PDA

View Full Version : தர்மம் தூங்குகின்றது! உண்மை நிகழ்ச்சி!



தங்கவேல்
14-08-2007, 02:40 AM
1997ம் வருடம், டிசம்பர் மாதம். கரூர் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்தின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் (காலமாகிவிட்டார்) என்னை கரூர் பசுபதிபாளைத்தில் இயங்கி வந்த ஒரு ஆஸ்ரமத்தில் சேர்த்து விட அழைத்து சென்றார். முதன் முதலாக மொட்டை அடித்து காவி வேஷ்டி கட்டியிருந்த ஒரு சன்னியாசியை சந்தித்தேன். என்னடா நம்மை ஒரு சன்னியாசியின் இடத்துக்கு அழைத்து வந்து விட்டாரே என்று எனக்குள் ஒரு தயக்கம்.

வணக்கம் சொல்லி அருகில் அமர்ந்தேன். என்னைப் பற்றி சொல்லி இருக்க இடமும், வேலையும், உணவும் தருமாறு சுப்பிரமணியன் அவர்கள் கேட்க சிரித்தபடியே இருக்கட்டும். நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி , யாரோ ஒருவரை அழைத்து இரண்டாம் நம்பர் அறையில் இவரை தங்க வை என்று உத்தரவிட்டார் அந்த சன்னியாசி.

சரிப்பா, இனிமே சாமிதான் உனக்கு எல்லாம். அவர் சொல்லியபடி நடந்துக்கொள் என்று சொல்லி விடைபெறும் போது, சுப்பிரமணியன் அவர்களிடம் சார் எனக்கு துண்டு இல்லை, ஒன்னு வாங்கி தருகின்றீர்களா என்று கேட்டேன்.

நாங்கள் பேசியதை பின்புறமாக இருந்து கேட்ட அந்த சன்னியாசி என்ன சொல்லுறான் பையன் என்று கேட்டார். துண்டு வேணும் என்று கேட்கிறான் என்று இவர் சொல்ல, புத்தம் புது துண்டு ஒன்றினை கொண்டு வந்து என்னிடம் தந்து இனிமேல் என்ன வேண்டுமானாலும் என்னிடம் தான் கேட்க வேண்டும் என்று சொன்னார் அந்த சன்னியாசி.

பாத்ரூம், காற்றாடி, கட்டில் என்று ஒரு இரண்டு நட்சத்திர ஹோட்டலின் அளவுக்கு அந்த அறை இருந்தது. மணலில் புரண்டு கொண்டு இருந்த எனக்கு அந்த அறை நட்சத்திர ஹோட்டலின் அறையாகவே தென்பட்டது. அறைக்கே சாப்பாடும் கொண்டு வந்து தந்தார்கள். டீ கொடுத்தார்கள். டிபன் கொடுத்தார்கள். நல்ல விரிப்பு, தலையணை, போர்வை, சோப்பு, பேஸ்ட் என்று எனக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் தந்தார் அவர்.

எனக்கு அப்போது தெரியவில்லை நான் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் தலைவரின் அன்புக்கு பாத்திரமானதை.

ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமம், விவேகானந்தர் துவக்கப்பள்ளி, விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளி, விவேகானந்தர் மெட்ரிக்குலேசன் பள்ளி, சாரதா துவக்கப்பள்ளி, சாரதா மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரி என்று அவரின் சாம்ராஜ்ஜியம் என்னை வியக்க வைத்தது. பஸ்கள், கார்கள் என்று அன்பின் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்து கிடந்தது. அவர் யார் ? அவர் தான் ஸ்ரீ ஆத்மானந்த சாமிகள்.

ஸ்ரீராமகிருஷ்ணர் வழியில் விவேகானந்தர் பாதையில் சன்னியாசம் பெற்றவர். திருமணம், குடும்பம் என்று ஒரு கூட்டுக்குள் அடையாமல் பொதுச்சேவைக்கே தன் வாழ்க்கையினை அர்ப்பணித்தவர் அவர். 200 அனாதை குழந்தைகளுக்கு தாயாய் தகப்பனாய் இருந்து வருகின்றார். அவரை சுற்றியும் சன்னியாசிகள், பிரம்மச்சாரிகள் என்று ஆன்மீக சம்பந்தப்பட்டவர்கள் ஏராளம். எண்ணற்ற பிரமுகர்கள் தினமும் வருவார்கள். நெடுஞ்சானாக விழுவார்கள் அவரின் காலில். சிரித்து கொண்டே ஆசிர்வதிப்பார் அவர்.

