PDA

View Full Version : இலக்கியம் பற்றிய தேடல்... விட்டேத்தியான பார்வைகள்...rambal
31-05-2003, 04:56 PM
விட்டேத்தியான பார்வைகள்... ஆரம்பம்..

ஒரு முன் குறிப்பு:

இந்தத் தொடர் முற்றிலும் வித்யாசமான முயற்சி.
இது என்னுடைய இலக்கியம் பற்றிய விட்டேத்தியான தேடுதல் நிறைந்த பயணம்..
சங்ககால இலக்கியம் தவிர்த்து எழுத்து மட்டுமல்லாது பிற கலைகள் பற்றியும்...
இலக்கியம் சார்ந்ததாக... இதன் நீள அகலங்கள்.. பரிணாம வளர்ச்சி.. வரலாறு... இப்படியாக..
சகிக்கமுடியாத.. அறுவெறுப்பான.. அதிர்ச்சி அடைய வைக்கக்கூடிய.. ஜீரணிக்கவே முடியாத.. ஆனால், உண்மையான..
இது போன்ற எல்லவிதக் கலவைகளும் இந்த தொடரில் இடம் பெறும் என்பதை
தெரிவித்துக் கொள்கிறேன்..
அப்புறம் ராம்பால் ஏன் இப்படி எழுதுகிறான்?
நேற்றுவரைக்கும் நல்லாத்தானே இருந்தான்.. எந்த காத்துகருப்பு பட்டுச்சோ..
இவனுக்கு என்னவோ ஆகிவிட்டது.. என்றெல்லாம் சொல்லக்கூடாது..

முன்னுரை:

இலக்கியத்தரம் வாய்ந்தது.. இலக்கியம்.. இசங்கள்.. இலக்கியவாதி.. கலை.. கலைப்படைப்பு..
இப்படி கொட்டிக்கிடக்கும் இந்த சொற்களுக்கு அர்த்தம் என்ன?
இலக்கியம் என்றால் என்ன?
அது எத்தகையது?
எதை இலக்கியம் என்று பகுப்பது?
எது இலக்கியம் இல்லை?
இப்படி ஒரு புரிந்தும் புரியாத புதிர் போன்று தோற்றமளிக்கும்
விசித்திரம்தான் இலக்கியமா?
இப்படி பல கேள்விகள் இலக்கியம் பற்றி..
இலக்கியம் சரியான முறையில் புரிதல் படவேண்டும்.
இலக்கியம் என்பது எல்லோருக்கும் சரியான முறையில்
போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில்..

எழுத்து எப்படி இருக்க வேண்டும்?
எப்படி உருவகப்படுத்த வேண்டும்?
எப்படி உவமைகள் இருக்க வேண்டும்?
கவிதை என்பது என்ன?
என்று புரியாமல் பலவித சர்ச்சைகள் அவ்வப்பொழுது
நம் மன்றத்தில் நிகழ்வதால் ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய வகையில்..
இலக்கியம் பற்றி எனக்குத் தெரிந்த வரையில்..

இது வெறும் கவிதை மற்றும் எழுத்து சார்ந்தது மட்டுமல்லாது அத்தனை வகை கலைகளும்
இடம்பெறும். அத்தனை கலைகளுக்கும் பொதுவான சாராம்சம் இருக்கிறது.
அந்த சாராம்சங்களைப் பற்றி..
அந்தக் கலைகளைப் படைத்த படைப்பாளிகள் பற்றி.. கலைஞர்களைப் பற்றி..
கொஞ்சம் விலாவரியாக விளக்கவே இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன்..

இதில் எல்லாவித இலக்கியங்களும் இடம்பெறும்..
லத்தீன் அமெரிக்காவின் மேஜிக்ரியலிசம் முதல் தலித் இலக்கியம், நாட்டார் இலக்கியம்..
இப்படியாக போர்னோ வரை..
(போர்னோ கூட ஒருவகை இலக்கியம் என்பதால் அதுவும் இடம் பெறும்..)

