PDA

View Full Version : அபூர்வ நட்சத்திரங்களிலிருந்து.....ஆதவா
08-08-2007, 03:00 PM
பல திறமைகள் ஒருங்கே அமைக்கப்பட்ட நாட்டியச் சிலையாக, போட்டிகளில் மட்டும் பங்கேற்கும் பட்டத்து ராணியாக வலம் வரும் ஓவியாவின் கவிதைகள் எப்படிப்பட்டவை?

வாழ்க்கை மாற்றத்தை மாற்றித் தரும் புதுக்கவிதைகளும் வாழ்க்கையில் சொல்லமுடியாதவற்றைச் சொல்லும் இசங்கள் நிறைந்த (சில சமயங்களில் சொல்லக்கூடியதையும்) கவிதைகளும் காதல், நட்பு என்று தனிப்பாதையில் பீடுநடை போடும் கருக்களும் உலாவும் ஒரு தளத்தில் அனைத்தையும் அள்ளிப் பருகும் வகையில் ஆற அமர்ந்து ருசித்துவிட்டு பிறகு படையல் இடும் ஒருசிலருள் இவரும்.

கைகள் விறைக்க விமர்சனமிட்ட முதற் கவிதையினை மறக்கமுடியாதென்பது மன்றம் அறிந்த வரலாறு. அவசரப்பட்டோ, ஆர்வக்கோளாறிலோ கொடுத்திருந்தாலும் தரத்தில் முதலாவதாக வந்ததை மறுக்க இயலாது. மன்றத்திலே சேராத நாளில் வந்த கவிதை ஒன்று. படித்ததாக நினைவில்லை. ஒரு ஏழைப்பெண்ணின் புகைப்படத்தை ஏந்திய அந்த கவிதை ஒரு கவிஞனால் எழுதப்பட்டதுபோல இருந்திருக்கும். முகவரி தேடி அலையும் அந்த முகத்தை முற்றிலும் ஓவியா பாணியில் கொடுத்த விதத்தை நான் அவ்வளவாக காணாமல் விட்டது மன்றத்திற்கு புதியவன் என்ற காரணத்தினால்.


நீங்கள் சொல்லுங்களேன்
எங்கே தொலைந்தது இந்த சிறுமியின்
நிரந்தர முகவரி...........


தொலைந்த பொருளைத் தேடிக்கொடுக்கலாம். முகவரியே தொலைந்துவிட்டால்? தேடிக்கொடுங்கள் வாசகர்களே என்று கெஞ்சும் கவிஞை.. வெறும் சொல்லுக்கு வடிவமைக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.

காதல் என்று வரும்போது பட்டாசு கிளப்பும் சத்தத்தோடு சந்தங்கள் நிறைந்த ஒரு கவிதை படைத்தது நினைவுக்கு வரலாம்.

அந்தி ஆதவனின் வெளிச்சம் போல்
ஆயிரம் முறை பூமியில் வந்து போக விரும்பவில்லை

முற்றிலும் புதியது என்று சொல்லமுடியாது. எனினும் காட்சிக்கேற்ப கவிதை என்று வரும்போது முற்றீலும் புதிய வரியாகவே தென்பட்டது. ரசிக்க வைக்கும் பதிவுகளுக்கிடையே ருசிக்கவைக்கும் வரிகள் இவை. கன்னிக்கவிதை என்ற பெயரில் பல கவிதைகள் எழுதிய அனுபவத்துளியோடு சிந்திய சொட்டுக்களை இன்றும் ருசிக்கலாம். அந்த ஒரு அபூர்வ சொல்லைத் தேடிக்கொண்டு திரியும் ஒரு காதலனின் கவிதை அது..

காதல் மட்டும்தானா? ஒரு பெண்ணுக்கே உரிய தைரியம் இல்லையா?... அதுவும் உண்டு. மானிடப் பெண்களுக்கிடையே சாதாரண அலை மோத முடியுமா? இயற்கைக்கே சவால் விடும் ஒரு கவிதை.. உன்னால் முடியுமென்றால் ஓடிவா என்று அறைகூவல் விடுவதுபோல பல உண்மைகளை போட்டு உடைக்கிறது இந்த கவிதையில் உள்ள வரிகள்.