விவேகானந்த மெட்ரிக்பள்ளியில் எனக்கு வாத்தியார் வேலை தந்தார். ஒருநாள் மாலையில் சாமி அழைப்பதாக காரின் டிரைவர் வந்து அழைக்க சென்றேன். தங்கவேல் ஒரு செட் டிரஸ் எடுத்துக்கு வாப்பா என்றார். என்ன ஏது என்றெல்லாம் சொல்லவில்லை நானும் என்னவென்று கேட்கவும் இல்லை. முதன் முதலாக காண்டசா காரில் பயணம். கார் மேற்கு நோக்கி சென்றது. வசதியா இருக்காப்பா என்று கேட்டார். அப்படி ஒரு கனிவு அவரிடம். நமக்கு கோயமுத்தூர் பள்ளப்பாளையத்தில் ஒரு பள்ளியும் ஆஸ்ரமும் இருக்கு அங்கேதான் போறோம் என்றார். எனக்கு ஆச்சர்யம். கார் அந்த ஆஸ்ரமத்தின் உள்ளே சென்றது. அங்கே, 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இரண்டு சன்னியாசிகளின் மேற்பார்வையில் வளர்க்கப்பட்டு வந்தார்கள். நான் சென்ற போது பூஜை அறையில் பஜனை செய்துகொண்டு இருந்தார்கள். கேட்கும் போதே மனது உருகிவிட்டது. மறுநாள் விடிகாலையில் கரூருக்கு திரும்பவும் பயணம். மாணவர்கள் சுற்றி நின்று பாட அந்த ஆஸ்ரமத்திலிருந்து கிளம்பினோம்.

சில நாட்கள் சென்ற பிறகு ஒருநாள் காலையில் சாமி அழைக்க முதன் முதலாக ஸ்ரீசாரதா நிகேதன் கல்லூரிக்கு பயணம். கேட் திறக்கப்பட்டு, கார் ஒரு செங்குத்தான பாறையின் அருகில் நின்றது. அந்த பாறையினை காட்டி, கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் சிலை போல இங்கும் அமைக்கவேண்டும் என்று சொல்லி புன்னகைத்தார். இன்று அந்த பாறையில் விவேகானந்தர் சிலை அமைக்கப்பட்டு மற்றும் ஒரு கன்னியாகுமரி போல சிரிக்கின்றார் விவேகானந்தர். 240 ஏக்கர் நிலத்தில் கல்லூரி பரந்து விரிந்து கிடந்தது. சுற்றி வர சாமி சிலைகள், பஜனை கூடம் என்று மிகப்பெரிய கல்லூரியாய் பெண்களுக்கு கல்வி புகட்டி வந்தது. 200 அநாதை பெண் குழந்தைகள் அங்கு வளர்க்கப்பட்டனர். இன்னும் வளர்க்கப்பட்டு வருகின்றனர் வேறு இடத்தில். உணவு, உடை, கல்வி அனைத்தும் அவர்களுக்கு வழங்கி வருகிறார் சாமி.

கல்லூரிக்கு கணிப்பொறிகள் வாங்க ஆர்டர் கொடுக்கவும், அதனை சரியாக அமைக்கவும் எனக்கு பணி தரப்பட்டது. சென்னை சிசிஎஸ் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டு, கணிப்பொறிகள் வைக்கும் மேஜையிலிருந்து நெட்வொர்க் செட்டிங் வரையிலும் எனது மேற்பார்வையில் அசத்தலாக செய்து முடித்தேன். அதிலிருந்து சாமியின் சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய நபராகவும் என்னை உயர்த்திவிட்டார்.

