத நானா இப்ப உங்களை காட்டிக் கொடுக்கப் போறேன், சொல்லுங்க.

ம்ம என்று சங்கடமாக நெளிந்தேன். நான் அவளை கொல்லலை என்று சொன்னது என் காதிலே விழவில்லை.

சார் நீங்க கொன்னீங்களான்னு கேட்டேன் அவ்வளவு தான். நீங்க அப்பாவி சார். அப்படியே கொன்னிருந்தாலும் ஏன் டையரியில் எழுதனீங்க சொல்லுங்க. இதெல்லாம் எழுதற விஷயமா. போலீசே அது விபத்துன்னு முடிவு செஞ்சிட்டுது. அப்புறம் என்ன. கவலையை விடுங்க.

நான் விடுவதாக இல்லை. நான் கொலை பண்ணலை வாசுகி. அவ செத்துப்போனதுல எனக்கு நிம்மதி தான். ஆனால் அவளை நான் கொல்லலை என்றேன் விடாப்பிடியாக.
சரி சார். உங்களுக்குள்ள என்ன பிரச்சனை. எங்கிட்டே சொல்லலாமா.

நான் மௌனமாக இருந்தேன்.

அவள் பரவாயில்லை சார். நாம நெருங்கி பழகனா உங்களுக்கு என் மேலே நம்பிக்கை வந்துடப்போகுது.

நான் மௌனத்தை தொடர்ந்தேன்.

அவள் எனக்கு மாத்திரை எடுத்து கொடுத்து என்னை படுக்கவைத்து போர்வையை போற்றிவிட்டு, நாளைக்கு ஊருக்கு போகாதீங்க சார். நல்ல உடம்பு சரியானதும் போனா போதும். நான் நாளைக்கு வந்து உங்களை பார்க்கறேன் என்றாள்.

நன்றி என்று சொல்லி உறங்கச் சென்றேன் மீண்டும்.

leomohan
16-08-2007, 09:28 AM
10

மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் இருந்தேன். ஜூரம் போய்விட்டது. சீக்கிரம் மெட்ராஸ் போனால் போதும் என்று நினைத்துக் கொண்டே காபிக்கு உத்தரவிட்டேன். காபி வந்தது. கூடவே வாசுகியும் உள்ளே நுழைந்தாள்.

வணக்கம் சார். எப்படி இருக்கீங்க என்றாள்.

நல்லா இருக்கேன் வாசுகி. நான் ஊருக்கு போகலாம்னு இருக்கேன்.

அதுக்கு முன்னாடி நீங்க சந்திக்க வேண்டியவர் இருக்கார் என்றேன்.

காவல் துறை அதிகாரி உள்ளே நுழைந்தார்.

சார் நீங்க இவங்களை கொல்ல முயற்சிக்கலாம்னு இவங்க புகார் கொடுத்திருக்காங்க. உங்க கிட்டேர்ந்து பாதுகாப்பும் கேட்டிருக்காங்க. அதனால உங்களை நாங்க அரெஸ்ட் பண்றோம் என்றார் அவர்.

என்ன உளர்றீங்க என்றேன் நான் மறுபடியும் ஜூரம் வரும்போல் இருந்தது.

அது மட்டுமில்லை சார். நீங்க உங்க மனைவியை கொன்னதுக்கும் அவங்க கிட்டே ஆதாரம் இருக்குன்னு சொல்றாங்க.

என்ன பைத்தியக்காரத்தனம் இது. என்ன வாசுகி இதெல்லாம் என்றேன் கோபமாக.

அவள் ஒரு காகிதத்தை எடுத்துக் காட்டினாள். அதில் வாசகி ஒருத்தி எல்லை மீறுகிறாள். அவளை துண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று எழுதியிருந்தது.

என் கண்கள் மங்கலானது. யாரோ என்னை இழுத்துக் கொண்டு எங்கோ அழைத்துபோனது மட்டும் தெரிந்தது. எங்கு என்று தெரியவில்லை. தெளிந்ததும் தான் நான் சிறையில் இருப்பதை உணர்ந்தேன்.

எனக்கு கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கால்களால் சுவற்றை எட்டி உதைத்தேன்.

SathishVijayaraghavan
16-08-2007, 12:10 PM
எப்படி பாராட்டுவது உங்களை என்று தெரியவில்லை... கதை அதன் உச்சத்தை அடைந்துள்ளதை அரிய முடிகிரது... ஆவலுடன் அடுத்துவரும் பக்கங்களுக்காக...

leomohan
16-08-2007, 12:14 PM
எப்படி பாராட்டுவது உங்களை என்று தெரியவில்லை... கதை அதன் உச்சத்தை அடைந்துள்ளதை அரிய முடிகிரது... ஆவலுடன் அடுத்துவரும் பக்கங்களுக்காக...

நன்றி சதீஷ். விரைவில் அடுத்த பாகம்....

pathman
17-08-2007, 07:49 AM
திரும்பவும் ஒரு நல்ல கதையை தந்துள்ளீர்கள் நன்றி லியோ அவர்களே

роЪро┐ро╡ро╛.роЬро┐
17-08-2007, 08:32 AM
எப்படி முடியப்போகிறது என்ற ஆவலை தூண்டிவிட்டது இந்த அத்தியாயம்.இனி பொறுமையில்லை...மோகன் சார் சீக்கிரமா வாங்க..

leomohan
18-08-2007, 01:23 PM
11

கொலை சென்னையில் நடந்ததிருந்ததால் என்னை சென்னை சிறைக்கு மாற்றினார்கள்.

வாசுகி என்னை பார்க்க வந்ததும் எனக்கு கோபம் தலைகேறியது.

