PDA

View Full Version : முழுப் பித்தனாய்..



சிவா.ஜி
26-07-2007, 07:35 AM
இகம் மறந்து
அகம் நிறைந்து
உன்னை ஆராதித்தது
என்னை விலகச் சொன்ன
உன் விஷ வார்த்தைகளுக்கா?

அவை என் செவி சேர்ந்த
மறு நொடியில்
முகம் மறந்து,
முகவரி மறந்து,
முழுப்பித்தனாய்
அலைந்தாலும்.......

வீடு மறந்து
வேலை மறந்து
நான் யாரென்பதை
நானே மறந்து
சித்தம் கலங்கித் திரிந்தாலும்.......

சிறுபிள்ளை
துலக்கி வைத்த
பாத்திரத்தில் ஒட்டியிருக்கும்
உணவின் மிச்சங்களைப்போல்,
உன் நினைவுகளின் சொச்சங்கள்
என் ஞாபகத்தட்டில்
ஒட்டிக் கொண்டுதானிருக்கிறது!

மூளையின் முக்கால் பாகம்
செத்து விட்டாலும்
கால் பாகத்தில்....
கடந்தவைகளும்,
நடந்தவைகளும்
நிரடுவதால்−நான்
நிற்கிறேன்,நடக்கிறேன்
உண்கிறேன்....ஆனால்
உறங்க மட்டும் முடியவில்லை!

நீ என்னை உதறியதை
உணர்ந்துகொள்ள
மூளைக்கு
முழுதாய் ஒரு வினாடிதான் ஆனது,
இதயம் உணர இன்னும்
எத்தனை யுகங்கள் வேண்டுமோ....?

அமரன்
26-07-2007, 07:48 AM
ஆகா சிவா..
காதலின் பிரிவை மூளை ஒரு நொடியில் புரிந்துகொள்ள இதயம் எத்தனை யுகங்களின்பின் புரிந்துகொள்ளும்.? சரியான கேள்வி. புரிந்துக்கொள்ளாத இதயத்துடன் எத்தனைபேர் பித்தனாக..
புரிந்தவர்கள் பலர் சித்தனாக...
காதலை பிரிந்தவனின் மனவியலை சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

சிவா.ஜி
26-07-2007, 07:54 AM
அழகான பின்னூட்டம். மிக்க நன்றி அமரன்.ஏதேனும் திருத்தமிருந்தால் தயவுசெய்து குறிப்பிடுங்கள்.

அமரன்
26-07-2007, 07:58 AM
பெரிதான திருத்தம் ஒன்றுமில்லை சிவா...அழகான சொல்லடுக்குகள்..எடுத்துக்கொண்ட கருவை சிறப்பாக சொன்னது..சின்னதாக ஒரு மாற்றம் செய்யலாம். ஒரு எழுத்தை மாற்றினால் நயமாக இருக்குமென நினைகின்றேன்.


என்னை விலகச் சொன்ன
உன் ஆல வார்த்தைகளுக்கா?

இனியவள்
26-07-2007, 08:03 AM
மறந்தவர்களை நினைத்து
வாழ்க்கையை மறக்க*
வைப்பது தான் காதலின்
பிரிவோ ????

வாழ்த்துக்கள் சிவா

சிவா.ஜி
26-07-2007, 08:14 AM
பெரிதான திருத்தம் ஒன்றுமில்லை சிவா...அழகான சொல்லடுக்குகள்..எடுத்துக்கொண்ட கருவை சிறப்பாக சொன்னது..சின்னதாக ஒரு மாற்றம் செய்யலாம். ஒரு எழுத்தை மாற்றினால் நயமாக இருக்குமென நினைகின்றேன்.


என்னை விலகச் சொன்ன
உன் ஆல வார்த்தைகளுக்கா?

'ஆல' என்ற இந்த பதம் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருப்பவர்களுக்கு
புரியாமல் போகலாம் அமரன். அதுவுமல்லாமல் வார்த்தைகள் என்ற வார்த்தைக்கு முன் விஷ என்று வந்தால் அடுக்காய் இருக்குமென நினைத்தேன். ஆலோசனைக்கு மிக்க நன்றி அமரன்.

