PDA

View Full Version : நேரடி ஒளிபரப்பு(சிறுகதை)



சிவா.ஜி
30-07-2007, 09:32 AM
தன்னையே ஆண்டவனாய் அறிவித்துக்கொண்ட அந்த ஆன்மீகவாதிக்கு இன்று அறுபதாவது பிறந்தநாள். அவருடைய பக்தர்களெல்லாம் இந்த விழாவை மிக விமரிசையாக கொண்டாட முடிவெடுத்து,நகரிலேயே மிகப்பெரிதான அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாக தருவதற்கு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் முன் வந்திருந்தது.எங்கெங்கு காணிணும் சிவப்பு மயமாகத்தெரிந்தது.

அரங்கத்தில் ஒரு திடீர் பரபரப்பு..சிங்காரஅடிகளார்வந்துவிட்டார்.பக்தர்களின்
ஓம் கோஷம் அரங்கத்தையே அதிரவைத்தது.அடிகளார் எண்னை மண்டி செட்டியார் போல,வயிற்றை மட்டும் உரம் போட்டு வளர்த்து வைத்திருந்தார்.சிவப்புக் கம்பள வரவேற்பை ஏற்றுக்கொண்டு மெல்ல நகர்ந்து மேடையை அடைந்தார். மேடையின் நடுவில் பிரம்மாண்டமான இருக்கையில் சென்று அமர்ந்தார்.பக்தர்கள் ஒவ்வொருவராய் மேடையேறி அடிகளாரின் ஆசியை பெற்றுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களோடு ஒருவனாய் மேடையேறிய ஒரு இளைஞன் திடீரென்று அடிகளாரின் அருகில் சென்று அவர் கையை தன் கையுடன் விலங்கால் பிணைத்துக் கொண்டான். அரங்கமே அதிர்ச்சியில் அமைதியானது. அடிகளார் சுத்தமாக ஆடிப்போய்விட்டது அவரின் நடுக்கத்திலேயே தெரிந்தது.என்ன அவன் நோக்கம் என்று தெரியாமல் அதிர்ச்சியில் அசையாது நின்றுவிட்டார்.

இளைஞன் பேசத்தொடங்கினான்" அரங்கத்தில் இருக்கிற எல்லோரும் கொஞ்சம் என்னை கவனிங்க. என் உடம்பை சுத்தி பாம் வெச்சிருக்கேன். இதோ கையில இருக்கிற ரிமோட்ட அழுத்தினா அடிகளார் ஆட்டம் குளோஸ். எனக்குத்தேவை பணமோ வேற எந்த பொருளோ கிடையாது. உண்மை, வெறும் உண்மை. அதுதான் வேணும். இந்த அடிகளாரைப் பத்தின உண்மை அதுவும் அவரோட வாயாலயே சொல்லனும். ஓடிக்கிட்டிருகிற கேமரா எதையும் அனைக்கக் கூடாது.இந்த நல்லவரோட உண்மையான முகம் எதுன்னு இப்ப பாத்துக்கிட்டிருக்கிற எல்லாரும் தொடர்ந்து பாக்கனும்." பேசி விட்டு அடிகளாரைப் பார்த்து 'ம்..சொல்லு" என்றான்.

'எதை சொல்லச் சொல்ற' குழப்பமாய் கேட்ட அடிகளாரைப் பார்த்து

"உன்னப் பத்தி,நீ யாரு எப்படி இப்ப இருக்கிற இந்த நிலைக்கு வந்த,திரை மறைவில என்ன செஞ்சுக்கிட்டிருக்க எல்லாம்..எல்லாம் சொல்லு ஹீம்" மிரட்டலான தொனியில் அவன் சொன்னதும் எதைச் சொல்வது என்று சிறிதுயோசித்து விட்டு" இங்க பாருப்பா நான் ரொம்ப சாதாரணமானவன். இறைப்பணி செய்யறதுதான் எனக்கு இறைவன் இட்ட கட்டளை.என்னை ஏதோ குற்றவாளி மாதிரி கேக்கறியே என்னன்னு சொல்ல" வழக்கமாய் பக்தர்களை வசியம் செய்ய உபயோகிக்கும் அதே தந்திர பேச்சை அப்போதும் உபயோகப்படுத்தினார்.

