PDA

View Full Version : தோல்விகளைத் தோரணங்களாக்கி...



sadagopan
14-08-2007, 08:28 AM
ஸ்ரீரங்கத்தில் கடற்கரை கிடையாது. காவிரிக்கரைதான். அதுவும் இப்போதெல்லாம் இயற்கை கருணை காட்டுவதால் காவிரியில் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு நீர் ஓடுகிறது.

அவ்வப்போது தினசரியில் செய்தி வரும்.

'மூதாட்டி மீட்பு. காவிரியில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி'

ஆற்றுப் பாலத்தின் மேல் காவல் துறை, தீயணைப்புத் துறை அலுவலர்கள் நின்று மீட்கும் காட்சியைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருப்பார்கள். அப்போதெல்லாம் எனக்கு அந்த மாதிரி யோசனை எதுவும் இல்லை. இன்றோ ஆற்றுப் பாலத்தின் மேல் வந்து நின்றபோது துக்கம் பொங்கிக் கொண்டு வந்தது. வரிசையாய் இரண்டு செமஸ்டர்களிலும் அரியர்ஸ்.

சக மாணவர்கள் முதல் தரத்தில் இருக்கும்போது நான் மட்டும் முடங்கிப் போய்... பாலக் கைப்பிடி சுவற்றைப் பற்றி நின்ற போது காற்று முகத்தில் மோதியது. கீழே நீர் சுழலுடன் ஓடியது, 'வா.. வா' என்று அழைக்கிற மாதிரி. ஒரே நிமிடம். குதித்தால் போதும். மனசு அமைதி காரண்டி. ஒரு எம்பு எம்பி.. இல்லை.. வலுக்கட்டாயமாய் என்னை ஒரு இரும்புக் கரம் பிடித்து நிறுத்தியது. "என்ன தம்பி.. காத்துல ஆடிட்டீங்க.. பிடிக்காட்டி விழுந்திருப்பீங்க" பெரியவர் சிரித்துக் கொண்டு நின்றிருந்தார்.

"ஏன் என்னைத் தடுத்தீங்க?" என்றேன் பொருமலாய்.

"ஸ்ஸ்.. சத்தமாப் பேசாதீங்க"

அருகில் நின்றவர்களின் கவனம் ஈர்க்காமல் பேசினார். நான் விழப்போவது தெரிந்துதான் தடுத்திருக்கிறார்.

"தொடர்ந்து தோல்விகள்.. நான் ஏன் வாழ வேண்டும்?"
மனம் உடைந்து அழுதேன். பொறுமையாய்க் காத்திருந்தார்.

"தாமஸ் ஆல்வா எடிசன்.. அவரோட ஆராய்ச்சிக் குறிப்புகள் எல்லாம் எரிஞ்சு போச்சு.. கொஞ்சங்கூட மனந்தளராமல் மறுபடி முயற்சி செஞ்சார்.. உனக்குத் தெரியுமே"

'யாரோ எடிசன்.. நேர்ல பார்த்தது இல்ல.. அவரப் பத்தி எனக்கென்ன' என மனம் நினைத்தது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.

"பாலத்துல யாரோ விஷமிகள்.. தண்டவாளத்தைச் சேதப்படுத்திட்டாங்க. தற்செயலாத் தகவல் தெரிஞ்சு ஓடினேன்.. எக்ஸ்பிரஸ்ஸை நிறுத்தி அத்தனை பேரையும் காப்பாத்தியாச்சு. ஆனா நான் பிடி தவறிக் கீழே விழுந்துட்டேன். ரெயில்வேல இருக்கேன்பா.. பிழைச்சது புனர்ஜென்மம்.. இன்னிக்கு என் இரண்டு பசங்களும் நல்ல நிலைமைல இருக்காங்க. எனக்கு ஆபீஸ்ல டூட்டி போட்டாங்க.. இதோ பார்"

வேட்டியை விலக்கிக் காட்டினார். இரு கால்களும் செயற்கை.

