PDA

View Full Version : ஊர்க் கோவில்சிவா.ஜி
31-07-2007, 12:38 PM
நீண்ட தூரம் பயணித்து
லட்சக்கூட்டத்தில்
நானும் ஓர் அங்கமாகி,
நகரா வரிசையில் நகர்ந்து,
நுகரா வாசமெல்லாம் நுகர்ந்து,
நுழைவாசல் அடைந்து,
நாமக் கடவுளின்
நாமக் கோஷத்தில்
நானும் கலந்து,
உருவம் தரிசிக்க
அருகாமை அடைந்தால்..
நகரு,நகரு என்ற
நாகரீகமில்லாத நகர்த்தலில்,
கிட்டப்போயும்
கிட்டப்போன தரிசனம்
கிட்டாமல் போய்......
இதற்கா இத்தனை பாடு..?
என் ஊரிலும் ஆலயம் உண்டு,
எங்கும் நிறைந்த ஆண்டவன்
இங்கும் உண்டு−இதில்
நிறைவும் உண்டு
நிம்மதியும் உண்டு,
இனி தொழுவேன் 'அவனை'
இங்கு கண்டு!
(அண்மையில் திருப்பதி போய் வந்த பிறகு தோன்றிய எண்ணம்)

இதயம்
31-07-2007, 12:47 PM
உண்மை தான். எங்கும் நிறைந்த இறைவனை ஒரு இடத்தில் பூட்டி வைக்கும் மனிதனின் செயல் சுயநலம் மட்டுமே..! கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி காசாக்குபவர்களுக்கு சவுக்கடி கொடுக்கிறது உங்கள் கவிதை. இறைவனை பற்றிய ஞானம் தெளிவாகிவிட்டால் உலகமே பூஞ்சோலையாகிவிடும். எல்லாவற்றிலும் பட்ட பிறகு தான் ஞானம் வருகிறது நமக்கு..! கடவுள் பற்றிய ஞானமும் அப்படியே..!!

சிறந்த கவிதைக்கு பாராட்டுக்கள்..!!

அக்னி
31-07-2007, 12:53 PM
எம்மதத்தவராய் இருந்தாலும், அந்தந்த மதத்திற்கென பல்வேறு புண்ணிய ஸ்தலங்கள் இருக்கவே செய்கின்றன...
அங்கு சென்று வணங்குதல் என்பது இறைபக்தி உடைய ஒவ்வொருவரினதும் ஆவல், எதிர்பார்ப்பாகவே இருக்கும்...
அந்த தலங்களில் ஒரு வினாடி இருந்தாலும் மனம் முழுநிறைவு பெறும் உணர்வு...
ஆதலால், அனைவரும் புண்ணிய தலங்களை நாடிச்செல்லுவதும்,
இதனால் ஏற்படும் சனநெரிசலும்,
அதனால், ஏற்படும் விரைவான நகர்வுகளும்,
தவிர்க்கமுடியாதனவே...

சிவா.ஜி
31-07-2007, 01:02 PM
எம்மதத்தவராய் இருந்தாலும், அந்தந்த மதத்திற்கென பல்வேறு புண்ணிய ஸ்தலங்கள் இருக்கவே செய்கின்றன...
அங்கு சென்று வணங்குதல் என்பது இறைபக்தி உடைய ஒவ்வொருவரினதும் ஆவல், எதிர்பார்ப்பாகவே இருக்கும்...
அந்த தலங்களில் ஒரு வினாடி இருந்தாலும் மனம் முழுநிறைவு பெறும் உணர்வு...
ஆதலால், அனைவரும் புண்ணிய தலங்களை நாடிச்செல்லுவதும்,
இதனால் ஏற்படும் சனநெரிசலும்,
அதனால், ஏற்படும் விரைவான நகர்வுகளும்,
தவிர்க்கமுடியாதனவே...

மன்னித்துக்கொள்ளுங்கள் அக்னி. அப்படி நாடிச்சென்று வழிபடுபவர்களை நான் ஒருபோதும் சாடவில்லை. எனக்கென்னவோ பிரபலமான புண்ணியத்தலங்களில் மனம் லயிப்பதில்லை.சிறிய, அழகான, அமைதியான ஆலயங்களில் மனம் ஒன்றி வழிபடமுடிகிறது.நான் என் உணர்வைத்தான் சொன்னேன்.உங்கள் மனதை அது பாதித்திருந்தால் மன்னிக்கவும்.

lolluvathiyar
31-07-2007, 01:13 PM
சரியான கருத்து சிவா ஜி அவர்களே
இன்று மிகவும் பிரபலமடைந்த வழிபாட்டு தளங்களுக்கு போவதே உருத்தலாக இருகிறது. அங்கு போகும் நோக்கமே நிரைவேறாத போது என் போய் அவதி பட வேண்டும்.
ஆனால் விசேசம் இல்லாத நாள் பார்த்து போனால் ஓரளவுக்கு கூட்டம் குரைவாக இருக்கும்

சிவா.ஜி
31-07-2007, 01:15 PM
நன்றி வாத்தியார். ஆனால் திருப்பதியில் விஷேஷமில்லாத நாள் எது? இந்த முறை மருதமலைக்குப் போயிருந்தேன். பத்து பதினைந்து பேர்தான் இருந்தார்கள் நிம்மதியான தரிசனம் கிடைத்தது.