காரைக்குடியின் அருகில் உள்ள அமராவதி புதூர் ஸ்ரீசாரதா பெண்கள் கல்லூரியில் 50 கணிப்பொறிகள் வாங்கப்பட்டு நிறுவினேன். அதிலிருந்து கணிப்பொறிகளை பிற நிறுவனங்களிடமிருந்து வாங்குவதை நிறுத்திவிட்டு நானே சென்னை சென்று ரிச்சி தெருவில் சுப்ரீம் கம்ப்யூட்டரில் பார்ட்ஸ் வாங்கி வந்து அசெம்பிள் செய்து சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய ஆரம்பித்தேன். விடிகாலையில் இருந்து மாணவர்களுக்கு கணிப்பொறி பயிற்சி, பின்னர் பள்ளியில் ஆசிரியராக பணி, மாலையில் மாணவர்களுக்கு பயிற்சி என்று எனது பொழுதுகள் சென்றன. சனி, ஞாயிறுகளில் கல்லூரியில் பெண்களுக்கு தனி கணிப்பொறி பயிற்சி என்று எப்போதும் சுறுசுறுப்பாகவே இருந்தேன்.

ஓன்றுக்கும் உதவாது என்று ஒதுக்கி தள்ளப்பட்ட நான் ஒரு ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய நபராக உயர்த்தப்பட்டேன் என்றால் அதற்கு முழுமுதல் காரணம் சுவாமிகள் தான். என் உலகும் அறிவு விரியவும் உதவி செய்தது அவர்தான். இருகால்களும் இன்றி தவழ்ந்து செல்லும் எனக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் தந்து என்னை செதுக்கி செதுக்கி ஒரு மனிதனாக உறுவாக்கியவர் சாமி.

சுவாமிகளிடம் ஒருநாள் வேண்டுகோள் வைத்தேன் படிப்பதற்கு. கரூரில் இயங்கி வந்த ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் படிக்க அனுப்பினார். ஞாயிறு மட்டும் படிக்க செல்வேன். டிவிஎஸ்ஸில் செல்வேன். என்னை அழைக்க பள்ளியின் பஸ் வரும். சென்னையில் படிக்கவேண்டும் என்று சொன்னேன். விடுமுறையில் சென்னை வடபழனி சந்தமாமா பில்டிங்கில் இயங்கி வந்த எஸ்எஸ்ஐயில் ஒரு மாதம் படித்தேன். எனக்கு உதவிசெய்ய 15 மாணவர்களை என்னுடன் அனுப்பி வைத்தார் சுவாமிகள். ஒரு சன்னியாசி என்னை காலையில் அழைத்து சென்று விடுவார். மதியம் சாப்பாடு கொண்டு வந்து தருவார். மாலையில் திரும்பவும் அழைத்து செல்ல வருவார். சென்னையில் கோயம்பேடு மார்கெட்டின் பின்புறம் இருக்கும் ஆஸ்ரமத்தில் இருந்து படிக்க சென்று வருவேன்.

எனக்கு என்ன தேவையோ அது அனைத்தும் கிடைத்தது. அதை தந்தவர் சுவாமிகள். சாமி எனக்கு டிரஸ் வேண்டும் என்றால் போதும் குவித்து விடுவார். அம்மாவை பார்க்க போகனும் என்றால் போதும் போதும் என்ற அளவுக்கு பணம் தருவார். போதுமா, போதுமா, இதையும் வச்சுக்கப்பா என்று தருவார். சிறிது நேரம் கழித்து இந்தாப்பா, இதையும் வச்சுக்க என்பார். டிரைவரிடம் மீண்டும் பணம் கொடுத்து விடுவார். கடவுளுக்கும் இவருக்கும் என்னால் வேறுபாட்டை காணமுடியவில்லை.

கோவை அருகில் குங்குமபாளையம் என்ற ஊரில் ஒரு பள்ளி, பள்ளப்பாளையத்தில் பள்ளி மற்றும் ஆஸ்ரமம், தேனியில் சின்னமனூரில் ஒரு பள்ளி, தஞ்சையில் மாணவர்களுக்கு உணவு அளிக்க பாலுசாமி மடத்தில் விவசாயம், அமராவதி புதூரில் ஒரு பெண்கள் கல்லூரி மற்றும் ஒரு பள்ளி, சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் ஒரு ஆஸ்ரமம் என்று அவரது கல்வி, ஆன்மீக சாம்ராஜ்ஜியம் பரந்து கிடந்தது.