நான் உனக்கு என்ன பண்ணேன். ஏன் என்னை மாட்டிவிட்டே?

சார், நான் ஏன் சார் உங்களை மாட்டிவிடனும். எனக்கு இந்த ரகசியம் 7 வருஷமா தெரியும். நான் யார்கிட்டேயும் சொன்னதில்லை. நீங்க என்னை கொன்னுடவேன்னு எழுதியதாலே தான் நான் பயந்து போய் போலீஸ் கிட்டே போனேன்.

என்ன உளர்றே நான் ஒன்னும் எழுதலை.

சார் முந்தாநேத்தி ராத்திரி 11 மணிக்கு நீங்க எழுதியிருக்கீங்க. அதனால தான் நானும் எழுத ஆரம்பிச்சேன். வாசகி ஒருத்தி எல்லை மீறுகிறாள். அவளை துண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது ன்னு எழுதினதை பார்த்து பயந்துட்டேன்.

நான் ஒரு நிமிடம் யோசித்தேன். ஜூரத்தில் இருந்தாலும் எனக்கே அறியாமல் இப்படி எழுதுவதற்கு நான் ஒன்றும் கிராக்கு இல்லை.

நான் ஒன்னுமே எழுதலை. எனக்கு நல்லா நினைவு இருக்கு. நீ ஏதோ சூழ்ச்சி செய்யறே.

சார் நீங்க எழுதினது உங்களுக்கு தெரியாம இருக்கலாம். அல்லது ஜூரத்துல என்ன செய்யறீங்கன்னு தெரியாம இருந்திருக்கலாம். நீங்க எனக்கு இந்த உண்மை தெரிஞ்சிடுத்துன்னு உங்களுக்கு தெரிஞ்சதும் நீங்க பயந்து போனது உண்மை. அதனால் தான் உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போயிடுத்து.

நான் அவளிடம் மேலும் பேச விரும்பவில்லை. நீ போகலாம். எனக்கு உன் கிட்டே பேசறதுக்கு இஷ்டம் இல்லை.

அவள் மௌனமாக திரும்பினாள். அவள் மீது வருத்தமும் கோபமும் மாறி மாறி வந்தது.

இனி என்னை பார்க்க யாரும் வரப்போவதில்லை. கிட்டதட்ட நான் அநாதை தான். சில மாதங்களுக்கு முன்பு என் மனைவியின் தங்கையும் என் மாமியாரும் வந்து சில நாட்கள் இருந்து சென்றனர். மனைவியின் தங்கைக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்கள். அதற்கு புடவை நகை வாங்க சென்னை வந்திருந்தார்கள். என் மனைவி இறந்த பிறகு அவர்கள் குடும்பத்துடன் இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்துவிட்டது. எப்போதாவது பார்த்துக் கொள்வதோடு சரி. நான் அநாதை. முற்றிலும். இன்று அநாதையாவதன் அழுத்தத்தை உணர்ந்தேன்.

ஆச்சர்யமாக ராஜன் வந்திருந்தார். மலர்ந்த முகத்தோடு வரவேற்றேன். நான் அநாதை இல்லை. எனக்கும் நண்பர்கள் உண்டு.

வாங்க ராஜன்.

சார் உங்களோட தைரியத்தை பாராட்டனும். கொலை பழியில் உள்ளே வந்திருந்தாலும் இவ்வளவு சகஜமாக இருக்கீங்க.

ராஜன், நான் என் பொண்டாட்டியை கொலை பண்ணலை. இந்த வாசுகி பொண்ணுக்கு ஏதோ பைத்தியம் பிடிச்சிருக்கு. அதனால் தான் இப்படி உளர்றா. அதுமட்டுமில்லை இந்த போலீசும் அவளை நம்பி என்னை கைதி பண்ணியிருக்கு. நான் ஏன் கவலை படனும்?

எப்படியோ சார், நீங்க நல்லபடியா திரும்பி வந்து பழையபடி நம்ம நட்பு தொடர்னும்.

அடே நீங்க கவலைபடாதீங்க சார். நீங்க தான் பிஸ்னஸ்மேனாச்சே. சிறையிலிருந்து மணி எழுதும் புரட்சி நாவல்னு விளம்பரம் கொடுங்க. எனக்கு பேனா பேப்பர் எல்லாம் ஏற்பாடு பண்ணுங்க. அடுத்த நாவலுக்கு கரு ரெடி. இங்கிருந்தே எழுதி தரேன்.

ஆஹா. நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு தெரியும். அதனால் கையோட கொண்டு வந்திருக்கேன் என்று ஒரு பாக்கெட்டை என்னிடம் கொடுத்தார்.

அவருக்கு நன்றி சொன்னேன். அவரும் நன்றி கூறி விடைபெற்றார்.

leomohan
18-08-2007, 01:23 PM
12

கேஸ் கோர்டுக்கு வந்திருந்தது.

பல நிமிடங்கள் கேள்விகள்.

என்னுடைய வக்கீல் வரதராஜன், ராஜன் ஏற்பாடு செய்திருந்த மனிதர். என்னிடம் சிறையில் எதுவும் பேசி அலட்டிக் கொள்ளவில்லை.

முதல் 15 நிமிடத்தில் சாட்சி ஒரு மனநோயாளி என்று நிரூபித்தார். வாசுகியின் தாய் தந்தை அனைவரையும் அழைத்து கூண்டில் ஏற்றினார். அவர் வேலை செய்த பள்ளிக் கூடத்தில் உடன் பணி புரிந்து ஆசிரியை-ஆசிரியர்களை கொண்டு வந்து நிறுத்தினார்.

