PDA

View Full Version : ஒரு வெள்ளிக் கிழமை விடியல்...........!



ஓவியன்
10-08-2007, 06:10 PM
அன்பான மன்ற உறவுகளே, இந்த பதிவு இந்த மன்றத் தாயின் மடியில் எனது ஆறாவது ஆயிரத்தைத் தொடும் பதிவு.

இந்த பதிவை எனது நட்பின் மடியிலே சமர்பிக்க நான் எடுத்த முடிவின் விளைவே இந்த வெள்ளிக் கிழமை விடியல்...............!
___________________________________________________________________________________________
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை...........!

-------- அறிவுமதி (நட்புக் காலம்)

நான் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் மிகப் பிரபல்யமான ஆனையிறவுக்கு அருகாமையில் இருந்த குமரபுரம் என்ற கிராமத்தைச் சொந்த இடமாகக் கொண்டவன். இந்த ஆனையிறவு என்றழைக்கப்படும் பிரதேசம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி தரைப்பாதையின் வாசலாக இருந்து கடந்த இரண்டாயிரம் ஆம் ஆண்டுவரை இராணுவத்தின் பூரண கட்டுப் பாட்டில் இருந்தது. சுருக்கமாகச் சொன்னால் இலங்கையின் வரை படத்தில் தலைபோலிருக்கும் யாழ்ப்பாணத்தின் கழுத்துப் பகுதியில் இருந்தது இந்த ஆனையிறவு. அந்த கழுத்திலே விழுந்த ஒரு சுருக்குக் கயிறாக இருந்தது ஆனையிறவில் இராணுவம் அமைத்த தடை முகாம். அந்த தடை முகாமைக் கைப்பற்ற போராளிகள் காலத்திற்கு காலம் நடாத்திய வலிந்த சமர்களாலும், அந்த தடை முகாமை மையமாக வைத்து இராணுவம் அடிக்கடி கிளிநொச்சி மாவட்டம் மீது நடாத்தி வந்த இராணுவ நடவடிக்கைகளாலும் அடிக்கடி இடம் பெயந்து கொண்டிருந்தது எங்கள் குடும்பம்.

அப்படி ஒரு இடப் பெயர்வால் நான் புதிதாக சென்று சேர்ந்த பாடசாலை கிளிநொச்சி இந்து மகா வித்தியாலயம் (தற்போது கிளி இந்துக் கல்லூரி).ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்று இரண்டாம் ஆண்டின் துவக்க காலமது, நான் அதுவரை படித்த பாடசாலையிலிருந்து இந்து மகாவித்தியாலயத்திற்கு காலத்தின் கோலத்தால் அடியெடுத்து வைத்தேன். அப்போது நான் ஆண்டு 6 இல் கல்வி கற்ற ஒரு சின்னஞ் சிறியவன். கண்களிலே கனவுகளுடன் மனதைப் பட்டாம் பூச்சியாக சிறகடிக்க வைத்துக் கொண்டு வீடு, பாடசாலை, வீதிகள் என்று ஓடி திரிந்த ஒரு இளம் குருத்து. வாழ்க்கையின் நல்லது கெட்டது எதுவென்றே அலசிப் பார்க்க அறியாப் பருவம் அது.

நான் அந்த பாடசாலையின் எனது வகுப்பினுள் அடியெடுத்து வைத்த அந்த முதல் நாள் நான் அமர்வதற்கு ஒரு இடம் இருக்கவில்லை, அப்போது என்னைத் தன்னருகே அழைத்து தன் இருக்கையில் ஒரு பாதியை எனக்கு தந்து பின்னர் எனக்கென்றும் ஒரு தனி இருக்கையை ஒழுங்கமைத்து தந்தான் அந்த வகுப்பிலேயே வாட்டசாட்டமாக இருந்த ஒரு நண்பன். அன்று தானறிந்தேன் அவனது பெயர் துஸ்யந்தன் என்று, துஸ்யந்தன் என்னிடம் முதல் கேட்ட கேள்வி நன்றாக படிப்பாயா நீ என்று?, ஆம் பரவாயில்லை ஏன் என்றேன், இல்லை எங்கள் மக்கள் எல்லோருமே படிப்பை விட மற்றைய விடயங்கள் எல்லாவற்றிலும் நல்ல கெட்டி அதனால் புதிதாக வந்த நீயாவது படிப்பில் கெட்டியாக இருக்க வேண்டாமா என்றான் சிரித்துக் கொண்டே., நானும் சேர்ந்து சிரித்தேன்.

நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன, துஷி என் மனதை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டான். பாடாசாலை வளாகங்களில் அவனிருக்கும் இடமெங்கும் நானும் நானிருக்கும் இடங்களில் அவனும் என்ற வழமை வந்து ஒட்டிக் கொண்டது. அந்தக் காலங்களில் நாம் விளையாடும் விளையாட்டுக்கள் எதுவென்றாலும் துஷியும் நானும் ஒரே பக்கத்திலேயே இருப்போம், அவனது அபாரத் திறமையால் நான் சார்ந்த குழு வெற்றியை பறிக்க, ஏதோ நானே சாதித்த திருப்தி என்னுள்ளே எழும். அந்த பாடசாலைக் காலங்களில் எழும் வம்புச் சண்டைகளுக்கெல்லாம் நானும் விதிவிலக்காக இருக்கவில்லை, அந்தக் காலங்களில் நான் அதிகமாக வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தேன் என்றே சொல்லலாம், ஏனென்றால் துஷி தான் என்னுடன் இருக்கிறானே. யாராவது என்னை பயமுறுத்த வந்தால் அவர்கள் துஷியைப் பார்த்து ஓடி விடுவார்களே.......!. :sport-smiley-014:

அப்போது நாங்கள் ஒரு நாடகத்தை ஒரு நாடகப் போட்டிக்காகத் தயாரித்துப் பழகிக் கொண்டிருந்தோம், அந்த நாடகத்தின் பெயர் முயலார் முயலுகிறார் என்பது. சிங்கத்தை ஏமாற்றி கிணற்றில் தள்ளிய முயலின் கதையை நாம் நாடகமாக்கிக் கொண்டிருந்தோம். அந்த நாடகத்தில் துஷி தான் சிங்கம், அவன் சிங்கம் போல நடந்து வரும் அழகே அழகுதான்.
அவன் அந்த நாடகத்திற்காக பாடி ஆடும் வரிகள் இன்றும் என் மனதினுள்........