ஒன்றுமே அறியாமல்
வாழ்ந்து பொட்டிழக்கும் ஒரு பூவின்
மனப் போராட்டத்தைப் பார்த்துள்ளாயா நீ?

இருக்கலாம்.. அலை கண்டது வெறும் கொலைகளும் தற்கொலைகளும் தான். போராட்டம் என்பது மனிதர்களுக்கே உண்டானது. வெற்றியுமல்ல தோல்வியுமல்ல என்பதாகத்தான் அலைகள் ஓடிக்கொண்டிருக்கிறது.

மானிடப் பெண்களிடம் என்றுமே தோற்றுத்தான் போவாய் நீ

குறிப்பாக இந்த கவிதை எழுதிய கவிஞரிடமாக இருக்கலாம். பல சராசரி பெண்களுக்கிடையே சில விசேச பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வறுமையும் காதலும் தைரியமும் காட்டிய எனக்கு பாசமும் காட்ட இயலும் என்று பறைசாற்றும் கவிதை முதல் முத்தம்.

அன்பின் ஒரே மொழி முத்தமாம்

மொழிகள் இல்லாத உணர்வில்லை போலும். அன்புக்கும் மொழிகளை நிர்ணயக்கிறார் கவிஞர். இன்றைய சூழ்நிலையில் முத்தம் என்றாலே அது காதல் என்றாகிவிட்டது. அன்புக்கு முத்தமிடுவது அழிக்கப்பட்டுவருகிறது. மீண்டும் எழுப்பிய கவிஞருக்கு வாழ்த்து. அதிலும் விதவிதமாக அதைச் சொன்னவிதம் இன்னும் அருமையாகப் படுகிறது.. ஆனால் வேறு வழியில்லை. ஒரே மாதிரியாக இருந்திருந்தால் அந்த கவிதை பரிசு வென்றிருக்காது. இறுதியில் தனக்குறிய குறும்பைக் காட்டியிருப்பதும் யதார்த்தம்.

காதலி கொடுத்தாள்
முதல் ஸ் ஸ் காம முத்தம்
மனைவி கொடுத்தாள்
முதல் மோக முத்தம்

காமத்திற்கும் மோகத்திற்கும் வித்தியாசமென்ன... இவ்விடத்தில் சற்று பிழையிருக்குமோ என்று கண்கள் சொல்லுகிறது. முத்தத்தில் எது முதல் என்று சரியாக சொல்ல இயலாத போது திணரத்தானே வேண்டும்? இறுதியில் அதைத்தான் சுட்டுகிறார்... "முதன் முதலில்" என்று வரையறுக்க இயலாத ஒன்றுதான் முத்தம் என்று சொல்லுகிறார்...

ஒருவேளை முதல் முத்தம் என்றால் என்ன என்றெ அறியாமல் போகும் ஒருவன்???? அவனைப் பற்றிய கவிதை என்றால்.... இது வித்தியாசமான கோணம்.. கருவை எந்த கோணத்திலும் கொண்டுபோகும் இக்காலத்தில் ஒரு தலைப்பை பல கோணங்களில் சிந்திக்கும் இவர் இன்னும் பல எழுத வேண்டும்....

அந்த முதல் முத்தத்தத அறியாமலே நான்,,,,

எனக்கு விழுந்த முத்தங்களில் நான் தேடும் அந்த முதல் முத்தம் எதுவென்று தெரியாமலே போகிறது... மரணம் முத்தமிடும் நேரம் வரையிலும் அவள் முத்தம் கிடைக்கவில்லை... இது கவிதைநாயகனின் மனப்புலம்பல். ஒவ்வொரு பத்துவருட இடைவெளியிலும் உருமாற்றம் அடையும் அக/புற தோற்றங்களுக்கேற்ப வரிகள் அமைத்து விழிகளை விரிக்கவ்வைத்த கவிதை... கண்ணியம் கண்ணியம் என்ற பெயரில் கூத்தடிக்காமல் அகமும் புறமும் ஒழுங்கே அமையப்பெற்ற ஒருவனுக்கு உருப்படியாக முதல் முத்தம் கிடைக்கவில்லை..... நாயகனின் நிலை எந்த ஒரு பிரம்ஹச் சாரிக்கும் வரக்கூடாதுதான்..


