PDA

View Full Version : அங்கு அம்மாவும் கடுமழையும் இங்கு நானும்



ரிஷிசேது
28-07-2007, 02:55 PM
இங்கு
கூர்முனை இலை மரங்களில்
முட்கள் இல்லை பூக்களுமில்லை
நகரா பொழுதுகளில்
தொலைப்பதற்கோ, தேடுவதற்கோ
எதுவுமில்லை.
அம்மாவின் மடிவாசமோ
ஐப்பசி மழை மண்வாசமோ இல்லை

அங்கு
இந்நேரம் மழை பெய்திருக்கும்
குடுகுடுப்பைக்காரன் கொடுத்துப்போன பயத்தை
குரங்காட்டியோ, பூம்பூம் மாட்டுக்காரனோ
எடுத்துப்போயிருப்பான்

நீ
வாய்க்கு ருசியாய் ஓர்
காரப்பொறியோ, கடலையோ அல்லது
வடாமோ கொறித்துக்கொண்டிருப்பாய்
சாயங்காலம் வந்த விருந்தாளியாய்
மழை தொடர்ந்திருக்கும்
நாய்கள் சுருட்டிப் படுத்திருக்கும்
அவ்விரவில் நட்சத்திரமோ ஆடும்
வேப்பமர இலையிடுக்கில் நுழைந்துவிடும்
நிலாவொளியோ இல்லாமல்
வெட்டுமின்னல் இடியில்- என்றும்
துணைக்கு வாரா அர்சுனனை
அழைத்துக்கொண்டிருப்பாய்

இங்கு
எந்த அறிவிப்புமின்றி
வந்துபோகும் மழையோ
கீறும் மின்னலோ- அர்சுனனம் வாரா
கடுமிடியோ-
ரசிப்பாயில்லை. ரசிப்பாருமில்லை.

அங்கு
நீ முடிந்த மழையை திட்டிக்கொண்டோ
வடியா நீரை கம்புவைத்து குத்திக்கொண்டோ
காயாத்துணிகளை உதறிக்கொண்டோ
மழை மொள்ளப்போகும் மேகங்களை
கடிந்து கொண்டோயிருப்பாய்

இங்கு
கூர்முனை இலை மரங்களில்
முட்களில்லை பூக்களுமில்லை
குடுகுடுப்பைக்காரனோ குரங்காட்டியோ இல்லை

அமரன்
28-07-2007, 04:14 PM
என் நிலையில் வைத்து பார்க்கையில்...பனிப்புலத்தில் உள்ள ஒருவன் கந்தக பூமியை ஒப்பீடு செய்து ஏங்குவதுபோல் உள்ளது..இதுவே நகரத்திற்கும் கிராமத்துக்கும் இடையிலான ஒப்பீடாக பொருந்தா என நினைகிறேன்...பாராட்டுக்கள் ரிஷி...


சொல்லாமல் வரும் மழை..மழை வந்தும் வராத மண்வாசம்....மழையை எதிர்த்து வண்ணகொடிகள் காட்டுவோர்.......ஆனந்தமின்றி நனையும் மாந்தர்கள்.....என பலரைப் பார்த்ததும் ஊர் ஞாபகம் ஊஞ்சலாடும்.
அதே ஊஞ்சல் இபோதும்....ரிசியின் கவி படித்ததில்.

விகடன்
28-07-2007, 04:16 PM
ஒன்றை பெறத்துணிந்தால் இன்னொன்றை இழக்கத்தானே வேண்டும் ரிஷிசேது?

இருக்கும்வரை அதனருமை விளங்காது. தொலைத்து விட்டால்த்தான் அதையே மனம் நாடும். இது நியதி!!!

ஏக்கங்களுடன் எழுதப்பட்ட கவிதை அழகு. பாராட்டுக்கள் ரிஷிசேது

இனியவள்
28-07-2007, 04:45 PM
ரிஷி மீண்டு சாபாஷ் போட வைக்கும் கவிதை
வாழ்த்துக்கள் ரிஷி:icon_08:

சிவா.ஜி
29-07-2007, 09:20 AM
காட்சிகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் கலையில் நீங்கள் எட்டாத உயரத்தை அடந்திருக்கிறீர்கள் ரிஷி. எதார்த்தமான உதாரனங்கள் எழுத்துக்களில் விளையாடுகிறது. வெகு சரளமான நடை,உணர்வுகளை பிழியும் சொல்லாடல் என்று எல்லாம் ஒருங்கே அமைந்த அழகான கவிதை. மழையில்லா இந்த பாலைவனப் பூமியில் வாடும் எனக்கு திகட்டத் திகட்ட கொட்டும் மழையில் நனைந்த உணர்வை ஏற்ப்படுத்தியது இந்த கவிதை. மிக அழகு ரிஷி. மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

ரிஷிசேது
29-07-2007, 10:20 AM
விமர்சித்த அனைவருக்கும் நன்றி. நான் என் ஊரைவிட்டு அயல் நாட்டில் வசிப்பதால் இதை நான் NRI கவிதைகள் என்ற தலைப்பில் எழுதியிருந்தேன் . புலம்பெயர்ந்த எல்லோருக்கும் தானிழந்த இழப்பு
பொருளீட்டும் கட்டாய சூழ்நிலையில் ஒரு ஒப்பீடு சர்வசாதாரணமாய் தோன்றிவிடுகிறது, மேலும் படு அழகான ஒரு கிராம சூழ்நிலையில் இருந்துவந்ததாலும்கூட இது என் கவிதைகளில் சற்று மேலோங்கி ஒலிக்கிறதுஎன்றே நினைக்கிறேன். வெற்று புலம்பலகளாய் மாறிவிடக்கூடிய அபாயவிளிம்புகளில் நின்றுகொண்டுதான் இவற்றை நான் எழுதிவருகிறேன் என்றாலும் தவிர்கமுடியா ஒரு செயல் ஒப்பீடு ( practical comparision) நிகழ்ந்துவிடுகிற அனிச்சையாகவே கருதுகிறேன். ஒருமுறை என் கவி நண்பர் பெரும்பாலும் கவிதைகள் செய்யப்படுகின்றன என்றார்.... அதுபற்றி பின் எழுதுகிறேன்.
ரிஷிசேது

இளசு
02-08-2007, 10:11 PM
கிழக்கு − மேற்கு
மழைநாள் − மாலை − இரவு..

தேர்ந்த நிகழ்வுகள்.. சொற்கோர்வை.. விவரிப்புகள்...

சொக்க வைத்த கவிதை!

மிக்க வியந்து பாராட்டுகிறேன் ரிஷிசேது!

ஆதவா
04-08-2007, 11:31 AM
கவிதை அருமை ரிஷி. இளசு அண்ணா சொல்வதுபோல சொற்கள் தேர்ந்தெடுத்தமை மிக அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள் பல.