PDA

View Full Version : உறைந்த உறவுகள் - சிறுகதை - மோகன்leomohan
31-07-2007, 11:15 AM
வியாழன் இரவு. துபாய். ராசுவுக்கு 9 மணிக்கே தூக்கம் வந்தது. வழக்கமாக வியாழன் இரவு கூத்து தான். பிறகு வெள்ளி விடுமுறை என்பதால் பாதி நாட்கள் தூக்கம்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை விடுமுறை மற்றும் இலவச விமான பயணம் தாயகம் செல்வதற்கு. வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. முதல் விடுமுறைக்கு சென்றதோடு சரி. மூன்று வருடங்கள் ஆகியும் போகவில்லை. சென்ற முறை விடுமுறைக்கு தந்தையை விசிட் விசாவில் அழைத்து வந்திருந்தான் இரண்டு வாரங்களுக்கு.

இந்த முறை வந்தால் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவன் தந்தை நிச்சயமாக இருந்தார். உன் கல்யாணத்தை பாத்துட்டா நிம்மதியா சாவேன் என்பார் அவனுடயை 60 வயது தந்தை. அப்பா, நீ சாகப்போறின்னா எனக்கு கல்யாணமே வேண்டாம் என்பான் இருபதெட்டு வயது குழந்தை. அவனுக்கு தந்தை என்றால் உயிர். இன்று அவருடைய நினைவு அதிகம் வாட்டியது.

அழைப்பு மணி அடித்து. கதவை திறந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அவன் தந்தை உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தார்.

என்னப்பா திடீர்னு, தனியாவா வந்தே

ஆமான்டா உன்னை பாக்கனும்போல இருந்தது என்றார்

அவரை அப்படியே கட்டி தழுவினான். அவரும் அவனை உச்சி மோர்ந்தார்.

என்னப்பா என்னை கூப்பிட்டிருந்தா நான் ஏர்போர்டுக்கு வந்திருப்பேன்ல

உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமே தான்.

இப்ப எந்த ப்ளைட்டுபா நம்ம ஊர்லேந்து. ஆச்சர்யமா இருக்கே.

அதுவா மஸ்கட்லேர்ந்து வந்து வந்தது.

பரவாயில்லை பா ஒரு தடவை துபாய் வந்துட்டு போயிட்டு எல்லா விஷயமும் தெரிஞ்சிகிட்டியே என்றான் மகிழ்ச்சியுடன்.

அவர் தன் கால்களிலிருந்து கட் ஷூவை விடுவித்துக் கொண்டார். சென்ற முறை வந்த போது வாங்கி தந்தான். அப்பா, துபாய்க்கு வரும்போது செருப்பெல்லாம் போட்டுட்டு வராதே. மானமே போயிடும். ஷூ தான் என்றான். அதற்கு அவன் தந்தையோ டேய் நான் லேசுல்லாம் போட்டுகிட்டு இருக்க முடியாது என்று பதில் தர, கவலைபடாதேப்பா இப்ப கட் ஷூ இருக்கு, செருப்பு மாதிரி போட்டுக்கெல்லாம் ஆனா ஷூ தான்.

அதுபோலவே சென்ற முறை ஜூயான்ட் மார்கெட்டில் 1000 திராமுக்கு பொருள் வாங்கினால் இலவசம் என்று ஒரு கைப்பை கொடுத்தார்கள், அதை எடுத்து வந்திருந்தார். சோபாவில் வைத்துவிட்டு அமர்ந்தார்.

உள்ளே ஓடிச் சென்று தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்தான். படுக்கையறைக்கு சென்று வேட்டியை எடுத்து வந்து கொடுத்தான்.

நல்ல வேளையாக இன்று விடுமுறை என்பதால் வீட்டை நன்றாக சுத்தம் செய்து காலி மது பாட்டில்களை கறுப்பு பின் பாகில் போட்டு கீழே போட்டுவிட்டு வந்திருந்தான். அதுபோலவே ஆஷ்ட்ரேயையும் சுத்தம் செய்துவிட்டு வந்திருந்தான்.