இந்த நடிப்பை வெச்சுத்தான இத்தனை பேர நம்ப வெச்சிருக்கெ..இப்ப எனக்குத்தேவை
உண்மை....சொல்லு அடிக்குரலில் அவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் பார்வையை ரிமோட்டுக்கு கொண்டு சென்றதைப் பார்த்ததும் பதறிக்கொண்டு,
சொல்லிடறேன் ஒண்ணும் பண்ணிடாதே..அலறி விட்டு.....எங்கிருந்து தொடங்குவது என்று சிறிது தயங்கி....பின் சொல்லத்தொடங்கினார்.

30 வருஷத்துக்கு முன்ன எங்க கிராமத்துல நானும் இன்னும் நாலு கூட்டாளிங்களும் சேர்ந்து ஆடு மாடு திருடிக்கிட்டிருந்தோம்.அப்படி திருடப்போனப்ப ஒரு தடவை ஊர்காரங்க பாத்துட்டாங்க. அவங்ககிட்ட மாட்டிக்காம ஓடி வந்தப்ப,பின்னாடியே துரத்திக்கிட்டு வந்தவங்ககிட்டருந்து தப்பிக்கறதுக்காக நாங்க அஞ்சு பேரும் வேற வேற திசையில ஓட ஆரம்பிச்சோம். நான் மட்டும் ஓடிப்போய் அங்க இருந்த சின்ன அம்மன் கோயிலுக்குள்ள கதவை உள் பக்கமா தாப்பா போட்டுக்கிட்டு உக்காந்துட்டேன்.தொரத்திக்கிட்டு வந்தவங்க கொஞ்ச நேரம் வெளியில உக்காந்து பாத்துட்டு திரும்பி போய்ட்டாங்க. சரி போய்ட்டாங்கன்னு நெனைச்சுட்டு வெளியில வந்தா இன்னும் நாலு பேரை கூட்டிகிட்டு வந்துகிட்டு இருந்தாங்க.பயந்துபோய் மறுபடியும் உள்ளப் போயிட்டேன். ரெண்டு நாள் உள்ளயே இருந்தேன். அதுக்கப்பறம் தாக்குப்பிடிக்க முடியாம வெளியில வந்தவன்,உள்ள இருக்கும்போதே யோசிச்சி வெச்ச படி அருள் வந்த மாதிரி நடிச்சேன். ஆத்தா எனக்குள்ள எறங்கிட்டான்னு சொல்லி நான் ஆடுன ஆட்டத்துல அந்த அப்பாவிங்களும் நம்பிட்டாங்க. அப்பதான் எனக்கு தோனுச்சி,இனிமே சின்ன சின்னதா திருடி பொழைக்கறத விட இத வெச்சே பணம் சம்பாதிக்கலாங்கற எண்னம். கூட்டாளிங்கள வெச்சு ஆடு மாடுங்கள திருடச்சொல்லி வேற ஊருங்கள்ல ஒளிச்சு வெக்கச் சொல்லி,நான் அருள் வந்து குறி சொல்லி அதுங்க இருக்கிற எடத்த காமிச்சுக் கொடுத்தேன். கிராமத்து ஜனங்க அத உண்மைன்னு நம்பி காணிக்கை குடுத்து குறி கேக்க ஆரம்பிச்சாங்க. நானும் அந்த கோவில்லயே உக்காந்து என் தொழில செய்ய ஆரம்பிச்சேன். நெறைய பணம் சேர ஆரம்பிச்சதும் என்னோட கிரிமினல் புத்திய உபயோகிச்சி ஒரு இயக்கமா தொடங்கி,வேற வேற ஊர்ல இருந்த என்னோட கூட்டாளி களவானிப் பசங்களையெல்லாம் அந்தந்த ஊருக்கு அமைப்பாளரப் போட்டு எல்லா ஊர் ஜனங்களையும் ஏமாத்தி பணம் சேத்தோம். அதுல அந்த பயலுங்களுக்கு 20 பர்செண்டு எனக்கு மீதின்னு பிரிச்சிக்கிட்டோம்.

கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் தன் சித்து வேலை சரித்திரத்தை தொடர்ந்தார்.

பணம் அதிகமா சேர ஆரம்பிச்சதும் இந்த அரசியல்வாதிங்களும்,அரசாங்க அதிகாரிகளும் தொல்லை கொடுக்க தொடங்கிட்டாங்க.அவனுங்கள கைக்குள்ள போட்டுக்கறதுக்காக என் அமைப்புக்கு ஆசி வாங்க வர்ற குடும்ப பொம்பளைங்கள தீர்த்தம்ன்னு சொல்லி போதை மருந்த கலந்து குடுத்து,மயக்கமா இருக்கும்போதே அந்த பெரிய மனுஷனுங்களுக்கு சப்ளை பன்னேன். அதுக்கப்பறந்தான் பணம் கொட்ட ஆரம்பிச்சிச்சு.இப்ப என்கிட்ட 2000 கோடி இருக்கு.நம்ம நாட்டு ஜனங்கள ஆன்மீகத்தால ஏமாத்துறது ரொம்ப சுலபம். சொல்லிவிட்டு இன்னும் என்ன வேனும் என்பது போல அவனைப் பார்த்தார்.

யோவ் பன்னாடை,இப்ப சொன்னியே குடும்பப் பொம்பளைங்கள சப்ளை பன்னேன்னு அதுல ஒருத்திதான்யா எங்க அக்கா. உன்னையும் ஒரு சாமியார்ன்னு நெனைச்சு வந்தவள நாசப்படுத்திட்ட. அங்கருந்து திரும்பி வந்தப்பவே ஒரு மாதிரியாத்தான் இருந்தா.இன்னும் ஒருமாசத்துல கல்யாணம் நிச்சயிச்சிருந்தாங்க அவளுக்கு.அந்த சந்தோஷத்துல அவளுக்கு என்ன ஆச்சுங்கறதையே மறந்துட்டு சிரிச்சிக்கிட்டே இருந்தா.அவ வாழ்க்கையே சிரிப்பா சிரிக்கப் போவுதுன்னு தெரியாம.கல்யாணம் ஆயி ஒரே வாரத்துல அவ கர்ப்பம் ஆனப்போ,இது ரெண்டாவது மாசம்ன்னு டாக்டர் சொன்னதும் ஆடிப்போய்ட்டாங்க அவ புருஷன் வீட்டுக்காரங்க.எங்க குடும்பத்தையே கேவலப்படுத்திடியேடி பாவின்னு கழுத்தப்பிடிச்சி தள்ளிட்டாங்க. அழுதுகிட்டே வீட்டுக்கு வந்தவ,யார்கிட்டயும் எதுவும் பேசாம,அடுத்தநாள் என்ன தனியா கூப்புட்டுஅந்த சாமியாரப் பாக்கப் போன எடத்துலதாண்டா தம்பி எனக்கு என்னவோ ஆயிருக்குன்னு சொல்லி அழுதா.எனக்கு ரத்தம் கொதிச்சுது.ஆனா அப்போதைக்கு அவ வாழ்க்கைக்கு என்ன வழின்னு யோசனைதான் இருந்திச்சி. அதுக்குள்ள அவ தொங்கிட்டாய்யா.தாலி மஞ்சள் காயறதுக்குள்ளயே பாவி செத்துபோய்ட்டா. அன்னிக்குத்தாண்டா நெனைச்சேன் எப்படியாவது உன் வேஷத்தக் கலைச்சு இனிமேலும் எந்த சகோதரிக்கும் இந்த நிலைமை வரவிடக்கூடாதுன்னு.இப்ப கூட உன்ன என்னால கொல்ல முடியும். ஆனா நீ ஒருத்தன் செத்துபோய்ட்டா இன்னொருத்தன் உன் வாரிசா வருவான். அதுவுமில்லாம உனக்கு ஒரு கோவில் கட்டி கும்புட ஆரம்பிச்சுடுவாங்க இந்த அறிவில்லாத ஜனங்க.இப்பஎத்தனை லட்சம் பேரு இதை பாத்துக்கிட்டிருப்பாங்க.அவங்க எல்லாருக்கும்உறைக்கும்,அவங்க செஞ்சது எத்தனை பெரிய தப்புன்னு.இன்னொருத்தன் கிட்ட ஏமாற்றதுக்கு முன்னால கண்டிப்பா யோசிப்பாங்க. அதுதான் எனக்கு வேனும். சொல்லிவிட்டு பக்கத்தில் துப்பாக்கியில் கையை வைத்துக்கொண்டு அவனையே பார்த்துக்கொண்டிருந்த காவலதிகாரியிடம் திரும்பி வாங்க சார். இப்ப உங்க கடமையை செய்யுங்க. என்றான்.