தகிட தகிட தகிட தோம்...
இந்தக் காட்டிற்கு அரசன் நான்
தகிட தகிட தகிட தோம்..
நினைத்ததையெல்லாம் செய்குவேன்.........!
தகிட தகிட தகிட தோம்..
எந்த நாளும் அரசன் நான்
தகிட தகிட தகிட தோம்..
இறக்கும் வரை அரசன் நான்.........!

அவனது அபாரத்திறமையாலும் வழிகாட்டலாலும் நாங்களே அந்த நாடகப் போட்டியில் வெல்வோம் என்ற நம்பிக்கையுடனேயே இருந்தோம், அந்த நம்பிக்கையைக் குலைக்கவெனவே வந்தது ஒரு வெள்ளிக் கிழமை விடியல்..........

அந்த வெள்ளிக் கிழமை விடியலுக்கு முதல் நாள் நானும் துஷியும் ஒன்றாக இருந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவன் கேட்டான் ஒரு கேள்வி டேய் தப்பித் தவறி எனக்கு எதாவது நடந்தால் நீ என்னை மறந்திடுவியாடா என்று?. அப்போது எனக்கு அந்தக் கேள்வியின் ஆழம் புலப்படவில்லை, என்னடா லூசுத் தனமாகக் கதைக்கிறாய் என்று அவனை அதட்டி அதற்குப் பதில் சொல்லாமலேயே விட்டு விட்டேன்.

அந்தப் பொல்லா வெள்ளியும் மலர்ந்தது வழமை போலவே, நானும் வழமை போல் பாடசாலைக்குப் சென்று என் வகுப்பறைச் சுவரில் ஏதோ ஒரு படத்தை மாட்டுவதற்காக கதிரை மேல் ஏறி நின்று சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்தேன், அப்போது நேரம் காலை 8.05 இருக்கும். இன்னமும் ஐந்து நிமிடங்கள் பாடசாலை தொடங்குவதற்கு இருந்ததால் மாணவர்கள் ஒவ்வொருவராக பாடசாலைக்குள் வந்து கொண்டிருந்த நேரமது. வானத்திலே போர் விமானங்கள் இரைச்சலிட்டுக் கொண்டிருந்தன, எங்களுக்கு அது பழகிப் போன ஒரு விடயமாக இருந்தமையால் நான் அதனைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளமால் என் வேலையில் கருத்தாக இருந்தேன்.
திடீரென ஒரு அவலக் குரல் எல்லோரும் ஓடுங்கோ என்று...........
என்ன எதுவென்று விளங்கிக் கொள்ளும் முன்னே நான் கதிரையிலிருந்து தூக்கி வீசப் பட்டிருந்தேன்..........

எழுந்து பார்த்தால், எங்கும் அவலக் குரல்கள்........
நாசியை நெடிக்கும் கந்தக வாசம்...........
கரும்புகையும் புழுதியும் கலந்த கலவை எங்கும் வியாபித்து........

அப்போது தான் புரிந்தது இராணுவ போர் விமானத்தின் மிலேச்சத் தனத்திற்கு எங்கள் பாடசாலை அன்று பாதிக்கப் பட்டு விட்டதென்று, வகுப்பறைவிட்டு வெளியே ஓடி ஏற்கனவே தயார் நிலையில் அமைக்கப் பட்டிருந்த பதுங்கு குழிகளில் ஒன்றுள் என்னை நுளைத்துக் கொண்டேன். கிட்டத் தட்ட அரை மணி நேரம் வானில் வட்டமிட்டு இன்னமும் மூன்று வெடி குண்டுகளை எங்கள் பாடசாலைக்கு அருகே விதைத்து விட்டுச் சென்றன அந்த இரண்டு சியாமா செட்டி ரக போர் விமாங்களும். எல்லாம் அடங்கி வெளியே வந்தேன் பாடசாலை ரணகளப் பட்டிருந்தது, பாடசாலைக்கு உள்ளே குண்டு விழவில்லை என்றாலும் முதல் குண்டு பாடசாலையின் வாயிலை ஒட்டியும் மீதி மூன்றும் பாடசாலைக்கு பின்னே இருந்த வளவு ஒன்றினுலும் விழுந்து வெடித்திருந்தன.

அப்போது அவசர காலத் தொண்டர்கள் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகளில் மும்முரமாயிருந்தனர். நான் மிரள மிரள விழித்துக் கொண்டிருக்கையில் என் கையை வந்து பிடித்தார் எனது அண்ணா அவர் அதே பாடசாலையில் உயர் தரம் படித்துக் கொண்டிருந்தார் அப்போது. என்னை வீடு அழைத்துச் சென்ற அண்ணா கூறினார், தம்பி முதலாவதாக வெடித்த குண்டிலே பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த உன் துஷியும் காயமடைந்து விட்டான் என்று. அதனைக் கேட்க என் மனதுக்குள் இன்னும் பல வெடி குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன, முதல் நாள் உணவருந்துகையில் எனதன்பு துஷி என்னிடம் கேட்ட கேள்வி பூதகரமாக என் நினைவுக் கண்களுக்குத் தெரிந்து கொண்டிருந்தது.

பின்னர் வந்த செய்திகள் மூலம் துஷியின் வலது கால் விமானக் குண்டு வெடிப்பால் துண்டிக்கப் பட்டதாகவும் அவனை மேலதிகச் சிகிச்சைக்காக யாழ்ப்பண மருத்துவமனைக்கு அனுப்பி விட்டதாகவும் அறிந்தேன். பல நாட்கள் அவன் நினைவுடன் கழிந்த போது கிட்டத் தட்ட இரு மாதங்களின் பின் மீள வந்தான் என் துஸ்யந்தன். முதலில் அவன் கண்களை என்னால் நோக்கவே முடியவில்லை, அப்போது என் தோளிலே அவன் கரம் விழ, தோள் கொடுக்கத் தானே தோழன் என்று உறுதியாக அவன் கரத்தை ஆறுதலாகப் பற்றினேன். என் துஷி ஓடித் திரிந்த வீடு, பாடசாலை, வீதி எல்லாம் அவன் ஊன்று கோலால் தாண்டித் தாண்டி நடக்கையில் என் மனமும் விந்தி விந்தி நடந்தது. இதற்கிடையில் நாம் தயாரித்த அந்த நாடகமும் துஷி இல்லாமல் விந்தி விந்தி போட்டியிலே தோல்வியைத் தழுவியது.