இதுவரையில் எனக்கு வந்த வாசகர் கடிதங்களை காட்டினார். ஒன்று கூட அவள் எழுதிய கடிதங்கள் இல்லை. இவ்வளவு தீவிரமான ரசிகை ஏன் 7 வருடங்களில் ஒரு முறை கூட என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று வாதாடினார்.

அரசாங்க தரப்பு வக்கீல் வெவெலுத்துப் போனார். வழக்கை தள்ளி வைக்கும்படி கோரினார்.

நான் என் உதடுகளிலிருந்து மறையாத சிரிப்புடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வபோது ராஜனையும் வாசுகியையும் பார்த்தேன். வாசுகியின் முகம் சோகமாக இருந்தது.

எனக்கு அவள் மேல் பரிதாபம் ஏற்பட்டது. ஒரு வேளை அவள் தன்னை காத்துக் கொள்ள என்னை மாட்டிவிட்டாளோ. எதாக இருந்தாலும் பரவாயில்லை. என் மனைவி ஒரு விபத்தில் இறந்தாள் என்று காவல்துறையே சொல்லிவிட்டது. இனி இல்லை என்று சொன்னால் அவர்களுக்கு தான் அவமானம். 7 வருடங்களுக்கு பிறகு ஒரு விபரமும் இவர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.

சிறையில் சில நாட்கள் கழித்தேன். ஜாமீனில் விடுதலை அடைந்தேன். கொலை குற்றத்தில் மாட்டியிருந்தாலும் சமுதாயத்தில் என் அந்தஸ்தை கருதி ஜாமீன் கொடுத்திருந்தார்கள். சாட்சிகளுடன் விளையாடுவதாக தகவல் தெரிந்தால் ஜாமீன் ரத்தாகிவிடும் என்று எச்சரித்திருந்தார்கள். சாட்சிகள் இருந்தால் தானே விளையாடுவதற்கு. இருக்கும் ஒரு சாட்சியும் பைத்தியம். நிம்மதியாக வீடு வந்து சேர்ந்தேன்.

ஆனால் வழக்கு தொடர்ந்த போது என் வக்கீல் தான் வெலுவெலுத்து போனார்.

leomohan
18-08-2007, 04:16 PM
13

வழக்கு தொடர்ந்ததும் கதை தலை கீழாக ஆனது. அரசு தரப்பு வக்கீல் போட்டு தாக்கிக் கொண்டிருந்தார்.

சாட்சி மனநிலை சரியில்லாதவள் என்று எந்த மருத்துவரும் சான்றிதழ் தரவில்லை. மேலும் மனநிலை சரியில்லாதவள் என்று முடிவெடுக்க அவருடைய பெற்றோரோ உடன் பணி புரிந்தவர்களோ செய்ய முடியாது. விஞ்ஞானத்தால் விளக்கப்படாத பல விஷயங்கள் உண்டு. அதில் இவருக்கு உள்ள சக்தியும் ஒன்று.

மேலும் அவர் எழுதிய கதைகளை வேண்டுமென்றால் மணி அவர்களுடைய புத்தகம் வெளிவந்த பிறகு எடுத்த நகல்களாக இருக்கலாம். ஆனால் அவருடைய டையரிகளின் பிரதிக்கு என்ன பதில் தரப்போகிறார் எதிர் தரப்பு வக்கீல்.

என் வக்கீல் கம்பீரமாக எழுந்தார்.

இது ரொம்ப சாதாரணமான விஷயம் தான். யார் வேண்டுமானாலும் அவருடைய வீட்டிற்கு சென்று டையரிகளை திருடி அதை நகல் எடுக்கலாம்.

இருக்கலாம். அவ்வாறு புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு சாதாரண வாசகி செய்ய வேண்டிய அவசியம் என்ன? மணியிடம் சொத்தும் இல்லை. அவர் மீது இவருக்கு காதலோ தனிப்பட்ட விரோதமோ இல்லை. அவ்வாறு இருக்க ஏன் அவருடைய டையரிகளை திருடி பிரதி எடுக்க வேண்டும்.

இதற்கு என் வக்கீலிடம் பதில் இல்லை. பேந்த பேந்த முழித்தார்.

மேலும் ஒரு விஷயம். அன்றிரவு இவர் ஓட்டல் அறையில் இரவு 11 மணிக்கு எழுதியதையும் வாசுகி பிரதி எடுத்திருக்கிறார். இதோ பாருங்கள் இவருடைய டையரில் எழுதியிருப்பதை. இந்த சீட்டு வாசுகி அவர்கள் எழுதியது.

நீதிபதி இரண்டையும் வாங்கிப் பார்த்தார்.

பிராஸிக்யூஷன் இன்னும் தெளிவான சாட்சிகளோடு வரவேண்டும். இந்த அமானூட சக்தி, டெலிபதி, இ எஸ் பி எல்லாமே நிரூபிக்க படாமலே இருக்கு இல்லையா.

நீதிபதியின் இந்த கேள்விக்கு அரசாங்க வக்கீல் ஆம் என்றார்.

என் வக்கீலும் ஆம் என்றார்.

இதோ பாருங்க. இந்த பெண்ணை நன்றாக பரிசோதித்து இவர் மனநிலை சரியாக உள்ளார் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. அதே நேரத்தில் மணி தான் அவருடைய மனைவியை கொலை செய்தார் என்பதையும் நிரூபிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. ஒருவேளை மணியால் வாசுகியின் உயிருக்கு ஆபத்து என்று நீங்கள் கருதும் பட்சத்தில் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது உங்கள் கடமை என்று சொல்லி வழக்கை மீண்டும் தள்ளி வைத்தார்.