இதயம்
30-07-2007, 10:07 AM
ஒரு கவிஞராக மட்டுமல்லாமல், நல்ல எழுத்தாளராகவும் நீங்கள் பரிமளித்துக்கொண்டு வருவதற்கு முதலில் என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.!

உங்கள் கதையில் விஜயகாந்த் படத்தின் கடைசியில் வரும் அதிரடி சண்டைக்காட்சி போல அத்தனை பரபரப்பு. வெறும் போலிசாமியார் மற்றும் இளைஞன் என்ற இரு கதாபாத்திரங்களை மட்டும் கொண்டு பல கதாபாத்திரங்களை கொண்ட ஒரு திரைப்படத்தின் காட்சிகளை கண் முன் விரியச்செய்துவிட்டீர்கள். இன்றைய காலகட்டத்தில் ஆன்மீகத்தின் பெயரை கொண்டு மக்களை வழிகெடுக்கும், வாழ்க்கையை நாசமாக்கும் போலிச்சாமியார்களின் ஆதி, அந்தத்தை கூட விட்டு வைக்காமல் தோண்டி எடுத்து மக்களுக்கு நல்லதொரு கருத்தை தங்கள் கதை மூலம் அளித்திருக்கிறீர்கள். அந்த இளைஞனைப்போல் ஒவ்வொருவரும் சிந்திக்க தொடங்கினால் ஆன்மீகத்தின் பெயரால் போலிச்சாமியார்கள் செய்யும் அட்டூழியங்களும், அதன் மூலம் ஏற்படும் பொருள், கற்பு இழப்புகளும், வருங்கால சந்ததியரின் மூடநம்பிக்கை என்ற அழிவை நோக்கிய பயணமும் தடுக்கப்படும். பொதுவாக போலி ஆன்மீகத்தின் பாதிப்பு நம்மை நேரடியாக தாக்கும் போது தான் நாம் உண்மையை உணர்கிறோம். மற்றவர்களுக்கு நேர்வதை நாம் கண்டு கொள்வதே இல்லை. இதை இந்த கதையிலும் மிக அழகாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

எழுத்து நடையில் ஒரு வகையான பரபரப்பை கொண்டு வரும் பாணி உங்களிடம் இருக்கிறது. சாமியார் உண்மையை சொல்லும் போது தன் பேச்சை இடையில் நிறுத்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டாரோ இல்லையோ, கதையின் பரபரப்பில் இணைந்து கொண்ட நான் இளைப்பாற அந்த இடைவெளி உண்மையிலேயே எனக்கு தேவைப்பட்டது. நிகழ்வு நடக்கும் களத்தின் காட்சியை தெளிவாக்குவதில் எழுத்தில் தெளிவான வர்ணனை மிக முக்கியம். அதை அளவுக்கு அதிகமாகவே செய்திருப்பது இக்கதைக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. மனித குலத்திற்கு மிக அவசியமான ஒரு சிறந்த கருத்தை சொன்ன இந்த கதை பின்னூட்டங்களால் நிச்சயம் கௌரவிக்கப்பட வேண்டும். அது நன்மக்களின் கடமை. என் கடமையை நான் செய்து விட்டேன். மற்றவர்கள்..? பார்ப்போம்.