இறைவன் கொடியவன் தானோ, என்ன தான் செய்தான் இந்த பிஞ்சு மனத்தான், ஏன் இவனைத் தண்டிக்க வேண்டும்? போர் நடந்தால் போர் முனையில் தானே குண்டு வீச வேண்டும் ஏன் எங்கள் ஊர் மனைக்குள் வீசினார்கள்? என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் என் மனதுள் அதே கேள்விகள் துஷி மனதினுள்ளும் எழுந்திருக்க வேண்டும் போல, அவனது நடத்தைகள் அத்னை பிரதிபலித்துக் கொண்டிருந்தன. நான் மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டேன் என் துஷி மாறி விட்டான், அவனை இந்த விபத்து முற்றாக மாற்றி விட்டதென்று.

தொடர்ந்து ஆண்டுகள் உருள, நான் என் பழைய பாடசாலைக்கு மீண்டும் மாறிப் போனேன், அப்போது ஒரு நாள் யாரோ ஒருவர் ஒரு செய்தியை என்னிடம் சொன்னார். எனது துஸ்யந்தன் தன்னை முற்று முழுதாக போராளிகளுடன் இணைத்துக் கொண்டு விட்டானென்று. என்னை அவனது முடிவு அதிர வைத்தாலும், அவனது செய்கையில் என்னால் தவறேதும் காண முடியவில்லை.

அதன் பிறகு இன்று வரை நான் என் துஸ்யந்தனை மீளச் சந்திக்கவில்லை, ஆனால் போராளிகளுக்குள் அவன் ஒரு உன்னதமான போராளியாக இருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இமயமளவுக்குண்டு. ஏனென்றால் என் துஷி ஒரு அபூர்வப் பிறவி, எங்கிருந்தாலும் அவன் பிரகாசித்துக் கொண்டே இருப்பான். அவனது பிரகாசம் எங்கள் தாயக விடுதலைக்கும் வலுச்சேர்த்துக் கொண்டிருக்கும்.

இறுதியாக நான் தெளிந்த ஒரு முடிவு - போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....!

மலர்
10-08-2007, 06:20 PM
ஆராயிரமாவது பதிவு.....
படிக்கும் போதே மனம் வலிக்கிறது.....

இலக்கியன்
10-08-2007, 06:21 PM
ஆராயிரமாவது பதிவு.....
படிக்கும் போதே மனம் வலிக்கிறது.....

ஆம் வலிகளே வாழ்க்கை என்பது எம் உறவுகளுக்கு பழகிவிட்டது
உங்கள்பதிவு படிக்கையின் மனம் வலிக்கிறது

ஆதவா
10-08-2007, 06:22 PM
ஓவியரே! கண்கலக்க வைத்துவிட்டீர்..

படிக்கபடிக்க ஒரு வரலாறை உணர்ந்தேன். துஷி போல பலர் இருக்கிறார்கள். கடவுள் பலருக்கு இந்த மாதிரி தாங்கவொண்ணா இன்னல்களை கொடுத்துவிடுகிறார்.... அதிலும் இலங்கை செய்திகள் கேட்டாலே கண்கள் நடுங்குகிறது..

எப்படி அந்த சூழ்நிலையில் இருந்தீர்கள்? நினைக்கவே பயமும் அதோடு இத்தனை நாள் இருந்த உங்கள் அனைவரின் வீரமும் கண்களில் தென்படுகிறது

துஷ்யந்தன் மட்டுமல்ல போராளிகளே இல்லாத உலகம் வேண்டும்....

விகடன்
10-08-2007, 06:26 PM
சுயசரிதையில் நண்பனி ஒரு சரித்திரத்தை 6000 ஆவது பதிப்பாக உதிர்த்துவிட்டீர்கள். "போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்" மறுக்கப்பட முடியாத கூற்று. நண்பன் துஷ்யந்தனின் இழப்பு உங்களைப்போல சிலரிற்கு மட்டுமே உரித்தான ஒன்றாக இருதாலும் நாளை மலர இருக்கும் விடியல் அனைவருக்கும் பொதுவானதாக அமையப்போவதில் இல்லை சந்தேகம். வாழ்க துஷ்யந்தன் புகழ், வளர்க உங்கள் நட்பு.

வெற்றிக்கனியாக 6000 இனையும் பறித்திட்ட ஓவியனிற்கு எனது இதயங்கனிந்த பாராட்டுக்கள்

அக்னி
10-08-2007, 06:34 PM
ஈழத்தில்,
தமிழர் தாயகம் ஏந்திய
குருதித் துளிகளும்,
மனிதத் துகள்களும்,
விடியும் காலத்தில்,
சிவப்புக்கம்பளமாய்
விரியும் பெருமையோடு...
மனதில் சோகத்தில்,
எம் விழிகள் தேடும்,
உறவுகள் எங்கே என்று...
அந்த நொடிப் பொழுதில்,
உங்கள் துஷியும்,
வீரதிருதமிழ் மகனாய்..,
உங்களை வரவேற்பதாக...

6000 பதிவாக, மனதில் பதிந்த மாறாவடுவை..,
உணர்வுபூர்வமாகத் தந்தமைக்கு மிக்க நன்றி...

இளசு
10-08-2007, 06:56 PM
துஷ்யந்தனும் ஓவியனும்
நம் அனைத்துத் தமிழீழ நண்பர்களும்
இனி ஒரு துயரில்லை..
இனி ஒரு துஷி இங்கு வரப்போவதில்லை
என இன்பமாய் கலந்துபாடும்
இனிய நாள் விரைந்து வரட்டும்..


அன்பு ஓவியனின் முத்தனைய முத்திரைப்பதிவுக்கு வந்தனம்!

ஓவியன்
10-08-2007, 07:04 PM
ஆராயிரமாவது பதிவு.....
படிக்கும் போதே மனம் வலிக்கிறது.....

மலர்!

என் ஆறாயிரமாவது பதிவு என்ன என்ற உங்கள் தனி மடல் கூட என்னை இந்த பதிவை இன்றே பதிக்க தூண்டியதெனலாம், ஏற்கனவே எழுதத் தொடங்கி முடிக்காது வைத்திருந்து வேகம் வேகமாக இன்று முடித்த பதிவிது.

உங்கள் அன்புக்கு நன்றிகள்!.