ஹைக்கூ இந்த பெண்ணுக்கு எழுதத் தெரிந்திருக்கிறது.. அதிலும் நான் கண்டவற்றில் மிகவும் வியந்த ஹைக்கூ... முதல் பரிசை பெற்றிருக்கவேண்டும்.... ஆனால் என்னவோ இரண்டாம் பரிசை வென்றிருக்கிறது..

ஆசைக்கு எச்சமாக்கினான் ஒருமுறை
நாளிதழ்களோ காசுக்குப் பலமுறை
- கற்பழிக்கப்பட்டவள்

இதைவிட அற்புதமாய் ஹைக்கூக்களில் நான் கண்டதில்லை... எத்தனை கொடுத்தாலும் தகும்.... நாளிதழ்கள் செய்யும் கேவலத்தை ஒருசோறு பதமாக சொல்லிய விதம்.... உண்மையில் வியக்க வைக்கிறது... ஒருத்தியின் வாழ்வை சிதைக்க எத்தனை முறைகள் உண்டு.! ஊடகங்கள் உதவாவிடினும் உண்மையை மறைக்கவேண்டிய நேரத்தில் கொட்டி விடுகின்றன.. வியாபாரத்தில் மனிதாபிமானம் காக்கும் தொழில்களுல் பத்திரிக்கைத் தொழிலும் உண்டு... ஆனால் முதன்முதலில் மனிதாபிமானத்தை வேரோடு அறுக்கும் சக்தியே பத்திரிக்கை எனும்போது பூமியை புரட்டியெடுக்கத்தான் தோணுகிறது. . உண்மையில் நரம்பும் அற்றுப் போகும் சாட்டையடிக் கவிதை இது.. வருடங்கள் பல கடந்தாலும் நினைவில் விட்டு நீங்காத குறும்பா..

தினமும் எண்ணில்லா குளியல்
கறை மட்டும் கரையாமல்
- தாசி

மறைமுகமாய்....

மிக நேர்த்தியான சமூகப் படம் ஒன்றை நீட்டி கவிதை எழுதச் சொன்னால் இந்த பெண் எழுதுமோ?

வாழ்க்கைப் போராட்டத்தில் ஒரு விளங்காத புதிர்...

புதிர் என்றால் அதை அவிழ்க்க ஒருவர் வேண்டும்.... வாழ்வில் புதிர் எனும்போதும் வாழ்க்கைக்கு ஒரு துணையும் வேண்டும்.. இவர் சொல்லும் பாதை வேறு... என்னவென்று பார்ப்போமே?

ஒரு துமி நீரில் நான் உயிர் பெற்றேன்.
சில துளி நீரால் நீ உருவம் பெற்றாய்.

கவிதையில் தத்துவங்களின் எதார்த்தம் நிலைக்கண்ணாடியில் உருவமின்மை போல நேர்த்தியாக படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.. ஓவியாவின் உழைப்பு நிச்சயம் தென்படுகிறது.. நீரின்றி அமையாதுலகு... அந்நீரில் பிறப்பதுதான் உயிர்... உனக்கும் (குடுவை) நீரே ஆதாரம்... எனக்கும். நாசூக்காக விளக்கிய இவ்வரிகள் பண்பட்ட கவிஞை என்ற பட்டத்தை என்றோ சுமந்தவர் என்று புலப்படுத்துகிறது. பஞ்சபூத இயற்கையைக் குழைந்து பானை படைத்ததுபோல ஒட்டுமொத்த கவிதை இருக்கிறது படிக்கும்போது. ஆதாரம் தொலையும் போது உயிர் தொலைக்கப்படுகிறது. பொருள் உடைக்கப்படுகிறது.. தத்துவங்கள் நிறைந்த அழகுப் பதுமை.... இந்த விளங்காத புதிர்..

நெருப்பிலிடப்பட்டு நீ பதம் பார்க்கப்பட்டாய் - நானோ
மனிதாபிமானம் புதைக்கப்படுவதால் அனலாகிறேன்.