என்னப்பா, இருந்தாலும் நீ இப்படி பண்ணியிருக்க கூடாது. ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாமே. எனக்கு சந்தோஷத்துல ஹார்டே நின்னுடும் போலிருக்குது என்றான் ராசு, தலைகால் புரியாத மகிழ்ச்சியுடன்.

கண்ணனுக்கு போன் போட்டு நீங்க வந்துட்டீங்க சேஃபான்னு சொல்லட்டுமா என்றான். கண்ணன் அவனுடைய அண்ணன். ஒரு வயது தான் வித்தியாசம். அதனால் வாடா போடா என்று பேசிக் கொள்வார்கள்.

வேண்டாம்பா விடு. ராத்திரி ஆயிடுத்து அங்கே. நாளைக்கு காலையிலே சொல்லலாம்.

அவன் தந்தை வேட்டியை மாற்றிக் கொண்டதும், அவன் படுக்கையை சரி செய்து கொடுத்தான்.

சாப்பிட்டியா

அது ப்ளைட்ல கொடுத்தாங்க. இப்ப பசிக்கலை.

அப்ப வந்து படு. களைப்பா இருக்கும்.

இருப்பா, கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம். உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அம்மா ரொம்ப ஆசைபடறா.

அப்பா, உனக்கு களைப்பா இருக்கும். 9.30 மணி ஆயிடுத்து. இந்தா தண்ணி குடிச்சிட்டு படு. நாளைக்கு எனக்கு லீவ் தான். நிறைய பேசலாம் என்று அவர் சொல்லச் சொல்ல கேட்காமல் விளக்கை அணைத்தான். அதற்கு முன் அவருக்கு இரவில் எழுந்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தால் இரண்டு டம்ளர்களில் தண்ணீர் வைத்து சிறிய தட்டுகளால் மூடினான்.

தன் வலது கையை அவர் மீது போட்டு அணைத்தபடி உறங்க துவங்கினான். சிறிய வயதிலிருந்து வந்த பழக்கம். அவரும் அவருடயை வலது கையால் அவன் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டார்.

அவனுக்கு சொர்க்த்தில் இருப்பது போன்ற ஒரு மகிழ்ச்சி. பாரேன் இந்த வயசிலேயும் தைரியமா கிளம்பி வந்துட்டாரே.

தனிமை விடுத்த பல நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான் ராசு.

திடீரென்று அவன் செல்பேசி அழைக்க விழித்தெழுந்தான். அண்ணா காலிங்க் என்று அந்த சின்ன திரையில் தோன்றியது. சரிதான் கண்ணன் போன் பண்ணி அப்பா நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டாரா என்று கேட்கத்தான் என்று நினைத்து, போனை எடுத்து சொல்லுடா கண்ணா என்றான்.

கண்ணனின் குரல் மறுபுறம் கரகரத்திருந்தது. அப்பா போயிட்டாருடா என்றான் அழும் குரலில். என்ன இவன் அப்பா வந்து சேர்ந்துட்டாரா என்று கேட்காமல் போயிட்டாரா என்கிறான் என்று நினைத்துக் கொண்டே, என்னடா உளர்றே, அப்பா தான் துபாய்க்கு வந்திருக்காரே என்றான்.

டேய் என்னடா உளர்றே. தண்ணி கிண்ணி போட்டுட்டியா. அப்பா நம்மளவிட்டுட்டு போயிட்டாருடா. எங்க முன்னாடி பிணமா கிடக்குறாருடா என்றான்.

அவனுக்கு பகீரென்றது. எத்தனை மணிக்கு என்றான் பதட்டத்துடன்.

நேத்து ராத்திரி 9.30 மணிக்கு என்றான் கண்ணன். நீ என்னமோ சொன்னியேடா என்றான் குழப்பமாக.

விடு நான் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் என்று போனை துண்டித்து எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். தன்னருகில் அவன் தந்தை படுத்திருந்த பகுதி கலைந்திருந்தது. அவன் நேற்றிரவு அவருக்கு தந்த வேட்டி மடித்து வைக்கப்பட்டிருந்தது.