எல்லாவித இலக்கியவாதிகளும் இடம் பெறுவர்..
பிரான்சின் கேபரே கிளப் பாடகியில் இருந்து நம்மூர் அழகிய பெரியவன் வரை இடம் பெறுவர்..

ஆரம்பம்:

இலக்கியம் என்பது என்ன?

இலக்கியங்கள் என்பது ஒரு இலக்கோடு அந்த அந்த கால கட்டத்திற்கு ஏற்ப அங்கு நிலவிய சமூக சூழலை.. அங்கு வாழும் மக்களின்
வாழ்க்கை முறையை.. காதலை, வீரத்தை, போர்கள் பற்றி.. அவலங்களை..
இப்படியாக ஏற்படும் பாதிப்புகளை பதிய ஒரு ஊடகம் தேவை..
அந்த ஊடகங்கள் தான் ஓவியம், சிற்பம், கவிதை, கட்டிடம்.. இப்படி ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு..
இவைகளுக்குத்தான் இலக்கியம் என்று பெயர் என்று எனது சிற்றறிவு கூறுகிறது.
உண்மையாகச் சொல்லப்போனால், சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு அதை வெளிப்படுத்துதல் என்பதே
இலக்கியம் எனும் சொல்லுக்கு கோட்பாடாக இருக்கலாம்.

இலக்கியங்கள் என்று கூறப்படுகிறதே? அப்படியென்றால் என்ன?

இலக்கியங்கள் என்பது மொழிவாரியாக, பிராந்தியங்கள் வாரியாக, காலகட்டங்கள் வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
உலக காலத்தை யுகங்களாக பிரித்திருப்பது போல் இதை இசங்களாக பிரித்துள்ளனர்.
அதற்காக சங்ககாலம்.. தொல்கப்பியம் என்றெல்லாம் விலாவாரியாக விவரித்து சொல்லப்போவதில்லை..
நான் எடுத்துக் கையாளப்போகும் கால கட்டம் என்பது கிபி 1400ல் இருந்து இன்றைய தேதிவரை..
உலக இலக்கியங்களின் வரலாறு, பரிணாமவளர்ச்சி, அதில் இருந்து சில மேற்கோள்கள்.. அவ்வளவே..

இத்துடன் இந்த அறிமுகத்தை முடிக்கிறேன்..
Reniassance = Rebirth என்று அழைக்கப்படும் கால கட்டத்தில் இருந்து தொடங்குகிறேன்..

தொடரும்....

பாரதி
31-05-2003, 10:02 PM
இன்னும் ஒரு வித்தியாசமான முயற்சி. ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

Dinesh
01-06-2003, 06:44 AM
இலக்கியம் என்றாலே ஏதொ நமக்கு சம்பந்தம் இல்லாத
விஷயம் என்ற கருத்தை மாற்றி, அனைவருக்கும் புரியும் வண்ணமும்
இலக்கியத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணமும் துவங்கியுள்ள
உங்களின் இந்த தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்..

தினேஷ்.

gankrish
02-06-2003, 09:20 AM
உங்கள் முயற்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்..

`இலக்கணம் மாறுதோ.. இலக்கியம் ஆனாதோ..
இதுவரை படைத்தது அது என்ன வேதம்
இது என் புது பாடம்....'

தஞ்சை தமிழன்
02-06-2003, 09:35 AM
இலக்கியம்,
அது ஜனரஞ்சகமாக மாற ராம்பாலின் முயற்சி.

வாழ்த்துக்கள்.

Nanban
02-06-2003, 09:56 AM
நன்றாக எழுத என் வாழ்த்துகள்.... இதற்கு நிறைய்ப் படிக்க வேண்டும். நிறைய உழைக்க வேண்டும். துணைக்கு நிற்பதற்கு நாங்களும் உண்டு....