ஓவியன்
10-08-2007, 07:09 PM
ஆம் வலிகளே வாழ்க்கை என்பது எம் உறவுகளுக்கு பழகிவிட்டது
உங்கள்பதிவு படிக்கையின் மனம் வலிக்கிறது

உண்மைதான் இலக்கியன்!
நாம் சுமந்த வலிகள் சிற்பத்தை தாங்க கற்கள் சுமக்கும் வலிகள் போன்றன............
வெகுவிரைவில் சிற்பமாக மலரும் எங்கள் விடியல்..........

ஓவியன்
10-08-2007, 07:10 PM
துஷ்யந்தன் மட்டுமல்ல போராளிகளே இல்லாத உலகம் வேண்டும்....

உண்மைதான் ஆதவா!
மாற்றம் ஒன்று வேண்டும், இல்லையேல் உலகை மாற்றி வைக்க வேண்டும்...........

ஓவியன்
10-08-2007, 07:12 PM
வெற்றிக்கனியாக 6000 இனையும் பறித்திட்ட ஓவியனிற்கு எனது இதயங்கனிந்த பாராட்டுக்கள்
நான் விபரித்தவற்றை அனுபவித்து உணர்ந்தவர்களில் ஒருவர் நீங்கள், மிக்க நன்றிகள் உங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும்.

ஓவியன்
10-08-2007, 07:14 PM
அந்த நொடிப் பொழுதில்,
உங்கள் துஷியும்,
வீரதிருதமிழ் மகனாய்..,
உங்களை வரவேற்பதாக......

உண்மைதான் அக்னி!

அந்த ஒரு நாளுக்காக தவமிருக்கிறோம்..........
விரைவில் அரங்கேறட்டும் அந்த நாளும்...........

ஓவியன்
10-08-2007, 07:17 PM
துஷ்யந்தனும் ஓவியனும்
நம் அனைத்துத் தமிழீழ நண்பர்களும்
இனி ஒரு துயரில்லை..
இனி ஒரு துஷி இங்கு வரப்போவதில்லை
என இன்பமாய் கலந்துபாடும்
இனிய நாள் விரைந்து வரட்டும்..

அன்பு ஓவியனின் முத்தனைய முத்திரைப்பதிவுக்கு வந்தனம்!

மிக்க நன்றிகள் அண்ணா!

நாம் எல்லோருமே அந்த ஒரு நாளுக்காகத் தான் ஏங்குகிறோம் அண்ணா, நாம் ஒன்றும் வன்முறை மேல் நாட்டம் கொண்டவரில்லை வேறு வழியின்றியே வன்முறைகளை நாட வேண்டி நிர்பந்திக்கப் பட்டோம், எனது இந்த அனுபவப் பகிர்வின் கருவும் அதுவே!.

புரிதலுக்கு இந்த ஓவியனின் கோடி நன்றிகள் அண்ணாவுக்கு.............

பார்த்திபன்
10-08-2007, 07:18 PM
இறுதியாக நான் தெளிந்த ஒரு முடிவு - போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....!

மறுக்கமுடியாத உண்மை அண்ணா............

ஓவியன்
10-08-2007, 07:22 PM
மறுக்கமுடியாத உண்மை அண்ணா............

மிக்க நன்றி பார்த்தி..........!

அன்புரசிகன்
10-08-2007, 07:27 PM
துஷியின் விழுதுகள் வேங்கைப்பாச்சல் பாய்ந்து விடியல் தரும் நாட்க்கள் அருகில்...

பாராட்டுக்கள் ஓவியரே...

பார்த்திபன்
10-08-2007, 07:34 PM
எப்படி அந்த சூழ்நிலையில் இருந்தீர்கள்?



என்னும் பல லட்சம் மக்கள் (எம் உறவுகள் உட்பட) இதே மோசமான சூழ்நிலையில் நாளை என்பதை 99 சதவீதம் நம்பிக்கை இல்லாமலும் 1 சதவீதம் நம்பிக்கை உடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ...

அமரன்
10-08-2007, 07:38 PM
ஓவியரே! வாழ்த்துக்கள் ஆறாயிரம் பதிவுக்கு.
நட்பின் பிரிவுவலி உணர்ந்தவன் என்பதாலும்(உங்களுக்கு தெரியும்தானே) அன்றாடம் பார்த்த நிகழ்வின் சாறுபோல் இருப்பதாலும் என்னை அதிகம் பாதித்த பதிவு. இந்நிலை மாறவேண்டும் மாறும் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு எதுவும் என்னிடம் இல்லை.

ஓவியன்
10-08-2007, 07:41 PM
துஷியின் விழுதுகள் வேங்கைப்பாச்சல் பாய்ந்து விடியல் தரும் நாட்க்கள் அருகில்...

பாராட்டுக்கள் ஓவியரே...

உண்மைதான் அன்பு!

நன்றிகள் பல, உங்கள் பாராட்டுக்கு..........

அமரன்
10-08-2007, 07:41 PM
எப்படி அந்த சூழ்நிலையில் இருந்தீர்கள்? நினைக்கவே பயமும் அதோடு இத்தனை நாள் இருந்த உங்கள் அனைவரின் வீரமும் கண்களில் தென்படுகிறது

ஆதவா...தாயக நிலைபற்றி நான் அதிகம் எழுதவில்லை. ஏனென்று புரியவில்லை. அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விடுவேனோ என்ற பயம் காரணமாக இருக்கலாம். எமது தாயகத்திலே கோழிகள் கூவுவதில்லை. எறிகணைகளே எம்மை எழுப்புவது வழக்கம்.

ஓவியன்
10-08-2007, 07:42 PM
இந்நிலை மாறவேண்டும் மாறும் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு எதுவும் என்னிடம் இல்லை.

உண்மைதான், என்னால் அதனைத் தெளிவாக உணர முடியும்........

மிக்க நன்றிகள் நண்பா!.

ஓவியன்
10-08-2007, 07:46 PM
எமது தாயகத்திலே கோழிகள் கூவுவதில்லை. எறிகணைகளே எம்மை எழுப்புவது வழக்கம்.

அமரனின் வார்த்தைகள் ஒன்றும் மிகைப் படுத்தலில்லை, எங்கள் வீட்டிலே வளர்க்கும் செல்ல நாய் ஜிம்மி கூட எறிகணைச் சத்தம் கேட்டவுடன் எங்களுடன் ஓடி வந்து பதுங்கு குழிக்குள் புகுந்து கொள்ளும். அதற்கு கூடத் தெளிவாகத் தெரியும் எறிகணை வந்து வெடிக்கும் போது பதுங்கு குழிக்குள் இருப்பதே பாதுகாப்பென்று..........