இரண்டு தண்ணீர் டம்ளர்களில் ஒன்று காலியாக இருந்தது. ஓடிச் சென்று சோபாவை பார்த்தான். அதில் அவர் கொண்டுவந்திருந்த சிவப்பு நிற ஜீயான்ட் பை இருந்தது. வெளியில் அவருடைய கட் ஷூ.

உடம்பில் மின்னல் பாய்ந்து செல்ல அவன் உறைந்து நின்றான்.

அக்னி
31-07-2007, 11:23 AM
பாசத்தால் ஒன்றியவர்கள்...
உணர்வுகளினின்று என்றும் பிரிந்து போவதில்லை...
மனதில் அழுத்தம் தரும் சிறுகதை சிறப்பு...
பாராட்டுக்கள்...

வெண்தாமரை
31-07-2007, 11:27 AM
அருமையான கதை பாசத்;தை அழகாக வடித்துள்ளீகள்;.. வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
31-07-2007, 12:17 PM
அப்பா பாசம் அலாதியானது.அதிலும் அப்பாவுக்கும் மகனுக்கும் அவ்வளவு சீக்கிரம் அந்த பாசப்பாலம் உருவாகாது. ஆனால் உருவாகிவிட்டால்,அது உடைக்கமுடியாத இரும்புப்பாலமாய் உருமாறிவிடும். அப்படிப்பட்ட அழுத்தமான பாசம்தான் உயிர் பிரிந்த அந்த வினாடியே தன் பாசமிகு மகனைப்பார்க்க அந்த தந்தையின் ஆன்மா,அவன் விரும்பும் அந்த உருவிலேயே வந்திருக்கிறது.
மனதை நெகிழ்த்திய கதை. பாராட்டுக்கள் மோகன்.

lolluvathiyar
31-07-2007, 02:01 PM
அருமையான அப்பா கதை மோகன்.
வாழ்கையில் அம்மா கதை தான் அதிகமா கேட்டிருகிறோம்.
தாத்தா பாட்டி பிடிக்கும் இடம் கூட கதையில் அப்பாகள் பிடித்ததில்லை.
அந்த குரையை அழகாக நிவர்த்தி படுத்தி விட்டீர்கள்

natesh_raj_1980
31-07-2007, 02:55 PM
கதை மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி. வாழ்த்துக்கள் நண்பரே.

aren
31-07-2007, 03:00 PM
மோகன் கொடுங்கள் உங்கள் கையை!!!!!

கதை அருமை. பாசம் என்பது இதுதானா!!!!

நல்ல கதை. தொடருங்கள், உங்கள் அடுத்த கதையைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
31-07-2007, 03:01 PM
அன்பு பிணைப்பில் எல்லாம் சாத்தியமே..மனிதன் உணர்வுகளோடும் வாழுவான். புரியவைத்தது மோகன் உங்கள் கதை. பாராட்டுக்கள்.

ஓவியன்
31-07-2007, 03:13 PM
மோகன் மனிதரால் உணர்ந்து கொள்ளப்படாத சக்திகள் பலவற்றை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.......!

அதில் உண்மை அன்பினாலே செய்யக் கூடிய நிறைய விடயங்களையும்............!

நிறைவான ஒரு கதை மனதார வாழ்த்துகிறேன்...........! :icon_good:

அன்புரசிகன்
31-07-2007, 04:01 PM
நன்றாக இருந்தது... மனதால் ஒன்றிணைந்தர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது புதிதல்ல...

leomohan
01-08-2007, 06:16 AM
படித்து பாராட்டிய அக்னி, sunflower, சிவா, வாத்தியார், natesh,ஆரென், அமரன், ஓவியன், அன்புரசிகன் அனைவருக்கும் நன்றிகள் பல.

அன்புரசிகன்
01-08-2007, 06:55 AM
இப்படிச்சொன்னால் எப்புடி???

கணிணி காதல் கதை எப்போ தொடரப்போறீங்க?