வெண்தாமரை
30-07-2007, 10:21 AM
நமது ஜனங்;களில் பாதிபேர் இப்படிதான் சாமியார்கள் என ஆசாமிகளை நம்பி பணத்தை இழக்கிறார்கள். ஆண்டவன் ஒருவனே என்பதை அவர்கள் எப்போது உணர்;வர்களோ? என்னருமை இறைவா என்னையும் இம்மக்களையும் காப்பாற்று என சொல்லும் மக்கள் பாதி பேர் சாமியார்தான் தெய்வம் அவர் வாக்கு மெய் என நம்பும் மக்கள் பாதிபேர்உன் மேல் நம்பிக்கை வை அதுவே உன்னை உயர்த்தும் நம்மேல் நம்பிக்கை இல்லாமல் செய்யும் எந்த வேலையும் சரியாகாது..

அந்த பார்ம் ஐ உடம்பில் கட்டிக் கொண்டு மிரட்டியவன் தன்மேல் நம்பிக்கை வைத்ததால்தான் அவனால் அந்த ஆசாமியின் சுயரூபத்தை காண்பிக்க முடிந்தது..

தன் மேல் நம்பிக்கை வைத்திருப்பவன் வைரம்
தன் மேல் நம்பிக்கை வைக்காதவன் கரி

அன்புரசிகன்
30-07-2007, 10:25 AM
மக்கள் எவ்வளவு பட்டும் திருந்தினமாதிரி தெரியல...

இப்பவும் ஏமாந்துகிட்டு இருக்கிறயங்களே...

அழகாக கதையை வார்த்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

சிவா.ஜி
30-07-2007, 11:07 AM
அப்பா எத்தனை அழகான, விரிவான, விளக்கமான பின்னூட்டம். மனம் நிறைந்த நன்றிகள் இதயம்.

சிவா.ஜி
30-07-2007, 11:08 AM
மிக்க நன்றி சூரியகாந்தி. தன்னம்பிக்கை என்றுமே தேவையான ஒன்றுதான்.

சிவா.ஜி
30-07-2007, 11:09 AM
ஆமாம் அன்பு,எத்தனைதான் பட்டாலும் இந்த மக்கள் இந்த விஷயத்தில் மாக்களாகவே இருக்கிறார்கள். நன்றிகள் பல.

ஷீ-நிசி
30-07-2007, 11:15 AM
நடைமுறைக்கு சாத்தியமா, இல்லையா என்று நான் உள்ளே போக விரும்பவில்லை... கதை வேகம் மிக் அருமை சிவா... காட்சி அப்படியே கண்முன் விரிவதாய் உள்ளது...

ஆனால் எத்தனை தான் காட்டினாலும், ஜெயில்ல போடலியா ஒரு பிரே பன்றேனு சொன்ன ஆனந்தாவை.... இருந்தும் மக்கள் சாமியாரிடம் போய்கிட்டு தானே இருக்காங்க....


வாழ்த்துக்கள் சிவா! தொடருங்க!

சிவா.ஜி
30-07-2007, 11:18 AM
படத்தில் காட்டினாலும்,பத்திரிக்கையில் போட்டாலும் திருந்தாவர்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள் ஷீ. என்ன செய்வது நம்மால் முடிந்தவரை இவர்களை தோலுரித்துக் காட்டுவோம்,நடப்பது நடக்கட்டும். மிக்க நன்றிகள் ஷீ−நிசி.

அமரன்
30-07-2007, 12:29 PM
விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் கல்வி அறிவு எவ்வளவு முன்னேற்றினாலும் ஏமாறும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களும் என்ன செய்வார்கள் பாவம். எத்தனை பிரச்சினை அவர்களுக்கு. அவற்றை தீர்ப்பதற்கு வழிதெரியாது இப்டியான சிலரை நாடுகிறார்கள். எது ஆன்மிகம், பக்தி மார்க்கம் எத்த்கையது என்று உணரும் வரை அல்லது உணர்த்தபடும் வரை இக்கதை நிஜமாவதை தடுக்க முடியாது. நல்ல மெசேஜுடன் கூடிய கதை..த்ரில்லாக அமைந்த கதை.
வேகமாகக் கொண்டு சென்று அருமையாக முடித்துள்ளீர்கள். நல்ல எழுத்தாளன் என்னும் தகுதியை உங்களுக்கு அண்மையில் கொண்டுவந்த கதை. அடுத்த கதையில் அதை எட்டிப்பிடித்துவிடுவீர்கள்.பாராட்டுக்கள் சிவா.