அந்த அளவுக்கு மக்கள் போர்ச் சூழலுடன் ஒன்றிப் போய் விட்டனர்.

சிவா.ஜி
11-08-2007, 11:53 AM
வேதனைகள் உணரப்பட்டு, பின் உலர்ந்து, பின் மீண்டும் உணரவைக்க ஒருமுறை அதனை உணர்ந்து.... அப்பப்பா....இப்பதிவைப் படிக்கும்போதே தேகமெல்லாம் பதறுகிறதே...உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் ஓவியன்..?
உங்களைப் போல் இன்னும் எத்தனை ஆயிரம் சகோதர சகோதரிகள் எத்தனை ஆயிரம் இன்னல்களை ஏற்றிருப்பார்கள் இன்னும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்ற பதத்தை இங்கு நான் உபயோகிக்காத காரணம்....வேதனைகளையும்,வலிகளையும் அனுபவித்தால் அது அவர்களை பலவீனப்படுத்தி விடுமென்பதால் அவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி அந்த வலிகளை ஏற்றுக்கொண்டவர்களில் நீங்களும் ஒருவர், அந்த துஷியும் ஒருவர். இருவரின் வழி வேறு ஆனால் வலி ஒன்று. உறுதி குலையாமலிருக்கும் இந்த உறுதி இறுதிவரை இருக்கட்டும்....இறுதி என்பது எதிரியின் இறுதி. அது வெகு தூரத்திலில்லை. நாங்கள் ஆறுதல் கூறுவோர் அல்ல,தோளோடு இணைந்த தோழர்கள்.
ஆறாயிரமாவது பதிவை ஒரு சரித்திரமாய் படைத்த ஓவியனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

தங்கவேல்
11-08-2007, 12:52 PM
மரணத்தின் வலி என் இதயத்தில் படிக்கும்போது... ஆறுதலுக்கு வார்த்தை உதவாது.. எனினும்...வார்த்தையால்...

ஓவியன்
11-08-2007, 01:23 PM
ஆறாயிரமாவது பதிவை ஒரு சரித்திரமாய் படைத்த ஓவியனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி சிவா!

அந்த உறுதியுடன் தான் நாம் இன்னமும் வாழ்கிறோம் வலிகளை வெற்றிகளாக்கும் வெறியுடன்..........

மீண்டும் நன்றிகள் பல உங்கள் புரிதலுக்கு.............

ஓவியன்
11-08-2007, 01:24 PM
மரணத்தின் வலி என் இதயத்தில் படிக்கும்போது... ஆறுதலுக்கு வார்த்தை உதவாது.. எனினும்...வார்த்தையால்...

மிக்க நன்றிகள் தங்கவேல் அவர்களே எனது ஆக்கம் ஒன்றுக்கு உங்களிடமிருந்து கிடைத்த முதலாவது பின்னூட்டம் இது.

அதற்கும் மீண்டும் நன்றி கூறுகின்றேன்.

இதயம்
11-08-2007, 02:13 PM
ஆறாயிரம் என்ற அபூர்வ சாதனையைச் செய்த நண்பர் ஓவியனை வாழ்த்த வந்த எனக்கு ஏன் இதயத்தில் இரத்தம் கசிய வைக்கும் வேதனைச்சம்பவம்..? இதற்கு நான் இங்கு வராமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. தேசத்தின் சூழ்நிலைகளால் இடம்பெயர்வையே இயல்பாக கொண்டிருந்த ஓவியனின் குடும்பத்தினரின் நிலையை நினைத்து எப்படி மனதை தேற்றுவது என்பது தெரியவில்லை. சொந்த மண்ணில் உண்டு, உறங்க நமக்கு ஒரு நிரந்தர இடமில்லை என்றால் அந்த வாழ்க்கையில் என்ன நிம்மதியிருக்கிறது.? அது வலிகள் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும். அந்த வலியை நான் ஓவியனின் வார்த்தைகளில் காண்கிறேன். இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது..!

நட்பு என்ற பூ எல்லோர் மனதிலும், எப்போதும் எல்லோரைப்பார்த்தும் மலர்வதில்லை. அது காதல் போல் ஒரு சிலரை மட்டும் இனம் கண்டு, அப்போதே மொட்டவிழ்த்து தன் இனிய இதழ் விரித்து சிரிக்கிறது. அப்படி ஒரு உன்னதமான நட்பு தான் ஓவியனுக்கும், துஷிக்கும் ஒரு கணத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஓவியன் தன் நட்பு உருவான நிகழ்வை சொன்னவிதத்தின் பின்னே ஒரு அழகிய கவிதை ஒளிந்திருக்கிறது. சொன்ன சம்பவங்களில் கொஞ்சம் கூட செயற்கைத்தனம் இல்லை. ஆனால், ஆண்டவனுடைய விதி தான் அந்த நட்பின் ஆயுளை சிதைத்து விட்டது. தன் நட்பின் ஆழம் எத்தனை ஆழமிருந்தால் ஒரு நாள் கூத்திற்காக பயின்ற ஒரு பாடலை அடிபிறழாமல், நட்பை சிதைக்க விரும்பாமல் அத்தனை அழகோடு இங்கும் அதை எழுதிக்காட்டியிருப்பார்.? நான் நிச்சயம் சொல்கிறேன், அவர்கள் இருவரும் பிரிந்திருந்தாலும் ஓவியனின் நட்பு இன்னும் உயிரோடு தான் இருக்கிறது.!

இதென்ன ஒரு தேச சூழல்.? பாடம் கற்கும் பள்ளியில் பதட்ட சூழல். கணிதம் கற்கும் இடத்தில் கண்ணிவெடிகளின் ஆக்கிரமிப்பு.? எப்படி வாழ முடிகிறது என்னருமை இலங்கை சகோதரர்களால் இச்சூழலில்..? இப்படி தான் தினம், தினம் வாழ்கிறார்களா..? ஆசிரியர் நடத்தும் பாடத்தோடு ஆகாயத்தில் பறக்கும் போர்விமான பயத்தை பொறுத்திருக்க தான் வேண்டுமா..? இப்படி ஒரு நரக சூழலிலா நம்மவர்கள் வாழ்க்கை நகர்கிறது.? என்ன ஒரு பரிதாபம்..? ஓவியன் பயின்ற பள்ளியினருகில் குண்டு விழுந்து அவர் வீசியெறியப்பட்டபோது, அந்த நொடி என் இதயமும் அல்லவா இரணப்பட்டது. உயிருக்குயிரான நண்பனுக்குள் உள்ளுணர்வால் வரப்போகும் வன்கொடுமையை உணர்த்தியது எது..? இருவருக்குள்ளும் பின்னிப்பிணைந்த புனித நட்பல்லாமல் வேறு என்ன சொல்ல.? நட்புக்கு இத்தனை சக்தி உண்டா.? கேள்விகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. பதிலில்லாமல் நெஞ்சம் பதைக்கிறது. பிஞ்சுகள் நடைபயிலும் பள்ளியில் குண்டுகளை வீச அந்த பாதகர்களுக்கு மனம் வந்திருக்கிறதே..! அவர்கள் மனிதர்களா..? அரக்கர்களா..??