புதைக்கப்பட்ட மனிதாபிமானத்தினால் அனலாகிறான்... அந்த பிச்சைக் கார சிறுவன்... குடுவைக்கும் பொருத்தம் அந்த சிறுவனுக்கும்ம்.

என்னையும் சேர்த்தே
தமிழ் நாட்டில்
6 கோடி மக்களாம்

ஒரூ வேலை
உணவன்றி
3 கோடி மக்களாம்

அரிசி விளம்பரத்திற்க்கு
அரபு நாட்டு மங்கையாம்

இதற்கு மேலும் நான் கவிதை எழுதப்போவதில்லை... ஒரு விரல் கொடுத்த முத்ததில் விளைந்த கவிதைக்கும் கைகளால் அடித்து வலியில் துடித்து விழுந்த கவிதைக்கும் அநேக வித்தியாசங்கள் இருக்கின்றன...

அதிக எதிர்பார்ப்புகள் மிகுந்த கவிதைகள், தரம் தாழா கவிதைகள் இனி மேலும் கிடைக்குமா என்று விழிநோண்டி காத்திருக்கிறேன் ஓவியா அவர்களே..

ஷீ-நிசி
08-08-2007, 04:17 PM
ஓவியாவின் வரிகளை தேடிப்பிடித்து மீண்டும் இங்கே கொடுத்துள்ள அனைத்து வரிகளுமே நிச்சயம் ஆஹா என்று சொல்லவைக்கும் வரிகள் தான்...

வாழ்த்துக்கள் ஓவியா..

அமரன்
08-08-2007, 04:51 PM
ஆதவா....நன்றி. எதற்குத்தெரியுமா...? ஓவியா அக்காவின் கவிதைகளைப் படிக்க நினைப்பேன். என்னமோ தெரியவில்லை காலங்கைகூடவில்லை. அதற்கான காரணங்கள் இதுவரை புரியவில்லை. அப்படியான ஒரு சமயத்தில்ல் உந்துவிசை கொடுத்துள்ளீர்கள். இந்த இவ்விசைபோதும் அக்ககவிதைகளைப் படிப்பதற்கு. பாராட்டுக்கள் இருவருக்கும்.

ஓவியா
15-08-2007, 01:02 AM
அடடே, இப்படி ஒரு பதிவா!!! சந்தோஷத்தில் மனம் கரைந்தது ஆதவா!.

வியந்தேன், கவிச்சக்கரவர்த்தியின் கையில் குட்டு வாங்க காத்திருந்த தருனத்தை அமுதாக்கியது அவரின் பாராட்டு மடல். மடலுக்கு 'மேடலும்'க்கும் நன்றி.

ஷீ, அம*ர் இருவ*ருக்கும் ந*ன்றிக*ள்.

ஓவியா
15-08-2007, 01:12 AM
ஆதவா, ஒன்றாம் பரிசை தட்டி வரும் என்று நான் மிகவும் எதிர்பார்த்த கவிதை இதுதான், ஆனால் 3ம் பரிசு மட்டுமே!!!

சில நாட்களுக்கு முன்பு நானும் இதுபோலவே மழையில், உடை, குடை, செருப்பு, பை என ஒரு படம் பிடித்திருந்தேன், ஆனால் சில நோடிகள் என் எண்ணமும் இப்படிதான் யோசித்தது!!!!!!!!

உண்மை உண்மை உண்மையே

அட்லீஸ்ட் எனக்கு ஒரு ஆருதல் பரிசாவது கொடுத்திருக்கலாம், கவிதை படத்துடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கின்றது, பாருங்கள் அவள் கண்கள் பேசும் சோகத்தை.நட்சத்திரம் 10