விகடன்
01-08-2007, 07:43 AM
னெஞ்சையா கரையவைக்கும் கதை. என்னதான் உழைத்தாலும் அம்மா அப்பாவை அயல் நாடுகளுக்கு அழைத்துக் கொண்டு சென்று வருவது பெற்றாருக்கும் அசௌகரிகமாக இருந்தாலும் பிள்ளைகள் எங்களுக்கு ஏதோ அளவிலா சந்தோஷம் கிடைக்கிம். அதையே அவர்களும் இரசித்து விட்டார்கள் என்றால் எல்லையே இருக்காது அதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு.

அது மேல் அரைப்பகுதியில் அமைந்ததன் படி.
மிகுதி...

அதேவேளை தந்தை தாய் "எமது காலத்தில் உன்ச்க்கொரு கல்யாணத்தை பண்ணிப்போடனும்டா" என்று சொல்லிய வார்த்தை அவனுடைய ஆழ்மனதில் எவ்வாறு பதிந்திருக்கிறது! இதுவே இனி ஒரு குற்ற உணர்வாகவும் நெருஞ்சி முள்ளாகவும் அவ்வப்போது மனதெஇ நெருடிச் செல்லும்.

கதை இப்படி சென்று முடியும் என்று எதிர்பார்க்கவேயில்லை. கதையின் ஆரம்பித்திலும் மூச்சை அடைத்தது. இறுதியிலுக் கூட...

leomohan
01-08-2007, 08:07 AM
இப்படிச்சொன்னால் எப்புடி???

கணிணி காதல் கதை எப்போ தொடரப்போறீங்க?

இதோ சில நிமிடங்களில் அடுத்த பாகம். நன்றி.

leomohan
01-08-2007, 08:08 AM
னெஞ்சையா கரையவைக்கும் கதை. என்னதான் உழைத்தாலும் அம்மா அப்பாவை அயல் நாடுகளுக்கு அழைத்துக் கொண்டு சென்று வருவது பெற்றாருக்கும் அசௌகரிகமாக இருந்தாலும் பிள்ளைகள் எங்களுக்கு ஏதோ அளவிலா சந்தோஷம் கிடைக்கிம். அதையே அவர்களும் இரசித்து விட்டார்கள் என்றால் எல்லையே இருக்காது அதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு.

அது மேல் அரைப்பகுதியில் அமைந்ததன் படி.
மிகுதி...

அதேவேளை தந்தை தாய் "எமது காலத்தில் உன்ச்க்கொரு கல்யாணத்தை பண்ணிப்போடனும்டா" என்று சொல்லிய வார்த்தை அவனுடைய ஆழ்மனதில் எவ்வாறு பதிந்திருக்கிறது! இதுவே இனி ஒரு குற்ற உணர்வாகவும் நெருஞ்சி முள்ளாகவும் அவ்வப்போது மனதெஇ நெருடிச் செல்லும்.

கதை இப்படி சென்று முடியும் என்று எதிர்பார்க்கவேயில்லை. கதையின் ஆரம்பித்திலும் மூச்சை அடைத்தது. இறுதியிலுக் கூட...

நன்றி விராடன், கடமைகளுக்கும் கடன்களுக்கும் கனவுகளுக்கும் இடையில் உழன்று தள்ளாடும் என்றும் மது அருந்தாமலே இந்த மனம்.

இனியவள்
01-08-2007, 08:16 AM
அருமையான கதை மோகன் அண்ணா
வாழ்த்துக்கள்...

மென்மேலும் தொடரட்டும் உங்கள் கலைப்பயணம்

leomohan
02-08-2007, 07:23 AM
நன்றி இனியவள்.

ஆதவா
06-08-2007, 06:51 PM
உறைந்துபோய் நின்றது மனம்.. ஓரிரு நிமிடங்கள். கதையின் ஆழம் அந்தவகையில் இருக்கிறது. அப்பா மகன். வெளிநாடு. உணர்வு. இவைகளை நினைவில் வதக்கும்போது சிலிர்க்கிறது.

கதை மிக எளிமை+அருமை. தொடர்ந்து எழுதுங்கள்

leomohan
06-08-2007, 07:03 PM
உறைந்துபோய் நின்றது மனம்.. ஓரிரு நிமிடங்கள். கதையின் ஆழம் அந்தவகையில் இருக்கிறது. அப்பா மகன். வெளிநாடு. உணர்வு. இவைகளை நினைவில் வதக்கும்போது சிலிர்க்கிறது.