அரசாங்க வக்கீல் விளாசியதில் வெளிறிப்போயிருந்த என் முகத்திற்கு சற்றே சிவப்பு ரத்தம் வந்து சகஜமானேன். இருந்தாலும் இந்த வரதராஜன் சொதப்பிவிட்டார் என்று நினைத்தேன். அநாவசியமாக அவரே பாயிண்டை கொடுத்த மாட்டிக் கொண்டார். அவருக்கு ஒரு லெக்சர் கொடுக்கனும் என்று நினைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி வீட்டை சென்று அடைந்தேன். காகிதங்கள் எடுத்த கதையில் கவனம் செலுத்த முயன்றேன்.

ஆனால் இறந்து போன என் மனைவி எதிரே வந்து பயமுறுத்தினாள். 7 வருடங்களாக பூமியில் புதைந்த சடலம் எதிரே வந்து பூச்சாண்டி காட்டுவது போல் இருந்தது.

நீ என்ன செஞ்சே. உன்னை ஏன் நான் கொன்னேன்னு உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். இந்த டையரியெல்லாம் கூட உன் கொலையை விசாரனை செஞ்ச போலீஸ் கூட பாக்கலை. இப்ப இந்த வாசுகி புதுசா முளைச்சு கதையை கந்தலாக்கறாளா என்று யோசித்தேன்.

மனம் கதையில் லயிக்கவில்லை. வெறும் கோடுகளாய் கிழித்துக் கொண்டிருந்தேன்.

leomohan
18-08-2007, 04:17 PM
14

நான் டையரியில் எழுதியது மட்டுமே வாசுகியின் கொலைக்கான காரணமாக இருக்க முடியாது என்று என் வக்கீல் வாதாடினார். மேலும் கொலை செய்வதற்கு முன்னால் யாரையும் கொலையாளி என்று சொல்ல முடியாது என்று சொன்னார்.

என் மனைவியின் கொலையில் பக்கா சாட்சிகள் இருந்தால் மீண்டும் கோர்டில் சந்திக்க தயார் என்று சொன்னார்.

வாசுகிக்கு என்னால் எந்த பிரச்சனையும் வராது என்று உத்திரவாதமும் கொடுத்தார்.

டையரிகள் எந்த காரணத்தினால் எழுதப்பட்டிருந்தாலும் அது மணியுடைய தனிப்பட்ட சொத்து அதை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

வழக்கு தள்ளுபடியானது. மருத்துவர்கள் அவள் மனநோயாளி இல்லை என்று சொல்ல, நீதி மன்றம் அவளுடைய விசித்திரமான பழக்கத்தை ஆராய மேலும் அவளை சிறிது காலம் மருத்துவமனையில் வைக்க சொல்லி உத்தரவிட்டார்கள்.

மனம் லேசானது. இந்த வழக்கு தள்ளுபடியானாலும் என்னால் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.

மனம் புழுங்கியது. வீட்டிற்கு சென்றதும் ஒரு யோசனை வந்தது. ஒரு காகிதத்தை எடுத்து என் பெயர் கெட்டுவிட்டது. இனி நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை. இன்றே இப்போதே நான் தற்கொலை செய்துக் கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதிவிட்டு கடிகாரத்தை பார்த்தபடி அமர்ந்தேன்.

சரியாக 15 நிமிடம் வீட்டின் முன் போலீஸ் வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. சட்டென்று அந்த காகிதத்தை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று தண்ணீர் குடித்து அமர்ந்தேன். கைகளில் காகிதம் எடுத்துக் கதையை தொடர்வது போல் நடித்துக் கொண்டிருக்க, வேண்டுமென்றே பூட்டாமல் வைத்திருந்த கதவை தள்ளி திறந்து போலீஸ் உள்ளே நுழைந்தது. அவர்களுடன் வாசுகி. ஒருவர் என்னருகில் இருக்க இன்னொருவர் என் மேசை மீதும், என்னுடைய காகிதங்களிலும் எதையோ வேகமாக தேடினார். பிறகு அலமாரியிலிருந்து இந்த வருட டையரியை எடுத்து புரட்டினார். பிறகு மேலதிகாரியை பார்த்து அதுமாதிரி ஒன்னும் கிடைக்கலை சார் என்றார்.

அதுவரை அமைதியாக இருந்த நான். சார், கேஸ் தான் முடிஞ்சிடுத்து. இன்னும் என்ன? இங்கே என்ன தேடறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

மிஸ்டர் மணி, நீங்க தற்கொலை பண்ணிக்கப்போறதா எழுதியிருக்கீங்க. அது எங்கே?

என்ன பைத்தியக்காரத்தனம் இது? நான் ஏன் தற்கொலை செஞ்சிக்கனும்? கேஸ் முடிஞ்சி வெற்றியோட வந்திருக்கேன் நானும் என்றேன் காட்டமாக.

உடனே அவர் வாசுகியின் கையில் இருந்த காகிதத்தை எடுத்து அவர் காண்பித்தார்.

சார், எனக்கு சிரிப்பு தான் வருது. யாரோ ஒரு பொண்ணு, ஏதையோ கிறுக்கிட்டு, அதை நான் எழுதறேன்னு சொல்றாங்க. கையெழுத்து அவங்களோடது, எழுதனது அவங்க, தற்கொலை நான் பண்ணிக்க போறேனா. தமாஷூ தமாஷூ என்று கடுப்படித்தேன்.

நொந்து போனார் காவல் அதிகாரி. ஏம்மா இப்படி எங்களை அலைய வைக்கறீங்க. இனிமே இதுமாதிரியெல்லாம் பண்ணாதீங்க என்று சொல்லி என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு திரும்பினார்.

மறுநாள் மன நோய் மருத்துவமனையில் அவளை சந்தித்தேன்.