சிவா.ஜி
30-07-2007, 01:08 PM
நன்றி அமரன். உங்கள் ஆதரவுடன் அந்த தகுதியை பெற முயல்கிறேன்.

மனோஜ்
30-07-2007, 03:44 PM
மிகவும் சுவாரசியமாக உண்மையை உணரவைக்கம் முத்தான கதை அருமை நண்பரே

ஓவியன்
31-07-2007, 03:41 AM
தெய்வம் என்ற பெயர் எங்கள் மக்களை அதுக்கு மேல் ஆராய்ட்சி செய்யாமல் அப்படியே நம்ப வைக்கிறது. இது தப்பல்ல!, ஒவ்வொருத்தரும் தத்தம் மத்தத்தின் மேல் வைத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடு இது. ஆனால் மக்களின் அபார நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்துவதே தப்பாகும். இவ்வாறான ஒரு சில பசுத் தோல் போர்த்திய புலிகளால் உண்மையாகவே இறை நம்பிக்கைமிக்க மகான்கள் மீதான மக்களின் நம்பிக்கையும் சிதைக்கப் படுகிறது என்பதே உண்மை. எந்த ஒரு இடத்திலும் நன்மை இருக்கும் அதே வேளை தீமையும் இருக்கத் தவறுவதில்லை. இரண்டையும் வேறு பிரிப்பது மிகச் சிரமமான விடயமானாலும் கூட வேறுபிரித்தறியவாவது முயற்சிக்க வேண்டும். முயற்சிக்க வைக்கும் உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் சிவா.ஜி!.

இந்தக் கதையினை நீங்கள் நகர்த்திச் சென்ற பாங்கு அபாரம் சிவா, ஒரு தேர்த்த கதாசிரியனுக்குரிய கதையை சொல்லும் பாங்கு இதிலே பளிச்சிட்டது. அதுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சிவா.......!:nature-smiley-002:

சிவா.ஜி
31-07-2007, 04:14 AM
மிகவும் சுவாரசியமாக உண்மையை உணரவைக்கம் முத்தான கதை அருமை நண்பரே

மனம் நிறைந்த நன்றி மனோஜ். உங்களை இப்போதெல்லாம் அதிகமாக மன்றத்தில் பார்க்க முடியவில்லையே...வேலைப்பளுவா?

சிவா.ஜி
31-07-2007, 04:17 AM
இந்த மன்றம் என்ற பல்கலைகழகம் கற்றுத்தரும் பாடங்கள் ஏராளம்.அதில் கற்கும் மாணவன் என்ற பெருமிதத்தை உங்கள் பின்னூட்டங்களின் மூலமாக
அடைகிறேன் ஓவியன். மனமார்ந்த நன்றிகள்.

தளபதி
31-07-2007, 07:30 AM
ஒவ்வொரு படைப்பும் ஒரு சின்ன பிரவசவம், படைத்தப் பிறகு அதை ஒரு தாயின் பக்குவத்துடன் அலசி ஆராய்ந்து, பின்னர் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது, என்று மிக அழகாக படைத்துள்ளீர்கள். நிறைய எழுதுங்கள். நிறைய ரசிப்போம்.

சிவா.ஜி
31-07-2007, 07:35 AM
நன்றி குமரன்.மன்றத்தின் அன்புக்கரங்களின் அனைப்பு இருக்கும்வரை இன்னும் எழுதும் நினைப்பு இருந்துகொண்டே இருக்கும்.

ஆதவா
12-08-2007, 04:38 PM
படித்து ரசித்தேன் சிவா.ஜி... நடைமுறைக்கு சாத்தியமா என்பது தெரியவில்லை என்றாலும் செய்துவிடு கதையைத் தொடர்ந்து மேலுமொரு விறுவிறுப்பு,,,

நண்பர்கள் சொன்னமாதிரி விசயகாந்து படம் கிளைமாக்ஸ் மாதிரி இருக்கிறது :D

நல்ல விறுவிறுப்பான அதேசமயம் சிறுகதையும் கொடுக்கிறீர்கள்... வாழ்த்துக்கள். மேலும் தொடருங்கள்..