கதை மிக எளிமை+அருமை. தொடர்ந்து எழுதுங்கள்

மிக்க நன்றி ஆதவன்.

ஓவியா
02-09-2007, 12:29 AM
யாரும் எதிர்ப்பார்க்காத திருப்பம். விசித்திரமான கரு. சபாஷ் தலிவா.

இந்த வயதிலும் அப்பவை கட்டியணைத்து உறங்கும் மகனா!!! என்ன ஆச்சர்யம். ஹி ஹி

நல்ல சிந்தனையாளரின் கதை எப்பொழுதுமே பாராட்டையே பெருமாம்...வேற என்னாங்க, அதேதான், அட அதான், ஆமாம் அதேதான்!!! ........பாராட்டுக்கள்.

leomohan
02-09-2007, 05:50 AM

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி ஓவியா.

mukilan
22-07-2008, 03:24 PM
ஓவியா இன்று தீபாவளிச் சிறப்பிதழுக்காகப் பரிந்துரைத்ததால் இந்தக் கதையைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. நன்றி ஓவியா!

மகனுக்கும் தந்தைக்குமானப் பாசப் பிணைப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தந்தை இறந்த அந்த சேதியை அண்ணன் சொல்லும் அத்தருணத்தில் என் இதய ஓட்டம் அதிகமானது உண்மை. ஒரு நொடியில் பெரிய திருப்பம். சபாஸ் மோகன். உங்களுக்கு அஸ்டவதானி என இளசு அண்ணன் கொடுத்த பட்டம் சாலத்தகும்.

ஒரு சிறு தட்டச்சுப் பிழை கண்டேன்.

விடு நான் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் என்று போனை துண்டித்து எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். தன்னருகில் அவன் தந்தை படுத்திருந்த பகுதி கலைந்திருந்தது. அவன் நேற்றிரவு அவனுக்கு தந்த வேட்டி மடித்து வைக்கப்பட்டிருந்தது.

மாற்றி விடவும்.

அறிஞர்
22-07-2008, 03:36 PM
பழைய கதையை படித்தேன்...
சிறு வயதில் பலருக்கு ஹீரோ அப்பாதான்...
அப்பாக்களுக்கு தனி மவுசு உண்டு என்று புரிய வைத்த கதை.

leomohan
23-07-2008, 06:57 AM

மிக்க நன்றி முகிலன் அவர்களே. பரிந்துரை செய்த ஓவியா, நன்றிகள் பல.

leomohan
23-07-2008, 06:58 AM
பழைய கதையை படித்தேன்...
சிறு வயதில் பலருக்கு ஹீரோ அப்பாதான்...
அப்பாக்களுக்கு தனி மவுசு உண்டு என்று புரிய வைத்த கதை.

மிக்க நன்றி அறிஞரே. என்னடா இது பழைய திரி மேலே வந்திருக்கிறதே என்று பார்த்தேன்.

ஓவியா
23-07-2008, 07:29 AM
மோகன், என்ன இது இப்பொழுதெல்லாம் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள் என எதுவுமே வருவதேயில்லையே!!!

அட்லீஸ் நன்றி சொல்லவாவது வந்தீங்களே. ;)

அப்படியே உங்கள் முகமெல்லாம் சிவப்பாகி....:sauer028::sauer028:

கேள்வி கேட்ட ஓவியாவின் முக்கை உடைப்பதுபோல் ஒரு அருமையான 'திகில்' கதையா ஒரு பதிவ போட்டுப்போகவும்.

வேண்டுமென்றால் ஒருவாரம் எடுத்துக்கொள்ளவும். :D:D

இளசு
23-07-2008, 07:56 PM
இயல்பை மீறிய அமானுஷ்ய வகை முடிவென்றாலும்
பாசத்தைச் சொல்வதால் ரசித்து ஒன்ற முடிந்தது.

பாராட்டுகள் மோகன்..

Muthuvijayan
04-08-2008, 02:12 PM
அண்ணே,

கலக்குறீங்கண்ணே,,,, ஆனாலும் ஓவர அழ வைக்கிறீங்கண்ணே.....