வாசுகி, உன் கிட்டே இருக்கற அற்புத சக்தியை நான் பாராட்டறேன். விஞ்ஞானத்தால புரிஞ்சிக்க முடியாட்டாலும் என்னால புரிஞ்சுக்க முடியுது.

நீ சொன்னது சரிதான். நான் தான் என் பொண்டாட்டியை கொன்னேன். அது ஒரு பெரிய கதை. அது உனக்கு தேவையில்லாதது.

எனக்கு உன் மேலே விரோதமோ, பகையோ இல்லை. என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை. இனிமே எல்லார் கண்ணுக்கும் நீ பைத்தியம் தான்.

நீ பைத்தியம் இல்லைன்னு சொன்னாலும் யாராலேயும் நம்ப முடியாது.

நான் செஞ்ச கொலைக்கு சாட்சி எதுவும் இல்லை. இப்ப ஏற்கனவே இருந்த உன் சக்தியையும் நான் பைத்தியமாக்கிட்டேன். இனி யாராலேயும் எனக்கு தொந்தரவு இல்லை. வரட்டா? என்று சொல்லி குதுகுலமாய் வெளியேறினேன்.

மு1முற்றும்.

leomohan
18-08-2007, 04:21 PM
15

------------------------

மறுநாள் மன நோய் மருத்துவமனையில் அவளை சந்தித்தேன்.

வாசுகி, உன் கிட்டே இருக்கற அற்புத சக்தியை நான் பாராட்டறேன். விஞ்ஞானத்தால புரிஞ்சிக்க முடியாட்டாலும் என்னால புரிஞ்சுக்க முடியுது.

நீ சொன்னது சரிதான். நான் தான் என் பொண்டாட்டியை கொன்னேன். அது ஒரு பெரிய கதை. அது உனக்கு தேவையில்லாதது.

எனக்கு உன் மேலே விரோதமோ, பகையோ இல்லை. என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை. இனிமே எல்லார் கண்ணுக்கும் நீ பைத்தியம் தான்.

நீ பைத்தியம் இல்லைன்னு சொன்னாலும் யாராலேயும் நம்ப முடியாது.

நான் செஞ்ச கொலைக்கு சாட்சி எதுவும் இல்லை. இப்ப ஏற்கனவே இருந்த உன் சக்தியையும் நான் பைத்தியமாக்கிட்டேன். இனி யாராலேயும் எனக்கு தொந்தரவு இல்லை. வரட்டா? என்று சொல்லி குதுகுலமாய் வெளியேறினேன்.

வீட்டிற்கு வந்து எழுதி முடித்த நாவலை கையில் எடுத்துக் கொண்டு பல்சுவை பதிப்பகத்தை நோக்கி நடந்தேன். என் மனைவிக்கு விபத்து ஏற்படுத்திய இடத்தை தாண்டும் போது, நின்று மெல்ல சிரித்தேன்.

பின்னால் பலத்த ஓசையுடன் ஒரு லாரி வந்து மோதியது. நினைவிழக்கும் முன் இனி என்னால் எப்போதுமே எழுத முடியாது, குளிக்க முடியாது, சாப்பிட முடியாது, சுவாசிக்க முடியாது என்று தோன்றியது. அதற்கு மேல் எழுத நான் இருக்கவில்லை.

மு2முற்றும்.

leomohan
18-08-2007, 04:23 PM
முதல் முடிவு - யதார்த்ததில் தர்மம் வெல்லுவதில்லை என்பவர்களுக்காக்.

இரண்டாம் முடிவு - சத்யமேவ ஜெயதே என்பவர்களுக்காக.

மூன்றாவது முடிவு - பகுத்தறிவு முடிவு விரைவில்

leomohan
18-08-2007, 04:53 PM
16

கதை 13வது அத்தியாயம் முடிந்த பிறகு மீண்டும் இங்கிருந்து தொடர்கிறது

நான் டையரியில் எழுதியது மட்டுமே வாசுகியின் கொலைக்கான காரணமாக இருக்க முடியாது என்று என் வக்கீல் வாதாடினார். மேலும் கொலை செய்வதற்கு முன்னால் யாரையும் கொலையாளி என்று சொல்ல முடியாது என்று சொன்னார்.

என் மனைவியின் கொலையில் பக்கா சாட்சிகள் இருந்தால் மீண்டும் கோர்டில் சந்திக்க தயார் என்று சொன்னார்.

வாசுகிக்கு என்னால் எந்த பிரச்சனையும் வராது என்று உத்திரவாதமும் கொடுத்தார்.

டையரிகள் எந்த காரணத்தினால் எழுதப்பட்டிருந்தாலும் அது மணியுடைய தனிப்பட்ட சொத்து அதை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

வழக்கு தள்ளுபடியானது. மருத்துவர்கள் அவளை மனநோயாளி என்று முடிவு செய்தனர். மேலும் அவளுடைய விசித்திரமான பழக்கத்தை ஆராய அவளை உளவியல் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள்.

மனம் லேசானது. அடுத்த மாதத்து நாவலை எடுத்துக் கொண்டு ராஜனை சந்திக்கச் சென்றேன்.

மறுநாள் மன நோய் மருத்துவமனையில் அவளை சந்தித்தேன்.

வாசுகி, உன் கிட்டே இருக்கற அற்புத சக்தியை நான் பாராட்டறேன். விஞ்ஞானத்தால புரிஞ்சிக்க முடியாட்டாலும் என்னால புரிஞ்சுக்க முடியுது.

நீ சொன்னது சரிதான். நான் தான் என் பொண்டாட்டியை கொன்னேன். அது ஒரு பெரிய கதை. அது உனக்கு தேவையில்லாதது.

