PDA

View Full Version : காதலித்துவிடு அவனைஆதவா
25-07-2007, 06:35 AM
மஞ்சள் மதியும் மதி மயக்கும் மாதுளையும்
சிந்திய சிந்தனையை சிறகுக்குள் சிலிர்த்தனபோல்
நெஞ்சில் நெரித்த, நெய்தநில நெஞ்சமுனை
அஞ்சி அவனெடுத்து ஆட்கொண்டான் அதிரூபன்.

பிஞ்சுப் பேச்சுக்களும் பேசாத பேரோவியமும்
வஞ்சிப்பாவினமும் வரண்டாத வல்லமையும்
எஞ்சிய எல்லாமும் எழுதுகிறான் எஞ்சுவையாய்
கொஞ்சுதமிழ் கொற்றவளே கொஞ்சம்தான் கொஞ்சிவிடு

பஞ்சமிட்ட பார்வைகள் பாதித்த பாவலனை
அஞ்சிகத்தால் அஞ்சலிட்டு அளித்துவிடு
மிஞ்சிய மின்சாரத்தை மச்சவிழிகள் மரித்துவிட
வஞ்சம் வளையாத வஞ்சகனுக்கு வழித்துக்கொடு வனநிலவே!

இஞ்சி இனிப்பாயும் இனிப்பு இடராயும்
பஞ்சு பயிராயும் பண்ணுகிறதாம் பரிமளமே!
தஞ்சம் தாராவிடில் தன்னிலையும் தான்மறப்பான்
பிஞ்சுப் பிணக்குகளை பிரித்துவிட்டு பிணைந்துவிடு
நெஞ்சில் நுழைந்துவிடு நெற்பயிரின் நெல்மணியாய்.

விஞ்சிய விதியொன்று வித்தகனுக்கு விதையிட்டால்
நஞ்சிரைந்த நாக்குகள் நாற்புறமும் நாணும்
சஞ்சலமும் சர்வரணமும் சட்டனவே சத்தமிழக்கும்
துஞ்சித்த தூயகவிகள் தூவிவிடும் தூயவளே!

இன்பா
25-07-2007, 07:06 AM
இதை விமர்சிக்கும் அளவிற்க்கு என் புலமை வளர தமிழ் என்ற நீர் தினமும் உற்ற வேண்டும்...

நல்ல கவிதை ஆதவா...

இணைய நண்பன்
25-07-2007, 07:55 AM
பிரமாதம்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

சிவா.ஜி
25-07-2007, 08:27 AM
மஞ்சள் மதியும் மதி மயக்கும் மாதுளையும்
சிந்திய சிந்தனையை சிறகுக்குள் சிலிர்த்தனபோல்
நெஞ்சில் நெரித்த, நெய்தநில நெஞ்சமுனை
அஞ்சி அவனெடுத்து ஆட்கொண்டான் அதிரூபன்.

நெய்த நில உவமை அருமை.

பிஞ்சுப் பேச்சுக்களும் பேசாத பேரோவியமும்
வஞ்சிப்பாவினமும் வரண்டாத வல்லமையும்
எஞ்சிய எல்லாமும் எழுதுகிறான் எஞ்சுவையாய்
கொஞ்சுதமிழ் கொற்றவளே கொஞ்சம்தான் கொஞ்சிவிடு

காதலிக்காக சுவையான கவிதைகளைப் படைத்து அவள் சிந்தை மயங்கச் செய்கிறான்,அதற்காகவாவது அவனை கொஞ்சு பெண்ணே என கேட்பது அழகு. ஆனால் இந்த வரண்டாத கொஞ்சம் இடிக்கிறது. வறலாத வருமா?

பஞ்சமிட்ட பார்வைகள் பாதித்த பாவலனை
அஞ்சிகத்தால் அஞ்சலிட்டு அளித்துவிடு
மிஞ்சிய மின்சாரத்தை மச்சவிழிகள் மரித்துவிட
வஞ்சம் வளையாத வஞ்சகனுக்கு வழித்துக்கொடு வனநிலவே!

வஞ்சமில்லாதவனுக்கு கொஞ்சம் வெளிச்சத்தைக் கொடுத்துவிடு என அந்த வன நிலவிடம் வின்னப்பம் அழகான வார்த்தை விளையாட்டு. அஞ்சிகத்தாலா அஞ்சுகத்தாலா?

இஞ்சி இனிப்பாயும் இனிப்பு இடராயும்
பஞ்சு பயிராயும் பண்ணுகிறதாம் பரிமளமே!
தஞ்சம் தாராவிடில் தன்னிலையும் தான்மறப்பான்
பிஞ்சுப் பிணக்குகளை பிரித்துவிட்டு பிணைந்துவிடு
நெஞ்சில் நுழைந்துவிடு நெற்பயிரின் நெல்மணியாய்.

காதலி பிணங்கினால் சுவையே குழப்புகிறது. அதனால் உடனே தஞ்சம் தந்து நெஞ்சிலும் நுழைந்து விட நெற்பயிரின் நெல்மணியை உதாரணம் காட்டியிருப்பது கொஞ்சம் உறுத்தலாய் இருக்குமே...