சிவா.ஜி
13-08-2007, 04:39 AM
நன்றி ஆதவா. நடமுறைக்கு சாத்தியமில்லாதைத்தானே கற்பனையில் எழுதி..கொஞ்சமாவது ஆறுதல் பட்டுக்கொள்ள முடிகிறது.என்ன செய்வது ஆதவா...என்று இதெல்லாம் சாத்தியமாகிறதோ அன்று இந்த மாதிரி கதைகளை மியூசியத்தில் தான் பார்க்க முடியும். அந்த நிலை வருமா....?

இளசு
13-08-2007, 07:30 PM
கதாசிரியராய் சிவாவுக்கு பஞ்சமில்லா பாராட்டுகள்!

போலி அடிகளார்கள், பொய் ஆனந்தாக்கள், மத(ம் பிடித்தத்)தலைவர்கள் ஒருபக்கம் இருக்கட்டும்...

நம் கண்ணுக்குப் புலப்படும்போதே அவர்கள் பெரும் (விஷ) விருட்சங்களாகி விட்டவர்கள்...


அவர்களைக் களைவது கற்பனைக்கதைகளில் சுலபம்..சுகம்!


ஆனால், இந்த நாயகனின் சகோதரி போன்றவர்களை என்ன செய்வது?
நம்மால் முடிந்தது − நம்மைச் சுற்றியிருப்பவர்கள், குறைந்தது நம்மையாவது
இப்புதைக்குழிகளில் விழாமல் பாதுகாத்துக்கொள்வது...

நம்மைப்போல் ஒரு சகமனிதன் − தான் தெய்வம் என்றோ, தெய்வத்தின் ஏஜண்ட் என்றோ சொன்னால் அதை நம்பும் அளவுக்கு இறங்குபவர்கள்
எக்கேடு கெட்டால் என்ன என சிலசமயம் எனக்குத் தோன்றும்..

வெண்தாமரை சொன்னதுபோல் வெறும் கரிகள் அவர்கள்!

சிவா.ஜி
14-08-2007, 04:51 AM
போலி அடிகளார்கள், பொய் ஆனந்தாக்கள், மத(ம் பிடித்தத்)தலைவர்கள் ஒருபக்கம் இருக்கட்டும்...
நம்மைப்போல் ஒரு சகமனிதன் − தான் தெய்வம் என்றோ, தெய்வத்தின் ஏஜண்ட் என்றோ சொன்னால் அதை நம்பும் அளவுக்கு இறங்குபவர்கள்
எக்கேடு கெட்டால் என்ன என சிலசமயம் எனக்குத் தோன்றும்..

வெண்தாமரை சொன்னதுபோல் வெறும் கரிகள் அவர்கள்!

இதைத்தான் இளசு நான் எப்போதும் என் சுற்றத்தாரிடம் சொல்வேன். சக மனிதன் ஓங்கி அடித்தால் விழுந்துவிடக்கூடிய மற்றொரு மனிதன்(அப்படிச் எழுத கை தயங்குகிறது) அவனை ஒரு தெய்வமாக எப்படி இந்த மக்களால் நினைக்க முடிகிறது...?எத்தனை உண்மைகளை புட்டு புட்டு வைத்தாலும்,இவனை விட்டு வேறொருவனை நாடும் அறிவிலிகள் இருக்கும்வரை ஆனந்தாக்களுக்கு பஞ்சமே இருக்காது. ஒத்தக் கருத்தை,மெத்த படித்தவரிடமிருந்து கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. மனமார்ந்த நன்றி இளசு.

அக்னி
14-08-2007, 01:42 PM
போலிச்சாமியார்களால், கேலியாகும் மதங்கள்...
மதம் கொண்ட வெறியர்களால், சின்னாபின்னமாகும் சமுதாயம்...
தெரிந்தும், திருந்தா மடையர்களாய் நாங்கள்...

