PDA

View Full Version : இரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்...rambal
02-04-2003, 05:19 PM
ஒரு முன் குறிப்பு: தெனாவட்டுக் கடிதங்கள்

இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதுவது அல்ல..
என்னை பாதித்த சமூக அவலங்களை, கொடுமைகளை கண்டு பொறுக்க முடியா சினம்.
ஒரு கையறு நிலை. அதன் வெளிப்பாடே இந்தக் கடிதங்கள்.
உண்மை சுடும். வேறு வழியில்லை.
இனி..

இரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு.... ஒரு தெனாவட்டுக்கடிதம்...

இரக்கமற்ற தீவிரவாதிகளுக்கு,
உங்களால் பாதிக்கப்பட்ட நோயாளி எழுதுவது...
நலமா?
ம்ம் நீங்கள் நலமாகத்தான் இருப்பீர்கள்...
நான் நலமாக இல்லை என்பது உங்களுக்குத் தெரியும்...

முதலில் சில கேள்விகள்...

எது உங்கள் கொள்கை?
எது உங்கள் இலக்கு?
நீங்கள் மனித இனமா?
உங்களை தூண்டி விடுவது யார்?

விளங்கவில்லை எனக்கு...

பாதிக்கப்பட்டதால் தீவிரவாதியானால்
உங்களால் பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன ஆவது?
இன்னொரு தீவிரவாதி...

மரணம் தான் உங்கள் இலக்கு என்றால்
யாருடைய மரணம்?

உங்கள் தேன் கூடு சிதைக்கப்பட்டதால்
இப்படி ஆனீர்கள் என்ற சோகக்கதை சொன்னால்
நீங்கள் கொட்டுவதற்கு நாங்கள்தானா?

சரி இந்தக் கதையை விட்டுத்தள்ளுங்கள்...

இந்த குண்டு வைக்கிறீர்களே...
விஞ்ஞான வளர்ச்சியில் இதெல்லாம் சாதாரணம்...
சரி..
அதை ஏன் மருத்துவமனைக்கோ, புகை வண்டிக்கோ வைக்கிறீர்கள்?
உங்களுக்கு யார் மீதாவது கோபம் இருந்தால்
அவர்கள் இடத்தில் வைத்து விட்டுப் போங்கள்..
சீக்காளிகளும், வயசாளிகளும், பெண்களும், குழந்தைகளும் என்ன செய்தார்கள் உங்களை...
அல்லது
உங்கள் வீரம் இதுதான் என்றால் உங்கள் ஆண்மை மீதே சந்தேகம் வருகிறது எனக்கு...

சரி குண்டை விட்டுத் தள்ளுங்கள்...

துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கண்ட உயிர்களையெல்லாம் சுடுகிறீர்களே..
அவர்கள் என்ன செய்தார்கள்?
பூக்கள் மீது ஆசிட்டை அள்ளித் தெளிப்பதின் பெயர்தான் தீவிரவாதமா?
அல்லது,
பச்சை மரங்களை கருக்கிப் பார்ப்பதுதான் தீவிரவாதமா?
தீவிரவாதம் என்ற நல்ல தமிழ்ச்சொல்லே பாழாய்ப்போனது உங்களால்...

சரி துப்பாக்கியை விட்டுத் தள்ளுங்கள்...

மனித வெடிகுண்டு...
எப்படி இது சாத்தியம்?
தன் உயிர் போனாலும் பரவாயில்லை...
அடுத்தவர் உயிரோடு இருக்கக் கூடாது என்ற முடிவு?
எப்படி மூளைச்சலவை செய்து அனுப்புகிறீர்கள் அவர்களை?
உடலில் குண்டைக் கட்டிக் கொண்டு நடமாடுவதன் பெயர்தான் தீவிரவாதமா?
உங்கள் அகராதியில் மனித உயிர்கள் என்றால் காய்ந்த சருகுகள் என்ற அர்த்தமா?

உங்களால் செய்திகளைப் பார்ப்பதையே விட்டுவிட்டேன்...
தலைப்புச் செய்திகளில் இருந்து முக்கியச் செய்திகள் வரை நீங்களே ஆக்ரமிப்பு செய்தால் எப்படி?

தீவிரவாதிகளால்
சுட்டுக் கொலை...
குண்டு வெடித்து கட்டடம் இடிந்து விழுந்ததில் செத்தவர்களின் எண்ணிக்கை...
இப்படியாக சர்வமும் உங்கள் கைங்கர்யம்....

கோபம் வந்தால் கொல்லுங்கள்
பாழாய்ப்போன வறுமையை...
பிற உயிரை அழிக்கும் வன்முறையை...
சக மனிதனிடம் கையேந்த வைக்கும் பிச்சையை...
குப்பைத் தொட்டியில் குழந்தையை போட காரணமாக இருந்தவனை..
இதை எல்லாம் விட்டு விட்டு ஏன் கொல்கிறீர்கள் அப்பாவிகளை...

ஒன்று திருந்துங்கள்..
இல்லை,
எங்களை தீவிரவாதிகள் என்று அழைக்காதீர்கள்...
காட்டுமிராண்டிகள் என்று பிரகடனப் படுத்துங்கள்...
தீவிரவாதம் என்ற சொல்லாவது தப்பிக்கும்....

மற்றவை அடுத்த கடிதத்தில்...

சரி வர்ட்டா?

இப்படிக்கு,

பாதிக்கப்பட்ட நோயாளி...

இளசு
02-04-2003, 07:58 PM
அருமையான படைப்பு
பலர் உள்ளத்தில் உள்ளதை ராம் வார்த்தையில் வடித்த வேகம் சிறப்பு.

Narathar
03-04-2003, 03:42 AM
சில கேள்விகள்...

எது உங்கள் கொள்கை?
எது உங்கள் இலக்கு?
நீங்கள் மனித இனமா?
உங்களை தூண்டி விடுவது யார்?

விளங்கவில்லை எனக்கு...

உங்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் விடைதெரியாத கேள்விகள் அவை!!

anushajasmin
04-04-2003, 09:56 AM
தீவிரவாதம் என்பது பலவகை. ஆனால் இழப்பு என்பது ஒரே வகை. அதில் கொடுமையான வேதனை ஒன்றுமறியா உயிர்களை பலி கொடுத்தல்.

மன்மதன்
11-04-2004, 05:18 AM
எது உங்கள் கொள்கை?
எது உங்கள் இலக்கு?
நீங்கள் மனித இனமா?
உங்களை தூண்டி விடுவது யார்?

இதற்கு சுத்திமுத்தி பார்த்தால் 'அரசியல்' என்று பதில் வரலாம்..