விஞ்சிய விதியொன்று வித்தகனுக்கு விதையிட்டால்
நஞ்சிரைந்த நாக்குகள் நாற்புறமும் நாணும்
சஞ்சலமும் சர்வரணமும் சட்டனவே சத்தமிழக்கும்
துஞ்சித்த தூயகவிகள் தூவிவிடும் தூயவளே!

நஞ்சிரைந்த− நஞ்சு நிறைந்ததா..? நஞ்சை இரைத்ததா நாக்குகள்?
எல்லா ரணங்களையும் ஆற்றும் சக்தி அவளின் காதலுக்கு உண்டென்று சொல்லி அழகு தமிழில் கவி படைத்த ஆதாவா வாழி வாழி!!

அமரன்
25-07-2007, 01:46 PM
ஆதவா மீண்டும் ஒரு முறை சொற்களில் விளையாடிய கவிதை. அருமையான சொல்விளையாட்டு. முதல் பாராவில் உருவகங்கள் அசத்தல். மஞ்சல்நிலாமுகம், மாதுளை பர்கள் தெரியும் சிரிப்பு (ஏற்கனவே நிறம் மஞ்சள் என சொன்னதால் அவளில் உடல் நிறத்தை சொல்லவில்லை என நினைக்கிறேன்.) முத்தாக நாயகியைச் சொல்லுகிறார் போலும்.

அவளை நினைத்து அவன் உருகுவதை அழகாக அடுத்த பராவில் சொல்லுகிறார் போலும். அவளது பேச்சு வெட்கம் நளினம் என் எல்லாவற்றையும் சொல்லி கொஞ்சுதமிழால் சொல்லச்சொல்கிறாரோ காதலை.காதலித்தால் எத்தனை மாற்றங்கள்..இஞ்சி இனிக்கிறதாம்..இனிப்பு பிடிக்கலையாம்..அழகாக சொல்லி வரண்ட மனத்தில் நெல்லாக வரச்சொல்கின்றார்.

அப்படிவந்தால் என்ன என்ன நடக்கும் என்பதை சொல்லி காதலியிடம் தூது போகிறது கவி. ஏப்பா ஆதவா பல சொற்களைத் தேடிப்பிடித்து அர்த்தம் தேட வைத்து விட்டீர்கள். நன்றி. சிறப்பான சொல்வளம் மிக்க நயமான கவிதை.

ஆதவா
25-07-2007, 06:22 PM
இதை விமர்சிக்கும் அளவிற்க்கு என் புலமை வளர தமிழ் என்ற நீர் தினமும் உற்ற வேண்டும்...

நல்ல கவிதை ஆதவா...

அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் வரிப்புலி.. என்னை விட அழகாயும் நேர்த்தியாகவும் எழுதும் நபர்கள் எத்தனையோபேர்....திறமை என்பது நாமாய் வளர்த்துக் கொள்வது.. உங்களுக்குத் தெரிந்ததை விமர்சியுங்கள் போதும்....
நன்றி

ஆதவா
25-07-2007, 06:29 PM
நல்ல விரிவான விமர்சனம் சிவா. நன்றிகள் கோடி..

வரண்ட வல்லமை என்றால் அவனுக்கு வல்லமையே இல்லையென்றர்த்தம். வரண்டாத என்பது சரியா என்று தெரியவில்லை.. இங்கிருக்கும் பாவலர்கள் சொல்லவும்.

அஞ்சுகம் என்றே நினனக்கிறேன்... விழிகள் என்பதன் அர்த்தம் அது.

நெல்மணியை உதாரணம் காட்டியதன் தவறு எனக்குத் தெரியவில்லை.. என்ன காரணம் என்று சொல்லுங்களேன்.

நஞ்சு+இரைந்த = நஞ்சிரைந்த

மிக்க நன்றி சிவா... தவறுகள் திருத்தப்படும்... சொன்னமைக்கு நன்றிகள் பல.

அமரன்
25-07-2007, 06:31 PM
அஞ்சுகம்-கிளி
அஞ்சிகம்-கண்

ஆதவா
25-07-2007, 06:33 PM
நன்றி இக்ராம்... உங்கள் பாராட்டுக்கள் தேவை..

நன்றி அமரன்.. இந்த கவிதைக்கு சற்று நேரம் எடுத்துக்கொண்டேன். முதலில் மோனைகள் அமையவில்லை. பிறகு ஒவ்வொன்றாய் அமைத்துக்கொள்ள நான்கு மற்றும் ஐந்தாம் பாராக்கள் எளிதாக வந்துவிட்டது. வார்த்தைகள் தானாய் அமைந்துவிட்டன. உணர்ந்து எழுதிய விமர்சனம்.. நன்றி.

ஆதவா
25-07-2007, 06:36 PM
அஞ்சுகம்-கிளி
அஞ்சிகம்-கண்

மிக்க நன்றி அமரன். இரு சொற்களும் அந்த இடத்தில் சரியாக நிற்கும்.

