PDA

View Full Version : முற்றுப்பெறாதகதைகள்...



ரிஷிசேது
07-08-2007, 05:43 PM
அன்றைக்கு அந்தக் கதையை
அப்படி முடித்திருக்க வேண்டியதில்லை பாட்டி
முடியாமலே முடிந்திருப்பதாகவே பட்டது எனக்கு
அதன் திகிலுறக்கங்கள் இன்னமும்
தீர்ந்தபாடில்லை ..

ருக்குமணி பாட்டியின் கதைகள்
வித்தியாசமானவை
தலையேயில்லாத முண்டம்
வேரேயில்லாத மரத்தின் கிளையில்
தொங்கிக் கொண்டிருப்பதாக
தொடங்கும்போதே நம்
கற்பனை விரியத் தொடங்கும்.

அந்த முண்டம் ஆளேயில்லாத ஊரில்
காற்றும் நீருமற்று தரையிறங்காமல்
பறப்பதாக தொடருமவை ...

பாட்டி, காற்றேயில்லாத ஊரா?
எனக் கேட்டால்,
காற்றில்லாத ஊரின் கதையை
ஆரம்பிப்பாள் - ஏழுகடல் ஏழுமலை தாண்டி
நட்சத்திரங்களுக்கப்பால் தொடங்குமவை
முடியும் முன்னே உறங்கிப் போவேன்
கனவுகளில்
தேவதைகளும் ராஜாக்களும்
வந்து போவார்கள்.

பாட்டியின் கதைகளில்
அரிச்சந்திரன் பொய் சொல்வான்
கேட்டால்
பொய்மையும் வாய்மையிடத்து - என்பாள்
ஈயென இரத்தலும் ஈயேன் என்பதும்
தப்பெனில் என்னதான் செய்வதென்பாள்.

சில கதைகள் சொல்லும்போதே
பாட்டியழுவாள்
அரிச்சந்திரன் மனைவியை விட்டு
பிரிந்த கதை அவைகளிலொன்று

எனக்கென்னவோ
அதில் பாட்டியிருப்பதாகவே தோன்றும்

எனக்கு இன்னம்
சரியாய் ஞாபகமிருக்கிறது
அன்றைக்கு அந்தக் கதையை பாட்டி
அப்படி முடித்திருக்க வேண்டியதில்லை

எனக்கும் உறக்கம் வாரா இரவைத் தந்த
அக்கதையின் அடுத்த நாள் காலை
பாட்டி இறந்தது கூட எனக்கு
அதிர்ச்சியாயில்லை
அக்கதையின் முடிவைத் தவிர ..

எந்தக் கதை?
உங்களுக்கு பாட்டியிருந்தால்
கேளுங்கள் அவர்களின்
முற்றுப் பெறாத சோகங்கள்
கதையாகலாம் அவற்றின்
முடிவுகளில் உங்களுக்கு
உடன்பாடில்லாமல் போகலாம்
என்னைப் போலவே ...

இளசு
07-08-2007, 10:05 PM
பாட்டி கதைகள்...

உளவியல் உண்மைகளின் உருமாற்றங்கள்..
நிறைவேறா ஏக்கப்பொதி சுமக்கும் புரவிகள்..

அவர்கள் அறிந்த உலகத்தின் ஒற்றைச் சாளரங்கள்..

பல ஆழ்மனப் பிரளயங்களின் சன்ன வெளியீடுகள்..

சிறுவனால் சில பரிமாணங்கள் மட்டுமே அறியப்படும் சிக்கல் ஓவியங்கள்..

ரிஷிசேது மீள்பார்வையில் மேலும் சில கீற்றுகள் புலப்படுகின்றன..

ஆனாலும் அவற்றை முழுமையாய் அறிந்தவர் யார்?

பாராட்டுகள் ரிஷிசேது அவர்களே!

சிவா.ஜி
08-08-2007, 04:32 AM
இப்படி கதை கேட்டு வளர்ந்தவர்கள் மனம் நெகிழ்ந்து ரசிக்கக்கூடிய கவிதை.
சிறுவது நினைவுகள் மனதின் நினைவடுக்குகளிலிருந்து முட்டிக்கொண்டு எட்டிப்பார்க்கிறது.மீண்டும் அந்த நாளுக்காய் இதயம் ஏங்குகிறது.
பாட்டி சொன்ன கதைகள் தேர்ந்த நாவலாசிரியர்களும் கையாள முடியாத கற்பனை,குழந்தைகளை வசீகரிக்கும் வித்தையுடன் சொல்லப்பட்ட கதைகள்.
நினைவுகளை உசுப்பிய கவிவரிகளுக்கு வாழ்த்துக்கள் ரிஷிசேது.

தீபா
08-08-2007, 02:03 PM
முற்று பெறா கதைக்கு
மொத்தம்
மூன்று பதில் தானா?

முடிவுகள் கேளாமல்
முடிந்துபோன பல
கேட்டதுண்டு
உடன்பாடின்றியே..

ரிஷிசேது
09-08-2007, 06:04 PM
நன்றி அனைவருக்கும்

ஷீ-நிசி
10-08-2007, 04:57 AM
மிக அருமையான ஒரு கரு....
ஆனால் கதைப்பாணியில் அமைந்தது இக்கருவிற்கு ஏமாற்றமே!

கவிதைப்படுத்துங்கள் தோழரே!

வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

kalaianpan
11-08-2007, 08:25 AM
பாட்டி கதைகள்...

உளவியல் உண்மைகளின் உருமாற்றங்கள்..
நிறைவேறா ஏக்கப்பொதி சுமக்கும் புரவிகள்..

அவர்கள் அறிந்த உலகத்தின் ஒற்றைச் சாளரங்கள்..

பல ஆழ்மனப் பிரளயங்களின் சன்ன வெளியீடுகள்..

சிறுவனால் சில பரிமாணங்கள் மட்டுமே அறியப்படும் சிக்கல் ஓவியங்கள்..



இதை விட விளக்கம் யரால் தரமுடியும்......

kalaianpan
11-08-2007, 08:26 AM
பாட்டி கதைகள்...

உளவியல் உண்மைகளின் உருமாற்றங்கள்..
நிறைவேறா ஏக்கப்பொதி சுமக்கும் புரவிகள்..

அவர்கள் அறிந்த உலகத்தின் ஒற்றைச் சாளரங்கள்..

பல ஆழ்மனப் பிரளயங்களின் சன்ன வெளியீடுகள்..

சிறுவனால் சில பரிமாணங்கள் மட்டுமே அறியப்படும் சிக்கல் ஓவியங்கள்..



இதை விட விளக்கம் யரால் தரமுடியும்......

பாராட்டுக்கள்....