அதிகாரம் என்ற கொடுங்கரம் கொண்டு அடக்குமுறைகளை அவிழ்த்துவிடும் அநியாயக்காரர்களுக்கு ஒன்று மட்டும் விளங்குவதேயில்லை. அவர்களின் அக்ரமங்களால் மண்ணில் உயிரற்று விழும் ஒவ்வொரு வீரனும் மண்ணில் புதைக்கப்படுவதில்லை. அவர்கள் விதைக்கப்படுகிறார்கள். அந்த விதை மூலம் ஓராயிரம் முளைகள் துளிர் விட்டு, செழித்து, தழைத்து நின்று அந்த வெறிநாய்களை வேட்டையாடும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் அழிவுக்கு அவர்களே ஆரம்பம் ஏற்படுத்திக்கொள்கிறார்கள்..!

ஓவியனே..! உங்கள் துஷி காலிழந்த கணத்தை துயரநிகழ்வாக கருதி துன்பப்படாதீர்கள். உங்கள் நண்பனின் பிறப்பின் பயனை இன்னும் மேன்மையாக்க இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் தான் இந்த குண்டுவெடிப்பு என்று நினைக்கிறேன். காரணம், அந்த நிகழ்வு தான் ஒரு சாதாரண மனிதனை, சரித்திரப்புருஷனாக மாற்றியிருக்கிறது. நீங்கள் சொன்ன "போராளிகள் ஒரு போதும் தானே உருவாவதில்லை, மாறாக உருவாக்கப் படுகிறார்கள்.....!" என்பவை சத்தியமான வார்த்தைகள். அந்த வகையில் நீங்கள் துஷியை நினைத்து நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு நண்பர்கள் என்ற முறையில் நாங்களும் தான்..!!

உங்கள் மன இரணத்திற்கு மருந்தாக என் வார்த்தைகளும், வாழ்த்துக்களும் இருக்கட்டும்..!!

ஓவியன்
11-08-2007, 02:40 PM
என் மனதில் பட்டதை இவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் எப்படி உங்களால் அப்படியே வெளிக்கொணர முடிந்தது இதயம்?

நான் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட பலவற்றை உங்கள் வரிகள் வெளிக்கொணர்ந்து விட்டன. அது தான் நீங்கள் குறிப்பிட்ட நட்பின் பலம் என்று நினைக்கிறேன் இதயம். நண்பர்களின் இதயம் நண்பர்களுக்குத் தானே புரியும்.....

இவ்வளவு புருந்துணர்வு மிக்க நண்பர்களைத் தந்த மன்றத் தாய்க்குத் தலை வணங்குகிறேன்.........

அத்துடன் உங்கள் முத்தான, சொத்தான பின்னூட்டத்திற்கு என் நன்றிகள் கோடி சமர்ப்பணமாகட்டும். :nature-smiley-002:

saguni
27-08-2007, 12:36 PM
உங்களது படைப்பு ஒரு அரிய பொக்கிஷம். உள்ளத்தை நெருடவைக்கும் ஒரு உண்மைக்கதை. இனி வரும் காலம் எல்லாம் வசந்தமாய் அமைய வாழ்த்துக்கள்

சாராகுமார்
27-08-2007, 02:09 PM
ஈழத்தின் சம்பவம் கண்களை ஈரமாக்கிவிட்டது.

ஓவியன்
28-08-2007, 10:06 AM
உங்களது படைப்பு ஒரு அரிய பொக்கிஷம். உள்ளத்தை நெருடவைக்கும் ஒரு உண்மைக்கதை. இனி வரும் காலம் எல்லாம் வசந்தமாய் அமைய வாழ்த்துக்கள்


ஈழத்தின் சம்பவம் கண்களை ஈரமாக்கிவிட்டது.
என் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த போது ஆறுதலாக வந்த உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றிகள் நண்பர்களே.....

பூமகள்
28-08-2007, 01:40 PM
அன்புச் சகோதரர் ஓவியரே..
உங்களின் ஆராயிரமாவது பதிப்பு படித்து கண்ணீர் மல்க பதிலடிக்கின்றேன்.
என் மனக்கண்ணில் நீங்கள் சொன்ன அந்த கொடூரம் அப்படியே படமாய் வந்து போனது..... :ohmy:
இவ்வளவு இன்னல்களுக்கு நடுவில் படித்த, படிக்கும் மற்றும் அங்கு படித்துக் கொண்டிருக்கும் இளஞ்சிட்டுக்களை நினைத்து மிகவும் மனம் வேதனை படுகிறது.
உங்கள் அன்பு துஷியை போல் இன்னும் எத்தனை அருமை குழந்தைகள்
பாதிக்கப்பட்டனரோ...:huh:

மீளமுடியா துயர் கொள்ளவைத்து விட்டீர்...
இலங்கை அமைதி வேண்டி பிராத்திக்கின்றேன்.

உங்களின் வீரமும், போராட்டம் நிறைந்த வாழ்க்கையும் கண்டு உண்மையில்
பெருமை படுகிறேன்.. ஆனால்... இத்தகைய போராட்ட வாழ்க்கை இல்லாத உங்கள் நாடு மாற வேண்டும் என்பதே எங்கள் மிகப்பெரிய கனவு.

அங்கு அப்பாவியாய் உயிர் விட்ட... உறுப்பிழந்த சின்னச் சிறு பிஞ்சுகளுக்கு என் அஞ்சலியை சமர்பிக்கிறேன்.