வாழ்த்துகள்......

rambal
02-06-2003, 03:53 PM
ஆவலோடு எதிர்பார்க்கும் உள்ளங்களுக்கு நன்றி.
கொஞ்சம் பூடகமாய் மிரட்டுவது போல் தேவையான சமயங்களில் கை கொடுக்கிறேன் என்று கூறி இருக்கும் நண்பனுக்கு நன்றிகள்.

rambal
02-06-2003, 03:54 PM
Renaissance (மறு உயிர்ப்பு) (1420/1450-1600)

Renaissance என்று அழைக்கப்படும் கால கட்டத்தில் இருந்து ஏன் ஆரம்பிக்கவேண்டும்?
என்று ஒரு கேள்வி உங்களில் பலருக்கு எழலாம்.
இதற்கு முந்தைய காலகட்டத்தில் கலை என்பது அவ்வளவு தூரத்திற்கு
அதாவது இந்த (மத்திய) கால கட்டத்தோடு ஒப்பிடுகையில் அவ்வளவாக விஸ்வரூபம் எடுக்கவில்லை.
மத்திய காலத்தின் இறுதியில் இந்த Renaissance அதாவது மறு உயிர்ப்பு புதிய
வெளிச்சங்களை கொண்டு வந்து சேர்த்தது.

கலை உலகின் பொன்னான கால கட்டம் இங்குதான் ஆரம்பமானது.
1420 களில் இத்தாலியில் ஆரம்பமான இந்த மறு உயிர்ப்பு அடுத்த 80 ஆண்டுகளுக்குள்
ஐரோப்பா முழுமைக்கும் விரவி தனக்கென ஒரு இடம் பிடித்தது.
மத்திய காலம் முழுமையும் விரவிக்கிடந்த இருண்மையை போக்குவதற்குரிய
ஒளி மற்றும் புதிய சிந்தனைகள் இந்த கால கட்டத்தில்தான் விளைந்தது.

இந்த கால கட்டத்து சிந்தனைகள் எல்லாம் செவ்வியல் காலத்தின் (Classic period) மூலக்கருவைத் தழுவி
புதுப்பிக்கப்பட்டன. இதனால் இந்தக் கால கட்டத்து மக்களின் தேடுதல்கள் அறிவியல் சார்ந்ததாகவும்,
இயற்கை, தத்துவம், அரசியல் மற்றும் கலை போன்றவைகளை அறிவியல் பிண்ணனியில் ஆராய்ந்தும்
புதிய பரிணாமம் அடைந்தனர்.

இந்த காலகட்டத்தில் கலை கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் ஆகியவைகளில் சிறந்ததாக விளங்கியது.

இந்த காலகட்டத்தின் முக்கியமான கொள்கைகள் என்பது..

1. ஒளி மிகுந்த அழகான பூமியும் வாழ்க்கையின் அற்புதங்களும்.
2. கண் முன் தெரியும் உண்மையின் அற்புதங்கள்.
3. செவ்வியல் காலத்தின் மூலக்கரு சார்ந்து புதிய மூலம்..
4. அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி பார்வை
5. சுய தேடல்களும் தனி மனித வளர்ச்சியும்

மறு உயிர்ப்பு ஓவியர்கள்தான் முதன் முதலில் Geometric structures மற்றும் perspective ஐ பயன்படுத்தி வரைதல் மற்றும் உலகத்தை வரைந்து 3Dக்கு அடித்தளம் விதைத்தனர்.
அதாவது உலகத்தில் உள்ள மனிதனை மனிதனாக வரைந்த அல்லது சிற்பமாக வடித்த
கால கட்டம் இதுதான்

உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்.
இந்த காலகட்டத்தில்தான்
லியோனார்டா டாவின்சியின் உலக அற்புத படம் மோனலிசா வரையப்பட்டது
மைக்கேல் ஆஞ்சலோவாவால் டேவிட் எனும் சிலை வடிவமைக்கப்பட்டது.

இந்த கால கட்டம் ஒரு சிறு ஆரம்பம்தான். இதன் பிறகுதான் இசங்கள் ஆரம்பமாகின்றன.
அந்த இசங்களைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் இந்த மறு உயிர்ப்பு பற்றிய அடிப்படை கொஞ்சம் வேண்டும் என்பதற்காகத்தான் இதை எழுதினேன்.
அடுத்து இசங்களைப் பற்றிய ஒரு பார்வை..