எனக்கு உன் மேலே விரோதமோ, பகையோ இல்லை. என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை. இனிமே எல்லார் கண்ணுக்கும் நீ பைத்தியம் தான்.

நீ பைத்தியம் இல்லைன்னு சொன்னாலும் யாராலேயும் நம்ப முடியாது.

நான் செஞ்ச கொலைக்கு சாட்சி எதுவும் இல்லை. இப்ப ஏற்கனவே இருந்த உன் சக்தியையும் நான் பைத்தியமாக்கிட்டேன். இனி யாராலேயும் எனக்கு தொந்தரவு இல்லை. வரட்டா? என்று சொல்லி குதுகுலமாய் வெளியேறினேன்.

எதிர்பட்டாள் என் மனைவியின் தங்கை.

ஏய் நீ என்ன இங்கே பண்றே என்றேன் வியப்புடன். அவள் மருத்துவரோ அல்லது மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த படிப்பும் படித்தவள் இல்லை.

அத்தான் இவர் தான் நான் கட்டிக் போறவரு. பேர் வினோத் என்ற ஒரு நெட்டையான ஆண்மகனை அறிமுகப்படுத்தினாள்.

ஹலோ என்று அவருக்கு கை கொடுத்தேன்.

ஹலோ மணி சார், என் பெயர் வினோத். இன்ஸ்பெக்டர் வினோத் என்றார். என் முதுகை குளிர் தொட்டுச் சென்றது.

ஒரு நிமிஷம் இந்த ரூமுக்கு வரீங்களா என்றான். அவன் காட்டிய அறைக்குள் நுழைந்தேன். அங்கு மேலும் இரண்டு காவல் துறையினர் இருந்தனர். பகீரென்றது.

அதில் ஒருவர் எழுந்து, சார், உங்க மனைவியை கொலை பண்ண குற்றத்திற்காக நாங்க உங்களை கைதி பண்றோம் என்றார்.

என்ன சார் மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா. அந்த பைத்தியக்கார பொண்ணு ஏதாவது எழுதி காண்பிச்சாளா என்றேன் அலுப்புடன்.

இல்லை சார். நான் எதுவும் எழுதலை என்று சொல்லியபடி வாசுகி உல்ளே நுழைந்தாள்.

வினோத் விவரித்தான்.

மிஸ்டர் மணி, சில மாசங்களுக்கு முன்னால அருணா, உங்க மனைவியோட தங்கச்சி மாலா, என் வருங்கால மனைவி, உங்க வீட்டுக்கு உங்க மாமியாரோட வந்து தங்கியிருந்தா இல்லையா?

மௌனமாக கேட்டேன்.

அப்பத்தான் பொழுதுபோகாமா உங்க டையரியெல்லாம் எடுத்து படிச்சிருக்கா. அதுல தான் நீங்க ஏழு வருஷத்துக்கு முந்திய நிகழ்ச்சியை எழுதியிருந்தீங்க. கழுத்தை நெருக்கும் அருணாகயிறை வெட்டி எறிந்தேன் இன்று அப்படின்னு.

மாலாவுக்கு சந்தேகம் வந்து என் கிட்டே சொன்னா. இந்த கேஸை ஆராய்ச்சி பண்ணதுல உங்களுக்கு எதிரா எந்த சாட்சியும் கிடைக்கலை. நீங்களா கொலை குத்தத்தை ஒப்புகிட்டாத்தான் உண்டு. அதனால உங்களுக்கு ஆக்ஸிடெண்ட் பண்ண வைச்சோம். உங்க கிட்டேர்ந்து 30 பக்கங்களை எடுத்தோம். ராஜனுடைய உதவியால உங்க நாவலை வெளியே வரவழைச்சோம். எங்க துறைக்கு சம்பந்தமே இல்லாத வாசுகியை நுழைச்சோம். மாலாவோட உதவியோட உங்க டையரி எல்லாம் பிரதி எடுத்தோம். உங்க நாவல்களையும் பிரதி எடுத்தோம். அவங்களுக்கு இந்த அற்புத சக்தி இருக்கற மாதிரி காண்பிச்சோம். வலுவே இல்லாத கேஸை உங்க மேலே போட்டோம். அதுல தோத்தோம். நீங்க கட்டாயம் வெளியே வருவீங்கன்னு தெரியும். வந்தா வாசுகியை பார்ப்பீங்கன்னு தெரியும். நீங்களை கொலையை செய்ததை உங்க வாயால எப்பவாவது சொல்வீங்கன்னு கொக்கு மாதிரி காத்திட்டிருந்தோம். இதோ உங்களோட வாக்குமூலம் என்று தன் கையிலிருந்து சிறிய டேப்பை தட்டிவிட்டான் வினோத்.

பத்து நிமிடத்திற்கு முன்பு நான் வாசுகியிடம் பேசியது அனைத்தும் பதிவாகி இருநத்து அதில். வாசுகி என் வாசகி இல்லை என்று முன்பே கண்டுபிடித்து விட்டேன். ஆனால் அதற்கு பின்னனியில் இருந்த இந்த பெரிய வலை என் அறிவுக்கு எட்டாமல் போய்விட்டது. இருந்தும் ஒருவிஷயம் என்னை இடறியது. கேட்டே விட்டேன்.

அப்ப ஓட்டல்ல நான் எழுதினதையே வாசுகி எழுதினது?

அது ஒரு சின்ன டிரிக் சார். கட்டாயம் நீங்க அவங்களை சோதனை செய்வீங்கன்னு தெரியும். உங்க டேபிளுக்கு மேலே இருந்த ஷாண்டிலியரில் ஒரு 100எக்ஸ் காமிரா. வாசுகி காதுல ஒரு மைக். நீங்க எழுதினதை நாங்க படிச்சி சொல்ல அவங்க எழுதினாங்க.