திருச்சி அருகில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் சார்பாக கரூர் வந்த சுவாமிகள் தன்னந்தனியாக பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆசியுடன் மேற்கண்ட அத்தனை நிறுவனங்களையும் தபோவனத்தின் உதவியின்றி உருவாக்கி நடத்தி வந்தார். தபோவனத்தின் வழக்கால் உச்சநீதிமன்றம் அனைத்து சொத்துக்களையும் தபோவனத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் செல்ல உத்தரவிட எப்படி சிவாஜி படத்தில் ரஜினி அனைத்தையும் இழந்து விட்டு செல்வாரோ அப்படி சென்று விட்டார் ஆத்மானந்த சுவாமிகள். எனக்கு பிறகு அனைத்து தபோவனத்துக்குத்தான் என்றாலும் விடவில்லை. அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து விட்டார்கள். சட்டத்தின் உத்தரவு படி அவரும் சென்றுவிட்டார் தான் பார்த்து பார்த்து உருவாக்கிய நிறுவனங்களை விட்டு.

தர்மத்தின் படி பார்த்தால் உழைத்தவருக்குதான் சொத்து சொந்தம். ஆனால் சட்டப்படி பார்த்தால் இவருக்கு சொந்தமில்லை. தர்மமும் சட்டமும் வேறு வேறு என்பதும் சட்டங்கள் தர்மத்தை நிலை நாட்டவில்லை என்பதுக்கு உதாரணம் இந்த நிகழ்ச்சி.

இன்று உலகம் முழுதும் எனது வியாபார சாம்ராஜ்ஜியம் விரிந்து கிடக்கின்றது. உலக டிரேடிங் துறையில் என்னை தெரியாதவர்கள் மிகச்சிலரே இருக்க இயலும். உலகின் அனைத்து மூலையிலும் எனக்கு நண்பர்கள் இருக்கின்றார்கள். திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தகப்பனாய் இருக்கிறேன். என் வாழ்வுக்கு உறுதுணையாய் இருந்த சுவாமிகள் இன்றும் அதே சிரிப்போடும் ஆனந்தமாய் இருக்கின்றார். வரும் மாதத்தில் ராமநாதபுரத்தில் விவேகானந்த பாஸ்கரம் திறப்பு விழாவுக்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

அவரை நம்பி வருவோர்க்கு ஆதரவும் உதவியும் செய்வார் பிரதிபலன் பார்க்காமல். எத்தனையோ மாணவர்கள் அவரிடம் கல்வி கற்று பெரியாளாகி இருக்கின்றார்கள். சன்னியாசிகள் மாநாடு நடத்தினார். துன்ப உலகில் இருந்து விடுபட விரும்பியவர்களுக்கு புகலிடமாய் இருக்கின்றார். இன்றும் அவரை நம்பி வருவோருக்கு உதவிகள் செய்து வருகிறார். இது அவருக்கு வீழ்ச்சி அல்ல. தர்மத்தின் வீழ்ச்சி. தர்மம் இன்று தூங்குகின்றது. இன்னும் இவர் எண்ணற்ற கல்வி நிறுவனங்களை உறுவாக்குவார். இமயமலை கூட ஒருநாள் உடையலாம் ஆனால் இவரின் மன உறுதி பிளாட்டினத்தை விட கடினமானது.

செய்திதாளில் இந்த நிகழ்ச்சியினை படித்த என் மனம் துயரப்பட்டது. என்னால் முடிந்தது இந்த கட்டுரைதான். தமிழ் மன்ற நண்பர்கள் சாமியிடம் பேச விரும்பினால் விருப்பத்தை சொன்னால் அவர் சீடரின் கைத்தொலைபேசி எண்ணைத் தருகிறேன். பேசலாம் அல்லது உதவி செய்யலாம்..

மிகுந்த மனவருத்தத்துடன் தங்கம்...