தொடரும்..

இளசு
02-06-2003, 09:17 PM
பெரிய அரிய முயற்சி ராம்.... வாழ்த்தும் பாராட்டும் ஊக்கமும்...

rambal
03-06-2003, 08:49 AM
இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த அண்ணனுக்கு நன்றி..

rambal
03-06-2003, 04:56 PM
இம்ப்ரசனிசம் (1870-1880)

1600க்குப் பின் ஒரு தொய்வு.
வழக்கமான பாணியிலேயே எல்லாம் இருக்கவேண்டும். செவ்வியல் (classic) வடிவங்களைப் பின்பற்றியதுதான்
சிறந்தது என்று மக்கள் கூட்டம் அதன் பின்னால் சுற்றி இருந்தது.
இந்த சமயத்தில்தான் 19 நூற்றாண்டின் இறுதியில் ஒரு புதிய சிந்தனை. மாறுபட்ட கருத்து.
இயற்கை காட்சிகளை தத்ரூபமாக வரைந்தால் என்ன?
வெளிச்சத்தையும், நிழலையும், வண்ணங்களையும், கடற்கரையையும், மனித முகங்களை தத்ரூபமாக(போர்ட்ராய்ட்)
வரைவது பற்றிய சிந்தனைகள் எழுந்தன.

சலூன் (salons) எனும் இயக்கம் மூலம் செவ்விய ஓவியங்களை கண்காட்சிக்கு வைக்கும் முறை அங்கு இருந்தது.
சலூனில் இடம் பெற்றால்தான் அவர் அங்கீகரிக்கப்பட்ட கலைஞன் என்று பத்தாம்பசலித்தனத்தை
உடைத்து இம்ப்ரசனிசம் தோன்றியது.
முதன் முதலாக 1874ல் மோனட் எனும் ஓவியர் இம்ப்ரச சோலல் லெவன் என்று தனது ஓவியங்களை
கண்காட்சியில் தனித்து வைத்தார்.
ஆனால், அவர் இம்ப்ரசனிசம் என்றால் என்னவென்று தனியாக விளக்கவில்லை.
இருந்தபோதும் இளைய தலைமுறை ஓவியர்கள் அந்த வகை ஓவியங்களை கெட்டியாகப்பிடித்துக் கொண்டு
வழிவழியாய் வந்த செவ்வியலை உடைத்து இம்ப்ரசனிசத்திற்கு மாறினர்.

இதில் குறிப்பிடத்தக்கவர்கள் என்றால்,
மோனட், மேனட், ரினோய்ர், டேகாஸ், செசன்னா ஆகியோர்.
இயற்கை மீது தீராத ஈடுபாட்டினால் ஸ்டீடியோவை விட்டு வெளியெ வந்து கண்முன் இருக்கும்
இயற்கை அற்புதங்களை அழகாய் தீட்டினர்.

இருந்த போதும் இந்த இம்ப்ரசனிசம் முடிவிற்கு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.
அது ஸ்டில் கேமிரா.
இதன் மூலம் ஒரு கணஹ்த்தை ஒரு காட்சியை ஒரு சொடுக்கு போடும் நேரத்திற்குள் சிறைப்படுத்தலாம்
எனும் போது மணிக்கணக்கில் அமர்ந்து வரைவது என்பது வேலை வெட்டி இல்லாத செயலாக தீர்மானிக்கப்பட்டது.


ஆனால், கலை எனும் தாகமெடுத்தவனுக்கு எத்தனை இடர் வந்தாலும் கவலை இல்லை எனும் விதமாக
இம்ப்ரசனிசத்திற்கு அடுத்து போஸ்ட் இம்ப்ரசனிசம் எனும் அடுத்த இசம் ஆரம்பமானது.

தொடரும்..