அப்ப நான் வாசுகியை கொல்ல முயற்சி செய்யறதா எழுதின மாதிரி நீங்க சொன்னது?


ஹா. அதுவா உங்களுக்கு உடம்பு சரியில்லாதப்ப வாசுகியை விட்டு உங்க டையரியை எடுத்து வர செஞ்சோம். அதுல எழுதினோம். அப்புறம் வாசுகியை எழுதச் சொன்னாம். அவ்வளவு தான்.

நான் அமைதியாக இருந்தேன். 7 வருடத்திற்கு முன் செய்த குற்றம் பூமராங்கு போல திரும்பி வந்து என்னை அடித்திருந்தது.

மெல்ல திரும்பி என் மனைவியின் தங்கை மாலாவை மன்னிப்பு கண்களுடன் பார்த்தேன். மாலா, உங்க அக்கா என்ன பண்ணான்னு உனக்கு தெரியாது...... அது உனக்கு தெரியவும் வேணாம்.

அவள் ஒன்றும் சொல்ல வில்லை. சட்டம் தன் கடமையை செய்தது.

முற்றும்

leomohan
18-08-2007, 04:54 PM
இந்த மூன்று முடிவுகளில் தங்களுக்கு பிடித்த முடிவு எது என்று வாக்களித்து விமர்சியுங்கள். நன்றி.

SathishVijayaraghavan
20-08-2007, 08:14 AM
முதல் இரண்டு முடிவுகளில் சினிமாதனம் தான் தலைதூக்கி இருந்தது. மூன்றாவது முடிவு பலத்தை கொடுக்கிரது... எனது ஓட்டு மூன்றாவது முடிவுக்குதான். (துப்பரியும் நாவலாக மாற்றுவதால்...)

роородро┐
20-08-2007, 06:13 PM
ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..
மன்னிக்கவும்..எனக்கென்னவோ கதை அவசர அவசரமாய் முடிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது...
மூன்று முடிவுகளிலும் ஏனோ மனம் ஒட்டவில்லை.

gayathri.jagannathan
21-08-2007, 03:53 AM
மனைவியை ஏன் கொன்றான் என்று கூறியிருந்தால் ஒருவேளை கதையின் முடிவில் ஒரு உயிரோட்டம் இருந்திருக்குமோ?

leomohan
21-08-2007, 07:30 AM
மனைவியை ஏன் கொன்றான் என்று கூறியிருந்தால் ஒருவேளை கதையின் முடிவில் ஒரு உயிரோட்டம் இருந்திருக்குமோ?

நீங்கள் சொல்வது சரிதான்.

கொலைக்கான காரணம் கதையின் main track லிருந்து deviate ஆகிவிடும். மேலும் கொலை எக்காரணத்தை கொண்டு செய்தாலும் அது ஏற்க முடியாதது அல்லவா. அதை நியாயப்படுத்தவும் கூடாது அல்லவா. அதனால் தான் அந்த பாதையில் கதையை எடுத்து செல்லவில்லை.

நன்றி காயத்ரி

leomohan
21-08-2007, 07:31 AM
முதல் இரண்டு முடிவுகளில் சினிமாதனம் தான் தலைதூக்கி இருந்தது. மூன்றாவது முடிவு பலத்தை கொடுக்கிரது... எனது ஓட்டு மூன்றாவது முடிவுக்குதான். (துப்பரியும் நாவலாக மாற்றுவதால்...)

நன்றி

ஆம் சதீஷ்.

மேலும் ஈஎஸ்பி, டெலிபதி போன்றவற்றில் எண்ண அலைகள் வேண்டுமானாலும் ஒத்து வர சாத்தியகூறுகள் இருக்கிறதே ஒழிய எழுதுவதை எழுதுவதோ, கதை தாளில் எழுதுவிட்டு, பிறகு டையரி வாங்கி டையரியில் எழுதுவதோ இதுவரை சாத்தியமாக தெரியவில்லை.

வலுவான மருத்துவ சாத்திய கூறுகள் இல்லாவிட்டால் மூன்றாவது முடிவே சரியாக இருக்கும்.

முதல் முடிவும் யதார்த்தம் தான் ஆனால் விளக்கப்படாத பல கேள்விகள் உண்டு.

இரண்டாவது முடிவுக்கு நீங்கள் கூறிய கருத்தே தான் எனதும். இறைவன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையை நாம் இப்போது காண்கிறோம். வளரும் லஞ்ச ஊழல், பதவிகளில் நேர்மையின்மை, வளரும் தீவிரவாதம், அப்பாவிகளின் மடிவு இவையெல்லாம் இரண்டாவது முடிவுக்கு எதிரிகள்.

leomohan
21-08-2007, 07:33 AM
ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..
மன்னிக்கவும்..எனக்கென்னவோ கதை அவசர அவசரமாய் முடிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது...
மூன்று முடிவுகளிலும் ஏனோ மனம் ஒட்டவில்லை.

நன்றி மதி. மேலும் நன்றாக தர முயற்சிக்கிறேன். இந்நேரத்தில் மற்ற கதைகளை விட முதல் பாகம் ஏன் வேகமாக சென்றது என்பதன் ரகசியத்தை உங்களுக்கு கூறுகிறேன்.

இந்த காரணத்திற்காக தான் ஆரம்ப அத்தியாயங்கள் அதிக விவரனை இல்லை.

இந்த கதைக்கு ஏழு முடிவுகள் எழுதி, கதையின் தலைப்பு முடிவேழு என்று வைப்பதாக நினைத்திருந்தேன். ஆனால் வாசகர்களின் உற்சாகம் குறையாமல் இருக்க இன்னொரு வலுவான கருத்திற்காக காத்திருக்கிறேன்.