நல்ல விழிப்புணர்வுக்கதை...
பாராட்டுக்கள் சிவா.ஜி...

உங்களுக்குள் கவிஞன், ஓவியன், எழுத்தாளன் என்று அனைவரும் நிரவியிருக்கின்றனரே...
திறமைகளில் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்...

சிவா.ஜி
14-08-2007, 01:52 PM
நன்றி அக்னி. எல்லாம் இந்த மன்றமும் மன்றத்தின் உறவுகளாகிய நீங்களும்தான் அக்னி.உங்கள் அனைவரின் அன்பால் தொடருகிறேன்.

ஓவியா
14-08-2007, 11:42 PM
அன்பின் சிவாவிற்க்கு, நல்ல விழிப்புணர்வுக்கதை...கதை நன்று.

கச்சிதமாக, சிற்ப்பான வார்த்தை கோர்வையை கையாண்டுள்ளீர்கள்.

போலிச்சாமியாரெல்லாம் சமுகத்திற்க்குள் உலாவும் பசுத்தோள் போர்த்திய புலிகள். அவை யாருமரியா வண்ணம் அருகில் இருப்பவைகளையே நாசமக்கும்.

உங்கள் கதாநாயகன் போல் சமூகத்தை காக்க நினைக்கும் ஆண்களின் வீர*த்தினை இங்கு பாராட்டுகிறேன்.

leomohan
15-08-2007, 04:23 AM
நன்றாக இருந்தது நேரடி ஒளிபரப்பு சிவா. தொடருங்கள் உங்கள் சிறுகதை பயணத்தை.

சிவா.ஜி
15-08-2007, 04:46 AM
நன்றி ஓவியா.நாம் சார்ந்த இந்த சமூகத்துக்கு ஏதேனும் செய்ய விரும்பினால்,சிலரையேனும் மூட இருளிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வர முயற்சி. வெற்றி கிட்டியாலும் கிட்டாவிட்டாலும் தொடரும் முயற்சி.

சிவா.ஜி
15-08-2007, 04:47 AM
நன்றாக இருந்தது நேரடி ஒளிபரப்பு சிவா. தொடருங்கள் உங்கள் சிறுகதை பயணத்தை.

பாராட்டுக்கு நன்றி மோகன்.

ஓவியா
15-08-2007, 08:18 PM
நன்றி ஓவியா.நாம் சார்ந்த இந்த சமூகத்துக்கு ஏதேனும் செய்ய விரும்பினால்,சிலரையேனும் மூட இருளிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வர முயற்சி. வெற்றி கிட்டியாலும் கிட்டாவிட்டாலும் தொடரும் முயற்சி.

அவசியம் வெற்றிக்கிட்டும், இல்லையென்றால் நாமெல்லாம் இன்னேரம் 'அரசியில் மூழ்கியிருப்போம்' நம் உழைப்பு வீண் போகாது. :D:D:D

MURALINITHISH
18-09-2008, 09:09 AM
இந்த மாதிரி எத்தனை நேரடி ஒளிபரப்பு இருந்தாலும் நிறைய முட்டாள்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டேதான் இருப்பான்

சிவா.ஜி
18-09-2008, 10:39 AM
இந்த மாதிரி எத்தனை நேரடி ஒளிபரப்பு இருந்தாலும் நிறைய முட்டாள்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டேதான் இருப்பான்

அதை நினைத்தால்தான் வ*ருத்த*மாக* இருக்கிற*து. என்ன* செய்வ*து முடிந்த*வ*ரை அவ*ர்களை உண*ர*ச் செய்வோம். ந*ன்றி முர*ளி.

சுகந்தப்ரீதன்
18-09-2008, 11:58 AM
நேரடி ஒளிபரப்பில் உண்மை உரையாடுகிறது..!!

உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள் சிவா அண்ணா..!!

சிவா.ஜி
18-09-2008, 12:10 PM
நன்றி சுபி.(இப்போதெல்லாம் உண்மையைச் சொன்னால் வீட்டுக்கு சுமோ வருகிறதாமே...? நல்ல வேளை நான் இந்தியாவில் இல்லை)