காரைக்குடியான்
04-06-2003, 04:25 AM
நன்றி ராம். உங்கள் வீச்சு பிரமிக்க வைக்கிறது. வான் கோவின் ஓவியங்கள் இம்ப்ரசனிசம் வகையைச் சேர்ந்ததா - சற்று விளக்கவும்

rambal
04-06-2003, 05:36 AM
வேன் கோவின் ஓவியங்கள் போஸ்ட் இம்ப்ரசனிசத்தைச் சார்ந்தவை..
அதைப்பற்றித்தான் அடுத்து தொடரப் போகிறேன் நண்பரே..
உங்கள் ஆர்வம் வியக்கவைக்கிறது.. பாராட்டுக்கள்...

gankrish
04-06-2003, 06:18 AM
அருமையான தொகுப்பு ராம்...

rambal
04-06-2003, 11:41 AM
வான் கோவின் ஓவியங்கள் ஆரம்பத்தில் போஸ்ட் இம்ப்ரசனிசத்தில் இருந்தாலும்
பின் அவர் பல விஸ்வரூபங்கள் எடுத்து இறுதியில் எக்ஸ்பிரஸ்சனிசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.
இவரைப்பற்றி விரைவில் முழு விபரங்களுடன் வருகிறேன்..
அதற்கு முன் முழுமை பெறாத தகவலை கொடுத்தமைக்காக வருத்தம் தெரிவிக்கிறேன்..

rambal
04-06-2003, 05:03 PM
போஸ்ட்- இம்ப்ரசனிசம் (1880-1895)

இம்ப்ரசனிசத்தைத் தொடர்ந்து வந்தது போஸ்ட்- இம்ப்ரசனிசம்.
இவை இரண்டுமே பிரான்சின் ஏகபோக சொத்து, சிந்தனை என்று கொள்ளலாம்.
1880க்குப் பிறகு ஆறு ஆண்டுகளில் இந்த புரட்சிகரமான கலை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மிகப்பெரிய அளவில் ஓவியர்கள் குழுவாக இணைந்து புதிய வழிமுறைகளில்
பரிசோதனைகள் செய்து பார்த்தார்கள். இவர்கள் அனைவரும் பல வழிகளில்
பல பரிமாணங்களில் தேடுதலை தொடர்ந்தார்கள்.
இருந்த போதிலும் இவர்களின் அடிப்படை சாராம்சம் என்பது இயற்கையை
விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்வது என்பதாகத்தான் இருந்தது.

இந்த அறிவியல் சார்ந்த தேடுதலில் பாய்ண்டலிசம்(pointalism) அல்லது டிவிசனிசம் (divisionism) எனும்
ஒரு வகை உண்டு. இதை பின்பற்றி இவர்கள் தங்களது தேடுதலை தொடர்ந்தார்கள்.
ஓவியர்கள் கண்ணாடித்தன்மையுடைய வண்ணங்களைப்பற்றிய தங்களது அறிவை வளர்க்கத்தொடங்கியது
இந்தக் காலகட்டத்தில்தான்.

எந்த வண்ணத்தையும் முழுதும் ஓவியத்தில் கலக்காமல் வெறும் புள்ளி புள்ளியாக நெருக்கி வைப்பதன் மூலம் உருவம் கிடைக்க வைத்தார்கள். இதுதான் பாய்ண்டலிசம்.
இந்த வகை ஓவியங்கள் வரைந்துமுடிக்க இவர்களுக்கு வருடக்கணக்கில் ஆனது.

பால் செசன்னா (Paul cezanna) எனும் ஓவியரின் ஒவியங்கள் தனிச் சிறப்புடையவை.
இவருடைய முக்கிய வரை பொருளாக இருந்தவை மலைகள். இந்த மலைகளை தனது ஸ்டூடியோவில் இருக்கும் ஜன்னல் வழிபார்த்து வரைவது இவரது தனிப் பெருஞ்சிறப்பு.
இது போன்று வரைய ஆரம்பித்துதான் எதேச்சையாக இவர் கண்டுபிடித்தது
அடிப்படை வண்ணங்கள் (primary colors) மற்றும் கலப்பு வண்ணங்கள்(complementaery colors) மற்றும் வண்ணங்களுக்கான வரைமுறை (color theory) ஆகியவை அடங்கும். வண்ணங்களின் தியரிக்கு இவர் தந்தை என்றால் மிகையாகாது.