அதனால் விரைவில் வெளிவரும் முடிவேழு.

இந்த கதைக்கு மூன்று முடிவுகள் மட்டும் தான். ஒருவேளை ஏழு முடிவுகளும் இருந்திருந்தால் கதையின் அளவும் பெரிதாகியிருக்கும்.

роЪро┐ро╡ро╛.роЬро┐
21-08-2007, 07:53 AM
மிக அருமையாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். அதிலும் மூன்று முடிவுகளைத் தந்து முடித்தது அசத்தல். இருந்தாலும் மூன்றாவது முடிவே எனக்கும் பிடித்தது. வாழ்த்துக்கள் மோகன்.

leomohan
21-08-2007, 10:12 AM
மிக அருமையாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். அதிலும் மூன்று முடிவுகளைத் தந்து முடித்தது அசத்தல். இருந்தாலும் மூன்றாவது முடிவே எனக்கும் பிடித்தது. வாழ்த்துக்கள் மோகன்.

நேரம் ஒதுக்கி படித்து கருத்திட்டதற்கு நன்றி சிவா.

நான் இப்போது பல ஓவிய புத்தகங்களை தொகுத்திருக்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள். அதை அனுப்பி வைக்கிறேன்.

роЕроХрпНройро┐
22-08-2007, 04:30 PM
இறுதி முடிவு சமகாலத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதானதாக உள்ளது.
வித்தியாசமான அனுபவம் போன்று கதை இருந்தது...
பாராட்டுக்கள் மோகன்...

роЗро│роЪрпБ
22-08-2007, 09:35 PM
பலே மோகன்

கடைசியாக வாசுகியிடம் வாக்குமூலம் தரும்போது மூன்றாவது முடிவை
(ஆச்சரியகரமாய்) என்னால் ( உதவியுடன் ஹோட்டலில் எழுதுவது உட்பட) யூகிக்க முடிந்த்தால், ஹிஹி... அந்த முடிவுக்கே என் வாக்கு!

புத்திசாலித்தனம் + எழுத்துத்திறமை = இந்தக் கதை..

வாழ்த்துகள்!

leomohan
23-08-2007, 06:40 AM
பலே மோகன்

கடைசியாக வாசுகியிடம் வாக்குமூலம் தரும்போது மூன்றாவது முடிவை
(ஆச்சரியகரமாய்) என்னால் ( உதவியுடன் ஹோட்டலில் எழுதுவது உட்பட) யூகிக்க முடிந்த்தால், ஹிஹி... அந்த முடிவுக்கே என் வாக்கு!

புத்திசாலித்தனம் + எழுத்துத்திறமை = இந்தக் கதை..

வாழ்த்துகள்!

நீங்கள் பின்னூட்டம் இட்டாலே you made my day. ஆனால், ஒரு வேளை மட்டுறுத்த மட்டுமே படிக்கிறீர்களோ என்ற ஐயமும் எழுகிறது, ஹி ஹி.

நன்றி இளசு.

leomohan
23-08-2007, 06:41 AM
இறுதி முடிவு சமகாலத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதானதாக உள்ளது.
வித்தியாசமான அனுபவம் போன்று கதை இருந்தது...
பாராட்டுக்கள் மோகன்...

நன்றி அக்னி. அனைத்து கதைகளையும் படித்துவிட்டீர்கள் போலும்.

роЕроХрпНройро┐
23-08-2007, 11:56 AM
நன்றி அக்னி. அனைத்து கதைகளையும் படித்துவிட்டீர்கள் போலும்.

இல்லை... இன்னும் இருக்கிறது... விடுமுறையில் பயணநேரத்தின் போது கூட, தரவிறக்கிய மின்புத்தகங்களை வாசித்தேன்...
பொழுது போனது தெரியவில்லை...
நன்றியும் பாராட்டுதல்களும்...

leomohan
25-08-2007, 09:26 AM
இல்லை... இன்னும் இருக்கிறது... விடுமுறையில் பயணநேரத்தின் போது கூட, தரவிறக்கிய மின்புத்தகங்களை வாசித்தேன்...
பொழுது போனது தெரியவில்லை...
நன்றியும் பாராட்டுதல்களும்...

உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி அக்னி. உங்களை போன்றவர்களின் உற்சாகமே மேலும் எழுத தூண்டுகிறது. அடுத்தது ஒரு புரட்சி சம்பந்தப்பட்ட கதை. விரைவில்.....

leomohan
27-11-2007, 05:43 AM
இந்த புதினத்தை மின்னூலாக ஏற்றியிருக்கிறேன் மின்னூல் பகுதியில் காணலாம்.

மேலும் இந்த தொடுப்பிலும் காணலாம் Http://www.esnips.com/web/leomohan

рооройрпЛроЬрпН
09-12-2007, 05:35 PM
மோகன் சார் அருமை இந்த கதை வித்தியாசமாக இருந்தது
3 முடிவில் கடைசி முடிவு அருமை நன்றி மோகன் சார்

leomohan
09-12-2007, 06:05 PM
மோகன் சார் அருமை இந்த கதை வித்தியாசமாக இருந்தது
3 முடிவில் கடைசி முடிவு அருமை நன்றி மோகன் சார்

நன்றி மனோஜ். என்ன காணோம் ரொம்ப நாளா

рооройрпЛроЬрпН
09-12-2007, 06:41 PM
நன்றி மனோஜ். என்ன காணோம் ரொம்ப நாளா

இல்ல சார் கதை அவ்வளவா படிக்க நேரம் இல்லை அதான் மோகன் சார்