இருந்தாலும் இதுதாண்ணே பாசம்ங்கிறது........

leomohan
05-08-2008, 01:20 PM
மோகன், என்ன இது இப்பொழுதெல்லாம் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள் என எதுவுமே வருவதேயில்லையே!!!

அட்லீஸ் நன்றி சொல்லவாவது வந்தீங்களே. ;)

அப்படியே உங்கள் முகமெல்லாம் சிவப்பாகி....:sauer028::sauer028:

கேள்வி கேட்ட ஓவியாவின் முக்கை உடைப்பதுபோல் ஒரு அருமையான 'திகில்' கதையா ஒரு பதிவ போட்டுப்போகவும்.

வேண்டுமென்றால் ஒருவாரம் எடுத்துக்கொள்ளவும். :D:D

திகில் கதை கைவசம் இல்லை :-) காதல் கதை தான் ஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. பார்க்கலாமா?

leomohan
05-08-2008, 01:21 PM
இயல்பை மீறிய அமானுஷ்ய வகை முடிவென்றாலும்
பாசத்தைச் சொல்வதால் ரசித்து ஒன்ற முடிந்தது.

பாராட்டுகள் மோகன்..

மிக்க நன்றி இளசு.

leomohan
05-08-2008, 01:21 PM
அண்ணே,

கலக்குறீங்கண்ணே,,,, ஆனாலும் ஓவர அழ வைக்கிறீங்கண்ணே.....

இருந்தாலும் இதுதாண்ணே பாசம்ங்கிறது........

நன்றி முத்து விஜயன் அவர்களே. மன்றத்தின் சார்பாக உங்களுக்கு நல்வரவு.

Keelai Naadaan
05-08-2008, 01:37 PM
வித்தியாசமான கதை. பாராட்டுக்கள்.
பாசத்தில் எல்லாமே சாத்தியமோ.

leomohan
27-08-2008, 07:26 AM
வித்தியாசமான கதை. பாராட்டுக்கள்.
பாசத்தில் எல்லாமே சாத்தியமோ.

மிக்க நன்றி கீலைநாதன் அவர்களே.

பென்ஸ்
16-09-2008, 01:55 AM
ஒரு வருடங்களுக்கு முந்தய கதைக்கு இன்று பின்னுட்டம் இடுவது வருத்தம்தான்....
ஆனானும் மன்றத்தில் அழகு அதுதானே,
எத்தனை வருடங்கள் ஆனாலும் நம் படைப்புகள் வாசிக்க பட்டு ரசிக்க படுகின்றன.

அருமையான கதைக்கு பாராட்டுகள் மோகன்...
மிக மிக கடினமான கரு என்றே சொல்லுவேன், அதை எளிதாக கொடுத்து இருக்கிறீர்கள்...

உலகில் பல விடயங்கள் புரிந்து கொள்ள முடியாதவை...
பல நிகள்வுகள் டேஜா-வூ போல...
சில மனதை சமாதனாபடுத்த இதமாக,
சில எச்சரிக்கை மணியாக....

உங்கள் சிந்தனையின் மிக "complex" பகுதியின் அழகான "real" படைப்பு... பாராட்டுகள்...

ஐரேனிபுரம் பால்ராசய்யா
16-09-2008, 12:00 PM
நல்ல தரமான படங்களை வரைந்ததால் லியோனார்டா டாவின்சி புகழின் உச்சிக்கு சென்றார். நல்ல தரமான கதையை பதிந்ததால் லியோ மோகன் நீங்களும் பெருமைக்குரியவர் ஆகிவிட்டீர்கள். தந்தை மகன் இருவரின் பாசமும் படம் பிடிக்கப்பட்ட நல்ல தரமான கதை. பாராட்டுக்கள்.

MURALINITHISH
17-09-2008, 08:47 AM
எவ்வளவு ஆசை இருந்தால் இறந்தும் மகனை தேடும் தகப்பன் இருந்தாலும் அந்த மகனுக்கு அந்த நிமிடம் உறவுகள் மட்டுமல்ல உடலும் உறைந்திருக்கும்