"கடவுள் மனுஷனைப் படைச்சது விழுந்தாலும் எழுவதற்குத்தான். காவிரியில் விழ அல்ல"

திரும்பி தத்தித்தத்தி நடந்தார் சிறு பிள்ளை போல, விழ இருந்தவனை எழுப்பி நிற்க வைத்து விட்டு!

*****
நட்புடன்
சடகோபன்

அமரன்
14-08-2007, 08:35 AM
கைகொடுங்க சடகோபன். பின்னிவிட்டீர்கள்.உள்ளிருக்கும் நம்பிக்கை விதையைக் கீறிவிடும் பக்குவம் கதையிலும் கதையின் நடையிலும். அருமை அருமை. அதிலும் அந்த இரு வரிகள்.....அட்சரம். தத்தி தத்தி நடக்க ஆரம்பித்தது அவர் மட்டுமல்ல அவனுக்குள் இருந்த நம்பிக்கையும்தான். அது விரைவில் வீறுநடைபோடும் காலத்துக்கு அவனை இட்டுச்செல்லும். கதையில் நான் சொக்கியதால் 250 இ-பணப் பரிசு உங்களுக்கு. தொடரட்டும் உங்கள் கலக்கல் ஆட்டம்.

sadagopan
14-08-2007, 09:56 AM
நன்றி திரு அமரன்

சிவா.ஜி
14-08-2007, 10:08 AM
அருமையான செய்தியை அழகான,சுவாரசியமான நடையில் கொடுத்து அசத்திவிட்டீர்கள். அவன் விழப்போவது தெரிந்தும் அதை தெரிந்த மாதிரி காட்டிக்கொண்டால் அவனுக்கு சங்கடமாகிவிடுமென்ற சிறு உணர்வைக்கூட அழகாக கையாண்டு கதையை கொடுத்திருகிறீர்கள். வாழ்த்துக்கள்+தன்னம்பிக்கையூட்டத்திற்காக 500 இ−பணம்.

அக்னி
14-08-2007, 01:23 PM
வாழ்வில் கொள்ளவேண்டிய
நம்பிக்கை, பிறருதவி, முயற்சி, துவளாமை போன்ற முக்கிய புள்ளிகள்...
சிறப்பாக இணைக்கப்பட்ட சிறுகதை...
அருமை... சடகோபன்...
பாராட்டுக்கள்...

நான் வாசித்த உங்களது முதற்கதை... தொடருங்கள்...

மகிழ்ந்தளிக்கும் 250 iCash.

lolluvathiyar
14-08-2007, 02:38 PM
வந்தவுடன் அருமையான கதை தந்திருகிறீர்கள். அதுவும் கோவிலி இருந்து ஆரம்பிக்கிறது கதை முடிவு அருமை
கடைசி வார்த்தை எழுப்பி நிற்க வைத்து − சூப்பர் லைன்

மனோஜ்
22-08-2007, 02:44 PM
சவுதி வருமுன் கடைசியாக காவிரி பாலத்தில் நின்று சாவ அல்ல காற்று வாங்கி வந்தேன் இனி இரண்டுவருடம் கழித்து தான் இங்கு வரமுடியும் என்று நினைத்தேன் ஒரு வருடத்திலேயே என்னை அங்கு நிக்கவைத்தமைக்கு நன்றிகள்

ஓவியா
01-09-2007, 11:30 PM
எவன் ஒருவனுக்கு தன்னம்பிக்கை இல்லாவிடில் அவன் முழூ உனமே
− ஓவியா

நல்ல தன்னம்பிக்கையை வளர்க்கும் கதை. பாராட்டுக்கள்.

ஒரு விசயம், நான் பல முறை தன்னம்பிக்கை இழந்தோர்களுக்கு அட்வாய்ஸ் கூறியுள்ளேன் ஆனால் எனக்கு என்று பிரச்சனை வரும் பொழுதுதான் அதன் வலி (நமக்கு) தெரியும். சில விசயங்களில் எவ்வளவுதான் தன்னம்பிகையை வைத்து செயல் பட்டாலும் தோழ்வி தான் மிஞ்சும்.