அமரன்
31-07-2007, 01:17 PM
சிவா.அன்பே சிவம். கமலகாசன் சொன்னது. அன்பே மதம். என் மனமே கோவில். நற்சிந்தனையே மந்திரம். இவ்வளவும் இருந்தால் நானே கடவுள். இது என்வரையில் உண்மை.

மனம் அங்கும் இங்குமாக அலைவதினைத் தடுக்க கோவில்களை அமைத்தார்கள் என நினைக்கிறேன். எங்கே படித்தாலும் படிக்கலாம். ஏன் பள்ளிக்கூடம் என்று ஒன்று தேவை. படிப்பதற்கான சூழல். அதுப்போலவே வழிபடத்தேவையான சூழலை அமைத்துக் கொடுத்தன ஆலயங்கள். கோவில்களில் வித்தியாசமில்லை. மனதில் உள்ள நமிக்கையில்தான் வித்தியாசம். அவனைத்தேடி நாம் போனால் நம்மைத்தேடி அவன் வருவான் என்பதுதான் கோவில்கள் கூறும் செய்தியோ தெரியாது. இது திருத்தலம் இங்கே போனால் நல்லது என்பது நம்பிக்கை. அது தப்புமல்ல..உங்கள் பார்வையில் நீங்கள் சொல்வதும் தப்பில்லை. அது சரி வழிப்படுத்த ஏற்படுத்திய பல் கோவிலை நாம் எப்படி பயன்படுத்துகிறோம்.

படுக்கையில் இருந்தவனை
பரீட்சை மிரட்ட.
வாரிச்சுருட்டி எழுந்தவன்
திரும்பவும் படுத்தான்..
ஊரெல்லாம் ஒலித்தது
தேவ ராகம்.

இருட்டில் இருந்த வீட்டில்
திருவிழா வெளிச்ச உதவியுடன்
தீப்பெட்டியை தேடி எடுத்து
தீபமேற்றுகிறாள் இல்லத்தரசி..

வீதிஉலா வருஞ்சாமிக்கு
மழலைக்கனவு சிதைத்து
வரவேற்புக் கொடுகிறனர்.
தெருவெல்லாம் கிடக்கிறது
வெடித்த பட்டாசுக்காகிதம்.

இத்தனையும் பார்த்து
சலித்த மனதை குளிரவைத்தது
அன்னதானத்தில் இருந்த கூட்டம்.

.

சிவா.ஜி
31-07-2007, 01:21 PM
அமரன் அசத்திட்டீங்க. சாமியும்,கோவிலும்,திருவிழாக்களும் எப்படியெல்லாம் பயன்படுகின்றன என்பதை வெகு அழகான கவிதையில் காட்டி கலக்கிவிட்டீர்கள். நன்றி அமரன்.

அக்னி
31-07-2007, 01:23 PM
இதில் மன்னிப்புக்கேட்கவோ அல்லது மன்னிக்கவோ ஏதுமில்லை சிவா.ஜி.
உணமையான விடயம்தான் என்றாலும்,
அது தவிர்க்கமுடியாமல் போய்விட்டது என்றுதான் கூறினேன்...
எனக்கும் கூட, அமைதியாக தனிமையில் இறைவனை வணங்குவதில்தான், நிறைவு மனதில் வருவதுண்டு.
இருந்தும், மனதின் ஆவல், தலங்களை நோக்கி இழுத்துச் சென்று விடுகின்றதே...

ஷீ-நிசி
01-08-2007, 04:33 AM
நகரா வரிசையில் நகர்ந்து,
நுகரா வாசமெல்லாம் நுகர்ந்து,


கிட்டப்போயும்
கிட்டப்போன தரிசனம்
கிட்டாமல் போய்......


'அட' போட வைத்தன சிவா... கவிதையில் சொல்லப்பட்ட கருவும் மிகவும் தேவையான ஒன்று... சாமியாக இருந்தாலும் செல்வாக்கு இருந்தால்தான் பக்தர்கள் அந்த சாமிக்கே தங்களின் கடைக்கண் காட்டுகிறார்கள்... மரத்தடி சாமிக்கு எந்த பக்தனும் கோடி ரூபாயை உண்டியலில் போடுவதில்லை...

வாழ்த்துக்கள் சிவா...

சிவா.ஜி
01-08-2007, 04:43 AM
நன்றி ஷீ−நிசி. நான் விரும்பி எழுதிய வரிகளை எடுத்துக்காட்டி நீங்கள் கொடுத்திருக்கும் பின்னூட்டம் அருமை ஷீ.

ஓவியன்
03-08-2007, 03:01 PM
சிவா உங்கள் கருத்தே என் கருத்தும், அக்னி சொல்வது பொதுவாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், அவ்வாறு தரிசிப்பது தரிசனமாக அன்றி சுற்றுலாவாக போய்விடுமே என்ற ஐயப்பாடு உண்டு எனக்கு............!

மற்றும் படி கவிவரிகள் அழகு, சந்தம் இழையோட அழகாகப் பின்னி இருந்தீர்கள் வரிகளைப் பாராட்டுக்கள் சிவா.ஜி!.

சிவா.ஜி
04-08-2007, 04:07 AM
நன்றி ஓவியன்.ஒத்த கருத்து அறியும்போது மகிழ்வாய் உணர்கிறேன். பாராட்டுக்களுக்கு நன்றி.