இந்த போஸ்ட் இம்ப்ரசனிச ஓவியர்களில் மிகவும் முக்கியமானவர் என்று கருதப்படுபவர்
வான் கோ.
இவர் டச்சில் இருந்த காலகட்டத்தில் அடர்த்தியான வண்ணங்களை உபயோகித்தார். வரது சகோதரனை காண்பதற்காக பாரீஸ் வந்த பிறகுதான் இவருக்குள் பல சிந்தனைகள்.
இங்கு நிலவிய போஸ்ட் இம்ப்ரசனிச உத்திகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து பின் தெற்கு பிரான்சிற்கு குடியேறினார். இவர் விவிட் வண்ணங்களைணுபயோகிக்க ஆரம்பித்து பின் அதில் மூழ்கி
ஒரு தாண்டவம் ஆடினார் என்றால் மிகையாகாது. இவர் அடர்த்தியான வண்ணங்களையும் இங்கு உபயோகப்படுத்திய மிதமான வண்ணங்களையும் கலந்து தனக்கென்று தனி முத்திரை பதித்தார்.

இவரது இறுதி நாட்களில் இவர் உபயோகப்படுத்திய இந்த முறையினால்தான் போஸ்ட் இம்ப்ரசனிசத்திற்குப் பின் வந்த எக்ஸ்ப்ரசனிசத்திற்கு அடிகோலியது. அதனால் தான் எக்ஸ்பிரசனிசத்தின் தந்தை என்று
வான் கோ அழைக்கப்படுகிறார்.

இத்தோடு இந்த பகுதி நிறைவு பெறுகிறது.

அடுத்த படியாக எக்ஸ்ப்ரஸ்சனிசம் பற்றி தொடர்வதற்குப் பதிலாக 20ம் நூற்றாண்டில் ஒரு மாறுதலை
ஏற்படுத்திய மாடர்ன் ஆர்ட்டைப் பற்றியும் அதில் புழங்கிய இசங்களும் பற்றி எழுதப் போகிறேன்.
அதில் எக்ஸ்பிரசனிசம் இடம் பெறும்.

இது வரை வந்தது முன்னுரையின் முன்னுரை.
அடுத்த பகுதியான 20ம் நூற்றாண்டு மாடர்ன் ஆர்ட்டும் அதில் இழைந்தோடிய இசங்களும் முடிந்த பின்
எழுத்து, இலக்கியம் பற்றி எழுதுகிறேன். ஏனென்றால், ஓவியமும் கலையும் தான் அடிப்படை.
அதன் வழித்தோன்றலாக வந்த எழுத்தைப் பற்றி தெரிவதற்கு முன் இதைப் பற்றி தெரிந்து கொள்தல் அவசியம். இப்போதுதான் முன்னுரை ஆரம்பமாகிறது.

தொடரும்..

lavanya
08-06-2003, 02:07 PM
மிக சீரிய சிறப்பான காலத்தின் அவசியமான கற்று தரும்
பதிவு உங்களுடையது..உங்கள் படைப்பு பெரும் வெற்றி
பெற பாராட்டுக்கள்+வாழ்த்துக்கள் ராம்பால்ஜி

இளசு
09-06-2003, 12:30 AM
மிகப்பெரிய அலசல்..நுண்ணிய பார்வை...
அப்புறம் எப்படி இது விட்டேத்தி என தலைப்பில்????

பாராட்டுகள் ராம்.. தொடரவும்.அண்ணனின் ஆசிகள்...

cidruvan
09-06-2003, 06:33 PM
மிரட்டுகிறார், ராம்...............

நிறய படிச்சி, அப்புறமா எல்லாத்தையும் டைப் செஞ்சி, ப்டைக்கனுனா - நிறய பாராட்டுகள் - எவ்வளவு என்று சொல்லணும்னா - a truck load of thanks...........