ஓவியன்
14-08-2007, 02:55 AM
தங்கம் அண்ணா நீங்கள் அன்பின் திருவுருவத்தாலே ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள்..........!
நீங்கள் கூறியது மிகச் சரியே அவர் ஆண்டவனுக்கு ஒப்பானவரே.........!
அன்பே சிவம் என்னும் போது, அளவில்லாமல் அன்பைப் பொழியும் அவரும் ஆண்டவனேயாகிறார்................
உங்களைச் செதுக்கி ஆளாக்கிய சிற்பிக்கு நீதி கொடுத்த சோதனை, மனதினை உறுத்துகிறது. நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் என்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் நல்லவர்களை மாத்திரமே ஆண்டவன் சோதிப்பது போல எனக்கொரு எண்ணம்.........!

உங்கள் சம்பவப் பகிர்த்தலுக்கு நன்றிகள் பல......................
உங்கள் மன வருத்ததில் ஓவியனும் பங்கெடுக்கிறான்..........................!

விகடன்
14-08-2007, 03:31 AM
ஸ்ரீ ஆத்மானந்த சாமிகளின் இந்த பரந்த சாம்ராஜ்ஜித்தினை கண்ணு பொறாமை கொண்டோரும், அதன்மீது ஈர்ப்புடையோராலும் நடத்தப்பட்டதே இந்த பறிமுதல்கள் என்று சொல்லலாம். எவனாவது ஒருத்தன் பல சொத்துக்களுடன் சோம்போறியாக இருந்தால் யாராவது கண்டுகொள்வார்களா. ஆனால் சுவாமிகளின் திறமை மிக்க முகாமைத்துவத்தாலும் பரந்து விரிந்திருந்த சாம்ராஜ்யத்தாலும் பொறாமைகொண்டவர்களால் வந்த வினையே..

இதிலும் சுவாமிகள் ஒன்றை சொல்லியிருக்கிறான். என்னதான் கஷ்ட்டப்பட்டு உழைத்தாலும் இறுதியில் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என்று. அந்த நேரங்களிலிலும் கலங்காது இருக்கவேண்டும் என்றும்...

அநுபவப் பகிர்விற்கு மிக்க நன்றி தங்கவேல் அண்ணா

lolluvathiyar
14-08-2007, 07:17 AM
தங்கவேல் உங்கள் பதிப்பு வித்தியாசமாக இருகிறது.
என்னால் நம்ப முடியவில்லை, இன்னும் பலனை எதிர்பார்க்காமல் சேவை செய்யும் சாமியார்கள் இருகிறார்களா?
சேவை மனப்பானை உள்ளவர்களின் சேவை சட்டம் ஒன்றும் செய்துவிட முடியாது

சிவா.ஜி
14-08-2007, 07:33 AM
தங்கவேல் ஆத்மானந்த சுவாமிகளை சாமியார் என்று சொல்வது தவறு.அவர் ஒரு மகான். மனிதன் என்ற நிலையைத் தாண்டி பல மனிதர்களை உருவாக்கும் அவருடைய தன்னலமற்ற சேவை போற்றுதலுக்குரியது.
ஓவியன் சொல்லியிருப்பதுபோல ஆண்டவன் நல்லவர்களை மட்டுமே சோதிக்கிறானோ என்ற ஐயம் என்னக்குள்ளும் எழுகிறது. ஆனால் இதனாலெல்லாம் துவண்டுவிடாது அவருடைய மகத்தான பணி இன்னும் தொடர்வதை நினைத்தால் மனம் நெகிழ்கிறது.அவரால் ஆளாக்கப்பட்ட உங்களையும்,அதன் விளைவாய் நீங்கள் பதித்த இந்த பதிப்பையும் பாராட்ட வார்த்தையில்லை. வாழ்த்துக்கள் தங்கவேல்.

தங்கவேல்
14-08-2007, 08:46 AM
தங்கவேல் உங்கள் பதிப்பு வித்தியாசமாக இருகிறது.
என்னால் நம்ப முடியவில்லை, இன்னும் பலனை எதிர்பார்க்காமல் சேவை செய்யும் சாமியார்கள் இருகிறார்களா?
சேவை மனப்பானை உள்ளவர்களின் சேவை சட்டம் ஒன்றும் செய்துவிட முடியாது

ஆமாம் வாத்தியார். உண்மையில் இருக்கின்றார். நான் அவரிடம் வளர்ந்தவன்....

