PDA

View Full Version : சாய்வு நாற்காலி



சிவா.ஜி
04-08-2007, 07:51 AM
சொந்தத்தில் ஓர்
முதிர்ந்த உறவின்
சிதைந்த ஆசைகளை
அதிர்ந்த மனதுடன்
அருகிருந்து கண்டதில்
உதிர்கிறது
உறவுகளில் நம்பிக்கை!
ஓய்ந்த வயதில்
சாய்ந்தமர ஒரு
சாய்ந்த மர நாற்காலி.
அது மட்டுமே அவ்வுறவின் ஆசை!
அதுவும் மறுக்கப்பட்டது....
மற்றவராலல்ல மகனால்!

நாளை என்னிலை, எந் நிலை?
பிள்ளையிடம் வருமா
இல்லையென்ற சொல்?
வராது என்பது உறுதி,இருப்பினும்
வரவேண்டாமெனக் கருதி
சேமிப்பில் வாங்கினேன்
சாய்வு நாற்காலி−எனக்கான
ஓய்வு நாற்காலி!

நின்று பார்த்த பிள்ளை
ஒன்றும் சொல்லாதது
வலித்தது!
திறந்திருந்த கதவு வழி
அவன் குரல்
ஒலித்தது,
'தன் மானம் மிக்கவன்
என் தகப்பன்
அவரால் பிறப்பு
எனக்குச் சிறப்பு'
மகன் மொழி கேட்டு
மனதில் களிப்பு
ஆனந்த ஆடலில்
நாற்காலியின் ஒலிப்பு!

இனியவள்
04-08-2007, 08:05 AM
அருமை சிவா....

ஓய்விலும் மற்றவர்களைச்
சாந்திராது பெற்ற மகனே
ஆனாலும் தன்மானத்துடன்
தன்னம்பிக்கையுடன்
வாழ வேண்டும் கடைசி மூச்சு
உள்ளவரை சிறப்புக்கள் சிவா
வாழ்த்துக்கள்

ஓவியன்
04-08-2007, 08:07 AM
ஒவ்வொரு தகப்பனாருக்கும் தன் பிள்ளை தனக்கு இதனைச் செய்ய மாட்டானா என்ற அங்கலாய்ப்புடன் இருப்பார்கள், ஆனால் அதனை நேரடியாக கேட்கவும் மாட்டார்கள்............!

உள்ளத்தில் எதிர்பார்ப்புடன் என் மகன் அந்த எதிர்பார்ப்பைத் தீர்க்க மாட்டானா என்று ஏங்கியிருப்பார்கள், மகன் அதனை உணர்ந்து தீர்த்து வைத்து விட்டால்..., அப்பப்பா அந்த மகனுக்கு அதனை விட ஒரு சிறந்த ஆசிர்வாதம் வேறு எங்குமே கிடைக்காது.

அவர்களது சின்னச் சின்ன ஆசைகளைப் பூர்த்தி செய்து அவர் தம் ஆசிகளை வாங்குவதே மகனாகப் பிறந்த ஒவ்வொருவரதும் கடமை − அவர் தந்தை எவ்வளவு தன்மானஸ்தனாக இருந்தாலும் கூட..........!

அழகான வரிகள் சிவா.ஜி!
நிறைய இடங்களில் இரசித்தேன் முக்கியமாக

சாய்ந்தமர ஒரு
சாய்ந்த மர நாற்காலி.

சிலேடை விளையாடியிருக்கிறது − பாராட்டுக்கள்!. :nature-smiley-003:

சிவா.ஜி
04-08-2007, 08:19 AM
நன்றி இனியவள்.பின்னூட்டத்தையும் அழகான கருத்தால் அழகூட்டியவிதம் அருமை.

சிவா.ஜி
04-08-2007, 08:23 AM
உங்கள் ஒவ்வொரு வரிகளும் சிந்த்திக்கத்தூண்டுபவையாக இருக்கிறது ஓவியன்.கவிதைக்கு கிடைக்கும் இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் அந்த கவிதையை மேலும் மெருகூட்டுகின்றன. மனம் நிறைந்த நன்றிகள் ஓவியன்.

அமரன்
04-08-2007, 08:31 AM
சிவா எல்லா வரிகளும் சொற்களும் அருமை. கரு கலக்கல்.

'தன் மானம் மிக்கவன்
என் தகப்பன்
அவரால் பிறப்பு
எனக்குச் சிறப்பு'

இந்த வரிகள் சிந்தனையை தூண்டுவன. ஆழத்திலிருந்து வந்தால் சந்தோசம். அதுவே உதட்டளவு எனும்போது வேறு பல அர்த்தங்களைக் கொடுக்கும். ஓவியன் அழகாக அலசிவிட்டார். எனக்கு வாய்ப்புதரவில்லை. அட்சரக்கவிதை சிவா. பாராட்டுக்கள்.

சிவா.ஜி
04-08-2007, 08:48 AM
ஆமாம் அமரன்.உங்கள் பார்வையும் சரிதான். உள்ளத்தின் உள்ளிருந்து வந்தால் அந்த வார்த்தைகளுக்கு மேன்மையான அர்த்தமிருக்கும் அதுவே....உதட்டிலிருந்து என்றால்..
மிக்க நன்றி அமரன்.