ஓவியன்
28-08-2007, 02:01 PM
உண்மைதான் பூமகள் நாம் ஒன்றும் போர் மேலே பற்றுக் கொண்டவர்கள் அல்லவே........
நாமும் நம் பூமியிலே சுதந்திரமாக, சந்தோசமாக வாழ வேண்டும் என்றே விரும்புகின்றோம், அது நிறைவேற அமைதி முறையில் முயன்றோம், முடியவில்லை அதனால் இப்போது இந்த முறை........
இது விரும்பி ஏற்றதல்ல, காலத்தின் கோலத்தால் சுமக்கத் துணிந்த சுமை........
சுமக்க தொடங்கியதை பாதை முடியும் முன்னர் இடை நடுவே கீழே இறக்க முடியாத நிலை, வெகுவிரைவில் பாதை முற்றுப் பெறும் என்ற நம்பிக்கை எல்லோர் நெஞ்சிலும் நிறையவே........
அந்த ஒரு நாளுக்காகவே எங்கள் ஏக்கத்தையும் எதிர்பார்ப்புக்களையும் பொத்தி வைத்துக் கொண்டு காத்திருக்கின்றோம்...........

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோதரி........
உங்களது ஈழம் பற்றிய கனவு விரைவில் நிறைவேறட்டும்..........!

Narathar
31-08-2007, 12:19 PM
துசி போராளிகளுக்குள் ஒரு உன்னதமான போராளியாக இன்னும் இருப்பான் என்ற நம்பிக்கை உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உண்டு...

கண்கலங்கவைத்த கதைகள் ஆயிரம் அதில் இதுவும் ஒன்று
பகிர்தலுக்கு நன்றி

lolluvathiyar
31-08-2007, 03:27 PM
உங்கள் 6000 ஆம் பதிப்பு இன்று தான் என் கன்னில் பட்டது.
இத்தனை நாள் என் கன்னில் படாமல் இருந்தது என் துர்பாக்கியமே.

நிரைய படைப்புகளுக்கு ஓரளவுக்கு பின்னூட்டம் இட்டு வந்த எனக்கு ஏனோ இந்த பதிப்பு மனதில் ஒரு காயத்தை ஏற்படுத்திவிட்டது. விளைவு என்னால் நிதானமாக பின்னூட்டம் விட முடியவில்லை.
மன்னிக்கவும்
(மனதில் விடும் பின்னூட்டம் 60000 வரிகளை தாண்டலாம் சகோதரரே)

அறிஞர்
31-08-2007, 03:40 PM
ஆறாயிரமாவது பதிவை இன்று தான் படித்தேன்.... கண்களில் கண்ணீரை வரவழைத்தது...

துஸியின் துடிப்புகளை கண் முன் கொண்டு வந்தீர்.. எங்கிருந்தாலும் அந்த நல்ல தோழன் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்...

மனோஜ்
31-08-2007, 04:19 PM
நண்பரே பதிவு பதைக்கவைத்துவிட்டது இன்னும் எத்தனை எத்துனை சின்ன உள்ளங்கள் பாடுபடுகிறது
இறைவனை பிரத்திக்கிறோன் நண்பா அமைதி மிக மிக விரைவில் அங்கும் எங்கும் நிலவ

ஓவியன்
31-08-2007, 05:56 PM
உங்கள் 6000 ஆம் பதிப்பு இன்று தான் என் கன்னில் பட்டது.
இத்தனை நாள் என் கன்னில் படாமல் இருந்தது என் துர்பாக்கியமே.
(மனதில் விடும் பின்னூட்டம் 60000 வரிகளை தாண்டலாம் சகோதரரே)
இதெல்லாம் ஒரு பிரச்சினையா நண்பரே இப்போது நம் மன்றத்தில் ஒரு நாளில் பதிக்கப்படு எல்லாப் பதிவுகளையும் முழுமையாகப் படிக்க நம் வாழ் நாளே போதாது போலுள்ளது.

உங்கள் அன்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் நண்பரே!.


துஸியின் துடிப்புகளை கண் முன் கொண்டு வந்தீர்.. எங்கிருந்தாலும் அந்த நல்ல தோழன் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்...
உண்மைதான் அண்ணா!

உங்கள் வாழ்த்துக்கள் அவருக்குத் தேவையே.......
நன்றிகள் கோடி உங்கள் பின்னூட்டத்திற்கு............



இறைவனை பிரத்திக்கிறோன் நண்பா அமைதி மிக மிக விரைவில் அங்கும் எங்கும் நிலவ

உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கடும் மனோஜ்!
மிக்க நன்றிகள்.......

என்னவன் விஜய்
10-10-2007, 03:55 PM
ஓவியன்
நான் இதேபோல் 1995இல் யாழில் இருந்து இடம்பெயரும் போது செம்மணியில் நடந்த விமானகுண்டு வீச்சில் என் கண்முன்னே 7-8 மீற்றர் தூரத்தில் என் நண்பன் குண்டடி பட்டு சிதறிப்போனான்.அவனின் கை என்காலில் பறந்து வந்து விழுந்திருந்தது..........................................
என்றுதான் விடியும் எங்களுக்கு

சாம்பவி
10-10-2007, 07:54 PM
இத்தனை ரணமா...
இத்துணை வலியா...
நித்தம் நித்தம்
ரத்தக் களரியா ...
இழப்பும் இறப்பும்
பழகித் தான் போனதோ...
குலைந்துத் தான் போனேன் .

விடியல் ...
வரட்டும் அது விரைவில் !
வானம் வசப்படட்டும்
உங்களுக்கே உங்களுக்காய்... !

பிரார்த்தனையுடன்.....

ஓவியன்
20-01-2008, 01:40 PM
இத்தனை ரணமா...
இத்துணை வலியா...
நித்தம் நித்தம்
ரத்தக் களரியா ...
இழப்பும் இறப்பும்
பழகித் தான் போனதோ...
குலைந்துத் தான் போனேன் .

விடியல் ...
வரட்டும் அது விரைவில் !
வானம் வசப்படட்டும்
உங்களுக்கே உங்களுக்காய்... !

பிரார்த்தனையுடன்.....

மிக, மிக தாமதமான பின்னூட்டத்துக்கு என்னை முதலில் மன்னியுங்கள் சாம்பவி...

நிதம் நிதம் ஏற்படுத்தப் படும்
இழப்புக்கள், திட்டமிடப் பட்டவை...

உணர்ச்சிகளின் கொந்தளிப்பை
பயத்தால் அடக்கும் முயற்சி அது...

ஆனால், அதர்மம் ஒரு போதும்
தொடர்ந்தே ஜெயிக்காதே
தர்மமும் ஒரு நாள் தலை நிமிர்த்தும்..