கவிதை போட்டி 7க்கு அனுப்பியது (3வது பரிசு)

http://i170.photobucket.com/albums/u257/shanrah2002/rain.jpg


கன்னியிவள்
கனவுகளின் காட்சிகளைக்
கண்ணில் சுமந்து

காலமெல்லாம் கால் கடுக்கக்
கவி பலப் பாடிக்
காத்திருக்க


கண்ணனவனோ
கவிக்குயிலின்
அழகற்ற முகத்தினைக்
கண்டு

காதலதைக் கொள்ளாமலே
நழுவினான்
கை கழுவினான்


கரைந்து போகும் பணத்திலும்,
அழகிலும்,
ஜாதி மதத்திலும்,

காதலது அன்று கலைந்து,
அலைந்து
பின் தொலைந்தும் போனது


கற்கண்டு காரிகையின்
கரும்பு வாழ்வை
கருக்கி கசப்பாக்கி

காற்று வேகத்தில் கடந்து
இரயில் பயணமானன்
கலாபக் கயவன்


கள்வனின் பாதச் சுவடுகளை
கன்னிமயில் தேடித்தேடி
கல்லாகினாள்

காயம்பட்ட இதயமாய்
கலைந்த கூந்தலுடன்
களைத்தும் போனாள்


கட்டழகுமங்கையோ
கருப்புச்சின்னமாகி
காக்கைக்கும்
கேலிச்சித்திரமானாள்

காதல் வடுக்களைக்
கவிதையாக்கி
கல்லறையில் பதிப்பாளாம்
காவியமாய்


கடவுளும்
கருணையுடன்
கசங்கியவளுக்காக
கண நேரம் அழுதாராம்

கார் மேகமும் கண்டு
மழை நீராய்
காலை மாலை
தொடர்ந்ததாம்


கந்தலான தாரகை
கருப்பணிந்து
கரும் பூவாகி - தன்
கண்ணீரின் பிம்பத்திலே - அவன்

கால் சுவடுகளை நோக்கி
கருப்பு விதவையாய்
நிதமும் பயணிக்கிறாளாம்.


.

இலக்கியன்
15-08-2007, 08:24 AM
வாழ்த்துக்கள் ஆதவா ஓவியா

ஓவியா
16-08-2007, 12:24 AM
நன்றி இலக்கியன்.

இளசு
19-08-2007, 02:18 PM
சிலரைப்பற்றி அவர்களின் பதிவுகளாலே நமக்கு ஒரு மனஓவியம் இருக்கும்..

ஓவியாவைப் பற்றியும் எனக்குள் ஓர் ஓவியம் உண்டு..
சுட்டித்தனம், நேர்மை, அன்பு, கொஞ்சம் அவசரம், வேகமான சிந்தனை, வெளிப்படைப் பேச்சு, இசை − நடன ஆர்வம் − எல்லாம் கலந்த ஒரு பிம்பம்..

ஆனால் இந்த ஓவியத்தில் ஒட்டாத வைரப்பரிமாணங்கள் உள்ளன.
கவிஞர், கதை சொல்லி இப்படி..

இதுவரை ஓவியாவின் எந்தக்கவிதைக்கும் நான் விமர்சனம் அளிக்காதது
தற்செயலா.. எல்லாம் நம்ம மன்றச்செல்லம்தானே என உரிமையாலா என எனக்கு இன்னும் விளங்கவில்லை..

ஆனால் ஓவியா என அறியாமலேயே அவர் கவிதைகளுக்கு வாக்களித்ததுண்டு..

முன்பு ராம்பால், நண்பன் ஆற்றிய முக்கியப்பணியை இங்கே ஆதவா ஆற்றக்கண்டு ஆறுதல்...

கவிஞர்களின் ஒவ்வொரு பதிவுக்கும் சூடான பின்னூட்டம் − உணவு அளிப்பதுபோல்..

இதுபோன்ற தொகுத்து அலசுதல் − விருது அளிப்பதுபோல்..

அளிக்கப்பட்டவரும், அளித்தவரும் தகுதி உள்ளவர்கள்..

முன்னவர்க்கு வாழ்த்துகள்.. பின்னவர்க்கு நன்றிகள்..


நாம் செய்யத்தவறியதை இன்னொருவர் நன்றே செய்தால்
பொங்கும் மனம் சொல்லவேண்டும் − நன்று..நன்றி..

ஆதவா... நன்று.. நன்றி!

ஓவியா
24-08-2007, 06:06 PM
உங்கள் கருத்துக்கு எனது பணிவான நன்றிகள் இளசு.