சிவா.ஜி
26-07-2007, 08:14 AM
மிக்க நன்றிகள் இனியவள்.

அமரன்
26-07-2007, 08:18 AM
மனங்கள் மரத்து
வாழ்க்கை மறந்து-பலர்
மனங்கள் மரிப்பது
புரியாமல் இருப்பதே ..
காதல் பிரிவு.

இல்லையா சிவா....

ஆமாம் நீங்கள் சொன்னதும் சரியானது...

இனியவள்
26-07-2007, 08:22 AM
மனங்கள் மரத்து
வாழ்க்கை மறந்து-பலர்
மனங்கள் மரிப்பது
புரியாமல் இருப்பதே ..
காதல் பிரிவு.


மரித்த என் மனதில்
நீரோட்டமாய் இருப்பது
நினைவுகளும் உன் பிரிவு
தந்த வலிகளுமே

ஓவியன்
26-07-2007, 10:47 AM
மனித முள்ளந்த தண்டின் மேலுள்ள முண்ணான் மூளையை விட வேகமாக முடிவெடுக்குமாம் (சரியா இளசு அண்ணா?), அடுத்து மூளை....
மூளையிலும் ஆழமாய் இதயத்தை உவமித்த உங்கள் கற்பனை அபாரம் சிவா.ஜி!.

கவிதையின் நாயகன்
இதயத்தை இழந்துதானே
காதல் பட்டான்!!!

இல்லாத ஒன்று
எப்படி உணரும்
அந்த வார்த்தையை
மூளை உணர்ந்த போதும்...!

பாராட்டுக்கள் சிவா.ஜி ஒரு அருமையான கவிதையைத் தந்தமைக்கு.

சிவா.ஜி
26-07-2007, 11:29 AM
ஓவியன் இந்த ஸின்ஸியாரிட்டிதான் நமது மன்றத் தோழர்களின் மிகப்பெரிய சிறப்பு. எப்போதோ படித்த அறிவியல் விடயத்தை அழகாய் பின்னூட்டத்தில்
கோர்த்து,கவிதையையும் முழுதாய் உள்வாங்கிக்கொண்டு பதிக்கும் இப்படிப்பட்ட பதிப்புகள் எந்த புது கவிஞனையும் புடம் போடும்.
மனமார்ந்த நன்றிகள் ஓவியன்.

theepa
26-07-2007, 05:20 PM
ம்ம் அழகிய கவி நண்பரே முதலில் அதர்க்கு பாராட்டி விடுகிரேன் காதல் பிரிந்தலும் அது மனசில் இருந்து மனிதனை போட்டு ஆட்டுற ஆட்டம் அப்பப்பா அதை சொல்ல வார்த்தைகலே இல்லை காதல் மனசில் இருக்கும் போதும் இன்பமான தொல்லை அது பிரிந்து சென்றாலும் துன்பமான தொல்லை மொத்தத்தில் காதல் என்பது அழகிய தீய்யால் உருவாகிய பூக்கள் காதல் துடங்கும் போது இதயத்தில் பூக்கள் பூக்கும் அதே முடிந்து சென்றால் தீயை வைக்கும்

அன்புடன்
லதுஜா

சிவா.ஜி
28-07-2007, 05:00 AM
பாராட்டுக்கு நன்றி தீபா. கூடுதலாக அழகான தமிழில் அருமையான விளக்கத்திற்கு மிக மிக நன்றி.*

விகடன்
28-07-2007, 05:17 AM
அநுபவித்து எழுதியிருக்கிறீர்கள் போலும். மிக அருமையாக சங்கிலி போன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.

பாராட்டுக்கள்.

சிவா.ஜி
28-07-2007, 05:21 AM
காதலை அனுபவிக்காத மனது ஏது விராடன். ஆனால் நான் எப்போதும் மறுக்கப்படவில்லை. மறுக்கப்பட்டவன் நிலையை அவனிடத்திலிருந்து பார்த்து எழுதியிருக்கிறேன். மிக்க நன்றி.

விகடன்
28-07-2007, 05:38 AM
அப்படியென்றால் கேட்ட அநுபவத்திலிருந்து என்று சொல்லுங்கள்.
என்ன இருந்தாலும்
கவிதை சிறப்பே