அந்த ஒரு நாளுக்காவே நாமெல்லாம்
நாளெல்லாம் இழப்புக்களுடன்........

உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சாம்பவி...!!

ஓவியன்
20-01-2008, 01:49 PM
ஓவியன்
நான் இதேபோல் 1995இல் யாழில் இருந்து இடம்பெயரும் போது செம்மணியில் நடந்த விமானகுண்டு வீச்சில் என் கண்முன்னே 7-8 மீற்றர் தூரத்தில் என் நண்பன் குண்டடி பட்டு சிதறிப்போனான்.அவனின் கை என்காலில் பறந்து வந்து விழுந்திருந்தது..........................................
என்றுதான் விடியும் எங்களுக்கு

கவலை வேண்டாம் என்னவன்விஜய்...
விரைவிலேயே விடிவு கிட்டும்...

நம்பிக்கை தானே வாழ்க்கையே...!!

மயூ
22-01-2008, 02:12 AM
ஓவியரே.. விடியக் காத்தால இந்தப் பதிவை வாசித்து நெஞ்சு கனத்து விட்டதப்பா!!!

பல தடவை முயன்று முடியாமல் போனாலும் கடைசியில் ஆனைஇறவை, தமிழீழ தேசியப்படை கைப்பற்றியது என்பதையும் இங்கே நினைவு படுத்துகின்றேன்!!!

துசிக்காக நான் பிரார்த்திக்கின்றேன்!!! எம் வெற்றி விழாவில் துஷியும் கலந்துகொள்ளும் காலம் வரட்டும்.

logini
27-03-2008, 06:19 AM
இதென்ன ஒரு தேச சூழல்.? பாடம் கற்கும் பள்ளியில் பதட்ட சூழல். கணிதம் கற்கும் இடத்தில் கண்ணிவெடிகளின் ஆக்கிரமிப்பு.? எப்படி வாழ முடிகிறது என்னருமை இலங்கை சகோதரர்களால் இச்சூழலில்..? இப்படி தான் தினம், தினம் வாழ்கிறார்களா..? ஆசிரியர் நடத்தும் பாடத்தோடு ஆகாயத்தில் பறக்கும் போர்விமான பயத்தை பொறுத்திருக்க தான் வேண்டுமா..? இப்படி ஒரு நரக சூழலிலா நம்மவர்கள் வாழ்க்கை நகர்கிறது.? என்ன ஒரு பரிதாபம்..? ஓவியன் பயின்ற பள்ளியினருகில் குண்டு விழுந்து அவர் வீசியெறியப்பட்டபோது, அந்த நொடி என் இதயமும் அல்லவா இரணப்பட்டது. உயிருக்குயிரான நண்பனுக்குள் உள்ளுணர்வால் வரப்போகும் வன்கொடுமையை உணர்த்தியது எது..? இருவருக்குள்ளும் பின்னிப்பிணைந்த புனித நட்பல்லாமல் வேறு என்ன சொல்ல.? நட்புக்கு இத்தனை சக்தி உண்டா.? கேள்விகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. பதிலில்லாமல் நெஞ்சம் பதைக்கிறது. பிஞ்சுகள் நடைபயிலும் பள்ளியில் குண்டுகளை வீச அந்த பாதகர்களுக்கு மனம் வந்திருக்கிறதே..! அவர்கள் மனிதர்களா..? அரக்கர்களா..??

இத்தனைக்கும் மத்தியில் நம்மவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது நினைத்து நாம் பெருமை பட வேண்டும்.
நமக்கான விடியல் தொலைதூரத்தில் இல்லை.... அதுவரை காத்திருப்போம்....

ஓவியன்
27-03-2008, 07:11 AM
நன்றி லோஜினி, எதனையும் தடுக்க, தடுக்கத் தான் ஆவேசம் இன்னும் இன்னும் பொங்கிப் பிரவாகிக்கும் - நம்மவர் கல்வியும் அப்படித்தான்...

Keelai Naadaan
28-07-2008, 05:18 PM
நண்பரே, நாங்கள் ஈழத்தின் கொடுமைகளை படித்து தான் அறிந்திருக்கிறோம். நீங்களெல்லாம் அனுபவித்து இருக்கிறீர்கள்.
"எமது தாயகத்திலே கோழிகள் கூவுவதில்லை, எறிகணைகளே எமை எழுப்புவது வழக்கம்"
என்ற அமரனின் வரிகள் அங்குள்ள நிலையை மேலும் விளக்குகிறது.
நீங்கள் குறிப்பிட்டது போல் போராளிகளாய் யாரும் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள்.
விடியாத இரவில்லை. நிச்சயம் இந்த நிலை மாறும்.
நல்ல படைப்புக்கு நன்றிகள்.

shibly591
29-07-2008, 11:30 AM
அழுகையில் நனைகிறது எனது கண்கள்...

உங்களுக்கு ஒரு துஷி போல எனக்கும் ஒரு நண்பன் இருந்தான்.

பாரிசவாதத்தால' பாதிப்படைந்த தனது தாயை குளிக்க வைத்து தூங்கவைத்து..தனது பிஞ்சுக்கரங்களினால் தூக்கித்தூக்கி முன்னாண் நரம்பு வெடித்துப்போ உடலின் கீழ்பாகம் எதுவும் சரியாக இயங்காத நிலையில் 6 மாதங்கள் அல்லலுற்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்த போது எனது பெயரை உச்சரித்ததாக தாதிகள் சொன்னார்கள்...

அது நிகழ்ந்து 8 ஆண்டுகளாகின்றன...

அவனது பெயர் ஹைசான்..

கிரிக்கெட் போட்டியொன்றில் இருவரும் இணைந்து எங்கள் அணி வெல்ல காரணமாயிருந்த அந்த தினமும் ஒரு வெள்ளிக்கிழமைதான்...

டாக்டராகி பாரிசவாதத்தை ஒழிக்க பாடுபடுவேன் என்ற அவனின் நம்பிக்கைக்கு என்னவாயிற்று...????

ஒர நாள் கனவில் வந்து எனது தங்கைக்கு 500 ரூபா காசு கொடு என்று சொன்ன போதுதான் அவனை கடைசியாக பார்த்தேன்(இறப்புக்குப்பின்..)

ஓவியனே எனது பசுமை நினைவொன்றை மீட்க உதவினீர்கள்..

நன்றி கலந்த பாராட்டுக்கள்