அக்னி
14-08-2007, 11:05 AM
உலகை ஏமாற்றி தபோவனம், ஆசிரமம் என்ற பெயர்களில்,
களியாட்ட இன்பலோகங்களை உருவாக்கி வாழும் போலித் துறவிகள் மத்தியில்,
சேவையே இன்பம், உதவுதலே உவகை என்று,
வாழ்வை அர்ப்பணித்த, சுவாமிஜி மனிதருள் மாணிக்கமே...

ஒருவன் வாழ்வில், அவன் உயர வழிகாட்டுவதோடு நின்றுவிடாமல்,
பொறுப்பாக தானே கைப்பிடித்து ஏற்றிவிடும் பண்பு யாவருக்கும் இருப்பதுமில்லை.
செய்வீகக் கரங்கள் பற்றி அழைத்துச் செல்லும் வாய்ப்பு யாவருக்கும்
கிட்டுவதுமில்லை.

அந்தவகையில் சுவாமிஜி போற்றுதலுக்குரியவர்.
நீங்கள் ஆசிகளுக்குரியவர்.

வாழ்வின் தடங்கல்களை, படிக்கற்கலாக மாற்றி, முன்னேற்ற, முன்னேற வேண்டும் என்ற,
சிறந்த படிப்பினையைத் தரும் அனுபவப் பகிர்வுக்கு,
பாராட்டுதல்கள் சொல்வதை விட, மனதறிந்த நன்றி சொல்கின்றேன்.

உங்களது இந்த பதிவின்மூலம், அறியப்பட்ட சுவாமிஜி அவர்களின் புகழும், சேவையும்
இன்னும் பலரின் வாழ்வில் விளக்கேற்றி, வழிகாட்டட்டும்.

அன்புரசிகன்
14-08-2007, 11:07 AM
நல்லது செய்யும் பொது எத்தனை தடைகள்... இதற்கு விடிவே இல்லையா?

பகிர்ந்துகொண்ட தங்கவேலுவிற்கு நன்றிகள்...

namsec
14-08-2007, 01:58 PM
நான் இன்று நேரிடையாக சென்று அவரை சென்னை மயிலையில் தற்காலிகமாக அவர் தங்கியிருக்கும் இடத்திற்க்கு அவரிடம் ஆசி பெற்றுவந்த்தேன் அவர் மிக பெரிய மகான் என்றாலும் மிக மிக எளிமையாக இருக்கிறார்.

அவர் விரக்தியடையவில்லை அவர் மகான் அல்லவா சராசரி மனிதன் என்றால் தேல்வியே அவனை கொன்றுவிடும்.

பாரதி
14-08-2007, 03:31 PM
இந்த தர்மத்தின் உறக்கம் இன்னும் வேகமாய் பணியாற்ற எடுக்கும் ஓய்வாக கருதுவோம் நண்பரே. எல்லாம் நல்லபடியாக நடந்தேறட்டும்.

மனோஜ்
14-08-2007, 03:51 PM
நல்லவைக்கு என்றும் எதிர்ப்பு உண்டு அது தடையாக அமைய அல்ல படியாக அமைய
பகிர்ந்தமைக்கு நன்றி தங்கவேல் அவர்களே

saguni
27-08-2007, 12:22 PM
நீங்கள் கூறிய சம்பவம் ஆச்சரியமாக இருக்கிறது. இன்றைய உலகிலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?

தகவலுக்கு மிக்க நன்றி

தங்கவேல்
28-08-2007, 11:51 AM
ஆமாம் சகுனி, இப்போதும் இருக்கின்றார் ஆத்மானந்த சுவாமிகள். அவருக்கு இன்னும் ஒரு கல்லூரி, பள்ளி இருக்கின்றது. ராம நாதபுரத்தில் விவேகானந்த பாஸ்கரம் என்ற விவேகானந்தர் நினைவிடத்தை துவக்க பணிகள் செய்துகொண்டுஇருக்கின்றார்.