அமரன்
25-07-2007, 06:42 PM
ஆம்.இரண்டுமே.அங்கே பொருந்தும் ஆதவா..

இனியவள்
26-07-2007, 06:38 AM
அருமையான கவிதை ஆதவா வாழ்த்துக்கள் :icon_clap:

ஷீ-நிசி
26-07-2007, 09:04 AM
காதலனுக்காய் கவிஞன் ஒருவன் அவன் காதலியிடம் பரிந்து பேசுகிறதாய் இருக்கிறது கவிதை.. பல புதிய வார்த்தைகள்.... என்னால்தான் புரிந்துகொள்ள இயலவில்லை...

ஆனால் கவிதை மிக அழகாக அமைக்கபட்ட செய்யுள் வடிவில் உள்ளது...

வாழ்த்துக்கள் ஆதவா...

lolluvathiyar
26-07-2007, 10:24 AM
நேற்றும் படித்தேன் இந்த கவிதையை
இன்றும் படித்தேன் இந்த கவிதையை
சிவாவின் விளக்கமும் படித்து பார்த்து
மீண்டும் படித்தேன் இந்த கவிதையை

ம்ஹூம் இன்னும் என் அறிவுக்கு விளங்கவில்லை
நான் கற்றது விரலழவு கூட இல்லை போலிருக்கு

ஓவியன்
26-07-2007, 11:51 AM
ஆதவா என் மனதில் உங்கள் கவிதை தூவிய கருத்து இது..........

மஞ்சள் மதி போல் முகமும், மாதுளை போல் அதரம் சிந்தும் வார்த்தைகளை நெஞ்சிலே பதித்ததால், அஞ்சி எடுத்து ஆட்கொண்டான். இங்கே அஞ்சக் காரணம் நெய்தல் நில நெஞ்சத்தாள் எனபதே (எப்போது சுனாமி அடிக்குமோ, எப்போது அலை பொங்குமோ, ஆனால் அழகாகத் தானிருக்கும் - அருமையான உவமை ஆதவா:thumbsup: ).

சிறு பிள்ளையாக கெஞ்சுகிறான், அவள் ஓவியங்கள் வரைகிறான், ஏன் கவிதையைக் கூட ஒன்று கூட மீதம் வைக்காமல் எழுதுகிறான், எழுதுகிறான் கிளியே கொஞ்சம் தான் கொஞ்சி விடு என்று.........

விழி உள்ளே போய் காதல் நோய் கொண்ட காதலனை கண் என்ற தூதுவனால் தூது சொல்லிக் காதலித்துக் காப்பாற்று என இயம்புகிறது மூன்றாம் பந்தி!.

இஞ்சி இனிப்பாக, இனிப்பு இஞ்சியாக (வழமையாக எல்லோருக்குமே நடப்பது தான்....!:whistling: ) இனியும் உன் வார்த்தை ஒன்று சாதகமாக வரவிட்டால் முற்றும் மறப்பான் பித்தனாக, அதற்குள் சிறு சச்சரவுகளைப் புறந்தள்ளி அவன் காதலுக்கு இணங்க மாட்டாயோ என்கிறது நான்காம் பந்தி!.

கைமிஞ்சிப் போன விதியே(காதல்) அவன் வாழ்க்கைக்கு உரமூட்டி விதையிட்டால்(அவனைக் காதலித்து) இது வரை பல பொல்லாத் தனம் செய்த ஊராரின் நாக்குகளும் நாணி அடங்கிவிடும். அத்துடன் அவன் மனதின் சஞ்சலம் எல்லாம் நீங்கி துஞ்சித்த கவிகளும் தூய கவி ஆகி விடாதோ?

ஆதவரே!

எதுகை மோனை சரிவர நீங்கள் கையாண்ட விதம் எனைப் பிரமிக்க வைத்தது வழமை போல*வே......

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நண்பா!.

ஆதவா
26-07-2007, 06:25 PM
மிக்க நன்றி ஷீ-நிசி அவர்களே.. உண்மையைச் சொல்லப்போனால் இங்கிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் பழைய வார்த்தைகளே. செய்யுள் வடிவை நான் யோசிக்கவில்லை... அது இன்னும் கடினமாக இருந்திருக்கும். நன்றிங்க..,

---------------------
வாத்தியாரே! ஓவியன் விமர்சனம் நன்றாகவும் விளக்கமாகவும் இருக்கிறது.. அத்தோடு வார்த்தைகள்தான் பழையதே தவிர எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.. நாம் எல்லாருமே துகளளவில்தான் கற்றிருப்போம்... சரிதானே?

நன்றிங்க.

-------------

ஓவியன்... என்னுடிய கவிதைகள் அனைத்திலும் சிரத்தை எடுத்து படித்து விமர்சனம் இடும் (இன்னும் சிலர்) உங்களைப் போன்றவர்களுக்காகவே கவிதை எழுதிக்கொண்டே இருக்கலாம்... எனக்குக்கிட்டாத சில விஷயங்களும் விமர்சனங்களிலிருந்து வரும் என்றால் அது உண்மையே! மிகவும் நன்றிங்க ஓவியன்.